Advertisement

அத்தியாயம் – 21
புருவங்கள் முடிச்சிட கண்களில் சட்டென்று நீர் நிறைய யோசனையுடன் நிதினைப் பார்த்தாள் சஹானா. “இ…இவன் என்ன சொல்கிறான்… எனக்கு நடந்த கசப்பான, கொடூரமான விஷயம் இவனுக்குத் தெரியுமென்றா…”
அவள் கண்ணில் துளிர்த்த நீருடன் தன்னையே அதிர்ச்சியோடு பார்ப்பதைக் கண்ட நிதின், “சஹி… நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்லையே… அப்புறம் எதுக்கு உனக்கு இந்த குற்றவுணர்ச்சியும், விலகலும்… நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளு… எல்லாத்தையும் மறந்திடு…” என்றவன் அவள் கையைப் பிடிக்க சட்டென்று இழுத்துக் கொண்டவள் கோபத்தில் ஜொலிக்கும் கண்களுடன் முறைத்தாள்.
“என்ன சொன்ன, மறக்கிறதா… நான் அனுபவிச்ச வேதனையும் வலியும் இந்த உடம்பு மண்ணோட போற வரைக்கும் மாறாது… உன்னையே நினைச்சிருந்த என் புனிதத்தை அவனுங்க நாசமாக்கிட்டாங்க… நான் தப்பு செய்யலேன்னாலும் களங்கப்பட்டது என் உடம்பு… அதை என் பரிசுத்தமான காதலுக்கு பரிசளிக்க முடியாது… உனக்கு நான் தகுதியானவ இல்ல… என்னை விட்டிரு…” என்றவள் அந்த நினைவின் தாக்கத்தில் முகத்தை மூடிக் கொண்டு சோபாவில் அமர்ந்து கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.
“சஹி… முதல்ல அழறதை நிறுத்து… நீ முதன் முதலா என் கழுத்துல மாலையைப் போட்டியே… அப்பவே நாம புருஷன், பொண்டாட்டி ஆகிட்டோம்… நான் நேசிச்சது உன்னோட காதலைத்தான்… அதை யாராலயும், எந்தக் காலத்திலயும் களங்கப்படுத்த முடியாது… எனக்கு சொந்தமான உன்னை வேதனைப்படுத்தின ஒருத்தனையும் நான் சும்மா விட மாட்டேன்… அவங்க தப்புக்கான தண்டனையைக் கொடுத்தே தீருவேன்…” அவள் தோளில் கை வைத்து ஆறுதலாய் அதே நேரம் உறுதியான குரலில் கூறினான் நிதின்.
“தண்டிப்பியா, என்னைக் கண்ட இடத்துல தொட்டு அசிங்கப் படுத்தின அந்தக் கைகளை வெட்டிப் போடுவியா… மனசு நிறைய ஆசையும் காதலுமா இருந்த என் வாழ்க்கையை கானலா மாத்தின அந்தப் பாவிகளை வெட்டிக் கூறு போடுவியா…” ஆத்திரமும், அறுவறுப்பும் முகத்தில் ஒன்றாய் தெரிய அனுபவித்த வலி முகத்தில் படர ஆவேசமாய் கேட்டவளை நிதானமாய் நோக்கினான் நிதின்.
“நிச்சயம் அவங்களை தண்டிப்பேன்…” அவனது குரலில் இருந்த உறுதி அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததோ என்னவோ பைத்தியம் போல ஆவேசமாய் கண்ணில் நீருடன் பேசிக் கொண்டிருந்தவள் முகத்தில் ஒரு ஒளி தெரிய மெல்லப் புன்னகைத்தாள்.
“ரூபன், நீ என்னை சமாதானப்படுத்த சொல்லலையே… நிஜமா தான் சொல்லறியா…”
“நம்ம காதல் மேல சத்தியமா சொல்லறேன்…” அவன் சொல்லவும் அந்தப் புன்னகை பெரிதானது.
“தண்டிக்கணும்… மனுஷ ரூபத்தில் திரியும் அந்தக் கொடூர அரக்கன்களை சித்திரவதை செய்து கொல்லணும்…” அவள் தனக்குள்ளேயே கூறிக் கொண்டு அமர்ந்திருக்க அவளது தோளில் ஆதரவாய் கை வைத்தான் நிதின். அவளது தேகம் மெலிதாய் நடுங்கிக் கொண்டிருக்க பெரிது பெரிதாய் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தாள்.
பழைய நினைவில் சுயம் மறந்து அவள் உழன்று கொண்டிருப்பது புரிய, “சஹிம்மா, ரிலாக்ஸ்டா… உனக்கு நானிருக்கேன்…” அவளது காதில் மெல்ல கிசுகிசுத்தவன்   அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளைத் தன் தோளில் சாய்த்து இதமாய் முதுகில் தட்டிக் கொடுத்தான். சற்று நேரத்தில் அவள் இயல்புக்குத் திரும்ப சட்டென்று அவனிடமிருந்து விலகி எழுந்து கொண்டாள்.
“சஹி, உன் அன்பில் எந்த களங்கமும் இல்லேன்னா நம்ம காதல் செத்துப் போகலேன்னு தான அர்த்தம்… உனக்கு நான் வேணுமோ இல்லையோ, எனக்கு நீ இல்லாம வாழ முடியாது… அதனால இனி நீ என்னை விட்டுப் போகவோ, விலகவோ முயற்சி செய்யக் கூடாது… மீறிப் போனா, இந்த உலகத்தில் நானிருக்க மாட்டேன்…” அழுத்தமாய் சொல்லிவிட்டு எழுந்தவன் கதவைத் திறந்து வெளியேறினான். அந்த வார்த்தையில் விக்கித்துப் போனவள் அவன் செல்வதையே பிரம்மித்து நோக்கி நின்றாள். அவனது அன்பின் ஆழம் மனதை நெகிழ்த்த கண்களில் அருவியாய் கண்ணீர் கொட்டியது.
இதற்குத்தானே… இப்படி எதுவும் சம்பவித்திடக் கூடாதென்று தானே அவளைப் பற்றி எதுவும் அவனுக்குத் தெரியக்கூடாது என்று நினைத்தாள். அவள் மீது அவன் கொண்டிருந்த நேசம் அவளை வெறுக்க விடாமல் இப்படித்தான் அவனை யோசிக்க வைக்குமென்று தானே விலகிச் சென்றாள். இப்படிப்பட்ட பேரன்பை பெற்றிருந்தும் அவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தவள் தன் நிலையை எண்ணி இயலாமையில் கண்ணீர் விட்டுக் கதறினாள்.
“என் ரூபன்… என்னை உயிராய் நினைக்கும் ரூபன்… அவனோடு எப்படி எல்லாம் வாழ வேண்டுமென்று கனவு கண்டிருந்தேன்… எல்லாம் கனவாகவே கலைந்துவிட்டதே…” தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
அவர்களுக்குத் தனிமை கொடுத்து குழந்தையுடன் அறைக்குள் அமர்ந்திருந்த சசிகலாவின் மனம் எப்போதும் போல மகளின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்வியில் கலங்கிக் கொண்டிருந்தது.
சஹானாவின் அதட்டலில் பயந்து “டாதி வேணும் பாத்தி…” என்று அழுது கொண்டிருந்த குழந்தையை சமாதானப் படுத்தி ஒருவழியாய் உறங்க வைத்தார். அன்று மாலை வீட்டுக்கு வந்துவிட்ட சாதனா, தன்னோடு பேசாத சஹானாவை சமாதானப்படுத்த முயல, அவள் கோபமாய் கத்தினாள்.
“வேண்டாம் சது, நீ எதுவும் சொல்லாத… அவன்கிட்டே எதையும் சொல்லக் கூடாதுன்னு சொல்லியும் எல்லாத்தையும் சொல்லி இருக்கீங்க… எனக்குத் தெரியாம சொந்தம் கொண்டாடி அவன் மனசுல ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கீங்க… இப்ப நான் என்ன பண்ணுவேன்… அவனோட தூய்மையான அன்புக்கு களங்கமான நான் எப்படி பொருத்தமாவேன்… எல்லாம் உங்களாலதான…” கோபத்தில் கத்தியவளின் முன்பு புன்னகையுடன் நின்றாள் சாதனா.
“சஹா, எல்லாத்தையும் கத்தி முடிச்சாச்சா, இப்போ நான் பேசலாமா…” என்றவளை முறைத்தாள் சஹானா.
“இங்க பாரு சஹா, தப்பு செய்தவங்க தான் தண்டனை அனுபவிக்கணும்… எந்தத் தப்பும் செய்யாத நீ எதுக்கு தண்டனை அனுபவிக்கணும்… உன் மனசுல நிதின் மேல அப்ப எத்தனை காதல் இருந்துச்சோ அதே காதல் இப்பவும் இருக்கு… இல்ல இல்ல, அதை விடக் கூடியே இருக்கு… அப்புறம் எதுக்கு நீ தேவையில்லாம யோசிக்கற… களங்கம் மனசுல தான் இருக்கக் கூடாது… உனக்கு நடந்தது ஒரு விபத்து… உன் சம்மதம் இல்லாம நடந்த விபத்து… அதுக்கு காரணமானவங்களை தண்டிக்கணும்… அது நியாயம்… ஆனா நீ எதுக்கு தண்டனையை அனுபவிக்கணும்…”
“ஏய் சது, உளறாத… நடந்தது விபத்துன்னாலும் ஒரு பொண்ணு எதை இழக்கக் கூடாதோ அதை நான் இழந்துட்டேனே… அதுக்கு அடையாளமா ஒரு அசிங்கத்தை வேற பெத்து வச்சிருக்கேன்… போதும் விட்டுரு… உங்களுக்கு என்னோட வலியை புரிஞ்சுக்க முடியாது…” சொன்னவள் கோபத்துடன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். புயலடித்து ஓய்ந்தது போல வீடே சட்டென்று மௌனமாக பெருமூச்சுடன் அன்னையிடம் சென்றாள் சாதனா. அவளைக் கண்டதும், “அம்மா…” என்று கட்டிக் கொண்ட குழந்தையை முத்தமிட்டு கையிலிருந்த ஜெம்ஸ் பாக்கெட்டைக் கொடுக்க சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டவள் அவள் மடியிலேயே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.
“என்னம்மா, இவ சொன்னதையே சொல்லிட்டு இருக்கா… நிதின் அவ்ளோ சொல்லியும் இப்படி பேசினா எப்படி… கொஞ்சம் கூட மாத்தி யோசிக்க மாட்டேங்கிறாளே…”
“ம்ம்… அவ மனசுல உள்ள காயம் அவ்ளோ சீக்கிரம் ஆறிடுமா… கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும்… ஆனா ஒவ்வொரு முறையும் குழந்தையை இவ்ளோ வெறுப்பா பேசறாளே… அதான் என்னால தாங்கிக்க முடியல… அந்தப் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு…” கலங்கிய குரலில் சொன்னவர், “சஹாக்கு தலை வலிக்குதுன்னு சொன்னதுக்கு அவ என்ன பண்ணினா தெரியுமா…” என்று குழந்தை சஹாவின் நெற்றியில் விக்ஸ் தேய்த்து விடும் வீடியோவைக் காண்பிக்க, ஆச்சர்யத்துடன் நோக்கினாள். “சஹாவைக் கண்டாலே பயத்துல பக்கத்துல போக மாட்டா… இது எப்படி மா…” திகைப்புடன் கேட்டவள், “என் செல்லக்குட்டி…” குழந்தையின் கன்னத்தில் முத்தமிட, அவளும் திருப்பி இவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“அதுதான்டி ரத்த பந்தம்னு சொல்லறது… என்னதான் இவ குழந்தையை விரட்டினாலும் அவ மனசுக்குள்ள பாசம் இல்லாமப் போகுமா… அதே போல வயித்துல சுமந்து பெத்த குழந்தை மேல சஹாக்கு ஏன் தோண மாட்டேங்குதுன்னு தான் தெரியல… ஹூம்… காலம் தான் எல்லாத்துக்கும் ஒரு மாற்றத்தைக் கொடுக்கணும்…” என்றார் பெருமூச்சுடன்.
“ஹூம்… சீக்கிரமே மாற்றம் வரும் மா…” என்றாள் சாதனா.
“ம்ம்… நரேன் மாப்பிள்ளை எப்ப ஊருக்கு வரேன்னு சொன்னாரா… நிர்மலாவுக்கு ஏதோ வரன் சரியாகற போல இருக்குன்னு சொன்னே… என்னாச்சுமா…” என்றார் சசிகலா.
“நரேன் இன்னும் ரெண்டு நாள்ல வந்திருவார் மா… நிர்மலாவுக்கு வந்த வரனை எல்லாருக்கும் பிடிச்சிருக்கு… நல்ல குடும்பம்… பையனுக்கு வில்லேஜ் ஆபீஸ்ல வேலை… தூரத்து சொந்தம் வேற… நரேன் வந்து எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டா பிக்ஸ் பண்ணிடலாம்னு நிஷாந்தி அக்கா சொன்னாங்க…” என்றாள் சாதனா.
“ம்ம்… எல்லாம் நல்லபடியா முடியட்டும்மா… அடுத்து உங்களுக்கும் சீக்கிரமே எல்லாம் கூடி வந்தா நானும் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” என்றார் கண்களில் ஏக்கத்துடன். அவர் மனதிலுள்ள ஆசை என்னவென்று தெரியுமாதலால், “உன் ஆசைப்படி எல்லாம் நடக்கும்மா…” என்ற சாதனா, “அம்மா, நான் போன் பண்ணிட்டு வந்திடறேன்…” என்று குழந்தையை அவர் மடியில் இருத்திவிட்டு தனது அறைக்கு சென்றாள்.
மேலும் நான்கு நாட்கள் ஓடியிருக்க சஹானா முதலில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாலும் இப்போது சற்று சகஜமாகி இருந்தாள். அடுத்து நிதினைக் கண்டால் அழாமல் இப்படி எல்லாம் பேச வேண்டும். தன்னால் அவனைக் கல்யாணம் முடித்து சந்தோஷமாய் வாழ முடியாது என்பதை உறுதியாய் கூறிவிட வேண்டும்… என்றெல்லாம் யோசித்து உருவேற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் அவள் கண்ணிலேயே படவில்லை.
சரவணனும் ஒரு வார விடுப்பு எடுத்துக் கொண்டு ஹனிமூனுக்கு ஊட்டி சென்றிருந்தான். அன்று வேலை சற்று குறைவாக இருக்கவே மேசையில் உள்ள கோப்புகளை சரியாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் நிதினின் லோன் அப்ளிகேஷன் பட, எடுத்தவள் வேண்டிய விவரங்களை சரி பார்த்து மானேஜரின் மேசைக்கு அனுப்பி வைத்தாள். அதை சரி பார்த்த மானேஜரும் நிதினை அழைத்து நேரில் வரும்படி கூற சொன்னார்.
அவனை எப்படி தான் அழைப்பது எனத் தயங்கியவள் வேறு யாரையும் அழைக்க சொல்லலாமா என யோசித்துவிட்டு, “வேண்டாம்… எனக்கென்ன தயக்கம்… நான் என்ன அவனைக் கண்ணே, மணியே என்று கொஞ்சவா போகிறேன்… தொழில் ரீதியாகத் தானே அழைக்கிறேன்…” என தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அலைபேசியை எடுத்தாள். அப்ளிகேஷனில் இருந்த அலைபேசி எண்ணை அவளது அலைபேசியில் அமர்த்தும்போது கைகள் மெலிதாய் நடுங்கின. அழைப்பு போய் ரிங்காகிக் கொண்டிருக்க அவளது இதயம் அதைவிட வேகமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அழைப்பு எடுக்கப்படாமலே முழுதும் அடித்து ஓய, “தாங்கள் விளிக்குந்த சப்ஸ்கிரைபர் பரிதிக்குப் புறத்தானு…” என்று மலையாளத்தில் சம்சாரிக்கவும், “இவன் எதுக்கு கேரளாவுக்குப் போனான்…” என்றவள் யோசனையுடன் நெற்றியை சுளித்தாள்.
காலிகட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.
அடுத்த விமானத்துக்காய் காத்திருந்த அழகான பளபள ஸ்லீவ்லெஸ் பெண்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டே கண்ணாடிச் சுவர்களுடன் பிரம்மாண்டமாய் இருந்த ஏர்போர்ட்டில் இருந்து தனது லக்கேஜை தள்ளிக்கொண்டு வெளியே வந்தான் ஆகாஷ். வெளிநாட்டு வாசம் சிவந்தவனை மேலும் சிவப்பாக்கியிருக்க கண்ணிலிருந்த கூலரை தூக்கி தலையில் சொருகியிருந்தான். பயணிகளுக்காய் காத்திருந்த கூட்டத்தில் கண்கள் ஆவலுடன் யாரையோ தேட அவனை நோக்கிக் கையசைத்த நண்பனை நோக்கிப் பெரிதாய் புன்னகைத்தான்.
“டேய் மச்சான்… நீ ஆளே மாறி நல்லா கொழுத்துப் போயி வந்திருக்கியே டா…” கேட்டுக் கொண்டே அவனிடம் ஓடி வந்து கை பற்றியவனிடம் புன்னகைத்து காதில் ஏதோ கிசுகிசுக்க, அவன் வில்லங்கமாய் சிரித்தான்.
“ஆஹா, அதுதான் உன் அழகின் ரகசியமா… உனக்கு உடம்பெல்லாம் மச்சம்டா மச்சான்… நீ இப்படி ஜாலியா செலவு பண்ணறதுக்கு வேண்டி தான உன் அப்பா சம்பாதிச்சு கொட்டுறார்… ஹூம் நீயில்லாம நாங்கதான் ஒண்ணுமே கிடைக்காம காஞ்சு கருவாடா கிடக்கறோம்டா… இனிதான் உன் புண்ணியத்துல கொஞ்சம் உஷார் ஆகணும்…” சொல்லிக் கொண்டே அவனது பாகில் இரண்டை வாங்கிக் கொண்டு நடந்தான்.
“ஹாஹா அதெல்லாம் தூள் கிளப்பிடுவோம், அப்புறம் இங்கே என்ன விசேஷம்…” அவன் தோளில் கையிட்ட ஆகாஷ் கேட்க, பதில் சொல்லிக் கொண்டே கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தனர் இருவரும்.
வெகு நாட்களுக்குப் பிறகு தனது பென்ஸ் காரை ஆவலுடன் தடவிய ஆகாஷ் உள்ளே நுழைந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தான். ஷிவா லக்கேஜை காருக்குள் திணித்துவிட்டு அவன் அருகில் அமர காரைக் கிளப்பினான். தனது தாய்மண்ணை மிதித்த சந்தோஷத்தில் ஆர்வமாய் சுற்றிலும் பார்த்துக் கொண்டே வண்டியை விட்டான் ஆகாஷ்.
அவனை காலிகட்டிலிருந்து பாலக்காடு அழைத்துச் செல்வதற்காய் தந்தை கார் ஏற்பாடு செய்வதாய் கூற தனது நண்பனிடம் பென்சைக் கொடுத்து அனுப்புமாறு கூறியிருந்தான் ஆகாஷ். அது அவனுடைய பல குற்றங்களுக்கும் சாட்சியாய் இருந்த ராசியான வண்டி என்பதால் உடனே காண ஒரு ஆர்வம்.
இருவரும் ஏதேதோ பழைய விஷயங்களைப் பேசி சிரித்துக் கொண்டிருக்க, “டேய் மச்சான், இப்படியே சிங்கிளாவே சுத்திட்டு போர் அடிக்கலயா… எப்ப கல்யாணம் பண்ணிக்க உத்தேசம்…” என்றான் ஷிவா.
“கல்யாணம் பண்ணாமயே வேண்டியதெல்லாம் கிடைக்கும் போது எதுக்கு அந்த கருமத்தை பண்ணிட்டு… அதுல எனக்கு விருப்பமும் இல்லை… அழகா பொண்ணுங்களைப் பார்த்தமா, ரசிச்சமா, கிடைச்சா அனுபவிச்சமா… அப்படியே லைப்ப என்ஜாய் பண்ணிட்டுப் போயிட்டே இருக்கணும் அதான் என் பாலிசி மச்சான்…” என்றான் சிரிப்புடன்.
“நல்ல பாலிசி தான் மச்சான்… எல்லாருக்கும் இப்படி என்ஜாய் பண்ண முடியாதே… அப்புறம் நீ முன்னாடி நூல் விட்டுட்டு இருந்தியே நிர்மலா… அதுக்குக் கல்யாணம் பேசியிருக்காங்க…” அவன் கூறியதும் வியப்புடன் புருவத்தைத் தூக்கிய ஆகாஷ், “அட, அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா… நான் நூல் விட்டதுலயே அவ ஒருத்தியைத் தான் மிஸ் பண்ணிட்டேன்… எனக்குப் பல பிரச்சனைகளை கொடுத்து அசிங்கப்படுத்திட்டு எஸ்கேப் ஆகிட்டா…”
“ம்ம்… ரொம்ப நாளாப் பார்த்துட்டு இருந்தாங்க… இப்ப தான் சொந்தத்துல சரியாகி இருக்கு…” என்றான் ஷிவா.
“ஓ, என் பழைய டார்லிங்க உடனே பார்க்கணும் போலருக்கே மச்சி…” என்றவன், “அப்புறம் அங்கே நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க… அந்தத் திமிர் பிடிச்ச சாதனா என்ன பண்ணிட்டு இருக்கா… அவ உடன்பிறப்புக்கு ஒரு குழந்தைய வேற நம்ம கேங்கு பரிசாக் கொடுத்திருக்கே, அது என்னாச்சு…” என்றான் கிண்டலுடன்.
“அவங்க இப்ப நம்ம ஊருல இல்லடா… அவளுக்கு பாங்குல வேலை கிடைச்சு குடும்பத்தோட தமிழ்நாட்டுக்குப் போயிட்டாங்க…” என்றான் ஷிவா.
“ஓ, அந்தப் பிசாசு ஊரை விட்டே ஓடிட்டாளா… தொலையட்டும், என்ன ஆட்டம் ஆடினா, என்னை எவ்ளோ அசிங்கப் படுத்தினா… அதுக்கெல்லாம் அனுபவிக்க வேண்டாமா…” என்றான் கோபத்துடன்.
“சரி விடு… அது முடிஞ்சு போன கதை… நாம புதுசா எதையாச்சும் பேசுவோம்…” என்றான் ஷிவா.
“ம்ம், அந்தத் திமிர் பிடிச்சவளுக்கு கல்யாணம் ஆயிருச்சா இல்லியா…”
“அந்த நிர்மலா அண்ணன் நரேனுக்கு தான அவளைப் பேசி இருந்தாங்க… நரேன் இப்ப வெளிநாட்டுல இருக்கான்… அதனால வெயிட்டிங்ல இருக்கான்னு நினைக்கிறேன்…”
“அவளுக்கு இப்ப இல்ல, எப்பவுமே கல்யாணம் ஆகக் கூடாது மச்சி… அவ இப்படியே நித்யகன்னியா வாழ்ந்து நொந்து சாவணும்…” என்றான் ஆவேசத்துடன்.
“சரி விடுடா… பார்த்துக்கலாம்… அங்கிருந்து சரக்கு கொண்டு வர சொன்னமே… கொண்டு வந்தியா…” என்றான் ஆவலுடன். “அதெல்லாம் நிறையவே கொண்டு வந்திருக்கேன்… என் பிறந்தநாளை குடிச்சுக் கொண்டாடித் தீர்த்திடுவோம்…” அவன் சொல்லவும் குதூகலமாய் சிரித்தான் ஷிவா.
வெண்மதியை மேகம் மூடினால்
நிலவுதான் களங்கமாகுமா…
பாலின் மேல் ஆடை படிந்தால்
பாலும் தான் களங்கம் கொள்ளுமா…
நிலவைப் போல் உன்னிலும்
இல்லையடி சிறு களங்கம்…
பாலைப் போல் உன் அன்பும்
பரிசுத்த காதலடி…
காற்றாலும் கரைவதில்லை…
நோற்றாலும் வருவதில்லை…
குற்றமென்ன கண்மணியே
களங்கமில்லை காதலுக்கு…

Advertisement