Advertisement

அத்தியாயம் – 16
அழகான மாலை நேரத்தின் இனிமையைக் கூட்ட மழை சாரலிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலருகே நின்றிருந்த சஹானா வெளியே தூரத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இன்றே அமைதிப்பட்டிருந்தது.
அவளது பின்னில் காபிக் கோப்பையுடன் வந்து நின்ற சாதனா மெதுவாய் தோள் தொட திரும்பினாள். உடலும், மனமும் சோர்ந்திருப்பதை முகம் உணர்த்தினாலும் சற்றுத் தெளிந்தது போல் இருந்தது.
“சஹா… மழை வித் காபி, உனக்கு ரொம்பப் பிடிக்குமே…” என்று ஒரு கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டாள். ஒரு கோப்பையுடன் கட்டிலில் அமர்ந்தவள் குடித்துக் கொண்டே கேட்டாள்.
“சஹா, நாளைக்கு பாங்குக்கு போறே தானே…”
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் காபியைக் குடிப்பதிலேயே கவனமாய் இருந்தவள், குடித்து முடித்துவிட்டு சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள்.
“ப்ச்… நான் வேலையை ரிஸைன் பண்ணிடலாம்னு இருக்கேன்…”
“வ்வாட்… என்னடி சொல்லற…”
“டிரான்ஸ்பர் கேட்டா கொடுக்க மாட்டாங்க… அதான்…”
“அதுக்காக, வேலையை விடுவியா… இந்த வேலைக்காக நீ எவ்ளோ முயற்சி செய்தே… இது உன் ட்ரீம் ஜாப்…”
“முடியலை சது… எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலை…”
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்த சாதனா, “சஹா… நீ ஏன் இப்படி சொல்லறேன்னு எனக்குத் தெரியும்… ஆனா, எந்தப் பிரச்சனையுமே நாம சரிபண்ணாம விலகிப் போறதால மட்டுமே சரியாகிடாது…”
சாதாரணமாய் சாதனா ஏதேனும் உபதேசம் செய்தால் முறைத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் இருப்பவள் இன்று அமைதியாய் கேட்டுக் கொண்டு நிற்பதே அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.  
அவள் மனதுக்குள் நினைப்பதற்குள்ளேயே, “எனக்கு எந்தப் பிரச்னையும் சரி பண்ணப் பிடிக்கல, இந்தா, கப்பை எடுத்திட்டுப் போ… உன் காபிக்குத் தேங்க்ஸ்…” பழைய போல் வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்ள சிடுசிடுத்தவளைக் கண்டு நொந்து கொண்டே எழுந்து சென்றாள் சாதனா.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இரண்டு நாட்களாய் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவளை அப்படியே விடாமல் நாளைக்காவது வங்கிக்கு அனுப்பி விட நினைத்தே இவள் கேட்டாள்.
நிதினிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கலங்கியவன் தெளிந்து வர அவகாசம் வேண்டுமே. சஹானாவுக்கு அவனுக்கு இதெல்லாம் தெரியுமென்பது தெரியாது. 
அங்கே நிதினின் மனம் அவனது சஹி பட்ட வேதனைக்காய் துடித்தாலும் அது மெல்ல மாறி இப்போது ஆகாஷின் மீது பெருங்கோபமாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 
மீனாட்சி மகளின் கல்யாண விஷயமாய் பிஸியாய் இருக்க, சில நாட்களாய் அண்ணன் சோகத்தில் உழல்வது கண்டு பிரபா என்னவென்று கேட்டாள். அவளிடம் அவன் எதுவும் சொல்லாமல் மழுப்பவும், அவள் சரவணனிடம் சொல்ல அவன் விஷயமறிய வீட்டுக்கே வந்துவிட்டான்.
நடந்ததை சுருக்கமாய் நிதின் அவனிடம் சொல்ல அவனும் துடித்துக் கொதித்துப் போனான்.
“ஐயோ, பாவம் சிஸ்டர்… எவ்ளோ கொடுமையை அனுபவிச்சிருக்காங்க… இப்படி ஒரு ஈனப் பிறவியை தண்டிக்காம நம்ம சட்டம் இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கா… இவன்தான் இதை செய்தான்னு போலீஸ்ல சொல்ல வேண்டியது தானே…” கொந்தளித்தவனிடம், “இது நடந்து ஒரு வருஷத்துக்குப் பிறகு தான் ஆகாஷ் செய்தான்னு அவனே போன்ல  சொல்லிருக்கான்… நம்ம சட்டத்துக்கு சாட்சியும், ஆதாரமும் தானே வேணும்… அதில்லாம கேஸ் போட்டாலும் நிக்காதே… அதும் இல்லாம சஹி கொஞ்சம் மனநிலை சரியில்லாம இருந்ததால அவளை கவனிக்க வேண்டிய நிலைமைல இவங்க இருந்திருக்காங்க… அதான் கேஸ் கொடுக்கல…” என்றான் நிதின் வேதனையுடன்.
“ம்ம்… சரி இதுல நீ என்ன முடிவெடுத்திருக்கே…”
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல… இந்தப் பிறவியில் சஹி தான் என் மனைவி… அவளோட குழந்தை எனக்கும் குழந்தைதான்… அவளோட எல்லா வேதனைகளுக்கும் மருந்தா இருக்கணும்னு தான் நான் ஆசைப்படறேன்… ஆனா, அவ இதை ஏத்துப்பாளான்னு தான் கவலையா இருக்கு…” அவன் கூறிய வார்த்தையில் நெகிழ்ந்தான் சரவணன்.
“நடக்கும் மச்சான்… உன்னோட உண்மையான அன்பு அவங்களைப் புரிஞ்சுக்க வைக்கும்…” என்றான் கண்ணீருடன்.
“ம்ம்… ஆனா அதுக்கு முன்னாடி என் தேவதையை அலங்கோலமாக்கின சாத்தான்களை வேட்டையாடணும்… எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு கொடுமையை செய்ய ஒவ்வொரு ஆணும் பயப்படணும்… அப்படி ஒரு தண்டனையை அவனுக்கு கொடுக்கணும்…” கழுத்து நரம்புகள் புடைத்திருக்க கண்கள் கோபத்தில் கலங்கி சிவந்திருக்க வெறியோடு அவன் கூறியதைக் கண்டு சரவணனே திகைத்துப் போனான். ஆனாலும் அவன் வார்த்தைகளை, கோபத்தை மறுக்கவில்லை.
“மச்சான்… உனக்கு இதுல என்ன உதவி வேணும்னாலும் பண்ணறதுக்கு நானும் தயாரா இருக்கேன்…” என்றவனை நன்றியோடு பார்த்தான் நிதின். அவர்கள் பேசுவதை அறைக்கு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த பிரபாவின் கண்களில் வேதனையும், கண்ணீரும். அதற்கு காரணமானவனுக்கு உரிய தண்டனை கொடுக்க நினைக்கும் அண்ணனையும், அத்தானையும் நினைத்து பெருமிதம் கொண்டாள்.
“சரி நிதின்… எப்படியாச்சும் சிஸ்டரோட மனநிலையை நீதான் மாத்திக் கொண்டு வரணும்… அவங்க இன்னும் வேலைக்கு வரலையேன்னு யோசிச்சப்ப தான் பிரபா கால் பண்ணி உன்கிட்டே பேச சொன்னா… சரி, நீ எப்ப வேணும்னாலும் என்னைக் கூப்பிடு… நான் கிளம்பறேன்…” என்றவனுடன் நிதினும் வந்து கதவைத் திறக்க வெளியே கண்ணீருடன் நின்ற பிரபாவைக் கண்டதும் திகைத்தான்.
“பிரபா, நீ…” என்று இழுக்க, “எல்லாத்தையும் நானும் கேட்டேன் அண்ணா… அந்தப் பொறுக்கிங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்… சட்டம் வழியா கொடுக்க முடியலைனா நீங்களாச்சும் கொடுக்கணும்… அதான் ஒரு நல்ல மனிதனுக்கான கடமை…” சொல்லிவிட்டு இறங்கி சென்று விட்டவளை பார்த்து மலைத்து நின்றனர் இருவரும்.
சரவணன் விடைபெற அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்தான் நிதின். “சஹியைப் பார்க்க வேண்டும்… சாதனாவிடம் “அவளுக்கு நானிருக்கிறேன்…” என்று தன் மனநிலையை சொல்ல வேண்டுமென்று மனம் துடித்தது.
“ஆகாஷ்… ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்ட… நீயும் ஒரு தாய் வயித்துல பிறந்தவன் தானே, எப்படி இப்படிலாம் ஒரு பெண்ணை சிதைக்க உனக்கு மனசு வந்துச்சு… இது என் சஹிக்கு நடந்ததுக்காக மட்டுமில்ல… வேற எந்த ஒரு பொண்ணுக்கு இப்படியொரு கொடுமை நடந்திருந்தாலும் என் மனசு இப்படிதான் கொதிச்சிருக்கும்… எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப நல்லவன் மாதிரி வெளிநாட்டுல உக்கார்ந்துகிட்டா உன் மனசு உன்னைக் கேள்வி கேக்காதா… அதுசரி, மனசுன்னு ஒண்ணு இருக்கவன் இந்த கேடு கேட்ட கொடுமையை ஏன் செய்யப் போறான்…” அவனே கேள்விக்கு பதிலும் கூறிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான். மனம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் மெல்லத் தெளியத் தொடங்கியது.
அடுத்த நாள் சாதனாவுக்கு அலைபேசியில் அழைத்தான்.
அன்றும் காலையில் பணிக்கு செல்ல முரண்டு பிடித்துக் கொண்டு கிளம்பாமல் இருந்த சஹாவை சசிகலா கெஞ்சிக் கூத்தாடி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.
எனவே நிதின் நேரில் பேச வேண்டும் என்றபோது வீட்டுக்கே வரும்படி கூறினாள் சாதனா.
கம்பீரமாய் உயர்ந்து நின்ற கோகுலம் அபார்ட்மென்ட்ஸ் கேட்டின் முன்னில் பைக்கை நிறுத்திய நிதினிடம் செக்யூரிட்டி விசாரிக்க சாதனாவின் பேரைச் சொல்லி வீட்டு எண்ணைக் கூறவும் அவர் லிப்ட்டுக்கு கை காட்டினார்.
லிப்டுக்குள் நுழைந்து தளத்தில் இறங்கி வீட்டு எண்ணை பார்த்துக் கொண்டே நடந்தவனை கேள்வியாய்ப் பின் தொடர்ந்தது இரண்டு ஜோடிக் கண்கள்.
“யாரு இது… டிப் டாப்பா இருக்கான்…” யோசனையுடன் கேட்ட சரளாவிடம், “அந்தப் பொண்ணு கூட பாங்குல வேலை செய்யுற ஆளா இருக்கும்…” என்றாள் பிரவீனா.
“அதுதான் கொஞ்சநாள் வீட்டுல இருந்துட்டு இன்னைக்கு காலைல ஆபீஸ் கிளம்பிப் போயிருச்சே… அப்புறம் எதுக்கு வீட்டுக்கு வரப் போறாங்க…” என்றாள் சரளா.
“ஒருவேளை சின்னதைப் பார்க்க வந்திருப்பானோ…”
“ம்ம்… இருக்கும் இருக்கும்… அவ தளுக்கும் மினுக்கும்… பெரிய பொண்ணு வரதும் போறதும் தெரியாது… சிறுசு திமிர் பிடிச்சது… நாம ஏதாச்சும் கேக்கப் போனா என்னவோ காணக் கூடாதவங்களைக் கண்ட போல பட்டும் படாம பதில் சொல்லிட்டு ஓடிட வேண்டியது…” சாதனாவைக் குறை சொல்லுவது காலிங் பெல்லை அமர்த்திவிட்டுக் காத்திருந்த நிதின் காதிலும் விழுந்தது.
“மற்றவர்களின் குறை தேடி அலைவதே சில பெண்களுக்கு வேலையாகப் போய்விட்டது…” என நினைக்கும் போதே கதவைத் திறந்து புன்னகைத்தாள் சாதனா.
“வாங்க நிதின்…” என்றவளிடம் பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு உள்ளே நுழைந்தான் நிதின். பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீக்குட்டி அவனைக் கண்டதும் நாணத்துடன் வேகமாய் சென்று சோபாவின் பின்னால் ஒளிந்து கொண்டு சிறிது தலையை நீட்டி எட்டிப் பார்த்தது.
அவள் செய்கையில் மனம் சற்று லேசாக “வா…” என்பது போல் தலையசைத்து அழைத்தான்.
அவள் தலையாட்டி வர மாட்டேன் என்பது போல் மறுக்க, அந்த சோபாவில் போய் அமர்ந்தவனின் எதிரில் வந்து அமர்ந்தாள் சாதனா. அடுக்களையிலிருந்து கையைத் துடைத்துக் கொண்டே வந்த சசிகலா, “வாங்க தம்பி… காபி எடுத்திட்டு வர்றேன்…” என்று கூறவும், “பரவால்ல மா… அப்புறம் குடுங்க…” எனவும், அவரும் சாதனாவின் அருகே அமர்ந்து கொண்டார்.
அவரவர் மனசுக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்க மௌனமாய் நொடிகள் கடந்து கொண்டிருந்தது.
எப்படிப் பேச்சைத் தொடங்குவது என யோசித்துக் கொண்டிருந்தவனைப் பின்னிலிருந்து ஒரு பிஞ்சு விரல் சுரண்டி அழைக்க, அவன் நிமிர்ந்து பார்க்கவும் மீண்டும் சோபாவின் பின்னில் அமர்ந்து தன்னை மறைத்துக் கொண்டது ஸ்ரீக்குட்டி.
குழந்தையின் விளையாட்டில் மூவரும் புன்னகைக்க, அப்போதுதான் அவளுக்கு சாக்கலேட் கொண்டு வந்தது நினைவில் வர, “ஸ்ரீக்குட்டி… இங்க வா… உனக்கு ஜெம்ஸ் பிடிக்குமா…” பாக்கெட்டில் இருந்து பெரிய ஜெம்ஸ் பாக்கெட்டை எடுக்கவும் கண்கள் மின்ன ஆர்வத்துடன் வெளியே வந்தவள் சாதனாவின் அருகில் போய் நின்று கொண்டு அவள் முகத்தைப் பார்த்தாள்.
அவள் “வாங்கிக்கோ…” எனவும் ஆவலுடன் நிதினை நோக்க, “இங்க வா…” அருகில் அழைத்தவனிடம் தயக்கத்துடனே சென்றவளை எடுத்து மடியில் அமர்த்திக் கொண்டான் நிதின். அவளைத் தொடும்போது மனதுக்குள் இவள் என் சஹியின் உதிரத்தில் வளர்ந்தவள் என்பது ஒரு பரவசத்தைக் கொடுக்க குழந்தையின் கையில் பாக்கெட்டைக் கொடுத்துவிட்டு கன்னத்தில் முத்தமிட்டான்.
அவளும் திருப்பி முத்தமிடுவதற்காய் கன்னத்தைக் காட்ட அந்தப் பிஞ்சு உதடுகள் அவன் கன்னத்தில் ரோஜாப் பூவாய் அழுந்தி எழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த சசிகலாவின் கண்கள் கலங்க சாதனாவின் மனமும் நெகிழ்ந்திருந்தது. என்னதான் வேண்டாத வரவாய் பூமிக்கு வந்திருந்தாலும் தாய் தந்தை அரவணைப்பின்றி வாழும் அந்தக் குழந்தையை எந்த வெறுப்புமின்றி அன்போடு அவன் முத்தமிட்டது அவர்களுக்குள் ஆயிரம் நம்பிக்கையை விதைத்தது.
அவன் மடியில் அமர்ந்து பாக்கெட்டைப் பிரிக்க முயல அதை வாங்கிப் பிரித்துக் கொடுத்தான் நிதின். குட்டி வட்ட நிலவாய் வண்ணத்தில் பளிச்சிட்ட மிட்டாய்களை வேகமாய் அவளுக்குப் பிடித்த கலரில் எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டவள், “ம்ம்… சூப்பதா இதுக்கு…” என்று தலையாட்டிக் கொண்டே அவன் வாயிலும் ஒன்றைத் திணித்தாள்.
“அம்மா, உனக்கு வேணுமா…” அவனிடமிருந்து இறங்கி சாதனாவின் வாய்க்கருகில் கொண்டு சென்றவள் அவள் வாயைத் திறக்கும்போது கையைப் பின்னுக்கு இழுத்து, “ம்ஹூம், தத மாத்தேன்…” என்று நிதினிடமே ஓடிச் சென்று அவன் மடியில் அமர்ந்து கொள்ள மூவரும் சிரித்தனர்.
“ஸ்ரீக்குட்டி… அம்மாக்கு சாக்கி தராட்டி டூ விட்டிருவேன், பரவால்லியா…” சாதனா கேட்க, இரண்டு கண்ணையும் உருட்டி வேண்டாமென்று தலையாட்டிக் கொண்டு வேகமாய் அவளிடம் வந்து மடியில் அமர்ந்து கொண்டது.
“ஸ்ரீக்குட்டி ரொம்ப கியூட்டா துருதுருன்னு இருக்கா…” நிதின் சொல்லவும் புன்னகைத்த சசிகலா, “ஆமாம் தம்பி… அப்படியே சஹா சின்ன வயசுல இருந்த மாதிரி…” என்று தொடங்கியவர் சட்டென்று வார்த்தையை நிறுத்திக் கொண்டு அவனைப் பார்த்து விழிக்க புன்னகைத்தான்.
“ஏன்மா நிறுத்திட்டீங்க, சஹிக்கு சொந்தமானதெல்லாம் எனக்கும் சொந்தம் தான்…”
“தம்பி, நீங்க சொல்ல வர்றது…”
“சஹியை மட்டுமில்ல… அவ பெத்த குழந்தையும் எனக்கு வேணும் தருவீங்களாம்மா…” நேரடியாய் விஷயத்துக்கு வந்தவனை திகைப்பும் மகிழ்வுமாய் பார்த்தனர்.
“தம்பி… எதுக்கும் நல்லா யோசிச்சு…” அவர் இழுக்க, “நிறைய யோசிச்சுட்டேன் மா… அது என் சஹி எனக்கு வேணுமா, வேண்டாமாங்கற யோசனை இல்லை… அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கின ஆகாஷ்க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு நிறைய யோசிச்சுட்டேன்…” கண்களில் கோபம் மின்ன அழுத்தமான குரலில் கூறியவனைக் கண்டு அவர்கள் கண்கள் பனித்தது.
“நிதின், நீங்க அவளை ஏத்துக்க சம்மதிச்சாலும் சஹா அவ்ளோ சீக்கிரம் இதுக்கு ஒத்துக்க மாட்டா… அவ மனசை மாத்த நீங்க நிறையப் போராட வேண்டி வரும்…”
“தெரியும் சாதனா… அவ என்னை ஏத்துக்கற வரைக்கும் விடமாட்டேன்…” என்றவனின் குரலில் உறுதி இருந்தது.
“காதலிச்ச பொண்ணுக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்குன்னு தெரிஞ்சும் நீங்க இவ்ளோ உறுதியா சொல்லுறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு… ஆனா, இதுக்கு உங்க வீட்டுல சம்மதிப்பாங்களா…”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்… இது எல்லாத்துக்கும் முன்னாடி நான் செய்து முடிக்க வேண்டிய கடமை ஒண்ணு இருக்கு…” எனவும் அவர்கள் என்னவென்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
“எனக்கு ஆகாஷ் பத்தின முழு விவரமும் வேணும்…” என்றவனை திகைப்பும் சந்தோஷமுமாய் பார்த்தனர்.
“அம்மா, பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணும்போது அவங்க பயந்து விலகிப் போனா அதையும் சில ஆண்கள் தனக்கு சாதகமா எடுத்துக்குறாங்க… அவங்களை தட்டிக் கேட்டு குரல் உயர்த்தினா அதுக்குப் பழி வாங்கற பேர்ல அவங்க வாழ்க்கையையே சிதைக்கப் பார்க்கறாங்க… ஒரு பாவமும் அறியாத எதுலயுமே சம்மந்தப்படாத என் சஹி வாழ்க்கையை சீரழிச்ச அந்த ஆகாஷ் தண்டிக்கப் பட வேண்டியவன்… அது சட்டத்தோட வழியில நடக்கலேன்னா நம்ம வழிக்கு சட்டத்தை எடுத்துக்க வேண்டியது தான்…” என்றவனின் கண்களில் ஒரு வெறி மின்னியது.
“தம்பி… என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தப்போ எனக்கு ஒரு மகன் இல்லையேன்னு நான் ரொம்பக் கலங்கினேன்… நீங்க சொல்லுறதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாருக்கு…” என்ற சசிகலா கண்ணைத் துடைத்துக் கொள்ள சாதனா புன்னகையுடன் அவளுக்குத் தெரிந்த ஆகாஷ் பற்றிய விஷயங்களை சொல்லத் தொடங்கினாள்.
அற்ப நேர ஆசைக்காய்
ஆயுள் தண்டனையை
பெண்ணுக்களித்து
வெற்றி கொண்ட மிதப்பில்
வெறியாடும் மானிடனே…
உனைப் பெற்றதற்காய்
மனம் வெறுத்து தோல்வியில்
தலைகுனிகிறாள் உன் தாய்…
அவளும் ஒரு பெண்தான்
என்பதை நீ மறந்து போனதால்…

Advertisement