வைரவேல் தனி அறைக்கு மாற்றப்பட்டிருக்க, தேவா தான் முதலில் அவரை பார்க்க சென்றான்.
கால்களில் சிறிதான அறுவைசிகிச்சை செய்தபடியால், வைரவேல் மயக்கத்தில் இருந்தார்.
“தெளியும் நேரம் தான்” என்று மருத்துவர் சொல்ல, தேவா கைகட்டி அமர்ந்துவிட்டான்.
வைரவேல் சில நிமிடம் சென்று கண் விழிக்க, மனிதர் அசைய முயன்று, முடியாமல், அக்கம் பக்கம் பார்த்தார்.
தேவா தள்ளியே அமர்ந்திருக்க, “உங்க காலை அசைக்க முடியாது. ரிலாக்ஸா இருங்க” என்ற நர்ஸ் அவரை பரிசோதனை செய்ய, வைரவேல் அவரிடம் சில பல கேள்விகளை கேட்டு கொண்டார்.
“எப்படியும் மூணு மாசத்துக்கு ரெஸ்ட்ல இருக்கணும் போல” தனக்குள் சொல்லி கொண்டவர்,
“க்கும். தேவா” என்றார்.
“சொல்லுங்க”
“கிட்ட வாடா”
“அங்கிருந்தே பேசுங்க. கேட்குது”
“சார். அவர் தான் கூப்பிடுறார் இல்லை. கிட்ட வாங்க” என்று நர்ஸ் சொல்ல,
“ஓஹ் இப்போ அவர் பேஷண்ட் இல்லை. சிம்பதி. ம்ம். ஆனா பாருங்க எனக்கு டையர்டா இருக்கு” என்று சோபாவிலே கண் மூடி வசதியாக சாய்ந்து கொண்டான்.
‘என்ன மனுஷனோ இவன்’ என்று நர்ஸ் தேவாவை முறைத்து வெளியே சென்றவர், பசுபதிக்கு சொல்ல, அவர் அடித்து பிடித்து கொண்டு உள்ளே வந்தவர், “என்கிட்ட சொல்லு வேலு” என்று தம்பியின் கைப்பற்றி கொண்டார்.
“ஒன்னுமில்லைண்ணா. சும்மா தான்”
“எங்கேயாவது வலிக்குதா வேலு. சொல்லுடா”
“இல்லைண்ணா. கேஸ் என்ன ஆச்சுன்னு”
“துளசியோட முன்னாள் காதலனை பற்றி சொன்னாங்க. அடுத்த ஹியரிங்ல அவனை அடையாளம் காட்ட போறாங்களாம்” என்றான் தேவா.
“என்ன தேவா சொல்ற? கணேசனா இப்படி பண்ணது?” என்று வைரவேல் கோவப்பட,
“அவரை மாத்திட்டாங்க”
“முழுசா சொல்லி தொலையேன்டா”
தேவா கண்களை திறந்து அவரை உர்ரென பார்க்க, “அங்கலாய்ப்பு தான் சாமி. சொல்லு கண்ணு” என்று வைரவேல் கேட்க, பசுபதி கோபத்துடன் மகனை திட்ட வாய் திறந்தார்.
“வேணாம்ண்ணா” என்று அண்ணனின் கைப்பற்றி கொண்ட வைரவேல் மகனை பார்க்க, அவன் கோர்ட்டில் நடந்ததை முழுதாக சொல்லி முடித்தான்.
“அப்போ உன்னை தான் உள்ள இழுத்து விடுறாங்க” என்றார் வைரவேல் புருவம் சுருக்கி.
“உங்களுக்கு இது முன்னாடியே தெரியும் தானே?” என்று அவர் மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று பிரச்சனை செய்ததை வைத்து கேட்டான்.
“ஏதோ பண்றாங்கன்னு நினைச்சேன். ஆனா உன்னை பத்தி தெரியும்ன்னு தெரியாது. ஆமா அந்த வளர்மதி அண்ணனுக்கு அப்படி என்ன பகை, அந்தாள் எதுக்கு சாட்சி சொல்ல வந்திருக்கான்”
“என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்” என்று அசட்டையாக தோள் குலுக்கினான்.
“தேவா. அதை என்னன்னு பார்க்கணும். துளசி பேருக்கு ஒரு களங்கம் வரதை நாம வேடிக்கை பார்த்திட்டு இருக்க முடியாது” என்றார் வைரவேல்.
“வேலு பேசாம அந்த வளர்மதி அண்ணனை நேர்ல பார்த்து பேசலாமா?” என்று பசுபதி கேட்டார். தேவா இதில் வருவதை எனோ அவர் விரும்பவில்லை. ஜெயலட்சுமிக்கு தெரிந்தால் நிச்சயம் ஓர் பஞ்சாயத்து இருக்கும்.
“ம்ஹூம். அந்தாளை அவ்வளவு சீக்கிரம் பார்க்க முடியாது. சுந்தரம் அவரோட கட்டுப்பாட்டுல தான் வைச்சிருப்பார்” என்றான் தேவா.
“ஆமா. ஆனா உன் விஷயம் சுந்தரத்துக்கு எப்படி தெரிஞ்சது?”
“இப்போ எதுக்கு அண்ணனும், தம்பியும் என்னை பார்க்கிறீங்க” மகன் பல்லை கடித்து கேட்டான்.
“அடச்சே. பதிலுக்கு தான் பார்த்தோம். உன்னை எங்களுக்கு தெரியாதா?” என்றார் பசுபதி.
“பரவாயில்லை. மகன் மேல இந்தளவுக்கு நல்ல எண்ணம் இருக்கே. சரி எனக்கு பசிக்குது”
“பேஷண்ட் என் தம்பி”
“சோறுக்காக எல்லாம் பேஷண்ட் ஆக முடியாது” மகன் நக்கல் அடித்தான்.
“இவனோட” என்று சலித்து பசுபதி வெளியே சென்று மனைவியை அழைத்து வந்தார்.
ஜெயலட்சுமி கொழுந்தனை நலம் விசாரித்து, அவர் என்ன சாப்பிட வேண்டும் என்று விசாரித்து கொண்டார்.
“ம்மா” என்றான் மகன்.
“கையிலே இருக்கு தேவா. வா” என்று அவனுக்கு சாப்பிட கொடுத்தார்.
அந்த நேரம் வளர்மதி, துளசி வந்தவர்கள், “ரொம்ப அடியா இருக்கே” என்று வைரவேலை பார்த்து கலக்கம் கொண்டார்கள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லைமா. நான் ஓகே தான்” என்ற வைரவேல், அவர்களிடம் கேஸ் பற்றி பேசினார்.
வளர்மதி திரும்பி ஜெயலட்சுமியை பார்க்க, அவரோ மகன் மேலே கவனத்தை வைத்திருந்தார்.
எங்கு பார்த்தாலும் நன்றாக பேசுபவர் பாராமுகமாக நடந்து கொள்வதில் வளர்மதிக்கு சுருக்கென தைத்தது.
பசுபதி அவர்களுக்கு குடிக்க காபி வாங்கி வந்தவர் மனைவியிடம் கொடுக்க, வளர்மதி கப்பில் ஊற்றி கொடுத்தார்.
தலையசைத்து வாங்கி கொண்ட அம்மா, மகளுக்கு ஏனோ அந்த காபி இறங்கவில்லை.
தேவா போனில் பேசி கொண்டிருக்க, “உனக்கு தேவா?” என்று மகனை கேட்டார் அன்னை.
“கொடுங்கம்மா” என்று வாங்கியவன், “செல்விக்கா வந்துட்டிருக்காங்க” என்றான்.
“ம்ம். ஏங்க நைட் சாப்பாடு பார்க்கணும்” என்று பசுபதியிடம் சொல்ல,
அவருக்கு மனைவி நடந்து கொள்ளும் முறையில் இருந்த அதிருப்தி உடனே பதில் சொல்ல விடாமல் செய்தது.
“க்கும். இன்னைக்கு ஒருநாள் வெளியே பார்த்துக்கலாம். வேலுக்கு இங்கேயே கொடுத்திடுவாங்க” என்றார்.
“நைட் நான் இங்கேயே இருக்கேன், நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” என்றும் பசுபதி சொல்ல,
“அண்ணன் இருக்கட்டும் தேவா” என்று வைரவேல் சொல்லிவிட,
“ஏன் நான் இருந்தா உங்க உடம்பு சரியாகாதா? அதென்ன இப்போ எல்லாம் அண்ணனும், தம்பியும் ரொம்ப குலாவிக்கிறீங்க. உங்களுக்குள்ள சண்டை மறந்துடாதீங்க” என்றான் மகன் நினைவு படுத்தும் விதமாக.
“டேய். எங்க சண்டையை நாங்க பார்த்துகிறோம், நீ உன் அம்மாவை கூட்டிட்டு கிளம்பு” என்றுவிட்டார் பசுபதி.
வைரவேல் கேஸ் பற்றி பேசுவதற்காக துளசி, வளர்மதியை நிறுத்தி வைத்திருக்க இருவரும் மிகவும் அசவுகரியமாக அமர்ந்திருந்தனர்.
தேவா அவர்கள் பக்கமே திரும்பாமல், போனை டீபாயில் தட்ட ஆரம்பித்தான்.
நாள் முடிந்துவிட்டது. இன்னும் வைரவேலை இடித்த அந்த கார்காரன் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இது உண்மையிலே விபத்தா என்ற சந்தேகம், உடன் இன்று கோர்ட்டில் சுந்தரம் தரப்பு நடந்து கொண்ட முறை என்று அவனுக்குள் பல கேள்விகள்.
உடன் வைரவேலிடம் முன்பே இது பற்றி எச்சரித்தான். ஆனாலும் இப்பொழுது அடிபட்டு மருத்துவமனையில் படுத்திருக்க, தேவாவிற்கு தாங்கவில்லை.
“போச்சு. மலையேற போறான்” என்று வைரவேல் முனக, தட்டல் சத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது.
துளசி இப்போதைக்கு கிளம்ப மாட்டாள் என்று புரிந்து போக, மகனை அங்கு விட ஜெயலட்சுமிக்கு இஷ்டமில்லை.
கோர்ட்டில் நடந்தது அவர் காதிற்கு வந்துவிட்டிருந்தது. அதனாலே ஒருமாதிரி கோவமாக தான் இருந்தார்.
என் மகனுக்கு நான் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணும் போதுதான் இதெல்லாம் முளைக்குமா?
முகம் சிடுசிடுவென இருக்க, “லட்சுமி” என்றழைத்து மனைவியை கண்களால் கண்டித்தார் கணவர்.
ஜெயலட்சுமி வேறுபக்கம் திரும்ப, “ண்ணா. நாங்க நாளைக்கு வரோம். அப்போ பேசலாம்” என்று எழுந்து கொண்டார் வளர்மதி.
வைரவேலுக்கு அண்ணியிடம் ஏதும் பேச முடியாது. மரியாதை அளவுக்கு அதிகமாகவே உண்டு, இந்த நொடிவரை உங்களுக்கு ஏன் நான் செய்ய வேண்டும் என்று அவர் நினைத்ததே இல்லை.
பாசத்தை, மரியாதையை சரிக்கு சமமாக கொடுக்கும் அண்ணியிடம் என்ன பேசுவார்?
“சரி. சரிமா. நீங்க கிளம்புங்க” என்றார் வைரவேல்.
“இந்த நேரத்துக்கு எப்படி போவீங்க? ட்ரைவர்கிட்ட சொல்லி கார் எடுக்க சொல்றேன்” என்று பசுபதி சொல்ல,
“நாங்க வீட்டுக்கு போகணும்” என்றார் ஜெயலட்சுமி சட்டென. இந்தளவு அவர் இறங்கிவிட்டது மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி தான்.
வைரவேல் அறைக்கு வரவே முன் மாலை ஆகிவிட்டிருந்தது. இப்போது இரவு நேரம். எப்படி அவர்களை தனியே அனுப்ப? அதிலும் சுந்தரம், சந்தோஷ் போன்ற ஆட்களை வைத்து கொண்டு?
“அண்ணி. அது” என்று வைரவேல் பேசவர,
“நாங்க ஆட்டோல போயிக்கிறோம்” என்று வளர்மதி மகளின் கைப்பற்றி வாசலுக்கு நடந்துவிட்டார்.
“இல்லை. இல்லைமா. நீங்க கார்ல தான் போகணும். தனியா அனுப்ப முடியாது” என்று பசுபதி நிறுத்த,
“வேண்டாம் சார். எங்களுக்கு இது பழக்கம் தான்” என்றாள் துளசி. கணீரென ஒலித்த அவள் குரலில் தேவாவின் கை ஓர் நொடி நின்று திரும்ப போனை தட்டியது.
“என்னமா நீ? ஆட்டோல போறது பாதுகாப்பு இல்லை. அண்ணன் சொல்றதை கேளுங்க” என்று மனம் கேட்காமல் வைரவேல் சொல்ல,