Advertisement

அத்தியாயம் – 23
“நரேன்… நல்லாருக்கியா, எப்ப வந்தே…” கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வீட்டுப் பெண்மணியிடம் புன்னகையுடன் பதில் சொல்லிவிட்டு நகர்ந்த நரேன் தங்கையின் நிச்சயதார்த்தப் பரபரப்பில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அழகான குறுந்தாடி அவன் கோதுமை நிற முகத்துக்குப் பாந்தமாய் இருக்க சந்தன நிற ஜிப்பாவும் வேஷ்டியுமாய் கம்பீரமாய் இருந்தான்.
நெருங்கிய உறவுகளையும் நட்பையும் மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைத்திருக்க ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். வீட்டில் அங்கங்கே சரங்களாய் தொங்கிக் கொண்டிருந்த பூக்களின் தோரணம் அந்த இடத்துக்கு அழகோடு அருமையான மணத்தையும் கொடுத்தது. ஹாலின் நடுவே தாம்பூலம் மாற்றுவதற்கான மங்கலப் பொருட்கள் அழகாய் வைக்கப்பட்டிருக்க அதன் இரு பக்கமும் வருபவர்கள் அமர்வதற்காய் ஜமுக்காளம் விரித்து வைத்திருந்தனர்.
தோழியர் செய்த எளிமையான அலங்காரத்திலும் அழகாய் கண்ணை நிறைத்தாள் நிர்மலா. தங்கையை அடிக்கடி புன்னகையுடன் நோக்கிக் கொண்டிருந்த நிஷாந்தியின் மனதில் தாய்மையின் பூரிப்பு. கையில் திக்கித் திக்கி ஓடிக் கொண்டிருந்த கைகடிகாரத்தைப் பார்த்த நரேன் வாசலை எட்டிப் பார்த்து அலைபேசியில் சாதனாவை அழைத்தான்.
“என்ன சாது… இன்னும் உங்களைக் காணோம்… இங்க எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க… கிளம்பிட்டிங்க தானே…”
“இல்ல நரேன்… நாங்க கிளம்பி ரெடியா தான் இருக்கோம்… இந்த சஹா தான், பங்க்ஷன்க்கு நான் வரலை… நீங்க போயிட்டு வாங்கன்னு முரண்டு பிடிச்சிட்டு இருக்கா… நேத்து நாங்க வரும்போது ஒருத்தனைப் பார்த்துட்டு பின்னாடி ஓடினா சொன்னேனே… அப்ப இருந்து ஒரு மாதிரி தான் இருக்கா… நைட் தூங்காம அவனை விடக் கூடாது, வெட்டணும்… குத்தணும்னு ஒரே புலம்பல்… இந்த நிலமைல அவளைத் தனியே விடவும் முடியாது… இப்ப என்ன பண்ணுறது…” என்றாள் சாதனா.
“சரி, நீ முதல்ல கிளம்பி வா… அக்கா உன்னைக் கேட்டுட்டே இருக்காங்க… அம்மா, சஹாக்கு துணைக்கு இருக்கட்டும்… அவங்களை அழைச்சிட்டு வர்றது என் பொறுப்பு… நீ சீக்கிரம் வா…” என்றான் நரேன்.
“சரி நரேன்…” என்றவள் அன்னையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு ஆட்டோவில் கிளம்பினாள். அவள் சென்று சிறிது நேரத்தில் வாசலில் கார் ஹாரன் கேட்க எட்டிப் பார்த்த சசிகலா திகைத்தார். அவர் இடுப்பில் இருந்த ஸ்ரீக்குட்டி உற்சாகமாய் துள்ளிக்கொண்டு “ஐ… டாதி…” என்று நிதினிடம் தாவ அவளை எடுத்து முத்தமிட்டான்.
“த..தம்பி… நீங்க…” என்று சந்தோஷமும் வியப்புமாய் கேட்டவரை நோக்கிப் புன்னகைத்த நிதின், “என் சகலை தங்கச்சி, எனக்கும் தங்கை தானே அம்மா… நான் வராம எப்படி… சஹி எங்கே…” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
அறையில் ஏதேதோ யோசனையில் உழன்று கொண்டிருந்த சஹாவின் காதில் அவனது குரல் கேட்டதும் சட்டென்று வெளியே வந்தாள்.
“ரூபன்… நான் அவனைப் பார்த்தேன்… என்னை நார் நாராக் கிழிச்சுப் போட்ட மிருகத்துல ஒருத்தனை நான் பார்த்தேன்… நீ அவனைக் கொல்லுவேன்னு சொன்னேல்ல… போ, உடனே போயி கொன்னுட்டு வா…” வெறி பிடித்தவள் போல அவன் கையைப் பிடித்துக் கொண்டு கத்தியவளைக் கண்டு அவன் மனம் கோபமும் வேதனையுமாய் தவித்தது.
சசிகலா குழந்தையை அவன் கையிலிருந்து வாங்கிக் கொள்ள, ஆதரவாய் அவள் கையைப் பற்றி சோபாவில் இருத்தியவன் அருகில் தானும் அமர்ந்தான்.
“கண்டிப்பா போறேன் சஹிம்மா… உன்னைத் துடிக்க வச்ச ஒவ்வொருத்தனையும் சித்திரவதை பண்ணி பாடம் சொல்லிக் கொடுக்கத்தான் போறேன்… ஆனா இப்ப இல்ல, ஒருத்தனை மட்டும் பிடிச்சா மத்தவங்க அலர்ட் ஆகிடுவாங்க… அதனால கூட்டத்தோட பிடிச்சு அவங்களுக்கு லாடம் கட்டறேன்… சரியா… கொஞ்சம் பொறுமையா இரு… இப்ப அமைதியா கிளம்பு…” என்றான் பொறுமையாக.
“நிஜமா தான சொல்லற… அவங்களை நீ சும்மா விட மாட்டியே… எனக்காக, உன் சஹிக்காக அந்த வெறிநாய்களை வேட்டையாடுவ தானே…” குழந்தை போலக் கேட்டவளின் தலையில் ஆறுதலாய் வருடி விட்டு, “சத்தியமா பண்ணுவேன்… நீ சீக்கிரம் ரெடியாகிட்டு வா… அங்கே எல்லாரும் காத்திருப்பாங்க…” என்றவன், சசிகலாவிடம் ஜாடை காட்ட, கலங்கிய கண்களை வேகமாய் துடைத்துக் கொண்ட சசிகலா மகளை அழைத்துச் சென்றார்.
நிதின் ஸ்ரீக்குட்டியைக் கொஞ்சிக் கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் புறப்பட்டு வந்துவிட சஹாவின் முகத்திலும் ஒரு தெளிவு வந்திருந்தது. அவனிடம் அழுத்தமாய் ஒரு பார்வையை வீசிவிட்டு அமைதியாய் நின்றவளிடம், “ம்ம்… குட் கேர்ள்…” என்றவன் எழுந்து குழந்தையுடன் காருக்கு நடக்க பின்னில் பூனைக்குட்டியாய் தொடர்ந்தாள் சஹானா.
சஹானா வேகமாய் பின் சீட்டில் சென்று அமர சசிகலாவும் அவள் அருகே அமர்ந்தார். அதைக் கண்ட நிதினின் இதழ்கள் புன்முறுவல் பூத்தன.
“குழந்தையைக் கொடுங்க தம்பி…” என்றவரிடம், “இல்ல, அவ என்கிட்ட இருக்கட்டும்…” என்றவன் குழந்தையை முன் சீட்டில் அமர வைத்து சீட் பெல்ட்டைப் போட்டு விட்டான். அவன் குழந்தையைக் கொஞ்சும்போது வழக்கமாய் பொருமும் மனம் இன்று ஏனோ சமாதானமாய் இருப்பது போல் உணர்ந்தாள் சஹானா. அரைமணி நேரப் பயணத்தில் நரேன் வீட்டுக்கு முன் கார் நின்றது.
நிதின் கையில் குழந்தையும், பின்னில் சஹானாவுமாய் காரிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து வர அதைக் கண்ட சாதனாவின் கண்கள் பனித்தது. அப்போதே மாப்பிள்ளை வீட்டாரும் வந்துவிட பிறகு அவர்களை கவனித்து தாம்பூலம் மாற்றி, நிச்சயதார்த்தப் பத்திரிகை வாசித்து, மோதிரம் மாற்ற நிகழ்ச்சி நல்லபடியாய் முடிந்து விருந்தும் தொடங்கியது. நரேன், சாதனா விஷயம் அங்கே எல்லாருக்கும் தெரியுமாதலால், “கூடவே உங்க கல்யாணத்தையும் சேர்த்து வச்சிருக்கலாமே… எதுக்கு லேட் பண்ணறீங்க…” என்ற கேள்வியும் வர புன்னகையை பதிலாக்கினர்.
சஹானா ஒரு ஓரமாய் எதிலும் கலந்து கொள்ளாமல் அமர்ந்திருந்தாலும் அவள் வந்ததே பெரிய சந்தோஷமாய் இருந்தது அவர்களுக்கு.
வந்தவர்கள் நிகழ்ச்சி முடிந்து கிளம்பத் தொடங்க இறுதியில் இவர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். உடை மாற்றுவதற்காய் அறைக்கு சென்ற நிர்மலா சிறிது நேரத்தில் கலக்கமாய் மொபைலுடன் ஓடி வர அதிர்ந்தனர்.
“என்னமா என்னாச்சு…” கேட்ட நிஷாந்தியிடம், “சே…சேச்சி… அ..அந்த ஆகாஷ்… எனக்கு போன் பண்ணி…” என்றவள் மேலே வார்த்தை வராமல் திக்கிக் கொண்டு, கண்ணில் நீருடன் பயந்து போய் நிற்க, “என்ன சொன்னான்…” என்றான் நரேன் கோபத்துடன்.
“வந்து… வந்து… என்னை…” என்று இழுத்தவளின் அருகில் வந்த சாதனா, “டென்ஷன் ஆகாம நிதானமா சொல்லு மா… நாங்க எல்லாரும் இருக்கோம்ல…” என்று அவள் தோளில் தட்டிக் கொடுக்க அவள் அழத் தொடங்கினாள்.
“எ..எனக்கு, அவன் எதாச்சும் பண்ணிடுவானோன்னு பயமா இருக்கு…” என்றவளிடம் அதுவரை அமைதியாய் இருந்த சஹானா வேகமாய் வந்தாள்.
“என்னது, ஆகாஷ் இங்க வந்துட்டானா…” என்ற சஹானா, “நிர்மலா, அவன் என்ன சொன்னான்னு சொல்லு… அந்தப் பொறுக்கிய நானே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடுவேன்…” என்றாள் ஆவேசத்துடன்.
“சஹி… அமைதியா இரு, நாங்க பார்த்துக்கறோம்… நிர்மலா, என்னன்னு சொன்னாதானே ஏதாச்சும் பண்ண முடியும்… சொல்லுமா…” என்றான் நிதின்.
“அவன் என்கிட்ட…” அருவருப்புடன் முகத்தைச் சுழித்தவள் அவன் பேசியதை அழுகையுடன் சொல்லத் தொடங்கினாள்.
உடை மாற்றுவதற்காய் கதவைத் தாழிட்ட நிர்மலா, அலறிய அலைபேசியில் ஒளிர்ந்த புது எண்ணை குழப்பமாய் பார்த்துக் கொண்டே எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ…”
“ஹலோ, நிர்மல் டார்லிங்… எப்படி இருக்கே…” எதிர்ப்புறம் ஒலித்த குரலைப் புரியாமல் யோசித்தவள், “நீங்க யார் பேசறீங்க…” என்றாள்.
“என்ன டார்லிங், அதுக்குள்ள என்னை மறந்திட்ட பார்த்தியா… நாமல்லாம் அப்படியா பழகிருக்கோம்…” என்றான் சிரிப்புடன். அவளுக்கு நிஜமாகவே அவன் குரல் புரியாததால், “இல்லை… எனக்குத் தெரியலை… முதல்ல யாருன்னு சொல்லிட்டுப் பேசுங்க…” என்றாள் அவள்.
“அட, என் டார்லிங்க்கு கோபமெல்லாம் வருதே… உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்குன்னு கேள்விப்பட்டேன்… வாழ்த்துகள்…”
“ம்ம்… தேங்க்ஸ்… நீங்க யாருன்னு சொல்லலையே…” என்றவளின் மனதில் யாரோ வேண்டுமென்றே தன்னிடம் விளையாடுவதாக நினைத்தாள்.
“சரி, எனக்கு எப்ப ட்ரீட் கொடுக்கப் போற டார்லிங்…” எனவும் அவளுக்கு கடுப்பானது.
“ஹலோ, யாருன்னு சொல்லிட்டுப் பேசினா பேசுங்க… இல்லேன்னா நான் வச்சிடறேன்…” என்றாள் எரிச்சலுடன்.
“அட, பிள்ளப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்குது… தப்பாச்சே…” என்றவனின் குரல் சட்டென்று மாற, “என்னடி, அதுக்குள்ள இந்த ஆகாஷை மறந்துட்டியா… நீ எவனை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க… ஆனா, அதுக்கு முன்னாடி உன்னை எனக்கு விருந்து வச்சுட்டுப் போ… நான் ஆசைப்பட்ட எதையும் அடையாம விட்டதில்ல… நீ ஒருத்தி தான் கை நழுவிட்டே… நீயா வந்தா எனக்கு மட்டும் விருந்து… நாங்களா எடுத்துகிட்டா பஞ்ச பாண்டவருக்கும் விருந்து… உன் பாடிகார்டு சாதனாவோட உடன்பிறப்புக்கு நடந்ததை மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கறேன்… நாளைக்கு நான் கால் பண்ணுவேன்… நீ சம்மதிக்கற… இல்லேன்னா உன்னோட பாசமலர்கள் ரெண்டு பேரும் உயிரோட இருக்க மாட்டாங்க…” என்றான் மிரட்டும் குரலில்.  
ஆகாஷ் என்றதுமே அதிர்ச்சியில் ஊமையானவள் அவன் சொன்ன வார்த்தைகளில் கலவரமாகிப் பேச மறந்தாள்.
“என்ன பேபி, பேச்சைக் காணோம்… போன்ல இருக்கியா…” அவன் கேட்கவும் சற்று சுதாரித்தவள், “ஆ…ஆகாஷ்… ஏன் இப்படி மேல மேல தப்புப் பண்ணிட்டே போற… நாங்க உனக்கு என்ன பாவம் பண்ணோம்… எதுக்கு இப்படி எங்களை சித்திரவதை பண்ணற… ப்ளீஸ் எங்களை விட்டுடு…” கண்ணீருடன் கெஞ்சலாய் கேட்க அவன் சிரித்தான்.
“நீ இப்படி கெஞ்சறதைக் கேட்க எவ்ளோ ஆனந்தமா இருக்கு தெரியுமா… அந்த சாதனா பண்ணின எதையும் என்னால மறக்க முடியாது… உங்க யாரையும் நல்லபடியா வாழ விட மாட்டேன்… வேணும்னா ஒரே ஒரு சாய்ஸ் கொடுக்கறேன்…”
“எ…என்ன சாய்ஸ்…” என்றாள் நிர்மலா.
“உன்னில் இருந்து தானே எல்லாம் ஆரம்பமாச்சு… உன்னை எனக்கு விருந்தாக்கிடு… எல்லாத்தையும் விட்டுடறேன்…”
“ச்சீ… அசிங்கமாப் பேசாதே ஆகாஷ்… நான் இன்னொருத்தனுக்கு மனைவி ஆகப் போறவ…”
“ஓஹோ… ஆனா இன்னும் ஆகலியே… நான் அதுல எல்லாம் ரொம்ப கரெக்ட்டா இருப்பேன் டார்லிங்… அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படவே மாட்டேன்… நல்லா யோசிச்சு நாளைக்கு முடிவை சொல்லு… பை…” என்றவன் அழைப்பைத் துண்டிக்க அவள் மனதில் கலவரம் மூண்டு கண்களில் கண்ணீர் நிறைந்தது.
நடந்ததை அழுகையோடு சொல்லி முடித்த நிர்மலா, “அவன் நம்மளை நிம்மதியா வாழ விட மாட்டான் அண்ணா… உங்களை ஏதாச்சும் பண்ணிடுவானோன்னு பயமாருக்கு…” என்றாள் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு.
தங்கையின் தோளில் தட்டிக் கொடுத்த நிஷாந்தி, “அட அசடே… முதல்ல அழறதை நிறுத்து… தொட்டதுக்கெல்லாம் இப்படி பயந்திட்டு இருந்தா இந்த உலகத்துல வாழவே முடியாது… மிரள்றவன் இருக்கற வரைக்கும் மிரட்டுறவன் இருக்கத்தான் செய்வான்… மனசுல எவ்ளோ கலக்கம் இருந்தாலும் வெளிய காட்டிக்காத… பயம்தான் நம்ம முதல் எதிரி… எல்லா விஷயத்தையும் துணிச்சலா, தைரியத்தோட எதிர்கொள்ளப் பழகிக்கோ… சின்னப் பொண்ணாச்சேன்னு உன்னை என் கைக்குள்ளயே பொத்திப் பொத்தி வளர்த்தது தப்பாப் போயிருச்சு… கண்ணைத் துடை… என்ன பண்ணலாம்னு நிதானமா யோசிப்போம்…” வாழ்வில் பல அனுபவத்தை கடந்து வந்த நிஷாந்தி தாய்மையின் பரிவோடு கூற அனைவரும் அமைதியாய் கேட்டு நின்றனர்.
“கரக்ட் சேச்சி… நமக்கு இப்ப நிதானமா நிற்க வேண்டிய டைம்… அவனோட பழைய கணக்கைத் தீர்க்கறதுக்கு அவனே ஒரு சந்தர்பத்தை கொடுத்துட்டான்…” என்ற நிதினின் மனதில் எதோ கணக்கு ஓடிக் கொண்டிருந்தது.
“ரூபன்… நிதானமா இருந்தது போதும்… அவனை சும்மா விடக் கூடாது… இவ்ளோ நாள் அவன் வெளிநாட்டுல இருந்தான்னு பொறுமையா இருந்தேன்… இனி முடியாது…” சஹானா வேகமாய் கிளம்ப சாதனா தடுத்தாள்.
“சஹா… அவசரப்படாத… அவனுகளுக்கான மரண நேரத்தை நாங்க ஆல்ரெடி குறிச்சுட்டோம்… நாளைக்கு ஆகாஷ் கால் பண்ணினா நிர்மலா வரேன்னு சொல்லிடு… நாளான்னிக்கு அவங்களோட எமகண்டம் தொடங்குது…” என்ற சாதனாவை நரேனும், நிதினும் புன்னகையுடன் நோக்க மற்றவர்கள் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
*******************
ஆகாஷ் நிர்மலாவை போனில் மிரட்டுவதை சுற்றிலும் நின்று ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவன் பேசி முடித்ததும் ஹோவென்று ஆர்ப்பரித்தனர்.
மாடியிலிருந்த ஆகாஷின் பெரிய அறையை நண்பர்கள் குழு ஆக்கிரமிப்பு செய்திருக்க அறை முழுதும் சிகரட் வளையங்கள் பறந்து கொண்டிருந்தது. மேசை மீது அழகான வண்ணக் குப்பியில் ஒய்யாரமாய் வீற்றிருந்தது மேல்நாட்டு மதுக் குப்பி. அதிலிருந்து கண்ணாடிக் கோப்பையில் ஊற்றப்பட்டு பளபளத்த மதுவை சியர்ஸ் சொல்லி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர்.
“மச்சான்… அந்த நிர்மலா மட்டும் ஓகே சொல்லிட்டா உன் பிறந்த நாளுக்கு செம ட்ரீட்டுதான் டா…”
“எங்க போயிடுவா… கண்டிப்பா ஓகே சொல்லத்தான் போறா… இல்லேன்னா சஹானா கதி தான் அவளுக்கும்… இப்பவும் என் பாஸ்போர்ட், விசா எல்லாம் ரெடியாருக்கு…” என்று ஆகாஷ் சிரிக்க மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.
“சும்மா சொல்லக் கூடாது ஆகாஷ்… அது ஒரு மகா திரில்லான அனுபவம் தான்… காசுக்கு எத்தனை பொண்ணுங்க வந்தாலும் கதறக் கதற அந்த கை படாத ரோஜாவை ருசிச்சதை மறக்கவே முடியாது…” என்றான் ஒருத்தன் போதை தலைக்கேற.
“டேய் ஆகாஷ்… அந்த குஜால் வீடியோ இப்பவும் நீ வச்சிருக்கியா…” மற்றொருவன் கேட்க, அவன் சிரித்தான்.
“பின்ன… என்னதான் ஆயிரம் பலானப்படம் பார்த்தாலும் ரியலா நடக்கறதை ரசிக்கறது செம கிக்ல…”
“டேய் மச்சான்… அந்த வீடியோவ கொஞ்சம் போடுடா… பார்க்கலாம்…” என்றான் ஒருத்தன் ஆவலுடன்.
“சரி போடறேன்… உன் வாயில வழியுற நயாகராவைக் கொஞ்சம் நிறுத்தி வை…” சொல்லிக் கொண்டே எழுந்தவன் அவனது லாப்டாப்பை சுவரில் இருந்த டிவியுடன் கனக்ட் செய்து அந்த வீடியோவைத் தட்டினான். ஆவலுடன் அனைவர் கண்களும் டிவியிலேயே பதிந்திருக்க ஒருத்தனின் அலைபேசி காலமறியாமல் ரிங்காக கடுப்புடன் திரும்பினர்.
“டேய், அதை ஆப் பண்ணுடா…” ஒருத்தன் கத்த, “இருடா… வீட்டுல இருந்து போன்… பேசிட்டு வந்திடறேன்…” என்றவன் கதவைத் திறந்து வெறுமனே சாத்திவிட்டு ஹாலுக்கு செல்ல மற்றவர்கள் மீண்டும் டிவியில் பார்வையைப் பதிக்க  முதலில் இருட்டாகத் தொடங்கி பிறகு இதமான வெளிச்சம் நிறைய பழைய குடோன் போன்ற இடத்தில் முகத்துக்கு முகமூடியுடன் ஐந்து பேர், கைகள் கட்டப்பட்டிருந்த அந்தப் பெண்ணைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் சாகசமாய் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
“என்னை ஒண்ணும் பண்ணிடாதிங்கடா… விட்டிடுங்கடா, ப்ளீஸ்…” கதறலாய் ஒலித்த பெண்குரல் அவர்கள் காதில் இன்பமான இசையாய் வந்துவிழ, அவளை ஒருவன் நெருங்குவதை ஆனந்தமாய் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அறைக்கதவு திறக்கும் ஓசை கேட்க, “இவன் வேற, சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு…” என்று திரும்பிய ஷிவா, அங்கே அதிர்ச்சியுடன் டீவியில் பார்வையைப் பதித்திருந்த யசோதாவைக் கண்டு விக்கித்து, “ஆகாஷ்…” என்று அலற, திரும்பிய ஆகாஷ் அன்னையைக் கண்டு வேகமாய் டீவியை ஆப் ஆக்கி கோபமாய் வந்தான்.
“என்னம்மா, எதுக்கு இங்கே வந்திங்க…” என்ற மகனின் முகத்தைக் காணப் பிடிக்காமல் அருவருத்து தலை குனிந்தவர், “சாப்பாடு ரெடியாகிருச்சு… எல்லாரும் சாப்பிட வாங்க…” என்று மட்டும் கூறிவிட்டு வேகமாய் வெளியேறிவிட, “என்னடா, இப்படி ஆகிருச்சு… அம்மா அந்த வீடியோவ பார்த்திட்டாங்களே… நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க…” என்றான் ஷிவா.
“ப்ச்… அதெல்லாம் ஒண்ணும் கவனிச்சிருக்க மாட்டாங்க  விடுடா…” என்றவன் போனில் பேசிவிட்டு வந்த நண்பனை, “ஏண்டா எரும… போனைத் தூக்கிட்டு எங்கடா போன…” என்று திட்டிக் கொண்டே கதவைத் தாளிட்டுவிட்டு மீண்டும் டீவியை ஆன் செய்தான்.
வல்லூறுகளின் வட்டமிடலில்
வண்ணம் தொலைந்த பெண்மயில்…
வண்டுகளாய் ரீங்கரிக்கும்
வக்கிரங்களின் வட்ட மாநாடு…
வாழ்வின் சுழற்சி தந்த வலியில்
வழி தேடித் தவிக்கும் புள்ளிமான்…
விண்மீன்களின் கண் சிமிட்டலில்
விதியைத் தேடும் வெள்ள மீன்கள்…
விடியல் தேடும் பூபாளமாய்
வானம்பாடியின் காத்திருப்பு…

Advertisement