Advertisement

அத்தியாயம் – 17
நாட்கள் கடந்திருக்க காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் சஹானா. சர்வீஸ் விட வேண்டிய கிலோ மீட்டரைத் தாண்டி வெகு நாட்களாகி இருந்தது. வங்கிக்கு செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் கண்கள் சில நாட்களின் வழக்கம் போல் இன்றும் ஆவலுடன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, தேடியது காணாததால் ஏமாற்றத்துடன் விழி தாழ்ந்தது.
அவளுக்கே அவளை நினைத்து எரிச்சலாய் வந்தது. நிதினை அன்று வங்கியில் கண்டது முதல் எங்காவது ஒளிந்து நின்று தன்னைப் பார்க்கிறானோ என்று பயத்துடன் தேடத் தொடங்கும் பார்வை முடிவில் அவனைக் காணாமல் ஏமாற்றத்தை உணர்வதை நினைத்து கோபமாய் வந்தது.
அவளுக்கான பேருந்து அதிக கூட்டமில்லாமல் வர ஏறி காலியான சீட்டில் ஜன்னலருகே அமர்ந்து கொண்டாள். அருகில் யாரோ அமர்ந்ததை உணர்ந்தாலும் திரும்பவில்லை.
ஜன்னலில் வெளியே வெறித்தவள் மனம் பல நினைவுகளில் சிக்குண்டு தவித்தது. அவனைப் பார்க்கவே கூடாது, அவன் கண்ணில் படாமலே வாழ்ந்திட வேண்டுமென்று சேர்த்து வைத்த வைராக்கியம் எல்லாம் குறையத் தொடங்கியது போல தோன்றியது. அவன் மீது கொண்டிருந்த ஆழமான காதலை மனதுக்குள் பூட்டி வைத்து அனுதினமும் தன்னில் கறை படிந்ததை நினைத்து அருவருத்து ஒரு கூட்டுக்குள் ஒளிந்து கொள்ளத் துடித்தவள் மனம் அவனை இங்கு கண்டது முதல் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது.
தனக்கு நடந்ததை அவன் அறியக் கூடாதென்று பயந்தாலும், தன்னை இங்கு கண்ட பின்னும் தன்னைப் பற்றி எதுவும் விசாரிக்கவில்லையே என்று வலிக்கவும் செய்தது. அவன் கண்ணில் மீண்டும் பட்டுவிடக் கூடாதென்று நினைத்து அவனையே தேடிக் கொண்டிருந்தாள்.
“ரூபன்… ஏண்டா, மறுபடி என் கண்ணுல பட்டே… இவ்ளோ நாள் உன்னைப் பார்க்கவோ நினைக்கவோ கூடாதுன்னு நான் கடிவாளம் போட்டு வச்சிருந்த மனசு இப்ப உன்னைத் தேடி அலையுதே… உன்னோட புனிதமான காதலை களங்கப்பட்ட என்னால எப்படி ஏத்துக்க முடியும்… அதுக்கான தகுதியை நான் இழந்திட்டேனே…” மனம் ஏதேதோ அரற்றிக் கொண்டிருக்க கண்களில் நீர் திரையிட்டது.
“அக்கா, உங்ககிட்ட சில்லறை இருக்கா…” அருகில் ஒலித்த குரலில் நிமிர்ந்தவள் திகைத்தாள்.
“சரியா சில்லறை கொடுக்கலைனா கண்டக்டர் திட்டுவார்… அவசரமா வந்ததுல சில்லறை எடுக்காம வந்துட்டேன், உங்க கிட்டே இருக்குமா…” ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டியவளைக் கண்டு புன்னகைத்தவள், “எங்கே போகணும் மா… நான் டிக்கட் எடுத்துக்கறேன்…” என்று கூற, “அச்சோ வேண்டாம், சில்லறை கொடுத்தா போதும்…” என்று அவள் தயங்க, “அக்கான்னு சொல்லறே… ஒரு டிக்கட் எடுத்துக் கொடுத்தா நான் என்ன குறைஞ்சிடவா போறேன்…” எனவும், அவள் தயக்கமாய் புன்னகைக்க, “எந்த ஸ்டாப் மா…” என்றாள் மீண்டும். “பஸ் ஸ்டான்ட் தான்க்கா…” என்றாள் அவள்.
கண்டக்டரிடம் இரண்டு டிக்கட்டுகளை பஸ் ஸ்டாண்டுக்கு வாங்கியவள் ஒன்றை அவளிடம் நீட்ட, “தேங்க்ஸ் அக்கா…” என்றாள் சிரிப்புடன். அந்த சிரிப்பும் முகமும் அவளை நல்ல பரிச்சயம் உள்ளது போல் தோன்ற யாரென்று நினைவில் வரவில்லை.
“உன் பேர் என்னமா… உன்னை எங்கயோ பார்த்த போல இருக்கே…” என்றாள்.
“அப்படியா சிஸ்… நான் இங்கே திருப்பூர் தான்… என் பேர் பிரபா…” என்றவள் அவளை ஆவலுடன் நோக்கி, “இந்த சேலை உங்களுக்கு ரொம்ப அழகாருக்கு சிஸ்…” எனவும்,
“அப்ப நான் அழகா இல்லைன்னு சொல்ல வரியா…” என்று புன்னகைக்க, “அச்சோ அக்கா, நீங்க சிம்பிளா இருந்தாலும் ரொம்ப அழகாருக்கீங்க…” என்றாள் புன்னகையுடன்.
“தேங்க்ஸ் மா…” என்றவளிடம், “உங்க பேரை சொல்ல மாட்டீங்களா அக்கா…” என்றாள் உரிமையுடன்.
பார்த்த சிறிது நேரத்தில் இப்படி உரிமையாய்ப் பேசிக் கொள்ளுமளவுக்கு ஒரு ஒட்டுதல் வந்ததை எண்ணி இருவருக்குமே ஆச்சர்யமாய் இருந்தது.
“என் பேர் சஹானா…” என்றவளிடம், “வாவ், உங்களைப் போலவே நைஸ் நேம்…” என்றவள், “எங்காச்சும் வொர்க் பண்ணறீங்களா…” என்றாள்.
“ம்ம்… ஆமாம் மா… நீ எந்தக் காலேஜ் படிக்கிற…” எனவும், “காலேஜா, நானா…” என்றவள், “ஹிஹி டிவி அதிகமாப் பார்ப்பேன்… நான் டிகிரி முடிச்சு என் மிஸ்டருக்கு கழுத்து நீட்ட வெயிட்டிங் அக்கா…” நாணத்துடன் அவள் கூற, “ஹோ, பார்க்க ரொம்ப சின்னப் பொண்ணாத் தெரியறே மா… என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள்…” என்றாள் சஹானா புன்னகையுடன். 
“அக்கா, நீங்க ரொம்ப ஸ்வீட்டாப் பழகறீங்க… எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு… உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா உங்க போன் நம்பர் தரீங்களா…”
அவள் கேட்கவும் திகைத்தவள், “போன் நம்பர்…” இழுத்தவள், “நான் அதிகமா போன் யூஸ் பண்ண மாட்டேன்… சிலநேரம் போன் எடுக்கவே மாட்டேன்… அதுக்கு உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நம்பர் தரேன்…” என்றவள் அவள் சிரிக்கவும், அவள் எண்ணைக் கூறச் சொல்லி மிஸ்டு கால் கொடுத்துவிட்டு பிரபா என்று பதிந்து வைத்தாள்.
இருவரும் ஒன்றாய் இறங்கி பேசிக் கொண்டே நடந்தனர். அவசரமாய் கையைத் திருப்பி டைம் பார்த்த சஹாவிடம், “ஓகே அக்கா, நான் பக்கத்துல உள்ள பியூட்டி பார்லருக்கு போறேன்… நீங்க டைம் ஆச்சுன்னா கிளம்புங்க, பை அக்கா…” எனவும், “ஓகே பிரபா… பை மா…” என்றவள் விடை பெற்று வேகமாய் எட்டு வைத்து வங்கியை அடைந்தாள்.
குவிந்து கிடந்த வேலைகள் எப்போதும் போல் அவளை அதற்குள் ஆழ்த்திவிட வயிறு பசிக்கவே நிமிர்ந்து டைம் பார்த்தவள், “அட இரண்டு மணி ஆகிவிட்டதா…” என்று எழுந்து சாப்பிடக் கிளம்பினாள்.
அவர்களுக்கான அந்த அறையில் நீள் வட்டமான மேசையைச் சுற்றி அமர்ந்து சிலர் உணவருந்திக் கொண்டிருக்க சரவணனும் இருந்தான். அவனைக் கண்டதும் எப்போதும் போல மனதில் ரூபனைப் பற்றிய கேள்வி முளைக்க, “இவனிடம் ரூபனைப் பற்றிக் கேட்டு விடலாமா…” தவித்த மனத்தைக் கட்டுப்படுத்தி நாற்காலியில் அமர்ந்தாள்.
அவளது குழம்பிய முகத்தையும் தயக்கத்தையும் சரவணன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவனும் அலுவல் சம்மந்தமான விஷயங்கள் தவிர வேறு எதையும் அவளிடம் பேசியதே இல்லை.
மனதைப் பிராண்டிய கேள்வியை ஒதுக்க முடியாமல் “ச்ச்சே…. ரூபனைப் பற்றி எப்படிக் கேட்பது… கேட்டால் என்ன நினைப்பான்… ஒருவேளை அவனிடம் நான் விசாரித்ததை சொல்லி அவன் மீண்டும் என்னைக் காண வந்து விட்டால் என்ன செய்வது…” அரற்றிய மனதைக் கண்டு அதன் பிம்பம் கேலியாய் சிரித்தது.
“இப்போது என்னதான் உன் பிரச்சனை… ரூபன் உன்னைக் காண வரவில்லையென்பதா… உன்னைக் கண்டும் ஏன் பேசாமல் இருக்கிறான் என்பதா…”
“எனக்கென்ன பிரச்சனை… அவன் என் முன்னில் வரக் கூடாது என்றுதானே நானும் நினைக்கிறேன்… ஆனாலும் இந்த மனது ஏன் இப்படி அலைபாய்கிறது… அவன்  வாழ்க்கையில் இனி நானில்லை என்று மூளை நினைத்தாலும் மனது அவனைக் காணத் துடிக்கிறதே…” டிபன் பாக்சைத் திறந்து வைத்து யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அருகில் ஒலித்த குரலில் நிமிர்ந்தாள்.
“மேடம்…” திரும்பியவள், “சொல்லுங்க சரவணன்…” என்றாள்.
“இல்ல, ரொம்ப நேரமா ஏதோ யோசனைலயே இருக்கீங்க… ஏதாச்சும் பிராப்ளமா…” அக்கறையோடு கேட்டவனிடம் என்ன சொல்லுவதென்று விழித்தவள், “அ..அதுவா… வந்து… ஒ…ஒண்ணுமில்லை… சும்மா, ஏதோ… நீங்க சாப்பிட்டீங்களா…”
“ம்ம்… ஆச்சு மேடம்…” என்றவன் காலியான சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
சஹானாவின் தடுமாற்றம் அவள் என்ன யோசித்திருப்பாள் என்ற அனுமானத்தைக் கொடுக்க மெல்ல புன்னகைத்துக் கொண்டான். “அவளிடம் அலுவலைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது, கேட்கக் கூடாது என்பது நிதினின் உத்தரவாயிற்றே…”
  
உணவு இடைவேளை நேரமாதலால் வங்கியில் கூட்டம் குறைவாய் இருக்க தனது சீட்டுக்கு வந்தவன் சிறிது நேரம் கழித்து கல்யாண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு மேனேஜர் சாந்த மூர்த்தியின் அறைக்குள் நுழைந்தான்.
அவர் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டே உட்காரச் சொல்லி சீட்டைக் காட்டினார். அவர் பேசி முடித்ததும் கல்யாண விஷயத்தைக் கூறி அழைப்பிதழைக் கொடுக்க புன்னகையுடன் பெற்றுக் கொண்டு அட்வான்சாய் வாழ்த்தினார். இண்டர்காமில் சஹானாவை அழைத்தவர் பொதுவாய் கல்யாண விஷயத்தைக் கேட்டுக் கொண்டிருக்க அவனும் சொல்லிக் கொண்டிருந்தான்.
கண்ணாடிக் கதவின் முன்னில் நின்றவளை, “வாம்மா சஹானா…” என்றவர் அலுவல் சம்மந்தமாய் பேசிவிட்டு,
“நம்ம சரவணனுக்கு கல்யாணமாம்… கூடிய சீக்கிரமே கல்யாண விருந்து கொடுக்கப் போறார்… நீ எப்ப எங்களுக்கு அழைப்பு வைக்கப் போற…” என்று கேட்கவும் அவள் முகம் சட்டென்று இருண்டு போக சரவணன் கவனித்துவிட்டான்.
“சார்… நம்ம ஆபீஸ்ல எல்லாரும் வரணும்… அதுக்கு நீங்க தான் பர்மிஷன் கொடுக்கணும்…” என்றான்.
“அதெப்படி சரவணன்… நீங்க பணிநாள்ல மேரேஜ் வச்சா வங்கிக்கு விடுமுறை கொடுக்க முடியாதே…” என்று சிரித்தவர், “நாங்க நிச்சயம் வந்திருவோம்… நீங்க சந்தோஷமா கல்யாண வேலையைக் கவனிங்க…” என்றார்.
“மேடம், நீங்களும் கண்டிப்பா வரணும்…” என்றவன் சஹானாவுக்கும் அழைப்பிதழைக் கொடுக்க அவள் அமைதியாய் வாங்கிக் கொண்டு, தலையாட்டி தனது காபினை நோக்கி நகர்ந்தாள்.
அடுத்தநாள் விடியலில் உணர்ந்தும் எழுந்து கொள்ளாமல் படுத்தே கிடந்தவளை வந்து எழுப்பினார் சசிகலா. குளித்து தலையில் டவலை சுற்றிக் கொண்டு நெற்றியில் பூஜை முடித்து தொட்ட விபூதியுடன் தெய்வீகமாய் இருந்தார்.
“சஹா, எழுந்திரும்மா… இன்னைக்கு என்ன நாள் தெரியும்ல… சீக்கிரம் குளிச்சு இந்தப் புடவையைக் கட்டிட்டு வா… கோவிலுக்கு போயிட்டு வரலாம்…”
“ப்ச்… நான் வரலை, நீங்க போயிட்டு வாங்க…” என்று சலிப்புடன் கூறியவளை, “என்னடா சஹாம்மா இப்படி சொல்லற, நீ வரலேன்னா அவளும் வரமாட்டா… உங்களை ஆசையாப் பெத்து வளர்த்தவளோட ஆசைக்காகவாச்சும் எழுந்து வாடா…” குரல் தழுதழுக்க கூறவும் அதற்கு மேல் பிகு செய்யாமல் எழுந்து அமர்ந்தவள் குளிக்கத் தயாரானாள். புன்னகையுடன் அவளுக்கான புத்தாடையை கட்டிலின் மீது வைத்துவிட்டு ஆசையாய் பெற்ற இரட்டை மகள்களின் பிறந்த நாளுக்காய் பிரத்யேகமாய் சமைக்க சென்றார்.
சிறிது நேரத்தில் சஹா குளித்து அன்னை கொடுத்த புதுச் சேலையை சரி பண்ணிக் கொண்டே ஹாலுக்கு வர அங்கே சாதனாவும் ஸ்ரீகுட்டியும் புறப்பட்டு தயாராய் இருந்தனர். இருவருக்கும் ஒரே போல புடவை எடுத்துக் கொடுத்திருந்தார் சசிகலா.
தங்க நிறப் புடவை பாந்தமாய் தேகத்தை சுற்றியிருக்க அலங்காரம் எதுவுமில்லாமலே அழகாய் ஜொலித்தவளை கண்கள் பனிக்கப் பார்த்த சாதனா, “ஹாப்பி பர்த்டே சஹா…” என்று ஆவலுடன் எழுந்து கட்டிக் கொண்டாள்.
“ம்ம்… உனக்கும் என் வாழ்த்துகள்…” உதடுகள் கூறினாலும் அவள் முகத்தில் மலர்ச்சி மட்டும் கடுகளவும் இல்லை. அன்னையின் விருப்பத்திற்கு கோவில் சென்று இருவரின் பேரிலும் அர்ச்சனை செய்து பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து அன்னை ஆசையுடன் செய்த டிபனை உண்டு பால் பாயாசத்தை பேருக்கு சுவைத்து வழக்கம் போல் வேலைக்கு கிளம்பி விட்டாள்.
“இன்னைக்கு லீவு போடேன் சஹா… எங்காச்சும் போயிட்டு வரலாம்…” சசிகலா கூற, “ப்ச்… நான் எங்கேயும் வரலை மா… ஈவினிங் வரும்போது காரை எடுத்திட்டு வரணும்… நான் கிளம்பறேன்…” என்றவளிடம் அவசரமாய் வந்து அலைபேசியை நீட்டினாள் சாதனா.
“நரேன் லைன்ல இருக்கார்… உன்னோட பேசணுமாம்…” விருப்பமில்லா விட்டாலும் சதுவின் மனதை வருத்த விருப்பமில்லாமல் அலைபேசியை வாங்கி ஹலோவினாள்.
“ஹலோ சஹா, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்… எப்படி இருக்கீங்க… புது இடத்துல உங்க வேலை எல்லாம் செட் ஆகிருச்சா…” அக்கறையாய் விசாரித்தவனிடம், ஒன்றிரண்டு வார்த்தையில் பதில் கூறி பேச்சை முடித்து வைத்தாள்.
சசிகலா இடுப்பில் இருந்த குழந்தையிடம், “ஸ்ரீக்குட்டி, இன்னைக்கு உன் அம்மா, மம்மி ரெண்டு பேருக்கும் ஹாப்பி பர்த்டே, நீ விஷ் பண்ணியா…” என்று கேட்க, “நானு காலைல அம்மாக்கு ஹாப்பி பர்த்தே சொல்லித்தேன் பாத்தி…”  என்றாள் அவள்.
“மம்மிக்கும் போயி விஷ் பண்ணு…” எனவும் குழந்தை பயத்துடன், “மம்மி தித்துவா…” என்றது.
“இன்னைக்கு திட்ட மாட்டா… நீ சமத்தா போயி விஷ் பண்ணு பார்ப்போம்…” என்று இறக்கி விட அது தயக்கத்துடன் சஹானாவின் அடுத்து சென்று அவள் காலைக் கட்டிக் கொண்டு, “ஹாப்பி பர்த்தே மம்மி…” எனவும் சட்டென்று பார்த்தவள் முகம் குழந்தையைக் கண்டதும் கசப்பை சுவைத்தது போல ஆனாலும் எதுவும் சொல்லாமல் அவள் கையைப் பிடித்து அவசரமாய் மாற்றிவிட்டு, “கிளம்பறேன்…” என்று எரிச்சலாய் கூறி கைப்பையுடன் கிளம்பி விட்டாள். ஸ்ரீக்குட்டியின் முகம் வாடிப் போனதைக் கண்ட சசிகலா, பேத்தியை வேகமாய் எடுத்துக் கொண்டு, “ஸ்ரீக்குட்டிக்கு பாயாசம் தரட்டுமா…” என்று கேட்க, “மம்மிக்கு என்மேல கோபமா பாத்தி…” என்று கேட்க, அவளை அணைத்துக் கொண்டவர், “இல்லடா செல்லம்… மம்மி இன்னைக்கு உன்னைத் திட்டல பார்த்தியா…” என்று கேட்க குழந்தையின் முகம் பூவாய் மலர்ந்தது.
“ஆமா பாத்தி, மம்மி என்னைத் தித்தவே இல்ல…” என்று சந்தோஷமாய் கூறியவள், “நான் அம்மா கித்தப் போதேன்…” என்று இடுப்பிலிருந்து இறங்கி அறையில் அலைபேசிக் கொண்டிருந்த சாதனாவிடம் ஓடினாள்.
“கடவுளே, சீக்கிரமே என் பொண்ணு மனசுல இந்தப் பிஞ்சை பொண்ணா ஏத்துக்கத் தோண வை… உனக்கு பாலாபிஷேகம் பண்ணறேன்…” என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே வேலையைத் தொடர்ந்தார் சசிகலா.
அலுவலகத்திலும் அன்று சஹானாவின் பிறந்தநாள் என்பது அவளது ரெக்கார்டிலிருந்து தெரிந்திருக்க, அனைவரும் வாழ்த்துக் கூறி ட்ரீட் கேட்டவர்களுக்கு பியூனிடம் சொல்லி கேக் வாங்கிக் கொடுத்து சமாளித்தாள். வேலையில் மனம் பதிய மறுக்க, ரூபனின் நினைவு மனதை வாட்டியது.
அவளது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவன் செய்யும் அட்டகாசம் நினைவு வர பழைய நினைவுகளில் மனம் ஏங்க இயலாமையில் கண்ணில் நீரை வரவழைத்தது. பிறந்தநாளன்று முழுதும் அவனுடன் கோவில், பார்க், மால் என்று சுத்தியது மனதில் வந்து கண்ணைக் கசிய வைத்தது.
அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அரை நாள் விடுப்பு எடுத்து கிளம்பியவள் அருகிலிருந்த கோவிலுக்கு சென்றாள்.
என்னவென்று தெரியாமலே வெகு நேரம் இறைவனைப் பார்த்து நின்றவள் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு அமர்ந்தாள். மனம் சற்று சாந்தி அடைந்தது போலிருக்க அமைதியாய் கண்ணை மூடி அமர்ந்திருந்தாள்.
“எதற்காக எனக்குள் இந்தத் தடுமாற்றம்… இனி என் வாழ்வில் வேண்டாமென்று ஒதுக்கிய விஷயத்திற்காய் இத்தனை கண்ணீர் சிந்துவது ஏன்… என் ரூபன் நன்றாக வாழ வேண்டும்… அவனுக்கு நான் தகுதியில்லாதவள்… அவனைத் தவிர்க்க நினைத்த மனது இப்போது ஏன் இப்படி நிலையில்லாமல் தவிக்கிறது… எனக்கென்னவாயிற்று… நான் போட்டுக் கொண்ட இரும்புத் திரையை அவனது ஒரு சந்திப்பால் எப்படித் தகர்க்க முடிந்தது…” விடை தெரிந்தும் தெரியாத வினாக்களை எழுப்பிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தவளின் மனம் அலைபேசியின் சின்ன சிணுங்களில் மெல்ல கண் திறந்தது.
வாட்சப்பில் புதியதாய் ஒரு மெசேஜ் வந்திருப்பதாகக் காட்ட வெறுமனே எடுத்துப் பார்த்தவள் மனம் பரிச்சயமான அந்த பழைய எண்ணைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளியது.
“Many More Happy Returns of the Day…” ஒரு அழகான பூங்கொத்துடன் ஒளிர்ந்த வார்த்தைகள் அவளது கண்களின் வழியே இதயத்தை ஸ்பரிசிக்க வெகு நாட்களுக்குப் பிறகு மனம் சந்தோஷத்தில் துள்ள உதடுகள் புன்னகைத்து கண்கள் பனித்தன.
  
நேசிப்பதென்பது தவம்…
நேசிக்கப்படுவது வரம்…
நீண்ட காலமாய்
உன் அரவங்களற்று
உன் பார்வைப் பனியில்
நனையாது தனித்திருக்கிறேன்…
தவித்துமிருக்கிறேன்…
அப்போதெல்லாம்
உன் மீது நான் கொண்ட
நேசிப்பின் தவம் மட்டுமே
எனை உயிர்ப்புடன் வைத்திருந்தது…
என்றாவது ஒரு நாள்
உன் தரிசனம் கிடைக்கும்
வரம் கிடைக்காதாவென
பாலைவன பறவையாய்
ஸ்நேக தாகத்தோடு காத்திருந்தேன்…
இப்பிரபஞ்சத்தின் பெருவெளியில்
ஏதோ ஒரு மூலையில்
எனக்கான வரம்
இயங்கிக் கொண்டிருக்கிறது
என்பது மட்டுமே
எனை இயக்கிக் கொண்டிருந்தது…
பாலைவனத்தில் விழுந்திட்ட
சிறு மழைத் துளியாய்
உன் நேசத்தின் சுமை தாங்கி
எனை வந்தடைந்தது
உன் வாழ்த்தென்னும் குறுந்தகவல்…
இன்று மீண்டும் புதிதாய் பிறந்தேன்…
   

Advertisement