Advertisement

அத்தியாயம் – 21

 

 

ஓரிரு நிமிடத்தில் அஸ்வினி தயங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். மித்ரா ஏதோ வேடிக்கை பார்க்க வந்தவள் போல அசையாது ஒரே இடத்தில் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தாள்.

 

 

அஸ்வினி உள்ளே வந்ததும் “தப்பா எடுத்துக்காதீங்க… இங்க அக்கம் பக்கம் வீடு இருக்கு. நாம பேசுறது நம்ம நாலு பேருக்குள்ள, அதனால் டோர் சாத்திக்கறேன் என்றுவிட்டு கதவை அடைத்தான் சைதன்யன்.

 

 

செபாஸ்டியன் அவனின் நாசூக்கை கண்டு வியந்து கொண்டான். அஸ்வினியை எப்படி உள்ளே கூட்டி வந்தான் என்பதே அவனுக்கு ஆச்சரியம் தான். நடப்பது நல்லவைக்கே என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தான்.

 

 

ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து போல் யார் முதலில் தொடங்குவர் என்று தெரியாமல் சில மணித்துளிகள் அமைதியாய் இருந்தது அங்கு.

 

 

பிரச்சனைக்கு எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழியான சைதன்யனே பேச்சை ஆரம்பித்து வைத்தான். “சொல்லுங்க அஸ்வினி உங்களுக்கு என்ன தெரியணும் என்றான் வெகு நிதானமாய்.

 

 

“எனக்கு என்ன தெரியணும்ன்னு தெரியாம தான் என்னை உள்ள கூப்பிட்டீங்களா!! என்றவள் ஆரம்பிக்கும் போதே சூடாகத்தான் ஆரம்பித்தாள்.

 

 

“அதை திரும்ப கேட்குறதுல உங்களுக்கு ஒண்ணும் தயக்கமில்லையே!!

 

 

“எனக்கென்ன தயக்கம்… என்னை ஏமாத்திட்டு துரோகம் பண்ணிட்டு  தைரியமா என் முன்னாடி நீங்க எல்லாம் நிக்கறீங்க… நான் என்ன தப்பு செஞ்சேன் தயங்கி பேச… என்றவள் மித்ராவை பார்த்து முறைத்தாள்.

 

 

அவளருகே சென்று “என்கிட்ட அன்னைக்கு விளையாட்டா தான் சொன்னேன்னு நினைச்சேன்… சொன்ன மாதிரியே செஞ்சுட்டியேடி, சந்தோசமா உனக்கு இப்போ என்றாள் அஸ்வினி.

 

 

“அஸ்வினி அன்னைக்கு நான் பேசினது நிஜமாவே விளையாட்டா தான்… என்று ஆரம்பித்தவளை “விளையாட்டான்னு சொல்லி என்னை ஏமாத்தாத

 

 

“போதும் உன் நாடகமெல்லாம், ரெண்டு பேருமா சேர்ந்து என் முகத்தில கரி பூசணும்ன்னு நினைச்சிருக்கீங்க… என்னை பழிவாங்கணும் உங்களுக்கு அப்படி தானே

 

 

“உங்களை பழிவாங்க எங்களுக்கு என்ன நோக்கம் இருக்க போகுது அஸ்வினி… நான் திரும்பவும் சொல்றேன் நமக்குள்ள நடந்த விஷயத்துக்கு நீங்க மட்டும் தான் காரணகர்த்தா…

 

 

“இங்க பாருங்க இங்க பேசுற விஷயம் யாரையும் இனி கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறேன்… இதுக்கு மேல இதை பத்தி நாம பேசக் கூடாதுன்னு தான் இன்னைக்கே இதை முடிக்க நினைக்கிறேன்

 

 

“நான் விஷயத்துக்கு வர்றேன்… உங்ககிட்ட என்னோட விருப்பத்தை சொன்னேன்… பதிலுக்கு நீங்க கண்டிஷன் போட்டீங்க சரியா… அன்னைக்கே அதெல்லாம் சரியா வராதுன்னு நான் உங்ககிட்ட சொல்லிட்டேன்

 

 

“உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராதுன்னு நான் ஒதுங்கியாச்சி… ஒதுங்கின அன்னைக்கே நான் வேலையையும் விட்டுட்டேன்… உங்க கண்ணுல நான் திரும்பவும் படலை சரியா…

 

 

“அதுக்கு பிறகு நான் உங்களை வந்து பார்த்து உங்களுக்கு என்னைக்காச்சும் நம்பிக்கை கொடுத்திருக்கேனா… இல்லை தானே அப்புறம் எப்படி நான் உங்களுக்கு துரோகம் செஞ்சதா சொல்றீங்க என்றான்.

 

 

“ஓ!! அப்போ நான் வேணாம்ன்னு சொன்னா நீங்க உடனே போய்டுவீங்களா!! இதான் லவ்வா இப்படி தான் விட்டுட்டு போவீங்களா!! என்று வீம்பாய் கேள்வி கேட்டாள் அஸ்வினி.

 

 

“அஸ்வினி லூசு மாதிரி பேசாத அவர் உனக்கு விளக்கமா தானே சொல்றார்… புரியாத மாதிரி நடிக்காத, உன்னோட வீம்பை தூக்கி போட்டு சொல்றதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு என்றான் செபாஸ்டியன்.

 

 

“நீ வாயை மூடுடா வந்துட்டான் பெரிசா பேசுறதுக்கு. இவன் சொன்னா நான் அப்படியே நம்பிடணுமா… நானா இவன் பின்னாடி அலைஞ்சேன் இவன் தானே என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான்

 

 

“பதிலுக்கு நானும் பிடிச்சிருக்குன்னு தானே சொன்னேன். என்ன சில கண்டிஷன்ஸ் போட்டேன் தான் ஒத்துக்கறேன். அதெல்லாம் சரியா வராதுன்னு இவன் தானே எனக்கு புரிய வைச்சிருக்கணும்

 

 

“அதைவிட்டுட்டு இவன் எங்கயோ ஓடி ஒளிஞ்சுகிட்டானே அதை என்னன்னு நீ கேட்க மாட்டியா… என்று கத்தினாள்.

 

 

“நீங்க பேசுறது முட்டாள்த்தனம்ன்னு உங்களுக்கே தோணலை. என் குடும்பத்தை விட்டுட்டு வான்னு நீங்க சொல்லுவீங்க… ஆஹா அப்படி எல்லாம் வர முடியாது புரிஞ்சுக்கோ… என்னை புரிஞ்சுக்கோன்னு நான் உங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணுமா

 

 

“நான் அதுக்கெல்லாம் ஆளில்லை. அன்னைக்கு என்ன சொன்னே டிரைவரா… நீ எவ்வளவு கேவலப்படுத்தி அன்னைக்கு என்னை பேசின, அதெல்லாம் மறக்க சொல்றியா என்னை

     

 

அஸ்வினியை அதுவரை மரியாதையாக பேசிக்கொண்டிருந்தவன் பேச்சு மரியாதையை கைவிட்டிருந்தது. “டிரைவர்ன்னா அவ்வளவு கேவலமா உனக்கு…

 

 

செபாஸ்டியனுக்கு சைதன்யன் அஸ்வினியை மரியாதையின்மையாக பேசுவது கஷ்டமாக இருந்த போதிலும் இதெல்லாம் அவளுக்கு தேவை தான் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்தான்.

 

 

“நான் என்ன கேட்டேன் நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க… சரி நீங்க தான் எதுவும் வேண்டாம்ன்னு போயிட்டீங்க, இதோ இருக்காளே ஊமைக்கோட்டான் மாதிரி இவளுக்கு நான் உங்களை விரும்பினது தெரியாதா…

 

 

“இவ எப்படி உங்களை கல்யாணம் பண்ணாலாம்… இதுக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கலாம்ன்னு யோசிங்க நல்லா…

 

 

“இவ அப்பவே ஒரு முறை நாங்க உங்களை பத்தி பேசிட்டு இருக்கும் போது உனக்கு பிடிக்கலைன்னா நான் அவரை கரெக்ட் பண்ணிக்கறேன்னு சொன்னவ தானே… அன்னைக்கு விளையாட்டா சொன்னான்னு நினைச்சேன்

 

 

“இன்னைக்கு அதையே உண்மைன்னு இல்லை நிருபிச்சிருக்கா… என்றவளின் வார்த்தைகளில் விஷமிருந்தது.

 

 

அஸ்வினியின் பேச்சில் மித்ரா கூனிக்குறுகி நின்றாள். அன்று ஏதோ தோழிகளுக்குள் விளையாட்டாய் பேசிய விஷயத்தை அவள் எல்லோர் முன்னும் போட்டு உடைப்பாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

 

அஸ்வினியின் பேச்சுக்கு மித்ரா இப்போதாவது பதில் சொல்ல மாட்டாளா என்று சைதன்யன் அவளை ஒரு பார்த்தான். எங்கே மித்ரா பதில் சொன்னால் தானே.

 

 

பெருமூச்சொன்றை விடுத்தவன் “மித்ராவை நான் கல்யாணம் பண்ணது என்னோட தனிப்பட்ட விஷயம். என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு மித்ரா என்கிட்ட கேட்கலை

 

 

“நான் தான் மித்ராவை கேட்டேன், அதுக்கு மித்ரா சரின்னு சொன்னதுனால பெரியவங்க ஆசியோட எங்க கல்யாணம் நடந்தது. நான் டிரைவர்ன்னு தானே நீ என்னை வேண்டாம்ன்னு சொன்னே…நான் மித்ராவை பார்க்கும் போது ஆட்டோ தான் ஓட்டிட்டு இருந்தேன்

“அப்பவும் நான் டிரைவர் தான்… அன்னைக்கு மித்ரா எந்தவித தயக்கமும் காட்டலை தெரியுமா

 

 

“அதான் அவ உங்களை கரெக்ட் பண்ணா ட்ரை பண்ணாளே அப்புறம் எப்படி உங்களை வேண்டாம்ன்னு சொல்லியிருப்பா என்றாள் அஸ்வினி.

 

 

“மித்ரா என்னை விரும்பினதாவே இருக்கட்டும் ஆனா அவ நீ சொன்ன காரணத்தை சொல்லி என்னை மறுக்கலையே… அன்னைக்கு நான் டிரைவர் என்னை வேண்டாம்ன்னு சொன்னே!! இன்னைக்கு நான் கலெக்டர்ன்னு தானே என்னை தேடி வந்திருக்க!! என்று பொட்டில் அறைந்தது போல் கேட்டான்.

 

 

“இது அவளுக்கும் பொருந்தும் தானே… நீங்க தான் இப்போ கலெக்டர் ஆகிட்டீங்களே… அப்புறமென்ன அவளுக்கு கசக்கவா போகுது என்று இகழ்ச்சியாய் பேசினாள் அஸ்வினி.

 

 

“மித்ரா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மத்திச்சு இருக்கலைன்னா நான் கலெக்டர் ஆகி இருக்க முடியுமான்னு தெரியாது. ஒரு மனுஷனை ஆக்கறதும் அழிக்கிறதும் பெண் தான்னு சொல்லுவாங்க…

 

 

“என்னோட ஆக்கினது மித்ரா தான்… அவளோட சப்போர்ட் இல்லாம இந்தளவுக்கு நான் வந்திருக்கவே முடியாது. என் குடும்பத்தைவிட்டு நான் போக வேண்டிய நிலையில என் இடத்துல இருந்து என் குடும்பத்தை பார்த்துகிட்டது மித்ரா என்றவனின் பேச்சில் மனைவியை குறித்த பெருமிதம் தோன்றியது.

 

 

“அப்படிப்பட்டவளை என்னோட தேவதையை பார்த்து. நீ எப்படி துரோகின்னு சொல்லலாம். அதுவும் மித்ரதுரோகின்னு சொன்னியே… அப்படி என்ன அவ உனக்கு துரோகம் பண்ணதா நினைக்கற என்றான்.

 

 

“என்ன  துரோகமா!! அவ உங்களை கல்யாணம் பண்ணதே எனக்கு செஞ்ச துரோகம் தானே. நான் உங்களை விரும்பினேன்னு அவளுக்கு தெரியும் தானே. நீங்க இப்படி கேட்ட விஷயத்தை என்கிட்ட சொல்லி இருக்கலாமே

“உங்க கல்யாணம் நடந்த பிறகாச்சும் எனக்கு தெரிஞ்சிருக்கலாமே… அப்போ இவ்வளவு நாள் மூடி மறைச்சது எல்லாம் எதுக்காக… என்னை ஏமாத்த தானே

 

 

“இது உங்களை கல்யாணம் பண்ணி குழந்தையும் பெத்து நினைக்கவே எப்படி இருக்கு தெரியுமா என்றவள் அருவெருப்பாய் முகம் காட்ட மித்ரா என்ற சாது அங்கு மிரண்டது.

 

 

“வாயை மூடுடி… என்ற குரல் கேட்கவும் மூவருமே திரும்பி பார்த்தனர்.

 

 

“ஏய் என்ன உண்மையை சொன்னா உனக்கு கோவம் வருதா… என்று எகிற ஆரம்பித்தாள் அஸ்வினி.

 

 

“நீ இப்போ வாயை மூடலை நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. பேசாம வாயை மூடிட்டு போ… என்றவள் அஸ்வினியை நெருங்கி அவள் கழுத்தை பிடித்துவிட்டாள்.

 

 

“மித்ரா விடு… விடும்மா… என்ற சைதன்யன் மனைவியின் அருகில் வந்து அவளை அஸ்வினியிடம் இருந்து தள்ளி நிறுத்தினான். செபாஸ்டியனும் அஸ்வினியை இழுத்து தன் பக்கம் நிறுத்தினான்.

 

 

“விடுங்க என்னை… என்ற மித்ரா “என்னடி கொஞ்சம் விட்டா ரொம்ப பேசிட்டே போறே… என்ன செபாஸ்டியன் அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்கறீங்களா!! அன்னைக்கு ஆபீஸ்ல வைச்சு அவரை தப்பா பேசினீங்க

 

 

“இப்போ இவளை வைச்சு எங்க குடும்பம் மொத்தத்தையும் தப்பா பேச வைக்கறீங்களா!! இதுக்கு தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தீங்களா!! என்று செபாஸ்டியனை பார்த்து பொரிந்தாள் மித்ரா கோபமாய்.

 

 

இப்போது சைதன்யன் தன் மனைவியையும் செபாஸ்டியனையும் மாறி மாறிப் பார்த்தான். ‘இவன் என்னை பற்றி பேச என்ன இருக்கிறது என்ற அவன் எண்ணம் அடுத்தவனை ஆராய்ச்சியாய் பார்த்தது.

 

 

“துரோகி நீ எதுக்குடி செபாஸ்டியன் மேல பாயற, உன்னை கேள்வி கேட்டது நானு. நீ பதில் சொல்ல வேண்டியது எனக்கு. அதைவிட்டு அவரை என்னமோ முறைக்கிற… என்று முறைத்தாள் அஸ்வினி.

 

 

“உன்னை என்கிட்ட பேச வேணாம்ன்னு சொன்னேன். நீ மேல பேசின நானே உன் கழுத்தை நெரிச்சிருவேன். மரியாதையா வாயை மூடு

 

 

“உன்னை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா… நீ ஒரு சுயநல பிசாசு… உனக்கு எப்பவும் உன்னை துதி பாடுறவங்களை தான் பிடிக்கும்

 

 

“நீ விரும்பினது எப்பவும் உன் பக்கத்துல இருக்கணும். நீ விரும்பினது வேற யாருக்கும் பிடிக்கக்கூடாது அப்படி தானே!! உன் கூட பழகின அந்த நாள்ல, நான் உன்னை எப்பவாச்சும் விட்டு கொடுத்திருப்பேனா!! அதெல்லாம் நீ நினைச்சியாடி நன்றி கெட்டவளே… என்ற மித்ராவின் பேச்சில் அதிக காரமிருந்தது.

 

 

“மித்ரா ப்ளீஸ்… போதும் எதுவும் சொல்ல வேண்டாம்… நீ பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு என்றான் செபாஸ்டியன்.

 

 

“ஓ!! நான் அவளை சொன்னா உங்களுக்கு கஷ்டமா இருக்கா!! இவ்வளவு நேரம் இவ பேசினாளே அப்போ மட்டும் வேடிக்கை பார்த்தீங்க!! அந்த மனோ என்ன பாவம் பண்ணா நான் எதுக்காக அவளோட பேச்சை நிறுத்தினேன்

 

 

“எல்லாம் யாருக்காக இவளுக்காக… இவளுக்கு பிடிக்கலை அப்படிங்கறதுக்காக… அது மட்டுமா செஞ்சா, இவ சங்காத்தமே வேண்டாம்ன்னு போனப்பவும் என்னை சும்மா விட்டாளா…

 

 

“எவ்வளவு மென்டல் டார்ச்சர் கொடுத்தான்னு தெரியமா உங்களுக்கு. நான் செஞ்சு வைச்ச ரிபோர்ட்ல வேணும்ன்னே எரர் வர்ற வைக்குறது எவ்வளவு டார்ச்சர்ன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்

 

 

“நாங்க இவளை பேசினா உங்களுக்கு பொத்துகிட்டு வருதா… இவ என்னை பேசுறதை கூட என்னால தாங்கிக்க முடியும்… என் புருஷன் குழந்தை எல்லாம் தரக்குறைவா பேசுறதை எல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது

 

 

“நான் பேச கூடாதுன்னே இவ என்னை எமோஷனலா அட்டாக் பண்ண பார்க்கறா… இதை இன்னைக்கு நேத்திக்கு இல்லை இவ கூட நான் பழக ஆரம்பிச்சதுல இருந்தே இப்படி தான் செய்வா

 

 

“அப்போலாம் இவ என் மேல வைச்ச பிரியம்ன்னு நினைச்சு பூரிச்சு போனேன். அதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்ன்னு இப்போ தானே புரியுது என்றவளின் பேச்சை நிறுத்த முடியவேயில்லை.

 

 

“என்ன உன்னை என்ன பண்ணிட்டாங்கன்னு இவ்வளோ பேசுற… நான் உன்கிட்ட உண்மையான பிரண்டா தான் பழகினேன். அதுல நான் எப்பவும் குறைஞ்சதேயில்லை

 

 

“இத்தனை வருஷமா நீ தான் உள்ள ஒண்ணு வைச்சுக்கிட்டு வெளிய ஒண்ணா இருந்திருக்க… என்று அஸ்வினி கூறிக்கொண்டிருக்க ஆண்கள் இருவருக்கும் அவர்களை நிறுத்த வழி தெரியவில்லை.

 

 

சண்டை ஏதோ குழாயடி சண்டை போல் சென்றுக் கொண்டிருந்தது. “அஸ்வினி கொஞ்சம் நிறுத்து. இதுக்கு மேல நீ பேசிட்டே இருந்தே அப்போ அறை வாங்கின மாதிரி மறுபடியும் வாங்குவ என்றான் செபாஸ்டியன்.

 

 

“என்னடா என்னைய பார்த்தா எல்லாருக்கும் கிள்ளுகீரையா தெரியுதா. இவ ஏமாத்துவாளாம்!! இவன் ஏமாத்துவானாம்!! நீ வந்து என்னை அடிப்பியாம்!!

 

 

“என்னை என்ன எங்க வீட்டுல தர்மத்துக்கு பெத்து போட்டிருக்காங்களா… நீங்க ஏமாத்தவும் அடிக்கவும் நான் தானாடா உங்களுக்கு எல்லாம் கிடைச்சேன்

 

 

“ஹேய் வாயை மூடுன்னு சொல்றேன்ல… நிறுத்த மாட்டா நீ

 

 

“எல்லாரையும் சொல்றியே நீ யாருக்காச்சும் உண்மையா இருந்தியா… சொல்லு நீ உண்மையா இருந்தியா…

 

 

“நானும் பேச வேண்டாம்ன்னு அமைதியா இருந்தா நீ நிறுத்தற மாதிரி தெரியலை. உன்னை பத்தி அவங்க ரெண்டு பேரை விட எனக்கு நல்லா தெரியும்…

 

 

“உண்மையை சொல்லவா நீ ஏன் இப்படி கத்திக்கிட்டு இருக்கன்னு நான் உண்மையை சொல்லவா!! என்று அவன் சொல்லவும் கணவனும் மனைவியும் இதென்ன புதுக்கதை என்பது போல் செபாஸ்டியனை பார்த்தார்கள்.

 

 

“அவரை நீயே வேண்டாம்ன்னு சொல்லியிருந்தா பரவாயில்லை. அவருல உன்னைய வேண்டாம்ன்னுட்டு போய்ட்டார்… உன்னால அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலை

 

 

“நீ என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்றதுன்னு உனக்கு ஆத்திரம்… அதனால தான் அவரை தேடி பிடிச்சி கல்யாணம் பண்ணி உனக்கு அடிமையா வைச்சிருக்கணும்ன்னு நினைச்ச சரி தானே!! என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் கேட்டான்.

 

 

அஸ்வினி வாயடைத்து போய் தான் நின்றாள். செபாஸ்டியன் சொன்ன காரணம் ஓரளவிற்கு உண்மை தான்… சைதன்யன் அவளை வேண்டாம் என்று சொன்னது அவளுக்கு பெரும் அடியாக இருந்தது.

 

 

இதில் அதே நேரம் மித்ராவும் அவளை விட்டு பிரிந்தது அவளுக்கு இன்னமும் கோபமும் ஆத்திரமுமாய் இருந்தது. மித்ராவை மீண்டும் தன் புறம் திருப்ப செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய தோல்வியை ஒத்துக்கொள்ள மனமில்லாதவள் வேறு கிளைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்றாள்.

 

 

பிரிந்திருந்தால் தோழி தன்னை தேடுவாள் மீண்டும் வந்து சேருவாள் என்று நினைத்திருக்க அவள் ஒரேடியாக அவளை விட்டு விலகியது அவளின் எண்ணத்திற்கு பெரும் அடியாய் இருந்தது.

 

 

சைதன்யனும் மித்ராவை போல் மீண்டும் தன்னைத் தேடுவான் என்று எண்ணியிருக்க அவனும் மீண்டும் அவளை தொடர்பு கொள்ளாமல் இருந்தது அவளுக்கு இன்னும் எரிச்சலை கிளப்பியது.

 

 

அவனை தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காமல் அவள் இயலாமை கோபமாய் மாறிக்கொண்டிருந்தது. மித்ராவிற்கு விஷயம் தெரிந்திருக்கும் என்று எண்ணி பார்ட்டியில் சைதன்யனை பற்றி வலியச் சென்று விசாரித்து தோழியிடம் மூக்குடைப்பட்டது தான் மிச்சமாகி போனது.

 

 

“என்ன அமைதியா இருக்க!! உண்மையை சொல்லிட்டேனேன்னு யோசிக்கறியா!! அப்புறம் என்ன மித்ராவை துரோகின்னா!!

“நட்புன்னா என்னன்னு உனக்கு தெரியுமா… கொஞ்சம் கூட கூசாம மித்ராவை பார்த்து மித்ரதுரோகின்னு சொன்னியே அந்த வார்த்தையை புரிஞ்சு தான் சொன்னியா

 

 

“துரோகி அவளில்லை நீ தான்… உன்னோட பிரண்டு உனக்கு மட்டும் தான் பிரண்டா இருக்கணும்ன்னு நினைக்கிற சுயநலவாதி நீ. உனக்காக உனக்கு பிடிக்கலைங்கறதுக்காக மித்ரா அந்த மனோ பெண்ணோட இருந்த பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிக்கிட்டா தெரியுமா உனக்கு

 

 

“ஆனா நீ என்ன பண்ண அந்த பொண்ணோட அவ சேர்ந்து இருக்கக் கூடாதுன்னு என்கிட்டவே வந்து அந்த பொண்ணை வேற ப்ராஜெக்ட்க்கு அனுப்பச் சொன்னவ தானே நீ என்றதும் அஸ்வினியின் முகம் சுருங்கியது.

 

 

“நீ காதலுக்கும் உண்மையா இல்லை!! நட்புக்கும் உண்மையா இல்லை!! நீ உண்மையாவே ஒருத்தரை விரும்பி இருந்தா கண்டிப்பா அந்த காதல் ஜெயிச்சு இருக்கும்

 

 

“நீ உன்னோட சுயநலத்துக்காக விரும்பினது எல்லாம் காதல்ன்னு நீயே முட்டாள்த்தனமா பேரு வைச்சுக்காத. காதல்லயும் நட்பிலையும் எந்தவித எதிர்பார்ப்பும் இருக்க கூடாது

 

 

“இங்க இருக்கற நாலு பேருமே காதலிச்சு இருக்கோம். மித்ராவை தவிர நாம யாருமே அதுக்கு உண்மையா இல்லைன்னு நினைக்கறேன். அதனால தான் அவங்க காதலை கடவுளே சேர்த்து வைச்சிருக்கார் போல

 

 

“சாரி சைதன்யன் உங்க காதல் உண்மையில்லைன்னு சொன்னதுக்கு. கொஞ்சம் யோசிச்சு பாருங்க… அஸ்வினியை விரும்பினீங்க, மே பீ அவ எந்த கண்டிஷன்ஸ் போடாம உங்களோட லவ்வை ஏத்துக்கிட்டு இருந்தா அம் ஷுயர் நீங்க சின்சியரா இருந்திருப்பீங்க!!

 

 

“ஆனா அது நடக்கலை… அதுக்காக நீங்க பெரிசா வருத்தப்பட்டீங்களா!! கஷ்டமா இருந்திருக்கும் ஆனா பெரிசா வருத்தம் இருந்திருக்காது. அப்படி இருந்திருந்தா நீங்க திரும்பவும் தேடி வந்திருப்பீங்க… ஆனா நீங்க வரலை!!

 

 

“காதல்ல எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஒருத்தரை அவங்க குறை நிறையோட ஏத்துக்கறது தான் உண்மையான நேசமா இருக்க முடியும் என்றவன் சற்றே இடைவெளி விட்டான்.

 

 

“அப்படிப்பட்ட காதலையும் நட்பையும் மித்ரா மதிச்சாங்க!! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உண்மையா விரும்பினாங்க. அவங்க விரும்பினதை அவங்க அடையணும்ன்னு கூட நினைக்கலை

 

 

“ஆனா அவங்க காதல் ஜெயிச்சுது. ஏன்னா அவங்க நேசம் உண்மை அதனால அது ஜெயிச்சுது. நட்புக்கும் அவங்க உண்மையா தான் இருந்தாங்க. நீ தான் அந்த நட்பை கொச்சைப்படுத்தி பேசி அவங்களை காயப்படுத்திட்ட என்று அஸ்வினியை மீண்டும் குற்றம் சாட்டினான்.

 

 

“உனக்கு யாரைப்பத்தி பேசவும் எந்த தகுதியும் இல்லை அஸ்வினி. இது அவங்க வாழ்க்கை அவங்களை வாழ விடு. இதுக்கு மேல நீ இடையில புகுந்து எதுவும் பேசினா, நான் வேற முடிவு எடுக்க வேண்டி இருக்கும்

 

 

“கிளம்பு போகலாம் என்று அவள் கையை பற்றினான். செபாஸ்டியன் பேசியதை கேட்ட அஸ்வினிக்கு அவமானமாய் இருந்தது. அவன் சொல்ல சொல்ல தான் எந்தளவுக்கு கீழறங்கி நடந்திருக்கிறோம் என்று மெல்ல விளங்கியது.

 

 

ஆனால் அதை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்க எல்லாம் அவளின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.  எதுவும் பேசாமல் அவனோடு சென்றாள்.

 

 

செபாஸ்டியன் கிளம்பும் முன் சைதன்யனின் அருகில் வந்தான். “சாரி சைதன்யன்… எங்களால உங்களுக்கு ரொம்ப சிரமம்

 

 

“பரவாயில்லை, பிரச்சனை என்னால தானே… நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கறீங்க என்றான் அவன்.

 

 

“நான் மித்ராகிட்ட உங்களை ரொம்ப திட்டியிருக்கேன். அதுக்காவும் சாரி கேட்டுக்கறேன். நானும் இவளை மாதிரியே முட்டாள்த்தனமா அன்னைக்கு பேசிட்டேன் என்று அஸ்வினியை சுட்டிக்காட்டினான்.

 

 

“ஆனா ஒண்ணு மித்ரா இஸ் கிரேட், உங்களை அவ்வளவு லவ் பண்றாங்க… ஒரு வார்த்தை உங்களை சொல்லவிடலை. அன்னைக்கு உங்ககிட்ட சின்சியர் லவ் இருந்துச்சான்னு எனக்கு தெரியாது

 

 

“இன்னைக்கு அதை நான் உங்ககிட்ட பார்க்கறேன். மித்ராவை யாரும் எதுவும் சொன்னா உங்களுக்கு வலிக்குது. அவங்களை உங்க மனைவியா நீங்க பார்க்கலைன்னு நினைக்கிறேன்… அதாவது உங்க மனைவியை நீங்க காதலியா பார்க்கறீங்கன்னு சொல்றேன்

 

 

“ஆல் தி பெஸ்ட்… நாங்க கிளம்பறோம் என்றுவிட்டு கிளம்பிப் போனான் செபாஸ்டியன்.

 

 

“உண்மையை சொல்லட்டுமா செபாஸ்டியன்… யூ ஆர் ரியலி கிரேட் மேன்… நானாச்சும் மனைவியா இருக்கற காதலிக்காக தான் பேசினேன். நீங்க மனைவியாகப் போற உங்க காதலிக்கா பேசினீங்க பாருங்க சூப்பர்

 

 

“நிறை குறைகளோட ஏத்துக்கறது தான் காதல்ன்னா ஹாட்ஸ் ஆப் டு யூ செபாஸ்டியன்… சீக்கிரமே நல்லது நடக்கும். இப்படியே விட்டிறாதீங்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ!! அவ்வளவு சீக்கிரம் மேரேஜ் டேட் வைங்க அதான் உங்களுக்கு நல்லது என்றான் சைதன்யன்.

 

 

“தேங்க்ஸ்… என்ற செபாஸ்டியனை சைதன்யன் அணைத்து விடை கொடுத்தான்.

 

 

மித்ரா செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். செபாஸ்டியன் அவளுக்காய் இவ்வளவு தூரம் பேசுவான் என்று அவள் எண்ணவேயில்லை.

 

 

அவர்கள் சென்றதும் சைதன்யன் அவளை தாண்டிக் கொண்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தான். மித்ரா அங்கிருந்தே சோபாவிலே அமர்ந்து கொண்டாள்….

Advertisement