“பிடிக்கலை, வாழ இஷ்டமில்லை, அவன் குணம் சரியில்லை, எனக்கு விவாகரத்து வேணும்ன்னு ஒரு பொண்ணு கோர்ட்டுக்கு வரது அவளோட உரிமை. அதுக்காக அவள் கேரக்டருக்கு களங்கம் விளைவிக்கிறதுல என்ன நியாயம் இருக்கு? இந்த கோர்ட் தான் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்குமா?”

“அப்போ என் கட்சிக்காரர் மேல மட்டும் அவதூறு சொல்லலாமா?” என்று எதிர் தரப்பில் கேட்க,

“இருக்கிறதை தான் சொல்றோம். அதுக்கான ஆதாரத்தையும் கொடுக்கிறோம். இல்லை அது பொய்ன்னா அதை நிரூபிக்கணும். அதைவிட்டு என் கட்சிக்காரர் மேல பொய்யான காரணத்தை வைப்பீங்களா? விட்டா நாளைக்கே வந்து துளசியை விரும்பி நான் தான் பிரச்சனை பண்ணேன்னு என்மேலேயே குற்றசாட்டு சொல்வீங்க போல”

“ஆமா நீ தான், நீதிபதி அய்யா இவன்தான் அந்த பையன்? துளசியை விரும்பினது இந்த தேவா தான்” என்று சந்தோஷ் எழுந்து கத்த,

“பார்த்தீங்களா மை லார்ட். நான் சும்மா சொன்னதை நிஜமாக்க முயற்சி பண்றார். எவ்வளவு கீழ்த்தரமான புத்தி இவங்களுக்கு” என்று பொங்கினான் தேவா.

“இவன் பொய் சொல்றான், இவனை நம்பாதீங்க. டேய் தேவா. என்ன பண்றதை பண்ணிட்டு, நல்லவனாட்டம் பேசுற, உன்னை என்ன பண்றேன் பாரு” என்று கத்தி அவனை நெருங்க பார்க்க, காவலர்கள் தான் சந்தோஷை அடக்க வேண்டியிருந்தது.

நீதிபதி கோவமாகி இதென்ன என்று சந்தோஷ் வழக்கறிஞரை சத்தம் போட, “மை லார்ட். எனக்கு முதல்ல இருந்தே சந்தோஷ் மேல சந்தேகம் இருக்கு. அவர் நிறைய சந்தர்ப்பங்கள்ல ரொம்ப அக்ரஸிவா நடந்துகிறார். கொஞ்ச நாள் முன்னாடி கூட வீட்ல இருக்க பொருளை எல்லாம் உடைச்சு ரகளை பண்ணதோட, என் கட்சிக்காரர் வீட்டுக்கும் போய் பிரச்சனை பண்ணி, போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போய்ட்டு வந்தார். அதுக்கான வீடியோ, கேஸ் பைல் இது” என்று கோர்ட்டில் சமர்பித்தான் தேவா.

“லேடி போலீஸ் கை வேற பிடிச்சு இழுத்திருக்கார் மை லார்ட். அவரை கட்டுப்படுத்த முடியாம போலீஸ் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காங்க”

“அப்போ துளசி முதலிரவுல சந்தோஷை தாக்கினதா சொன்னது எல்லாம் பொய்யா?” என்று நீதிபதி கேட்க,

“ஆமா மை லார்ட். அவங்க குடும்ப டாக்டர் துளசியை தான் மருத்துவமனையில் வைச்சு வைத்தியம் பார்த்ததிருக்கார். அடிபட்டிருந்தது துளசிக்கு தான் அதிகம். சந்தோஷ் அவங்களை தாக்கி, ரொம்ப வெறித்தனமா அவங்களை கட்டாயப்படுத்தி இருக்கார்” என்று அதற்கான ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தான்.

நீதிபதி எல்லாவற்றையும் பார்த்து கோவம் கொண்டதுடன் எதிர் தரப்பு வழக்கறிஞரை விளாசிவிட, “மை லார்ட். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் சீக்கிரம் ஆதாரத்தோட வரேன்” என்று அவர் கேட்டுக்கொள்ள, 

“சந்தோஷை மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும். எனக்கு அவர் மேல சந்தேகம் இருக்கு” என்று தேவா கேட்டு கொண்டான். அதற்கான ஆணையும் பிறப்பித்து, வழக்கை தள்ளி வைத்தார் நீதிபதி. 

தேவா, துளசியை முறைத்து கொண்டு சுந்தரம் செல்ல, “மச்சான் கலக்கிட்டடா” என்று அருண் நண்பன் கை குலுக்கினான்.

“துளசியோட தாய்மாமா நேர்ல வந்து நீ தான் அந்த பையன்னு சொன்னா கூட நம்பாதளவு பண்ணிட்ட இல்லை” என்று அவன் தோளில் தட்டினான் அருண்.

“மச்சான் விவாகரத்து கிடைக்கிறதுல பிரச்சனை ஆகிட கூடாதுன்னு தான். அதோட என்னோட விருப்பத்துக்கும், அவளுக்கும் சம்மந்தம் இல்லை. சொன்னாலும் கோர்ட்ல ஒத்துப்பாங்களா? அவளோட கேரக்டர் மேல தான் கை வைப்பாங்க. எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்?” என்று தோள் குலுக்கினான் கிரிமினல் லாயர்.

வைரவேலும் போனில் மகனிடம் சந்தோஷம் கொள்ள, அலுவலகத்தில் காத்திருந்த வளர்மதி, “நல்லா பேசின தேவா” என்றார்.

“டேய் அருணு. மச்சான் என்னை பிடிடா. நான் மயங்கி விழப்போறேன்” என்று தள்ளாடினான் நல்லவன்.

“தேவா” என்று வளர்மதி கண்டிக்க,

“பர்ஸ்ட் டைம் என்னை பாராட்டியிருக்கீங்க, மயக்கம் வந்திடும் பார்த்தேன். வரலை” என்றான் இமை சிமிட்டி.

வளர்மதி மேலும் கேஸ் பற்றி சந்தேகம் கேட்டவர், “நான் கிளம்புறேன்” என்று விடைபெற்றார்.

துளசி ஏதோ எழுதி கொண்டிருக்க, “வாத்து என்னை ரொம்ப கடுப்பேத்துது மச்சான்” என்றான்.

“நீயே அதை பார்த்துக்கோ. நான் அடுத்த கேஸ் பார்க்க போறேன்” என்று ஓடிவிட்டான் அருண்.

தேவா அவளின் டேபிளிலே அமர்ந்து கொண்டவன், “இந்த நன்றி சொல்ற பழக்கம் எல்லாம் உனக்கு இல்லையா?” என்று கேட்டான்.

“நீங்க பண்ணதை நீங்களே சரி பண்றீங்க. இதுக்கெதுக்கு நன்றி சொல்லணும்” துளசி ஏதோ கிறுக்கியபடி சொன்னாள். அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. மிகவும் உணர்ச்சிவச பட்டிருந்தாள்.

திருமண நாளன்று நடந்த விஷயம் தேவாவிற்கு தெரிந்திருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்த சந்தோஷ் பொறுக்கி செஞ்ச தப்புக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்கிறேன்? 

“அந்த வெண்ணெயை ஓடி ஓடி கல்யாணம் பண்ணதும் என் தப்பா?” என்று தேவா கேட்டிருக்க,

“இன்னொரு முறை நீங்க அதை பேசக்கூடாது” என்றாள் துளசி.

“பேசுவேன். ஏன் பேச கூடாது? உன் காலுல மட்டும் தான் விழுகலை. அவ்வளவு கெஞ்சி கேட்டும் என்னை வேணாம் சொல்லிட்டு அந்த நல்லவனை போய் கட்டின இல்லை. கேட்கத்தான் செய்வேன்”

துளசிக்கு கோவத்தில் நெஞ்சம் ஏறி இறங்கியதுடன், கண்களும் கலங்கிவிட்டது. “ஹேய். கண்ணை கசிக்கினா கண்ணை நொண்டிடுவேன்” என்று அவள் கண்களுக்கு அருகில் விரலை நீட்டி மிரட்டினான் தேவா.

துளசி முகம் திருப்பி கொண்டதுடன், விரலில் இருந்த தந்தையின் மோதிரத்தை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

தேவா அடிக்கடி அதை கவனித்திருக்க, “யார் மோதிரம் அது? காட்டு” என்று அவள் கைப்பற்றி நீட்டினான்.

“விடு. என் கைய விடு” என்று துளசி இழுக்க,

“உன் அப்பா  மோதிரமா” என்று நூல் சுற்றி போட்டு கொண்டிருந்தவளிடம் இருந்து அதை கழட்டிவிட்டான்.

“சோகமா இருக்கிறதே சுகமா நினைக்கிற கோஷ்டியா நீ?” 

“என் மோதிரத்தை கொடுத்திடுங்க” என்று துளசி அழுகை, கோவத்துடன் கேட்க,

“கொடுக்கிறேன். கொடுக்கிறேன் இரு” என்று அவனின் விரலில் மாட்ட பார்த்து, “ம்ப்ச் போதலை. இந்த நூலை கழட்டிட்டா சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று அதை செய்ய போக,

“என்ன பண்றீங்க” என்று அவனிடம் இருந்து வேகமாக பிடுங்கி கொண்டாள் துளசி.

திரும்ப தன் விரலில் மாட்டியதுடன், கைகளை இறுக்கமாக பிணைத்து கொண்டாள். 

“அடிக்கடி இதை பார்த்து அழுவியோ?”

துளசி பதில் சொல்ல மாட்டேன் என்றிருக்க, “அன்னைக்கு ஹாஸ்பிடல்ல வைச்சு, அப்பா பத்தி எல்லாம் பேசுற?”

“என் அப்பா நான் பேசுவேன். அவர் இல்லைன்னு தானே நீங்க எல்லாம் என்னை பந்தாடுறீங்க” என்று விம்மிவிட்டாள் துளசி.

வளர்மதியின் மாற்றமும், அவரின் கண்ணீரும் பாதுகாப்பின்மையால் தானே? 

இல்லையென்றால் அவர் ஆனந்தியின் பேச்சை கேட்டிருப்பாரா? என் மகளுக்கு குடும்பம் கிடைக்கும், கணவர் பிறந்த வீடு கிடைக்கும், அவரின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சரவணனை வைத்தே யோசித்தவர், துளசியை சந்தோஷுக்கு கொடுத்தார்.

ஆனால் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. மாறாக துரோகம் தான் கிடைத்தது. இரு பெண்களையும் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர்.

இன்றும், நாளையும் வளர்மதி அதை நினைத்தே மறுகுகிறார். வேதனை தொண்டையில் அடைக்க நடமாடுகிறார்.

மகளுக்கு புரிந்தும் ஏதும் செய்ய முடியா நிலை. முதலில் விவாகரத்து கிடைக்க வேண்டும். அந்த இக்கட்டில் இருந்து வெளியே வந்த பின்தான் அம்மாவிற்கான ஆறுதல் கிடைக்கும்.

அதற்கான நல்ல முன்னெடுப்பை தான் தேவா இன்று செய்திருந்தான். நெஞ்சின் அடி ஆழம் வரை அவனுக்கான நன்றி நிறைந்திருக்கிறது.

முடிந்தால் அவன் கை பிடித்து அழுதுவிடுவாள். ஆனால் அவன் விருப்பம் இடையில் வந்து தடுக்கிறது.

காதல் அன்றும் அவளை தடுத்தது. இன்றும் அவனை நெருங்க விடாமல் தடுக்கிறது.

“ஏன் என்னை காதலிச்ச? சொல்லு, நீ என்னை காதலிக்காம இருந்திருந்தா நான், நான்”

“அப்போ உன் விவாகரத்துக்கு நாந்தான் காரணம் சொல்றியா?” தேவாவின் விரல்கள் கடகடவென ஆட்டம் காண ஆரம்பித்தது.

“என்னால உன் கை பிடிச்சு நன்றி கூட சொல்ல முடியலை”

“அடச்சீ. கை என்ன காலையே கூட வைச்சுக்கோ. கொஞ்ச நேரத்துல என் உசுரை உருவிட்டா” 

“உங்களுக்கு இது சாதாரணமா தெரியுது. ஆனா நம்மவங்களோட  சின்ன தொடுதல் கூட எவ்வளவு பலம் கொடுக்கும் தெரியுமா? என் அப்பா சுண்டு விரல் பிடிச்சு நடக்கிறது போல”

“என் சுண்டு விரல் பிடிச்சு நடந்தா வேற அர்த்தம் தான் வரும்”

“உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க” என்று துளசி முகத்தை சுருக்கினாள்.

“என் விரல் பிடிச்சா உன் அப்பா விரல் பிடிச்ச பலம் கிடைக்குமா உனக்கு?” 

“ஆஹ்ன்”

“அப்போ உன் அப்பாவை என்கிட்ட தேடுறியா?” 

அதிர்ந்த துளசிக்கு கண்ணீர் சரசரவென இறங்கியது.