Advertisement

அத்தியாயம் – 22

 

 

நடந்து முடிந்திருந்த கலவரம் இருவருக்குமே மனச்சோர்வை கொடுத்திருந்தது. சைதன்யனும் ஏதோ யோசனையிலேயே உழன்றிருந்ததால் அவன் அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்து விட்டான்.

 

 

பின்னோடு மித்ரா வருவாள் என்று எண்ணியிருக்க வெகு நேரமாய் அவள் வராதிருந்ததால் எழுந்து வெளியில் வந்து பார்க்க மித்ரா சோபாவிலேயே உறங்கியிருந்தாள்.

 

 

அருகில் சென்றவன் உறங்கும் தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் கண்ணீர் கோடுகள் இன்னமும் மிச்சமிருந்தன.

 

 

காலை குறுக்கி கையை சோபாவின் திண்டின் மீது வைத்து உறங்குபவளை சத்தம் செய்யாமல் கைகளில் தூக்கிக் கொண்டான். அவர்கள் அறைக்கு சென்று அவளை கட்டிலில் படுக்க வைத்தான்.

 

 

அவனுக்கு இன்னமும் முடிக்க வேண்டியிருந்த ஓரிரு வேலைகளின் முக்கியத்துவம் ஞாபகத்திற்கு வர அவசரமாய் எல்லாவற்றையும் முடித்து வைக்க எண்ணி வேலையை செய்ய ஆரம்பித்தான்.

 

 

சூரியன் விடைபெறுவதற்கு அறிகுறியாய் வெளிச்சம் மங்கிக்கொண்டிருக்க அப்போது தான் வேலையை முடித்தான் சைதன்யன்.

 

 

இனி நிம்மதியாக இரண்டு நாட்கள் எந்த வேலையும் இல்லாமல் மனைவியுடன் நேரம் செலவழிக்கலாம் என்று எண்ணி வேலை எல்லாம் முடித்திருந்தான்.

 

 

இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த மித்ரா புதிதாய் தெரிந்தாள். களைப்பினால் வந்த உறக்கமா!! அல்லது பிரச்சனை தீர்ந்ததினால் வந்த நிம்மதி கலந்த உறக்கமா!! எதுவென்று பிரித்தறியாத உறக்கம் அவளை ஆட்கொண்டிருந்தது.

அவள் துயிலை கலைக்க விரும்பாதவன் அறையை சத்தமில்லால் அடைத்துவிட்டு எழுந்து வெளியில் வந்தான். இரவு உணவுக்கு வெளியில் சென்று வாங்கி வரலாமா இல்லை வீட்டிலேயே செய்யலாமா என்ற யோசனை அவனுக்கு.

 

 

வெளியில் சென்றால் நேரம் செலவாகும் பேசாமல் வீட்டிலேயே செய்துவிடுவோம் என்று முடிவுக்கு வந்தவன் சமையலறை புகுந்தான்.

 

 

அவன் தனியே இருந்திருந்த அந்த நாட்களில் சமையலை நன்கு படித்திருந்தான். பிரிட்ஜை திறந்து பார்க்க அங்கு மாவு இருந்தது. எளிமையாய் இரவு சமையல் முடித்தவன் ஒரு குளியலை போடுவோம் என்று எண்ணி குளியலறைக்குள் புகுந்தான். அப்போது தான் மெதுவாய் கண் விழித்தாள் மித்ரா.

 

 

ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. வெகு நேரமாக உறங்குவது போல் இருக்கிறதே இன்னுமா விடியவில்லை என்று எண்ணிக்கொண்டு அருகிருந்த கடிகாரத்தில் நேரம் பார்க்க மணி 7.45 எனக்காட்டியது.

 

 

‘என்ன இது விடிந்தது போல் நேரம் காட்டுக்கிறது ஆனால் இன்னமும் இருட்டாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். கண்ணை மூடி யோசிக்க நடந்த நிகழ்வுகள் எல்லாம் கண் முன் வந்தது.

 

 

‘அப்போ இது நைட்டா இவ்வளவு நேரமா நான் தூங்கிட்டே இருக்கேனா… ஏன் யாருமே என்னை எழுப்பலை, இந்த நேரத்துல தூக்கினா அத்தை திட்டுவாங்களே… ஆமா பாப்பா எங்க போனா… (இப்போவாச்சும் உனக்கு உன் பிள்ளை ஞாபகம் வந்துச்சே…)

 

 

அவசரமாய் எழுந்தவள் விடிவிளக்கை அணைத்துவிட்டு டியூப்லைட்டை போட்டுவிட்டாள். குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்கவும் சைதன்யன் தான் குளிக்கிறான் என்பது விளங்கியது.

 

 

வெளியில் வந்து பார்க்க வீட்டில் யாருமேயில்லை என்பது அப்போது தான் உரைத்தது அவளுக்கு. சமையலறைக்கு செல்ல சமையலும் முடித்து வைக்கப்பட்டிருந்தது அவளுக்கு ஆச்சரியமே!!

 

 

ஒரு வேளை எல்லாரும் கோவிலுக்கு போய் இருப்பார்களா!! என்று எண்ணிக்கொண்டவள் சைதன்யனுக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள். குளியலறை கதவு திறக்கவும் எழுந்து அவர்கள் அறைக்கு வர சைதன்யன் இடுப்பில் கட்டிய துண்டுடன் நின்றிருந்தான்.

 

 

“எல்லாரும் எங்க போய்ட்டாங்க!! மதுக்குட்டி கூட வீட்டில இல்லை என்னாச்சு!! என்று கேட்ட மனைவியை பதட்டமில்லாமல் பார்த்தான்.

 

 

“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம பார்த்தா என்ன அர்த்தம்!!

 

 

“நீ எவ்வளவு புத்திசாலின்னு பார்த்திட்டு இருந்தேன் என்றவன் அவளுக்கு பதில் சொல்லாமல் செல்பில் இருந்த அவன் துணி வைத்திருக்கும் இடம் நோக்கி நகர்ந்தான்.

 

 

அவனுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வந்து கட்டிலில் வைக்க மித்ரா இன்னமும் அங்கேயே நின்றிருந்தாள். “இன்னும் என்ன இங்க நிக்கற என்றான்.

 

 

“என்ன விளையாடுறீங்களா!! நான் கேள்வி கேட்டா பதில் சொல்லாம நீங்க பாட்டுக்கு இருந்தா என்ன அர்த்தம் என்றாள்  சற்றே சிடுசிடுவென்று.

 

 

“கொஞ்சம் வெளிய இரு என்றான்.

 

 

“முடியாது உள்ள தான் இருப்பேன் என்றவள் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

 

 

“டிரஸ் மாத்த போறேன் உனக்கு கூச்சமா இருக்குமேன்னு வெளிய இருக்க சொன்னேன். உனக்கு பிரச்சனையில்லன்னா எனக்கு பிரச்சனை இல்லை என்றவன் நமுட்டு சிரிப்புடன் கட்டியிருந்த துண்டை கழற்றப் போக “நான் வெளிய இருக்கேன் என்று எழுந்து ஓடிவிட்டாள் மித்ரா.

 

 

வேண்டுமென்று நிதானமாய் உடை மாற்றி வந்தவன் நேராக சென்றது சமைலறைக்கு தான். ‘நான் பாட்டுக்கு இங்க கரடியா கத்திட்டு இருக்கேன் யாருக்கு வந்த விருந்துன்னு இப்படி இருக்கார் என்று கோபம் வந்தது மித்ராவுக்கு.

 

 

பின்னாலேயே எழுந்து வந்தாள். அவன் எதுவும் பேசாமல் செய்து வைத்திருந்ததை எடுத்து வந்து உணவு மேஜையில் வைத்தான். “நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை என்றாள்.

 

 

“புருஷனுக்கு சாப்பாடு தான் செய்ய மாட்டே, சாப்பிடவும் விடமாட்டியா!! என்றான்.

 

 

“இதெல்லாம் நீங்களா செஞ்சீங்க!! காவ்யா செஞ்சு வைச்சுட்டு தானே போயிருக்கா!!

 

 

“எங்க கடலூர் போன காவ்யா இங்க வந்து செஞ்சுட்டு போனாளா!! என்று நக்கலாக கேட்டவன் இரு தட்டை எடுத்து வந்து வைத்தான்.

 

 

“எனக்கு பசிக்குது மித்ரா… ரொம்ப ரொம்ப பசி எதுவா இருந்தாலும் சாப்பிட்டா தான் பேச முடியும். நீயும் உட்காரு மதியம் சாப்பிட்டது எல்லாம் எப்பவோ செரிச்சு போயிருக்கும் என்றவன் இருவருக்குமாய் பரிமாற ஆரம்பித்தான்.

 

 

‘அப்போ இதெல்லாம் இவர் தான் செஞ்சாரா என்று எண்ணியவளுக்கு குற்றவுணர்வாக இருந்தது. அவ்வளவு நேரமாக தூக்கியிருக்கிறோமே என்று தன் மீதே கோபம் கொண்டாள்.

 

 

‘ஆமா காவ்யா கடலூர் போயிட்டாளா, அப்போ அத்தை, சைலேஷ், மதுக்குட்டியும் அங்க தான் போயிருக்காங்களா!! ஏன் போனாங்க, நாங்க ஏன் போகலை

‘ஒரு வேளை நைட் கிளம்பணுமா இருக்கும். சீக்கிரம் சாப்பிட்டு கிளம்ப பார்ப்போம் என்று எண்ணியவள் சாப்பிட ஆரம்பித்த பின்னே தான் அவள் பசி தெரிந்தது.

 

 

அவள் உண்பது பார்த்தவன் சத்தமில்லாமல் எழுந்து சென்று அடுப்பை பற்ற வைத்தான். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக தோசை வார்த்து கொண்டு வந்து கொடுக்க “எனக்கு போதும் என்றாள்.

 

 

“சாப்பிடு மித்ரா நான் இட்லி கம்மியா தான் வேக வைச்சேன், அது நமக்கு பத்தாது. நீ மதியமும் சரியா சாப்பிடலை சோ சாப்பிடு. இப்படி புருஷன் தோசை சுட்டுக்கொடுக்க பொண்டாட்டி சாப்பிடுறது எல்லாம் எப்போவாச்சும் தான் நடக்கும்

 

 

“வேணாம்ன்னு சொல்லி மிஸ் பண்ணிடாதே… என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான். மித்ராவிற்கு லேசாய் கண்கள் கரித்தது. அவளுக்கு அவனிடம் பேச நிறைய இருந்தது. ஆனால் அவன் கரிசனத்தில் வாயில் வார்த்தை வரவில்லை.

 

 

திருப்தியாய் சாப்பிட்டு முடித்து எழுந்தவள் “நீங்க உட்காருங்க நான் சுடுறேன் என்றாள்.

 

 

சைதன்யன் எந்த பிகுவும் செய்யாமல் “சரி நான் இங்கவே உட்கார்ந்துக்கறேன் என்று சொல்லி அடுப்பு தட்டின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.

 

 

அவனுக்கு தோசை ஊற்றிக்கொண்டே மீண்டும் ஆரம்பித்தாள். “அத்தை எங்க போயிருக்காங்க??

 

 

“கண்டிப்பா சொல்லியே ஆகணுமா!! ஹ்ம்ம்.. ஹ்ம்ம்… என்று சொல்லி யோசித்தவன் அவள் முகம் பார்க்க அவன் பதிலுக்கு ஆவலாய் அவன் முகம் பார்த்து நின்றிருந்தாள் மித்ரா.

 

 

“தோசை கருகுது மித்ரா… என்றான்.

 

 

“அச்சோ… என்றவள் திரும்பி பார்க்க அவள் கல்லில் தோசையே ஊற்றியிருக்கவில்லை. திரும்பி அவனை பார்த்து முறைத்தாள்.

 

 

“முறைக்காத டார்லிங்… நீ இன்னும் தோசை ஊத்தவேயில்லை அதான் சும்மா கிண்டலா சொன்னேன்

 

 

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை

 

 

“என்ன கேட்டே?? என்று மீண்டும் ஆரம்பித்தான்.

 

 

“நானே அத்தைக்கு போன் பண்ணி கேட்டுக்கறேன் என்றவள் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

 

அவள் மொபைலை தேடிப் பார்க்க அது காணவில்லை. எங்கே வைத்தேன் கடைசியாக என்று எண்ணிக்கொண்டு மீண்டும் தேடியவள் களைத்துப்போய் மீண்டும் அவனிடமே வந்து நின்றாள்.

 

 

அவன் இன்னமும் கீழே இறங்காமலே அமர்ந்திருந்தான். “இன்னும் என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்க. என் போன் எங்க?? உங்க போன் எங்க?? வீட்டில இருக்கற எல்லாரும் எங்க?? பதில் சொல்லாம இப்படி பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து இருக்கீங்க

 

 

“ரொம்பவும் திண்ணக்கமா இருக்கீங்க. நான் எவ்வளவு நேரம் பைத்தியக்காரி மாதிரி கேட்டுக்கிட்டே இருக்கேன். என் பிள்ளையை நான் பார்த்து எவ்வளவு நேரமாச்சு. காணலையேன்னு கேட்டா கிண்டல் அடிக்கறீங்க, நக்கல் பண்றீங்க

 

 

பெத்தா தான் பிள்ளையோட அருமை தெரியும். சுமந்து பெத்தவளுக்கு தான் தெரியும் வலி என்னன்னு என்று அவள் பாட்டுக்கு பொரிந்து கொண்டிருந்தாள்.

 

 

மெதுவாய் திண்டில் இருந்து இறங்கியவன் தட்டை கழுவி வைத்துவிட்டு அடுப்பை அணைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.

 

 

“என்னை பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி இருக்கா!! நான் கேட்டுகிட்டே இருக்கேன் என்னை ஏன் இப்படி தவிக்க விடறீங்க என்று கத்தினாள்.

 

 

“என்ன தெரியணும் உனக்கு?? என்றான் நிதானமாய்.

 

 

“மது எங்க?? வீட்டில இருக்கற எல்லாரும் எங்க??

 

 

“எல்லாரும் கடலூர் போயிருக்காங்க!!

 

 

“எதுக்கு?? ஏன் என்கிட்ட சொல்லாம போனாங்க?? எப்போ போனாங்க?? என்று அடுத்தடுத்து கேள்விகளை அடுக்கினாள்.

 

 

“நாம மதியம் இங்க வரும் போதே அவங்க வீட்டில இல்லை. அது அப்போ உன் கவனத்துல இல்லை இப்போ தான் உனக்கு கேட்கணும்ன்னு தோணியிருக்கு என்று மெதுவாய் குத்தினான் அவன்.

 

 

“என்ன மதியமா?? ஆனா ஏன்??

 

 

“நம்ம பிரச்சனை உங்க ஆபீஸ் வரை நாறிப்போன மாதிரி வீட்டில இருக்க எல்லாருக்கும் தெரியணுமா??

 

 

மித்ரா வாயடைத்து நின்றாள். “இல்லை ஆனா மது…

 

 

“உனக்கு மட்டும் தான் அக்கறை இருக்குன்னு பேசாத… என்கிட்ட மட்டும் இவ்வளவு பேசுற, உன் பிரண்டு வந்து கன்னாபின்னான்னு பேசும் போது மட்டும் உன் வாய் ஊமையா தானே இருந்துச்சு

 

 

“என்னமோ கடைசியா பிள்ளையை பத்தி உன் பிரண்டு பேசினதும் கோவம் வந்து திட்டிட்ட… சரியா

 

 

“அவ உங்களை சொன்னப்பவே திட்டினேன்

 

 

“அப்படியா!! நெஜமாவா மித்ரா!! என்றான் ஆச்சரியம் போல்.

 

 

“கோவமா வருது மித்ரா!! ஆனா உன் மேல கோவப்படவும் என்னால முடியலை என்று நிறுத்தினான்.

 

 

மித்ரா பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ஏன்னு கேட்டா முத்து உதிர்ந்து போகுமா மித்ரா!! கடலூர்ல இருந்த வரைக்கும் நல்லா தானே இருந்தே!!

 

 

“கடலூர் போனா ஒரு வேளை சரியாகிடுவியா என்றான்.

 

 

“நான் நல்லா தானே இருக்கேன். என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா பேசறீங்க என்றவள் அவனருகே வந்தமர்ந்தாள்.

 

 

“இந்த ரெண்டு நாள்ல உன்கூட நெறைய பேசணும்ன்னு ஆசையா இருந்தேன். கொஞ்ச நேரத்துல மூட் அவுட் பண்ணிட்ட மித்ரா

 

 

“நான் எதுவும் பேசலையே…

 

 

“நீ எதுவும் பேசவேயில்லை விடு என்றவன் எழுந்து அவர்கள் அறைக்கு சென்றான். மித்ராவுக்கு அவள் என்ன தப்பாக பேசினாள் என்று புரியவில்லை, அவன் சென்றதும் ஓரிரு நிமிடம் கண் மூடி யோசிக்க குழந்தை பற்றி பேசி அவனை காயப்படுத்தியது புரிந்தது.

 

 

அவளும் பின்னோடு எழுந்து அவர்கள் அறைக்கு சென்றாள். சைதன்யன் மல்லாக்க படுத்துக்கொண்டு கண்களை மூடியிருந்தான். அருகில் சென்று அமர்ந்தவளின் கரம் தன்னையறியாமல் அவன் முடி கோத ஆரம்பித்தது.

 

 

அவள் கைப்பட்டதும் எழுந்து அமர்ந்தான் சைதன்யன். “சாரி என்றாள்.

 

 

“ப்ளீஸ் நான் மதுவை பார்க்கலைன்னு கோவத்துல சொல்லிட்டேன். தப்பு தான்…

 

“சாரி வேணாம் மித்ரா…கத்தி வைச்சு அறுத்திட்டு அதுக்கு மருந்து போடுற மாதிரி தான் சாரி சொல்றதும். காயம் ஆறலாம் ஆனா வலி இருக்கத்தான் செய்யுது

 

 

“நீங்க கோவமா இருக்கீங்களா!! நாம இப்போ பேசலாமா!! என்றாள்.

 

 

“அதுக்கு முன்னாடி நீ ஊருக்கு பேசிடு அப்போ தான் உன்னால நிம்மதியா இருக்க முடியும் என்றவன் அவள் கைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.

 

 

அவன் சொன்னது போலவே மாமியாருக்கு அழைத்து பேசியவள் மதுவிடமும் பேசிவிட்டு சைதன்யனையும் குழந்தையிடம் பேச வைத்து அரைமணி நேரம் கழித்தே போனை வைத்தாள்.

 

 

“இப்போ ப்ரீ ஆகிட்டியா??

 

 

“ஹ்ம்ம்…

 

 

“சரி ஓகே… என்றவன் அவள் ஏதாவது கேட்பாள் என்று பார்த்திருக்க அவள் அமைதியாய் அவன் முகம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

 

“நீ ஏதோ பேசணும்ன்னு சொன்னே!! நீ கேட்க வந்தது என் முகத்திலையா இருக்கு என்றான்.

 

 

“எனக்கு வேண்டிய பதில் உங்க முகத்தில இருக்கு என்றாள் குறும்பாய்.

 

 

“என்ன பதில்?? என்றான்.

 

 

“அது.. அது அப்புறம் சொல்றேன்

 

 

“அப்போ எதுவும் இல்லையா அவ்வளவு தானா!!

 

 

“நான் கேட்கலைன்னா நீங்க சொல்ல மாட்டீங்களா!!

 

 

“நானே சொல்லத்தான் ஆசையா இருந்தேன். நீ தான் மூட் அவுட் பண்ணிட்ட, எனக்கு இப்போ எப்படி ஆரம்பிக்கன்னு தெரியலை

 

 

“சோ நீயே ஆரம்பி… நான் பதில் சொல்றேன் என்றவன் இப்போது சற்று சாந்தமாகியிருந்தான் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

 

 

“உங்… உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கு தானே

 

 

“அது இவ்வளவு நாளா நீ கண்டுப்பிடிக்கலையா!! என்றவனின் பேச்சில் இப்போது லேசாய் குறும்பு எட்டி பார்த்து அவன் சகஜநிலைக்கு திரும்பிவிட்டான் என்று அவளுக்கு புரிய வைத்தது.

 

 

“தெரியும் ஆனா எப்போ எப்படின்னு தெரியாது என்றாள்.

 

 

“இதை நீ நம்புவியான்னு எனக்கு தெரியாது மித்ரா. ஆனா இப்போ நான் சொல்ல போறது நிஜம் என்று சொல்லி இடைவெளிவிட்டான்.

 

 

அவன் அடுத்து பேச ஆரம்பிக்கும் முன் “இங்க வா… என்று அவள் கைப்பற்றி தன் எதிரில் இடைவெளி இல்லாமல் அமர்ந்திக்கொண்டான்.

 

 

பற்றியிருந்த அவள் வலக்கரத்தை விடாதவன் தன் கரத்துடன் சேர்த்து பின்னியவன் மெதுவாய் அதில் முத்தமிட்டான்.

 

 

“மித்ரா…கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்…

 

 

“ஹ்ம்ம்… என்று நிமிர்ந்தாள்.

 

 

“உன்னோட கண்ணை பார்த்திட்டே நான் பேசணும்ன்னு நினைக்கிறேன். நான் பேசுறது உண்மைன்னு என்னோட கண்ணு தான் புரிய வைக்கும்

 

 

“ப்ளீஸ் நான் சொல்றதை என்னை பார்த்திட்டே கேளு என்றான்.

“ஹ்ம்ம்… என்றாள்.

 

 

“முதமுதல்ல உன்கிட்ட அப்படி ஒரு ப்ரோபோசலை நான் எப்படி சொன்னேன்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியலை மித்ரா

 

 

“நீயும் நானும் சேரணும்னு தான் விதி போல, அதான் என் வாயாலேயே உன்னை கேட்க வைச்சிருக்கு

 

 

“அப்போ கூட என்னோட சுயநலத்துக்காக தான் உன்கிட்ட கேட்டேன். நீயும் சரின்னு சொன்னே… நீ அப்படி சொன்னப்போ அந்த நிமிஷம் எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்தது

 

 

“ஆனா வீட்டுக்கு வந்த பிறகு நான் கொஞ்சம் பீல் பண்ணேன்… கொஞ்சம் இல்லை ரொம்பவே பீல் பண்ணேன் என்றதும் அவள் முகம் வாடியது.

 

 

“நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்புறம் பீல் பண்ணலாம் என்றவன் “உன்கிட்ட நான் அப்படி கேட்டதே ரொம்ப தப்புன்னு நினைச்சேன்

 

 

“என் சுயநலத்துக்காக உன் வாழ்க்கையோட விளையாடுறதா பீல் பண்ணேன் மித்ரா. உன்னை நான் கட்டாயப்படுத்திட்டதா எனக்குள்ள குற்றவுணர்வு

 

 

“வீட்டுக்கு வந்து நைட் எல்லாம் தூங்கவே இல்லை. ஏதோவொன்னு எல்லாம் சரின்னு சொல்ற மாதிரியும் ஏதோவொன்னு தப்புன்னு சொல்ற மாதிரியும் ஒரே குழப்பம்

 

 

“நடக்கறது நடக்கட்டும்ன்னு நினைச்சேன். கொஞ்சம் தீவிரமா யோசிச்சப்போ ஒரு அனுமானத்துக்கு என்னால வரமுடிஞ்சது. அப்புறம் தான் என்னால கொஞ்சம் நிம்மதியா இருக்க முடிஞ்சது என்றவன் மீண்டும் ஒரு இடைவெளி விட்டு அவளை பார்க்க அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

 

 

“ரொம்ப லேட் மிது நீ… எதுவும் கேள்வி கேட்பேன்னு பார்த்தா இப்படி உம்முன்னு இருக்க என்றான்.

 

 

“என்ன அனுமானமா இருக்கும்ன்னு கொஞ்சம் ஊகிக்க முடியுது என்றவளின் முகம் செம்மை பூசியது.

 

 

இருகரம் நீட்டி அவள் முகவாயை தாங்கியவன் மெதுவாய் அவள் கன்னம் திருப்பி முத்தமிட்டான். அவள் கண்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் தோன்ற சிறு சிரிப்புடன் அவள் இதழை தன் இதழால் தீண்டினான்.

 

 

“என் பொண்டாட்டி கெஸ் பண்ணிட்டா போலயே… இனியும் சொல்லணுமா மிது அதான் உனக்கே எல்லாம் தெரிஞ்சிருக்கே என்றான்.

 

 

“எனக்கு தெரியாது, ப்ளீஸ் நீங்க சொல்லுங்க என்றாள்.

 

 

“நான் நினைச்சது சரி தான்னு தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்து காத்திட்டு இருந்தேன். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி பல சந்தர்ப்பம் கிடைச்சது எனக்கு அதை தெரிஞ்சுக்க

 

 

“முதல் சந்தர்ப்பம் ரயில்வே ஸ்டேஷன்ல கிடைச்சுது. உன்னை வழியனுப்ப வந்தப்பக் கூட இதெல்லாம் வேணாம், என்னை மன்னிச்சுடு. நான் கேட்டது தப்புன்னு கேட்கணும்ன்னு தான் நினைச்சேன்

 

 

“ஆனா நீ என்னையவே பார்த்திட்டு இருந்த, நான் பார்க்காதப்போ நீ என்னை பார்க்கறது புரிஞ்சுது. நான் உன்னை வைச்ச கண்ணு வாங்காம பார்த்தப்போ நீ வெட்கப்பட்ட, அது இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கு மிது

 

 

“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுது. உங்க வீட்டுக்கு வந்தப்போ எனக்காக உங்கப்பாகிட்ட என்னை பேச விடாம நீயே பேசி கல்யாணத்தை உடனே வைக்க சொன்னே

 

“அப்போ உன்னோட உறுதி எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. அந்த நிமிஷம் உங்கப்பா சொன்ன மாதிரி நான் கலெக்டர் ஆனதும் வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தோணிச்சு

 

 

“அதுக்கு முன்னாடியே நீ பேசி முடிச்சிட்ட, உன்கிட்ட வேணா நான் சுயநலமா நடந்திருக்கலாம். என்னால உங்கப்பாவை ஏமாத்த முடியலை

 

 

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி அவரை நேர்ல சந்திச்சு நடந்த விஷயத்தை அவர்கிட்ட சொல்லிட்டேன். நான் கொடுத்த நிர்பந்தம் தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு சொன்னேன்

 

 

“மாமா எவ்வளவு சூப்பர் தெரியுமா. அவர் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார். என் பொண்ணு உங்களை நம்புறா, அவ தப்பா போக மாட்டான்னு எனக்கு தெரியும். அவ மட்டுமில்லை நானும் உங்களை இப்போ ரொம்ப நம்புறேன்னு சொன்னார்

 

 

“என்ன அப்பாக்கு எல்லாம் தெரியுமா!! நிஜமாவே அப்பா அப்படி தான் சொன்னாங்களா!! என்று விழி விரித்தாள்.

 

 

“ஆமா மாமா அப்படி தான் சொன்னாங்க. இப்படி ஒளிவு மறைவு இல்லாம பேசுற உங்களை என் பொண்ணு மட்டுமில்லை நானும் ரொம்ப நம்புறேன்னு சொன்னார் என்றான்.

 

 

மித்ராவுக்கு சற்று பெருமையாக இருந்தது. வீட்டினரை ஏதோவொரு வகையில் ஏமாற்றிவிட்டோமோ என்ற குறுகுறுப்பு அவளுக்குள் இருந்தது. இப்போது அது சமனப்பட்டிருந்தது.

 

 

“அப்புறம் இதை நான் சொல்லியே ஆகணும்… என்று வாரணம் ஆயிரம் சூர்யா போல் பில்டப் கொடுத்தான் சைதன்யன்.

 

 

“என்னன்னு சொல்லுங்க என்று ஆர்வமாய் அவன் முகம் பார்த்தாள்.

 

 

“நம்ம முதலிரவு பத்தி தெரிய வேணாமா என்றதும் அவள் முகத்தை வேறுபுறம் திருப்பினாள். “என்னை பார்க்க சொன்னதா ஞாபகம், பாரு மிது என்றவன் அவள் முகம் திருப்பி தன்னை பார்க்க வைத்தான்.

 

 

“உண்மையா சொல்றேன் மிது அன்னைக்கு உனக்கு நம்பிக்கை கொடுத்ததா நான் சொன்னேன் ஞாபகமிருக்கா!! ஆனா அது உண்மையில்லை மது. அந்த நம்பிக்கையை எனக்கு நானே கொடுத்திக்கிட்டேன்

 

 

“உன்னை எப்பவும் என் வாழ்கையில இருந்து பிரியக்கூடாதுன்னு நினைச்சு தான் உன் கழுத்துல தாலி கட்டும் போது நினைச்சேன். அன்னைக்கு நீ என்ன மனநிலையில இருந்தேன்னு எனக்கு தெரியும்

 

 

“உன்னை எனக்கு எப்போ பிடிக்க ஆரம்பிச்சுதுன்னு எனக்கு தெரியலை மிது. நீ தான் என் மனைவி ஆகப் போறேங்கற எண்ணத்துல உன் மேல ப்ரியம் வந்துச்சா

 

 

“இல்லை உனக்கு என் மேல இருந்த பிரியத்தை பார்த்து உன்னை பிடிக்க ஆரம்பிச்சுதா, இல்லை நம்மை கல்யாணம் நடந்த பிறகு என் மனைவிங்கற உரிமை கொடுத்த பிரியமான்னு எனக்கு தெரியலை மிது

 

 

“அன்னைக்கு உன்னை என் மனைவியா அடையணும்ன்னு நினைச்சேன். மனசுக்குள்ள உனக்கு நம்பிக்கை கொடுக்கறதுக்கு தான் இதெல்லாம்ன்னு ஒரு நொண்டி சமாதானம் வேற நானே சொல்லிக்கிட்டேன்

 

 

“மறுநாள் உன்னை பார்க்கவே எனக்கு கஷ்டமா இருந்துச்சு. உன்னை கஷ்டப்படுத்திட்டேனோன்னு தோணிச்சு. ப்ளீஸ் மிது அதை இப்போ நினைச்சா கூட எனக்கு பிடிக்கலை

 

 

“உனக்கு என்னை பிடிச்சிருந்தா கூட உன்கிட்ட நான் மனம்விட்டு பேசி ஒரு சந்தோஷ மனநிலையில நமக்குள்ள நடந்திருக்க வேண்டியது நம்ம கல்யாணம் போல அதுவும் என்னோட கட்டாயத்துல நடந்திடுச்சுன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு

“அப்படி பார்க்காத மிது, ஒரு நாள் ஓகே மத்த நாள் எல்லாம் அப்படின்னு நீ கேட்காமலே எனக்கு புரியுது. நிஜமா சொல்றேன் என்னால எப்பவும் உன்னைவிட்டு இருக்க முடியாதுன்னு அப்போ தோணிச்சு

 

 

“நீ இல்லாத இரவு எனக்கு இரவா இல்லை, நீ தள்ளியிருந்தப்போ கூட உன் மேலே கை போடாம என்னால தூங்க முடியலை தெரியுமா

 

 

“என்னை எங்க எப்படின்னு தெரியலை ஆனா அப்போவே மயக்கி வைச்சுட்ட நீ!! என்னோட மாற்றத்தை உன்கிட்ட சொல்ல எனக்கு பெரிய தயக்கம்

 

 

“அது ஏன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். நான் அஸ்வினி பத்தி பேசறேன்னு நினைக்காதே, இந்த இடத்துல நான் அதை சொல்லி தான் ஆகணும்

 

 

“நான் அப்படி உன்கிட்ட வந்து என்னோட மாற்றம் பற்றி சொன்னா நீ எப்படி எடுத்துக்குவேன்னு எனக்கு தெரியலை. சொல்லவும் முடியலை, சொல்லாம இருக்கவும் முடியலை

 

 

“உன்னை ரொம்ப பிடிக்கும், நெறைய பேசணும்ன்னு தோணும். ஆனா வந்து பேசினா எதாச்சும் பேசி சொதப்பிருவேன்னு பயம். இங்க இருந்த அந்த ரெண்டு மாசமும் எனக்கு சொர்க்கமா தான் இருந்துச்சு

 

 

“என்னோட சந்தோசத்தை கூட நான் வெளிபடுத்திக்கலை… உன்னைவிட்டு ஊருக்கு போறப்போ ரொம்பவே கவலையா இருந்துச்சு

 

 

“உன்னை தனியா விட்டுட்டு போறேன்னு நிஜமாவே கஷ்டப்பட்டேன். உன்கிட்ட ஆறுதலா பேசணும்ன்னு தோணிச்சு. ஆனா நான் அன்னைக்கும் உனக்கு ஆறுதலா எதுவும் சொல்லலை

 

 

“அதுக்கு ஒரே காரணம் உனக்கு என்னை பிடிக்கும்ன்னு தெரியும். நான் திரும்பி வர்றதுக்கு குறைந்தபட்சம் ஒரு இரண்டு வருஷமாச்சும் ஆகும்ன்னு எனக்கு தெரியும்

 

“எனக்கு உன்னை பிடிக்கலை நான் ஏதோ கட்டாயத்துக்காக தான் உன்னை மணக்க கேட்டேன்னு நீ நினைச்சுட்டு இருக்கற எண்ணத்தை மாத்த வேண்டாம்ன்னு அந்த நிமிஷம் தோணிச்சு

 

 

“நான் இல்லாம நீ தனியா கொஞ்ச நாள் சமாளிச்சு தான் ஆகணும். அதுக்காக தான் நான் உன்கிட்ட பெரிசா எதையும் காட்டிக்கலை. ஊருக்கு போன பிறகு கூட உனக்கு போன் பண்ணலைன்னு நீ ரொம்ப தேடியிருப்ப… சரி தானே

 

 

“தேடினேனா கோவமா இருந்தேன் என்றாள் மனதை மறையாமல்.

 

 

“தெரியும் மிது… ஆனா அன்னைக்கு நான் உன்கிட்ட சொன்னது உண்மை தான். புது நம்பர் வாங்கிட்டு கூப்பிடலாம்னு தான் நினைச்சேன். அதுக்குள்ள அம்மா போன் பண்ணி நான் விஷயத்தை சொல்லி நீ கோவப்பட்டு…

 

 

“அது கூட நல்லா தான் மிது இருந்துச்சு…

 

 

“நான் கோவப்பட்டது நல்லா இருந்துச்சா உங்களுக்கு

 

 

“ஆமாடா நிஜமா தான், உரிமையா நீ கோவப்பட்டது ரொம்ப பிடிச்சுது

 

 

“அப்புறம் ஏன் சுருசுருன்னு பேசினீங்க எப்பவும்

 

 

“இது சமத்து கேள்வி இப்போ தான் நீ பார்ம்க்கு வந்திருக்கே செல்லம் என்றவன் “உன்கிட்ட வேணுமின்னே தான் ஒரு விலகல்தன்மையோட பேசினேன்

 

 

“உன்னை விட்டு வந்ததுல இருந்து உன்னோட ஞாபகமே அதிகமாயிருந்தது. எனக்கு எப்பவும் ஹோம் சிக் உண்டு, அம்மாவை தான் அதிகம் தேடுவேன். முதல் முறையா உன்னை நான் தேடினேன்

 

 

“நீ பக்கத்துல இல்லாம தூங்கவே முடியலை மிது என்றவன் அவளை இழுத்து தன் இறுக்கி அணைத்துக் கொண்டான்….

Advertisement