Manjal Kaattu Maina 9 2 9227 வளர்மதியின் பிறந்த வீட்டினரை பற்றி அவரிடம் சொல்லியிருந்தார். “என் பிறந்த வீடு சரியில்லை அய்யா. என் அண்ணனுங்களுக்கு என்மேல பெருசா அக்கறையில்லை. புகுந்த வீடுன்னு இப்போதான் சொந்தம் ஒன்னு சேர்ந்து வருது. என் பொண்ணு நாளைக்கு தனிச்சு நின்னுட கூடாது. நான் இல்லைன்னாலும் அவ நல்லா வாழணும். உங்க பையன் பத்தி நான் தப்பா சொல்லலை. ஆனா என் பொண்ணுக்கு எங்க சொந்தம் வேணும்” என்று பசுபதியிடம் மிகவும் வருத்தத்துடன் சொல்லியிருந்தார் வளர்மதி. வளர்மதி கோவமாக சண்டை போட்ட போதெல்லாம் பசுபதிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவர் வருத்தப்பட்டு பேசும் நேரம் அவருக்கு மனது உறுத்தியது. அப்போதும் மகனுக்காக, “கொஞ்சம் யோசிங்க டீச்சர். என் மகன் உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பான். எங்க சொத்து பத்தும் உங்களுக்கு தெரியும். என் குடும்பமும் உங்களுக்கு தெரியும். நீங்க எதிர்பார்த்த சொந்தமும் துளசிக்கு கிடைக்கும். வேற ஆளுங்கன்னு” என்று பேச, “அய்யா. நான் மறுத்து பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க” என்று இடைவெட்டினார் வளர்மதி. “நான் நமக்குள்ள இருக்க வித்தியாசத்தை வைச்சு வேணாம்ன்னு சொல்லலை. தேவாவை பத்தியும் எந்த குறை இல்லை. ஆனா என் பொண்ணுக்கு விருப்பம் இருக்கணும் இல்லை“ பசுபதிக்கு முகம் கருத்து போனது. இதை மீறி வேறென்ன பேச? “துளசிக்கு தேவாவை பிடிக்கலை. இனி இந்த பேச்சு வேண்டாம். முடிஞ்சா உங்க பையனுக்கு சொல்லி புரிய வைங்க” என்று விடைபெற்றுவிட்டார். இப்போது அதெல்லாம் பசுபதிக்கு நினைவு வர, என்ன பயன்? தேவா கட்டுப்பாட்டை மீறி திமிறி நிற்கிறான். “சொன்னா கேளு தம்பி. நாம போலாம்” என்று மகனின் கை பற்றி கெஞ்சலாக கேட்டார் தந்தை. துளசிக்கு கல்யாணம் என்பதிலே அவன் அவனாகவே இல்லை. இதில் தந்தை பேச்செல்லாம் அவனுக்கு எங்கு கேட்கும்? என்ன உணர முடியும்? முழுதாக மாறி நிற்கிறான். கோவம், பயம், நடுக்கம், ஆக்ரோஷம், ஏமாற்றம் என்று அவனுக்குள் ஆயிரம் போராட்டம். தொண்டை எல்லாம் ஏன் வலிக்கிறது என்று தெரியாமல் வலித்து தொலைத்தது. அடைக்கும் நெஞ்சை தடவி விட்டு கொண்டவன், “எனக்கு பேசணும்ப்பா. ப்ளீஸ்” என்றான். பசுபதிக்கு ஐயோ என்று வந்தது. மகன் இந்தளவு தீவிரமாக இருக்கிறானா? “என்ன பேசணும் உனக்கு? சொல்லு நான் கேட்கிறேன்” என்று வளர்மதியின் அண்ணன் நின்றார். “நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. நான் டீச்சர்கிட்ட பேசணும்” என்றான் தேவா. “வளர்மதி என்னோட தங்கச்சி தான். நீ என்கிட்டேயே பேசு“ அவரை ஒதுக்கிவிட்டு வளர்மதியிடம் வந்த தேவா, “நான் என்ன பண்ணா துளசியை எனக்கு கொடுப்பீங்க” என்று கேட்டு நின்றான். தேவாவின் கேள்வியில் தெரிந்த ஏக்கத்தில், அவன் கலங்கிய கண்களில் வளர்மதிக்கு வாயடைத்து போனது. “என்ன கேட்கிற நீ? துளசி வேணுமா உனக்கு?” என்று மீண்டும் தேவாவின் முன்பு வந்து நின்றார் அவர். “ண்ணா. நான் பேசிக்கிறேன்” என்று வளர்மதி சொல்ல, “நீ அமைதியா இரு. கல்யாணம் நிச்சயமான பொண்ணை போய் கேட்டுட்டு இருக்கான்” என்று அவர் சத்தமிட, “ஏங்க. கொஞ்சம் பொறுமையா பேசுங்க. விஷயம் நம்மளோட இருந்தா போதும்” என்றார் வைரவேல். “ஏன் வெளியே தெரிஞ்சா உன் வீட்டு பிள்ளை மானம் போயிடும்ன்னு பயப்படுறீங்களா?” “ண்ணா. என்ன பேசுறீங்க? துளசி விஷயம் வெளியே தெரியறதுல எனக்கு இஷ்டமில்லை” என்றார் வளர்மதி கோவமாக. “அதுக்காக இவன் வந்து பிரச்சனை பண்ணா நாம அமைதியா இருக்கணுமா?” “யாரும் இப்போ பிரச்சனை பண்ணலை. என் மகன் பேசத்தான் வந்திருக்கான்“ “அடுத்த வாரம் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு என்ன பேச போறீங்க? கிளம்புங்க முதல்ல“ “எனக்கு துளசி வேணும்” என்றான் தேவா. “டேய் சொல்லிட்டே இருக்கேன். கிளம்புடா முதல்ல” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினார் அவர். “ஏங்க தள்ளுறீங்க? கை எடுங்க முதல்ல” என்று வைரவேல் அதட்டலிட. “என் ஊருக்கு வந்து என் பையன் மேலயே கை வைப்பியா நீ? தள்ளி நில்லுயா” என்றார் பசுபதியும் கோவமாக. துளசி அப்போது தான் வீட்டுக்குள் வந்தவள், இந்த சத்தத்தில் பயந்து போனாள். அதிலும் தேவாவின் பார்வையில் பெண்ணுக்குள் குளிர் எடுத்தது. தேவா நேராக அவளின் முன் வந்து நின்றவன். “என்னடி இது?” என்று கல்யாண பத்திரிக்கையை விசிறி அடித்தான். “எப்போடா ஊரை விட்டு போவேன், கல்யாணம் பண்ணலாம்ன்னு காத்திருந்தியா?” என்று கத்திவிட, துளசி அச்சத்தில் மிரண்டு போனாள். வளர்மதி வேகமாக மகளின் முன் வந்து நின்றவர், “தேவா. அவகிட்ட இப்படி பேசாத” என்று எச்சரித்தார். “அவகிட்ட என்ன பேசவும் எனக்கு உரிமை இருக்கு, நீங்க என்ன பேசாத சொல்றது” என்று எகிறினான். துளசியை விட்டுவிட கூடாது என்பதே அவனை கட்டுப்பாடில்லாமல் இயங்க வைத்தது. “உனக்கு உரிமை இல்லை தேவா. அது கிடைக்கவும் கிடைக்காது” என்று வளர்மதி சொல்ல. “அதை நீங்க சொல்லாதீங்க“ “என் பொண்ணு சொன்னா“ “எங்க சொல்ல சொல்லுங்க அவளை” தேவாவிற்கு எனோ அவனின் காதல் மீது அளவில்லா நம்பிக்கை. ஆனால் காதலிக்கும் பெண்ணை பற்றி அவன் மறந்துவிட்டான். காதல் இருபக்கமும் இருக்க வேண்டுமல்லவா? “சொல்லு துளசி” என்று வளர்மதி மகளை முன்னிறுத்தினார். “சொல்லு. தேவா தான் உனக்கு வேணும்ன்னு சொல்லு” என்றான் தேவா. அவளின் பயம் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. என் காதல் அவளுக்கு புரியும், தெரியும். என்னை எப்படி வேணா சொல்வா? தேவாவின் கால்களை பார்த்தவாறே நின்ற பெண், “எனக்கு உங்களை பிடிக்கலை” என்றாள். ஆஹ். காதடைத்து போனதோ? தேவா இரு காதுகளையும் சத்தமாக அடித்து கொண்டான். “அதான் எங்க பொண்ணு சொல்லிடுச்சு இல்லை. கிளம்பு போ” என்று அவனை தள்ளினார் வளர்மதியின் அண்ணன். “ஹேய்” என்று அவரிடம் விரல் நீட்டி கர்ஜித்த தேவா முகத்தில் அவ்வளவு கோவம். “நீ சொல்லு. ஏதும் பேசுனியா என்ன?” என்று துளசியின் முகத்துக்கே நேரே குனிந்தான். துளசி கால்களை பின்னால் இழுக்க, “நில்லு” என்று அவள் கையை பற்றினான். “தொடாதடா” என்று வளர்மதியின் அண்ணன் அவன் கையை பிரிக்க, “நீ சொல்லு” என்றான் கையை விடாமல். இருவரின் அழுத்தத்தில் துளசி கை வலிக்கண்டு, கண்கள் கலங்கியது. “எனக்கு நீங்க வேணாம்” என்றாள் துளசி கொஞ்சம் சத்தமாக. தேவா பிடி நழுவ, தளர்ந்த பாதத்தை நன்றாக ஊன்றி கொண்டான். துளசி அவன் கண்ணுக்குள் மறைய ஆரம்பிக்க, சட்டையில் கண்களை துடைத்து கொண்டவன், தன் முன் நின்ற பெண்ணை வெறித்தான். “தேவா. போலாம் சாமி” என்று அவன் தோள்களை தன்னோடு அணைத்து கொண்டார் வைரவேல். ‘இருங்க‘ என்று சைகையிலே சொன்னவன், துளசியை பார்த்தான். ‘இவளை எப்படி விடுவேன். ம்ஹூம். முடியாது‘ கமறும் தொண்டையை செருமி கொண்டவன், “உனக்கு என்னை பிடிக்காதா?” என்று கேட்க, “ஆம்” என்று தலையசைத்தாள் பெண். ஜீரணிக்க நேரம் கொடுத்து, “சரி. எனக்கு உன்னை பிடிக்கும். எனக்கு ஒரு வாய்ப்பை கொடு” என்றான். “இல்லை” என்று தலையசைத்தவளின் இரு கைகளையும் பிடித்து கொண்டவன், “ப்ளீஸ் துளசி. எனக்குள்ள நீ ரொம்ப ஆழத்துக்கு போயிட்ட. பிரிக்க முடியாது” என்றவனின் கண்ணீர் துளி பெண்ணின் கையில் பட்டு தெறித்தது. துளசி அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க, வேகமாக சட்டையில் கண்ணை துடைத்து கொண்டவன், “எனக்கு உன்னை விட முடியாது” என்றான். “அதான் துளசி பிடிக்கலை சொல்லிடுச்சு இல்லை, இன்னும் எதுக்கு இப்படி கெஞ்சிட்டு நிக்கிற. விடுடா கையை” என்று அவன் கைகளை பிரித்து தள்ளிவிட்டார் வளர்மதியின் அண்ணன். தேவா அப்போதும் துளசியை பார்த்திருக்க, “அடுத்த வாரம் கல்யாணம் வைச்சிருக்க பொண்ணு பேரை கெடுக்க வந்திருக்கீங்களா?” என்று அவர் எகிற, “துளசி” என்றான் தேவா. “நீ உள்ள போம்மா. போன்னு சொல்றேன் இல்லை” என்று துளசியை அதட்ட, பெண் தேவாவை கடந்து அறைக்குள் செல்ல போனாள். தேவா மீண்டும் அவள் கைப்பற்றி நிறுத்தியவன், “நான் இனி உன்னை பயமுறுத்துற மாதிரி பேச மாட்டேன். உனக்கு என்கிட்ட அது தான் பிடிக்கலையோ என்னவோ? நான் அதை இப்போவே மாத்திக்கிறேன். பாரு மெதுவா பேசுறேன். இல்லை பேசாம கூட இருந்துக்கிறேன். அதுக்காக எல்லாம் என்னை வேணாம் சொல்ல கூடாது துளசி” என்றான். “தேவா புரிஞ்சுக்கோ அவளுக்கு உன்னை பிடிக்கலை. அவளை விடு” என்று வளர்மதி மகளை தன்னோடு நிறுத்தினார். தேவா அப்படியா என்று பெண்ணை பார்க்க, அவள் ஆமா என்று தலையசைத்தாள். “போதும் தேவா. நாம கிளம்பலாம்” என்று பசுபதி அதற்கு மேல் மகனை பார்க்க முடியாமல் இழுத்து சென்றார். கண் மறையும் வரை துளசியை தான் எதிர்பார்ப்போடு, ஏக்கத்தோடு, ஏமாற்றத்தோடு பார்த்து சென்றான் தேவா. இன்று கோர்ட்டில் அன்றிருந்த வளர்மதியின் அண்ணன் தான் வந்து நிற்கிறார்.