மஞ்சள் காட்டு மைனா 8

துளசியின் வழக்கில் நல்ல முன்னேற்றம். சந்தோஷிடம் இருந்து விடுதலை கிடைப்பதற்கான அத்தனை சாத்தியமும் கண் முன் தெரிந்தது.

வைரவேலின் விடா முயற்சி அப்படி. மனிதர் மிகவும் வலுவாக துளசி பக்கம் நின்றார்.

சந்தோஷ் எப்போதும் போல, “எனக்கு என் மனைவி வேண்டும். அவளை பிரிந்து என்னால இருக்க முடியாதுஎன்று கண்ணீர் மல்க நீதிபதியிடம் வேண்டினான்.

வைரவேல், “சந்தோஷுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம் இருக்கு. அவர்களுக்கு ஓர் குழந்தையும் இருக்குஎன்றார்

சந்தோஷின் வழக்கறிஞர் கணேசன், “அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிஎன்று சொல்ல,

வைரவேல், “கல்யாணம் முடிஞ்சும் அவர் வெளிநாடு போய் அந்த பெண்ணை சந்திச்சதுக்கான ஆதாரம் எங்ககிட்ட இருக்குஎன்று ஆதாரத்துடன் சொன்னார்.

அவங்க பழக்க வழக்கத்தை முடிச்சுக்க போனார்என்று கணேசன் சொல்ல,

அதுக்கெதுக்கு அடிக்கடி போகணும். இந்த ஒரு வருஷத்துல மட்டும் பத்து முறைக்கு மேல போயிருக்கார்என்றார் வைரவேல்.

கணேசனுக்கே இந்த தகவல் புதிது. அவர் அதிர்ந்து தன்னை சமாளித்து கொண்டார்

நீதிபதி துளசியின் பக்கம் இருக்கும் நியாயத்தை மேலும் கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள, சுந்தரம் கொதித்து போனார்.

பரஸ்பர சம்மதத்துடன் பிரிவது வேறு. சந்தோஷ் பக்கம் தவறு என்று நிரூபித்து பிரிவது வேறு.

அதற்கான வேறுபாடு வழக்கு போகும் முறையிலே கண்டு கொள்ள முடிந்தது.

அடுத்த இரண்டு முறை வழக்கு நடந்த போதும், வைரவேல் சிறிதும் விட்டு கொடுக்காமல் வாதாடினார்.

அடுத்த முறை துளசி பற்றி நீங்க சொல்லியே ஆகணும். அவளுக்கு இன்னொருத்தன் மேல விருப்பம். அதனால தான் என் மகன் கூட வாழ மாட்டேன்றான்னு சொல்லுங்கஎன்று கணேசனை நெருக்கினார் சுந்தரம்.

சார் அப்படி எல்லாம் சும்மா சொல்லிட முடியாது. ஆளை காட்ட சொல்லுவாங்க. இல்லை ஆதாரத்தை கொடுக்க சொல்லுவாங்கஎன்று கணேசன் மறுத்துவிட்டார்.

சுந்தரத்துக்கு எல்லா வழியும் சிக்கலாக தெரிந்தது.

எங்கே துளசிக்கு விடுதலை கிடைத்துவிடுமோ என்று சந்தோஷ் வீட்டில் ரகளை செய்ய ஆரம்பித்தான்.

எனக்கு துளசி வேணும். என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது. எனக்கு என் பொண்டாட்டி வேணும்என்று வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் உடைக்க ஆரம்பித்தான்.

ஆனந்திக்கு மகனின் செயல் அதிர்ச்சியே. “சந்தோஷ் என்ன இதெல்லாம். பொறுமையா இரு பேசலாம்என்று மகனை அமைதியாக்க முயன்றார்.

ஆனால் அவன் அடங்காமல், மறுநாள் குடித்துவிட்டு துளசி வீட்டின் முன் மிகப்பெரிய கலாட்டா செய்துவிட்டான்.

ஏய் துளசி வெளியே வாடி. இன்னைக்கு உன்னை விட மாட்டேன்என்று கத்தி கூச்சலிட்டான்.

வளர்மதி கதவை திறக்காமல் போக, சந்தோஷ் கோவத்தில் கதவை உடைக்க முயன்றதுடன், கல் எடுத்து ஜன்னல்களை எல்லாம் உடைத்துவிட்டான்.

வளர்மதி அதற்கு மேல் பொறுக்காமல் வைரவேல் சொன்னதின் பேரில் காவல் துறைக்கு அழைத்துவிட்டார்

சார் இங்க எல்லாம் பிரச்சனை பண்ண கூடாது. கிளம்புங்கஎன்று காவலர்கள் இருவர் வந்து சந்தோஷை அங்கிருந்து கிளம்ப சொல்ல,

அதை சொல்ல நீ யாருயா. நான் இங்கதான் இருப்பேன்என்று சட்டமாக வாசலிலே அமர்ந்துவிட்டான்.

சார் புல் மப்புல இருக்கான்” 

தெரியுதுயா. தம்பி. ஏதா இருந்தாலும் காலையில வந்து பேசிக்கோ. இப்போ கிளம்புஎன்று அவளை எழுப்பி விட,

கையை எடு முதல்ல. யார் மேல கை வைக்கிற?” என்று அவர்கள் பிடியில் திமிறினான்.

சரி கை எடுத்துட்டோம், நீ கிளம்புஎன்று வாசலை விட்டு இழுத்து வர,

யோவ் என்ன இழுத்துட்டு போற? ஒழுங்கா கிளம்பிடு. இது எனக்கும், என் பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்சனைஎன்று சந்தோஷ் நகர மாட்டேன்னு என்று அடமாக நிற்க,

சார். துளசி பொண்டாட்டி எல்லாம் இல்லை. கோர்ட்ல கேஸ் போயிட்டிருக்குஎன்று வைரவேல் வந்துவிட்டார்.

வந்துட்டியா. டேய் எல்லாம் உன்னால தான். உன்னை இன்னைக்கு என்ன பண்றேன் பாருஎன்று வைரவேல் மேல் ஏறிக்கொண்டு சென்றான் சந்தோஷ்.

காவலர்கள் அவனை விடாமல் இழுத்து பிடிக்க, “சார். நாங்க இவன்மேல கேஸ் பைல் பண்றோம்என்றார் வைரவேல்.

சார் கேஸ் எல்லாம் வேண்டாம். வார்னிங் கொடுத்து அனுப்பி விடலாம்” 

முடியாது சார். இந்த வீட்ல அம்மா, பொண்ணு மட்டும் தான் இருக்காங்க. இவன் திரும்ப இப்படி பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம் இருக்கு. நாளைக்கு இவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீங்க பொறுப்பெடுத்துகிறீங்களா சொல்லுங்க சார்என்றார் வைரவேல் கோவமாக.

வளர்மதிநான் கம்பளைண்ட் கொடுக்கிறேன் சார்என்று நிற்க, வைரவேல் லாயர் என்பதுடன் அவர்களால் வேறு பேச முடியவில்லை.

சந்தோஷை ஸ்டேஷன் அழைத்து செல்ல, சுந்தரம் அடித்து பிடித்து கொண்டு ஓடி வந்தார்.

சுந்தரம் பணத்தின் மூலம் பேச, “அவரை வெளியே விட்டீங்க நான் ஜட்ஜ்கிட்ட சொல்லிடுவேன். என் கட்சிகாரங்களை பயமுறுத்தினதுக்கான விடியோ என்கிட்ட இருக்குஎன்று வைரவேல் மறுபுறம் நின்றார்.

தேவா வெளியே சென்றிருந்தவன் விஷயம் கேள்விப்பட்டு காவல் நிலையம் வந்துவிட்டான்.

சுந்தரம், “சார் என் மகனை வெளியே விட கூடாதுன்னு உங்க சித்தப்பா ரொம்ப பிரச்சனை பண்ணிட்டிருக்கார். இது சரியில்லை பார்த்துக்கோங்கஎன்று தேவாவிடம் காய்ந்தார் மனிதர்.

சித்தப்பா உங்களுக்கேன் இந்த வேலை? கேஸ் பைல் பண்ண வேண்டாம். அவனை வார்ன் பண்ணி மட்டும் விடட்டும், விடுங்கஎன்று தேவா அவரிடம் தனியே பேச,

விட மாட்டேன் தேவா. அவனுக்கு இந்த தண்டனையாவது கிடைச்சாகனும்என்றார் மனிதர்.

துளசியை மகள் போல் பாவித்தார் வைரவேல். திருமணத்தன்று சந்தோஷ், துளசியிடம் நடந்து கொண்ட முறைக்கு அவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற அவரின் ஆசையை இதில் நிறைவேற்றி கொண்டார்.

தேவாவிற்கு சித்தப்பாவின் பிடிவாதம் தலைவலியை கொடுத்ததுடன் கேள்விகளையும் கொடுத்தது.

சந்தோஷ் இனி அவங்க பக்கம் போகாம நாம பார்த்துக்கலாம்என்று கூட சொல்லிவிட்டான். மனிதர் அசையவே இல்லை.

சந்தோஷ் அந்த இரவு முழுவதும் காவல் நிலையத்தில் இருப்பது என்று முடிவாகிவிட்டது.

என் மகனை ஸ்டேஷன்ல வைக்கிற அளவு வந்துட்டீங்க இல்லை. பார்த்துகிறேன் உங்களை எல்லாம் பார்த்துகிறேன்என்று உறுமினார் சுந்தரம்

நீங்க சந்தோஷை கண்டிச்சு வைங்க சார். அம்மா, பொண்ணு மட்டுமே இருக்க வீட்டுக்கு போய் கல்லடிச்சு ரகளை பண்ணியிருக்கார். முடிஞ்சா அவருக்கு கவுன்சிலிங் கொடுங்கஎன்றான் தேவா.

சார். என் மகனை என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். நீங்க உங்க சித்தப்பாவை பார்த்துக்கோங்ககொதிப்புடன் கிளம்பினார் அவர்.

அதில் தேவாவிற்கு எக்கச்சக்க கடுப்பு. “இந்த வயசுல ஹீரோன்னு நினைப்பா உங்களுக்கு? சும்மா இருக்க மாட்டீங்கஎன்று சின்ன தந்தையிடம் எகிறினான்.

நீ டம்மியா இருந்தா நான் ஹீரோவாதான் இருப்பேன். வயசு பையன் நீ இறங்கி செய்யாம, செய்ற என்னையும் அடக்க பார்க்கிற

அவளுக்கு நான் ஏன் செய்யணும்? செய்ய மாட்டேன்” 

செய்யாத போ. நான் பார்த்துகிறேன்” 

போங்க. எனக்கென்ன? நாளைபின்ன ஏதும் ஆச்சு உங்களையும், அவளையும் தொலைச்சு கட்டிடுவேன் சொல்லிட்டேன்என்று மிரட்டிவிட்டு சென்றான்.

அதன் பின்னும் வைரவேல் அமைதியாக இருக்காமல், வேறொன்றையும் செய்து வைத்தார்.

இரவு முழுதும் ஸ்டேஷனில் இருந்து மறுநாள் தான் சந்தோஷ் வெளியே வந்தான். மகனை பார்த்த தந்தை கொதித்து போனார். அவ்வளவு காயம்.

எப்படி என் மகன் மேல நீங்க கை வைக்கலாம்என்று சுந்தரம் ஸ்டேஷனில் வைத்து கத்த,

உங்க மகன் லேடி கான்ஸ்டேபிள் கையை பிடிச்சு இழுத்தா சும்மா விடுவோமாஎன்றனர் அவர்கள் கோவமாக.

ப்பா. நான் குடிக்க தண்ணீர் கேட்டுட்டே இருந்தேன். யாரும் கொடுக்கலை. அதனால தான்என்று சந்தோஷ் சொல்ல,

தண்ணீர் கொடுக்கலைன்னா பொம்பிளை கையை பிடிப்பானா? அதுவும் இவன் நிதானத்துலே இல்லை. நல்ல போதை. நாங்க எப்படி அவன் சொல்றதை நம்புறது?” என்றனர் அவர்கள்.

சுந்தரத்துக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அங்கேயே நின்று சந்தோஷ் காயங்களை பார்த்து கொண்டிருந்த வைரவேல் ஏனோ அவருக்கு உறுத்தினார்.

அடுத்த வாய்தாவும் வந்துவிட்டது. துளசி கோர்ட்டுக்கு கிளம்பி கொண்டிருக்க, வைரவேல் இன்னமும் வரவில்லை.

அவர்தான் துளசியை அழைத்து கொண்டு செல்கிறார். சுந்தரம் எது செய்யவும் தயங்க மாட்டார் என்று அவளின் பாதுகாப்பை தன் கையில் எடுத்து கொண்டார் வைரவேல்.

நேரம் சென்று கொண்டே இருக்க, வைரவேலுக்கு அழைத்தாள்.

அப்போது தான் அவருக்கு விபத்து நடந்தது பற்றி தெரிய, துளசி கலங்கி போனாள்.

வளர்மதி வேறு வீட்டில் இல்லை. பெண் யோசிக்காமல் எந்த மருத்துவமனை என்று விசாரித்து அவரை பார்க்க ஓடினாள்.

எங்க வந்த நீ?” என்று தேவா இவளிடம் பாய்ந்தான்.

மாமா. மாமாக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று இவள் பரிதவிக்க,

சொல்ல முடியாது. ஒழுங்கா வந்த வழியே போயிடுஎன்று இரைந்தான்.

துளசி நகராமல் அங்கேயே ஓரமாக நின்று கொள்ள, தேவாவை மருத்துவர் அழைத்தார்.

சார் உங்க சித்தப்பா ட்ரீட்மெண்ட் கொடுக்க விடாம பிரச்சனை பண்றார்என்றார் மருத்துவர்.

பைக்கில் சென்று கொண்டிருந்தவரை வேகமாக  வந்த கார் இடித்துவிட்டு சென்றிருக்க, கை, காலில் எல்லாம் நல்ல அடி

என்ன சித்தப்பா. ஏன் டாக்டரை ட்ரீட்மெண்ட் பார்க்க விட மாட்டேங்கிறீங்க?” என்று தேவா அவரிடம் கேட்க,

இன்னைக்கு துளசி கேஸ் இருக்குஎன்றார் அவர்.

அதுக்கென்ன பண்ண முடியும். நீங்க முதல்ல உங்களை பாருங்கஎன்று டெங்ஷனில் சத்தமிட்டான் மகன்.

இல்லை தேவா. நல்ல போயிட்டிருக்க கேஸ்ல இடைவெளி விழக்கூடாதுடா. அப்புறம் அவங்களுக்கு சாதகமா ஏதும் மாறிடுச்சுன்னா கஷ்டம். நீ நம்ம கோபாலுக்கு பேசு. எனக்கு பதிலா அவர் இன்னைக்கு ஆஜர் ஆகட்டும்என்றார் வைரவேல்.

தேவா சொல்லி பார்த்தவன், வேறு வழி இல்லாமல் கோபாலுக்கு அழைத்து பேசினான்

ஆனால் அவரோ, “இதுக்கு தான் நாங்க யாரும் அந்த பொண்ணு கேஸை எடுக்க மாட்டோம்ன்னு சொன்னோம். நீ முதல்ல உன் சித்தப்பாவை அந்த கேஸ்ல இருந்து விலகிக்க சொல்லு. அதுதான் அவருக்கு நல்லதுஎன்று வைத்துவிட, தேவா புருவத்தில் முடிச்சு விழுந்தது.

தேவா என்ன சொன்னார்?” என்று வைரவேல் கேட்க,

சித்தப்பா. நாம ஜட்ஜ்கிட்ட சொன்னா கேஸ் தள்ளி போட போறார். அடுத்து என்ன செய்றதுன்னு அப்புறம் பார்ப்போம்என்றான் தேவா.

ம்ஹூம். எனக்கு தெரியும் நல்ல அடிபட்டிருக்கு. அடுத்த வாய்தாக்கும் என்னால ஆஜர் ஆக முடியாது. இப்போ நான் என்ன பண்ணுவேன்என்று மனிதர் கலங்க, மகன் வேக, வேகமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டான்.

தம்பி. வேலு. என்ன ஆச்சுடா உனக்கு?” என்று பசுபதியும், ஜெயலக்ஷ்மியும் பதட்டத்துடன் ஓடிவந்தனர்.

ஐயோ. என்ன தம்பி இவ்வளவு அடிபட்டிருக்குஎன்று ஜெயலட்சுமி அதிர.

காயம் பெருசா இருக்கு. இன்னும் வைத்தியம் பார்க்காம என்ன பண்றாங்க. என் தம்பி வலியில கலங்கிட்டு இருக்கான். தேவா டாக்டரை கூப்பிடு. டாக்டர், டாக்டர்என்று பசுபதி கத்த,

சார் ஏன் சத்தம் போடுறீங்க? உங்க தம்பி தான் வைத்தியம் பார்க்க விடாம பண்ணிட்டிருக்கார்என்று மருத்துவர் சொன்னார்.

பார்க்க விட மாட்டேன்கிறானா? வேலு. என்னய்யா, ஏன் இப்படி பண்ற? டேய் தேவா நீ என்ன சும்மா நின்னிட்டிருக்க?”

என்னை ஏதும் கேட்காதீங்க சொல்லிட்டேன்” 

உன்னை கேட்காம. என்ன பண்ணி வைச்ச? ஏன் என் தம்பி வைத்தியம் பார்த்துக்க மாட்டேன்னு சொல்றான்என்று மகன் மீது சந்தேகம் கொண்டார் தந்தை.

ப்பா. உங்க தம்பியை கேளுங்கன்னா என்னை ஏன் கேட்டுக்கு இருக்கீங்க?”

வேலு நீ சொல்லு. என்ன பண்ணான் இவன்?” என்று தம்பி கை பற்றி கேட்க,

தேவா ஒன்னும் பண்ணலைண்ணா. இன்னைக்கு துளசி கேஸ்

அதுக்கென்ன வேலு? நீ முதல்ல வைத்தியம் பார்த்துக்கோ

இல்லைண்ணா. யாராவது எனக்கு பதிலா ஆஜர் ஆகணும். இன்னைக்கு முக்கியமான கட்டம்

அவ்வளவு தானே. தேவா. நீ சித்தப்பாக்கு பதிலா போ. கிளம்புஎன்று மகனை கிளப்பினார்.

ப்பாஎன்று தேவா பல்லை கடிக்க,

என்னடா. இந்த நேரத்துக்கும் விதண்டாவாதம் பண்ண போறியா? அமைதியா போ. சீக்கிரம்என்று விரட்டினார்.

ண்ணா அவனுக்கு இஷ்டம் இல்லைன்னா விடுங்கஎன்று வைரவேல் முனக,

அதெப்படி விட? என்னை விட்டாலும் சித்தப்பா உன்னை விட மாட்டான். உனக்காக அவன் போவான்

ஸ்ஸ்என்று வைரவேல் வலியில் அசைய, பசுபதி மகனை கண்களாலே குற்றம் சாட்டினார்.

போறேன். போய் தொலையறேன்என்று தேவா வேகமாக வெளியே வந்தவன், துளசியிடம். “கிளம்பு. கோர்ட்டுக்கு போகணும்என்றான்.

மாமா

அவருக்கு பதிலா நான்தான் ஆஜராக போறேன்

ம்ஹூம், வேண்டாம். நீங்க வேண்டாம்என்றாள் துளசி பட்டென.

தேவா அவளை கண்கள் இடுங்க பார்த்தவன், “நான் தான் ஆஜர் ஆவேன். இன்னும் பத்து நிமிஷத்துல நீ கோர்ட்ல இருந்திருக்கணும்என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்டிவிட்டு சென்றான்.

துளசிக்கு பயம் பிடித்து கொண்டது. நல்லா போற கேஸை கெடுத்து விட்டுடுவானோ?

முதலில் வைரவேலை பார்க்க ஓடினாள் பெண். “நான் நல்லா இருக்கேன்மா. நீ கோர்ட்டுக்கு போஎன்று வைரவேல் சொல்ல,

நம்ம கார்லே போயிடு துளசி. ட்ரைவர்க்கு சொல்லிடுறேன்என்றார் பசுபதி. ஜெயலட்சுமிக்கு நடப்பதை எல்லாம் பார்க்க, பக்கென்று இருந்தது

பசுபதி காரிலே துளசி கோர்ட்டுக்கு போக, அவளின் எண்ணும்  வந்துவிட்டது.

வைரவேல் பெயர் சொல்லி தேவா ஆஜர் ஆக, மறுபக்கம் வேறொரு புதிய வக்கீல் ஆஜர் ஆனார்.

தேவாவின் புருவங்கள் சுருங்கியது. கணேசனை மாத்திட்டாங்களா?

அதனுடன் அந்த புதிய வக்கீல் சாட்சியாக ஒருவரை நிறுத்த, தேவா அதிர்ந்து துளசியை பார்த்தான்.

பெண்ணும் அப்போது தேவாவை தான் கோபத்துடன் பார்த்திருந்தாள்.