Advertisement

அத்தியாயம் – 22
மகள் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டதால் பேசுவதற்கு ஆளில்லாமல் வீடே வெறிச்சென்று தோன்றியது மீனாட்சிக்கு. நிதினும் ஏதோ வேலை விஷயமென்று அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் தொலைக்காட்சியின் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் தனிமையில் நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார்.
கேரளா சென்றுவிட்டு நிதின் காலையில்தான் திரும்பி வந்திருக்க, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். மகனுக்குப் பிடித்த சமையலை முடித்துவிட்டு சாப்பிட அழைப்பதற்காய் அவனைத் தேடி மாடிக்கு சென்றார்.
கட்டிலில் உறங்காமல் கிடந்தவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க அருகே வந்தவர், “நிதின்… சமையலை முடிச்சுட்டேன்… வந்து சூடா சாப்பிடுப்பா…” என்றழைக்க, “ம்ம்… அப்புறம் சாப்பிடறேன்மா…” என்றவன் மீண்டும் யோசனையைத் தொடர்ந்தான்.
கலைந்த தலையும், சோகமான முகமும் முழுநேர யோசனையுமாய் இருந்தவனை நோக்கியவருக்கு மகனைத் தான் சரியாய் கவனிப்பதில்லையோ என்ற கேள்வி மனதைப் பிராண்டியது.
அவன் அருகில் அமர்ந்தவர், “என்னப்பா, ஏதோ தீவிரமா யோசிக்கற போலருக்கு…” கேட்டுக் கொண்டே அவன் சிகையைக் கோதிவிட பதில் கூறாமல் சுகமாய் கண்ணை மூடிக் கொண்டான் மகன். அனிச்சையாய் அவன் தலை உயர்ந்து அன்னையின் மடியில் தஞ்சமடைய அவன் செயலில் மனம் நெகிழ்ந்தவர், கோதலைத் தொடர்ந்தார்.
“நிதின் என்னப்பா, எதுவும் பிரச்சனையா… அம்மா உன்னை சரியா கவனிக்காம விட்டுட்டேனா… ஏதாவது பெரிய பிரச்சனைய மனசுக்குள்ளேயே வச்சுட்டுத் தவிக்கிறியா… ஏன்யா இப்படி எப்பவும் யோசனையாவே இருக்கே…” என்றார் குற்றவுணர்ச்சி நிறைந்த தவிப்பான குரலில்.
“ப்ச்… அதெல்லாம் இல்ல மா… கொஞ்சம் மனசு சரியில்ல…”
“தங்கச்சி கல்யாணத்தை நினைச்சதை விட சிறப்பா முடிச்சுட்டே… உன் அப்பா இருந்தா எப்படிப் பண்ணி இருப்பாரோ அதைவிட ஒரு படி நல்லாவே பண்ணிட்ட… அதுல ஏதாச்சும் கடனாகிப் போச்சா… எப்படி திருப்பி அடைக்கறதுன்னு யோசிக்கறியா… எதுன்னாலும் அம்மா கிட்ட சொல்லுப்பா… வீட்டை வேணும்னா அடமானம் வச்சு கடனை அடைச்சுடலாம்…” என்றார் அவர்.
“இல்லம்மா, அதெல்லாம் இல்ல… இது வேற மாதிரிப் பிரச்னை…” என்றவன் சஹானா பற்றி அவரிடம் சொல்லிவிடலாமா என யோசித்தான்.
“பொண்ணுக்கு நல்லபடியா வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்கிற கவலைல உன்னை சரியா கவனிக்காம இருந்துட்டனோன்னு மனசு கிடந்தது தவிக்குது…”
“ஏன்மா இப்படிலாம் யோசிக்கறீங்க… எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல… என் பிரண்டுக்குதான் ஒரு பிரச்னை… அதை நினைச்சு தான் கவலையா இருக்கு…”
“என்ன பிரச்சனைப்பா…” அன்பாய் கேட்ட அன்னையிடம் சஹாவுக்கு நடந்த கொடுமையை நண்பனின் காதலிக்கு நடந்தது போலக் கூற கோபமும் வலியுமாய் பொறுமையோடு கேட்டிருந்தார் மீனாட்சி. ஒரு பெண்ணாய், தாயாய் அவர் மனம் வேதனையில் கொந்தளித்தது.
“ஐயோ கடவுளே… பாவம் அந்தப் பொண்ணு… எப்படில்லாம் துடிச்சாளோ… எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடுமை… தன்னைப் பெத்தவளும் ஒரு பெண் தான்னு மறந்து இப்படி ஒரு கொடுமைய அந்தப் பொண்ணுக்குப் பண்ண எப்படி அவனுகளுக்கு மனசு வந்துச்சோ… இந்தப்  படுபாவிங்கள எல்லாம் உயிரோட விட்டு வச்சிருக்கக் கூடாது… தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்கணும்…” உணர்ச்சி வேகத்தில் கோபமாய் கூறிய அன்னையை நிதானமாய் பார்த்தான் நிதின்.
“ம்ம் மா, பெண்களை மதிக்கலைன்னாலும் சக மனுஷியா கூட நினைக்காம இப்படி ஒரு கொடுமையை செய்தவங்கள விட்டுவைக்கக் கூடாது…” என்றான் நிதின்.
“பணத்தோட பகட்டைப் பசங்களுக்கு காட்டி மனிதத்தை சொல்லிக் கொடுக்க மறந்த பெத்தவங்க தான் பெரிய குற்றவாளிங்க…. போலீஸ் அவனுங்களுக்கு தண்டனை கொடுக்க மறுத்தா பொதுமக்கள்தான் சரியான தண்டனை கொடுக்கணும்…” என்றார் கோபத்துடன்.
“ம்ம்… எல்லாம் சரிதான்மா… அந்தப் பொண்ணுக்கு ரெண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு… மூணு வருஷத்துக்குப் பிறகு இதெல்லாம் தெரிஞ்சுகிட்டாலும் அவளை மறக்கவோ, ஒதுக்கவோ அவனால முடியலை… குழந்தையோட அவளையும் ஏத்துக்கத் தயாரா இருக்கான்…” என்றதும் கண்கள் அகல வியப்புடன் பார்த்தார் மீனாட்சி.
“ஓ… ரொம்ப நல்ல விஷயம்பா… அந்தப் பொண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தாலும் இது ஒரு விபத்து தானே… நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு நடந்திருந்தா நாம அப்படியே விட்டிருவோமா… நல்ல மனசு உன் பிரண்டுக்கு… இல்லேன்னா இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பானா…” மனதாரப் பாராட்டினார் மீனாட்சி.
“ஆமாம் மா… அவனுக்கு அவ மேல உள்ள விருப்பத்துல கொஞ்சம் கூட குறையவே இல்ல… ஆனா, அவதான் இதைப் புரிஞ்சுக்காம இனி எனக்கு வாழ்க்கையே இல்லை… நான் யாரையும் கல்யாணமே பண்ண மாட்டேன்னு மறுக்கறா…” என்றான் நிதின்.
அவன் சொன்னதைக் கேட்டு சற்று நேரம் அமைதியாய் யோசித்தவர், “ம்ம்… வலியை அனுபவிச்சவளுக்கு அவ்ளோ சீக்கிரம் மறந்திடுமா… எவ்ளோ பெரிய காயம்… பொறுமையா தான் புரிய வைக்கணும்…” என்றார்.
“ஆமாம் மா, அவளோட தயக்கத்துக்கு இன்னொரு காரணமும் இருக்குமோன்னு தோணுது…”
“என்ன காரணம் பா…”
“அவளை என் நண்பன் மனசார ஏத்துகிட்டாலும் அவன் குடும்பமும் அவளை குழந்தையோட ஏத்துக்கணுமே… நாளைக்கு ஒரு சொல் யாரும் சொல்லிடக் கூடாதே…”
“அது நியாயமான பயம் தானே நிதின்… என்னதான் அந்தப் பொண்ணோட தப்பு இதுல இல்லேன்னாலும் இப்படியொரு பொண்ணை மருமகளா ஏத்துக்க அவங்க கொஞ்சம் யோசிக்க தானே செய்வாங்க…”
“ம்ம்… சரிதான் மா… இதைப் பத்தி யோசிச்சு தான் ஒரு முடிவு கிடைக்காம தவிக்கிறேன்…”
“ம்ம்… இதுல நீ யோசிக்க என்ன இருக்கு நிதின்… அந்தப் பையனை அவன் வீட்டுல பேச சொல்லு… பக்குவமா புரிய வைக்க சொல்லு… பெண்களை கேவலமா சிந்திக்குற பசங்களுக்கு நடுவுல, தான் காதலிச்ச பொண்ணை இந்த மாதிரி சூழ்நிலைலயும் கைவிடாம ஏத்துக்க நினைக்கற மனசு எல்லாருக்கும் வந்திடாது…”
“ம்ம்… உண்மைதான் மா… உங்களைப் போல அவன் அம்மாவும் புரிஞ்சுகிட்டா எவ்வளவு நல்லாருக்கும்…” என்றவனிடம், “ம்ம்… புரிஞ்சுப்பாங்கப்பா, கவலைப்படாத… சரி, உன்னோட நண்பன்னு சொல்லற, யாரு அந்த பையன்னு சொல்லவே இல்லையே…”
“ம்ம்… நேரம் வரும்போது நீங்களே புரிஞ்சுப்பீங்கமா… உங்க கிட்ட பேசினது மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்ச போல இருக்கு… இப்ப செமையா பசிக்குது… சாப்பாடு எடுத்து வைக்குறீங்களா…” மகன் கேட்கவும் புன்னகையுடன் எழுந்தவர் சாப்பாட்டு மேசைக்கு விரைந்தார்.
******************
“மீண்டு வா சுர்ஜித்…”
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை தற்போது 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதால் உயிருடன் மீண்டு வர வேண்டுமென்று நாடு முழுதும் விசேஷப் பிரார்த்தனை நடைபெறுகிறது. குழந்தை விழுந்து 28 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியுற்றதால் தற்போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தொலைக்காட்சியில் விடாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியை கனத்த மனதுடன் இறைவனை வேண்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா. “அந்தப் பிஞ்சுக் குழந்தை எப்படியெல்லாம் துடிக்கிறதோ… அன்னையைக் காணாமல் அழுகிறதோ… கடவுளே… எதற்கு அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு தண்டனை… சீக்கிரம் அவனை நல்லபடியே வெளியே எடுக்க நீதான் உதவவேண்டும்…” பிரார்த்தித்துக் கொண்டே பதைபதைக்கும் இதயத்துடன் டிவியில் கண் பதித்திருந்தாள் சஹானா.
சாதனா தீபாவளிப் பலகாரத்திற்கான பொருட்களை வாங்கச் சென்றிருக்க, குழந்தை ஹாலில் அமர்ந்து மடியில் ஒரு பொம்மையை வைத்து அதற்கு சாப்பாடு ஊட்டி, விளையாடிக் கொண்டிருந்தாள். சசிகலா அடுக்களையில் வேலை செய்து கொண்டே அடிக்கொருதரம் ஹாலுக்கு வந்து டீவியில் செய்தியைப் பார்த்துச் சென்றார். அவர் எண்ணமும் அந்தக் குழந்தையைப் பற்றிய கவலையிலேயே சுற்றிக் கொண்டிருக்க மனம் தவித்துக் கொண்டிருந்தது.
டீவியிலேயே பார்வையைப் பதித்து செய்தியிலேயே மூழ்கி விட்ட சஹானா வெகுநேரமாய் ஸ்ரீக்குட்டியின் சத்தம் எதுவும் கேட்காததால் திரும்பிப் பார்க்க அங்கே அவளைக்  காணவில்லை. யோசனையுடன் நெற்றியைச் சுளித்தவள், சரி பாட்டியைத் தேடிச் சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் டீவியை கவனித்தாள்.
சற்று நேரத்தில் சசிகலா அடுக்களையிலிருந்து மீண்டும் ஹாலுக்கு வந்து செய்தியை சிறிது நேரம் பார்த்துவிட்டு செல்ல குழந்தை எங்கே என்ற யோசனை சுருக்கென்று மனதைத் தைத்தது சஹானாவுக்கு. வேகமாய் எழுந்தவள் அறைக் கதவைத் திறந்து பார்க்க ஒரு அறையில் எந்த சத்தமும் இல்லை… அடுத்த அறையின் குளியலறையில் தண்ணீர் இறையும் சத்தம் கேட்க வேகமாய் சென்று வெறுமனே சாத்தியிருந்த பாத்ரூம் கதவைத் திறக்க உள்ளே தெப்பலாய் நனைந்த உடையுடன் கையிலிருந்த பொம்மையை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் முக்கி குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள் குழந்தை.  
அதைக் கண்டதும் ஆசுவாசமாய் மூச்சு விட்டவள், “ஏய்… ஸ்ரீக்குட்டி, இங்க என்னடி பண்ணற… எழுந்திரு…” என்று அதட்டிக் கொண்டே, “தனியா எதுக்கு இங்க வர்ற… வா…” என்று மிரட்ட குழந்தை பயத்தில் முழித்துக் கொண்டு அங்கேயே நிற்க, “வான்னு சொல்லறேன்ல…” என்று அவளை எடுத்து வெளியே விட்டவள், “அம்மா… இங்க வாங்க…” என்று கத்தவும் சசிகலா பயத்துடன் ஓடி வந்தார்.
“என்னடி… என்னாச்சு…”
“இதான் நீங்க குழந்தைய பார்த்துக்கற லட்சணமா… இவ என்ன பண்ணிட்டு இருந்தான்னு தெரியுமா… பக்கெட் தண்ணில பொம்மைய முக்கி விளையாடிட்டு இருக்கா… தவறி எங்காச்சும் தண்ணிக்குள்ள விழுந்து மூச்சு முட்டினா என்ன பண்ணுறது… கவனிக்க மாட்டீங்களா…” சிடுசிடுத்த மகளை ஆச்சர்யமும் வியப்புமாய் பார்த்துக் கொண்டு நின்றவர், “இல்லடி, அவ ஹால்ல தான விளையாடிட்டு இருக்கான்னு நினைச்சேன்… இங்க எப்ப வந்தா…” என்று கேட்டுக் கொண்டே, “பாத்ரூம்ல தனியா என்னடி செல்லம் பண்ணிட்டு இருக்க… தண்ணில விளையாடினா காய்ச்சல் வரும்… டாக்டர் ஊசி போடுவாங்கன்னு சொல்லி இருக்கேன்ல…” என்றார் குழந்தையிடம்.
“பாத்தி, ஜோ குத்தி பாவம் தான… டெஸ் எல்லாம் அழுக்காயிருச்சு… நாந்தான ஜோ குத்தியோட மம்மி… அதான் குளிக்க வைக்கப் போனேன்…” என்றாள் ஸ்ரீக்குட்டி சமத்தாக.
அதைக் கேட்டதும் சசிகலா புன்னகையுடன் அவளை அணைத்துக் கொள்ள, “சரிடா செல்லம்… ஆனா தனியா பாத்ரூம் உள்ளே போகக் கூடாது… பாட்டி கிட்ட சொல்லு… நானும் வரேன்… உன் ஜோ குட்டியை குளிக்க வைக்க… சரியா…” என்று கொஞ்சிக் கொண்டிருக்க, எதுவும் பேசாமல் சென்ற மகளைப் புன்னகையுடன் நோக்கி நின்றார் அன்னை. அவர் மனதில் மகள் பேத்தியின் உறவில் புதிதாய் ஒரு நம்பிக்கை துளிர் விடத் தொடகியது. மரத்துப் போயிருந்த சஹானாவின் தாய்மையை சுர்ஜித்தின் நிலைதான் இப்படித் தூண்டி விட்டிருக்க வேண்டும் எனப் புரிய, நிச்சயம் அவள் மனதில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை வந்திருந்தது.
மேலும் ஒரு வாரம் ஓடியிருக்க, சஹாவின் மனம் நிதினைத் தேடத் தொடங்கியது. அன்று பேசிவிட்டுச் சென்றவன் அதற்குப் பின் கண்ணிலேயே படவில்லை.
“அன்னைக்கு என்னமோ சினிமா ஹீரோ போல அவ்ளோ வசனம் பேசினான்… இப்ப ஆளையே காணோம்…” மனது அவனை ஏசினாலும், “ஏன் ரூபன் வந்தா நீ ஓகே சொல்லிடப் போறியா… எதுக்கு அவனைத் தேடற… அவன் அன்னைக்கு சொன்னதுக்கு அவ்ளோ பேச்சுப் பேசின… அது மட்டும் சரியா… அதான் போடின்னு போயிட்டான் போலருக்கு…” என்று காரணம் கண்டுபிடித்தது மூளை. அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதில் கல்வெட்டாய் பதிந்திருக்க மீண்டும் நினைவுக்கு வந்து கேள்வி கேட்டது.
“கடவுளே! என்னை ஏன் இப்படிக் கொல்லாமல் கொல்லற… அவன் சொன்னதை ஏத்துக்கவும் முடியல… அவனை மறக்கவும் முடியல… இருதலைக் கொல்லி எறும்பு போல என் நிலமை ஆகிடுச்சே… அவனைப் பார்க்கணும் போலத் தோணுதே…” உறக்கம் வராமல் கண்ணீர் விட்டுக் கிடந்தாள்.
நிர்மலாவின் நிச்சயத்திற்கு சாதனாவும், சசிகலாவும் பாலக்காடு கிளம்ப, சஹானா வரவில்லை என்று மறுக்கவும் சசிகலா, “சஹாவைத் தனியே விட்டுட்டு வர முடியாது… நான் வரலை, நீ மட்டும் போயிட்டு வா…” என்று சாதனாவை தனியே செல்லக் கூறினார்.
தங்கையின் நிச்சயத்திற்கு நரேனும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்க, சஹாவையும் வரச்சொல்லி வற்புறுத்தி அழைத்திருந்தான். சஹா, அன்னை வரவில்லையென்று கூறவே சாதனா முகத்தைத் தூக்கிக் கொண்டு சோகமாய் அமர்ந்திருக்க சஹாவுக்கு பாவமாய் இருந்தது.
“அவள் வாழப் போகும் வீட்டில் நடக்கும் விசேஷத்துக்கு செல்ல வேண்டுமென்று எத்தனை ஆசைப்பட்டிருப்பாள்… நரேன் வேறு வெகு நாட்களுக்குப் பிறகு தாயகம் வந்திருக்கிறான்… அவனைக் காணும் துடிப்பும் இருக்குமே… நான் ரூபனைக் காணத் தவிப்பது போல தானே அவளும் தவிப்பாள்… எனக்காக அவளை வருத்தவேண்டாம்…” என யோசித்தவள் தானும் செல்ல சம்மதித்தாள்.
அவள் சம்மதிக்கவும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த சாதனா, சஹாவை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட, “ச்சீ… போடி…” என்று புன்னகையுடன் சிணுங்கிக் கொண்டே கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள் சஹானா.
மூவரும் அன்று மாலையே குழந்தையுடன் பாலக்காடு கிளம்பத் தயாராயினர். வெகு நாட்களுக்குப் பிறகு சொந்த வீட்டுக்கு செல்லும் மனநிலை பலவித எண்ணங்களைத் தோன்ற வைத்து அலைக்கழித்தது.
கார் பாலக்காடை நெருங்கவும் சஹானாவின் மனநிலையில் ஒரு இறுக்கம் வந்திருக்க அது முகத்திலும் பிரதிபலித்தது. கோவை வரை அவள் காரை ஓட்ட அங்கிருந்து சாதனா ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளை யோசிக்க விடாமல் சசிகலாவும் சாதனாவும் ஏதேதோ தந்தை உள்ளபோது நடந்த சம்பவங்களைப் பேசிக் கொண்டே வர முதலில் சில வார்த்தைகள் பேசியவள் பிறகு எதற்கும் பதில் சொல்லாமல்  மௌனமாகி விட்டாள். அவளுக்குள் புதைந்து போன நினைவுகள் மீண்டும் புகைந்து கொண்டிருந்தன. 
கண்ணை மூடி சீட்டில் சாய்ந்திருந்தவளின் இமைக்குள் உருண்டு கொண்டிருந்த கிருஷ்ணமணிகள் அவள் இன்னும் உறங்கவில்லை என்பதை உணர்த்த, முகத்தில் வலியும், அருவருப்புமாய் சுளிக்கையில் பல பாவங்கள்.
அதை அருகே அமர்ந்து வேதனையுடன் கவனித்துக் கொண்டிருந்த சசிகலாவின் கண்கள் கசியத் தொடங்க வேகமாய் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
அதுவரை உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீக்குட்டி எழுந்து கொண்டு சுற்றிலும் பார்த்துவிட்டு, “பாத்தி, நாம எங்க போதோம்…” என்றது.
“நம்ம ஊருக்கு போறோம் டா செல்லம்…” என்றார் சசிகலா.
“ஓ… எனக்குத் தண்ணி வேணும் பாத்தி…” அவள் சொல்லவும் பாகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுக்க குழந்தை குடிப்பதற்காய் வண்டியை ஓரமாய் நிறுத்தினாள் சாதனா. அங்கே இளநீர் குடித்துக் கொண்டிருந்த ஒருத்தன் போன் வரவும் எடுத்துப் பேச அதுவரை அமைதியாய் அமர்ந்திருந்த சஹானா அந்தக் குரலில் சட்டென்று கலைந்தவள் வேகமாய் கார்க்கதவைத் திறந்து இறங்கினாள்.
“டேய், நீ…நீ அவன்தானே…” அவளது கத்தலில் திரும்பியவன், சஹானாவைக் கண்டதும் அதிர்ந்து வேகமாய் நிறுத்தி இருந்த காருக்கு செல்ல சஹானா பின்னிலேயே ஓடினாள். ஒரு நிமிடம் புரியாமல் அமர்ந்திருந்த சாதனா அவள் அவன் பின்னில் ஓடவும், “சஹா… நில்லு…” என்று தொடர்ந்து ஓட அதற்குள் அந்தக் காரில் அமர்ந்திருந்தவன் காரைக் கிளப்ப இவன் ஓடிச்சென்று ஏற வண்டி காற்றாய் பறந்தது.
சற்று தூரம் தொடர்ந்து ஓடி நின்ற சஹானா, “பாவி… தப்பிச்சுட்டியா…” என்று தலையில் அடித்துக் கொண்டு நிற்க, அங்கே இளநீர்கடையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற சிலர், “என்னாச்சு மா… எதாச்சும் பிராப்ளமா…” என்று விசாரிக்க வெறுப்புடன், கார் மறைந்த திசையையே கோபமாய் பார்த்து நின்ற சஹானாவை கை பிடித்து காருக்கு அழைத்து வந்தாள் சாதனா.
கல்லுக்குள் ஈரமாய்
நெஞ்சுக்குள் கசிகிறது
கடிவாளமிட்ட நினைவுகள்…
கனலுக்குள் நெருப்பாய்
தகித்துக் கிடக்கிறது
தாளம் தப்பிய உருவங்கள்…
மலருக்குள் மணம் போல
பெண்ணுக்குள் என்றும்
புதைந்தே கிடக்கிறது தாய்மை
என்னும் அரும் பொக்கிஷம்…

Advertisement