Advertisement

அத்தியாயம் – 15
அந்த நாள் விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்பது போல் ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்து சஹானாவை அங்கு அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினர்.
அவளைப் பற்றிய இவர்களின் கேள்வியில் நான்கைந்து மிருகங்கள் ஒன்று சேர்ந்து அவள் உடலில் உயிரை மட்டும் மிச்சம் வைத்து எச்சில் இலையாய் குப்பைத் தொட்டி அருகே தூக்கிப் போட்டுப் போயிருப்பதாக வந்த செய்தியைக் கேட்டு சசிகலா பதறி மயங்கி விழுந்தார். பிரம்மை பிடித்தது போல் நின்ற சாதனாவுக்கு மெல்ல புத்தியை அந்த செய்தி அடைய அலறித் துடித்து அழத் தொடங்கினாள்.
நிர்மலா அழுது கொண்டிருக்க ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து நின்ற நரேன் வேகமாய் தண்ணீர் எடுத்து சசிகலாவின் முகத்தில் தெளித்து அவர் மயக்கத்தைத் தெளிவிக்க அவர் கதறத் தொடங்கினார்.
“சாதனா, இது அழறதுக்கான நேரமில்லை… நாம உடனே திருச்சூர் போயாகணும்… கிளம்பு…” அவசரப்படுத்தினான்.
“நானும் வரேன்… என் பொண்ணைப் பார்க்கணும்…” என்று சசிகலா அடம் பிடிக்க அனைவரும் டாக்ஸியில் கிளம்பினர். போகும் வழியெல்லாம் அழுகையும் புலம்பலுமாகவே கழிய அரசு மருத்துவமனையில் ICU அறையில் படுக்க வைக்கப் பட்டு முன்னில் காவலுக்கு கான்ஸ்டபிளும் இருக்க, சஹாவின் குடும்பத்தினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர்களைப் பரிதாபமாய் பார்த்தார் அந்த காக்கி சட்டைக்காரர்.
“டாக்டர் யாரையும் உள்ளே விடக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்… டாக்டரைப் பார்த்திட்டு வந்திருங்க…” அவர் சொல்லவும் டாக்டரைத் தேடி ஓடினர் நரேனும், சாதனாவும். கண்ணாடிக் கதவின் வழியே மகளைப் பார்க்க முயன்ற சசிகலா ஏதேதோ உபகரணங்களின் உதவியால் உயிருள்ள சடலமாய் அடையாளம் தொலைந்து போய் கிடந்தவளைக் கண்டு கதறத் தொடங்கினார்.
டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்த சாதனா அழுகையை அடக்க முடியாமல் தேம்பி அழத் தொடங்க நரேன் சமாதானப் படுத்தினான்.
“சாதனா, நீதான் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லணும்… நீயும் இப்படி அழுதிட்டு இருந்தா எப்படி…”
“எ..எப்படி நரேன்… அவளை இவ்ளோ சித்திரவதை பண்ணி இருக்காங்க… அவ யாருக்கு என்ன துரோகம் பண்ணினா… பொண்ணாப் பிறக்கறதே பாவம்னு தோணுது… ஐயோ, சஹா… நான் என்ன பண்ணுவேன்… அம்மாகிட்ட இதை எப்படி சொல்லுவேன்…” நரேனின் மனமும் டாக்டரின் வார்த்தைகளில் கதறிக் கொண்டிருக்க அவளது வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்தன.
“ரெண்டு நாள் முழுசும் நாலஞ்சு பேர் விடாம அவளை மாறி மாறி… ஐயோ நினைக்கவே பதறுதே… எத்தனை வலியை அனுபவிச்சாளோ… இதுக்கு அவளை அந்தப் பாவிங்க கொன்னே போட்டிருக்கலாமே…” அவளது புலம்பல் நரேனையும் கலங்க வைக்க தோளோடு அவளை சேர்த்துக் கொண்டு சிறிது நேரம் அழ விட்டவன் மௌனமாய் மனதுக்குள் அழுது கொண்டிருந்தான்.
இந்த உலகத்தில் பிறந்த குழந்தை முதல் சாகப் போகும் கிழவி வரை ஒவ்வொரு நிமிடமும் மானத்தைக் காத்துக் கொள்ளப் போராடும் அவலத்தை நினைத்து வெறுப்பாய் வந்தது. அப்படி என்ன வக்கிரம் ஆண்களுக்குள்… ஒரு பூவாய் மணம் வீச வேண்டியவளை இப்படி கசக்கிக் குப்பையில் போடுவதால் அப்படியென்ன பெரிய சந்தோசம் கிடைத்துவிடப் போகிறது… தானும் அந்த ஆண் வர்க்கத்தில் பிறந்தவன் என்பதையே அந்த நிமிடம் வெறுத்து நின்றான்.
“பாலியல் வன்கொடுமைக்கு மற்ற நாட்டில் கிடைக்கும் தண்டனையைப் போல் நம் நாட்டில் கிடைக்கும் தண்டனை குறைவாக இருக்கப் போய்தானே இப்படி சர்வ சாதாரணமாய் மனிதப் போர்வைக்குள் இந்த சாத்தான்களால் உலாவ முடிகிறது. இதற்குக் கிடைக்கும் தண்டனையில் முதலில் மாற்றம் வர வேண்டும்…” மனம் கொதித்துக் கிடந்தது.
அடுத்த நாள் செய்தித்தாளில் திருச்சூரில் படு பயங்கரம்… இளம்பெண்ணை 5 பேர் 2 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்… என்ற தலைப்பில் பெயர் இல்லாமல் செய்தி வெளியானது. உதடு, முகமெல்லாம் காயத்துடன் குற்றுயிரும் குறை உயிருமாய் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து பேரைப் பற்றி போலீஸ் விசாரித்து வருவதாகவும் கூறி இருந்தனர்.
இவை எதையும் அறியாமல் மூன்று நாட்கள் மயக்கத்திலேயே கிடந்தாள் சஹானா. மூன்றாவது நாள் உயிருக்கு ஆபத்தில்லையென்று நார்மல் வார்டில் தனி அறைக்கு மாற்றியிருந்தனர். நிஷாந்தியும் நிர்மலாவும் பாலக்காடு சென்று மாற்று உடைகளை எடுத்து வர நரேன் அவர்களுக்கு உதவியாய் அங்கேயே இருந்தான்.
சசிகலா அழுதழுது கண்களில் கண்ணீர் வற்றிப் போயிருக்க அவ்வப்போது மகளை நினைப்பதும் கண் கலங்குவதுமாய் இருந்தார். சாதனா அன்னையின் முன் அழாமல் காட்டிக் கொண்டாலும் தனிமையில் நரேனிடம் நிறைய அழுதாள். முழுமையாய் மூன்று நாட்கள் முடிந்த பிறகு சஹானா கண் விழித்தாள்.
அவளைச் சுற்றிலும் அனைவரும் கண்ணீருடன் நிற்க அவர்கள் யாரையும் பார்க்காமல் எங்கோ வெறித்தபடி கிடந்தாள். அழுகையோ கதறலோ எதுவுமே இல்லை. அதைக் கண்டு பயந்து போன சசிகலா பெரிதாய் அழத் தொடங்க அவர் பக்கம் திரும்பக் கூட செய்யாமல் அதே வெறித்த பார்வையுடன் கிடந்தாள். “அவளுக்கு நடந்தது மிகப் பெரிய கொடுமை எனும்போது அவள் தங்களைக் கண்டு எப்படித் துடிக்கப் போகிறாளோ… கதறி அழப் போகிறாளோ…” என்று சாதனா பயந்திருக்க அது எதுவும் இல்லாமல் யாரையும் கவனிக்காமல் ஏதோ ஒரு உலகத்தில் இருந்தவளைக் கண்டு அதிர்ச்சியுடன் நோக்கினாள்.
“சஹா, ஏய்… இங்க பாருடி…” அவளைத் தொட்டு உலுக்க அப்போதும் பார்வையைத் திருப்பவே இல்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு “இப்போது டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்…” என்றுவிட்டு செல்ல போலீஸார் அவளிடம் விசாரிக்க வந்தபோதும் அதே மௌனம் மட்டுமே.
அதைக் காணக் காணப் பதறியது சாதனாவுக்கு. எத்தனையோ முயன்றும் அவளை அழ வைக்கவோ எதற்கும் ரியாக்ட் செய்ய வைக்கவோ முடியவில்லை. அன்று இரவு அவள் உறக்கத்தில் ஏதேதோ அனத்திக் கொண்டு மெல்ல முனகினாள்.
“டேய், என்னை ஏண்டா இப்படி சித்திரவதை பண்ணறீங்க… பேசாம என்னைக் கொன்னுடுங்கடா, பாவிங்களா… ஐயோ வலிக்குதே… இப்பதான்டா ஒருத்தன் வந்தான்… வேண்டாம் விட்டிரு… ஆ வலிக்குதே… நோ…” என்று சத்தமாய் அலறியவளின் உடம்பு கட்டிலில் தூக்கிப் போட கை, கால்கள் இழுத்துக் கொண்டு, பற்கள் நாக்கைப் பதம் பார்க்க உதடு ஒரு பக்கம் கோணிக் கொண்டு வாயில் நுரை தள்ள, கண்கள் செருகி முதன்முறையாய் பிட்ஸ் வந்தவளை அவளது அலறலைக் கேட்டு அருகே வந்த சசிகலாவும் சாதனாவும் அதிர்ச்சியுடன் நோக்கி நின்றனர்.
சாதனா சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நிதின் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “நோ… போதும்…” என்று கத்திக் கொண்டே உணர்ச்சி வேகத்தில் உடலெங்கும் நரம்புகள் புடைக்க கோபமும் வேதனையுமாய் எழுந்து நின்றவன் சுற்றுப்புறம் மறந்து அழத் தொடங்கினான். சுற்றிலும் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தது எதுவும் அவன் கவனித்திலேயே வரவில்லை.
“ஐயோ என் செல்லமே… உனக்கு இத்தனை கொடுமையா… உடம்பில் அமர்ந்து ரத்தம் உறிஞ்சும் கொசுவைக் கூடக் கொல்லாமல் தட்டித் தானே விடுவாய்… உனக்கு இப்படி ஒரு கொடுமை நடக்க அந்த ஆண்டவன் எப்படி சம்மதித்தான்… ஒவ்வொரு நிமிடமும் நரகத்தை உணர்ந்து கொண்டு  எத்தனை வலிகளைத் தாங்கி இருப்பாய்… இது எதுவும் புரியாமல் நீ என்னை மறந்து சென்று விட்டாயோ… என்று மடத் தனமாய் யோசித்துக் கொண்டிருந்தேனே…” ஏதேதோ புலம்பியபடி அழுது கொண்டிருந்தவனைக் காண அவளுக்கு வருத்தமாய் இருந்தது.
பழைய நினைவுகளின் தாக்கத்தில் அவளும் மௌனமாய் அழத்தான் செய்தாள். சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள், “நிதின்… இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா தாங்கிக்க முடியாதுன்னு தான் சொல்ல வேண்டாம்னு நினைச்சோம்… ஆனா, நீங்க காரணம் தெரியாம ரொம்பத் தவிச்சுப் போறிங்களேன்னு தான் சொல்ல வேண்டியதாப் போயிருச்சு… ப்ளீஸ்… கண்ட்ரோல் யுவர்செல்ப்…” என்று சமாதானப்படுத்த முயன்றாள்.
“சாதனா, ப்ளீஸ்… எனக்கு இப்பவே என் சஹியைப் பார்க்கணும்… அவ எங்கிருக்கா…” கண்ணைத் துடைத்துக் கொண்டவன் எழுந்து தவிப்புடன் பரபரத்தான்.
“நிதின்… அவளுக்கு நேத்து நைட் பிட்ஸ் வந்து இந்த ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணிருக்கோம்…” வேதனையோடு அவள் கூற, “ஓ மை காட்…” என்று தலையில் கை வைத்தவன், “ப்ளீஸ் வாங்க…” என்று வேகமாய் எழுந்து நடக்க, காபிக்கான பில்லை சாதனா கொடுத்துவிட்டு ரோட்டைக் கிராஸ் பண்ணி வருவதற்குள் நிதின் ஹாஸ்பிடலில் நுழைந்திருந்தான். ஓட்டமாய் அவனைத் தொடர்ந்து வந்தாள் சாதனா. இருவரும் சஹாவின் அறைக்குள் நுழையும்போதும் அவள் மயக்கத்திலேயே இருந்தாள்.
“நிதின், அவளை எழுப்பிட வேண்டாம்…” சாதனா வேகமாய் சொல்ல, அவள் அருகில் சென்றவன் வாடிய மலராய் கிடந்தவளின் கையை எடுத்து நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு மௌனமாய் கண்ணீர் விட்டான். சசிகலாவும், சாதனாவும் கண்ணீர் மல்க அதைப் பார்த்து நின்றனர்.
மௌனமாய் கழிந்த நிமிடங்களை ஸ்ரீக்குட்டியின் சிணுங்கல் கலைத்துவிட சசிகலா தோளில் போட்டு சமாதானப்படுத்த முயல நிதினின் கவனம் அவள் மீது விழுந்தது.
“இந்தக் குழந்தை சஹாவோடதுன்னு சொன்னாளே…” என்ற யோசனையுடன் சாதனாவைப் பார்க்க தலையாட்டியவள், “வாங்க நிதின்… மீதியையும் சொல்லி முடிச்சிடறேன்…” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு அறைக்கு வெளியே செல்ல அவனும் அனிச்சையாய் மீதியை அறிந்து கொள்ள வேண்டி பின் தொடர்ந்தான்.
“சஹாவுக்கு அந்த கொடுமை நடந்து ஒரு மாசம் வரை ஹாஸ்பிடலில் தான் இருந்தோம்… ஆனா அவகிட்ட எந்த உணர்ச்சிகளும் இல்லை… சாப்பிட மாட்டா, தூங்க மாட்டா… எப்பவும் எங்கயோ வெறிச்ச ஒரு பார்வை மட்டும் தான்…”
“நாங்க ஊட்டி விட்டாலும் இறக்காம வாயிலயே வச்சிருப்பா… உடம்பு ரொம்ப வீக்காகி அடிக்கடி டிரிப்ஸ் ஏத்த வேண்டி வந்துச்சு… அவளுக்கு அந்த சம்பவத்தோட அதிர்ச்சியிலும், பயத்திலும் மனநிலை பாதிக்கப் பட்டிருக்கலாம்னு டாக்டர் சொன்னாங்க… அதுக்காக அங்கே திருச்சூர்ல உள்ள ஒரு மனநல காப்பகத்துல சேர்த்தோம்… நாங்க எப்பவும் அவ பக்கத்துல இருக்கணும்னு எங்களுக்கு ஒரு நண்பர் மூலமா நரேன் வீடு எடுத்துக் கொடுத்தார்…”
“தினமும் சஹாவுக்கு கவுன்சிலிங் பண்ணினாங்க… சைக்கோதெரபி ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க… இப்படியே மூணு மாசம் முடிஞ்ச சமயத்துல தான் எங்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்துச்சு…” சொன்னவள் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தொடர்ந்தாள்.
“அந்த அஞ்சு பேரில் எவனோட வித்தோ சஹா வயித்துல கருவா உருவாகி இருக்குன்னு டாக்டர் சொன்னப்போ நாங்க இடிஞ்சு போயிட்டோம்… மனநிலை சரியில்லாம இருந்த அவளுக்கு இந்தக் குழந்தை வேண்டாம்னு முடிவு பண்ணி அபார்ஷன் பண்ணவும் சொன்னோம்… ஆனா, அப்போதான் அடுத்த அதிர்ச்சியை எங்களுக்கு டாக்டர் சொன்னார்…”
நிதின் விக்கித்துப் போன விழிகளுடன் கண்ணில் நீர் தளும்ப “ம்ம்…” கூட சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அவ உடம்பும் மனசும், மட்டுமில்ல… கர்ப்ப பாத்திரமும் ரொம்ப வீக்கா இருக்கு… இப்ப குழந்தையைக் கலைச்சா அது அவ உயிருக்கே ஆபத்தா முடியலாம்னும், ஒருவேளை பிரசவ நேரத்துல இவ மனநிலை சரியாக சான்ஸ் இருக்கும்னும்  சொன்னார்… வேற வழியில்லாம நாங்களும் குழந்தை இருக்கட்டும்னு முடிவு பண்ணோம்… குழந்தை வளரத் தொடங்கின பின்னாடி அவகிட்ட சின்னதா மாற்றம் தெரிஞ்சுச்சு… சாப்பிடக் கொடுத்தா சாப்பிட்டா… தூக்க மாத்திரைல தூங்கறவ தானாவே தூங்கத் தொடங்கினா…”
“டெலிவரி டைம்ல அவளுக்கு கொஞ்ச கொஞ்சமா எல்லாம் நினைவு வந்திருச்சு… அன்னைக்கு அவ கதறினது இப்பவும் என் காதுலயே இருக்கு… அந்தக் குழந்தையைப் பார்க்கவே அருவருப்பா உணர்ந்தா… பால் கொடுக்கவே மாட்டேன்னு வெறி பிடிச்ச போல கத்தினா… பிரசவம் ஆன உடம்பு… ரொம்ப வற்புறுத்த வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க… ஸ்ரீக்குட்டியைப் பாக்குற போதெல்லாம் அவளுக்கு அந்த கொடுமை நினைவு வரும் போலருக்கு… அவளைக் கண்டாலே அவ்ளோ கோபமா கத்துவா… ஒருதடவ அம்மா குழந்தை பாவம்… அது என்ன பண்ணுச்சு… அதை ஏன் வெறுக்கறேன்னு கேட்டதுக்கு அதைக் கொல்லவே போயிட்டா…” அவள் சொல்ல சொல்ல அவனது அதிர்ச்சியும் வலியும் அதிகமாகிக் கொண்டே சென்றது.    
“அதுக்குப் பிறகு நான் என் குழந்தையா அவளை வளர்த்துக்கறேன்… நீ எதுவும் பண்ண வேண்டாம்னு சொன்ன பிறகு தான் கொஞ்சம் அமைதியானா… இப்பவும் குழந்தை அழுதாக் கூட அவளுக்கு அவ்ளோ கோபம் வரும்…”
“அவ மனசுல அந்த சம்பவத்தோட மிச்சமாய் தான் இந்தக் குழந்தை இருக்கு… அதை அவளால ஏத்துக்க முடியல…” சொல்லி நிறுத்தியவள் அவனையே பார்க்க மனதில் உள்ள உணர்வுக் குவியல்களில் பேச வார்த்தைகள் தேடி கோபமும், கண்ணீருமாய் நின்றிருந்தான் நிதின். அவனால் ஒன்றாக இத்தனையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கழுத்து நரம்புகள் புடைக்க, “அந்தப்பாவிங்க யாருன்னு போலீஸ் கண்டு பிடிச்சாங்களா…” என்றான் ஆத்திரத்துடன்.
“சஹாகிட்ட இருந்து போலீசுக்கு யாரு, என்னன்னு எந்த விவரமும் கிடைக்காததால போலீஸால கண்டு பிடிக்க முடியலை… அவங்களும் கொஞ்ச நாள் டிரை பண்ணிட்டு கேஸை மூடிட்டாங்க…” என்றவள் நிறுத்தினாள்.
“ஆனா, இதெல்லாம் ஆகாஷோட பிளான் தான்னு ஸ்ரீக்குட்டி பிறந்த பின்னாடி தான் எங்களுக்குத் தெரிஞ்சது…”
“என்ன சொல்லறீங்க, அவன் லண்டன்ல…”
“ம்ம்… அவன் முதல்ல இந்தக் கொடுமையை எனக்குப் பண்ண தான் நினைச்சிருக்கான்… ஆனா, எனக்கோ நிர்மலாவுக்கோ பிரச்சனை கொடுத்தா போலீஸ் அவனை சந்தேகப்பட்டு ஈஸியா மாட்டிக்குவான்னு நினைச்சு என்னோட பிறந்த பாவத்துக்கு சஹாவுக்கு தண்டனையைக் கொடுத்துட்டான்…” கண்களில் நிறைந்த கண்ணீரும் மனம் நிறைந்த வலியுமாய் சொன்னவளிடம், “உங்களுக்கு எப்படி இது தெரிஞ்சது…” என்றான் கோபத்தை அடக்கிக் கொண்டு.
“ஆகாஷ் எனக்கு போன் பண்ணான்…” என்றவள், “அவன் என்னைப் பழிவாங்க சமயம் பார்த்திட்டு இருக்கும்போது நானும் சஹாவும் இரட்டைங்கன்னு தெரிஞ்சுகிட்டான்… ஏதோ ஒரு நிர்மலாவைத் தொட்டதுக்கு அவ்ளோ துடிச்சியே, இப்ப உன்னை ஒட்டிட்டுப் பிறந்தவளையே நான் ஏற்பாடு பண்ணின நாலஞ்சு பேர் தொட்டிருக்காங்க… உங்க குடும்பத்துல ஒரு வாரிசை வேற கொடுத்திருக்காங்க… அதுக்கு என்ன பண்ணப் போறேன்னு போன் பண்ணி என்கிட்டயே கேக்கறான்…” கண்களில் கோபம் மின்ன பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்.
“ஆனா, அவங்க தான் பண்ணாங்கன்னு நிரூபிக்க நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை… என்னால என் கூடப் பிறந்த பாவத்துக்கு அவ வாழ்க்கை இப்படி ஆயிருச்சேன்னு நான் அழுவாத நாளில்லை…” அவள் கண்களைத் துடைத்துக் கொள்ள அவன் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான். மனதுக்குள் கோபமும் வலியும் ஆற்றாமையும் கலந்து பொங்கிக் கொண்டிருந்தது.  
“எத்தனை கனவுகளும் ஆசைகளும் சுமந்திருந்த ஒருத்தியை இப்படி கண்ணில் ஈரமே இல்லாமல் சிதைத்த அந்த பாவிகளுக்கு தண்டனை கொடுக்காமல் அப்படியே விடுவதா… என்ன கொடுமை இது… மனிதர்களால் தண்டிக்க முடியாவிட்டால் என்ன… கடவுளுக்குமா, கருணை இல்லாமல் போய்விட்டது…” வாய்விட்டு அவன் புலம்பிக் கொண்டிருக்க சாதனா தொடர்ந்தாள்.
“ஒரு வருஷம் பித்து பிடிச்ச போல இருந்தவ ட்ரீட்மென்ட்ல குணமாக்கிக் கொண்டு வந்தோம்… சும்மா இருக்க விடாம பாங்கு எக்ஸாம் எழுத சொன்னோம்… கடவுளுக்கு என்ன கருணை தோணுச்சோ… ஆல்ரெடி அவ பேரு லிஸ்ட்ல இருந்ததால அசிஸ்டன்ட் மானேஜரா போஸ்டிங் போட்டு வேலைக்கு அழைப்பும் வந்துச்சு… வெளி உலகத்துக்கு முகம் காட்டாம ஒரு நத்தையா சுருண்டு கிடந்தவளை ஒருவழியா சம்மதிக்க வச்சு வேலையில் சேர வச்சோம்… மெதுவா இயல்புக்குத் திரும்பத் தொடங்கினா…” அவள் சொல்லி நிறுத்தவும் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், “பூஜைல பூமாலையா இருக்க வேண்டியவளை இப்படி சீரழிச்ச அந்த ஆகாஷை சும்மா விடக் கூடாது… இப்ப அவன் எங்கிருக்கான்…” என்றான் ஆத்திரத்துடன்.
“இப்பவும் அவன் லண்டன்ல தான் இருக்கான்…” அவள் கூறவும், மனதுக்குள் பொங்கிய கோபத்தில் அமைதியானான்.
“நிதின்… சஹா உங்களைத் தேடி வராம விலகிப் போனதுக்கான காரணம் இதுதான்… இதுக்கு மேலயும் நீங்க அவளை…” தொடரப் போனவளைக் கை காட்டி “போதும்…” என்று நிறுத்தியவன் எதுவும் பேசாமல் கண்ணைத் துடைத்துக் கொண்டு சட்டென்று கிளம்பி விட்டான். அவனது உணர்ச்சியில் கலங்கிய மனநிலை புரிய தெளிந்து வரட்டும் என்று நினைத்த சாதனா அமைதியாய் நின்றாள்.
சட்டங்கள் வெறும் ஏட்டில்
என்றால் சமுதாயமும்
சுய ஒழுக்கமும் சீர்கேட்டில்…
பெண்களை வெறும் போகமாய்
நினைக்கும் ஆண்களெல்லாம்
வெட்கப்பட வேண்டும்
நீ ஒரு பெண்ணின்
வயிற்றில் பிறந்தமைக்கு…
வேதனை கொள்வாள் உன்
தாயே – உன்னை ஈன்றமைக்கு…

Advertisement