Advertisement

அத்தியாயம் – 24
“இல்லமா, நான் வரல… உன் புத்திரன் வெளிநாட்டுக்கு கிளம்பினதும் சொல்லு… வீட்டுக்கு வரேன்…” கோபமாய் அதே நேரம் அழுத்தமாய் வந்த மகள் ஆஷிகாவின் வார்த்தையில் கண்ணில் நீர் துளிர்த்தது யசோதாவுக்கு.
“நீயே இப்படி சொன்னா எப்படி மா… இந்த வீட்டுல என்னையும் ஒரு மனிஷியா நினைச்சு அன்பா இருக்கறது நீ மட்டும் தான்… இப்ப நீயும் என்னை விட்டு விலகி நின்னா நான் என்ன பண்ணுவேன்…”
“புருஷன் எது செய்தாலும் தட்டிக் கேட்காம அடிமை மாதிரி இருந்துட்டு, புள்ளையை அவன் போக்குல போக விட்டுட்டு இப்ப இப்படிப் பேசி என்ன பண்ண… உனக்கெல்லாம் முதுகெலும்பே ஆண்டவன் வைக்கலை போலருக்கு… எப்படி தான் அந்த வீட்டுல இருக்கியோ… உன்னை நினைச்சா பாவமாவும் இருக்கு… அதே நேரம் ஆத்திரமாவும் வருது…” படபடப்புடன் மகள் சொல்லவும் அவர் கண்கள் கலங்கியது.
நாளை அவரது கல்யாண நாள் மற்றும் ஆகாஷின் பிறந்தநாள் விழாவுக்கு மகள் வரமாட்டேன் என்று கூற,  வரச்சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“நான் எத்தனை காலமா படிச்சுப் படிச்சு சொல்லறேன்… ஆகாஷோட நட்பும், அவன் போக்கும் சுத்தமா சரியில்லை… கண்டிச்சு வைங்கன்னு… அப்பல்லாம் கண்டுக்காம இருந்திட்டு இப்ப கண்ணீர் விட்டு என்ன பண்ணுறது… அவன் கேக்கும்போதெல்லாம் உன் புருஷன் பணத்தை எடுத்து நீட்டினார்ல… அப்புறம் இப்படிதான் தறுதலையா வந்து நிப்பான்… இனி புலம்பி என்ன பிரயோசனம்…”
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தைக் கூறு போட, “தப்புதான்டி… நான் அவனை சரியா வளர்க்கலை… புருஷன், புள்ளை வார்த்தைக்கு மறுபேச்சுப் பேசாம அப்படியே வாழ்ந்து பழகிட்டேன்… என்னை அதட்டி, அடக்கியே உன் அப்பா அடிமையா மாத்திட்டார்… எனக்குன்னு இருக்கறது நீ ஒருத்திதானே… இப்ப நீயும் இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன்… பூஜாக் குட்டியை அழைச்சிட்டு வீட்டுக்கு வா மா…” அன்னையின் கெஞ்சல் மனதை என்னவோ செய்ய அவரை நினைத்துப் பரிதாபமாய் இருந்தது ஆஷிகாவுக்கு.
“எனக்கு உன் பையன் மூஞ்சில முழிக்கவே இஷ்டம் இல்ல… நான் பொறந்த வயித்துல தான் அவனும் பிறந்தான்னு நினைக்கவே அசிங்கமா இருக்கு… அந்த கேடு கெட்டவனுங்க அங்கே இருக்கும்போது என் பொண்ணைக் கூட்டிட்டு வந்தா மனசுக்குள்ள எந்த மாதிரி வக்கிரத்தை வச்சிட்டு அவனுங்க பார்க்கறாங்க, பழகறாங்கன்னு தெரியுமா… உன் பிள்ளை இருக்கற வரைக்கும் பூஜாவையும் அங்க அனுப்ப மாட்டேன்… எதுக்கும் நீ கூட கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்க… சாதனா சொன்ன போல வெறி முத்திப் போனா அவங்களுக்கு அம்மாக்கும், கூடப் பிறந்தவளுக்கும் கூட வித்தியாசம் தெரியாது… பொறந்த குழந்தையைக் கூட விட்டு வைக்காத காமவெறி பிடிச்ச மிருகங்க… ச்சை…” மனதில் உள்ளதை அவள் வார்த்தையாய் துப்ப அப்படிப்பட்ட மகனைத் தன் வயிற்றில் சுமந்து, பாராட்டி சீராட்டி வளர்த்ததை எண்ணி அவமானத்தில் மனம் குன்றிப் போனார் யசோதா.
“ஆஷி மா…”
“சாரிமா… உன்னை வேதனைப் படுத்தணும்னு சொல்லலை… நானும் ஒரு பொண்ணைப் பெத்து வச்சிருக்கேன்… அங்கங்கே பெண்களுக்கு நடக்கற அக்கிரமத்தைக் கேட்டா வெளியே அனுப்பவே பயமாருக்கு… அப்படி ஒரு அநியாயத்தை என் கூடப் பிறந்தவனே செய்திருக்கான்னு தெரியும்போது தைரியத்தோட என் பொண்ணை அங்கே அழைச்சிட்டு வர முடியலை… உன்னைச் சொல்லி என்ன பண்ணுவ… வழக்கம் போல புருஷனையும், பிள்ளையும் நினைச்சு மூலைல உக்கார்ந்து அழுவ… உன்னால வேற என்ன பண்ண முடியும்… இதே நானா இருந்தா என் மகன்னும் பார்க்காம விஷம் வச்சுக் கொன்னிருப்பேன்… சரி, பீல் பண்ணாத… உனக்காக நாளைக்கு நான் பங்க்ஷன் ஹாலுக்கு வந்திடறேன்… வச்சிடறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டாள்.
மகள் அழைப்பைத் துண்டித்தும் அதையே பார்த்துக் கொண்டிருந்தவரின் மனதில் அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சம்மட்டியாய் அடித்துக் கொண்டிருந்தது.
ஒரு கேடு கேட்ட அயோக்கியனைப் பெற்ற தாயாய் மனம் மிகவும் வலித்தது. ஆகாஷின் தந்தை கிருஷ்ணன் ஒரு காலத்தில் பெயருக்கு ஏற்ற போலவே வாழ்ந்து பிள்ளைகள் வளரத் தொடங்கிய பிறகு சற்று அடங்கிப் போனவர். தாய் தந்தையரை சிறுவயதிலேய இழந்த யசோதா, வளர்த்து ஆளாக்கிய அண்ணனுக்கு பாரமாய் இருக்கக் கூடாதென்று கணவனின் அட்டகாசத்தை சகித்து பேசா மடந்தையாய் மாறிப் போனவர். மகனும் தந்தையின் பாதையில் தொடர எத்தனையோ தடுக்க முயன்றும் கை மீறிப் போக ஒன்றும் செய்ய முடியாமல் விட்டுவிட்டார்.
ஆகாஷின் அனைத்து தப்புத் தாளங்களுக்கும் தந்தையே முன்மாதிரியாய் இருக்க அவராலும் மகனிடம் எதையும் தட்டிக் கேட்க முடியாமல் அமைதியாய் துணை போகத் தொடங்கிவிட்டார்.
மதியம் சாப்பிட அழைக்க செல்கையில் அவர் காதில் விழுந்த, “என்னை ஒண்ணும் பண்ணிடாதிங்க… விட்டுடுங்க…” என்ற அந்தப் பெண்ணின் கதறல் இப்போதும் இதயத்தை அறுப்பது போல காதுக்குள் இம்சித்துக் கொண்டிருந்தது. வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்த யசோதா ஒரு முடிவுக்கு வந்தவராய் எழுந்தார்.
**********************
நரேனின் போலீஸ்துறை நண்பன் கொண்டு வந்து கொடுத்த கால் ஹிஸ்டரியை அலசிக் கொண்டிருந்தனர் நிதின், நரேன், சாதனா மூவரும். சஹானா ஒரு புறம் அமர்ந்து அவர்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
அதில் மூன்று பேரின் எண்ணுக்கு வந்த அழைப்புகளின் லிஸ்ட் இருந்தது. ஆகாஷின் நெருங்கிய நண்பர்களின் எண்ணுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஆகாஷ் இந்தியா வந்த பிறகு, இந்த ஷிவா நம்பர்ல இருந்து தான் எல்லாருக்கும் அழைப்புப் போயிருக்கு… அதுல சரியா அஞ்சு நம்பர்ஸ் இப்ப ஒரே இடத்துல அதாவது ஆகாஷ் வீட்டு ஏரியாவுல தான் சிக்னல் காட்டுது…”
“ம்ம்… ஒருவேளை நாம தேடுற அஞ்சு பேர் இவங்க தானோ…” சாதனா சொல்லும்போதே அவளது அலைபேசி அலற எடுத்தவளின் முகம் மலர்ந்தது.
“ஆகாஷ் அம்மா தான் கால் பண்ணறாங்க…” என்றதும் ஆர்வத்துடன் அடுத்து வந்தவர்கள், “ம்ம்… ஸ்பீக்கர்ல போட்டுப் பேசு…” என்றனர்.
தலையாட்டியவள் எடுத்து “ஹலோ…” என்றதும்,
“நான் ஆஷிகா அம்மா பேசறேன் மா…” என்றார் யசோதா.
“ம்ம், சொல்லுங்கம்மா… நான் சாதனா தான் பேசறேன்…”
“நீ கேட்ட விவரத்தை நான் உங்களுக்குத் தர்றேன்… ஆனா, எனக்கு நீங்க ஒரு வாக்கு தரணும்…” அவர் சொல்லவும் அவள் யோசனையாய் முகத்தை சுளிக்க, “என்னன்னு கேளு…” என்று சைகை காட்டினான் நரேன்.
“என்ன வாக்கு மா…”
“அந்த அஞ்சு பேரை நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க… ஆனா, ஆகாஷை நீங்க எதுவும் பண்ணக் கூடாது…” அவர் சொல்லவும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர்.
“என்னடா, இப்படி ஒரு கேடு கெட்டவனை மகனாப் பெத்துட்டு அவனைக் காப்பாத்த நினைக்கறாளேன்னு நீங்க யோசிக்கலாம்… நான் அதுக்காக சொல்லலை… என் தப்பை சரி செய்ய இனி முடியாது… ஆனா திருத்திக்க முயற்சி பண்ணறேன்… அவனை என் பொறுப்புல விட்டிடுங்க… ஒரு அயோக்கியனைப் பெத்த பாவத்துக்கு அந்த தண்டனையை நான் கொடுக்கிறது தான் சரியாருக்கும்…” குரல் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள அவர் குற்றவுணர்ச்சியுடன் பேசியதை யோசனையுடன் கேட்டிருந்தனர்.
“அம்மா, உங்க மனசைப் புரிஞ்சுக்க முடியுது… ஆகாஷ் பண்ணின தப்புக்கு அவங்க அப்பா சப்போர்ட் பண்ணாலும் நீங்களும், ஆஷிகாவும் ரொம்ப நல்ல டைப்னு விசாரிச்சப்ப புரிஞ்சுகிட்டேன்… அதான் உங்க ரெண்டு பேரையும் கோவில்ல பார்த்து எல்லா விஷயத்தையும் சொன்னேன்… என்னதான் மகன் தப்புப் பண்ணினாலும் அவனைத் தண்டிக்க நீங்க ஒத்துக்குவிங்களான்னு தெரியலை… முதல்ல அந்த அஞ்சு பேரைக் கண்டுபிடிச்சு தண்டிக்கணும்னு தான் உங்க உதவியைக் கேட்டோம்… இப்ப நீங்களே எல்லாம் புரிஞ்சுகிட்டீங்க… இனி உங்க மகனுக்கு ஒரு பெண்ணா, ஒரு நல்ல தாயா என்ன தண்டனை கொடுக்கணும்னு முடிவு பண்ண வேண்டியது உங்க கைல இருக்கு…”
“ம்ம்… நிச்சயம் பண்ணுவேன்மா… அடிக்க வேண்டிய வயசுல அடிக்காம, கண்டிக்க வேண்டிய வயசுல கண்டிக்காம வளர்த்ததுக்கு இந்த தண்டனை அவசியம்தான்… நான் ஒரு பாவி… இப்படி ஒரு அயோக்கியனைப் பெத்ததுக்கு அந்தப் பொண்ணோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாலும் தகும்…” என்றவர் போனிலேயே கதறி அழ ஒரு தாயின் வேதனை புரிந்து கண்ணீருடன் நோக்கி நின்றனர்.
“அழாதீங்க மா… ஒரு அன்னையே மகனுக்கு கொடுக்கிற இந்த தண்டனை தப்பு பண்ணற பசங்களுக்கு ஒரு படிப்பினையா இருக்கணும்… அந்த அஞ்சு அயோக்கியனுங்க டீடைல்ஸ் தெரிஞ்சுதா…” என்றாள் சாதனா.
“ம்ம்… அஞ்சு இல்ல, ஆறு பேர்… எல்லாரும் இப்ப இங்க வீட்ல தான் இருக்காங்க… அவங்க பேரு, டீடைல்ஸ் எல்லாம் உன் நம்பருக்கு வாட்ஸ்அப் பண்ணறேன்… வச்சிடறேன்மா…” என்றவர் அழைப்பைத் துண்டிக்க, “ஒரு நல்ல தாயின் வயிற்றில் இப்படி ஒரு பாவி எப்படிப் பிறந்தானோ…” என்று பெருமூச்சு விட்டார் சசிகலா.
சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவ, சஹானா தான் பேசினாள். “எதுக்கு ஆகாஷை எதுவும் பண்ண மாட்டோம்னு ஒத்துகிட்டீங்க… அந்த அஞ்சு பேரை விட அவங்களுக்கு மூளையா இருக்கற அவனைத் தண்டிக்கிறது தான் ரொம்ப முக்கியம்… அவன் அம்மா பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு பிள்ளைப் பாசத்துல ஏதும் பண்ணலேன்னா… அப்படியே விட்டுடுவிங்களா…” அவள் படபடப்பாய் கேட்டாலும் அதில் அர்த்தம் இருக்கவே அமைதியாய் யோசித்தனர்.
“நீ சொல்லறதும் சரிதான் சஹி… அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்… ஒருவேளை அவங்க தாய்ப்பாசம் தடுத்திட்டா அதை நாம செயல்படுத்துவோம்… இப்ப இந்த அஞ்சு பேருக்கான வலையை வீச ரெடி பண்ணுவோம்…” நிதின் சொல்லவும் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினர்.
**********************
“என்னங்க, எழுந்திருங்க… கோவிலுக்குப் போகணும்ல…” மனைவி யசோவின் குரலில் கண்ணைத் திறந்த கிருஷ்ணனுக்கு முன்தினம் உள்ளே சென்ற விஸ்கியின் உபயத்தால் கண்கள் திகுதிகுவென எரிந்தது. எழுப்பியதற்கு மனைவியைத் திட்ட வாயைத் திறந்தவர் அன்றைய நாள் நினைவு வரவும் வாயை அடக்கிக் கொண்டார்.
சுவர்க்கடிகாரம் மணி ஏழைத் தாண்டியதை உணர்த்த கொட்டாவியுடன் எழுந்து அமர்ந்தவர் முன்னில் குளித்து பூஜை முடித்ததன் அடையாளமாய் நெற்றியில் விபூதியும் குங்குமமாய் மங்களகரமாய் நின்ற மனைவியை ஒரு பார்வை பார்த்தவர், “என்ன யசோ… வீட்டுல உன் பூஜையை முடிச்சுட்டியா… ஆகாஷ் எழுந்துட்டானா…” என்றார்.
“இனிதான் கூப்பிடணும்… கோவில்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன்… போயிட்டு வந்திடலாம்…” என்றவரின் கண்கள் வீங்கி, சரியாக உறங்காதது போல் தோன்ற, “என்ன யசோ, உடம்புக்கு முடியலையா… கண்ணெல்லாம் வீங்கி ஒரு மாதிரி இருக்க……” என்றார் கிருஷ்ணன். மற்ற நாட்கள் எப்படி இருந்தாலும் கல்யாண நாள் அன்று மட்டும் மனைவியிடம் அன்போடு நடந்து கொள்வதை முப்பது ஆண்டு கால வழக்கமாய் வைத்திருந்தார் கிருஷ்ணன்.
“அதெல்லாம் இல்லங்க… உங்களுக்கு காபி தரட்டுமா…” என்று கேட்க “வேண்டாம் நான் குளிச்சிட்டு குடிச்சிக்கறேன்…” என்று எழுந்தவர், “ஒரு நிமிஷம் யசோ…” என்றார்.
மகனை அழைப்பதற்காய் நகர்ந்தவர் கணவன் குரலில் திரும்பி, “என்னங்க…” என்றார்.
“இரு…” என்று அவரது அலமாரியைத் திறந்தவர், ஒரு நகைப் பெட்டியை எடுத்து நீட்டினார்.
“போன மாசம் நானும் என் பிரண்டும் ஹைதராபாத் போனப்ப அவன் ஒயிப்க்கு வாங்கினான்னு நானும் வாங்கினேன்.. இது உனக்கு என் கல்யாண நாள் பரிசு…” மூன்று வரியில் அழகாய் முத்துக்கள் தங்கக் கம்பியில் கோர்த்திருக்க பெரிய ஒரு டாலருடன் அழகாய் இருந்தது முத்துமாலை.
அதைப் பார்த்தாலும் வாங்காமல் கணவன் முதன் முதலாய் வாங்கித் தந்த பரிசில் திகைத்து அதிசயமாய் கணவனின் முகத்தைப் பார்க்க, அதில் ஒரு குற்றவுணர்ச்சி தெரிந்தது.
“இந்த முப்பது வருஷ வாழ்க்கைல உனக்கு நான் எதுவுமே பரிசு கொடுத்ததில்லை… நீயும் கேட்டதில்லை… பணத்தைக் கொடுத்தா என் பொறுப்பு முடிஞ்சதுன்னு நினைச்சுக்குவேன்… என்னமோ இப்ப வாங்கணும்னு தோணிச்சு… பிடிச்சிருக்கா யசோ…” இத்தனை வருட தாம்பத்யத்தில் தனது அபிப்ராயத்தை கணவர் முதன் முறையாய் கேட்கவும் அவர் கண்ணில் நீர் அரும்பியது.
“ரொம்பப் பிடிச்சிருக்குங்க…” என்றவர் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியே செல்ல கிருஷ்ணனுக்குள் சிறிது நாட்களாய் மனைவியின் மீது எழும்பத் தொடங்கியிருந்த குற்றவுணர்ச்சி அதிகமாகி இருந்தது.
சில நாட்களாகவே அவர் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். யசோதா இரவில் சரியாக உறங்காமல் அடிக்கடி எழுந்து எங்கோ வெறித்தபடி அமர்ந்திருப்பதும், சிலநேரம் விசும்பும் சத்தமும் அவர் மனதில் ஏதேதோ பிரச்சனைகள் அலட்டுவதை உணர்ந்திருந்தார். தான் என்ற அகம்பாவத்தில் தலைகால் புரியாமல் ஓடிக் கொண்டிருக்கையில் இப்படி எதுவும் தோன்றியதில்லை… கவனித்ததுமில்லை… ஒரு மாதத்திற்கு முன் நண்பன் ஒருவனின் மறைவுக்குப் பின்  அவருக்குள் நிறைய கேள்விகளும் குற்றவுணர்ச்சியும் தன்னிடம் எதற்கும் கோபப்படாத மனைவியின் மீது ஒரு பரிதாபமும் தோன்றத் தொடங்கியிருந்தது. அவர் குளிக்க செல்லவும் மகனை எழுப்புவதற்காய் மாடிக்கு சென்றார் யசோதா.
நண்பர்களுடன் இரவு வெகு நேரம் வரை குடியும் கும்மாளமுமாய் இருந்துவிட்டு நண்பர்கள் கிளம்பிய பின்னரே உறங்கத் தொடங்கியிருந்தான் ஆகாஷ்.
அறையைத் திறந்ததும் அங்கங்கே கிடந்த சிகரட் துண்டுகளும், மிச்சமிருந்த மதுவின் வாடையும் முகத்தைச் சுளிக்க வைத்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் மகன் அருகே அமர்ந்தவர் அவனது முகத்தையே பார்த்தார்.
உறங்கும் முகத்தில் எந்தக் களங்கமும் இல்லாமல் இதழில் உறைந்த சிறு சிரிப்புடன் உறங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் குழந்தை போலத் தோன்ற அவர் மனம் வேதனையில் விம்மியது… என் மகன் பிறக்கும்போது எந்தக் களங்கமும் இல்லாமல் இப்படிதானே பிறந்தான்… நடுவில் எப்படி அவனைத் தொலைந்து போக விட்டேன்…” கண்களில் கரகரவென்று நீர் நிறைய அவன் தலையை அன்போடு கோதிவிடவும் அந்தத் தொடலில் மெல்ல அசைந்தான் மகன்.
“ஆகாஷ், எழுந்திருப்பா… டைம் ஆச்சு, கோவிலுக்குப் போகணும்…” என்றார் மென்மையான குரலில்.
“ப்ச்… நான் வரலை, நீங்க போயிட்டு வாங்க மம்மி…” என்றான் கண்ணைத் திறக்காமலேயே.
“அப்படில்லாம் சொல்லாத… இன்னைக்கு உன் பர்த்டேக்கு கோவில்ல விசேஷ பூஜை ஏற்பாடு பண்ணிருக்கேன்… எழுந்து குளிச்சிட்டு கிளம்புப்பா…”
“ஓ… உங்களுக்கும் வெட்டிங் டே வாழ்த்துகள் மம்மி… டாடி எழுந்தாச்சா…” என்றான் அரைக்கண்ணைத் திறந்து.
“ம்ம்… அவர் குளிக்கப் போயிட்டார்… நீயும் குளிச்சிட்டு வா…”
“அக்காவும், பூஜாவும் வந்துட்டாங்களா…”
“இல்ல, அவளுக்கு ஏதோ வேலை இருக்கு, ஈவினிங் பங்க்ஷன் ஹாலுக்கு வந்திடறேன்னு சொல்லிட்டா…”
“ஓ… இன்னைக்கு டாடி ஸ்பெஷலா கவனிப்பார்… நான் உடனே குளிச்சிட்டு வரேன்…” என்றவன் எழுந்து கொள்ள அவர் எதுவும் சொல்லாமல் அவனையே பார்த்தார்.
“ஏன் மம்மி ஒரு மாதிரி இருக்கீங்க… காலைல எழுந்ததுமே டாடி எதாச்சும் திட்டிட்டாரா…” மகன் கேட்க, “இல்லப்பா… நீ குளிச்சிட்டு வா…” என்றவர் கீழே சென்றார்.
சிறிது நேரத்தில் இருவரும் புறப்பட்டு வர விஷ்ணு பகவானின் கோவிலுக்கு சென்று யசோதா ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரின் பேரிலும் அர்ச்சனை முடித்து தீபாராதனை காட்ட கண்களில் நிறைத்துக் கொண்டனர். கடவுள் முன் கைகூப்பி உருகி நின்ற யசோவின் கண்கள் அடக்க மாட்டாமல் கண்ணீரை நிரப்பிக் கொண்டேயிருக்க கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார்.
பூஜை முடிந்து கடவுளுக்குப் படைத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர். “யசோவின் முகமே சரியில்லையே… ஒருமாதிரி பதட்டமாக இருக்கிறாளே…” மனைவியை கவனித்த கிருஷ்ணன் மனதுக்குள் நினைத்தாலும் கேட்கவில்லை.
நல்ல பயிரென்று தான்
நிலம் தாங்குகிறது…
நல்ல மகவென்று தான்
கருப்பையும் தாங்கியது…
தன்னை சுமந்த தாயும்
பெண்தான் என்பதை மறக்கையில்
கருவறையும் கல்லறையாகத்
துடிக்கிறது… தாய் மனதும்
எரிமலையாய் வெடிக்கிறது…
தாயின் நெற்றிக்கண் திறந்தால்
தரணியும் தப்பிடாது…

Advertisement