Advertisement

அத்தியாயம் – 28
யசோதா, ஆகாஷ் இருவரின் புகைப்படம் முன்னும் ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தது விளக்கு. காரியம் முடிந்து உறவுகள் எல்லாம் சென்றுவிட வீடே வெறிச்சென்று இருந்தது.
சோபாவில் சாய்ந்து கண் மூடி இருந்த கிருஷ்ணனின் இமைக்குள் கண்ணீர்த் துளிகள் உருண்டு கொண்டிருந்தன. குற்ற உணர்வில் மனம் குறுகுறுக்க தனது மகன், மனைவியை ஒரே சமயத்தில் பறி கொடுத்த வலியை தாங்க முடியாமல் தவித்தார்.
“நான் செய்த தவறு என் மகன் தலையில், மனைவி மூலமாகவா விடிய வேண்டும்… தாயின் அரவணைப்பும் தந்தையின் கண்டிப்பும் தான் ஒரு பிள்ளையை நல்ல மகனாய் மாற்றும் வழி… நான் அதில் தவறிவிட்டேன்… என் மகனையும் தடம் புரள வைத்துவிட்டேன்… எந்தக் குற்றமும் செய்யாத என் யசோவையும் சேர்ந்து இழந்துவிட்டு இப்போது அநாதையாய் நிற்கிறேனே…” மனதுக்குள் ஏதேதோ யோசனைகள் உழன்று கொண்டிருக்க, மகளின் குரல் கேட்டு கண் திறந்தார்.
“அப்பா… இந்த பாலாச்சும் குடிங்கப்பா…” அவள் நீட்டிய கிளாஸை வெறுமனே பார்த்தவர், “ப்ச்… எனக்கு எதுவும் வேண்டாம் மா… இனி நான் இருந்து என்ன சாதிக்கப் போறேன்… இந்த சொத்து, பிசினஸ் எல்லாம் நீயும் மாப்பிள்ளையும் பார்த்துக்கோங்க… நான் அப்படியே காசிக்கு கிளம்பறேன்…” என்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஆஷிகா.
“என்னப்பா சொல்லறிங்க… இப்ப எதுக்கு இந்த முடிவு…”
“பிடிக்கலைமா… எதுவுமே பிடிக்கல… உன் அம்மா இருந்தப்ப அவ அருமை தெரியல… இப்ப அவ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் மனசு அவளைத் தேடுது… அவளை நான் ஒரு மனைவியா, இல்ல மனுஷியா கூட நடத்தாம அடிமை மாதிரி வச்சிருந்தேன்… எல்லாத்தையும் பொறுத்துகிட்டு இந்த வீடே உலகம்னு இருந்தா… இப்ப என்னை இப்படி தனியா தவிக்க விட்டுப் போயிட்டாளே… அநாதை போல தோணுது மா… பேசாம என்னையும் அவங்களோடவே கூட்டிட்டுப் போயிருக்கலாம்…” தனிமையும் குற்றவுணர்வும் அவரை அழுத்த குலுங்கி அழுத தந்தையை திகைப்புடன் நோக்கி நின்றாள் மகள்.
யசோதா ஆகாஷ் செய்த தவறையும் அதற்கு தான் கொடுத்த தண்டனையைப் பற்றியும் வீடியோவில் வாக்குமூலமாகப் பதிவு செய்து வைத்திருந்தார். அவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாய் அவனுக்கு விஷம் கொடுத்து கொன்றாலும், மகனை சரியான முறையில் வளர்க்கத் தவறிய தாயாய், பெற்ற மகனைக் கொன்ற பாவியாய் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்வதாக தனது மொபைலில் பேசி ரெகார்டு செய்து வைத்திருந்தார்.
“ஒரு குழந்தை நல்லவனாய் வளர்வதற்கும், கெட்டவனாய் மாறுவதற்கும் பெற்றவர்களே காரணமாகின்றனர்… தன் போக்கில் அவர்களை விடாமல் சிறுவயதிலேயே நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்த்தவேண்டும்… அதை செய்யத் தவறிய தனக்கும் இந்த தண்டனை அவசியம் தான்… பாலூட்டி, சீராட்டி வளர்த்த பிள்ளையை விஷம் கொடுத்துக் கொல்லும் நிலை இனி எந்தத் தாய்க்கும் வரக் கூடாது… அவனில்லாத உலகில் இனி நானும் வாழ விரும்பாததால் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன்…” என்று கூறியிருந்தார். அதைப் பல முறை கேட்ட கிருஷ்ணனுக்கு தானே தன் பிள்ளையின் நடத்தையில் முக்கிய குற்றவாளி என்பது புரிய குற்றவுணர்வில் தத்தளித்தார்.
அம்மாவிடம் மனம் திறந்து பேசவும், கோபப்படவும், அதட்டவும் செய்யும் ஆஷிகா தந்தையிடம் அளவோடு தான் பேசுவாள். தப்பே செய்தாலும் கம்பீரமாய் தலைநிமிர்ந்து நிற்கும் தன் தந்தை இப்போது குற்றவுணர்வில் தளர்ந்து ஒரு அநாதை போல உணர்வதாகக் கூறவும் அவளது மனமும் துடித்தது. தானும் தன் தாயின் முடிவுக்கு ஒரு காரணம் என்ற தவிப்பு அவளுக்குள்ளும் இருந்தது.
ஆகாஷின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவனது உடலில் டீமீத்தைல் மெர்க்குரி என்ற மருத்துவமனை உபகரணங்கள் மற்றும் ஆய்வக கருவிகளை சுத்தம் செய்யும் மருந்து கலந்திருப்பதாய் கூறி இருந்தனர். அது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலந்தால் மிக சக்தி வாய்ந்த பாய்சனாய் செயல்படக் கூடியது.
யசோ கொடுத்த கேசரியில் சிறிய அளவே சேர்ந்திருந்தாலும் அது வயிற்றுக்குள் சென்றவுடனே பின் விளைவுகளைக் காட்டத் தொடங்க, அந்த நேரத்தில் ஆகாஷ் கை நரம்பில் செலுத்திய போதை ஊசியின் மருந்திலும் அந்த மருந்து கலந்திருந்ததால் ரத்தத்தில் பரவி மிகவும் மோசமான பின் விளைவைக் கொடுத்திருப்பதாகக் கூறியிருந்தனர்.
யசோதாவின் மரணம் சயனைடு உட்கொண்டதால் நேர்ந்ததாய் ரிப்போர்ட்டில் கூறியிருந்தனர். அவர் போலீசுக்கு ரெகார்டு செய்து வைத்த தகவலில் சஹானாவின் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாகவே பெண்களுக்கு அவன் செய்த கொடுமைக்காய் இப்படி செய்வதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
யசோதா பார்மஸியில் விஷ மருந்துகளை எடுத்தது CCTV யில் பதிவாகி இருந்தாலும் அந்த மருந்தைப் பற்றிய தகவல் அவருக்கு எப்படிக் கிடைத்தது என்ற குழப்பம் ஆஷிகாவுக்கு பார்மஸிக்கு சென்றபோது தெளிவானது. பார்மஸியில் ரெகுலர் கஸ்டமரான சயின்டிஸ்ட் ஒருவர் இந்த மருந்தை தொடர்ந்து உபயோகித்து வந்த காரணமாய் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்திருக்க அதை பார்மஸி மானேஜர் யாருடனோ பேசுவதைக் கேட்ட யசோதா இதையே மகனைக் கொல்லும் ஆயுதமாய் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று புரிந்தது.
“தப்பு செய்த மகனைத் தண்டித்தது ஓகே… உனக்கும் எதுக்கு சயனைடு குப்பியை எடுத்து வந்திருக்கிறாய்… ஆசையாய் நேசித்த மகனைக் கொன்றுவிட்டு குற்றவுணர்வில் வாழ முடியாது என்று முடிவெடுத்து விட்டாயா… எப்படி எல்லாம் பேசினேன்… கோபத்தில் திட்டினேன்… முடிவில் நீ கொடுத்த தண்டனையை வேறு எந்தத் தாயும் பிள்ளைக்குக் கொடுக்க முன்வருவாளா என்று தெரியவில்லை… ரியல்லி யூ ஆர் கிரேட் அம்மா…” அவள் கண்ணீர் கன்னத்தை நனைத்தது.
யசோவின் முடிவு சஹா குழுவினருக்கும் வருத்தத்தைக் கொடுக்க அந்த நல்ல ஆத்மா சாந்தி அடையட்டும் என வேண்டி இறுதி சடங்குக்கு சென்று வந்தனர். ஷிவா கேங்கை நரேனின் பொறுப்பில் விட்டுவிட்டு அடுத்தநாள் திருப்பூருக்குப் புறப்பட்ட சஹானாவின் முகத்தில் ஒரு தெளிவும் நிம்மதியும் தெரிந்தது.
காரில் அமர சென்றவர்களிடம், “நானும் உங்களோட வரலாமா…” என்று நிதின் கேட்க சாதனாவும், சசிகலாவும் பதிலுக்காய் சஹாவின் முகத்தைப் பார்த்தனர். எதுவும் பேசாமல் கையிலிருந்த சாவியை அவனிடம் நீட்ட வாங்கிக் கொண்டவன் மனதில் சந்தோஷ மின்னல்கள்.
“ஐ… டாதியும் வதீங்களா…” கேட்ட ஸ்ரீகுட்டியை முத்தமிட்டு நிதின் டிரைவிங் சீட்டில் அமர சாதனாவும், சசிகலாவும் வேகமாய் சென்று பின் சீட்டில் அமர்ந்தனர். அவர்களின் அவசரத்தின் காரணம் உணர்ந்து ஒரு பார்வை பார்த்தாலும் அமைதியாய் அவனுக்கு அருகே அமர்ந்தாள் சஹானா.
நிர்மலா, நிஷாந்தி, நரேனிடம் விடை பெற்று அவர்களை திருப்பூருக்கு வருமாறு அழைத்துவிட்டு விடைபெற்றனர். நிதின் மனதில் பெரிய ஒரு பாரம் இறங்கியது போல் இருக்க அருகில் இருந்த சஹாவின் முகத்தை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டான். காருக்குள் மௌனம் நிலவியாலும் அங்கிருந்த மனங்களில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அதை அடிக்கடி ஸ்ரீக்குட்டியின் குரல் மட்டுமே கலைத்துக் கொண்டிருந்தது.
“பாத்தி, எனக்கு டாதி கித்த போகணும்…” ஸ்ரீக்குட்டி சசிகலாவின் காதில் ரகசியம் பேச அது காதில் விழுந்த சாதனா, “அச்சோ, வேண்டாம் செல்லம்… மம்மி திட்டுவா…” எனவும் குழந்தை முகம் வாடி விசும்பத் தொடங்கினாள்.
“ஸ்ரீக்குட்டி, ஏண்டா செல்லம் அழறே…” காரோட்டிக் கொண்டே நிதின் கேட்க, சஹானாவும் திரும்பிப் பார்த்தாள்.
“அவளுக்கு உங்க கிட்ட வரணுமாம் தம்பி… வேண்டாம்னு சொன்னதுக்கு அழறா…” என்றார் சசிகலா.
“ஓ, அவளை இங்க குடுங்கம்மா… நான் பார்த்துக்கறேன்…” என்றவன் வண்டியின் வேகத்தைக் குறைத்து அவளை வாங்கி மடியில் உக்கார வைத்துக் கொண்டான். அதை கவனித்தாலும் கண்டு கொள்ளாமல் வெளியே பார்வையைப் பதித்திருந்தாள் சஹானா.
நிதின் ஸ்ரீக்குட்டியிடம் பேசிக் கொண்டே வண்டியோட்டிக் கொண்டிருந்தான். அவன் மடியில் சமத்தாய் எந்தத் தொந்தரவும் செய்யாமல் அமர்ந்திருந்தாள் அவள். சஹாவின் மனதில் நேற்றைய சம்பவங்களே ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க அதையே யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு தலை வலிக்கத் தொடங்கியது.
கார் கோவையை நெருங்க அவளை கவனித்த நிதின், “அம்மா, ஒரு காபி குடிச்சா நல்லாருக்கும்னு தோணுது… உங்களுக்கு வேணுமா…” என்று கேட்க, “ஆமா தம்பி… நானே சொல்லலாம்னு இருந்தேன்…” என்றார் சசிகலா. “எனக்கும் வேணும்…” சாதனாவும் சொல்ல புன்னகைத்த நிதின் சஹானாவைப் பார்க்க அவள் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.
காரை ஒரு காபி ஷாப் முன்பு நிறுத்தியவன், “சஹி, கொஞ்சம் குழந்தையைப் பிடி… காபி வாங்கிட்டு வந்திடறேன்…” என்றவன் உறங்கத் தொடங்கியிருந்த ஸ்ரீக்குட்டியை அவள் மடியில் விட்டுவிட்டு இறங்கினான்.
அனிச்சையாய் மடியிலுள்ள குழந்தையை அணைப்பாய் கைகள் பிடித்துக் கொண்டாலும் அதை எதிர்பார்க்காதவள் விழித்துக் கொண்டிருக்க, பின் சீட்டிலிருந்த சசிகலாவும் சாதனாவும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.
உறக்கத்தில் குழந்தையின் தலை நிற்காமல் ஆட சட்டென்று அணைத்தவளின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி வசதியாய் தலையை வைத்துக் கொண்டு இரு கைகளையும் அவள் பின்னில் தொங்கப் போட்டு புன்னகையுடன் உறங்கத் தொடங்கினாள் ஸ்ரீகுட்டி. சசிகலாவும், சாதனாவும் நிதின் பின்னாடியே எதுவுமறியாத போல கடைக்கு சென்றிருந்தனர்.
உறங்கும் குழந்தையின் களங்கமில்லா முகமும் அவள் பவுடரின் மணமும் என்னவோ செய்ய ஆழ்ந்து கவனித்தாள் சஹானா. இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள் ஈரத்துடன் பளபளக்க அதில் ஒரு புன்னகை உறைந்திருந்தது. தன்னைப் போலவே அரைக்கண்ணைத் திறந்து கொண்டு உறங்கும் குழந்தையை அதிசயமாய் பார்த்தாள்.
அவளை அணைத்துக் கொண்டு முத்தமிட மனது துடிக்க கடையில் நின்றவர்களைக் கவனித்தாள். அவர்கள் காபியை வாங்கிக் கொண்டிருக்க சட்டென்று அந்த பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டவளின் கண்கள் நெகிழ்ந்து பனித்தன. இனம்புரியா ஒரு தாய்மை உணர்வு உடலெங்கும் பரவசமாய் அவளை ஆட்கொள்ள யசோவின் நினைவு வந்தது.
“யசோம்மாவும் எத்தனை ஆசைகளுடன் மகனைப் பெற்று சீராட்டி வளர்த்திருப்பார்… அப்படி ஒரு அன்பான அன்னையின் வளர்ப்பிலேயே தவறான பிள்ளை வரும்போது நான் இவளைக் கண்டு கொள்ளாமல் விடுவது எப்படி சரியாகும்… எவனோ செய்த தவறுக்கு இந்தப் பிஞ்சு என்ன செய்தது… இவளுக்கான அன்பையும், அரவணைப்பையும் கொடுக்காமல் விலகி நிற்பது தவறில்லையா… விதைத்தது விதியாகினும் வளர்ந்தது என் வயிற்றில் அல்லவா… என் வயிற்றில் பிறந்ததைத் தவிர இந்தக் குழந்தை என்ன பாவம் செய்து விட்டாள்…” யோசிக்கும்போது மனதோடு அவளைச் சுமந்த கருப்பையும் வலிப்பது போலத் தோன்றியது.
குழந்தையின் முகத்தைப் பார்க்க உறக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீக்குட்டி. அந்த தெய்வீகப் புன்னகையில் அவளது இத்தனை நாள் வீம்பும் வைராக்கியமும் தவிடு பொடியாவது போல் தோன்ற குழந்தையை அணைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் முத்தமிட்டாள்.
“இவள் என் மகள்… இவளை நல்ல ஒரு மனுஷியாய், தைரியம் மிகுந்த பெண்ணாய், நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து கண்ணியமாய் வளர்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையது… இனி என் வாழ்க்கை இவளுக்காக தான்…” மனம் உறுதி கொண்டதும் முகத்தில் தெளிவு வந்தது.
“அப்ப உன் மகள் மட்டும் போதுமா… ரூபன் உனக்கு வேண்டாமா…” மனசாட்சி கேள்வி கேட்டது.
“ரூபனை என்னால் மறக்க முடியாது தான்… எதற்கு மறக்க வேண்டும்… அவனோடு மனதில் வாழத்தான் போகிறேன்… எனக்கு கணவனாய், என் மகளுக்கு தந்தையாய் எப்போதும் எங்களுடன் அவன் இருப்பான் மனதில் மட்டும்… நிஜத்தில் அவனுடனான வாழ்க்கை எனக்கு சாத்தியமில்லை… அவன் குடும்பத்தில் என்னைப் போன்ற ஒரு பெண்ணை நிச்சயம் மருமகளாய் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை… அவன் எத்தனை சொன்னாலும் இதற்கு நான் சம்மதிக்கக் கூடாது… அவன் வாழ்கையில் நான் ஒரு கடந்த காலமாகவே கடந்து விடுகிறேன்…” யோசிக்கும்போதே இதயத்தை அறுப்பது போல வலி தோன்ற கண்ணிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
“சஹி…” காரின் கண்ணாடியைத் தட்டி நிதின் அழைக்க திரும்பியவள் கண்ணாடியை இறக்கினாள்.
“இந்தா, இந்த மாத்திரையைப் போட்டுட்டு காபியைக் குடி… தலைவலி காணாமப் போயிடும்…” என்றவனின் நேசத்தில் தொலைந்திடவே மனம் விரும்பியது.
இயலாமை கண்ணீராய் வெளிப்பட அதைக் கண்டவன் துடித்துப் போனான். வேகமாய் அவள் அருகில் அமர்ந்தவன், “என்னம்மா, ரொம்ப தல வலிக்குதா… குழந்தையைக் கொடு, முதல்ல காபியக் குடி…” என்று பரிவோடு கூற “அந்த அக்கறையை எப்படி வேண்டாமென்று மறுக்கப் போகிறாய் என்று கேள்வி கேட்டது மனம்.
“இல்ல பரவால்ல, குழந்தையை நானே வச்சிருக்கேன்…” என்றவள், காபியை வாங்கிக் கொண்டாள். அவள் குழந்தையைப் பற்றி ஏதோ யோசித்துதான் கலங்குகிறாள் போல என நினைத்தவன் மனம் குதூகலித்தது. சென்று அவனும் காபி குடித்துவிட்டு பிஸ்கட் பாக்கெட்டும் தண்ணீர் பாட்டிலுமாய் வந்தவன், “குழந்தை எழுந்தா கேப்பா…” என்று கூறி காரில் வைத்தான்.
காருக்குள் நடப்பதை கண்டும் காணாமல் காபி குடிப்பது ஒன்றே அப்போதைய கடமை என்பது போல் ரசித்து குடித்துக் கொண்டிருந்த சாதனாவும், சசிகலாவும் கள்ளப் புன்னகையுடன் காரில் அமர வண்டியைக் கிளப்பினான்.
“சஹா, கை வலிச்சா குழந்தையைக் கொடு… நான் வச்சுக்கறேன்…” என்ற சாதனாவிடம், “வலிக்கல… நானே வச்சுக்கறேன்…” என்று கூறிவிட அன்னையும் மகளும் ஒருவரை ஒருவர் ஆனந்தமாய் பார்த்துக் கொண்டனர். கண்ணாடி வழியே பார்த்த நிதினிடம் கட்டை விரலைக் காட்டி சூப்பர் எனவும் அவனும் புன்னகைத்தான்.
அதை சஹா கவனிக்கவில்லை என்று அவர்கள் நினைத்தாலும் அவனது ஒவ்வொரு அசைவையும் மனதுக்குள் உருவேற்றி வைத்திருந்த அவள் கண்ணில் இது மட்டும் படாமலா போகும்…
ஒரு பெண்ணின்
சிரிப்புக்காய் தன்
கண்ணீரை மறைத்து
அவள் பலவீனத்தைப்
பயன்படுத்திக் கொள்ளா
ஆண்மை என்பது
பேரழகு… பேரழகன் நீ…
அவர்கள் அபார்ட்மென்ட் கடந்து தான் நிதின் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்பதால் அவன் அபார்ட்மென்ட் முன்னில் இறங்கிக் கொள்வதாய் கூற சம்மதிக்காத சாதனா, அவன் வேண்டாமென்றும் விடாமல் வீட்டுத் தெருமுனையில் இறக்கி விட்டே வண்டியை வீட்டுக்கு விட்டாள்.
மனதில் படிந்திருந்த நெடுநாளைய கறைகளும், பாரமும்  நீங்கி புத்துணர்ச்சி நிறைந்திருக்க அன்றிரவு நிம்மதியாய் நித்திரையைத் தழுவினாள் சஹானா. அவள் சுயம் மறந்து உறங்குவதை கண்களில் கண்ணீருடன் மனம் உருகப் பார்த்து நின்றனர் சசிகலாவும், சாதனாவும்.
“இந்த மாற்றம் இப்படியே தொடரட்டும் கடவுளே… இனி நிதின் விஷயத்திலும் நல்லவொரு முடிவை நீதான் காட்ட வேண்டும்…” என்று வேண்டிக் கொண்டே மகளின் முகத்தில் கண்ட மலர்ச்சியை மனதில் உணர்ந்த சசிகலாவும் நிம்மதியாய் உறங்கினார். அடுத்தநாள் காலையில் அந்த ஐந்து பேரின் நிலையை விசாரிக்க சாதனா நரேனுக்கு அழைத்துப் பேசினாள்.
தீ பிடித்து மூன்று நாட்களாகியும் எந்த சிகிச்சையும் கொடுக்காததால் அங்கிருந்த தோல் முழுதும் பொசுங்கி நரம்புகளும், இரத்தக் குழாய்களும் சேதமாகி சீழ் பிடிக்கத் தொடங்கி இருந்தன. முறையான சிகிச்சை செய்தாலும் சரியாக பல மாதங்கள் ஆகலாம். பிளாஸ்டிக் சர்ஜரியே செய்தாலும் வாழ்நாள் வடுவாக இம்சிக்கவே செய்யும்.
“இனி ஒண்ணுக்குப் போறது கூட அவங்களுக்கு நரகத்துக்குப் போறது போல தான்…” என்றான் நரேன்.
“ம்ம்… அனுபவிக்கட்டும்… டாக்டர்கிட்ட போனாலும் எப்படி இப்படி ஆச்சுன்னு கேள்வி வரும்… ஏன் இவ்ளோ நாள் சிகிச்சை எடுக்கலைன்னும் கேப்பாங்க… வீட்டுலயும் என்ன நடந்துச்சுன்னு சொல்ல முடியாது… வெளியவும் சொல்ல முடியாது… மனசுக்குள்ளேயே இந்த தண்டனைக்கான காரணத்தை நினைச்சு நினைச்சு அழுது புழு வச்சு சாகட்டும்… சொல்ல முடியாது வலி தாங்க முடியாம அவங்களே தற்கொலை பண்ணிக்கவும் சான்ஸ் இருக்கு…” சாதனா கூறும்போது சுவரில் இருந்த பல்லி சத்தமிட்டது.
பல்லியின் வாக்கு பலிக்குமோ, என்னவோ… கடவுள் சித்தம். வெறும் தண்ணீர் மட்டுமே அவர்களுக்குக் கொடுத்து உயிரை தக்க வைத்து  மூன்றாவது நாள் குடோனிலிருந்து அவர்களை விடுவித்தான் நரேன்.
உயிர் மட்டுமே உடலில் மிச்சமிருக்க வலியிலும் பசியிலும் சோர்ந்து துவண்டிருந்தவர்கள் நடக்கக் கூட முடியாமல் வெளியே வந்தனர். வீட்டிலும், நாட்டிலும் வரும் கேள்விக்கு பயந்து வலிக்கு சிகிச்சை கொடுக்கவும் முடியாமல் செத்து விடலாமென்று தோன்றியது.
பைக் இருந்தாலும் ஓட்ட முடியாதென்பதால் புரியாமல் தவித்தவர்கள், வேறு வழியின்றி வண்டி பிடித்து ஹாஸ்பிடலுக்கு சென்று அட்மிட் ஆக டாக்டரின் கேள்விக்கு ஏதேதோ சொல்லி சமாளித்து சிகிச்சை என்ற பெயரில் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நிமிடமும் சாவை விடக் கொடுமையாய் வலி அவர்களைக் கொன்று கொண்டிருக்க தாங்கள் செய்த தவறை எண்ணி கண்ணீர் விட்டுக் கலங்கினர்.
கூடிய சீக்கிரமே “மர்ம உறுப்பில் தீப்புண் பட்டதால் வலி தாங்க முடியாமல் ஐந்து இளைஞர்கள் தற்கொலை…” என்ற செய்தி பேப்பரில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கொடிய தண்டனை
என்பது என்னவென்றால்
இறந்து அனுபவித்தலை விட
இருந்து அனுபவித்தலே…
விதி வலியது… பெண் சாபம் பொல்லாதது…
சிதைந்து போன ஒழுக்கமெல்லாம்
சிதையிலேறும் காலம் வரும்…
பெண் என்பவள் பெரும் சக்தியாய்
நிமிர்ந்து நிற்கையில் புதிய
நீதியொன்று பிரகாச தீபமாய்
உலகிலே உருவெடுக்கிறது…
அற்பப் புழுவல்ல பெண்கள்…
ஆலகால விஷத்தையும்
அமுதத்தில் ஒளித்திருக்கும்
ஆதிசக்தி அவளென்பதை
அகிலம் உணரும்போது
அனைத்தும் அழகாய்
அதிசயிக்க வைக்கும்…

Advertisement