Advertisement

அத்தியாயம் – 13
திமிறிக் கொண்டு நின்றவளை ஆகாஷ் காருக்கு தள்ளிச் செல்ல முயல்கையில் பிரகாசமாய் வெளிச்சத்தை சிந்திக் கொண்டு அவர்களை நோக்கி வேகமாய் வந்தது கார் ஒன்று. சட்டென்று திகைத்தவன் சுதாரிப்பதற்குள் அருகில் வண்டி நிற்க காரைத் திறந்து வேகமாய் இறங்கினாள் சாதனா.
“மேடம்… ஹெல்ப் மீ மேடம்… இவன் என்னைக் கடத்திட்டுப் போகப் பார்க்கிறான்…” என்று நிர்மலா கதற, நிர்மலாவைப் பிடித்திருந்தவன் அருகில் வந்தவள், “யூ ராஸ்கல்… அவளை விடுடா…” என்று கன்னத்தில் ஓங்கி அறையவும் செய்தாள்.
கார் டிரைவரும் இறங்கி வருவதைக் கண்ட அவன் நண்பன், “மச்சி… வேண்டாம் வந்திடுடா… அப்புறம் பார்த்துக்கலாம்…” என்று காருக்குள் இருந்து அழைக்க கோபத்துடன் நிர்மலாவை விடுவித்தவன், “ஏய்… உன்னை…” என்று இவளிடம் எகிறவும், “பொறுக்கி நாயே… படிக்கற வயசுல எதுக்கு இந்த ஈனபுத்தி உனக்கு… அண்ணே… சீக்கிரம் போலீசுக்குப் போன் பண்ணுங்க… இவன மாதிரி உள்ளவங்கள கையும் களவுமாப் பிடிச்சுக் கொடுத்தாதான் அடங்குவாங்க…” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருக்க, “இதோ பண்ணறேன் மா…” என்ற டிரைவர் அலைபேசியை எடுக்கவும் ஆத்திரமாய் அவர்களைப் பார்த்த ஆகாஷ், “ஏய்… இருங்கடி, உங்களை அப்புறம் கவனிச்சுக்கிறேன்…” என்று கத்திவிட்டு காருக்குள் நுழைய கார் கிளம்பியது.
அப்போதும் பயத்தில் நடுங்கிக் கொண்டு நின்ற நிர்மலாவின் தோளில் கை வைத்தவள், “என்ன நிர்மலா, இந்த இருட்டு நேரத்துல இப்படி தனியா வந்து மாட்டிக்கலாமா… நீ உன் பிரண்ட்ஸ் கூட போறேன்னு தானே சொன்ன…”
“ஆ…ஆமாம் மேம்… அ…அது ஷீலா போன ஸ்டாப்பிலேயே இறங்கிட்டா… அதான்…” என்று தடுமாற்றத்துடன் கூறினாள்.
“சரி, இதை இப்படியே விட்டுடக்கூடாது, முதல்ல போலீஸ்ல புகார் கொடுத்திடலாம் வா…” என்றவளை பயத்துடன் நோக்கியவள், “போ…போலீசா…” என்று தயங்கினாள்.
“உனக்கு பயமா இருந்தா நான் கம்ப்ளெயின்ட் கொடுத்துக்கறேன்… வா…” என்றவளின் கையைப் பிடிக்க அது பயத்தில் சில்லிட்டிருந்தது. அவளது உடலின் நடுக்கம் அப்போதும் குறையாமல் இருக்க, “என்ன நிர்மலா இப்படி நடுங்கிட்டு இருக்கே… பயப்படாத…” என்று மென்மையாய் அணைத்துக் கொண்டாள்.
“போ..போலீஸ் எல்லாம் வேண்டாம் மேடம்… என் சேச்சி பயத்துல என்னைக் காலேஜ் கூட அனுப்ப மாட்டாங்க… எங்க சின்ன வயசுல அப்பா, அம்மா இறந்த பிறகு என்னையும் அண்ணாவையும் வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க… எங்களுக்கு ஏதும் பிரச்சனைன்னா துடிச்சுப் போயிருவாங்க…”
“அதுக்காக நாம எந்த ஆக்சனும் எடுக்காம இருக்கறது ரொம்பப் பெரிய தப்பு…” என்றவள் அவள் தயங்கவும், “சரி வா… உன்னை வீட்ல விட்டுட்டுப் போறேன்…” என்று காரில் அவளையும் ஏற்றிக் கொள்ள அடுத்த தெருவில் இருந்த அவளது வீட்டு முன் கார் நிற்க வாசலிலேயே நிஷாந்தி காத்துக் கொண்டிருந்தாள்.
“நிரு மோளே… வந்துட்டியா… இருட்டிடுச்சே, இன்னும் உன்னைக் காணமேன்னு பயந்துட்டே இருந்தேன்…” என்றவள் அவள் பின்னில் நின்ற சாதனாவைப் பார்த்து, “இவங்க…” என்று கேட்க, “நான் எப்பவும் சொல்லுவேன்ல… சாதனா மேம்…” என்றதுமே பளிச்சென்று சிரித்தவள், “இவ எப்பவும் உங்களை சொல்லிட்டே இருப்பா… உள்ள வாங்க… சாயா குடிச்சிட்டுப் போகலாம்…” என்று உபசரித்தாள்.
“இல்ல சேச்சி… இன்னொரு நாள் வரேன்… வீட்ல அம்மா எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…” என்று விடை பெற்றவளுக்கு நிஷாந்தியின் அழகான புன்னகை முகம் மனதை விட்டு அகலாமல் நின்றது. “நரேனுக்கும் அப்படியே அக்காவின் ஜாடை போலிருக்கிறது…” என நினைத்துக் கொண்டவள் புன்னகையுடன் காரில் கிளம்பினாள்.
நிர்மலாவைப் பற்றி யோசித்தவள் அந்த விஷயத்தை அப்படியே விடக்கூடாது என முடிவு செய்து அலைபேசியை எடுத்து தனது தோழிக்கு அழைத்தாள்.
அடுத்தநாள் கல்லூரிக்கு மனம் நிறைய பயத்துடன் தயங்கிக் கொண்டே சென்றாள் நிர்மலா. பாகில் சாதனா சொன்னது போல பெப்பர் ஸ்ப்ரே பாட்டில், மிளகாய் தூள் பாக்கெட் போன்ற தற்காப்பு உபகரணங்களை எடுத்துக் கொள்ளவும் மறக்கவில்லை.
கல்லூரி பேருந்து நிறுத்தத்திலேயே நண்பர்களுடன் அமர்ந்திருந்த ஆகாஷ் அவளை சீற்றத்துடன் பார்க்க இவளுக்கு அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது. நரேன் ஊரிலில்லாததால் தனியாகவே வந்திருந்தாள்.
அவனை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டே வேகமாய் கல்லூரியை நோக்கி நடந்தவள் முன்னில் திடுமென வந்து நின்றவன் பல்லைக் கடித்துக் கொண்டே பேசினான்.
“என்னடி, தப்பிச்சிட்ட சந்தோஷத்துல இருக்கியா… எத்தன நாள் அந்த வாத்திச்சி உனக்குத் துணைக்கு வருவா… என் கைல தனியா சிக்காமயா போயிருவ… அவ என்னையே அடிச்சுட்டால்ல, இரு, அவ கொழுப்பைக் குறைக்கறேன்…”
“ஆ…ஆகாஷ், படிக்க வந்த இடத்துல எதுக்கு இதெல்லாம்… நேத்து நடந்ததைக் கூட பெருசு பண்ணாம விட்டுடறேன்… ப்ளீஸ் இதை இதோட நிறுத்திக்க…” கண்களில் நீர் பளபளக்க கூறியவளை நோக்கி கேலியாய் சிரித்தவன், “ஒருவேளை நேத்து அவ என் கன்னத்தில் அடிக்காம இருந்திருந்தா கூட போகட்டும்னு விட்டிருப்பேன்… இனி ரெண்டு பேரையும் சும்மா விட மாட்டேன்…” சீறலுடன் கூறிக் கொண்டிருந்தவன் பின்னிலிருந்து அந்தக் குரல் கேட்டது.
“என்னடா பண்ணுவ…” திரும்பியவன் சாதனாவைக் கண்டதும் கோபத்தில் முறைத்தான்.
“ஏய்… நீ ரொம்ப ஓவரா போற… நான் யார் தெரியுமா…”
“ஏன்… நீ யார்னு உனக்கே மறந்து போச்சா… ஆனா, எனக்குத் தெரியும்… நீ ஒரு பொம்பள பொறுக்கி… கூடப் படிக்கற பொண்ணையே கடத்தி நாசம் பண்ணத் துடிச்ச கேடு கேட்ட  ஜென்மம்…” கிண்டலாய் கூறியவளை எரித்து விடுவது போல அவன் பார்க்க அங்கே கூட்டம் கூடத் தொடங்கியது.
“என்னடி ஓவராப் பேசற…” சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் அறையப் போனவனின் கையை கராத்தே பாணியில் தடுத்தவள் முகத்திலேயே காரி உமிழ்ந்தாள். எப்போதோ படித்த கராத்தே இப்போது உதவிக்கு வந்தது.
“ச்சீ… யாரு மேல கை வைக்கற… படிக்கிற பையனாச்சே… ஏதும் கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டாம்னு நினைச்சு சும்மா இருந்தா ஓவராப் போற… உன்னைலாம் கையால கூடத் தொடக் கூடாது…” என்றவள் குனிந்து காலில் கிடந்த செருப்பை எடுத்து அவன் கன்னத்தில் மாறி மாறி அடிக்க நிர்மலாவே திகைத்துப் போனாள். சுற்றி நின்றவர்களும் வேடிக்கை பார்க்க அவமானத்தில் குறுகிப் போனவன், “ஏய்… உன்னை…” என்று அடிக்கப் போக கூட்டத்திலிருந்து காக்கி உடுப்பிலிருந்த இரு பெண்கள் வந்து பிடித்துக் கொண்டனர்.
திமிறியவனை, “நடடா… போலீஸ் ஸ்டேஷனுக்கு… படிக்கிற பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணவா செய்யற… லாக்கப்ல வச்சு முட்டிக்கு முட்டி தட்டினா தான் அறிவு வரும்…” என்று சொல்லிக் கொண்டே, “நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளெயின்ட் கொடுங்க மேடம்… இவனை நாங்க பார்த்துக்கறோம்… என்று இழுத்துச் செல்ல கண்களில் வெறியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றான்.
அவனை மாட்டிக் கொடுத்த களிப்பில் சாதனா நிற்க, கண்களில் நீருடன் கலவரமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் நிர்மலா. அத்தோடு நிற்காமல் அவளை அழைத்துக் கொண்டு கல்லூரிக்குள் சென்றவள் தனது தோழியின் தந்தையான கல்லூரி பிரின்சிபலை கண்டு அவன்மீது கம்ப்ளெயின்ட் கொடுக்கவும் தவறவில்லை.
“நிர்மலா, பயப்படாத… இனி அவன் உன்கிட்ட வாலாட்ட மாட்டான்… இந்த மாதிரி விஷயங்களை வீட்ல மறைக்கக் கூடாது… இன்னைக்கே நடந்த எல்லா விஷயத்தையும் உன் வீட்டுல சொல்லிடுமா…” என்றவள் ஒரு தவறுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த சந்தோஷத்தில் கிளம்ப நிர்மலாவுக்கு பயமாய் இருந்தாலும் சற்று தைரியமும் தோன்றியது. சாதனா கூறியது போல் நடந்ததை வீட்டில் கூற நரேன் கோபத்தில் கொந்தளித்தான்.
“என்ன நிரு இது… இவ்ளோ நடந்தும் அங்கயே இருக்கற எனக்கு எதுவும் சொல்லாம இருந்திருக்க… சாது மட்டும் அந்த நேரத்துல சரியா அங்க வராம இருந்திருந்த உன் நிலைமை என்னவாயிருக்கும்…” உணர்ச்சி வேகத்தில் தங்கையைத் திட்டிக் கோபப்பட்டாலும் அவன் மனதில் சாதனாவின் மீதுள்ள பிரியம் சாதுவாய் வெளிப்பட நிஷாந்தி அதை கவனிக்கத் தவறவில்லை.
“இனி எது நடந்தாலும் எங்கிட்ட சொல்லாம இருந்திடாத…” என்றவன், “சேச்சி, சாதனாவை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும்… நான் போயிட்டு வரேன்…” எனவும், “நன்றி மட்டும் சொன்னாப் போதாது நரேன்… இந்த மாதிரி ஒரு தைரியமான, அன்பான பொண்ணு இந்த வீட்டு மருமகளா வரணும்னும் நான் ஆசைப்படறேன்…” அவர் தம்பியின் முகத்தை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டே கூற அதில் ஆயிரம் சந்தோஷ ஜாலங்கள். சாதனாவின் வீட்டுக்குச் சென்றவன் அவளிடம் நன்றி கூறி அவள் அன்னையிடம்  மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவிக்கவும் செய்தான்.
பழைய நினைவுகளில் உறங்காமல் புரண்டு கொண்டிருந்த சாதனா பக்கத்து அறையில் இருந்து முனங்கும் சத்தம் கேட்டு கவனித்தாள். அருகில் படுத்திருந்த ஸ்ரீக்குட்டியும் அன்னையும் நல்ல நித்திரையில் இருக்க எழுந்து அமர்ந்து காதைக் கூர்மையாக்கி கேட்டாள்.
சஹாவின் அறையிலிருந்து அவளது குரல் கேட்க பதட்டத்துடன் எழுந்து அவளது அறைக்கு சென்றாள்.
“வே..வேண்டாம்… என்னை விட்டிரு… என்னை ஏதும் பண்ணிடாத ப்ளீஸ்…” மூடியிருந்த விழிகளில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க உறக்கத்திலேயே புலம்பிக் கொண்டிருந்தாள் சஹானா. சாதனா எழுந்து வந்ததைக் கண்டு சசிகலாவும் பின்னிலேயே வந்தார்.
“டேய், என்னை ஏண்டா இப்படி சித்திரவதை பண்ணறீங்க… பேசாம என்னைக் கொன்னுடுங்கடா, பாவிங்களா… ஐயோ வலிக்குதே… ஆ… வேண்டாம் விட்டிரு… வலிக்குதே… நோ…” என்று சத்தமாய் அலறியவளின் உடம்பு கட்டிலில் தூக்கிப் போட அவளை இரு புறமும் பிடித்துக் கொண்டிருந்த சசிகலா, சாதனாவின் கண்களில் கண்ணீர் சிதறிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு அவளது உடல் வெட்டி வெட்டி இழுக்க வெகு நாட்களுக்குப் பிறகு பழைய கொடுமைகளின் நினைவுகள் மனதை பாரமாக்கின.
சஹானாவின் கை கால்கள் இழுத்துக் கொண்டு கண்கள் சொருகி மயக்கத்துக்குப் போய்க் கொண்டிருக்க, சசிகலா கதறி அழத் தொடங்க சாதனா வேகமாய் செயல்பட்டாள். அந்த மாதிரி சூழ்நிலையில் எப்படி முதலுதவி செய்ய வேண்டுமென்று டாக்டர் சொல்லிக் கொடுத்தது போலவே செய்யத் தொடங்கினாள்.
சஹாவின் உடல் தலையணையில் இருந்து கீழிறங்கி துடித்துக் கொண்டிருக்க கட்டிலுக்கு அருகிலிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி தலைக்கு அடியில் தலையணையை வைத்து, மாத்திரையைக் கொடுத்தவள் அவள் மெதுவாய் மயக்கத்திற்குப் போகவும் வேதனையுடன் கண்ணில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவளைப் பரிசோதித்த டாக்டர் தற்காலிகமாய் சிகிச்சை செய்து விட்டு, “உங்க பொண்ணுக்கு இந்த மாதிரி இதுக்கு முன்னாடி வந்திருக்கா…” என்று சசிகலாவிடம் விசாரிக்க, “ஆமாம்…” என்பது போல் கண்ணீருடன் தலையாட்டினார்.
“வருத்தப்படாதீங்க, சரி பண்ணிடலாம்… எந்த மாதிரி சூழ்நிலைல இவங்களுக்கு இப்படி பிட்ஸ் வருது… அவங்க பழைய மெடிகல் ரிப்போர்ட் எதுவும் வச்சிருக்கீங்களா…” கேட்டவரிடம் பதில் சொல்லாமல் சசிகலா மகளைப் பார்க்க, அவள் தலையாட்டிவிட்டு பாகிலிருந்து ஒரு பைலை எடுத்து அவரிடம் நீட்டினாள்.
அந்தப் பெரிய பைலை வாங்கி மேலோட்டமாய் பார்க்கத் தொடங்கிய டாக்டரின் கண்கள் சுருங்க அதிர்ச்சியுடன் அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி, “ஓ… மை காட்…” என்று கடவுளை அழைத்துக் கொண்டே அவர்களை நோக்கி நிமிர இருவரும் கண்ணீருடன் நின்றிருந்தனர்.
“ஹோ, என்ன ஒரு கொடுமை இது… இப்ப ரீசன்டா எப்ப இப்படி ரியாக்ட் பண்ணாங்க…”
“இப்ப ஒரு வருஷமா எந்தப் பிரச்னையும் இல்ல டாக்டர்… நல்லாத்தான் இருந்தா… நாங்களும் அவளை வேதனைப்பட வைக்காம கவனமாப் பார்த்துகிட்டோம்… இந்த ரெண்டு நாளா தான் பெரிய மனவுளைச்சல் அவளுக்கு…” என்றவர் சுருக்கமாய் நடந்ததை சொல்லி முடித்தார்.
“ம்ம்… அவரைப் பார்த்ததுல பழைய நினைவுகளோட சேர்ந்து அந்தக் கொடுமையான நினைவுகளும் மனசுல வந்திருக்கு… அந்தப்  பிரஷர் தாங்காம தான் இப்படி வந்திருக்கு… ரெண்டு நாள் ரெஸ்ட்ல இருக்கட்டும்… மெடிசின் எழுதித் தரேன்… அவங்களை எதும் யோசிக்க விடாதீங்க…” அவர் சொல்லவும், “சரி டாக்டர்…” என்று எழுந்து சென்றனர்.
எத்தனையோ நோய்க்கான சிகிச்சைகளை செய்திருந்தாலும் சஹானாவை நினைத்து மனம் கனத்துப் போக தலையை குலுக்கிக் கொண்டு அடுத்த வேலையை கவனித்தார்.
காலையில் எழுந்தது முதலே நிதினுக்கு நிறைய வேலைகள் காத்திருக்க அதையெல்லாம் செய்து கொண்டிருந்தாலும் மனதில் சஹாவைப் பற்றிய நினைவுகளே சுற்றிக் கொண்டிருந்தன. ஓரளவுக்கு வேலையை முடித்துவிட்டு சரவணனின் அலைபேசிக்கு அழைத்தான்.
அவன் அழைப்பைக் கண்டதுமே எதற்காக அழைக்கிறான் என்பது புரிந்து போக எடுத்துப் பேசினான்.
“டேய் மாப்பிள, சஹி இன்னைக்கு ஆபீஸ் வந்திட்டாளா… ஏதும் பிரச்னை இல்லையே…” ஆவலுடன் கேட்டவனிடம், “இல்லடா மச்சான்… அவங்க லீவ்னு சொன்னாங்க…”
“ஓ…” சுரத்தில்லாமல் கேட்டவன், ஒருவேளை இன்னும் சரியாகலையோ… நேத்தே டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களே…” என்று கேட்க, “ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்திட்டு வரலாம்னு நினைச்சிருப்பாங்க… நீ பாட்டுக்கு எதையாவது யோசிச்சு கவலைப்பட்டுட்டு இருக்காதே…” என்று சமாதானம் கூறினான் சரவணன்.
“ம்ம்… அதுக்காக தான் இருக்கும்ல… ரொம்ப வீக்கா தான் இருக்கா… சரி, ரெஸ்ட் எடுக்கட்டும்…” என்றவன் அவனுக்கே சமாதானம் சொல்லிக் கொள்ள சரவணனுக்கு நிதினை நினைத்துப் பாவமாய் இருந்தது.
பேச்சை மாற்ற நினைத்தவன், “இன்விடேஷன் எல்லாம் வந்திருச்சு… கோவிலுக்குப் போய் பூஜை பண்ணிட்டு எல்லாருக்கும் கொடுக்கணும்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க… நீங்க ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா…” என்று கேட்க, அப்போதுதான் காலையில் அன்னை சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.
“இல்ல, நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க… நீ எதுக்கு மாப்பிள, சஹி பத்தி பிரபா கிட்ட சொன்ன… அவ என்னடான்னா நிலமை புரியாம எனக்கு எப்ப அண்ணியைக் காட்டப் போறேன்னு டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா… நானே அவளுக்கு என்ன பிராப்ளம்… ஏன் என்னை விட்டு விலகிப் போறான்னு புரியாம முழிச்சிட்டு இருக்கேன்… இதுல அவ வேற…”
சலித்துக் கொண்டவன் குரலில் கவலை தேங்கிக் கிடந்தது சரவணனனுக்குப் புரியாமல் இல்லை.
“கவலைப்படாத மச்சான்… எட்டி நின்னு பாக்குற எனக்கே உன் காதலோட ஆழம் புரியறப்போ நீ உசுருக்கு உசுரா நேசிச்ச பொண்ணுக்குப் புரியாமலா போயிடும்… எல்லாம் சரியாகி சீக்கிரமே நீங்க சேர்ந்திடுவீங்க…” என்றான் மனதார.
“ம்ம்… நானும் அந்த நம்பிக்கைல தான் இருக்கேன் மாப்பிள… எனக்கு சஹி மொபைல் நம்பர் வேணும், தருவியா…”
அவன் கேட்டதும் யோசித்த சரவணன், “மொபைல் நம்பர் கொடுக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல, ஆனா நீ பேசி மறுபடியும் பிரச்சனை ஆகிடாமப் பார்த்துக்க…”
“இல்லடா, நான் பார்த்துக்கறேன்…” எனவும் அவளது அலைபேசி எண்ணை அவன் மெசேஜ் செய்ய, உடனே அவளை அழைக்க மனம் துடிக்க அந்த எண்களைத் தன் அலைபேசியில் அமர்த்தினான்.
முதல் ரிங்கிலேயே கட் செய்தவன் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சித்தான். ஆனால் அழைப்பு எடுக்கப்படாமல் இருக்க அவன் மனம் தவிக்கத் தொடங்கியது. மீண்டும் அழைக்க முயல அதுவும் முழுதும் அடித்து ஓய்ந்தது.
“கடவுளே… சஹிக்கு எதுவும் பிரச்சனையா… ஏன் போனை எடுக்க மாட்டேங்கிறா… மங்கலம் ரோடு கோகுலம் அபார்ட்மென்ட் தானே வீடுன்னு சொன்னாங்க… நேர்லயே போயிப் பார்த்திட்டு வந்திடலாமா…” பதட்டத்துடன் யோசித்தவனை மனம் தலையில் கொட்டியது.
“நேத்து பாங்குல உன் முகரையைப் பார்த்து மயங்கி தான அவ ஹாஸ்பிடல் போனா… இன்னைக்கு மறுமடியும் அவ வீட்ல போயி நிக்கப் போறியா…” என்று கேள்வி கேட்க, “ப்ச்… வேண்டாம்… அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு… அதான் என்னைப் பார்க்காம அவாய்ட் பண்ணறா… அதை முதல்ல தெரிஞ்சுக்காம அவ முன்னாடி போயி கஷ்டப்படுத்தக் கூடாது…” அவன் தெளிவாய் யோசிக்க அலைபேசியில் சஹியின் எண் ஒளிர்ந்து அவனை சந்தோஷமாக்கியது.
படைக்கப்பட்ட
பூக்கள் எல்லாம்
கடவுளை சேர்வதில்லை…
கல்லறைப் பூக்களுக்கு
களங்கம் என்று
பெயரில்லை…
கடவுளை அடைந்தாலும்
கல்லறையில் விழுந்தாலும்
பூக்களின் குணத்தில்
என்றும் மாற்றமில்லை…
படைக்கும் மனிதனே
அவற்றில் பேதத்தை
உண்டாக்குகிறான்…

Advertisement