Advertisement

அத்தியாயம் – 19

 

 

மதிய உணவுக்கு பன்னீர் அவர் மனைவியையும் அழைத்து வந்திருக்க அவர் மனைவி ஒரு கூச்சத்துடனே அமர்ந்திருந்தார். மது தான் அவர்களிடம் விளையாடிக்கொண்டு அவர்களை இயல்பாக்கிக் கொண்டிருந்தாள்.

 

 

அவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பவும் சைதன்யன் வேலை இருக்கிறது என்று அலுவலகம் சென்று வந்தான். கிளம்பும் முன் சென்னைக்கு செல்ல தயாராக இருக்குமாறு மனைவியிடம் கூறிவிட்டு கிளம்பிச் சென்றான்.

 

 

மாலையில் அவன் வீட்டிற்கு வந்ததும் அவர்கள் சென்னை நோக்கி காரில் பயணப்பட்டனர். மித்ரா சென்னையில் இருந்து கடலூர் வரும் போது இருந்த மனநிலையும் இப்போதுள்ள நிலையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டாள்.

 

 

மனம் லேசாக இருந்தது. உள்ளம் முழுதும் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தது. திரும்பி சைதன்யனை பார்க்க அவன் அக்கணம் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

எதுவும் சொல்லாமல் அவன் மீது சாய்ந்து கொண்டாள். மது அவளுடன் போட்டிக்கு வந்தாள். “அம்மா நானு… நானு தான் அப்பா மேல சாஞ்சு… என்றுவிட்டு அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

 

 

“இவ வேற வந்திட்டா எனக்கு போட்டியா… போடி நானே இப்போ தான் உங்கப்பாவோட ஒழுங்கா பேசவே ஆரம்பிச்சிருக்கேன் என்று முணுமுணுத்துவிட்டு பார்வையை வெளிப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.

 

 

சைதன்யன் அம்மாவும் பெண்ணும் அடித்துக்கொள்வதை பார்த்து சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டான். “சிரிக்காதீங்க… என்று முறைத்தாள் அவன் மனைவி.

 

 

“போம்மா… நான் பன்னீருட்ட போறேன்… என்ற மது “பன்னீரு… என்றாள். ஆம் பன்னீர் தான் அவர்களுக்கு கார் ஒட்டி வந்து கொண்டிருந்தார்.

 

 

பன்னீர் பின்னால் திரும்பி பார்க்காவிட்டாலும் அவருக்கு காதில் கொஞ்சம் கொஞ்சம் விழத்தான் செய்தது. “பாப்பா நீங்க பன்னீர்கிட்ட வாங்க நாம காரு ஓட்டலாமா… என்று அவர் அழைக்க சைதன்யனோ “வேணாம்ண்ணா குழந்தை இப்போ தூங்கிருவா, என்கிட்டவே இருக்கட்டும் என்றான்.

 

 

“சரிங்க தம்பி… என்றவர் காரை ஓட்ட ஆரம்பித்தார்.

 

 

“பாப்பாவே முன்னாடி போறேன்னு சொன்னாலும் இவரு விட மாட்டார்போல என்று பொருமிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி.

 

 

மனைவியின் எண்ணம் அறிந்தவன் போல அவளை ஒட்டி அமர்ந்து கொண்டவனின் வலக்கரம் மெதுவாய் அவள் பின்னே நுழைந்து அவள் இடையில் பதிந்தது.

 

 

கதகதப்பாய் அவன் கரம் இடையில் பதிந்ததும் அவஸ்தையாய் நெளிந்து அவன் புறம் திரும்பி முறைக்க அவனோ மதுவை மடியில் அமர்த்திக்கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

 

‘பண்ணுற சேட்டையை பாரு என்று மனதிற்குள் அவனை திட்டியவள் அவன் கையை தட்டிவிட முயல் அவன் இன்னும் இறுக்கிப் பிடித்தான்.

 

 

‘இது வேலைக்கு ஆகாது என்று எண்ணியவள் அவன் தொடையில் கிள்ளவும் அவன் ஆவென்று கத்திவிட்டான்.

 

 

முன்னிருந்த பன்னீர் “என்னாச்சு… என்னாச்சு… என்றார் பதட்டமாய்.

 

 

“ஒண்ணும் இல்லை பன்னீர் அண்ணா… பாப்பா டிரஸ்ல இருந்த பின்னு குத்திருச்சு. அதான் கத்திட்டேன், இப்போ தான் பார்த்தேன் சரி பண்ணிட்டேன் என்றான்.

மித்ரா அவனை பார்த்து திருதிருவென்று விழித்தாள். “என்னங்க என்று அவள் அழைக்க அவன் அந்த அழைப்பை காதில் வாங்காமல் “மதுக்குட்டி தூக்கம் வருதா உங்களுக்கு… என்று மகளிடம் கர்மசிரத்தையாய் பேசிக் கொண்டிருந்தான்.

 

 

“சாரி… என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

 

“எதுக்கு?? என்றான்.

 

 

“ரொம்ப வலிச்சுதா!! என்றாள்.

 

 

ஹ்ம்ம் என்று யோசித்தவன்  “ஆமாம்…

 

 

“சாரி… ப்ளீஸ்…

 

 

“சாரி எதுக்கு கேட்குற, நான் பண்ண வேலைக்கு தானே கிள்ளிவிட்ட என்றான்.

 

 

மது அவன் மீது தூங்குவதை கண்டவள் “குழந்தையை கொடுங்க நான் வைச்சுக்கறேன்… தூங்கிட்டா பாருங்க… என்று சொல்லி அவனிடம் இருந்து வாங்க முயல “இருக்கட்டும் மிது நானே வைச்சுக்கறேன் என்றவன் குழந்தையை அவன் மடி மீது கிடத்தி மனைவியை நெருங்கி அமர்ந்து குழந்தையின் காலை இருக்கையின் மீது கிடத்தினான்.

 

 

“இதுக்கு தான் தர மாட்டேன்னு  சொன்னீங்களா!! என்று விஷமமாய் சிரித்தாள் அவன் மனைவி.

 

 

“நிஜமாவே பாப்பாவை நானே வைச்சுக்க தான்டி கேட்டேன். நீ சொன்ன பிறகு தான் தெரியுது இதுலயும் ஒரு வசதியிருக்கு என்றவனின் கரம் இப்போது அவள் பின்னால் நீண்டிருந்தது.

 

 

முன்பு போல் அல்லாமல் அவன் கரம் அவள் தோளைப் பற்றியிருந்தது. மித்ராவும் அவன் தோளின் மீது சாய்ந்து கொண்டாள். மனம் எல்லையற்ற நிம்மதியை உணர்ந்தது அக்கணம்.

அவர்கள் சென்னையை வந்தடைய இரவு பத்து மணியாகியது. பன்னீர் அவர்களை விட்டுவிட்டு அவர் உறவினர் வீட்டிற்கு தங்க சென்றுவிட்டார்.

 

 

வந்தவர்கள் வீட்டினருடன் சிறிது நேரம் அளவளாவிவிட்டு உறங்கச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையிலேயே சைதன்யன் தனக்கு வேலையிருப்பதாக கூறி வெளியில் சென்றுவிட்டான். இரண்டு நாட்கள் கடந்து சென்றிருந்தது.

 

 

மித்ராவிற்கு அப்போது தான் அவள் அலுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலை பற்றிய எண்ணம் வந்தது. சைதன்யனுக்கு அழைத்து விபரம் சொல்லவென்று அவனை அழைத்தாள்

 

 

அவன் அழைப்பை உடனே ஏற்றவன் “சொல்லு மித்ரா… என்றான்.

 

 

“எனக்கு என்னோட பழைய ஆபீஸ்ல கொஞ்சம் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிக்க வேண்டி இருக்கு. பி எப் எல்லாம் க்ளோஸ் பண்ணவேயில்லை. இன்னைக்கு போய் அதெல்லாம் முடிச்சுட்டு வந்திடட்டுமா என்றாள்.

 

 

“இதெல்லாம் என்கிட்ட நீ கேட்கணுமா மித்ரா!! ஆனா நீ இன்னைக்கே போகணுமா, நாளைக்கு வேணா போயேன்…

 

 

“இல்லை நாளைக்கு சுஜியை பார்க்க போகலாம்ன்னு நினைச்சேன். காவ்யாவையும் கூட்டிட்டு நாங்க அப்படியே திநகர் போய் டிரஸ் எடுத்திட்டு வரலாம்ன்னு ஒரு ஐடியா

 

 

“அடிப்பாவி நாளைக்கு இவ்வளவு பிளான் வைச்சிருக்க அதுக்கெல்லாம் என்கிட்ட போகலாமா வேணாம்ன்னு கேட்கவேயில்லை. இன்னைக்கு மட்டும் ரொம்ப முக்கியமா எனக்கு பண்ணுற

 

 

“அதுக்கு காரணம் இருக்கு என்றாள் சற்றே சீரியசான குரலில். அவள் குரலின் மாற்றம் உணர்ந்தவனாய் “என்னாச்சு மித்ரா எதுவும் பிரச்சனையா?? என்றான் அவள் கணவன்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றவள் எதையோ கேட்க வந்து முழுங்குவது போல் தோன்றியது அவனுக்கு ஹ்ம்ம் என்று யோசித்தவன் “மிது நீ ஆபிஸ்க்கு எத்தனை மணிக்கு போறேன்னு சொல்லு

 

 

“நான் நேரா அங்க வந்திடறேன். என்னோட வேலை எல்லாம் ஆல்மோஸ்ட் முடிஞ்சுது. இன்னும் ஒரு மணி நேர வேலை எனக்கிருக்கும்ன்னு நினைக்கிறேன். முடிச்சுட்டு வந்திடறேன் ஓகே தானே உனக்கு என்றான்.

 

 

“தேங்க்ஸ்… என்றாள்.

 

 

“எனக்கு சொல்லணுமா அதெல்லாம்… என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

 

மித்ராவும் சைதன்யன் அவளுடன் வரவேண்டும் என்று தான் எதிர்பார்த்தாள். ஆனால் அதை அவனிடம் கேட்க அவளுக்கு தயக்கமாக இருந்தது.

 

 

சென்னைக்கு செல்ல வேண்டும் என்றதுமே அவள் அலுவலக வேலையை முடிக்க வேண்டும் என்று முன்பே முடிவெடுத்திருந்தாள். வேலை முடிக்க வேண்டும் என்பது மட்டுமே அதற்கு காரணமல்ல.

 

 

செபாஸ்டியன் அஸ்வினியிடம் இந்நேரம் விஷயத்தை சொல்லியிருப்பான் என்பது அவள் ஊகம் ஏதோவொரு உந்துதல் சைதன்யனையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று.

 

 

மனதில் இன்று ஏதோவொன்று நடக்க போகிறது என்பதற்கு அறிகுறியாக பயக்குமிழ்கள் உற்பத்தியாகி அவள் வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் உருண்டு அவஸ்தையை கொடுத்தது.

 

 

அலுவலகத்திற்கு போன் செய்து எச்ஆரிடம் அன்று வருவதாக சொல்லியும் விட்டாள். கிளம்பும் முன் சைதன்யனுக்கு அழைத்து கிளம்பி விட்டதாக சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றாள்.

 

அவள் சென்று சேரும் முன்னரே சைதன்யன் வாயிலில் நின்றிருந்தான். அவனுடனே உள்ளே நுழைந்தவள் அவனை வரவேற்பில் அமர வைத்துவிட்டு சற்று நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லி உள்ளே சென்றாள்.

 

____________________

 

 

செபாஸ்டியன் இதோடு பத்தாவது முறையாக அஸ்வினிக்கு அழைத்துவிட்டான். அவள் போனை எடுப்பதாகவேயில்லை போலும். வேறுவழியில்லாமல் அவள் அன்னைக்கு அழைக்க அவர் போனை மகளிடம் கொண்டு கொடுத்தார்.

 

 

“வெறுப்பாக போனை வாங்கியவள் “என்ன?? என்றாள் கடுப்பாக.

 

 

“ஹேய் என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?? நீ சென்னைக்கு வந்து எத்தனை நாளாச்சு. இன்னும் ஆபிஸ் வராம என்ன பண்ணிட்டு இருக்க??

 

 

“ஒரு நாள் ரெண்டு நாள்ன்னா பரவாயில்லை. இப்படி பத்து நாள் லீவ் போட்டு என்ன தான் பண்ணுற. நீ ஆன்சைட்ல முடிச்ச வேலை பத்தின ரிபோர்ட்ஸ்ல எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஆபிஸ் வான்னு எத்தனை முறை உன்னை கூப்பிடுறது

 

 

“நீ பாட்டுக்கு ஒரு பதிலும் சொல்லாம வீட்டிலேயே இருந்தா என்ன அர்த்தம் என்று பொரிய ஆரம்பித்தான்.

 

 

“இப்போ என்ன உனக்கு?? எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க?? என்றாள்.

 

 

“உனக்கென்ன காது செவிடா?? சொன்னது எதுவும் விழலையா?? என்றான்.

 

 

“இப்போ நான் என்ன பண்ணணும்

 

 

“மரியாதையா ஆபிஸ் வந்து சேர். முடிக்க வேண்டிய வேலை எல்லாம் முடிச்சு கொடுத்திட்டு அதுக்கு அப்புறம் வேலையை விட்டு நீ நின்னுக்கோ. இப்படி உனக்கு போன் பண்ணி கரடியா கத்த வேண்டிய தலையெழுத்தாச்சும் எனக்கும் மிஞ்சும் என்றான் காட்டமாய்.

 

 

“வர்றேன் போனை வை. நான் வேலையை விடணுமா இல்லையாங்கறதை பத்தி நீ சொல்லாத அதை நான் தான் முடிவு பண்ணணும்

 

 

“என்னமோ பண்ணித் தொலை. உடனே ஆபிஸ்க்கு வந்து சேர் என்றுவிட்டு செபாஸ்டியன் போனை வைத்தான்.

 

 

அஸ்வினியுடன் அவனுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. ஆன்சைட் முடித்து வந்தவள் சொல்லாமல் கொள்ளாமல் லீவை போட்டு விட்டு சென்றுவிட்டாள். அவளுக்கு சிபாரிசு செய்த கடமைக்கு அவன் தான் அலுவலகத்திற்கு பதில் சொல்ல வேண்டியதாய் இருந்தது.

 

 

அவளை மற்றவரகள் குறை சொல்லுவதையும் அவன் விரும்பவில்லை. அதனால் அவளுக்கு மஞ்சள்காமாலை என்று மெடிக்கல் ரிபோர்ட் வாங்கி அலுவலகத்தில் கொடுத்துவிட்டான்.

 

 

செபாஸ்டியனிடம் சொன்னது போல அஸ்வினி அலுவலகம் கிளம்பி வந்தாள். உள்ளே நுழைந்து வரவேற்பறையை கடந்து மின்தூக்கியினுள் சென்று பொத்தானை அழுத்த செல்லும் போது தான் சைதன்யன் வரவேற்பில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

 

 

அதற்குள் மின்தூக்கியின் கதவு மூடப்போக அதை மூடாமல் தடுத்து வேகமாய் வெளியில் வந்தாள். வரவேற்பில் இருந்த பெண் “என்ன அஸ்வினி உள்ளே போகலையா என்னாச்சு என்றாள்.

 

 

“எனக்கு தெரிஞ்சவர் இங்க இருக்கார் பேசிட்டு போகணும் என்று நடந்துக்கொண்டே அப்பெண்ணிடம் சொல்லிவிட்டு அவனை நோக்கிச் சென்றாள்.

 

 

சைதன்யன் அவளை பார்க்கவில்லை அவன் வரவேற்ப்பை ஒட்டியிருந்த விசிட்டர்ஸ் அறையில் அமர்ந்து செய்தித்தாள் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்.

மூச்சு வாங்க அவன் முன் சென்று நின்றவளை அப்போது தான் ஏறிட்டான் அவன். அஸ்வினியை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்போது அவள் வேறு கிளையில் இருப்பாள் என்று நினைத்திருந்தான் அவன்.

 

 

“ஹலோ… இங்க என்ன பண்றீங்க?? என்னைத் தான் தேடி வந்தீங்களா?? நான் உங்களை தேடி தான் ஒரு வாரமா அலைஞ்சுட்டு இருக்கேன் என்றவள் தொப்பென்று அவன் இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 

 

“என்னைத் தேடியா?? அதுக்கென்ன அவசியம் என்றான் அவன்.

 

 

“உங்க போன் என்னாச்சு. நான் போன்பண்ணா நீங்க எடுக்கறதேயில்லை

 

 

அவன் கடலூர் சென்ற பின்னே முதல் வேலையாக செய்தது அந்த எண்ணை மாற்றியது தான். அதை அவளிடம் சொல்ல முடியுமா என்ன.

 

 

“போன் வேற மாத்திட்டேன். பழைய நம்பர்ஸ் எல்லாம் மிஸ் ஆகிட்டு என்றான்.

 

 

“என்னையும் மிஸ் பண்ணிடலாம்ன்னு நினைச்சுட்டீங்க போல. நான் ஒரு முறை உங்களை மிஸ் பண்ணது போதும். இனியும் மிஸ் பண்ண விரும்பலை என்றாள்.

 

 

“என்ன உளறல் இது?? என்றான் அவன் கடுப்பாய்.

 

 

“ஏன் சைத்து நீங்க கலெக்டரா!! ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதை பத்தி சொல்லலை. அன்னைக்கு உங்களை ஏர்போர்ட்ல பார்த்தப்பவே நீங்க கலெக்டர் தான்… சரி தானே

 

 

“கடலூர் புயல் மழை பத்தி நியூஸ் பார்க்கலைன்னா எனக்கு உங்களை பத்தி தெரிஞ்சிருக்காது என்றாள்.

 

 

“ஏன் சைத்து என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க என்றாள்.

 

 

“நீங்க யாரு எனக்கு?? நான் ஏன் என்னை பத்தி உங்ககிட்ட சொல்லணும் என்றான் அவன் பதட்டமேயில்லாமல்.

 

 

“நாம விரும்பினது எல்லாம் மறந்திட்டீங்களா நீங்க!!

 

 

“அதெல்லாம் தான் முடிஞ்சு போன கதையாச்சே இப்போ அதை பத்தி பேச என்ன அவசியம் என்றான் பட்டு கத்தரித்தார் போல்.

 

 

“நான் உங்களுக்காவே தான் காத்திட்டு இருக்கேன் சைத்து. நான் இன்னும் எப்படி உங்ககிட்ட சொல்லணும்ன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க என்றாள்.

 

 

அவளின் பதில் அவனுக்கு சங்கடமாய் இருந்த போதிலும் “காலம் கடந்து போச்சு. ஐ யம் நாட் சிங்கிள் என்றான்.

 

 

அவன் பேசியதை முழுதாய் கவனிக்காதவள் “சோ வாட்?? என்றாள்.

 

 

“நான் சொல்றது உங்களுக்கு புரியலை, நான் இப்போ குடும்பஸ்தன் என்றான்.

 

 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அஸ்வினியை கண்டுவிட்ட அவன் டீம் மேட் குமார் உள்ளே வந்தான்.

 

 

“ஹேய் அஸ்வினி இங்க என்ன பண்ணற?? ஆல்ரெடி இந்த செபாஸ்டியன் தொல்லை தாங்கலை எங்களுக்கு. நீ வரலைன்னு ஏக கடுப்புல இருக்கார் மனுஷன்

 

 

“இடையில மாட்டுற எங்க எல்லாரையும் வருத்தெடுத்திட்டு இருக்கார். நீ என்னடான்னா இங்க சாவகாசமா பேசிகிட்டு இருக்க… ஆமா சார் யாரு என்றாவாறே சைதன்யனை பார்த்தான் அவன்.

 

 

‘இவரை எங்கயோ பார்த்திருக்கோமே என்று யோசித்தவன் அவனிடமே “நாம இதுக்கு முன்னாடி பார்த்திருக்கோமா என்றான் கேள்வியாய்.

 

 

“குமார் இவர் சைதன்யன் மறந்திட்டியா இவரை என்றவள் “இப்போ கலெக்டர் சார்… என்று சேர்த்து சொன்னாள்.

 

 

குமாருக்கு அந்த பெயரை கேட்டதும் அவனை நினைவிற்கு வந்துவிட்டது. “வாவ்… சூப்பர் சார் வாழ்த்துக்கள்… இவ்வளவு சிம்பிளா இருக்கீங்க. நம்பவே முடியலை. எங்க சார் போஸ்டிங் சென்னையா என்றான் அவன்.

 

 

“தேங்க்ஸ்… என்றவன் “போஸ்டிங் கடலூர்ல சென்னையில்லை என்றான்.

 

 

“ஓகே சார் உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம். கொஞ்சம் வேலையிருக்கு நான் கிளம்பறேன் சார் அஸ்வினி வா போகலாம் என்று சைதன்யனிடம் ஆரம்பித்து அஸ்வினியிடம் முடித்தான் அவன்.

 

 

“நீ போ குமார் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. செபாஸ்டியன்கிட்ட சொல்லிடு நான் அப்புறம் வர்றேன்னு என்றாள்.

 

 

அவன் சென்றதும் “ஹ்ம்ம் சொல்லுங்க… என்ன சொல்லிட்டு இருந்தீங்க!! நீங்க குடும்பஸ்தன்னு சொன்னீங்கள்ள. தெரியும் சைத்து உங்க பேமிலி பத்தி தான் நீங்க அப்போவே என்கிட்ட சொன்னீங்களே

 

 

“என் மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா. நான் இன்னும் அப்படியே இருக்கேன்னு நினைக்கறீங்களா!! என்றாள்.

 

 

சைதன்யனுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது அவளின் பேச்சு. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்ன பதில் சொல்வது என்று யோசித்து அமைதியாய் இருந்தான்.

 

 

அவளுக்கு பதில் சொல்லவெல்லாம் பயமில்லை அவனுக்கு. அவளிடம் கவனமாய் பேச வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. வார்த்தைகளை நிதானமாய் தான் விட வேண்டும் என்று எண்ணினான்.

 

 

அவள் சைத்து!! சைத்து!! என்று அழைத்தது வேறு அவனுக்கு மிகுந்த எரிச்சலாக இருந்தது.

 

 

“நான் சொல்றதை சரியா புரிஞ்சுக்கோங்க. என்னோட பேமிலில அம்மா, தம்பி, தங்கை எல்லாம் ஏற்கனவே இருக்காங்க. நான் இப்போ சொன்னது என்னால புதுசா ஏற்பட்ட உறவை

 

 

“ஐ மீன் என்னோட மனைவி, குழந்தை புரியுதா உங்களுக்கு என்றான் நிதானமாகவும் சற்றே அழுத்தமாகவும்.

 

 

இப்படி ஒரு பதில் அவனிடம் இருந்து வரும் என்று அவள் சற்றும் எண்ணவேயில்லை. அவன் பதிலில் அதிர்ந்தவள் கண்ணை மூடிக்கொண்டாள்.

 

 

ஓரிரு நிமிடம் கண்ணை மூடித்திறந்தவள் சற்றே நிதானித்து அடுத்த கேள்வியை கேட்டாள்.

 

 

“என்னை அவாய்ட் பண்ண பொய் சொல்றீங்களா?? என்று.

 

 

“எனக்கு எப்பவும் பொய் சொல்லி பழக்கமில்லை என்றான்.

 

 

“அப்போ எதுக்காக அப்படி சொன்னீங்க

 

 

“நான் சொல்றது புரியலையா உங்களுக்கு. ஒரு நிமிஷம் இருங்க, என் மனைவி இங்க தான் இருக்கா. அவளை உடனே வரச்சொல்றேன் என்றவன் மித்ராவிற்கு அழைத்தான்.

 

 

“இங்கன்னா இங்க வேலை பார்க்கறாங்களா… என்றவளின் பேச்சு இன்னமும் அவனை நம்பியிருக்கவில்லை.

 

“இப்போ இல்லை…

 

 

“அப்படின்னா…

 

 

“இப்போ அவங்க இங்க வேலை பார்க்கலை. என்னோட கடலூர் வந்திட்டாங்க

 

 

“எவ்வளவு பொய் சைத்து சொல்லுவீங்க என்கிட்ட என்றாள்.

 

 

“என்னை சைத்துன்னு கூப்பிடுறதை கொஞ்சம் நிறுத்துங்க என்றான் அதீத எரிச்சலில்.

 

 

“திரும்பவும் சொல்றேன் எனக்கு பொய் சொல்லி பழக்கமில்லை. திரும்ப திரும்ப பொய் சொல்றேன்னு சொன்னா நான் இப்படி நின்னு நிதானமா பேசிட்டு இருக்க மாட்டேன் என்றான் சீறலான குரலில்.

 

 

“ஒரு காலத்துல உங்களை விரும்பின ஒரே குற்றத்துக்காக தான் இப்போ நிதானமா பதில் பேசிட்டு இருக்கேன். அதே பொறுமை எப்பவும் இருக்காது. சோ ப்ளீஸ் மைன்ட் யுவர் டங் என்றான்.

 

 

அஸ்வினியோ அப்படி என்ன தான் நடந்துவிடப் போகிறது நமக்கு தெரியாமல் இங்கு யாரை அழைத்து வருவான் என்று யோசித்துக்கொண்டு திமிராய் நின்றிருந்தாள்.

 

 

சில நிமிட தாமதத்திற்கு பின் அந்த அறைக்குள் மித்ரா நுழைய அங்கிருந்த இருவருமே அவளை பார்த்து நிம்மதியாக உணர்ந்தனர்.

 

 

அஸ்வினிக்கு தன் தோழியை பார்த்த நிம்மதி அப்போதும் கூட அவள் அறியவில்லை அவள் தான் சைதன்யனின் மனைவியாய் இருப்பாள் என்று.

 

 

சைதன்யனுக்கோ மனைவியை பார்த்ததும் அஸ்வினியின் பேச்சில் இருந்து தப்பித்த நிம்மதி.

 

“வா மித்து… நீ எங்க இங்க?? என்று அஸ்வினியும் “வா மிது உனக்காக தான் காத்திட்டு இருக்கேன் என்று சைதன்யனும் ஒரு சேர கூறினர்.

 

 

சைதன்யனின் பேச்சை அப்போது தான் கவனித்த அஸ்வினி இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

 

 

சைதன்யன் தன்னை சுதாரித்துக்கொண்டு “இவங்க தான் என்னோட மனைவி மித்ரா… சங்கமித்ரா சைதன்யன் என்றான்…..

Advertisement