Advertisement

அத்தியாயம் – 14
அலைபேசியை ஆவலுடன் எடுத்து காதுக்குக் கொடுத்த நிதின் “ஹலோ…” எனவும், எதிர்ப்புறத்தில் இருந்து “யார் பேசறீங்க…” என்றாள் சாதனா.
“சஹி, நான்…” அவன் தொடங்கவுமே புரிந்து கொண்டவள், “நிதினா…” என்றாள். அவளது கேள்வியிலேயே அழைத்தது சஹானா அல்ல எனத் தெரிய, “நீங்க சாதனாவா…” என்று கேட்டான்.
“ம்ம்… எதுக்கு கால் பண்ணீங்க நிதின்…”
“அதுவந்து… சஹி இன்னைக்கு லீவ்னு கேள்விப்பட்டேன்… அதான் உடம்புக்கு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு கூப்பிட்டேன்…” அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள், “அவ தூங்கறா… கொஞ்ச நாளைக்கு நீங்க கால் பண்ண வேண்டாமே ப்ளீஸ்…” எனவும் அவனுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது.
“ச…சாரி… லீவாச்சே… உடம்புக்கு முடியலையோனு பயந்து தான் கால் பண்ணேன்… தொந்தரவு பண்ணியிருந்தா சாரி…”
அவனது குரலில் வழிந்த வலியும் கவலையும் அவளுக்குத் தெரிய எப்படி அவனுக்கு புரிய வைப்பதென்று யோசித்தாள்.
“சாரி நிதின், உங்களை ஹர்ட் பண்ணனும்னு இப்படி சொல்லலை… இப்போதைக்கு அவகிட்ட பேச நீங்க எந்த முயற்சி எடுத்துகிட்டாலும் அவளுக்கு நல்லதில்லை… அதான் சொன்னேன்…” எனவும் குழம்பினான்.
“ஏன் நான் பேசினா என்ன பிராப்ளம்… அவளுக்கு என்னதான் பிரச்சனை… வேற யாரோடவும் நிச்சயம் ஆகிருச்சா, இல்ல கல்யாணமே முடிஞ்சிருச்சா… ஏன் என்னைப் பார்க்கக் கூடாதுன்னு நினைக்கறா… ப்ளீஸ், எதுவா இருந்தாலும் சொல்லுங்க… இவ்ளோ நாள் அவளைப் பார்க்காம இருந்ததைக் கூட பொறுத்துகிட்டேன்… ஆனா, பார்த்தும் அவளோட பேசாம இருக்கறது ரொம்பப் பெரிய கொடுமையா இருக்கு…” வேதனையுடன் வார்த்தைகளை விட்டான்.
அவன் சஹானாவின் மீது கொண்டுள்ள அன்பை நினைத்து மனம் நெகிழ்ந்தாலும் அவளால் எதையும் சொல்ல முடியவில்லை.
“நிதின், உங்க பீலிங் எனக்குப் புரியாம இல்லை… ஆனா இப்ப எதையும் சொல்லுற சூழ்நிலைல நாங்க இல்லை… கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க… ப்ளீஸ்…” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தாள். மனம் சஹாவுக்காகத் துடித்தது.
“கடவுளே… எப்பேர்ப்பட்ட அன்பை என் சஹா இழந்திருக்கா… அவளோட துன்பங்களுக்கு எல்லாம் ஒரு விடியலை நீதான் காட்டணும்…” சஹா அப்போதும் உறங்கிக் கொண்டிருக்க அறைக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்து உள்ளே செல்ல சசிகலா அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். “போன்ல நிதினா…” அவர் கேள்விக்கு இவள் தலையாட்டவும் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவர் மனமும் கனத்திருந்தது.
கண் மூடி சுயம் அறியாமல் உறங்கிக் கொண்டிருந்த மகளின் தலையைக் கோதி விட்டவர் கண்கள் அனிச்சையாய் கலங்கி நிற்க மௌனமும் கனத்துக் கிடந்தது.
சஹாவின் மொத்த வலியின் உருவமாய் சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை நோக்கிக் கொண்டே அன்னையின் அருகில் வந்து அமர்ந்தாள் சாதனா.
“அம்மா, கவலைகள் எப்பவும் பிரச்சனையைக் குறைக்காது… அது நம்ம நிம்மதியைத் தான் குறைக்கும்… பிரச்சனையை எப்படிக் கடக்கறதுன்னு தான் நாம் யோசிக்கணும்…” மகளின் வார்த்தையைக் கேட்டு நிமிர்ந்த சசிகலா, “ஆனா, இவ பிரச்சனையை எப்படித் தீர்க்கறதுன்னு எனக்குப் புரியலையே மா…” என்று சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது.
“இவ்ளோ நாள் எந்த நம்பிக்கையும் இல்லாம இருந்த நமக்கு இப்போ ஒரு வழி கிடைச்சிருக்கு மா… நிதின் இவ மேல வச்சிருக்கிற காதல் உண்மையா இருந்தா அந்த நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்…” என்றாள் உறுதியாக.
“ம்ம்… அந்தப் பிள்ளை கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு இவ சொல்லிட்டாளே…”
“ஒரு நல்லது நடக்கும்னா அதுக்காக அவ சொன்னதை மீறினாத் தப்பில்லைன்னு எனக்குத் தோணுது…”
“ம்ம்… நடந்ததெல்லாம் தெரிஞ்சா அந்தப் பிள்ளையால தாங்கிக்க முடியுமா… இப்ப இவ மேல இருக்கிற பிரியம் அப்பவும் இருக்குமா…”
“எதுவா இருந்தாலும் நல்லது தான் மா… பிரியம் இருந்தா நிதின் இவ வாழ்க்கைல வருவார்… இல்லேன்னா இவ கண்ணுல படாம விலகியாச்சும் இருப்பார்… அவர்கிட்ட சொல்லிடறது தான் நல்லதுன்னு எனக்குத் தோணுது…” அவள் யோசனையுடன் கூற, அதுதான் சரி என்பது போல் சசிகலாவும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.  “நான் நரேன்க்கு ஒரு போன் பண்ணிட்டு வரேன்மா…” சொன்ன சாதனா எழுந்து வெளியே செல்ல கவலையுடன் சஹாவையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த அன்னை.
நரேனுடன் பேசி முடித்தவள் யோசித்தாள். நரேன் சஹா பற்றிய விஷயங்களை நிதினிடம் கூறிவிடும்படி கூறினான். அவளுக்கு சொல்ல கஷ்டமாய் இருந்தால் தான் நிதினிடம் பேசுவதாகக் கூறினான். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் அந்த வார்டுக்குள் கவலையுடன் நுழைந்த நிதினைக் கண்டதும் திகைத்தாள்.
“இவன் எப்படி இங்கே… யார் சொல்லியிருப்பார்கள்…” யோசிக்கும்போதே அவளைப் பார்த்துவிட்டவன் புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள அவளிடம் வந்தான்.
“சா…சாதனா… நீங்க என்ன இங்க… சஹிக்கு எதுவும் பிரச்சனை இல்லையே…” என்றான் பதட்டத்துடன். பதில் சொல்லாமல் அவள் மௌனமாய் இருக்க, “என்னங்க… என்னன்னு சொல்லுங்க…” என்றான் மீண்டும். “நீங்க எப்படி இங்கே… யாரைப் பார்க்க வந்தீங்க…” திருப்பி கேட்டாள்.
“கம்பெனில ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம இங்க சேர்ந்திருக்காங்க… பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்…”
“ஓ…” என்றவள், “சஹி இங்கே இருப்பது தெரிந்தால் அவனிடம் இத்தனை நிதானம் இருக்காதே…” என மனதுள் நினைக்க அவன் அவள் பதிலுக்காய் பார்த்திருந்தான்.
“என்னங்க, எதுமே சொல்ல மாட்டேங்கறிங்க… அப்படி என்னதான் பிரச்சனை… எனக்கு தலையே வெடிச்சிடும் போலருக்கு, ப்ளீஸ் சொல்லுங்க… சஹி இங்க இருக்காளா…”
அவனை அதற்கு மேலும் தவிக்க விட மனமில்லாமல் ஏறிட்டுப் பார்க்க அந்த முகத்தில் கரையில்லா சோகமும், என்னவென்று அறியா குழப்பமும் அப்பிக் கிடந்தது.
“நிதின்… சஹா நீங்க நினைக்கற போல உங்களை வெறுத்தோ, பிடிக்காமலோ விலகிப் போகல… அதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்கு…”
“அதான் என்ன காரணம்னு கேக்கறேன்… என்கிட்ட எதையும் மறைக்காதிங்க… அவளுக்கு உடம்புல எதுவும் பிரச்சனையா… எதுவா இருந்தாலும் சொல்லுங்க…”
“ம்ம்… நாம எங்காச்சும் தனியாப் போயி பேசலாமா…” அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிதினுக்கு பீதியைக் கிளப்பினாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டான்.
“முன்னாடி ரெஸ்டாரன்ட் இருக்கு… இந்நேரத்துக்கு கூட்டம் இருக்காது… அங்கே போகலாம்…” 
“ம்ம்…” என்றவள், அன்னையின் அலைபேசிக்கு அழைத்து நிதினிடம் பேசப் போவதாகச் சொல்ல, “ம்ம், பக்குவமா சொல்லுமா… பாவம் அந்தப் பிள்ளை இதெல்லாம் கேட்டா எப்படித் தாங்கிக்கப் போவுதோ…” என்றார் கவலையுடன்.
“ம்ம்… நான் பார்த்துக்கறேன் மா…” என்றவள் நிதினுடன் நடந்தாள். இருவரும் ரெஸ்டாரண்டில் நுழைந்து எதிரெதிர் நாற்காலியில் அமரும் வரை எதையும் பேசவில்லை.
“அவள் என்ன சொல்லப் போகிறாளோ…” என திகிலுடன் நிதின் காத்திருக்க, அவனுக்கு எங்கிருந்து தொடங்கிப் புரிய வைப்பது என்ற யோசனையுடன் அவள் இருந்தாள்.
பேருக்கு ஆர்டர் கொடுத்த காபியும் வந்துவிட குடித்து முடிக்கும் வரை மௌனமே தொடர்ந்தது.
“நிதின்… நான் இப்ப சொல்லப் போறதைக் கேட்டு நீங்க அதிர்ச்சி அடையலாம்… உங்களால் எப்படித் தாங்கிக்க முடியுமோன்னு பயமா கூட இருக்கு…” அவள் சொல்லும்போதே அவன் கண்களில் கேள்வியும் பயமும் நிறைந்திருக்க, “ப..பரவால்ல சொல்லுங்க…” என்றான்.
ஒரு நிமிடம் குனிந்திருந்த சாதனா நிமிர்ந்தபோது உணர்ச்சி வேகத்தில் கண்கள் சிவந்து கலங்கத் தொடங்கியிருந்தன.
“சஹா இப்ப விர்ஜின் இல்ல, ஸ்ரீக்குட்டி அவ குழந்தைதான்…” முதல் வார்த்தையே அவன் தலையில் இடியாய் விழவும் அதிர்ந்தவன் அதை கிரகித்துக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான்.
“எ..என்ன… என் சஹிக்கு, ப்ச் சாரி… சஹிக்கு கல்யாணம் ஆயிருச்சா, ஒருவேளை அவ கணவருக்கு ஏதாச்சும்…”     அவனது கேள்வியில் திகைத்தவள், அப்போதும் நிதின் நல்ல விதமாகவே யோசிப்பதைக் கண்டு வியந்தாள்.
“இல்ல நிதின்… அவளுக்கு கல்யாணமே ஆகலை…” எனவும் உச்சபட்சமாய் அதிர்ந்தவன், “எ..என்ன சொல்லறீங்க சாதனா…” என்று பதட்டத்துடன் கேட்க, “சொல்லறேன்…” என்றவள் ஆகாஷைப் பற்றி, அவனால் நடந்த பிரச்சனைகளைப் பற்றி சுருக்கமாய் கூற அமைதியாய் கேட்டுக் கொண்டான்.
“நல்ல விஷயம் தானே சாதனா… இந்த மாதிரி பொறுக்கிங்களை எல்லாம் உடனே தட்டி வைக்கணும்.. இல்லேன்னா பின்னாடி பெரிய பிரச்னை ஆயிரும்…”
“ம்ம்… நானும் அப்படிதான் நினைச்சேன் நிதின்… அவன் மேல போலீஸ்ல கம்ப்ளெயின்ட் கொடுத்ததால லாக்கப்புல வச்சு நல்லா கவனிச்சு அனுப்பினாங்க… பணத்தை வச்சு வெளியே வந்தவனை அந்தக் காலேஜ்ல தொடர நிர்வாகம் அனுமதிக்கல… TC வாங்கிட்டுப் போயிட்டான்…”
“வெளியே வந்தவன் ஏதாச்சும் பண்ணிடுவானோன்னு நாங்க கொஞ்சம் பயத்துல தான் இருந்தோம்… ஆனா, அவன் ஏதும் பண்ணல… சில மாசத்துக்குப் பிறகு அவன் அப்பா அவனைப் படிக்க லண்டன் அனுப்பி வச்சிட்டதா கேள்விப்பட்டோம்… அதைக் கேட்டப்போ ரொம்ப நிம்மதியாக் கூட இருந்துச்சு… ஆனா, அதெல்லாமே அவனோட பிளான்னு அப்ப எங்களுக்குத் தெரியல…” அவள் சொல்ல சொல்ல அவனுக்கு BP எகிறிக் கொண்டே இருக்க அவள் தொடர்ந்தாள்.
“சரி, இ…இதுல சஹி எப்படி வந்தா…” என்றான் பயத்துடன்.
“எல்லாம் என்னால தான்… இந்தப் பாவியால தான்… ஒரு பொண்ணுக்கு எதிரா நடக்குற கொடுமையைப் பொறுத்துக்க முடியாம கோபத்துல ஆம்பளைன்னும் பார்க்காம நான் அவனைக் கை நீட்டி அடிச்சுட்டேன்… அதுக்கான பலனை என் சஹா அனுபவிச்சிட்டு இருக்கா…” தலையில் அடித்துக் கொண்டே கண்ணீருடன் சொல்ல அவளது குரல் உயர்ந்ததில் அடுத்த மேசையில் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர்.
நிதின் மனதும் ஏதேதோ காரணங்களை நினைத்து குழப்பத்தில் தவிக்க அவள் சொல்லத் தொடங்கினாள்.
“பேங்க் எக்ஸாம் முடிஞ்சு அடுத்தநாள் விடியகாலைல கோயம்பத்தூருக்கு சஹா கிளம்பினா…” தொடர்ந்தாள்.
“மம்மி… நான் கிளம்பறேன்…” அதிகாலையில் குளித்து புத்தம் புது மலராய் நின்று கொண்டிருந்த மகளைக் கண்டு புன்னகைத்துக் கொண்டே ஒரு டிபன் பாக்ஸில் அவளுக்காய் ஸ்பெஷலாய் செய்த சப்பாத்தி ரோலை நீட்ட, “தேங்க்ஸ்மா…” என்று கன்னத்தில் முத்தமிட்டு வாங்கி பாகில் வைத்துக் கொண்டவளை நோக்கி முறைத்தார் சசிகலா.
“இந்த விடியக்காலைல உனக்கு கிளம்பிப் போகலைனா என்ன… இன்னைக்கு லீவ் போட்டு வீட்ல இருந்தா மதியம் உனக்குப் பிடிச்ச நெய்சாதமும், கோழிக் குழம்பும் வச்சுத் தருவேன்ல… நல்லா சாப்பிட்டு வெளிச்சமாக் கிளம்புன்னு சொன்னா கேக்கறியா…” கடிந்து கொண்ட அன்னையை நோக்கிப் புன்னகைத்தவள் மனதுள் நிதின் சிரித்தான்.
“உன்னோட சமையலை சாப்பிட்டு ஒரு நாள் என்ன, எவ்ளோ நாள் வேணும்னாலும் இங்கயே இருக்க எனக்கு ஆசை தான் மா… ஆனா, உன் மாப்பிள்ளை என்னை எப்ப வருவே, கிளம்பிட்டியான்னு கேட்டுக் குடைஞ்சிட்டு இருக்காரே…”
மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தவளின் தோளில் தட்டியவர், “என்னடி யோசிக்கற…” எனவும், “ஒண்ணுமில்லை மா… இப்ப கிளம்பினா தான் காலேஜ்க்கு போய் சேர சரியா இருக்கும்…” என்றவள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு “சது… நான் கிளம்பறேன்டி…” எனக் குரல் கொடுக்க, பாத்ரூமிலிருந்து வெளியே வந்த சாதனா, “நான் உன்னை பஸ் ஸ்டாண்டுல டிராப் பண்ண வரேன்…” என்று கூற,
“எதுக்கு, எனக்கு பாடி கார்டா நீ… ஒண்ணும் தேவையில்லை, வேணும்னா உன் ஆசைக்கு பஸ் ஸ்டாப்ல விடு… நான் டவுன் பஸ்ல பஸ் ஸ்டாண்டு போயிக்கறேன்…” எனவும் சம்மதித்து அவளது பொருட்களை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினர்.
“பத்திரமாப் போயிட்டு வாடி… அங்க போனதும் போன் பண்ணு…” சசிகலா சொல்ல தலையாட்டி கிளம்பினாள். சாதனா அவளை பேருந்து நிறுத்தத்தில் விட்டுவிட்டு அவள் டவுன் பஸ்ஸில் ஏறின பிறகே வீட்டுக்குக் கிளம்பினாள். டவுனுக்கு செல்லும் முதல் பேருந்து ஆதலால் கூட்டம் இல்லாமல் நான்கைந்து பேர் மட்டுமே இருந்தனர்.
அன்று காலை பத்து மணியாகியும் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வராததால் சசிகலா புலம்பத் தொடங்கினார்.
“இந்தப் புள்ளைக்கு எவ்ளோ சொல்லியும் விளையாட்டு தான்… போனதும் ஒரு போன் பண்ணுடின்னு சொன்னா இன்னும் பண்ணக் காணோம்…” அன்னையின் புலம்பலைக் கேட்ட சாதனா சிரித்தாள்.
“அம்மா, தொடங்கியாச்சா… போனதும் பிரண்ட்ஸ் பார்த்து பேசிட்டு மறந்திட்டு கிளாசுக்குப் போயிருப்பா… ஈவ்னிங் வந்து கூப்பிடுவா, கவலைப் படாதீங்க…” என்று சாதனா கூறினாலும் சசிகலாவின் மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு உறுத்திக் கொண்டே இருக்க, “இல்லடி, மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்…” என்று கூற, “இந்த அம்மாவைப் பத்தித் தெரிஞ்சும் இவ ஏன்தான் இப்படி போன் பண்ணாம அசால்ட்டா இருக்காளோ…” என சஹாவைப பற்றி யோசித்துக் கொண்டே வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் சாதனா.
அன்று மாலை கடந்தும் அவள் அழைக்காமல் போகவே சசிகலாவே சஹாவின் அலைபேசிக்கு அழைத்தார். அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் கூறவும் ஒரு பயம் பரவ, “என்னடி சுவிட்ச் ஆப் வருது…” என்றார் சாதனாவிடம்.
“ஒருவேளை சார்ஜ் இல்லாம போன் ஆப் ஆகிடுச்சோ… கொஞ்ச நேரம் சார்ஜ் போட்டுட்டு அவளே கூப்பிடுவா மா…” என்று அன்னைக்கு சமாதானம் சொன்னாலும் சாதனாவுக்கும் மனதில் ஒரு பயம் பரவத் தொடங்கியது. அன்னைக்குத் தெரியாமல் அவளது அலைபேசியில் இருந்து சஹாவை அழைக்க முயன்று கொண்டேயிருக்க அது கிடைக்கவே இல்லை.
சாதனா, சஹாவின் தோழிகளுக்கு அழைத்து நோக்க அவள் அன்று கல்லூரிக்கு வரவே இல்லை என்ற தகவலைக் கேட்டதும் சாதனாவுக்கு இதயம் நின்றே போய்விடும் போல இருந்தது. நேரம் இரவை நெருங்கிக் கொண்டிருக்க சசிகலா அழத் தொடங்கினார்.
நரேனுக்கு சாதனா விஷயத்தை சொல்லி இருக்க அவன் நிஷாந்தி, நிர்மலாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான். சசிகலாவை நிஷாந்தி சமாதானப்படுத்திக் கொண்டிருக்க நிர்மலாவும் சேர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“என்ன சாது, சஹா காலேஜ்க்கும் போகலை, இங்கே போனும் வரலைன்னா ஏதோ தப்பா இருக்கே… நாம உடனே போலீசுல கம்ப்ளெயின்ட் பண்ணிடலாம்…” நரேன் சொல்லிக் கொண்டிருக்க நிர்மலாவுக்கு ஆகாஷின் நினைவு வர, சாதனாவிடம் கேட்கவும் செய்தாள்.
“ஒருவேள, இதெல்லாம் அந்த ஆகாஷோட வேலையா இருக்குமோ…” என்று கூறி பீதியைக் கிளப்பினாள்.
“அவன் இப்ப லண்டன்ல இருக்கான்னு தானே சொன்னாங்க… நரேன்… நீங்க சொன்னது தான் சரி… இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம்… போலீஸ் ஸ்டேஷன் போகலாம்…”
சாதனா சொல்லவும், “ஐயோ… என் பொண்ணைக் காணோம்னு போலீஸ்ல சொன்னா ஊரெல்லாம் தெரிஞ்சிடுமே… வயசுப் பொண்ணு வேற…” சசிகலா கதற, “அம்மா, நமக்கு வேற வழி இல்ல…” என்ற நரேன் சாதனாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
போலீஸில் கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட்டு அவர்கள் ஒரு பக்கம் தேட சாதனாவும் நரேனும் தெரிந்த இடத்திலெல்லாம் சஹாவைத் தேடி இரவு முழுதும் அலைந்தனர். ஆனாலும் ரிசல்ட் என்னவோ பூச்சியமாகவே இருந்தது.
ஆகாஷ் வீட்டிலும் போலீஸ் விசாரணைக்கு செல்ல அவன் லண்டன் சென்று ஆறு மாதத்திற்கு மேலாகிவிட்டதாக வீட்டில் கூறவே அதைப் பரிசோதித்து உறுதி படுத்தியவர்கள் குளம், கிணறு, ரயில்வே தண்டவாளம், தற்கொலைக் கேஸ் என்று எதையும் விடாமல் அலசிக் கொண்டிருக்க இவர்களும் அடுத்தநாளும் விடாமல் தேடிக் கொண்டிருந்தனர்.
அந்த நாளும் அழுகையும் தேடலுமாய் கரைய அடுத்த நாள் அவர்கள் இதயத்தில் தீயை வைத்துக் கொண்டு விடிந்தது.
எல்லா விடியலும்
எல்லாருக்கும்
வெளிச்சத்தை மட்டுமே
தருவதில்லை…
இருட்டையும் சுமந்து கொண்டே
ஒவ்வொரு விடியலும் விடிகிறது…
சிலருக்கு பிரகாசமாய்…
சிலருக்கு பிரச்சனைகளாய்…
இருளும் ஒளியும்
இரட்டைப் பிள்ளைகளாகவே
பிறக்கின்றன…

Advertisement