Advertisement

அத்தியாயம் – 12
“சேச்சி… ஏட்டன் டியூசன் சென்டரில் போயோ…” கல்லூரியில் இருந்து வந்த நிர்மலா டியூஷனுக்கு கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களை பாகில் எடுத்து வைத்துக் கொண்டே அக்கா நிஷாந்தியிடம் கேட்டாள். சந்தன நிறத்தில் அழகாய் இருந்தவள் இடுப்புக்கு கீழ் நீண்டிருந்த கருகரு கூந்தலை    தளர்வாய் பின்னலிட்டிருந்தாள். (அவர்கள் மலையாளத்தில் பேசிக் கொண்டாலும் நாம் நம் வசதிக்கு தமிழில் தொடர்வோம்.)
“ம்ம்… யாரையோ பார்த்திட்டு அப்படியே டியூஷன் சென்டருக்குப் போறேன்னு சொன்னான்…” சொல்லிக் கொண்டே கையிலிருந்த தேநீர்க் கோப்பையை தங்கையிடம் நீட்டிய நிஷாந்தி முப்பதுக்கு மேல் இருந்தாலும் இளமையாய் அழகாய் கம்பீரமாய் இருந்தாள்.
“மழை வர போல இருக்கே அண்ணனோட போகலாம்னு நினைச்சேன்…” சிணுங்கிக் கொண்டே தேநீர் பருகினாள்.
வெளியே எப்போது வேண்டுமானாலும் பெய்து விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்த மேகத்தைப் பார்த்த நிஷாந்தி, “ம்ம், நிச்சயம் மழை வரும்… இன்னைக்கு டியூஷனுக்கு லீவ் போட்டுக்கயேன்…” என்றாள்.
“இல்ல சேச்சி… எனக்கு நாளைக்கு காலேஜ்ல ஒரு டெஸ்ட் இருக்கு… அந்த சப்ஜக்ட்ல ஒரு பெரிய டவுட்… இன்னைக்கு சாதனா மேம் கிளாஸ்ல கிளியர் பண்ணியே ஆகணும்… மழையைப் பார்த்தா வேலையாகாது… என் குடை பின்னாடி இருக்கு… எடுத்துக் கொடுங்க… நான் கிளம்பறேன்…” என்றவள் காலிக் கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்ட நிஷாந்தி குடையுடன் வந்தாள்.
“பார்த்து பத்திரமாப் போடி… கிளாஸ் முடிஞ்சு நரேனோட வந்திரு…” என்றவளிடம், “சரி சேச்சி… பை…” என்று விடை பெற்றவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். வானத்தை கவலையுடன் பார்த்துக் கொண்டே நடையின் வேகத்தைக் கூட்டி பஸ் ஸ்டாப்பை அடைவதற்குள் அவள் செல்ல வேண்டிய பேருந்து கிளம்பி இருந்தது.
“என்ட குருவாயூரப்பா, அடுத்த பஸ்சுக்கு இனி இருபது நிமிஷம் வெயிட் செய்யணுமே…” என நினைத்துக் கொண்டே கவலையுடன் நிற்க ஒரு பைக்கில் இரண்டு மாணவர்கள் அவளைப் பார்த்துக் கொண்டே கிராஸ் செய்தனர்.
“ச்சே… இந்த சனியனுங்க தொல்லை காலேஜ்ல தான் தாங்க முடியலன்னா இங்கயும் வந்திடறானுங்க… பார்வையைப் பாரு… முன்னப் பின்ன பொண்ணுங்களைப் பார்க்காத மாதிரி… அப்படியே கண்ணைத் தோண்டி கைல கொடுத்திடணும்…” மனதுக்குள் சொல்லிக் கொண்டே பேருந்தின் வரவை எதிர்பார்த்து நின்றாள். நிறுத்தத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
கடந்து சென்ற பைக் மீண்டும் திரும்பி வருவதைக் கண்டவள் எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவளை உரசுவது போல் வண்டியை நிறுத்தியவன் விழுங்குவது போலப் பார்த்துக் கொண்டே, “என்ன பேபி… பஸ் மிஸ் பண்ணிட்டியா… நாங்க வேணும்னா உன்னை டிராப் பண்ணட்டுமா…” என்றான் இறங்கிக் கொண்டே.
கடுப்புடன் முறைத்தவள், “வேண்டாம் ஆகாஷ்… வம்பு பண்ணாமப் போயிரு… அப்புறம் நடக்கறதே வேற…” என்றாள் கோபத்துடன்.
“இதென்னடா வம்பாப் போச்சு, நம்ம கூட காலேஜ்ல ஒண்ணாப் படிக்கிற பொண்ணாச்சே… தனியா பஸ் கிடைக்காம நிக்குதேன்னு ஹெல்ப் பண்ண வந்தா இப்படிக் கோச்சுக்கற…” கேட்டுக் கொண்டே அவன் இறங்கி அவள் அருகில் வரவும் மனதில் ஒரு கலவரம் மூண்டது.
“எனக்கு எந்த ஹெல்ப்பும் வேண்டாம்… நீ கிளம்பு…”
“ஏன் பேபி, என்னை விரட்டறதுலயே குறியா இருக்க… நான் உன்னை ஏதாச்சும் பண்ணினேனா… பாரு எவ்ளோ தள்ளி நின்னு டீசன்டாப் பேசிட்டு இருக்கேன்… இல்லடா மச்சி… நாமெல்லாம் டீசன்டு தானே டா…” என்றான் நண்பனிடம்.
“அச்சோ, நம்மெல்லாம் பக்கா டீசன்டுடா மச்சி…” என்றான் அவன் தலையைக் குலுக்கி கிண்டலாக.
“பார்த்தியா, என் நண்பனே சொல்லிட்டான்…” என்றவன் மேலும் சற்று நெருங்கி வந்து நிற்க அவளுக்கு உள்ளே உதறல் எடுத்தாலும் காட்டிக் கொள்ளாமல் நின்றாள்.
“ஹூம்…” என்று அவள் கூந்தல் அருகே கண்ணை மூடி மூச்சை மேலிழுத்து முகர்ந்தவன், “என்ன ஷாம்பூ பேபி யூஸ் பண்ணற… சும்மா தூக்குது…” என்று கிறக்கத்துடன் கூறி அவளைப் பார்க்க சற்றுத் தள்ளி நின்றவள், “ஆகாஷ் வேண்டாம்… விளையாடாமப் போயிரு…” என்றாள்.
“ஹூம்… எனக்கும் உன்னோட விளையாடிப் பார்க்கனும்னு ரொம்ப ஆசையா தான் இருக்கு… நீ தான் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறியே…” என்றவனின் பார்வை அவள் உடல் முழுதும் ஊர்வலம் போக முகத்தை சுளித்தாள்.
“ச்ச்சீ… படிக்கற பையன் பேசுற போலவா பேசற…”
“உன்னைப் படிக்கணும்னு நினைச்சுதான் இப்படிப் பேசறேன் பேபி… நீ மட்டும் ஓகேன்னு சொன்னேன்னு வை… ஹூம்… அந்த சொர்கத்தையே கண்ணுல காட்டுவேன்ல… இப்படி சிக்காம ஓடினா எப்படி…” என்றவனை அதற்கு மேல் சகித்துக் கொள்ள முடியாமல், “ச்சே… ஸ்டுபிட்…” என்று நடக்கத் தொடங்க அவள் முன்னில் நின்று வழி மறித்தவன், “என்ன பேபி, பேசிட்டே இருக்கேன்… பதில் சொல்லாமப் போனா எப்படி… நானும் எவ்ளோ நாள் தான் உன் பின்னாலயே சுத்திட்டு இருக்கறது…” என்று கேட்க,
“வேண்டாம் ஆகாஷ்… தேவையில்லாம எந்தப் பிரச்னையும் வேண்டாம்னு நினைச்சு தான் நான் அமைதியாப் போறேன்… உன்னைப் பத்தி என் அண்ணன் கிட்ட மட்டும் சொன்னேன்னு வை… அப்புறம் நடக்கறதே வேற…”
“ஓ… உன் அண்ணன் என்ன நரசிம்ம மூர்த்தியா… என்னை அப்படியே கிழிச்சிருவானோ…” என்று கேட்க, அப்போது அங்கே ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க, ஹெல்மெட்டைக் கழற்றி அவர்களை யோசனையுடன் பார்த்த சாதனா, “என்ன நிர்மலா… ஏதாச்சும் பிரச்சனையா…” என்றாள்.
“இ..இல்ல மேம்… இவன் என்னோட கிளாஸ்மேட் தான்… பஸ் வரலை, டிராப் பண்ணவான்னு கேட்டுட்டு இருந்தான்…” என்று சமாளித்தாள்.
“ஓ, சரி… நீ என்னோடவே வந்திடேன்…” என்று கூறவும் தப்பித்தால் போதுமென்று அவள் பின்னில் அமர அவனைப் பார்த்துக் கொண்டே வண்டியைக் கிளப்பினாள் சாதனா.
“என்னாச்சு நிர்மலா, அவன் ஏதோ உன்கிட்ட வம்பு பண்ணற போல எனக்குத் தோணுச்சு… நீ இல்லேன்னு சொல்லற…” வண்டியோட்டிக் கொண்டே கேட்டாள் சாதனா.
“அதுவந்து மேம்…” என்று சொல்லத் தயங்கியவள், “அவன் கொஞ்ச நாளாவே இப்படித்தான் எல்லா இடத்துலயும் பாலோ பண்ணிட்டு என்னோட வம்பு பண்ணிட்டு இருக்கான்… நானும் எவ்வளவோ திட்டிப் பார்த்துட்டேன்… கேக்க மாட்டேங்கிறான்… இது வீட்ல அக்காவுக்குத் தெரிஞ்சா ரொம்ப பயப்படுவாங்க… டியூஷன் கூட போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க… அண்ணனுக்குத் தெரிஞ்சாலும் சும்மா இருக்க மாட்டாரு… அவனை வார்ன் பண்ணப் போயி ஏதும் வம்பாகிடுச்சுன்னா… எதுக்குப் பிரச்சனைன்னு தான் நானே அமைதியா அவனுக்கு சொல்லிப் புரிய வச்சிடலாம்னு நினைச்சேன்… அவன் அடங்க மாட்டேங்கிறான்…”
“ஓ… நாம இப்படி பிரச்சனை வேண்டாம்னு எந்த ஆக்ஷனும் எடுக்காம விலகிப் போறதால தான் இவனை மாதிரி ஆளுங்க அடங்காமத் திரியுறாங்க… நாளைக்கு ரோடுல வச்சு கையப் பிடிச்சு இழுத்தா என்ன பண்ணுவே… பேசாம கம்ப்ளெயின்ட் பண்ணிடு…” என்றாள் சாதனா.
“ம்ம்… அவன் ஒரு ரவுடி… அவன் மேல கம்ப்ளெயின்ட் பண்ணி அவன் என்னை எதுவும் பண்ணிட்டா… அதான் பயமாருக்கு…” என்றவளைப் பாவமாய் பார்த்தாள் சாதனா.
“சரி விடு… அவன் மறுபடி ஏதாச்சும் பண்ணினா சொல்லு, பார்த்துக்கலாம்…” என்றவள் மழைத் துளிகள் ஒவ்வொன்றாய் தேகம் தொட்டு வேகமேடுக்கவும் வண்டியை வேகமாய் விரட்டினாள்.
ஆபீஸ் ரூமில் அமர்ந்து மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடத்தை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நரேன் உள்ளே நுழைந்த சாதனாவைக் கண்டதும் புன்னகைத்தான். உடுத்திருந்த சுரிதார் மழையில் நனைந்து உடலை ஒட்டியிருக்க துப்பட்டாவை விரித்துப் போர்த்தியிருந்தாள்.
ஹெல்மெட்டைக் கழற்றிக் கொண்டே “குட் ஈவினிங் சார்… இன்னும் கிளாசுக்குப் போகலையா…” என்று கேட்டவளிடம் அவளைக் கண்டதும் எப்போதும் போல் மனதுக்குள் மத்தாப்பு மலர, அதைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் கூறினான்.
“இதோ கிளம்பிட்டேன் சாதனா… மழைல நனைஞ்சுட்டா வந்திங்க… ரெயின் கோட் கொண்டு வரலியா…” என்றான்.
“வீட்லருந்து கிளம்பி பாதி வழிக்கு மேல வந்துட்டேன்… இங்கே பக்கத்துல வந்தப்புறம் தான் மழை பிடிச்சுகிச்சு…”
“ம்ம்… சரி நான் கிளாசுக்குப் போறேன்…” என்று எழவும், “மத்த சாருங்க எல்லாம் கிளாசுக்குப் போயாச்சா…” என்றாள்.
“ம்ம்… போயிட்டாங்க… எனக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்க வேண்டி இருந்துச்சு… வரேன்…” என்றவன் தலையாட்டிவிட்டு கிளம்பினான்.
அவனும் கிளம்பி விட்டதால் அந்த அறையில் யாருமற்ற  தைரியத்தில் போர்த்தியிருந்த துப்பட்டாவை எடுத்துப் பிழிந்தாள். வெள்ளை நிறச் சுரிதார் நன்றாய் நனைந்திருக்க அணிந்திருந்த  உள்ளாடைகள் தேகத்தோடு ஒட்டிக் கொண்டு அவளது அழகை அப்படியே எடுத்துக் காட்டின.
எதையோ எடுக்க மறந்து மீண்டும் திரும்ப வந்த நரேன் அவளது கோலத்தைக் கண்டு திகைத்து, “ச…சாரி…” என்று திரும்பி நிற்க அவனைக் கண்டு தடுமாறியவள் சட்டென்று துப்பட்டாவால் உடலை மறைத்துக் கொண்டாள்.
அவளைத் திரும்பியும் பார்க்காமல் தனது மேசையிலிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு வேகமாய் சென்று விட்டவனை உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் சந்தோஷமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சாதனா.
எஞ்சினியரிங் இறுதி ஆண்டு படிக்கும்போது தான் நரேன் அவளது கல்லூரியில் பேராசிரியராய் சேர்ந்திருந்தான். அங்கு அவளைக் காண்கையில் சாதாரணமாய் தொடர்ந்த பார்வை படித்து முடித்து அவளும் அவனது டியூஷன் சென்டரில் பணிக்கு சேர்ந்த பிறகு ஆர்வம் சுமந்த பார்வையாய் தொடருவதையும் அறிந்தே இருந்தாள்.
ஆனாலும் ஒரு வார்த்தை அவளிடம் தப்பாகப் பேசவோ, தப்பாகப் பார்க்கவோ செய்யாத அவன் மீது அவளுக்கு மிகப் பெரிய மரியாதையும் இருந்தது. இப்போது அவன் நடந்து கொண்டதும் புன்னகையை வரவழைக்க அவனைப் பற்றிய சுகமான நினைவுகளுடன் சிறிது நேரம் கழித்தவள் வகுப்புக்கு சென்றாள். அன்று வகுப்பு முடிந்து மாணவர்கள் வீட்டுக்குக் கிளம்ப அடுத்து வந்த நாட்கள் அமைதியாய் கழிந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. தோழி ஒருத்தியின் கல்யாண ரிஷப்ஷனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள் நிர்மலா.
அவளது நீண்ட கூந்தலை அழகாய் சீவி பின்னலிட்ட நிஷாந்தி, “அண்ணன் வேற ஊருல இல்லை… இப்ப நீ உன் பிரண்டு ரிஷப்ஷன்க்கு நிச்சயம் போயே ஆகணுமா…” என்றாள் கவலையுடன்.
“சேச்சி… நான் என்ன, தனியாவா போகப் போறேன்… என் பிரண்ட்ஸ் எல்லாம் கூட வராங்க… இன்னும் என்னை சின்னக் குழந்தை போலவே நினைச்சு பயப்படாம தைரியமா அனுப்பி வைங்க…” என்றாள் நிர்மலா.
“நீங்க ரெண்டு பேரும் எத்தன வளர்ந்தாலும் எனக்கு எப்பவும் குழந்தைங்க தானே… சரி, பத்திரமாப் போயிட்டு சீக்கிரம் வந்திடு… ரொம்ப இருட்டற வரைக்கும் இருக்காதே…” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே கண்ணாடியில் நின்று கண்ணுக்கு ஐ லைனரை அழகாய் வரைந்து கொண்டு இயல்பாய் சிவந்திருந்த இதழ்களை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டவள் புன்னகைத்தாள்.
தமக்கையிடம் திரும்பியவள், “சேச்சி, அழகாருக்கேனா…” என்றவளைப் புன்னகையுடன் நோக்கிய நிஷாந்தி, மயில் நீல டிசைனர் சல்வாரில் மனம் மயக்கும் புன்னகையுடன் நின்ற தங்கையைப் பெருமிதத்துடன் நோக்கினாள்.
“உனக்கென்னடி செல்லமே, ராஜகுமாரி போல இருக்கே…” கன்னத்தை வழித்து முத்தமிட்டாள்.
“ஹாஹா, ஓகே சேச்சி… நான் கிளம்பட்டுமா…” என்றவளை மீண்டும் தயக்கத்துடன் பார்த்த நிஷாந்தி, “மழை வரும்போல இருக்கு… நானும் வேணும்னா உன் கூட வரட்டா…” என்றாள்.
“என்ன சேச்சி, நாந்தான் முதல்லயே நீங்க வர்றீங்களான்னு கேட்டேன்ல… அப்போ இல்லைன்னு சொல்லிட்டு இப்ப வரட்டான்னு கேக்கறிங்க… ஆல்ரெடி நான் லேட்… என் பிரண்டு வேற அடுத்த பஸ் ஸ்டாப்புல வெயிட் பண்ணிட்டு இருக்கா… நான் பத்திரமா போயிட்டு வந்திடறேன்… நீங்க கவலைப் படாம உங்க எம்பிராய்டரி வேலையை முடிங்க…” அவள் கன்னத்தில் முத்தமிட்டு பை சொல்லி கிளம்பினாள்.
நிஷாந்தி சின்ன வயதில் இருந்து செய்து கொண்டிருந்த தையலையும், எம்பிராய்டரி வொர்க்கையும் இப்போதும் முக்கியமான சில கஸ்டமர்களுக்காய் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறாள். இது முகூர்த்த காலம் என்பதால் சற்று முடிக்க வேண்டிய வேலை அதிகம் இருந்தது.
நிர்மலா பேருந்து நிறுத்தத்திற்கு சென்றவுடனே பஸ் வந்துவிட நிம்மதியாய் ஒரு பெருமூச்சை விட்டவள், “என்ட குருவாயூரப்பா, என்னை ஷீலுவோட திட்டிலிருந்து காப்பாத்திட்ட…” நன்றி கூறிக் கொண்டே காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்து அடுத்த ஸ்டாப்பில் காத்திருந்த தோழியை அழைத்து பேருந்தில் ஏறிவிட்டதாய் கூறினாள்.
அடுத்த நிறுத்தத்தில் ஷீலாவும் துணைக்கு சேர்ந்து கொள்ள சந்தோஷமாய் தோழியின் ரிஷப்ஷனுக்கு சென்றனர். அங்கே வேறு சில தோழிகளும் வந்திருக்க ஜாலியாய் அரட்டை அடித்துக் கொண்டு கல்யாணப் பெண்ணை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கிப்ட் பாக்குடன் அங்கு வந்த சாதனா தன் தோழியின் தங்கையை வாழ்த்தி பரிசைக் கொடுத்துவிட்டு தோழியுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்ட நிர்மலாவும், தோழியரும் அவளிடம் சென்று சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன நிர்மலா, பிரண்ட்ஸ் எல்லாரும் செம என்ஜாய் போலருக்கு… நீங்கலாம் சாப்பிட்டாச்சா…” என்றாள்.
“ஹாஹா, சும்மா பேசிட்டு இருந்தோம் மேடம்… நாங்க இன்னும் சாப்பிடல…” என்றாள் புன்னகையுடன்.
“இருட்டத் தொடங்கிருச்சே… சாப்பிட்டா கிளம்பிடலாம் இல்லையா…” அவள் அக்கறையுடன் கேட்க, “ம்ம், சரி மேடம் நாங்களும் உங்களோட சாப்பிட வரோம் மேம்…” என்று அவளுடனே டைனிங் ஹால் நோக்கி நடந்தனர்.
விதவிதமாய் இலையில் பரிமாறப்பட்டிருந்த பதார்த்தங்களை பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
சாதனாவின் தோழி ஒருத்தி அப்போதுதான் மண்டபத்துள் நுழைய அவளோடு பேசிக் கொண்டிருந்தாள். தோழியருடன் வீட்டுக்குக் கிளம்பிய நிர்மலா, சாதனாவிடம் சொல்லிக் கொள்ள வந்தாள்.
“மேம்… டைம் ஆச்சு, நாங்க கிளம்பறோம் மேம்…”
“ஹோ, நானும் அந்த வழியா தானே போவேன்… கொஞ்சம் வெயிட் பண்ணினா என்னோடவே வந்திடலாம் மா…”
ஷீலாவை தயக்கத்துடன் பார்த்த நிர்மலா, “இல்ல மேம்… நான் உங்களோட வந்தா இவ தனியாப் போகணும்… நீங்க பேசிட்டு மெதுவா வாங்க… நாங்க கிளம்பறோம்…” என்று கூறவும், நெடுநாள் கழித்து கண்ட தோழியை விட மனமில்லாமல் புன்னகைத்து அனுப்பி வைத்தாள்.
ஷீலாவும், நிர்மலாவும் ஒரே ஏரியா ஆனதால் அவர்கள் ஒரே பேருந்தில் ஏற, மற்ற தோழிகள் அவர்களுக்கான பேருந்துக்கு காத்திருந்தனர்.
மழை வருவதுபோல் நன்றாக இருட்டியிருக்க ஷீலாவின் நிறுத்தத்தில் அவள் இறங்கும்போது எதேச்சையாய் வெளியே அவளைப் பார்த்துக் கையசைத்த நிர்மலாவின் கண்களில் லேசாய் பயம் படர்ந்தது. அங்கே ஆகாஷ் காரில் அமர்ந்து இறங்கும் ஷீலாவையும் ஜன்னலோரத்தில் இருந்த நிர்மலாவையுமே பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவன் எதுக்கு இங்க நிக்கறான்… சனியன், எங்க போனாலும் என் உசுரை வாங்கப் பின்னாடியே வருது… இவன் பணமும் பகட்டும் பார்த்து எல்லாப் பொண்ணுங்களும் இளிச்சுட்டுப் பின்னாடியே வந்திருவாங்கன்னு மட்டமா நினைச்சு சுத்திட்டு இருக்கான்… ஒருவேளை நம்மள பாலோ பண்ணி வந்து நாம இறங்கும்போது ஏதாச்சும் வம்பு பண்ணினா என்ன பண்ணறது…” கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது யோசனையை சரியாக்க அவனும் பேருந்தின் பின்னிலேயே வந்து கொண்டிருந்தான். நிறுத்தத்தில் இதயத்தைக் கையில் பிடித்து பயத்துடன் இறங்கியவள் முன்பு இளித்துக் கொண்டு நின்றான்.
எட்டு மணிக்கே போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாகிக் கிடந்தது அந்த ஏரியா. திகிலுடன் அவனைக் கண்டு கொள்ளாமல் காலை எட்டிப் போட்டு நடந்தாள் நிர்மலா. அவனும் பின்னிலேயே வர அவனது நண்பன் காரை மெல்ல செலுத்திக் கொண்டு வந்தான்.
“ஹேய் பேபி, நில்லுடா செல்லம்… இப்படி ஓடினா எப்படி…” கேட்டுக் கொண்டே அவள் முன்னில் நின்று வழி மறிக்க, கோபத்துடன் பல்லைக் கடித்தாள் நிர்மலா.
“வேணாம் ஆகாஷ்… ஒழுங்கு மரியாதையா வழிய விடு…” விரலை ஆட்டி எச்சரிக்க, சட்டென்று அவள் விரலைப் பிடித்தவன், “விடலேன்னா என்னடா செல்லம் பண்ணுவ… என்று கேட்டுக் கொண்டே அவள் இரு கையையும் பிடித்து அருகே இழுக்க தடுமாறியவள் அவன் மேல் விழப் போனாள்.
“ஹேய் என்ன விடுடா… இல்லேன்னா கத்தி ஊரைக் கூட்டுவேன்…” என்றவளை நோக்கி சிரித்தான்.
“சும்மா சொல்லக் கூடாது, இந்த டிரஸ்ல அப்படியே செதுக்கி வச்ச சிற்பம் போலருக்கே… நானும் எவ்ளோ நாள் தான் மயிலே மயிலே இறகு போடுன்னு உன்னைக் கெஞ்சிட்டே இருப்பேன்… அதான் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்னு துணிஞ்சு இறங்கிட்டேன்…” சொன்னவனை நெஞ்சில் கை வைத்து தள்ள அவன் அசையக் கூட இல்லை.
“யாராச்சும் வாங்களேன்… ஹெல்ப்…” என்று அவள் கூச்சலிட மழை தூரலிடத் தொடங்கியதால் யாரையும் காணவில்லை. மிரண்டு விழித்தவளைக் கிண்டலாய் நோக்கியவன், “வருண பகவான் கூட எனக்கு தான் ஹெல்ப் பண்ணறார் பார்த்தியா… அடக்க ஒடுக்கமா வந்து கார்ல ஏறிட்டா கொஞ்ச நேரத்துல திருப்பி அனுப்பிடறேன்… அடம் பிடிக்கத்தான் செய்வேன்னா அப்புறம் உன் இஷ்டம்…” சொல்லிக் கொண்டே திமிறியவளை காருக்கு இழுக்க அவள் கதறினாள்.
“ஐயோ, வேண்டாம் ஆகாஷ்… ப்ளீஸ், என்னை ஒண்ணும் பண்ணிடாத… என்னை விட்டுடு…” கண்ணீரோடு வந்த கதறலும் மழையோடு சிதறிக் கொண்டிருந்தது.
பிரம்மனின் படைப்பில்
பிரமிப்பூட்டும் பூக்கள்
பெண்கள்…
அரணாய் இல்லாவிட்டாலும்
அனலாகிடாதே…
அழகான பூவுக்குள்ளும்
அற்புதங்கள் ஒளிந்திருக்கும்…
சிறு பூவென்று
சீண்ட நினைக்காதே
சிலநேரம் பூகம்பமும்
ஒளிந்திருக்கலாம்…

Advertisement