Advertisement

அத்தியாயம் – 20

 

 

‘என்ன மித்ரா சைத்துவோட மனைவியா!! அவளுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இன்னமும் கூட அவளுக்கு ஒரு நப்பாசை தான்.

 

 

ஒரு வேளை சைதன்யன் பொய் சொல்லி இருப்பானோ என்று. மித்ராவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை செபாஸ்டியன் மூலம் அறிந்திருந்தாள்.

 

 

ஆனால் அவள் கணவர் பற்றிய விபரம் அலுவலகத்தில் யாருக்குமே தெரியவில்லை செபாஸ்டியன் உட்பட. எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பமான மனநிலையுடன் இருந்தாள் அஸ்வினி.

 

 

சைதன்யனை விட அவள் மித்ராவை நன்கறிவாள் அவளிடமே கேட்டால் என்ன என்று யோசித்துக்கொண்டு மித்ராவை பார்த்தாள். மித்ராவின் பார்வையோ சைதன்யனை நோக்கி இருந்தது.

 

 

இருவரும் கண்களால் ஏதோ ஜாடை பேசிக்கொண்டிருந்தனர். அஸ்வினி தொண்டையை லேசாய் செருமிவிட்டு தான் அங்கிருப்பதை அவர்களுக்கு உணர்த்தினாள்.

 

 

“மித்ரா அவர் என்ன சொல்றார் என்றாள் நிதானமான குரலில்

 

 

மித்ரா தன்னை நிலைப்படுத்திக்கொண்டு “அவர் தான் சொல்லியிருப்பாரே அஸ்வினி அவர்க்கு நான் யாருன்னு. எனக்கு அவர் யாருன்னு நானும் உனக்கு சொல்லணுமா

 

 

“கேட்டுக்கோ இதுவரை நம்ம ஆபீஸ்ல இருக்கற யாருக்குமே இதை பத்தி தெரியாது. அவர் சொன்னது தான் நானும் சொல்றேன். நான் திருமதி. சைதன்யன் போதுமா என்றாள்.

 

 

தோழி சொன்னதை கேட்டதும் அஸ்வினியின் முகம் ஏகத்தும் மாறியது. “துரோகி… நம்பிக்கை துரோகி என்றாள் மித்ராவை பார்த்து.

 

அஸ்வினியை பற்றி மித்ரா முன்பே அறிந்தது தான் என்றாலும் அவள் கூறிய வார்த்தை சட்டென்று அவள் நெஞ்சை தைத்து வலிக்கச் செய்தது.

 

 

கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது. அஸ்வினியிடம் ஏதேதோ பேச வேண்டும் என்று எண்ணியிருக்க எதுவும் சொல்ல முடியாமல் அஸ்வினி பேசிய வார்த்தை மட்டுமே அவள் புத்தியில் நின்றது.

 

 

“ஹலோ என்ன வார்த்தை ரொம்ப பெரிசா போகுது. அப்படி என்ன துரோகத்தை நீங்க அவகிட்ட கண்டுட்டீங்க. துரோகத்தை பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க

 

 

“நான் அப்படி தான் பேசுவேன். அவ மட்டும் இல்லை நீயும் கூட துரோகி தான் என்கிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு என் பிரண்டை கல்யாணம் பண்ணி இருக்கியே உன்னை நான் என்னன்னு சொல்றது என்றாள்.

 

 

“உனக்கும் எனக்குமான விஷயம் எப்பவோ முடிஞ்சு போனது. அதுக்கு காரணம் நானில்லை நீ, அதை முதல்ல மைன்ட்ல வை. அப்புறம் மித்ராவை நான் மேரேஜ் பண்ணது என்னோட சொந்த விஷயம் அதுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை

 

 

“அவளை நீ எதுக்கு துரோகின்னு சொல்ற… இனி எதாச்சும் நீ அவளை பத்தி பேசினா என்னை நீ வேற மாதிரி பார்க்க வேண்டி இருக்கும்

 

 

“என்ன வேற மாதிரி பார்க்க வேண்டி வரும்…என்ன கலெக்டர்ன்னு பெரிய மிதப்பா… மிரட்டுறீங்களா… என்று அவனை பார்த்து கத்தியவள் அடுத்து மித்ராவை நோக்கி பாய ஆரம்பித்தாள்.

 

 

“என்னடி அவரை பேச வைச்சு வேடிக்கை பார்த்திட்டு இருக்கியா… எனக்கு பதில் சொல்லுடி… உனக்கெல்லாம் யாருடி மித்ரான்னு பேரு வைச்சா… உனக்கு மித்ர துரோகின்னு தான் பேரு வைச்சிருக்கணும் என்றாள் இன்னும் ஆங்காரமாய்.

 

 

“ஹேய்… என்றவன் அஸ்வினியின் கழுத்தை பிடிக்க போக மித்ரா அவன் கையை பிடித்து தடுத்தாள். “வேணாம் விட்டுடுங்க என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

 

 

“நீயும் பதில் சொல்லிடாத என்னையும் பதில் சொல்ல விடாத இப்படியே உட்கார்ந்து அழுதிட்டே இருடி என்று மனைவியிடம் பொரிந்தவன் “வா நாம போகலாம், அட்லீஸ்ட் இதாச்சும் நான் சொல்றதை கேளு என்று அவள் கைப்பிடித்து இழுத்தான்.

 

 

மித்ராவோ அங்கிருந்து நகர்வேனா என்று நின்றாள். சைதன்யனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டு சென்றுக் கொண்டிருந்தது.

 

 

“ஹலோ என்ன எங்க கிளம்ப பார்க்கறீங்க. எனக்கு பதில் சொல்லாம நீங்க ரெண்டு பேரும் இங்க இருந்து போக முடியாது. என்னை என்ன கிறுக்கச்சின்னு நினைச்சுட்டு இருக்கீங்களா… என்றாள் அஸ்வினி.

 

 

“இதுவரைக்கு நீ பேசினதுலையே இப்போ பேசினது மட்டும் தான் உண்மை. நீ கிறுக்கச்சி தான்… என்றவன் “நான் கிளம்பினா உன்னால என்ன பண்ண முடியும். உன்னாலானதை பண்ணிக்கோ என்றான்.

 

 

“என்ன வேணாலும் பண்ணுவேன்நானா உன்கிட்ட வந்து முதல்ல சொன்னேன். நீ தானே என்னை பிடிச்சிருக்குன்னு முதல்ல சொன்னே

 

 

“நீ இப்போ கலெக்டர் தானே உன்னை ஊரறிய அசிங்கப்படுத்துவேன். அப்போ என்ன பண்ணுவ என்றவளின் ஒவ்வொரு வார்த்தையும் ஆங்காரமாகவும் அகம்பாவமுமாய் வெளியில் வந்தது.

 

 

உள்ளே ஏதோ நடக்கிறது என்று வெளியே இருப்பவர்கள் ஓரிருவர் அங்கிருந்தவாறே வெறிக்க ஆரம்பித்தனர். “கொஞ்சம் நிதானமா பேசறீங்களா… உங்க கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியும்

 

 

“நீங்க இப்போ அதை கேட்கிற நிலையில இல்லை. யூ மென்டலி டிஸ்டப்ர்ட் நான் உங்ககிட்ட பேச விரும்பலை. இது ஆபீஸ்ன்னு உங்களுக்கு வேணா ஞாபகம் இல்லாம இருக்கலாம் என்று அஸ்வினியை பார்த்துச் சொன்னவன் “மித்ரா இன்னமும் இங்கவே நிக்கணுமா உனக்கு

 

 

“உன் பிரண்டு உன்னை பேசுறதை நீ வேணா பார்த்திட்டு காது குளிர கேட்டுட்டு இருக்கலாம் என்னால அப்படி இருக்க முடியாது, வா என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற சென்றான்.

 

 

அஸ்வினி இருவருக்கும் குறுக்காக வந்து நின்று அவர்களை வெளியில் செல்ல விடாமல் கதவருகில் சென்று நின்று கொண்டாள்.

 

 

சரியாக அதே நேரம் செபாஸ்டியன் உள்ளே நுழைந்தான். குமார் அஸ்வினி அலுவலகம் வந்திருந்த விஷயத்தை அவனிடம் சொல்லியிருந்தான்.

 

 

மித்ராவும் அலுவலகம் வந்திருந்ததை அவனறிவான். அஸ்வினி இன்னும் வராமல் இருக்கிறாள் என்றால் என்று யோசித்துக்கொண்டே குமாரை துருவ அவள் யாரோ ஒரு நபருடன் பேசிக் கொண்டிருப்பதை சொன்னவன் சைதன்யன் அவன் பெயர் என்று சேர்த்து சொல்லவும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றறியாதவனா அவன்.

 

 

ஏதோ பெரிய பிரச்சனை நடக்கப் போகிறது என்று உணர்ந்தவன் சடுதியில் அங்கிருந்து கிளம்பி கீழே வந்திருந்தான். கதவின் வாயிலில் நின்றிருந்தவளை தள்ளிக்கொண்டு தான் அவன் உள்ளே நுழைந்திருந்தான். “என்ன பண்ணிட்டு இருக்க அஸ்வினி?? என்று அவளை பார்த்து கேட்டான்.

 

 

“இவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணாங்க தெரியுமா உனக்கு?? என்னை ஏமாத்திட்டாங்க செபா?? ரெண்டு பேரும் என்னை ஏமாத்திட்டாங்க??

 

 

“அதிலயும் இவ இருக்கா பாரு, சொன்னது போலவே செஞ்சிட்டா. அன்னைக்கு விளையாட்டா சொல்றான்னு நினைச்சேன். துரோகி இவ என்றவள் அதீத வெறுப்புடன் மித்ராவை நோக்கினாள்.

 

 

“எனக்கு பதில் சொல்லாம இங்க இருந்து போக பார்க்கறாங்க. அதான் அவங்களை போகவிடாம தடுத்துட்டு இருக்கேன் என்றாள்.

 

 

சைதன்யன் அவள் பேசுவதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. “மித்ரா வா போகலாம் என்று மனைவியின் கைப்பற்றி இழுத்துச் சென்றான்.

 

 

“ஹேய் நான் பேசிட்டே இருக்கேன் நீங்க எங்க போறீங்க என்று கத்தினாள் அஸ்வினி.

 

 

“அஸ்வினி டோன்ட் கிரியேட் சீன்… ஷட்அப் அஸ்வினி என்று அவளை அடக்கினான் செபாஸ்டியன்.

 

 

“நீ யாருடா என்னை ஷட் அப் சொல்ல என்று அவனிடமும் எகிறினாள்.

 

 

செபாஸ்டியன் அந்த அறையின் திரைசீலையை இழுத்துவிட்டான் உள்ளே நடப்பது வெளியே தெரியாதவாறு. “அஸ்வினி போதும் நீ ரொம்ப பண்ணுற, எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணுற என்றான்.

 

 

“அப்படி தான் பண்ணுவேன், நீ ஒண்ணும் ஏமாறலையே!! நான் தானே ஏமாந்தேன்!! என்றாள்.

 

 

“வாயை மூடு என்ற செபாஸ்டியன் அவளை ஓங்கி ஒரு அறைவிட்டான். அவன் கொடுத்த அடியில் கன்னத்தை பிடித்துக்கொண்டு அருகிருந்த இருக்கையில் தொப்பென்று விழுந்தாள் அவள்.

 

 

செபாஸ்டியன் திரும்பி “நீங்க கிளம்புங்க மித்ரா, இவளை நான் பார்த்துக்கறேன் என்று அவர்களை கிளம்பச் சொன்னான். சைதன்யன் மித்ராவை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

 

 

பின் ஏதோ தோன்றியவனாய் “ஒரு நிமிஷம் மித்ரா என்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்தான். “செபாஸ்டியன் ரைட்…

 

“எஸ் சொல்லுங்க என்றான் செபாஸ்டியன்.

 

 

“இது எங்க வீட்டு அட்ரஸ் உங்களால முடிஞ்சா இன்னைக்கு இவங்களை நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க… இல்லன்னா எப்போன்னு சொல்லுங்க நாங்க வீட்டில இருப்போம்

 

 

செபாஸ்டியன் சைதன்யனை வித்தியாசமாய் பார்த்தான். ‘இவன் என்ன லூசா எதுக்கு வீட்டுக்கு வரச் சொல்றான் என்பதாய் இருந்தது அந்த பார்வை.

 

 

“என் பொண்டாட்டிக்கு அவ பிரண்டுக்கு விளக்கம் கொடுக்கலைன்னா தூக்கமே வராது. இப்போ தான் அவ நார்மல்க்கு வந்தா, மறுபடியும் அவளை பழையமாதிரி பார்க்க எனக்கு விருப்பமில்லை

 

 

“எதுவா இருந்தாலும் இன்னைக்கே முடிச்சிடலாம் அப்படிங்கறது என்னோட எண்ணம் என்றவன் அஸ்வினியையும் செபாஸ்டியனையும் ஒரு முறை நோக்கிவிட்டு “உங்களுக்கும் அப்படி தான்னு நினைக்கிறேன், சோ ப்ளீஸ் என்றுவிட்டு அவன் கையில் விசிட்டிங் கார்டை திணித்துவிட்டு நகர்ந்தான்.

 

 

மித்ராவை அழைத்துக் கொண்டு வந்த சைதன்யனுக்கு மனைவியின் மேல் கடும்கோபம் வந்தது. அஸ்வினியை எதிர்த்து ஒரு சொல் கூட சொல்லாத அவள் மீது அவனுக்கு கோபமும் வருத்தமும் இருந்தது.

 

 

இருந்தாலும் அவளை எதுவும் சொல்ல மனம் வரவில்லை. அஸ்வினி பேசியதில் இருந்து சிலை போல இருக்கிறாள் இந்த நிமிடம் வரையிலும்.

 

 

இருவருமாக வண்டியில் ஏறிய பின் சைதன்யன் வீட்டிற்கு அழைத்தான். “அம்மா நான் தான் பேசறேன். நீங்க உடனே கிளம்பி கடலூர் போங்கம்மா

 

 

“சைலேஷ்க்கும் லீவ் விட்டாச்சு தானே, இப்போ உடனே கிளம்புங்கம்மா அப்போ தான் நைட்குள்ள அங்க போய்டலாம். போகும் போது மதுக்குட்டியும் கூட்டிட்டு போங்க

“ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா… நான் ஊருக்கு வந்த பிறகு சொல்றேன்… நானும் மித்ராவும் ரெண்டு நாள்ல அங்க வந்திருவோம்… என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

பன்னீரிடம் பேசி அவர் மனைவியை அவன் வீட்டினருக்கு சற்று உதவியாய் இருக்குமாறு வேண்டிக்கொண்டு அவர் எண்ணை வாங்கி அன்னைக்கு அனுப்பி வைத்தான்.

 

 

அவன் அன்னை அவனுக்கு அழைக்க “சொல்லுங்கம்மா…

 

 

“நாங்க வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்… நீங்க எங்களுக்காக காத்திட்டு இருக்க வேண்டாம்… நாங்க வந்து நீங்க கிளம்பினா நைட் நேரம் கெட்ட நேரத்துல தான் அங்க போய் சேர முடியும். அப்புறம் கடலூர் வீட்டு சாவி என்னோட பெட்டியில இருக்கு, மறக்காம எடுத்துக்கோங்க

 

 

“இப்போவே கிளம்புங்க… உங்களுக்கு பஸ் ஸ்டான்ட் போக கார் சொல்லியிருக்கேன்… கொஞ்ச நேரத்துல வண்டி வந்திடும் என்றுவிட்டு போனை வைத்தான்.மித்ராவோ இன்னமும் அசையாமல் தான் உட்கார்ந்திருந்தாள். வழியில் வந்த ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தச் சொன்னான் அவன்.

 

 

பன்னீரையும் மிகவும் வற்புறுத்தி அவர்களுடனே சாப்பிட அழைத்துச் சென்றான். இருவரும் தனியாக சென்றால் ஒருவேளை மனைவி இருக்கும் மனநிலையில் உணவை மறுக்க கூடும் என்பது அவன் கணிப்பு.

 

 

மூன்றாமவரின் முன்னால் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு எழுவாள் என்று எண்ணி பன்னீரை அவருடன் அழைத்து சென்றான். அவன் கணிப்பு சரியே என்பது போல் தான் மித்ராவும் பேருக்கு ஒன்றிரண்டை கொறிக்க ஆரம்பித்தாள்.

 

 

சைதன்யனும் அவள் சாப்பிட இலகுவாய் தான் ஆர்டர் செய்திருந்தான். பன்னீர் சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து எழுந்து சென்றுவிட்டிருந்தார்.

மித்ராவுக்காய் ஜூஸ் ஆர்டர் செய்திருந்தான். அவள் அதை குடிக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். “மித்ரா ஜூஸ் குடி கிளம்பணும் என்றான்.

 

 

“எனக்கு வேண்டாமே என்றாள்.

 

 

“குடிச்சுட்டு வா போகணும் என்று அழுத்திச் சொன்னான்.

 

 

வேறுவழியில்லாமல் அதை எடுத்து குடித்தாள். பன்னீர் அவர்கள் வீட்டில் இறக்கிவிட்டு கிளம்பிவிட்டார்.

 

 

சைதன்யன் தான் வீட்டை திறந்தான். மித்ராவுக்கு கவனம் அங்கிருந்தால் தானே, வீட்டை கணவன் திறப்பதோ, வீட்டில் யாருமில்லாமல் இருப்பதோ எதுவும் கண்ணில் படவில்லை.

 

 

இயந்திரமாய் தான் வீட்டின் உள்ளே நுழைந்தாள். உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்துவிட்டு மித்ராவிடம் வந்து நின்றான் அவள் கணவன்.

 

 

“மித்ரா… மித்ரா… மித்ரா… மித்ரா…

 

 

“மித்ராஆஆஆ…. என்று அவன் கத்தியவாறே அவளை உலுக்கவும் தான் “என்னங்க என்றாள்.

 

 

“என்னடியாச்சு உனக்கு, ஏன் இப்படி பிரமை பிடிச்ச மாதிரி இருக்க என்றதும் அவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.

 

 

“அவ என்ன வார்த்தை எல்லாம் சொன்னா கேட்டீங்கள்ள… நா… நான் துரோகியாங்க… அதுவும் மித்ர துரோகின்னு சொல்றா…

 

 

“என்… என்னை பார்த்து அப்படி சொல்லிட்டாங்க… என்றவளுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து பெரும் கேவலாகியது.

 

 

சைதன்யன் அவள் அழட்டும் என்று பொறுமை காத்தான். ஒருவாறு அழுது ஓய்ந்தவளை பார்த்து “அவ அவ்வளவு பேசுறா, அவளுக்கு பதில் சொல்ல உன்னால முடியலை மித்ரா

 

 

“நீ பேசாம இருந்தா என்ன அர்த்தம். அவ சொன்னதெல்லாம் உண்மைன்னு நீ ஒத்துகிட்ட மாதிரி தானே ஆகுது. ஏன் அப்படி அமைதியா நின்ன என்றான் நிதானமாகவும் கேள்வியாகவும்.

 

 

“அவகிட்ட என்னென்னமோ பேசணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா அவ அப்படி சொன்னதும் என்னால தாங்க முடியலை. நான் தப்பு பண்ணிட்டேனாங்க

 

 

“அப்படின்னா!!! என்றான் அவன்.

 

 

“இல்லை அவளோட வாழ்க்கையை நான் தட்டி பறிச்சுட்டேனா… அவளுக்கு துரோகம் பண்ணிட்டேனா… என்றவளை ஓங்கி நாலு அறை வைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.

 

 

தன்னையறியாமல் பித்து போல் உளறுபவளை அடிக்கவும் மனம் கேட்கவில்லை. “அப்போ என்னை கல்யாணம் பண்ணது தப்புன்னு நினைக்கிற அப்படி தானே என்றவனின் குரல் குற்றம் சாட்டுவதாய் இருந்ததை உணரவில்லை அவன் மனைவி.

 

 

“அப்படி தானேங்க அவ சொன்னா… அதனால தானே என்னை துரோகின்னு சொன்னா என்றாள் மீண்டும் அழுகையை தொடங்கும் நோக்குடன்.

 

 

கையுயர்த்தி அவளை பேச வேண்டாம் என்பது போல் தடுத்தவன் “நாம எதுவும் பேச வேண்டாம்ன்னு நினைக்கிறேன்… நீ உள்ள போய் ரெஸ்ட் எடு… என்றவன் சோபாவில் சாய்ந்தான்.

 

 

மித்ரா உள்ளே செல்லப் போக ‘இவளுக்கு என்னை பத்தி நினைப்பே இல்லையா… மனசு முழுக்க என்னை நினைப்பாளாம் ஆனா வெளிய சொல்லமாட்டாளாம்…ஏன்டி இப்படி ஊமையா இருந்து என் உயிரை எடுக்கற… என்று மனதிற்குள் திட்டிக்கொண்டான் மனைவியை.

வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்க ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றான். கதவை திறக்கவும் அங்கு செபாஸ்டியன் நின்றிருந்தான். “உள்ள வாங்க… என்று சொல்லி அவனுக்கு வழிவிட்டான்.

 

 

அவன் பின்னால் எட்டி பார்த்தான் சைதன்யன். “அஸ்வினி என்னோட இங்க வரலை. கார்ல இருக்கா என்றான் செபாஸ்டியன்.

 

 

“வரச்சொல்லுங்க அவங்களை, என்னால் ஆரம்பிச்சதை நானே இங்க முடிச்சு வைக்கறேன் என்றான் சைதன்யன்.

 

 

“பிடிவாதம் அடம் சொன்ன பேச்சை கேட்க மாட்டா எப்பவும் என்று பல்லை கடித்தான் மற்றவன்.

 

 

“இங்கயும் அப்படி தான்… என்று முணுமுணுத்தான் சைதன்யன்.

 

 

“என்ன சொன்னீங்க??

 

 

“ஒண்ணுமில்லை செபாஸ்டியன்… ஏன் அவங்க இங்க வரமாட்டாங்களாம்??

 

 

“வேண்டாம் விடுங்க… கிட்ட போன ரொம்ப கத்துறா, நீங்க கூப்பிட்டேங்களேன்னு தான் நான் வந்தேன். சொல்லுங்க என்ன விஷயம் என்றான்.

 

 

“நீங்க உட்காருங்க நான் போய் அவங்களை அழைச்சுட்டு வர்றேன் என்றவன் “மித்ரா… என்று உள்நோக்கி குரல் கொடுத்தான்.

 

 

அவன் மனைவி வெளியில் வரவும் “செபாஸ்டியன்க்கு எதாச்சும் கொடு என்றவன் வெளியில் சென்றான்.

 

 

அஸ்வினி ஏக கோபத்திலும் ஏமாற்றத்திலும் முகம் கடுக்க அமர்ந்திருந்தாள் காரில். அருகே சென்றவன் “கொஞ்சம் உள்ள வாங்க, உங்களோட பேசணும் என்றான்.

 

“என்னால வர முடியாது… என்றாள்.

 

 

“அப்போ உங்களுக்கு எந்த விளக்கமும் தேவையில்லையா… அப்போ சரி நீங்க கிளம்புங்க… என்றுவிட்டு நகரப்போனான் சைதன்யன்.

 

 

“என்ன சாக்கு சொல்லப் போறீங்க… சின்ன குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்துற மாதிரி எதுவும் செய்யப் போறீங்களா!! என்றவள் காரை விட்டு கீழிறங்கியிருந்தாள்.

 

 

“ஏதோவொன்னு நாங்க சொல்றதை கேட்கணும் நினைச்சா உள்ள வாங்க… என்றுவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டான்….

 

Advertisement