Advertisement

அத்தியாயம் – 1
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்…
மங்களகரமாய் கை கூப்பி நின்று இனிய குரலில் கணபதி மந்திரத்தைத் தெளிவாய் உச்சரித்துக் கொண்டிருந்த மகளைப் பெருமையும் புன்னகையுமாய் நோக்கிக் கொண்டே காலை உணவை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. மகள் நித்யபிரபாவுக்கு கணபதி என்றால் கொள்ளைப் பிரியம். அவளது ஒரு அணுவும் அவனின்றி அசையாது என்பது போல் எல்லாவற்றிற்கும் கணபதியே சரணம் என்று கிடப்பாள். இன்று வீட்டில் முக்கியமான விசேஷம் என்பதால் கணபதியை விசேஷமாய் கவனித்துக் கொண்டிருந்தாள். பூஜை முடிந்து தீபாராதனை காட்டிவிட்டு அன்னையிடம் வந்தவளை இன்முகத்துடன் நோக்கினார் அன்னை.
“என்னம்மா, என்னமோ புதுசாப் பாக்கற போல பாக்கறிங்க…”
“ம்ம், உன்னை நினைச்சா பெருமையா இருக்குடி கண்ணு…”
“சாமி கும்பிடறதுல என்னம்மா பெருமை…”
“என் பொண்ணை நான் அருமையா வளர்த்திருக்கேன்னு தானே உன் அத்தை என் அண்ணன் மகனுக்கு உன்னைக் கட்டி வைக்க சம்மதிச்சிருக்காங்க… இல்லேன்னா அவங்க பணத்துக்கும் பவுசுக்கும் நம்ம குடும்பத்துல பொண்ணு கேப்பாங்களா… இத்தனை நாள் நம்மோட அவ்வளவா ஒட்டாம இருந்த சொந்தம் இப்போ நெருங்கி வருதுன்னா உன்னைப் பிடிச்சுப் போயி தானே…” என்றவர் மகளின் தலையில் நெகிழ்ச்சியுடன் கோதி விட அன்னையின் பேச்சு மாமன் மகனை நினைவூட்டியதால் சட்டென்று முகம் சிவக்க நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள்.
“அண்ணன் எங்கே மா… இன்னும் எழுந்துக்கலையா…”
சலிப்பாய் முகத்தை வைத்துக் கொண்ட மீனாட்சி, “வீட்டுல ஒரு விசேஷம் நடக்கப் போகுது… கலகலன்னு முன்னாடி நிக்க வேண்டியவன ஆளைக் காணோம்… நான் பார்த்திட்டு வரேன்… அடுப்புல டிகாஷன் இருக்கு, காபி கலந்து வச்சிருமா…” சொன்னவர் மாடியிலிருந்த மகனின் அறைக்கு செல்ல அவன் அறையை ஒட்டியிருந்த பால்கனியில் நின்று எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்தான்.
“நிதின்… எழுந்திரிச்சுட்டியாப்பா…” அன்னையின் குரலில் திரும்பியவனின் இறுக்கமான முகத்தில் என்னவென்பது போல் ஒரு பாவம் மட்டுமே.
“மாமா வீட்டுல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்கப்பா… இப்பதான் அண்ணன் போன் பண்ணார்… நீ சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வா…” எனவும், “ம்ம்…” என்று ஆமோதிப்பாய் தலையாட்ட, “இவன் ஏன்தான் எப்பவும் இப்படி உர்ருன்னு இருக்கானோ… எல்லாத்துக்கும் ஒரே ரியாக்சன்…” அவர் முணுமுணுப்புடன் செல்ல டவலை எடுத்தவன் உடலில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்க்க அது எட்டைத் தாண்டியிருந்தது. குளியலறைக்குள் நுழைந்த நிதின் ரூபன் சிறிது நேரத்திலேயே குளித்து தயாராகி கீழே வந்தான்.
எப்போதையும் விட வீடு பளிச்சென்று இருந்தது. புதிய கர்ட்டன் காற்றில் படபடக்க அவனைக் கண்டதும் மலர்ந்த பூவாய் முன்னில் வந்து நின்றாள் தங்கை நித்ய பிரபா.
“அண்ணா, இந்த ரெண்டு சேலைல ஒண்ணை ச்சூஸ் பண்ணிக் கொடேன்…” தன் கைபிடித்து நடந்தவள் இன்று கல்யாணத்திற்கு தயாராய் நிற்பது கண்டு நெகிழ்ந்தான்.
குழந்தையாய் தலை சரித்து அண்ணனின் பதிலுக்காய் காத்திருந்தவளின் தங்க நிறத்துக்குப் பொருத்தமாய் மெஜந்தா வண்ண சேலையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவன், “உனக்கு இது அழகா இருக்கும்டா…” என்று கூற, “நானும் இதான் நினைச்சேன் அண்ணா… இருந்தாலும் நீ சொன்னா எனக்கு திருப்தியாருக்கும்…” என்று கண்ணைச் சிமிட்டியவளின் குழந்தைத் தனம் மட்டும் மாறவே இல்லை.
அவள் உடை மாற்ற செல்ல டிபனுக்காய் மேசையில் அமர்ந்தவன் முன்னில் தட்டை வைத்துப் பரிமாறினார் மீனாட்சி. இட்லியைச் சட்னியில் தோய்த்து வாய்க்கு கொண்டு செல்கையில் அன்னையின் புலம்பல் தொடர்ந்தது.
“நம்ம பிரபாவை என்னதான் என் அண்ணன் மகனுக்கு கல்யாணம் பண்ணறதா இருந்தாலும் அவங்க மனசுக்கு நிறைவா எல்லா சீரும் பண்ணினா தான் நாளைக்கு நமக்கும் மதிப்பா இருக்கும்… அண்ணி மனசும் நிறையும்… உன் அத்தையைப் பத்தி தெரியும்ல… அவ்ளோ சீக்கிரம் எதுலயும் இறங்கி வர மாட்டாங்க… பையன் ஜாதகத்துக்கு வெளியே பொண்ணு ஒத்து வராததால நம்ம பிரபா ஜாதகத்தைக் கேட்டாங்க… அது எல்லாப் பொருத்தமும் ஒத்துப்போனதால இந்த சம்மந்தம் பேச ஒத்துகிட்டிருக்காங்க… மாப்பிள்ளையும் பாங்குல நல்ல வேலை… வெளிய பொண்ணெடுத்தா பெரிய இடத்துல வரன் கிடைக்கும்… நாம குறைச்சலா பண்ணிடக் கூடாது… பணத்துக்கு ஏதாச்சும் யோசிச்சிருக்கியா…” அவர் கேட்கவும் சட்டென்று நிதினுக்கு புரையேறியது.
“பார்த்துக்கலாம்மா… பல்லடம் இடத்தை விக்கறதுக்கு புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்…”
“அதை வித்து தானே பிரிண்டிங் கம்பெனில வந்த நஷ்டத்தை சரி பண்ணனும்னு சொன்ன…”
“ம்ம்… அதுக்கு ஒரு பிசினஸ் லோன் எடுக்கலாம்னு இருக்கேன் மா… இது தங்கச்சி கல்யாணத்துக்கு இருக்கட்டும்…” நிதின் சொல்லவும் அந்த பாசமலர்களைப் பெற்றெடுத்த பூரிப்புடன் நோக்கினார் மீனாட்சி. நித்தியானந்தம், மீனாட்சி தம்பதியருக்கு நிதின் ரூபன், நித்ய பிரபா என கண்ணான இரு பிள்ளைகள். திருப்பூரில் சிறிய அளவில் பனியன் துணிகளில் பிரிண்டிங் செய்து கொடுக்கும் கம்பெனியை நடத்தி வந்தவர் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த மாரடைப்பில் புகைப்படத்தில் அடங்கிவிட குடும்பப் பொறுப்பு மகன் நிதின் மீது விழுந்தது.
கோவையில் MBA முடித்து தனியார் துறை ஒன்றில் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருந்த நிதின் தந்தை ஆசையோடு செய்து கொண்டிருந்த பிரிண்டிங் தொழில் நஷ்டத்தில் இருந்தாலும் அதை விட விரும்பாமல் கம்பெனிப் பொறுப்பை ஏற்று நடத்தத் தொடங்கி இருந்தான். தன்னுடைய முழு ஈடுபாட்டையும் கொடுத்து மெல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருந்தான்.
தங்கை நித்யபிரபா இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்க மீனாட்சியின் அண்ணன் மகனுக்கு அவளைக் கல்யாணம் பேசி முடிவாகும் நிலையிலிருந்தது. சாப்பிட்டு ஹாலுக்கு வந்தவன் கார் ஹாரன் சத்தம் கேட்க அன்னையுடன் வாசலுக்கு விரைந்தான்.
மாப்பிள்ளை சரவணன் குடும்பத்துடன் காரிலிருந்து இறங்கி வர பரபரப்புடன் நின்றிருந்த மீனாட்சி முகமெல்லாம் புன்னகையாய் கை கூப்பி வரவேற்றார்.
“வாங்கண்ணா… அண்ணி, வாங்க… வாங்க மாப்பிள்ளை… வாம்மா ஆனந்தி…” ஒவ்வொருவராய் அவர் வரவேற்க நிதின் பொதுவான ஒரு வணக்கமும், தலையசைப்புமாய் நிறுத்திக் கொண்டான்.
“நல்லார்க்கியா மீனாட்சி, என்ன மருமகனே… எப்படி இருக்கே…” என்ற அண்ணன் சங்கரனிடம், “நல்லார்க்கோம் அண்ணா, வாங்க உக்காருங்க…” என்று அழைத்துச் சென்று அமர வைத்தார்.
வெகு நாட்களுக்குப் பிறகு அங்கு வருவதால் அண்ணி உமா வீட்டைச் சுற்றிலும் கண்ணை ஓட்ட, ஆனந்தி ஆர்வத்துடன் அத்தை மகன் நிதினைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளும் நித்தியானந்தம் மறைவுக்கு வரும்போது தான் இறுதியாய் அவர்கள் எல்லாரையும் கண்டிருந்தாள்.
நல்ல உயரத்தில் அளவான உடற்கட்டில் லேசான தாடியுடன் கம்பீரமாய் இருந்தவனின் உதட்டில் சின்னதாய் ஒரு புன்னகை ஒட்டியிருக்க வெள்ளை சட்டை வெளிர்நீல நிற ஜீன்சில் பளிச்சென்று இருந்தான்.
“என்னப்பா நிதின், கம்பெனி வேலை எல்லாம் எப்படிப் போகுது…”
“GST வந்தபிறகு பொதுவாவே பிசினஸ் கொஞ்சம் டல் தான் மாமா… அதான் ஒரு லோன் எடுத்து நிட்டிங் யூனிட் ஒண்ணும் தொடங்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்…”
“ஓ நல்ல விஷயம்பா… நல்லபடியா சீக்கிரம் தொடங்கு…”
“ஏன் மீனாட்சி, இந்த வீடு லோன்ல தானே இருந்துச்சு… இப்பவும் லோன் இருக்கா…” என்றார் உமா.
“போன வருஷம் தான் லோன் முடிஞ்சு பத்திரம் எல்லாம் பாங்குல இருந்து வாங்கினோம் அண்ணி…”
“ம்ம்…” என்ற உமாவை எரிச்சலுடன் பார்த்தார் சங்கரன். உமாவுக்கு எதிலும் எப்போதும் கால்குலேஷன் தான். மீனாட்சி தயாராய் வைத்திருந்த குளிர்பானத்தைக் கொண்டு வந்து கொடுக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
“பிரபா ரெடியாகிட்டா வர சொல்லலாமே…” சங்கரன் கூறவும், அவராவது தன் மனதைப் புரிந்து கொண்டாரே என்ற ஆசுவாசப் பார்வை பார்த்த சரவணன் மாப்பிள்ளைக் களையோடு அழகாய் இருந்தான்.
“ஆனந்தி, பிரபா ரூம்ல இருக்கா… ரெடியாகிட்டாளான்னு பார்த்து நீயே அழைச்சிட்டு வாம்மா…” என்று பொறுப்பை அவளிடம் கொடுக்க, “சரி அத்தை…” என்ற ஆனந்தி பிரபாவின் அறைக்குள் நுழைந்தாள்.
எளிமையான அலங்காரத்திலும் அளவான உயரத்தில் கோதுமை நிறத்தில் அழகாய் இருந்த பிரபாவைக் கண்டு கண் சிமிட்டியவள், “அண்ணி, இந்த சேலைல சூப்பரா இருக்கே…” எனவும் நாணத்துடன் சிரித்த பிரபா, “என்ன ஆனந்தி, புதுசா அண்ணின்னு எல்லாம் கூப்பிடறே…” என்றாள் வெட்கத்துடன்.
“இத்தனை நாள் எனக்கு வயசுல சின்னவங்கிற உரிமைல வாடி போடின்னு பேர் சொல்லி அழைச்சிட்டு இருந்தேன்… இனி அப்படிக் கூப்பிட்டா என் அண்ணன் முறைப்பானே… அதான் உனக்கு பிரமோஷன் கொடுத்து இப்பவே அண்ணின்னு அழைக்க ஆரம்பிச்சுட்டேன்…” கூறிக் கொண்டே அவள் தலையிலிருந்த மல்லிகைப் பூவை சரி செய்தவள், “இன்னைக்கு உன்னைப் பார்த்து என் அண்ணன் பிளாட் ஆகப் போறான்… சரி… போகலாமா…” என்று அவள் கை பிடிக்க எழுந்து உடன் நடந்தாள் பிரபா.
அன்னை கொடுத்த காபி டிரேயை வாங்கி அனைவருக்கும் கொடுத்து நமஸ்கரித்தவள் ஆவலுடன் கடைக் கண்ணில் சரவணனைப் பார்க்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் புன்னகைத்து லேசாய் கண்ணைச் சிமிட்ட ஒரு நிமிடம் உடலெங்கும் ரத்தம் தாறுமாறாய் ஓர கன்னம் சிவக்க தலை குனிந்து கொண்டாள். 
அந்த நொடிநேரப் பார்வைப் பரிமாற்றத்தைக் கண்டுவிட்ட நிதின் மனதில் மறக்க நினைத்த முகமொன்று அலையடிக்க சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதே நேரத்தில் அதைக் கண்டு புன்னகையுடன் நிதினை நோக்கிய ஆனந்தி அவனது முகத்தைக் கண்டு வியந்தாள். அதில் அடக்கி வைக்கப்பட்ட வலி தெரிய முகம் இறுகிக் கிடந்தது.
மறக்க நினைத்தே
நிதமும் நினைத்துக்
தொலைகிறது மனது…
மறக்க மனம் கூடுதில்லையே…

Advertisement