Advertisement

அத்தியாயம் – 23

 

 

“மிது ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்க மாட்டியே என்றான்.

 

 

அவனில் இருந்து பிரிந்தவள் “உங்களை நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன். என்னன்னு சொல்லுங்க என்றாள்.

 

 

“நான் தமிழ்ல சொல்றேன் மிது… என்று இன்னும் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல் நீட்டினான்.

 

 

“எப்படி வேணா சொல்லுங்க, ஆனா என்னன்னு சொல்லுங்க முதல்ல…

 

 

“நான் உன்னை நேசிக்கறேன் மிது… உன்னை ரொம்ப ரொம்ப நேசிக்கறேன்… என்றான்.

 

 

“இதை சொல்ல தான் இவ்வளவு பில்டப் பண்ணீங்களா!!

 

 

“இல்லை மிது இது நான் அஸ்வினிகிட்ட சொன்னது போலன்னு நீ நினைக்க கூடாது. அதனால தான் இத்தனை நாளா நான் உனக்கு ஒரு சின்ன ஐ லவ் யூ கூட சொல்லலை. எனக்கு அந்த வார்த்தை சொல்ல பிடிக்கலை மிது

 

 

“ஆனா உன்கிட்ட என்னோட காதலை சொல்லியே ஆகணும்ன்னு தோணிச்சு. அதான் இப்போ சொல்லிட்டேன் என்று அவன் சொல்லி முடிக்கவும் மித்ரா அவனை இறுக தழுவிக்கொண்டாள்.

 

 

அவன் கன்னத்தில் காதில் நெற்றியில் என்று அவன் முகம் முழுதும் முத்திரை பதித்தாள். “மிது மூச்சு முட்டுதுடி நீ இப்படி எல்லாம் செஞ்சா நான் சொல்ல வர்றதை நிறுத்திட்டு அடுத்த கட்டத்துக்கு போய்டுவேன்

 

 

“என்னை நானே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு உன்கிட்ட பேசி முடிக்க தான் காத்திட்டு இருக்கேன் என்றான்.

 

 

“சரி நான் ஒண்ணும் செய்யலை என்றவள் அவனில் இருந்து பிரிந்து பத்தடி தூரத்தில் தள்ளி அமர்ந்தாள்.

 

 

“அடியேய் ஏன்டி படுத்துற… வைச்சா குடுமி சிரைச்சா மொட்டைன்னு செஞ்சா என்னடி செய்வேன் என்றவன் அவளருகே வந்தான்.

 

 

“நீ தள்ளிப்போனா என்ன நானே பக்கத்துல வந்திட்டேன் என்றவன் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான்.

 

 

“இதுக்கு நான் பொறுப்பில்லை நீங்க தான் பொறுப்பு என்றாள்.

 

 

“நான் சொல்லவா வேண்டாமா??

 

 

“சொல்லுங்க!! சொல்லுங்க!!

 

 

“நீ போன்ல பேசும் போது நானும் நெறைய பேசணும்ன்னு நினைப்பேன். ஆல்ரெடி நீ இல்லாம நான் இங்க தவிச்சுக்கிட்டு இருக்கேன் இதுல உன்கிட்ட ரொமான்ஸா பேசி என்னை நானே உசுப்பேத்திக்க வேணாம்ன்னு தான் நீ சொல்றதுக்கெல்லாம் ஆமாம் இல்லைன்னு ஒரு வரில பதில் சொல்லிட்டு இருப்பேன்

 

 

“உன் பேச்சு எங்கயோ டிராக் மாறினாலோ என் புத்தி எங்காச்சும் டிராக் மாறினாலோ வேணுமின்னே அஸ்வினியை பத்தி பேசி உன்னை மூட்அவுட் பண்ணிவிட்டிருவேன்

 

 

“சாரிடா மிது ரியலி சாரி, நான் அவளை பத்தி பேச அது மட்டும் தான் காரணம். ப்ளீஸ் மிது என்னை புரிஞ்சுக்கோடா… நான் அப்படி பேசும் போதெல்லாம் நீ எப்படி கஷ்டப்பட்டிருப்பேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது…

 

 

“நீ ஒரு விஷயத்தை நல்லா கவனிக்கணும் மிது. நான் போன்ல தான் அவளை பத்தி பேசி உன்னை வெறுப்பேத்தி இருக்கேன். ஆனா நேர்ல நான் அவளை பத்தி உன்கிட்ட பேசினதே இல்லை

 

 

“அப்போ அன்னைக்கு ஏர்போர்ட்ல… என்று நிறுத்தினாள்.

 

 

“அன்னைக்கு அங்க ஏதேச்சையா தான் அவளை பார்த்தேன். வந்தவ சைத்து சைத்துன்னு என்கிட்ட வந்து பேசுறா!! நீயும் உள்ள வரலை என் போன் நம்பர் கொடுத்தே ஆகணும்ன்னு நிக்கறா

 

 

“பக்கத்துல என்னோட கலீக் வேற இருக்கார். வேற வழியில்லாம என்னோட நம்பரை அவகிட்ட அன்னைக்கு கொடுத்தேன் என்றதும் மித்ரா அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“அப்படி எல்லாம் முறைக்காதே மிது. நான் கடலூர் போனதும் வேற நம்பர் மாத்திட்டேன்னு உனக்கு தெரியாதா!! எதுக்கு மாத்தியிருப்பேன்னு இப்போ உனக்கு புரியுதா!! என்றான்.

 

 

“நான் ஊர்ல இருந்து வந்தன்னைக்கு அம்மணி ஓவரா சீன் போட்டீங்க வேற. நாங்க இவங்களை லீவு போட்டு வீட்டில இருக்க சொல்லலைன்னு கோவம் வேற

 

 

“நீயே சொல்லு மிது நீ லீவ் போட்டிருக்கேன்னு எனக்கு தெரியாது. நான் அதை அன்னைக்கு ரொம்ப சாதாரணமா தான் கேட்டேன். அம்மணிக்கு கோவம் வந்து நேரா ஆபீஸ் கிளம்பிட்டீங்க

 

 

“அதான் செபா எல்லாம் போட்டு கொடுத்திட்டாரே உங்ககிட்ட என்னை தேடி சுஜி வீட்டுக்கே வந்துட்டீங்களே நீங்க

 

 

“ஆமா புருஷன் தேடி வந்ததும் வாங்க மாமான்னு ஆசையா வந்து கட்டிபிடிச்சுக்கிட்ட பாரு, போடி… நான் வர்றேன்னு சொல்லியிருக்கேன் நீ பாட்டுக்கு உள்ளவே இருக்கே, செம கோவம் எனக்கு

 

 

“நல்லா நாலு வப்பு வைக்கலாம்ன்னு நினைச்சேன். சுஜி மட்டும் கூப்பிடலன்னா உள்ளவே வந்திருக்க மாட்டேன். உள்ள வந்து உன்னை பார்த்ததும் காத்து போன பலூன் மாதிரி என் கோபமும் புஸ்ஸுன்னு போச்சு

 

 

“ஏனாம்…

 

 

“அதான் நீ என்னை மயக்கி வைச்சிருக்கியே அப்புறம் என்ன!! கோவம் வந்தாலும் உன்னை பார்த்தா நானே மலை இறங்கி வந்திடறேன் அது ஏன்னு எனக்கே புரியலை

 

 

“இன்னைக்கும் பார்த்தில்ல உன் மேல எனக்கு நெறைய கோவம் இருந்துச்சு. உன்னை பார்த்ததும் எல்லாமே மறந்து போச்சு, என்னால கோவப்பட முடியலை உன்னை பார்த்து

 

 

“உங்களுக்கு என் மேல என்ன கோவம்ன்னு சொல்லுங்க!! சரி பண்ணிடலாம் என்றாள்.

 

 

“என்ன கோவம்ன்னு சொல்றேன். எப்படி சரி பண்ணுறதுன்னும் சொல்றேன். நீ அதுபடி செஞ்சா தான் என் கோவம் முழுசா போகும் ஓகே வா

 

 

“நீங்க சொல்றதை பார்த்தா ஏதோ வில்லங்கமா சொல்லப் போற மாதிரி தெரியுதே!!

 

 

“வில்லங்கம் எல்லாம் இல்லை… இதெல்லாம் நமக்குள்ள சகஜம் தான் ஓகே வா!! டீலா!! நோ டீலா!!

 

 

“வாக்கு கொடுத்திட்டு கொடுக்க முடியலைன்னா செய்யலைன்னா என்ன செய்வீங்க!!

 

 

“அதுக்கு தக்க பனிஷ்மெண்ட் உண்டு

 

 

“வேணாம் நீங்க கொடுக்கற பனிஷ்மெண்ட்க்கு நான் நீங்க சொல்றதை செஞ்சிடுவேன் என்று வாக்கு கொடுத்து விட்டாள்.

 

 

“ஹ்ம்ம் இப்போ சொல்லுங்க உங்களுக்கு என் மேல என்னென்ன கோவமிருக்கு

 

“அதை சொல்ல முன்னாடி என் கோவத்தை எப்படி நீ சால்வ் பண்ணணும் சொல்ல வேணாமா!!

 

 

“சொல்லுங்க

 

 

“நான் சொல்ல சொல்ல நீ எனக்கு முத்தம் கொடுக்கணும். முக்கியமான கண்டிஷன் முகத்துல தான் முத்தம் கொடுக்கணும் கண்டிப்பா பத்து முத்தமாச்சும் இங்க தான் கொடுக்கணும் என்று அவன் உதட்டை தொட்டு காண்பித்தான்.

 

 

“ஹ்ம்ம் இதெல்லாம் அழுகுணி ஆட்டம், நான் செய்ய மாட்டேன்… என்றாள் அவன் மனைவி.

 

 

“அப்போ பனிஷ்மெண்ட் கொடுக்க வேண்டியது தான்

 

 

“பனிஷ்மெண்ட்டா அதென்ன சொல்லுங்க…

 

 

“நீ முத்தம் கொடுக்கலைன்னா நான் முத்தம் கொடுப்பேன். உன் லிப்ஸ்ல மட்டும் தான் கொடுப்பேன்… எவ்வளவு நேரம் வேணாலும் கொடுப்பேன். இதான் என்னோட பனிஷ்மெண்ட்

 

 

“உங்களை போங்க… நீங்க எதுவும் சொல்ல வேணாம் நான் வெளிய போறேன் எழ போனாள்.

 

 

“அப்போ என்னோட கோவத்தை பத்தி உனக்கு கவலையில்லை என்று அவன் சொன்னது கொஞ்சம் வேலை செய்தது.

 

 

“என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ்… நான் ரொம்ப படுத்தறேனா உங்களை… என்றவள் அவன் சொல்லாமலே அவனருகில் அமர்ந்திருந்தாள்.

 

 

அவன் கையை பற்றி தன் கரத்தில் கோர்த்துக்கொண்டாள். “நீ இப்படி எல்லாம் கேட்டா எனக்கு எதுவும் சொல்ல வராது மிது… ஹேய் அதுக்காக தள்ளி போகாத, சொல்றேன் என்றான்.

“உனக்கு ஞாபகமிருக்கா!! உன்னோட பிரசவத்துக்கு ஊருக்கு வந்தப்போ நமக்குள்ள நடந்த வாக்குவாதம்

 

 

“ஹ்ம்ம் என்றாள்.

 

 

“நீ கூப்பிடலைன்னா கூட நான் கண்டிப்பா உன்னோட பிரசவத்துக்கு வந்திருப்பேன் மிது. அதனால தான் வளைகாப்புக்கு வரமுடியாதுன்னு சொன்னேன்…

 

 

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சு மாமாகிட்ட மட்டும் சொல்லிட்டு நான் வந்து இறங்கினா உன் முகத்துல சந்தோசமே இல்லை. உன்கிட்ட சொல்லாம வந்தது தப்பு தான் அதுக்காக கொஞ்சம் கூட உன்கிட்ட ஒரு மகிழ்ச்சி எதுவும் தெரியலை

 

 

“ரொம்ப கஷ்டமா போச்சு எனக்கு, ஏமாத்தமா இருந்துச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நமக்குள்ள நடந்த வாக்குவாதம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு மிது. நீ சொன்ன வார்த்தை ஏதோ சாதாரணமா சொல்லியிருக்கலாம் ஆனா அது உண்மை தானே…

 

 

“அந்த உண்மை சுட்டுச்சு, மனசு வலிக்க ஆரம்பிச்சுது. அன்னைக்கு நைட்டே உனக்கு வலி வந்து ஆஸ்பிட்டல் போனோமே மறக்க முடியாத நாள் தெரியுமா…

 

 

“மதுக்குட்டியோட அசைவை நான் உணர்ந்தது. உனக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியலை. அன்னைக்கு உனக்கு ஆபரேஷன் நடக்கும் போது நானும் கூடவே இருந்தேன்

 

 

“ஹ்ம்ம் தெரியும் அப்பா சொன்னாங்க…ஆனா குழந்தை பிறந்ததும் நீங்க உடனே கிளம்பிட்டீங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா

 

 

“நீ வலியில துடிக்கும் போது எனக்கும் அப்படி தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு மிது. அந்த நாளை என்னால மறக்கவே முடியாது மிது. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்னு அந்த நிமிஷம் நான் அதிகமா வருத்தப்பட்டேன்

“நீ வலியில துடிச்சப்போ இந்த வலிக்கு செத்துடலாம் போல இருக்குன்னு சொன்ன தெரியுமா, அந்த நிமிஷமே செத்திடலாமான்னு தோணுச்சு மிது என்று அவன் சொல்ல மித்ரா அவனை பேசவிடாமல் தன்னிதழ் கொண்டு அவனிதழ் மூடினாள்.

 

 

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. சைதன்யன் மெல்ல அவளிடமிருந்து விலகினான். “மிது இதுல அழறதுக்கு ஒண்ணுமேயில்லைடா…

 

 

“உனக்கு சொல்லணுமேன்னு சொன்னேன்டா… உன்னை பார்க்காம போனேன்னு கேட்டியே!! என்னால உன்னோட வலியை அதுக்கு மேல பார்க்க முடியும்ன்னு தோணலை மிது

 

 

“குழந்தை பிறந்தது அவளை பார்த்திட்டு நான் உடனே கிளம்பிட்டேன். எத்தனை நாள் நான் அதை நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன் தெரியுமா!! அன்னைக்கு ஒரு அம்மாவோட அருமை என்னன்னு உண்மையா உணர்வுபூர்வமா நான் உணர்ந்தேன் மிது

 

 

“அதுக்கு உனக்கு பெரிய தேங்க்ஸ் சொல்லியே ஆகணும் என்றவன் தன்னன்றியை தன் பாணியில் அவளுக்கு தெரிவித்தான்.

 

 

“நீங்க இன்னும் உங்க கோவத்தை பத்தி சொல்லலை

 

 

“சொல்றேன் டியர்… இதுவரை நான் உன்னை கஷ்டப்படுத்தினது எல்லாம் சொல்லிட்டேன். இப்போ உன்னோட டர்ன் தான் அதையும் சொல்லிடுறேன்

 

 

“அதான் அப்போ பிடிச்சு கேட்டுக்கிட்டு இருக்கேன்

 

 

“இன்னைக்கு அஸ்வினி அவ்வளவு பேசும் போது நீ ஏன் பேசலை எனக்கு அந்த விஷயத்துல உன் மேல ரொம்ப கோபம் மிது. இன்னொரு விஷயம் நீ ஏன் அஸ்வினிக்கு நம்ம கல்யாண விஷயம் சொல்லலை

 

 

“எனக்கு அவளை பத்தி தெரியுங்க… அவ கோவத்துல வார்த்தையை சிதறவிடுற ரகம். அவகிட்ட சொல்லக் கூடாதுன்னு நான் நினைக்கலை. நானா சொல்ல வேண்டாம்ன்னு தான் நினைச்சேன்

 

 

“இன்னைக்கு பார்த்தீங்கள்ள எப்படி பேசினா அவ, அப்படி அவ பேசும் போது நான் என்ன செய்யணும் நினைக்கறீங்க

 

 

“அதுக்காக என்னை கல்யாணம் பண்ணது தப்புங்கற ரீதியில நீ பேசினது எப்படி மிது… நீ அப்படி சொல்லுவேன்னு நான் நினைக்கலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சு எனக்கு

 

 

“நான் அந்த அர்த்தத்துல சொல்லலைங்க. அவ அப்படி சொன்னாலே அதுனால ஒரு குற்றவுணர்ச்சி நான் அவளுக்கு துரோகம் பண்ணிட்டனோன்னு

 

 

“உங்களை கஷ்டப்படுத்த அப்படி சொல்லலைங்க… ஒரு வேளை அவ உண்மையா உங்களுக்காக காத்திருந்தா நான் தப்பு செஞ்சது போல ஆகாதா

 

 

“நீ இவ்வளவு யோசிக்கற அளவுக்கு அவளுக்கு எந்த தகுதியும் இல்லை மிது. செபாஸ்டியன் சொன்னது கேட்டில்ல அவளோட எண்ணம் எப்படின்னு. இனி அந்த பேச்சை எல்லாம் விட்டு தள்ளுவோம்

 

 

“ஏங்க செபா விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?? என்றாள் மிது.

 

 

“என்ன விஷயம் கேட்குற மிது??

 

 

“செபாஸ்டியன் அஸ்வினியை விரும்புறது

 

 

“மொச பிடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாது என்றான்.

 

 

“என்னது செபா நாயா!!

 

 

“ஹேய் அது ஒரு உதாரணத்துக்கு சொன்னது, நான் செபாஸ்டியனை அப்படி சொல்ல மாட்டேன். உண்மையிலேயே அவன் ஒரு ஜெம்அவன் சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் சம்மட்டியில அடிக்கிற மாதிரி இருந்தது தெரியுமா

 

 

“ரொம்ப நல்லவன் எப்படி அவனுக்கு அஸ்வினி மேல இவ்வளவு லவ்ன்னு தெரியலை. இன்னைக்கு இல்லைன்னாலும் ஒரு நாள் அஸ்வினிக்கு அவனை புரியும்

 

 

“நிச்சயம் அவங்க லைப் ரொம்ப நல்லா இருக்கும், இருக்கணும். செபாஸ்டியனுக்காகவாச்சும் எல்லாம் நல்லபடியா நடக்கணும் என்றான்.

 

 

“செபாஸ்டியன் உங்களோட ரொம்ப பிரண்டு போல இவ்வளவு அக்கறையா பேசறீங்க

 

 

“நேத்து வரைக்கும் அவன் யாருன்னு எனக்கு தெரியாது தான். இன்னைக்கு உனக்காக அவன் பேசினது கேட்டதும் எனக்கு அவனை அவ்வளவு பிடிச்சுதுடி

 

 

“அச்சோ சொல்ல மறந்துட்டேன், என்னோட அடுத்த கோபத்தை பத்தி சொல்லவேயில்லையே…

 

 

“என்னங்க!!

 

 

“உனக்கு என்னை பிடிச்சிருக்கு அப்படிங்கறதை நீ செபாஸ்டியன்கிட்ட சொல்லியிருக்க என்கிட்ட ஒரு முறை கூட சொன்னதில்லை. கொஞ்சம் கூட அதை நீ என்கிட்ட காமிச்சதேயில்லை

 

 

“எனக்கு செம கோபம் மிது உன் மேல என்றான்.

 

 

“செபாஸ்டியன்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சு எல்லாம் சொல்லலை. அவர் உங்களை பத்தி தப்பு தப்பா பேசினாரா கோவத்துல மனசுல இருக்கறதை கொட்டிட்டேன்

 

“உனக்கு ஞாபக மறதி நெறைய இருக்கு மிது என்றான் சம்மந்தமில்லாமல்.

 

 

“என்னங்க சொல்றீங்க??

 

 

“என்னோட கோவத்தை போக்கற மருந்து நீ இன்னும் போடவே இல்லையே மிது

 

 

“ச்சு சும்மா போங்க… என்னால முடியாது…

 

 

“கொஞ்ச நேரம் முன்னாடி நான் கேட்காமலே கொடுத்த…அதே மாதிரி வேணும்டா ப்ளீஸ்

 

 

“முடியாது!! முடியாது!! முடியாது!!

 

 

“நீ என்ன டவாலியா மூணு முறை சொல்லுற. சரி விடு நீ அதுக்கெல்லாம் சரியா வர மாட்டே!! நானே எனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்கறேன்

 

 

“அதுக்கு முன்னாடி இங்க கொஞ்சம் வா!! என்றவன் தலையணை அடியில் இருந்து எதையோ எடுத்தான்.

 

 

“நான் உனக்கு எதுவுமே வாங்கி கொடுக்கலை மிது. என்னோட சம்பாத்தியத்துல உனக்கு செய்யணும்ன்னு ரொம்ப ஆசை. இது நான் பார்ட் டைம் ஜாப் பார்த்து வாங்கினது

 

 

“உங்களுக்கு தெரியாத ஒரு விஷயமிருக்கு மிது. நான் அங்க படிக்கும் போதே நைட்ல கேப் ஓட்டினேன். அந்த காசுல தான் என்னோட மத்த செலவுகளை பார்த்துக்குவேன்

 

 

“அப்போ அதிகமா என்னால சேமிக்க முடியலை மிது. நான் சேமிச்ச காசுல உனக்கு பொன்னை தான் வாங்கணும்ன்னு நினைச்சேன்

 

 

“இது என்னோட முதல் சம்பாத்தியத்துல வாங்கினது மிது என்றவன் அவன் வாங்கி வைத்திருந்த தங்க சங்கிலியை அவள் கழுத்தில் போட்டுவிட்டான்.

 

 

இன்று தான் அவன் தாலி அணிவிப்பது போல் அவளுக்கு கூசி சிலிர்த்தது அவளுக்கு.

 

 

“மிது நான் இவ்வளவு சொன்னேன், ஆனா நீ எதுவுமே சொல்லலையே!!

 

 

“என்ன சொல்லணும்!! என்றாள் எதுவும் தெரியாத அப்பாவி போல்.

 

 

“ஹ்ம்ம் நான் என்ன கேட்குறேன்னு உனக்கு புரியலை அப்படி தானே!! ஓகே பனிஷ்மென்ட் கொடுக்க வேண்டியது தான் என்று அவளை நெருங்கி அவன் கட்டை விரலால் அவள் உதடுகளை வருடினான்.

 

 

“நா… நான் சொல்லணுமா!! வேணாமா!! என்றவளின் குரல் உள்ளே இறங்கியிருந்தது.

 

 

“மிதும்மா நீ இப்படி சுருதி இறங்கி கேட்டா எனக்கு வேற என்னென்னமோ ஆகுதுடா… ப்ளீஸ் எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லி முடி என்னால ரொம்ப நேரம் காத்திட்டு இருக்க முடியலை என்றவன் அவள் இதழில் மென்மையாக முத்தமிட்டு “சொல்லு என்று ஊக்கினான்.

 

 

“உங்களை பார்த்ததும் ஒரு பீல்… முதல்ல அப்பியரன்ஸ் தான் பிடிச்சுது, உங்களை பார்த்திட்டே இருக்கணும் போல தோணும். நாங்க வண்டியில வரும் போது நான் கண்ணாடியில உங்களை பார்த்திட்டு தான் இருப்பேன்

 

 

“இதுக்கு முன்னாடி எவ்வளவோ பேரை பார்த்திருக்கேன். இப்படி எல்லாம் நான் பார்த்ததில்லை. ஏன் தெரியலை உங்களை பிடிச்சுது, ஆனா அஸ்வினிக்கு உங்களை பிடிக்கலை

 

 

“ஒரு வேளை அவ உங்களை சீண்டுற விதமா பேசினதுனால கூட எனக்கு உங்களை பிடிச்சுருந்துச்சான்னு தெரியலை. என்னையறியாம நான் உங்களுக்காக அவகிட்ட எப்பவும் சப்போர்ட் பண்ணி பேசுவேன்

 

 

“ஹ்ம்ம் தெரியும்டா…

 

 

“அஸ்வினி என்னை சீண்டிட்டே இருந்ததுனால தான் எனக்கு ஒரு பிரஸ்டீஜ் இஸ்யூன்னு நினைக்கிறேன். அவளை என்னை திரும்பி பார்க்க வைக்கணும்ன்னு நான் நினைச்சுட்டேன் போல… அதான் என்று இழுத்தவன் வருத்தமானான்.

 

 

“ச்சே ச்சே… ஏன் அப்படி எல்லாம் சொல்றீங்க… முடிஞ்சதை விடுங்க… என்னை பத்தி சொல்ல சொல்லிட்டு நீங்க இப்படி பேசினா என்ன அர்த்தம் என்றாள்.

 

 

“மிது அப்போலாம் எனக்கு இன்னொரு விஷயம் தோணிச்சு. அதை நான் இப்போ தான் ரியலைஸ் பண்ணுறேன்

 

 

“என்னங்க அது…

 

 

“நான் வண்டி ஓட்டும் போது என்னை யாரோ பார்க்கற மாதிரி எனக்கு தோணும். முதல்ல அஸ்வினி தான் பார்க்கறான்னு நினைச்சேன். அஸ்வினி வராத அன்னைக்கும் கூட எனக்கு அந்த பீல் இருந்துச்சு. அதுக்கு இப்போத் தான் காரணம் புரியுது என்றான்.

 

 

“நிஜமாவா சொல்றீங்க!!” என்றாள் ஆச்சரியமாய்.

 

 

“நிஜம் தான் மிது எனக்கு அப்படி தோணினது உண்மை தான். ஆனா மிது உன் மனசுல என் மேல அவ்வளவு ஆசை வைச்சுட்டு எப்படிடி ஒரு தரம் கூட அதை நீ வெளிய காட்டவேயில்லை

 

 

“உன்னோட காதலுக்காக நீ ஒரு துரும்பை கூட கிள்ளவேயில்லையே. நான் மட்டும் மறுபடியும் உன்னை பார்க்காம இருந்திருந்தா என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை

 

“நீங்களே அஸ்வினி பேசுனதுல ஹர்ட் ஆகியிருப்பீங்கன்னு தெரியும். இதுல நான் வேற உங்களை காயப்படுத்தணுமான்னு நான் எந்த முயற்சியும் எடுக்கலை

 

 

“அதுவும் இல்லாம நானே வந்து என்னோட லவ்வை சொல்றது எல்லாம் எந்த காலத்துலயும் நடந்திருக்காது. நீங்க வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கலைன்னா நான் என்னாகியிருப்பேன்னு என்னாலையும் நினைச்சு கூட பார்க்க முடியலைங்க

 

 

“நீங்களா வந்து கேட்டதும் தான் எனக்குள்ள அப்படி ஒரு சந்தோசம். என்ன ஆனாலும் சரி உங்களை கல்யாணம் பண்றதுன்னு முடிவே பண்ணிட்டேன்

 

 

“அதனால தான் அதிகம் யோசிக்கலை, உடனே சரின்னு சொல்லிட்டேன்

 

 

“மிது நீ அப்படி உடனே சொன்னது தான் என்னையும் யோசிக்க வைச்சது உனக்கு என்னை பிடிச்சிருக்கும்ன்னு சந்தேகம் வந்தது அந்த விஷயத்துல தான்

 

 

“முன்னெல்லாம் நீங்க பேச மாட்டேங்கறீங்கன்னு ரொம்ப கோவமா வரும். உங்களை அதிகம் மிஸ் பண்ணுற பீல் இருக்கும். அந்த இயலாமை கோபம் தான் நான் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணி பேசிட்டேன்

 

 

“சாரிங்க… இனிமே அப்படி செய்ய மாட்டேன்

 

 

“ஓ!! இனிமே அப்படி செய்யற உத்தேசம் வேற வருமா உனக்கு… அப்படி மட்டும் பேசிப்பாரு உன்னை எப்படி பேச விடாம பண்ணுறதுன்னு எனக்கு தெரியும்

 

 

“அடிப்பீங்களா!!

 

 

“ஹ்ம்ம்… அப்படியும் சொல்லலாம்

 

 

“ஹான் அடிப்பீங்க… அடிப்பீங்க… நாங்க பார்த்திட்டு சும்மா இருப்போம் பாருங்க

 

 

“என்ன பண்ணுவ மிது என்றவன் அவள் இடையில் கைப்போட்டு தன் பக்கம் இழுத்தான்.

 

 

“அடிச்சு பாருங்க அப்போ தெரியும் என்றாள்.

 

 

“நிஜமாவே அடிச்சிடுவேன்டி என்கிட்ட சவால் விடாதே என்றவன் குனிந்து அவள் காதில் கிசுகிசுத்தான்.

 

 

“வில்லங்கமா எதுவும் பிளான் பண்ணுறீங்களா!! என்றவள் அவன் தோளில் கைவைத்து அவனை தள்ளிவிட்டாள்.

 

 

“அடிச்சே தீருவேன், உன்னை கிஸ் அடிச்சே தீருவேன் என்றவன் அவளை நெருங்கி அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். முகம் முழுதும் முத்திரை பதித்து கொண்டே வந்தவன் கடைசியில் அவள் இதழ்களில் முடித்து வைத்தான்.

 

 

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மிது, அம்மா யாரையும் லேசுல பாராட்ட மாட்டாங்க. ஆனா அவங்களே உனக்காக என்கிட்ட பேசினாங்க தெரியுமா

 

 

“நான் சென்னைக்கு வந்திட்டு கடலூர் கிளம்பறேன்னு சொன்னதுமே அம்மா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இவ்வளவு நாள் தான் அவளை தனியா விட்டு போனே இப்பவும் தனியா போறேன்னு சொல்றியே ஒழுங்கா உன் பொண்டாட்டியும் கூடவே கூட்டிட்டு போன்னு சொன்னாங்க

 

 

“நான் அங்க எல்லாம் ரெடி பண்ணிட்டு எல்லாரையும் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன். சரின்னு அம்மாவும் பேசாம இருந்திட்டீங்க. அப்போ தான் நமக்குள்ள சின்ன சண்டை வந்ததுது உனக்கு ஞாபகமிருக்கா!!

 

 

“அதுனால தான் உன் கண்ணுலயே படவேணாம்ன்னு சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டேன். அம்மாகிட்ட உன்கிட்ட சொல்லிட்டேன்னு சொல்லி கிளம்பி போயிட்டேன்

 

 

“நான் ஊருக்கு போன பிறகு அம்மா போன் பண்ணி செம டோஸ் விட்டாங்க எனக்கு. நீ வீட்டுக்கு வந்ததும் என்னை பத்தி கேட்டிருப்ப போல, உன்னை பார்த்திட்டு எனக்கு திட்டு விழுகுது

 

 

“நான் ஒரு வார்த்தை சொன்னா கூட அவ திருப்பி பேச மாட்டா… நீ பாட்டுக்கு இப்படி பொசுக்குன்னு விட்டுட்டு போயிட்ட, அவ முகமே வாடிப்போச்சு அப்படி இப்படின்னு ஒரு மணி நேரம் பேசி பேசி என்னை கதற வைச்சாங்க

 

 

“சாரிங்க என்னால அத்தை உங்களை ரொம்ப திட்டிட்டாங்களா!!

 

 

“எனக்கு சாரி பூரி எல்லாம் வேணாம்!! பேச்சு மாத்தாம நம்ம கண்டிஷன் படி செய்

 

 

“ஆ!! அஸ்க்கு புஸ்க்கு… நீங்க என்ன சொன்னீங்க நீங்க கோவமா இருக்கும் போது தானே அதை செய்ய சொன்னீங்க!! என்னை விட்டு போனதுக்கு நான் தானே உங்க மேல கோவமா இருந்தேன். சோ கண்டிஷன் செல்லுபடி ஆகாது

 

 

“போடி ரொம்ப தான் பிகு பண்ணிக்கறா… நான் எப்படி வசூல் பண்ணிக்கணுமோ அப்படி பண்ணிக்கறேன். இரு சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடுறேன்

 

 

“ஆல்ரெடி உன்கிட்ட சொல்லாம வேற வந்திட்டேனா எனக்கே மனசு கேட்கலை. எப்படிடா திரும்பி வரலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நானா வந்த மாதிரியும் இருக்ககூடாது என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சேன்

 

“பார்த்தா அம்மா போன் பண்ணி திட்டவும் இது தான் சாக்குன்னு கிளம்பி வந்துட்டேன் உன்னை பார்க்க. வந்தா அம்மணி ஒரே நாள்ல வாடி போய் இருக்கீங்க

 

 

“உன்னை பார்த்ததும் கோவம் தான், அப்போவும் என் கோவத்தை எல்லாம் விட்டுட்டு உன்கிட்ட பேசினேன். நீ என்னடான்னா மறுபடியும் முருங்கை மரத்தை பிடிச்சு தொங்க ஆரம்பிச்சுட்ட

“அப்போ என்னை வேதாளம்ன்னு சொல்றீங்களா!! என்று முறைத்தாள்.

 

 

“நான் மட்டுமா சொன்னேன் எல்லாருமே சொல்லிட்டாங்க… என்று சிரித்தான்.

 

 

“நீ வேலையை விடுறேன் சொன்னது எனக்கு சந்தோசமா தான் இருந்துச்சு, ஆனா உங்க வீட்டுக்கு போறேன்னு சொன்னது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு மிது

 

 

“ஊருக்கு போறேன்னு சொல்லிட்டு என்னை பார்க்க கடலூர் வந்த தெரியுமா, அப்போவே மொத்தமா நான் விழுந்துட்டேன்டி

 

 

“சின்ன பையன் மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சேன் தெரியுமா!! இனி உன்னைவிட்டு எப்பவும் எங்கயும் போக மாட்டேன் என்றவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

 

நேசிப்பதை விட நேசிக்கப்படுவது சுகம் என்பதை அந்த கணம் மித்ரா உணர்ந்தாள். கணவனின் அணைப்பை விட அவளின் அணைப்பு உன்னைவிட மாட்டேன் எப்போதும் உன்னை பிரியேன் என்பதாய் அவனை இறுக்கியது.

 

 

அவள் மனதிற்குள் மழையாய் நேசத்தின் விதைகளை தூவியவன் இடி மின்னலாய் சில நேரம் அவளை பயமுறுத்தினாலும் என்றும் அவள் மீது அன்பு மழை மட்டுமே பொழிய காத்திருந்தான் என்பதை அப்பேதை அவள் உணர்ந்தாள்.

 

 

மோதல்கள் இல்லாத காதலுமில்லை, ஊடல்கள் இல்லாத தாம்பத்யமும் இல்லை. மோதலையும் ஊடலை சமாளித்து எதிர்நீச்சல் போடுபவனே வாழக்கையை அனுபவித்து வாழ்வான்.

 

 

மோதலும் ஊடலும் கூடலும் கலந்த வாழ்க்கையை ருசிக்க இருவரும் சேர்ந்தே பயணிக்க ஆரம்பித்தனர். இருவரின் மனதும் ஒன்றாய் தங்கள் சங்கமத்தை உணர்ந்திருக்க அங்கு அவர்களின் சங்கமம் இனிதாய் தொடங்கியது….

Advertisement