Advertisement

அத்தியாயம் – 26
காலையில் முதல் ஆளாய் சிட்டிக்கு வெளியே இருந்த ஆகாஷின் இரும்பு குடோனுக்கு வந்த ஷிவா திறந்திருந்த முன் கேட்டில் செக்யூரிட்டியைக் காணாமல் உள்ளே செல்ல குடோனும் திறந்திருக்கவும் திகைத்தான்.
“ஆகாஷ் என்னைத்தானே செக்யூரிட்டி கிட்ட சாவி வாங்கிட்டு, அவனுக்கு ரெண்டு நாள் லீவ் குடுத்து அனுப்பிட்டு குடோனைத் திறக்க சொன்னான்… இப்ப யார் எனக்கு முன்னாடி வந்திருப்பா…” யோசித்தவன், “ம்ம்… நம்ம பசங்கள்ள எவனோ ஆர்வக் கோளாறுல எனக்கு முன்னாடியே வந்துட்டான் போலருக்கு…” என சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். அங்கே மேசையில் ஆகாஷ் கொண்டு வந்திருந்த வெளிநாட்டு மதுக்குப்பி சில கிளாசுடன் வைக்கப்பட்டிருக்க அருகிலேயே சிகரெட்டுடன் கமகம மணத்தோடு சூடான பரோட்டாவும் மட்டன் கிரேவியும் இருந்தது. வீட்டில் சாப்பிடாமல் அவசரமாய் கிளம்பியவனுக்கு அதைப் பார்த்ததுமே வயிறு கபகபத்தது.
“அட, இதெல்லாம் வேற வாங்கி வச்சிருக்கான்… யாரு இவ்ளோ பொறுப்பா இந்த வேலையைப் பார்த்திருப்பா…” யோசித்துக் கொண்டே உள்ளே யாரும் இருக்கிறார்களா என்று தேடினான்.
“டேய் மச்சான்ஸ், எங்கடா இருக்கே… எனக்கு முன்னாடி இங்கே வந்து எவன் பார்த்த வேலைடா இது…” கேட்டுக் கொண்டே ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளைத் தாண்டி அறைக்குள் எட்டிப் பார்க்க அங்கே நாற்காலியை வரிசையாய் வைத்து ஏதோ செய்து கொண்டிருந்த புதியவனைக் கண்டு திகைத்தான்.
“ஹேய்… யாருடா நீ… இங்க என்ன பண்ணிட்டிருக்கே…”
அவன் கேள்வியில் நிதானமாய் திரும்பிய நிதின், “நீங்க தான் ஷிவா சாரா… ஆகாஷ் சார் தான் என்னை இங்கே அனுப்பி வச்சார்… நான் புதுசா சேர்ந்திருக்கிற கார் டிரைவர்… உங்களுக்கு எதுவும் ஹெல்ப் வேணும்னா பண்ணிக் கொடுக்க சொன்னார்…” என்றான் நிதானமாக.
நம்பிக்கை வராமல் அவனை ஏற இறங்கப் பார்த்தவன், “நேற்று கூட இதைப் பற்றி ஆகாஷ் எதுவும் நம்மிடம் சொல்லவில்லையே…” என யோசிக்கையிலேயே “உங்களுக்கு டிபன், டிரிங்க்ஸ், சிகரெட் எல்லாம் வாங்கி கொடுத்துட்டு கிளம்பிக்க சொன்னார்… வாங்கி வச்சிட்டேன், வேற எதுவும் வேணுமா…” என்றான்.
“இல்ல போதும்…” என்றான் ஷிவா யோசனையிலேயே.
“சரி சார், அப்ப நான் கிளம்பட்டுமா…” என்றான் நிதின்.
“ஏய் இரு, உன் பேரென்ன…” கேட்டுக் கொண்டே அலைபேசியை எடுத்தவன் ஆகாஷுக்கு முயற்சி செய்ய நிதின் செட் பண்ணி வைத்த சிக்னல் ஜாமர் சரியாக வேலை செய்த காரணத்தால் அவனது அலைபேசியில் சிக்னல் வரவில்லை. “ப்ச்…” சலித்துக் கொண்டவன், வாசலில் பைக் சத்தம் கேட்க இருவரும் வெளியே சென்றனர். இரண்டு பைக்குகளில் இருந்தும் இரண்டிரண்டு பேராய் நண்பர்கள் இறங்க அவர்களைக் கண்டதும் ஷிவா உற்சாகமானான்.
ஷிவாவின் அருகில் புதியவன் ஒருவன் நிற்பதைக் கண்ட நண்பர்கள் நெற்றியை சுருக்க, அவன் ஆகாஷ் உதவி செய்ய அனுப்பிய டிரைவர் என்றதும், சமாதானமாயினர்.
“டிபனுக்கு பரோட்டாவும் மட்டன் குழம்பும் இருக்கு… வேற எதுவும் வேணுமா, இவனைப் போக சொல்லிடலாமா…” எனவும், மேசையில் நிறைந்திருந்த மதுக் குப்பியும் சிகரெட் பாக்கெட்டும் முகத்தில் மலர்ச்சியைக் கொடுக்க, “இதுவே தாராளம் போதும்…” என்றனர் சந்தோஷத்துடன்.
“சரி, நீ கிளம்பு… வேற எதுவும் வேணும்னா நாங்க பார்த்துக்கறோம்…” என்ற ஷிவா, “சரி, செக்யூரிட்டி எங்கே போனான்…” என்றான்.
“அவனுக்கு ரெண்டு நாள் லீவு கொடுத்து ஆகாஷ் சார் போக சொல்லிட்டார் சார்…” என்றான் நிதின் பவ்யத்துடன்.
“ஓ… சரி சரி, நீ கிளம்பு… முன்னாடி கேட்டை சாத்திட்டுப் போயிரு…” என்றான் அவன் சமாதானத்துடன்.
நிதின் வெளியே சென்று கேட் சாத்தும் சத்தம் கேட்டதும், ஒருவன், “என்னடா மச்சான்… ஆகாஷ் எதுக்கு இவனை இங்கே அனுப்பினான்… நாம இங்கே வர்றது யாருக்கும் தெரியக் கூடாது தான…” சந்தேகத்தைக் கிளப்பினான்.
“எனக்கும் அதே டவுட்டு தான் டா… ஆனா, ஆகாஷ் ஏதாச்சும் காரணமா தான் இப்படி பண்ணிருப்பான்… சரி, அவனைதான் அனுப்பியாச்சே… நாம அந்த ரூமை ரெடி பண்ணி காமிராவை செட் பண்ணிட்டு சாப்பிடுவோம்…” என்றான்.
“ஆமா டா… வீட்ல சாப்பிடக் கூட தோணல, எப்படா விடியும்னு காத்திட்டு இருந்தோம்… இப்போ மட்டன் குழம்பு மணத்துக்கு செமையா பசிக்குது…” என்றான் ஒருவன்.
“ம்ம்… என்னதான் ஆகாஷ் சொன்னாலும் இந்த நிர்மலா இப்படி பொசுக்குன்னு ஓகே சொல்லுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல டா…” என்றதும், மற்றவன் “எனக்கும் தான்… ஒருவேள, அவன் மேல உள்ள பயத்துல தான் ஓகே சொல்லிருப்பா… இனி இங்க வந்து நாம எல்லாரும் இருக்குறதைப் பார்த்து ஏதாச்சும் முரண்டு பிடிப்பாளோ…” என்றான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்ற கவலையுடன்.
“அதெல்லாம் ஆகாஷ் பார்த்துப்பான்… அவங்க வரும்போது நம்மளை கொஞ்சம் மறைவா இருக்க சொல்லி ஆகாஷ் சொல்லி இருக்கான்… டேய், நீ முன்னாடி நிக்குற பைக்கை எல்லாம் பின்னாடி மறைவா நிறுத்திட்டு வா…” என்று சாவியைக் கொடுக்க மற்றவர்களும் கொடுத்தனர்.
“வாங்கடா, நாம ரூமை ரெடி பண்ணுவோம்…” என்றதும் மற்றவர்கள் தொடர்ந்தனர். ஒரு பெரிய ஹால் போன்ற அறையின் நடுவே பெரிய கட்டில் ஒன்று இருக்க மின்விசிறி மேலே தொங்கிக் கொண்டிருந்தது. ஆகாஷ் கொடுத்திருந்த குட்டி காமிராவை பொசிஷன் பார்த்து செட் செய்ய மற்ற இருவர் அறையைத் தயார் செய்தனர். “ஹூம்… இன்னும் கொஞ்ச நேரத்தில் கசங்கப் போற படுக்கையை எத்தனை முறை டா சரி பண்ணுவ, போதும்…” ஒருவன் சொல்லவும், மற்றவன் அதை யோசித்து குதூகலமாய் சிரித்தான்.
“அச்சோ, இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்கப் போற கிளுகிளுவை நினைச்சா எனக்கு இப்பவே நெஞ்சுல குளுகுளுன்னு இருக்கு மச்சான்…”
“ஹாஹா எனக்கும் தான் டா… ரொம்ப நாளாயிருச்சு நாமெல்லாம் குரூப் ஸ்டடி பண்ணி…” என்றவன், “டேய் ஆகாஷ்க்கு போன் பண்ணு… எனக்கு சிக்னல் கிடைக்கல… அவன் நிர்மலாவை பிக்கப் பண்ண கிளம்பிட்டானா கேட்போம்…” என்று கூற அலைபேசியை எடுத்தவன், “அட, என் போனிலும் சிக்னல் இல்ல மச்சான்… ஒருவேளை இந்த குடோன் அவுட்டர்ல உள்ளதால சிக்னல் கிடைக்கல போலருக்கு… சரி, நாம ஒரு ரவுண்டு உள்ள தள்ளிட்டு சாப்பிட்டு வெயிட் பண்ணுவோம்…” என்றதும் அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.
அதற்குள் பைக்கை பின்னில் நிறுத்திவிட்டு அந்த நண்பனும் வந்திருக்க அனைவரும் மேசையை சுற்றி அமர்ந்தனர். மதுக் குப்பியை முத்தமிட்டு முகர்ந்தவன் மூடி திறந்து தங்க நிற திரவத்தை அனைவர் கிளாஸிலும் ஊற்றினான்.
“சியர்ஸ்…” கண்ணாடிக் கோப்பைகள் செல்லமாய் சிணுங்கிக் கொள்ள கண்ணை மூடி கசப்போடு கூடிய அந்த சுவையை சப்புக் கொட்டி உள்ளே தள்ளினர்.
“ப்பா… என்ன இருந்தாலும் பாரின் சரக்கு… பாரின் சரக்கு தான்…” உச்சுக் கொட்டிக் கொண்டே போதையில் லயிக்கத் தொடங்கினர். ஒரு ரவுண்டோடு நிறுத்திக் கொண்டு பரோட்டாவை உள்ளே தள்ளியவர்கள் சிறிது நேரத்திலேயே உடம்பில் ஒரு பிரளயத்தை உணரத் தொடங்கினர். ஒருவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு டாய்லட்டுக்குள் நுழைய இன்னொருவன் அவனைத் தொடர்ந்து ஓடினான்.
அடுத்த அறையில் இருந்த டாய்லட்டுக்கு மற்ற இருவரும் ஓட இறுதியாய் சாப்பிட்ட ஷிவா புரியாமல் முழிக்க, சட்டென்று வயிற்றுக்குள் உணர்ந்த அவஸ்தையில் புரிந்து கொண்டு டாய்லட் தேடி ஓடினான். உலகத்திலேயே மிகவும் சுகமான விஷயம் வயிற்றைக் கலக்கும்போது டாய்லட் கிடைப்பதுதான் என்ற அரிய சிந்தனை அப்போதுதான் அவனுக்கு உதித்தது.
ஐந்து பேரும் மாறி மாறி டாய்லட்டுக்கு ஓடிக் கொண்டிருக்க வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
“டேய், ஆகாஷ் வந்துட்டான் போலருக்கு… போயி கதவைத் திறடா…” உள்ளே சென்றவனுக்காய் காத்திருந்தவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டே அடுத்தவனிடம் சொல்ல, அவனோ “நீ போடா… அய்யோ… வயித்தைப் பிசையுதே… முடியலயே… அந்த டிரைவர் உண்மைலயே ஆகாஷ் அனுப்பின ஆளு தானா… இல்ல எதையாச்சும் நமக்கு கலந்து கொடுத்துட்டுப் போயிட்டானா…” என்று சோர்வுடன் கேட்க கதவைத் திறக்கும் ஓசையைத் தொடர்ந்து,
“எப்படி அவ்ளோ சரியா கண்டு பிடிச்சிங்க அறிவாளிகளே…” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் சாதனா. அவளைத் தொடர்ந்து நிதினும், நரேனும் உள்ளே வர பின்னில் கண்ணில் நிறைந்த வெறியுடன் முகம் கோபத்தில் சிவந்திருக்க உள்ளே நுழைந்தாள் சஹானா. இருவர் டாய்லட்டில் இருக்க வெளியே காத்திருந்த மூவரும் அவர்களைக் கண்டு அதிர்ந்து எழுந்து கொண்டனர்.
காரை ஓரமாய் நிறுத்திவிட்டு வாந்தி எடுப்பதற்காய் ஓடிய ஆகாஷின் பின்னில் யசோவும் ஓடினார். என்னதான் கேசரியில் தான் கலக்கிக் கொடுத்த மருந்தின் வேலைதான் என்றாலும் அவன் துடிப்பதைக் கண்டுவிட்டு சும்மா இருக்க அந்தத் தாயால் முடியவில்லை.
“ஆகாஷ்… தண்ணி வேணுமா…” என்றவர் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஓட வயிற்றிலுள்ள குடலும் வெளியே வந்துவிடுமோ என்பது போல சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். நிறுத்தாமல் குமட்டிக் கொண்டு வர வயிற்றில் உச்சமாய் சுளீரிட்ட வலி தாங்க முடியாமல் அப்படியே பிடித்துக் கொண்டு அமர்ந்தவனின் வாயிலிருந்து சிவப்பாய் இறங்கிய ரத்தத்தைக் கண்டதும் அதிர்ந்து போனான்.
“அ…அம்மா… பிளட் மா…” அலறியவன் அன்னையின் கையிலிருந்த பாட்டிலை வாங்கி வேகமாய் வாயைக் கொப்பளித்துவிட்டு காருக்கு ஓடினான்.
வயிற்றைப் பிடித்துக் கொண்டே காருக்குள் அமர யசோவும் பதட்டமாய் மகனைத் தொடர்ந்தார். “அம்மா… என்னால வண்டி ஓட்ட முடியாது… நீங்க எடுங்க… மாமா கிளினிக் போயிடலாம்…” என்றான் அவசரமாக.
“நானா… நான் எப்படிப்பா…” டிரைவிங் படித்தது மட்டுமே அன்றி வண்டியோட்டிய அனுபவம் எதுவும் இல்லாததால் யசோ தயங்க, ஆகாஷ் யோசித்தான். கண்ணுக்குள் இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போலத் தோன்ற அதற்குமேல் தாமதிக்க நேரமின்றி அவனது பாகைத் திறந்து ஒரு ஊசியை எடுத்தவன் அருகில் பளபளப்புடன் இருந்த பாட்டிலைத் திறந்து அதன் மருந்தை ஊசியில் உறிஞ்சிக் கொண்டு கை மணிக்கட்டில் செலுத்தினான்.
“ஸ்ஸ்…” வலியில் முதலில் முகத்தை சுளித்தவன் கண்ணை ஆசுவாசமாய் மூடிக் கொண்டான். போதை ஊசியின் தாக்கத்தில் வலி சற்று மட்டுப்பட, அடுத்த நிமிடம் காரை ஸ்டார்ட் செய்தவனை கண்ணில் நிறைந்த நீருடன் வேதனையோடு பார்த்திருந்தார் யசோதா.
அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் மறுபடியும் வயிற்றுக்குள் ஒரு பிரளயம் தொடங்க வலியில் முகத்தை சுளித்தவன், “அம்மா… ஆ…. தாங்க முடியலையே…” என்று கண்ணில் கசிந்த நீருடன் கூற யசோவின் இதயத்தில் ரத்தம் கசிந்தது. வலியுடனே மேலும் ஐந்து நிமிடம் வண்டியை விரட்ட அஜயின் “குளோபல் கிளினிக்” போர்டு தெரிந்ததும் சற்று ஆசுவாசமானான் ஆகாஷ்.
ஆக்ஸிலேட்டரை அமர்த்துகையில் கால் மரத்துப் போவது போலத் தோன்ற, கைகளிலும் ஏதோ உணர்ச்சி மாற்றத்தை உணர்ந்தவன், மயக்கம் வருவது போல கண்கள் சொருகவும், கிளினிக்கிற்கு சற்றுத் தள்ளியே வண்டியை ஓரமாக நிறுத்தி, “அ..ம்மா… மாமா…” என்று கையைத் தூக்கி கிளினிக்கைக் காட்ட முயல அது அவன் மூளையின் ஆணைக்குக் கட்டுப் படாமல் செயலில்லாமல் கிடக்க அதிர்ச்சியில் உறைந்தவன் அப்படியே மயங்கி சரிந்தான். மகனையே கலக்கத்துடன் கவனித்துக்கொண்டு அழுகையை அடக்கியபடி அமர்ந்திருந்த யசோதா அவன் மயங்கவும் கதறத் தொடங்கினார்.
“ஐயோ ஆகாஷ்… உலகத்துல எந்தத் தாயும் செய்யாத செயலை என்னை செய்ய வச்சிட்டியேடா… ஒரு அம்மாவா நான் செய்தது சரியா, தப்பான்னு தெரியல… ஆனா ஒரு பெண்ணா நான் செய்தது ரொம்ப சரின்னு நம்பறேன்…” மனதுக்குள் நினைத்து தன்னை திடப்படுத்திக் கொண்டவர் காரிலிருந்து இறங்கி கிளினிக்கிற்கு சென்று விவரத்தை சொல்ல ஊழியர்கள் ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்தனர்.
அடுத்த சில நிமிடத்தில் ஆகாஷ் அங்கே அட்மிட் செய்யப்பட, அஜய் மற்றும் சில டாக்டர்கள் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். விஷயமறிந்து கிருஷ்ணனும், ஆஷிகாவும் ஹாஸ்பிடலுக்கு வந்தனர். அவன் உடலில் விஷம் கலந்திருப்பதை அறிந்து முதலுதவி மேற்கொண்டாலும் அது எந்த மாதிரி விஷம் என்பதை அறிய பிளட் டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்தது. ஆகாஷ் போதை ஊசி போட்டிருந்ததால் அப்போதைக்கு அந்த டெஸ்ட் செய்ய முடியாமல் மருத்துவர்கள் கை கட்டி நிற்க வேண்டியதாயிற்று. முதலுதவியில் இரண்டு மணி நேரம் கழித்து ஆகாஷ்க்கு உணர்வு திரும்பினாலும் அவனால் கை, காலை அசைக்க முடியவில்லை. மூச்சுத் திணறலுக்காய் ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டு விட்டிருக்க கண்ணைத் திறந்தவனுக்கு மங்கலாகவே முன்னில் நின்றவர்களைப் பார்க்க முடிந்தது.
“ஆகாஷ், இப்ப எப்படி இருக்கு…” கவலையுடன் அவன் முன்னில் இருந்த அஜய் கேட்கவும், “மா..மாமா, எ…எனக்கு சரியா பார்க்க மு..தியல…” பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் வாயும் கோணிக்கொள்ள அஜய் அதிர்ந்தான். ஆகாஷ் அதிர்ச்சியுடன் ஏதேதோ சொல்ல முயல கோணிக்கொண்ட வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் அங்கே நின்றவர்களுக்குப் புரியவில்லை.
“கடவுளே… என்ன இது, கை, கால் செயல் இழந்ததோட இப்ப கண் பார்வையும் குறைஞ்சிட்டு வருது… வாயும் கோணிடுச்சே…” என்ற அஜய், “டாக்டர்… இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம்… சீக்கிரம் பிளட் டெஸ்ட்க்கு ஏற்பாடு பண்ணுங்க… நான் நியூரோ டாக்டர் ஷைஜனை வர சொல்லறேன்…” சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
ICU வின் முன்னிலேயே காத்திருந்த கிருஷ்ணனும், ஆஷிகாவும் பதட்டமாய் அவனை ஏறிட்டனர்.
“மாப்பிள… ஆகாஷ்க்கு எப்படி இருக்கு… கண்ணைத் திறந்தானா, எதாச்சும் பேசினானா… அது என்ன பாய்சன்னு தெரிஞ்சுதா…” கிருஷ்ணன் அஜயிடம் பதட்டமாய் கேட்க ஆஷிகா சட்டென்று அன்னையைப் பார்த்தாள். அவர் கண்ணீருடன் முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருந்தாரே ஒழிய எதுவும் கேட்கவில்லை.
ஆஷிகாவின் மனதில் “அ…அம்மாவா, ஆகாஷ்க்கு பாய்சன் கொடுத்தது…” என்ற கேள்வி பூதாகரமாய் எழவும், அன்னையை கண்ணாலேயே அர்த்தத்துடன் பார்க்க அவர் மகளின் பார்வை தாங்காமல் குனிந்து கொண்டார்.
அஜய் கிருஷ்ணனிடம் பதில் சொல்லிவிட்டு வேகமாய் நகர, “யசோ, ஆகாஷ்க்கு என்ன ஆச்சு… அவன் அப்படி என்னத்த சாப்பிட்டான்… கடவுளே… என் பிள்ளைக்கு எதுவும் ஆயிடக் கூடாது…” வேண்டிக் கொண்டே அவர் யாருக்கோ பேசுவதற்கு போனை எடுத்துக் கொண்டு நகர, ஆஷிகா அன்னையின் அருகில் அமர்ந்தாள்.
“ம்மா…” அவர் கரத்தை தன் கைக்குள் எடுத்துக் கொண்டு அழைத்தவளின் அழைப்பில் ஒளிந்திருந்த கேள்வி யசோதாவுக்கும் புரிய அவரிடமிருந்து ஒரு கேவல் அழுகையோடு வெளிப்பட்டது.
“என்னதான் இப்படி ஒரு பிள்ளையை நான் பெத்திருந்தால் விஷம் வச்சுக் கொன்னிருப்பேன்…” என்று அவள் வீரவசனம் பேசி இருந்தாலும் தன் அன்னை நிஜமாலுமே அப்படி ஒரு செயலை செய்துவிட்டார் என்பது அதிர்ச்சியாகவும் நம்ப முடியாமலும் இருக்க வாயடைத்துப் போனாள் ஆஷிகா.
சிறிதுநேரம் அதிர்ச்சியில் பேசாமல் அமர்ந்தவள், “தன் தம்பிக்கு அப்படி ஒரு தண்டனை தேவைதான்… அதுவும் பெற்ற அன்னை கையால்…” என்ற முடிவுக்கு வந்து தன்னை சமாதானம் செய்தவள், அன்னையின் கையில் “நீ செய்தது சரிதான்…” என்பது போல் ஆதரவாய் தட்டிக் கொடுத்தாள்.
ஆகாஷின் ரத்தத்தைப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு ரிசல்டுக்கும், நியூரோ சர்ஜன் ஷைஜனுக்கும் காத்திருந்தனர். அந்த இடைவெளியில் ஆகாஷ்க்கு மூச்சுத் திணறல் அதிகமாக கண், பார்வை இழந்து இதயத் துடிப்பும் தாறுமாறாகத் தொடங்கியது.
அஜயும் மற்ற டாக்டர்களும் என்ன செய்வதென்று புரியாமல் அவனைக் காப்பாற்றுவதற்காய் போராட யசோதா கண்ணீருடன் மருமகனிடம் கேட்டார்.
“மாப்பிள்ள, நான் என் பையனைப் பார்க்கணும்…” கை கூப்பிய அத்தையிடம் மறுக்க முடியாமல், “அத்தையை மட்டும் உள்ளே அனுப்புங்க…” என்றவன் கிருஷ்ணனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க, ஆஷிகா உறைந்து போன மனநிலையுடன் அமர்ந்திருந்தாள்.
சில மணி நேரத்திற்குள் அழகனான தன் மகன் நோயாளியாய் அலங்கோலமாய் கிடைப்பதைக் காண சகிக்க முடியாமல் கேவிக் கொண்டே அவன் அருகில் சென்றார்.
“ஆகாஷ்…” அன்னையின் குரலில் கண்ணைத் திறந்தவன் எதையோ சொல்ல முயன்று முடியாமல் கண்ணீர் விட கேவிக் கொண்டே அவன் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்தவர் கதறினார்.
“என்னை மன்னிச்சிடுப்பா… இந்த அம்மாவை மன்னிச்சிடு… வளர்க்கத் தெரியாம புள்ளையை வளர்த்த இந்தப் பாவிதான் பெரிய தப்புப் பண்ணினவ… எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கும்போது நல்லாதான் பிறக்குது… அவன் கெட்டவனா மாறுறதும் நல்லவனா வாழுறதும் அன்னையோட வளர்ப்பிலன்னு ஒரு சொல்லு இருக்கு… அதை மறந்து போன பாவி நான்… உன்னை வளர்க்கத் தெரியாம வளர்த்து தப்பான பாதையில் நீ எங்கயோ ரொம்ப தூரம் தொலைஞ்சு போன பின்னாடி என் பிள்ளையைத் தேடிப் பாக்குற பாவி நான்… உன்னோட இந்த நிலைக்கு இந்தப் பாவி தான் காரணம்… உன்னால இனி எந்தப் பெண்ணோட வாழ்வும் சீரழியக் கூடாதுன்னு நான் எடுத்த முடிவு தான் காரணம்… அடுத்த ஜென்மத்திலாச்சும் உன்னை நான் நல்ல பிள்ளையா வளர்த்துக்கறேன்… உன்னால இனி எந்த சஹானாவுக்கும், சாதனாவுக்கும், நிர்மலாவுக்கும் எந்தப் பிரச்னையும் வேண்டாம்… நீ இப்படி அவஸ்தைப்படாம சீக்கிரம் செத்திடுப்பா… செத்திடு…” சொல்லிவிட்டு கதறி அழும் தாயின் வார்த்தையை பதில் சொல்லக் கூட முடியாமல் கேட்டிருந்தான் ஆகாஷ். அந்த அதிர்ச்சியில் அவனது இதயத் துடிப்பு மேலும் மோசமாகத் தொடங்கியது.
உயிர் சுமந்த
கருவறையும்
கல்லறையாய் மாறும்…
அமுதாகிய
முலைப்பாலும்
விஷமாய் மாறும்…
அதை வெறும் காமத்தின்
அடையாளமாய்
மட்டுமே காணும்போது….

Advertisement