Advertisement

அத்தியாயம் – 20
காரில் ஏறியவள் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டினாலும் அவள் மனதில் பெரிய பூகம்பமே நடந்து கொண்டிருப்பதன் அடையாளமாய் ஏதேதோ பாவ மாற்றங்களும், குழப்பங்களும், கோபமுமாய் சிவந்து கிடந்தது முகம். ஏதாவது கேட்டால் கடித்துக் குதறிவிடுவாளோ என்ற பயத்தில் சசிகலாவும் வாயை மூடிக் கொண்டு அச்சத்துடனே மௌனமாய் அமர்ந்திருந்தார்.
அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வந்த சஹானாவுடன் லிப்டில் ஏறி வீட்டுக்குள் நுழைய தனது அறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டவளைக் கண்டு அன்னையாய் மனம் பதைத்தாலும் அவள் தாளிடாமல் இருந்ததே பெரிய ஆசுவாசமாய் இருந்தது.
“பாத்தி பசிக்குது…” என்ற ஸ்ரீக்குட்டியின் வார்த்தையில் சுறுசுறுப்பானவர் உடை மாற்றி வேகமாய் சமையலை கவனிக்கத் தொடங்கினார்.
பருப்பைக் கழுவி அடுப்பில் வைத்துவிட்டு அரிசியை ஊறவைத்தவர் சஹாவுக்கு காபியைக் கலந்து கொண்டு தயக்கத்துடன் அவளது அறைக்கு செல்ல அவள் ஏதேதோ புலம்பிக் கொண்டே விசும்பி அழும் சத்தம் கேட்கவும் துடித்துப் போனார்.
“சஹா…” காபிக் கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு அருகில் சென்றவரை கோபத்துடன் முறைத்தாள் மகள்.
“என்னடா, இப்ப என்ன ஆச்சுன்னு அழறே…” எனவும் விசுக்கென்று திரும்பியவள், “இன்னும் என்ன ஆகணும்… எல்லாருமா சேர்ந்து நடிச்சு என்னை ஏமாத்திட்டீங்கல்ல…” என்றாள் கோபத்தில் சிவந்த முகத்துடன்.
“அச்சோ, நாங்க நடிக்கிறோமா… என்னமா சொல்லற, அப்படில்லாம் எதும் இல்லமா…” பதறியவரை ஏளனத்துடன் பார்த்தவள், “ஓ, நீங்க நடிக்கலையா… அப்புறம் எப்படி, எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி நடந்துகிட்டீங்க… அவன் உங்களை அம்மான்னு சொல்லுறதும், உங்க பேத்தி அவனை டாடின்னு சொல்லுறதும் இதெல்லாம் சட்டுன்னு இப்ப பார்த்ததும் வந்ததா…” கோபத்துடன் கேட்டாள்.
“அச்சோ சஹா, நீ நினைக்கற போல இல்லமா… அந்தத் தம்பி…” என்று தொடங்கியவர் எப்படி சொல்வதென்று புரியாமல் தயங்கி நிறுத்த, “ஏன் நிறுத்திட்டிங்க, சொல்லுங்க… அந்தத் தம்பிக்கு உங்களை எப்படிப் பழக்கம்… அதும் அந்த குட்டிப் பிசாசு என் ரூபனை டாடின்னு கூப்பிடுது… என்ன நடக்குது இங்கே…” உணர்ச்சி வேகத்தில் கத்தியவளின் வார்த்தையில் வந்த என் ரூபனை அவள் உணராவிட்டாலும் அன்னை கண்டு கொண்டார்.
“யாரை என் வாழ்க்கைல இனி பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அவனை இங்க பார்த்த நிமிஷமே நாம கிளம்பிப் போயிருக்கணும்… அப்படிப் பண்ணாம விட்டது என் தப்பு தான்… அதான் இப்ப உறவு கொண்டாட வர்றான்… அவன் முகத்தைப் பார்க்கவே என்னால முடியலையே… நான் எப்படி…” என்று தனக்குத் தானே புலம்பியவள் முகத்தைப் பொத்திக் கொண்டு கதறியழத் தொடங்க சசிகலாவின் கண்களும் கலங்கின. சிறிது நேரம் அவளை அழவிட்டவர் அருகில் அமர்ந்து ஆதரவுடன் தோளில் கை வைத்து, “சஹா…” என்றழைக்க, அன்னையின் மடியில் சாய்ந்து மனதிலுள்ள வேதனை முழுதையும் கண்ணீரில் கரைத்திடுவது போலத் தேம்பி அழத் தொடங்கினாள்.
அவள் மனதில் உள்ள காதலுக்கும், இடையில் வந்த இழப்புக்கும் நடுவிலான உணர்வுப் போராட்டத்தைப் புரிந்து கொண்டவர் மௌனமாய் தலை வருடிக் கொண்டிருந்தார். வெகுநேரம் அழுது அலுத்து ஓய்ந்தவள் கண் மூடி அப்படியே உறங்கி விட அடுப்பில் தீய்ந்த வாசனை வரத் தொடங்கவும் அவள் தலைக்கு தலையணையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர் அறைக்கு முன்னே ஸ்ரீகுட்டி பயத்துடன் சுவரில் ஒட்டிக் கொண்டு கண்ணில் உறைந்த கண்ணீருடன் அமர்ந்திருப்பதைக் கண்டு தூக்கிக் கொண்டார்.
மகளின் கண்ணீரில் பேத்தியை மறந்துவிட்டதை எண்ணி தன்னை நொந்து கொண்டே அவளை சமாதானப் படுத்தினார்.
“செல்லம், ஒண்ணும் இல்லடா… வா…” என்று அவள் கண்ணைத் துடைத்து விட்டவரிடம், “பாத்தி… மம்மி ஏன் அழதா… நீ தித்தினியா… மம்மி பாவம் தான… எதுக்குத் தித்தின…” மழலையில் புரியாமல் கேட்ட குழந்தையை நெகிழ்ச்சியுடன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். சஹா வந்தது முதல் அழுது கொண்டே இருந்ததால் அவளுக்கு பாவமாய் தோன்றியதோ என்னவோ.
“இல்லடா, பாட்டி மம்மியைத் திட்டலை… மம்மிக்கு தலைவலின்னு அழுதா… நீ சமத்தா பிஸ்கட் சாப்பிடு… நான் சீக்கிரம் மம்மு ரெடி பண்ணிடறேன்…” சொல்லிக் கொண்டே அடுப்பைத் தணித்து அவளை இறக்கி விட, “ம்ம்… நானு டீவி பாக்கதேன்…” எனவும் சுவிட்சை ஆன் செய்ய, அவளே ரிமோட்டில் கார்ட்டூனை வைத்து அமர்ந்து கொண்டாள்.
“என் சமத்துக் குட்டி…” அவள் குண்டுக் கன்னத்தில் முத்தமிட்டு சென்றவர் சமையலை முடிக்கத் தொடங்கினார். அரிசியை குக்கரில் போட்டு அடுப்பில் வைத்தவர் சிம்பிளாய் பருப்பு, ரசம், உருளை பொறியலை வைத்துவிட்டு குழந்தை என்ன செய்கிறாள் என எட்டிப் பார்க்க அவளை அங்கு காணாமல் திடுக்கிட்டார்.
“ஸ்ரீக்குட்டி, எங்கடி செல்லம் இருக்கே…” அவர்களின் அறைக்கு சென்று நோக்க அங்கேயும் காணாமல் அதிர்ந்தவர் வெறுமனே சாத்தியிருந்த சஹாவின் அறைக்கதவைத் திறந்தவர் வியப்புடன் நின்று விட்டார்.
சஹாவின் தலைமாட்டில் அமர்ந்து பிஞ்சு விரல்களில் விக்ஸ் எடுத்து நெற்றியில் தேய்த்துக் கொண்டிருந்தாள் குழந்தை. அது உறக்கத்தில் இருந்த சஹானாவிற்கு சுகமாய் இருந்ததோ என்னவோ அவள் அசையாமல் அப்படியே படுத்துக் கிடக்க அந்த காட்சியைக் கண்ட சசிகலாவின் மனம் பாகாய் உருகியது. சிறிது நேரம் நோக்கி நின்றவர் வேகமாய் தனது மொபைலை எடுத்து அந்த அழகான காட்சியை பதிவு செய்து கொண்டார்.
“சனியன், பிசாசு எனது வார்த்தையில் வெறுப்பைத் துப்பினாலும், முகத்தில் கோபத்தைக் காட்டினாலும் அவள் ரத்தத்தில் உருவாகி, அவள் வயிற்றில் தவழ்ந்து வந்த குழந்தையிடம் தொப்புள் கொடிப் பாசம் இல்லாமல் போய்விடுமா என்ன…” என நினைத்துக் கொண்டவர் புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தார்.
ஒரு குழந்தைக்கு தாய்தான் உலகத்தின் முதல் உறவு… உலகில் தாயால் மட்டுமே தன் குழந்தையை எந்த நிலையிலும் நேசிக்க முடியும் என்ற வார்த்தையையே பொய்யாக்கி குழந்தையிடம் வெறுப்பை மட்டுமே காட்டும் சூழ்நிலைக்கு சஹாவை ஆளாக்கியது யார்… அவளது ஆசைகளையும் கனவுகளையும் ஆசிட் ஊத்திப் பொசுக்கி விட்டு இப்படி ஒரு நிலைக்கு அவளை உள்ளாக்கிய கயவனை வெறுப்புடன் சபித்தார்.   
உள்ளே வந்த பாட்டியைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீக்குட்டி உதட்டில் விரல் வைத்து, “உஷ்… சத்தம் போதாத…” என்று செய்கையிலே காட்ட அவளை அணைத்துக் கொண்டவர், “போதும்… நீ மம்மு சாப்பிட்டுத் தூங்கு வா…” என்று அழைத்துச் செல்ல சஹானா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி அவளைத் தூங்க வைத்தவர் சாதனாவுக்கு அலைபேசியில் அழைத்து இங்கே நடந்ததைச் சொன்னார்.
“ம்ம்… இதும் ஒருவிதத்தில் நல்லது தான் மா… எவ்ளோ நாள் தான் இந்த விஷயத்துல கண்ணாமூச்சி விளையாட முடியும்… கூடிய சீக்கிரமே எல்லாத்துக்கும் ஒரு நல்ல முடிவு வரும்னு நம்புவோம்…” என்றாள்.
“சரிடி, நீ எப்போ கிளம்பற… நிஷா, நிர்மலா நல்லா இருக்காங்களா…” என்றவரிடம் அலைபேசியைக் கொடுத்து அவர்களிடம் பேச வைத்தவள், “நாளைக்கு மதியம் இங்கிருந்து கிளம்பறேன்மா… சாயந்திரம் வந்திருவேன்…” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள்.
இரட்டைப் பெண்களைப் பெற்று இருவருக்கும் கல்யாண வயதாகியும் ஒன்றும் பண்ண முடியாத வருத்தம் சசிகலாவுக்கு இருந்தது. சஹாவின் வாழ்க்கை கேள்விக்குறியாய் இருக்க, சாதனாவின் கல்யாணத்தை எங்கிலும் நரேன் வந்ததும் நடத்திவிட நினைத்துக் கொண்டிருந்தார். இப்போது நிதினின் வரவால் சஹாவின் வாழ்விலும் ஒரு நம்பிக்கை வெளிச்சம் தெரியத் துவங்கினாலும் கல்யாணம் என்பது இருவர் மட்டும் சார்ந்த விஷயமல்லவே… இரு குடும்பங்களும் இணையும் அந்த பந்தத்தில் பெற்றோர், உடன் பிறந்தவர்களின் விருப்பமும் முக்கியமாயிற்றே. நிதின் சம்மதித்தாலும் அவன் குடும்பத்தினர் இவளை ஏற்றுக் கொள்வார்களா என்ற கவலை புதிதாய் மனதை அரிக்கத் தொடங்கியது.  
அன்று முழுதும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த மகளை வழக்கம் போல் கவலையுடன் நோக்கியவர் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாய் கிடைந்தவளை இரவு வற்புறுத்தி பால் மட்டும் குடிக்க வைத்தார்.
**************
கல்யாணம், ரிசப்ஷன் எல்லாம் நல்லபடியாய் முடிய மணமக்களை சரவணன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார் மீனாட்சி.
“அப்புறம் மீனாட்சி, மகளை நல்லபடியா அண்ணன் வீட்டுக்கே கட்டிக் கொடுத்துட்டே… மகனுக்கும் வயசாச்சே… அடுத்து அவனுக்கும் ஒரு பொண்ணைப் பார்த்திட வேண்டியது தானே…” கேட்ட பெரியம்மாவிடம் புன்னகைத்தவர், “நானும் அதான் நினைச்சிருக்கேன் பெரியம்மா, நம்ம சொந்தத்துல நமக்கு ஏத்த போல பொண்ணு இருந்தா சொல்லுங்க… பார்ப்போம்…” என்றார்.
“அதுக்கென்ன, உன் பையன் ராஜாவாட்டம் இருக்கான்… அவனுக்கா பொண்ணு கிடைக்காது… நம்ம செண்பகத்தைக் கட்டிக் கொடுத்தமே… அவ நாத்தனாருக்கு ஒரு பொண்ணு இருக்கு… நல்லா அழகான படிச்ச பொண்ணு… வசதியும் நம்மை விட கொஞ்சம் உசத்தி தான்… என்கிட்ட தெரிஞ்ச நல்ல பையன் இருந்தா சொல்ல சொல்லி இருந்தாங்க… அந்தப் பொண்ணைப் பாக்கறியா…” என்றார் அவர்.
அந்தப் பெண்ணை மீனாட்சியும் ஒரு சில விசேஷங்களில் பார்த்திருந்தார். “லட்சணமான நல்ல பெண்தான்… நிதினுக்குப் பொருத்தமாய் இருப்பாள்…” என யோசித்தவர், “எனக்கு ஓகே தான் பெரியம்மா… இந்தக் காலத்துப் பசங்க அவங்களைக் கேக்காம நாம முடிவு பண்ணிட்டா கோச்சுப்பாங்க… எதுக்கும் நான் என் பையனைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லறேன்…” எனவும், “அதுவும் சரிதான்டி… ஒண்ணும் அவசரமில்ல, மெதுவா கேட்டுட்டே சொல்லு…” என்றார் அவர்.
அவர்கள் பேசுவது சற்றுத் தள்ளி வீட்டு முன்னில் கல்யாணத்திற்கு வந்தவர்கள் அமர்வதற்காய் போட்டிருந்த நாற்காலிகளை சீர்படுத்திக் கொண்டிருந்த நிதினின் காதில் விழவும் செய்தது. அன்னையிடம் சீக்கிரமே சஹி பற்றிப் பேசிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் அவளை எப்படி சமாதானப்படுத்தி சம்மதிக்க வைப்பது என்ற விடை தான் கிடைக்கவில்லை. அவளிடம் இப்படிக் கெஞ்சிக் கொண்டிருந்தால் முரண்டு பிடித்து முறுக்கிக் கொண்டு தான் இருப்பாள்… தடாலாடியாய் செயலில் இறங்குவது மட்டுமே சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவன் மனதில் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்.
அடுத்தநாள் இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் காலையில் சாவதானமாய் எழுந்து அன்னை கொடுத்த காபியைக் குடித்துக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள் சஹானா. நேற்றைய அழுகையும் சோர்வும் முகத்தில் இன்னும் பாக்கி இருந்தன. அன்னையிடம் எதுவும் பேசவும் இல்லை. குழந்தை உறங்க சசிகலா காலை உணவைத் தயாரித்துக் கொண்டிருக்க அழைப்பு மணியின் “கிர்ர்ர்ரர்ர்ர்ர்…” அடித்து ஓய்ந்தது.
ஹாலில் அலைபேசியை சார்ஜ் போட்டுக் கொண்டிருந்த சஹானா சத்தம் கேட்டு கதவைத் திறக்க வெளியே நின்ற நிதினைக் கண்டு அதிர்ந்தாள். கோபத்துடன் முகத்தை சுளித்தவள், பட்டென்று கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அவளது இதயம் பலமடங்கு வேகத்துடன் படபடத்து இரத்த அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது.
“யாரு சஹா…” கேட்டுக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட சசிகலா அவளது முகத்தைக் கண்டு துணுக்குற்றார்.
“என்னம்மா, யாரு வந்திருக்கா…” என்றவரை கோபத்துடன் முறைத்துப் பார்த்தவள் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்ள புரியாமல் விழித்தார் சசிகலா.
“என்ன ஆச்சு இவளுக்கு, எதுக்கு இப்படி முறைச்சுட்டுப் போறா…” யோசிக்கும்போதே காலிங்பெல் மறுபடி கிறீச்சிட கதவைத் திறக்க வெளியே நின்றவனைக் கண்டு அதிர்ந்தார்.
“அச்சோ, என்ன தம்பி… அவ இருக்கும்போதே வீட்டுக்கு வந்துட்டிங்க… ஐயோ, சாமியாடுவாளே…” என்றார் தவிப்புடன்.
“பயப்படாதிங்க மா… எப்பன்னாலும் அவளை மலை இறக்கி தானே ஆகணும்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கதவின் உள்ளிருந்து “அம்மா…” என்ற கத்தல் கேட்டது.
“அச்சோ தம்பி, எனக்கு ரொம்ப பயமாருக்கு… சாது வேற வீட்ல இல்ல… நேத்து புல்லா அவ அழுதுட்டு சாப்பிடக் கூட இல்ல… நீங்க இப்ப தயவு செய்து போங்களேன்…” என்றார் அவள் அறைக்கதவை பயத்துடன் பார்த்துக் கொண்டே.
“இல்ல மா… நான் அவகிட்ட பேச வேண்டியதை பேசிட்டு போயிடறேன்…” என்றவன் வீட்டுக்குள் வந்து கதவை சாத்த அவர் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.
சட்டென்று கதவைத் திறந்து வெளியே வந்த சஹானா, “அம்மா, அவனை மரியாதையா வெளிய போக சொல்லு… இல்லேன்னா நடக்கறதே வேற…” கை விரலை ஆட்டிக் கொண்டு கோபத்தில் கண்ணில் திரண்ட நீருடன் அவன் பக்கம் திரும்பாமலே கத்திக் கொண்டிருந்தாள் சஹானா.
சசிகலா என்ன செய்வதென்று புரியாமல் “தம்பி…” என்று தர்ம சங்கடமாய் அழைக்க, “இருங்க மா, நானே போயிடறேன்… ஆனா, அவளை என்னைப் பார்த்து அதை சொல்லச் சொல்லுங்க…” என்றான் தீர்மானத்துடன்.
அதைக் கேட்டு அவளுக்குள் படபடப்பாய் வந்தது. அவனது அருகாமைக்கும், காதலுக்கும் சின்னச் சின்ன தீண்டலுக்கும் கூட அடிமையாய் கிடந்தவள், அவனது ஒவ்வொரு அசைவையும் பொக்கிஷமாய் மனதில் சேகரித்து அவனிலேயே வாழ்ந்து கொண்டிருந்தவள் அவனைப் பார்த்து எப்படி “வெளியே போ…” என்று கூறுவாள்.
சற்று தடுமாறினாலும், “இல்லை… என் ரூபனின் நல்ல வாழ்க்கைக்காய் நான் இதை இப்போது கூறியே ஆகவேண்டும்…” மனதை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தாள்.
பேச்சு சத்தம் கேட்டு உறக்கம் தெளிந்து உணர்ந்த குழந்தை கண்ணைக் கசக்கிக் கொண்டே ஹாலுக்கு வர நிதினைக் கண்டதும் வேகமாய் அவனைக் கட்டிக் கொண்டு “டாதி…” என்று சந்தோஷமாய் அழைக்க, “ஸ்ரீக்குட்டி….” என்று அவளை அன்போடு அள்ளிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.
அதை வெறுப்புடன் நோக்கியவள், “ச்சீ… யாருக்கு யாரு டாடி… இறங்குடி…” என்றவள் குழந்தையை அவனிடமிருந்து பறித்து கீழே இறக்கிவிட ஸ்ரீக்குட்டி அழத் தொடங்கவும் சசிகலா எடுத்துக் கொண்டார். அதைக் கண்ட நிதினுக்கு அதுவரை இருந்த பொறுமை எல்லாம் பம்பை கடக்க கோபம் எட்டிப் பார்த்தது.
“சஹி…” அவனது அதட்டலில் அதிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தவளை அவன் கண்கள் அப்படியே கபளீகரம் செய்து கொள்ள தனை மறந்து உருகத் தொடங்கியவள் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“எதுக்கு, இப்படி எல்லார் மேலயும் வெறுப்பைக் கொட்டுற… அந்தப் பிஞ்சுக் குழந்தை உனக்கு என்ன பாவம் பண்ணுச்சு… உனை உசுரா நினைச்சது அல்லாம நான் என்ன தப்பு பண்ணினேன்… எதுக்கு என்னோட பேசக் கூட செய்யாம இப்படி விரட்டறே…” என்றான் கோபமும் வருத்தமுமாய்.
அதைக் கேட்டு கண்ணீருடன் நிமிர்ந்தவள், “தப்பு பண்ணது நீங்க இல்ல, நான்தான்… போதுமா… நீங்க பேசுற எதையும் கேக்கற நிலைமைல நான் இல்லை… ப்ளீஸ் வெளிய போயிடுங்க…” என்றாள் எங்கோ வெறித்துக் கொண்டு.
“முடியாதுடி… உனக்குத் தேவைனா உருகி உருகி காதலிப்ப… வேண்டாம்னு தோணினா விட்டுட்டுப் போயிருவ… எனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்காதா…”
“அதே மனசு எனக்கும் இருக்குறதால தான், நான் உனக்கு வேண்டாம் விட்டுட்டுப் போன்னு சொல்லறேன்…” அவர்கள் பேசத் தொடங்கவும் சசிகலா குழந்தையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
“வேண்டாம் சஹி… என் பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு… நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது… அது உனக்கும் தெரியும்… நீ எனக்கு வேணும்மா…” என்றான் உடைந்த குரலுடன்.
“எனக்கு மட்டும் நீ வேண்டாம்னா நினைக்கறேன்… ஆனா களங்கமான என்னை உன் வாழ்நாள் சுமையா மாத்த நான் விரும்பலை ரூபன்…” என்றாள் மனதுக்குள்ளேயே.
“ஆனா, எனக்கு நீ வேண்டாம்னு சொல்லறேனே… ப்ளீஸ் புரிஞ்சுக்க… நான் உன் பழைய சஹி இல்ல, அவ செத்துப் போயிட்டா… இது அவ உடம்புல வெறும் உயிரை மட்டும் சுமந்திட்டு உலாவிகிட்டு இருக்குற வெறும் ஜடம்… இதுக்கு மேல என்னை எதும் கேட்காத… ப்ளீஸ்… போயிடு…”
கை கூப்பி தலை குனிந்து நின்றவளை வேதனையுடன் பார்த்தான் நிதின்.
“சஹி… நீ எதும் சொல்லலைனாலும் எனக்குத் தெரியும்… உன்னால எனை மறக்க முடியாது… அப்படி நாம மறந்தா அது நம்ம மரணத்தில் தான் இருக்கும்…” என்றவனை வேதனையுடன் நோக்கியவள், “இல்ல, உனக்கு எதுவும் தெரியாது… தெரியவும் வேண்டாம்… ஆல்ரெடி செத்துப் போனவ கிட்ட மரணத்தைப் பத்தி பேசிட்டு இருக்க… இனி உன் சஹி திரும்பி வர மாட்டா… விட்டுடு…”
“என்னடி, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க… எனக்கு எது தெரியாதுன்னு நீ நினைக்கறியோ அது எல்லாமே தெரியும்… நீ ஏன் இப்படிப் பேசற, எதுக்காக என்னை விட்டு ஓடறே… எதுனால எல்லாத்தையும் வெறுக்கறன்னு நல்லா தெரியும்… உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கினவனை சும்மா விட மாட்டேன்… அது நிச்சயம்… அவனோட அழிவுக்கான நாள் தூரத்தில் இல்லை…” நரம்புகள் புடைக்கக் கூறியவனை அதிர்ந்து நோக்கினாள் அவள்.
“எ..என்ன சொல்லற… உனக்கு எல்லாமே தெரியுமா…” அதிர்ச்சியுடன் கேட்டவளிடம் தெரியும் என்பது போல தலையாட்ட யோசனையாய் நெற்றியை சுருக்கினாள் சஹா.
அமுதான பெண் மனதில்
ஆலகால விஷத்தையே
கலந்தாலும் மனமென்னும்
அமுதம் விஷமாவதில்லை…
பூவின் மென்மைக்குள்
பூகம்பம் வந்ததனால்
பூவொன்றும் மணமின்றி
குணமிழப்பதில்லை…
அன்பின் வேரூன்றிய
அகத்தில் என்றும்
தின்மைகள் நிலைப்பதில்லை…
தீமைகள் தொடர்வதில்லை…

Advertisement