Advertisement

அத்தியாயம் – 25
அந்த உயர்தர ஹோட்டலின் பார்ட்டி ஹால் ஜெகஜோதியாய் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அழகான மாலையில் ஆண்களும் பெண்களுமாய் பளபள கெட்டப்பில் அங்கங்கே  நிறைந்திருந்தனர்.
கிருஷ்ணன் கோட், சூட் போட்டு ஜம்மென்று இருக்க, அருகே அழகான பட்டு சேலையின் மீது கணவன் வாங்கிக் கொடுத்த முத்துமாலை எடுப்பாய் தெரிய மனதுக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியே காட்டாமல் வந்தவர்களிடம் முகமூடி சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தார் யசோதா.  
பிரச்சனைகளை
பிறருக்குத் தெரிவிக்காமல்
கடக்கவேணும்
தேவைப்படுகிறது…
புன்னகை என்னும்
முகமூடி…
சற்றுத் தள்ளி ஆகாஷ் அவனது நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருக்க, மகனைத் தவிப்புடன் அடிக்கடி தழுவி மீளும் பார்வையை அகற்ற முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் யசோதா. மும்முரமாய் எதோ ரகசியம் பேசி கிண்டலாய் சிரித்துக் கொண்டிருந்தவர்களின் பார்வை அங்கே வந்த ஒரு இளம்பெண்ணின் மேல் இருக்க, அதைக் கண்டவர் மனம் நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. அருவருப்புடன் பார்வையை மாற்றிக் கொண்டவர் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது.
அதற்குப் பிறகு வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தவர் உள்ளே வந்த மகளைக் கண்டதும் மனம் கனிந்தார். அழகான ரோஜா நிற புல் பிராக்கில் பெரிய ரோஜாப் பூ போல வந்த பேத்தியைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது.
“பூஜாக்குட்டி…” ஆவலுடன் அவர்களை நோக்கி செல்ல, “பாட்டி…” என்று ஆவலுடன் அவரைக் கட்டிக் கொண்டாள் பேத்தி. ஆஷிகாவின் முகத்தில் செயற்கையாய் இருந்த  சிரிப்பை மீறி கடுப்பை உணர்ந்தாலும் கையை அன்போடு பற்றியவர், “வாம்மா, மாப்பிள்ளை எங்கே…” என்றார்.
“கார் நிறுத்திட்டு வருவார்…” என்றவளிடம், “என்னடி… அம்மாவுக்கு வாழ்த்து சொல்லக் கூடத் தோணலியா…” என்றார் வேதனையுடன்.
“ப்ச்… அப்படில்லாம் இல்ல மா… ஹாப்பி ஆனிவர்சரி…” என்றவள் தந்தை அவளைக் கண்டு அருகே வரவும் புன்னகைத்தாள்.
“ஹாப்பி ஆனிவர்சரி டாடி…”
“தேங்க் யூ டியர்…” என்றவர் பேத்தியைக் கண்டதும் உற்சாகமாய், “ஹேய் குட்டி டார்லிங்… வாங்க வாங்க… டாடி எங்கே…” என்றார்.
அவர் கேட்கும்போதே உள்ளே வந்த மாப்பிள்ளை அஜய்யைக் கண்டதும் பெரிதாய் வரவேற்றார்.
“வாங்க மாப்பிள்ளை…” பணிவாய் கூறிய அத்தையிடம் புன்னகைத்தவன், “ஹாப்பி ஆனிவர்சரி விஷஸ்…” சொல்லிக் கொண்டே கையிலிருந்த பூங்கொத்தை நீட்ட, தேங்க்ஸ் சொல்லி புன்னகையுடன் வாங்கிக் கொண்டார்.
அதற்குள் அவர்களைக் கண்டுவிட்ட ஆகாஷ், “ஹாய் மாம்ஸ்… ஹாய் ஆஷி, ஹே பூஜாக்குட்டி…” என்று கூறிக் கொண்டே அக்கா மகளைத் தூக்கிக் கொஞ்ச ஆஷிகாவின் முகம் மாறியது.
அதைக் கண்ட யசோதா, “டேய், குழந்தையை இறக்கி விடு… அவ டிரஸ் எல்லாம் கசங்குது பாரு…” என்று கூற, “ஓ… ஓகே ஓகே…” என்றவன் அவளை இறக்கிவிட்டு,
“என்ன ஆஷி, தம்பிக்கு பர்த்டே கிப்ட் எதும் இல்லையா…” என்று அவள் தோளைப் பிடித்துக் கொண்டு கேட்க, “ப்ச்… தர்றேன், கையை எடுடா…” என்றவள் அவன் கையை எதார்த்தமாய் எடுப்பது போல் மாற்றிவிட, அவனுக்கு எதுவும் தோன்றாவிட்டாலும் மகள் மகனின் கையைத் தட்டி விட்டதன் காரணம் உணர்ந்த யசோவின் இதயத்தில் யாரோ கனலை வாரி இறைத்தது போல திகுதிகுத்தது.
மச்சினனுக்காய் அஜய் வாங்கி வந்திருந்த மோதிரத்தை எடுத்து நீட்ட, “மோதிரமா… ம்ம்… நாட் பேட்…” என்று சொல்லிக் கொண்டே கையில் போட்டுக் கொண்டவன், “பிரண்ட்ஸ்க்கு காட்டிட்டு வந்திடறேன்…” என்று நண்பர்களை நோக்கி நகர ஆஷிகா பெருமூச்சு ஒன்றை வேகமாய் வெளியேற்றினாள்.
“அம்மா, இது உங்களுக்கு…” என்று மகள் நீட்டிய நகைப் பெட்டியை வாங்கிக் கொண்டாலும் அவர் முகத்தில் சுரத்தே இல்லையென்பதை ஆஷிகாவும் கவனித்தாள்.
அடுத்து கேக் வெட்டும் நிகழ்ச்சி தொடங்க இரண்டு மேசை மீதும் அழகான அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருந்த கேக்கை முதலில் ஆகாஷும், இரண்டாவது யசோதா, கிருஷ்ணனும் வெட்ட எல்லாரும் வாழ்த்துகள் கூறி   பரிசளித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து நகர்ந்தனர்.
எல்லாருக்கும் கேக் கொடுத்து முடித்ததும் விருந்து தொடங்கியது. ஒரு பக்கம் டிரிங்ஸ் வேண்டியவர்களுக்கு பரிமாற தனியே ஆட்கள் இருந்தார்கள். சிரிப்பும், பேச்சுமாய் அந்த இடமே கலகலத்து சந்தோஷமாய் இருந்தது.
“டேய் ஆகாஷ், இன்னைக்கு ட்ரீட் உண்டா… நிர்மலாவுக்கு கால் பண்ணியா…” ஷிவா கேட்கவும், “டேய் பறக்காதடா… அவகிட்ட பேசி நாளைக்கு வர சொல்லிடுவோம்…”
“நாளைக்கு தானா…” ஏமாற்றமாய் இன்னொருவன் கேட்க, “இன்னைக்கு பார்ட்டி முடியவே நேரம் ஆகிடும் போலருக்கு… அப்புறம் நம்ம வேலை எப்படி நடக்கும்… அதனால காலைல வர சொல்லிடறேன்…” என்றான் ஆகாஷ்.
“எப்படிடா மச்சான், இவ்ளோ உறுதியா அவ வருவான்னு சொல்லற…” என்ற ஷிவாவிடம், “வரலன்னா தூக்கிடலாம்கிற நம்பிக்கையில் தான்…” என்றான் ஆகாஷ் சிரிப்புடன். சிறிது நேரத்தில் மதுவோடு பார்ட்டி களைகட்ட பாமிலியாய் வந்தவர்கள் விடை பெறத் தொடங்கினர்.
கிருஷ்ணனும் நண்பர்களுடன் சிறிது மது அருந்தியிருந்தார். “மாம்ஸ், நீங்களும் வந்து என்ஜாய் பண்ணுங்க…” என்று அஜயிடம் ஆகாஷ் கூற ஆஷிகா முறைத்தாள். மனைவியின் முறைப்பிலேயே மனதைப் படித்த அஜய், வேண்டாமென்று அழகாய் மறுத்து விட்டான்.
அன்னையிடம் பொருமிக் கொண்டே இருந்தாள் ஆஷிகா.
“சரியான குடிகாரப் பசங்க… ஓசில கிடைக்குதுன்னு எப்படி ஊத்திக்குதுங்க பாரு…” என்றாள் ஆகாஷ் நண்பர்களைக் கண்டு. ஆனால், ஆகாஷ் அளவாகக் குடித்திருந்ததால் நிதானமாகவே இருந்தான்.
பார்ட்டி ஹாலை விட்டு சற்றுத் தள்ளி பாத்ரூம் பக்கமாய் சென்றவன் நிர்மலாவுக்கு அழைத்தான். முதலில் அவன் சொன்னதற்கு மறுத்தவள் கெஞ்சிக் கொண்டிருக்க, இவன் மிரட்டவும் பயந்து வேறு வழியில்லாமல் ஓகே சொல்வது போல நிதின், நரேன் சொல்லிக் கொடுத்தபடியே  அடுத்தநாள் அவனைக் காண வர சம்மதித்தாள்.
சந்தோஷத்தில் துள்ளியவன் நண்பர்களிடம் விஷயத்தை சொல்ல அவர்களும் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தனர். அன்று பார்ட்டி முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவர்களிடம்,
“டேய், நாளைக்கு நான் மட்டும் போயி நிர்மலாவை குடோனுக்கு அழைச்சிட்டு வந்திடறேன்… நீங்க அதுக்குள்ள அங்க போயி பழைய போல காமிரா எல்லாம் செட் பண்ணி வச்சிருங்க…” என்றவன் குதூகலத்துடன் இருந்தான். அவர்கள் பேசுவது என்னவென்று புரியாவிட்டாலும் நிச்சயம் நல்ல விஷயமில்லை என்பது மட்டும் அவர்களை கவனித்துக் கொண்டிருந்த யசோதாவுக்குப் புரிந்தது.
“ஓகே மா, நாங்க கிளம்பறோம்…” என்ற மகளிடம் எதுவும் கூறாமல், “இன்னைக்கு வீட்டுல தங்கிட்டுப் போங்களேன்… மாப்பிள்ளை…” என்று மருமகனிடம் கோரிக்கை வைத்த அன்னையை முறைத்தாள் ஆஷிகா.
“ம்மா, அவருக்கு ஹாஸ்பிடல்ல நிறைய வேலை இருக்குமா… இன்னைக்கு கூட ஏதோ ஒரு ஆப்பரேஷன் இருக்கு வரலேன்னு சொன்னவரை, நீ வருத்தப்படுவேன்னு கம்பெல் பண்ணி அழைச்சிட்டு வந்தேன்…” என்றாள் மகள்.
“ஆமா அத்தை, இன்னொரு நாள் வீட்டுக்கு வரோம்…” என்றான் அஜயும்.
“சரி நீ, பூஜாவாச்சும் வாங்களேன்…” என்ற அன்னையிடம் மறுக்க வருத்தமாய் இருந்தாலும், “இல்லம்மா, நாளைக்கு பார்மஸில ஒரு முக்கியமான வேலை இருக்கு… போகணும்… நாங்க அப்புறம் வரோம்…” என்றவள் தந்தையிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அவள் எப்போதும் ஆகாஷை கண்டுகொள்ள மாட்டாள் என்பதால் அவனிடம் சொல்லாததை அவனும் எதிர்பார்க்கவில்லை.
அஜய் டாக்டர் என்பதால் கிளினிக்கைப் பார்த்துக் கொள்ள, அவர்களுக்கு சொந்தமான பெரிய பார்மஸியை ஆஷிகா பார்த்துக் கொண்டாள். அவள் படித்ததும் அது சம்மந்தமாக என்பதால் கல்யாணம் முடிந்த கையோடு அவளிடம் பார்மஸியின் பொறுப்பை விட்டுவிட்டான் அஜய்.
“அம்மா, நேத்து நீ பார்மஸிக்கு வந்து மெடிசின் லிஸ்ட் கொடுத்திட்டு அவங்க எடுக்கறதுக்குள்ளே ஏதோ அவசரம்னு கிளம்பி வந்துட்டியாம்… என்கிட்டே கொடுத்தார்… வச்சுக்க…” என்றவள் அழகாய் பாக் செய்யப்பட்ட அந்த குட்டி அட்டைப் பெட்டியைக் கவருடன் எடுத்து அன்னையிடம் நீட்ட, வாங்கிக் கொண்டார்.
அவர் மாதம் ஒருமுறை முதியோர் இல்லத்துக்குத் தேவையான மருந்து மாத்திரை, பண உதவியை செய்வதோடு வீட்டில் வேலை செய்யும் பணிக்காரர்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால் சிகிச்சையளித்து, தேவையான மருந்துகளையும் பார்மஸியில் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தார். அதற்கான தொகையை வற்புறுத்தி மகளிடம் கொடுக்கவும் செய்வார்.
மகள் விடை பெற்று சென்றதும் ஒரு வெறுமை மனதில் நிறைந்தது. மனதில் ஏதேதோ நினைவுகள் அலட்ட இறுகிய முகத்துடன் யோசனையாய் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த மனைவியிடம் வந்தார் கிருஷ்ணன்.
“என்ன யசோ, இங்க தனியா உக்கார்ந்திருக்க… வா கிளம்பலாம்…” என்றதும் தலையாட்டியவர் எழுந்தார். ஏறக்குறைய பார்ட்டி ஹாலில் அனைவரும் சென்று விட்டிருக்க அவர்களும் வீட்டுக்குக் கிளம்பினர்.
அடுத்தநாள் விடிந்ததும் நிர்மலா அவனிடம் வரப் போகிறாள் என்ற சந்தோஷத்தில் ஆகாஷ்க்கு உறக்கமே வரவில்லை. அவளை குடோனுக்கு அழைத்துச் சென்ற பிறகு அங்கு என்ன செய்யப் போகிறோம் என நினைக்கையிலேயே  அவனுக்கு உற்சாகமாகவும் திரில்லாகவும் இருந்தது. அவள் நிச்சயம் சம்மதிப்பாள் என்று வாய் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனதில் வர மாட்டாள் என்றே உறுதியாய் நினைத்திருந்தான்.
“ஒருவேளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்த பின்பு முரண்டு பிடித்தால் என்ன செய்வது…” என யோசித்தவன் மனதில் ஒரு விஷயம் தோன்றியது. இந்த மாதிரி உல்லாச சந்தர்பங்களில் தான் உபயோக்கும் போதை ஊசியை அவளுக்கும் போட்டு விடுவது… என முடிவு செய்தான்.
ஏதேதோ யோசனையில் வெகு நேரம் தள்ளியவன் மெல்ல உறங்கிப் போனான்.
அவனைப் போலவே உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார் யசோதா. கிருஷ்ணன் கட்டிலில் குறட்டை விட்டு நல்ல உறக்கத்தில் இருக்க, அடுத்தநாள் காலையில் நிர்மலாவை ஆகாஷ் வர சொன்னதை சாதனாவின் மூலம் அறிந்து சற்று டென்ஷனாக இருந்தார்.
“கடவுளே… இவனுக்கு ஏன் இப்படி ஒரு வக்கிரமான புத்தியைக் கொடுத்தாய்… மேலும் மேலும் தப்பு செய்து கொண்டே போகிறானே… நான் அந்தப் பெண்ணையாவது காப்பாற்றியாக வேண்டுமே…” யோசித்துக் கொண்டிருந்தார்.
ஒரு தாய் என்னும் பாச நிலை தாண்டி, ஒரு பெண்ணாய் இன்னொரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையை வேடிக்கை பார்க்கக் கூடாது… தடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தபோது விடியலுக்கான ஆயத்தத்தில் சூரியன் உதிக்கத் தயாராகிக் கொண்டிருந்தான்.
அதற்கு பின் உறங்காமல் குளித்து பூஜை அறைக்கு சென்றவர் வெகுநேரம் பிரார்த்தித்து மந்திரங்களை சொல்லி அங்கேயே அமர்ந்திருந்தார். விடியலும் பிரார்த்தனையும் அவர் மனதில் தெளிவைக் கொடுத்திருக்க முகத்தில் ஒரு அமைதி தெரிந்தது.
காலை சமையலை சமையல்காரர் தொடங்கியிருக்க பேப்பர் படித்துக் கொண்டிருந்த கணவருக்கு காபியைக் கலந்து கொடுத்துவிட்டு மகனை எழுப்ப செல்ல அங்கே அவன் குளிக்க செல்வதற்காய் டவலுடன் கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தான்.
“என்ன ஆகாஷ், நேரமா எழுந்துட்ட போலருக்கு…” மனதுக்குள் எழுந்த வெறுப்பான வேதனையை முகத்தில் காட்டாமலே கேட்டார்.
“ஒரு பிரண்டைப் பார்க்கப் போகணும் மம்மி… அதான் சீக்கிரம் கிளம்பறேன்…” என்றான் அவன்.
“சரிப்பா, டிபன் சாப்பிட்டுப் போ… அப்படியே போகும்போது என்னை கோவில்ல இறக்கி விட்டுட்டுப் போயிடு…” அன்னை சொல்லவும், நிர்மலாவை அழைக்க அந்த வழியில் தான் செல்ல வேண்டுமென்பதால் சம்மதமாய் தலையாட்டியவன் குளிக்க செல்ல வேதனையுடன் நகர்ந்தார் யசோதா.
அழகாய் புறப்பட்டு கம்பீரமாய் மாடியிலிருந்து இறங்கி வந்த மகனை இதயம் கசியும் வேதனையுடன் நோக்கினார் யசோ. நல்ல உயரமாய் காதில் சின்ன கறுப்புக் கல் வைத்த கம்மல் அவன் கோதுமை நிறத்துக்கு மேலும் எடுப்பாய் தெரிய ஆண்மையும் கம்பீரமுமாய் அழகான தோற்றத்தில் எந்தக் குறைச்சலும் இல்லாமல் இருந்தான். “ஆனால் மனதை ஏன் இப்படி சாக்கடையாக்கி வைத்திருக்கிறான்…” என மகனைப் பற்றி யோசித்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தவனுக்கு தட்டை வைத்து இடியாப்பம், தேங்காய் பாலுடன் சிறிது கேசரியும் வைக்க அவன் முகம் மலர்ந்தது.
“வாவ்… மம்மி… நேத்து பர்த்டேக்கு இன்னைக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா…” கேட்டுக்கொண்டே அதை ரசித்து சாப்பிட்டான். அவன் சாப்பிடுவதை கண்ணில் துளிர்த்த நீருடன் பார்த்தவர் வேகமாய் உள்ளிழுத்துக் கொண்டார்.
“என்ன மம்மி, டல்லா இருக்கீங்க… நேத்து பார்ட்டி டயர்டு இன்னும் மாறலியா… என்னைப் பாருங்க, எவ்ளோ பிரஷ்ஷா இருக்கேன்னு…” அவன் கேட்க அங்கு வந்தார் கிருஷ்ணன்.
“என்ன ஆகாஷ், நேரமா கிளம்பிட்ட போலருக்கு…”
“எஸ் டாடி… நீங்க ஆபீஸ் கிளம்பலையா…” என்றான் மகன்.
“ம்ம், இதோ கிளம்பப் போறேன்…” என்றவர் அவரது அறைக்கு செல்ல, பின்தொடர்ந்தார் யசோதா.
அவருக்கு டவலைக் கொடுத்து உடுக்க வேண்டிய உடையை கட்டிலில் எடுத்து வைத்தவர், “நான் கோவிலுக்குப் போறேங்க… நீங்க சாப்பிட்டுக் கிளம்பிக்கறீங்களா…” எனவும், “ம்ம்…” என்றவர் ஏதோ நினைவு வந்த போல மனைவியிடம் திரும்ப வந்தார்.
“உன்னைப் பார்த்தா ரொம்ப டயர்டா தெரியறே… பத்திரமா போயிட்டு வா… முடிஞ்சா மாப்பிள்ளை கிளினிக் போயி ஒரு செக் அப் பண்ணிக்கோ…” அதிசயமாய் தன்னை கவனித்து கணவர் அக்கறையோடு சொன்ன வார்த்தைகள் கண்ணில் நீரை வரவழைக்க, “சரிங்க…” என்றுவிட்டு நகர்ந்தார்.
யசோவுக்குள் ஏதோ ஒரு பதட்டம் ஓடிக் கொண்டிருப்பதை அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தாலும் என்னவென்று பெரிதாய் யோசிக்க நேரமில்லாததால் குளிக்க சென்றார்.
ஆகாஷ் காரில் அமர்ந்து ஹாரன் அடிக்கவும் துடிக்கும் இதயத்தையும், துவளும் கால்களையும் இறுகப் பிடித்துக் கொண்டு உணர்ச்சியைத் துடைத்த முகத்துடன் காரில் ஏறி அமர்ந்தார் யசோதா. காரைக் கிளப்பியவன் வயிற்றுக்குள் சுருக்கென்று ஒரு குத்தல் தோன்ற வயிற்றைப் பிடித்துக் கொண்டான். அப்போதே அது சரியாகிவிட காரை எடுத்தவன் சாலையில் கலந்து சிறிது தூரம் போக மீண்டும் ஒரு குத்தல் வயிற்றுக்குள் உணர வலியோடு நெற்றியை சுருக்கினான்.
“அ…அம்மா…” அவஸ்தையோடு அழைத்தவனை வெளியே இலக்கில்லாமல் வெறித்திருந்த யசோ திரும்பினார்.
“என்ன ஆகாஷ்…”
“வ…வயிறு வலிக்கிற போல இருக்கு…” என்று வண்டியை ஓரமாய் நிறுத்தியவனுக்கு அந்த ஒரு குத்தல் சடசடவென்று பல குத்தலாய் மாறி சுருக் சுருக்கென்று ஊசியாய் துளைக்க, துடித்தவனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
“அம்மா, முடியல… வயிறு ரொம்ப வலிக்குது…” வலி தாங்காமல் வேர்க்கத் தொடங்கியவனைக் கண்டு யசோவின் மனம் வேதனையில் பதறியது.
“ஆ…காஷ்…”
“அ..அம்மா… முடியல… ஆ….” அலறினான்.
கண்ணில் வழிந்த நீருடன் மகன் துடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தவர், “ஆகாஷ்…” என்று அழத் தொடங்கினார்.
வேதனையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டே துணைக்கு நண்பனை அழைக்க எண்ணி அலைபேசியை எடுத்த ஆகாஷ், ஷிவாவுக்கு அழைக்க அவனது எண் சுவிட்ச் ஆப் என்று வந்தது. மற்றொருவனின் எண்ணும் சுவிட்ச் ஆப் என்றே வர, “அம்மா, அப்பாவுக்கு…” என்றவன் அதற்குள் வயிற்றில் வந்த பெரிய சுருக் குடலையே புரட்டிப் போட தொண்டைக்குள் அவஸ்தையை உணர்ந்து வாந்தி எடுக்க இறங்கி ஓடினான்.
வினைகளின் விதைகள்
உடனே முளைப்பதில்லை…
ஆனாலும் அதன் மிச்சங்கள்
எச்சங்களாய் தொடர்கிறது…
எச்சங்களும் என்றாவது
விதைகளாய் வெடிக்கும்…
வினைகள் அன்று
வேர்விட்டுப் படர்ந்து
விருட்சமாய் முளைக்கும்…

Advertisement