Advertisement

அத்தியாயம் – 16

 

 

முதலில் தன் மாமனார் என்ன சொல்கிறார் என்றே புரியாதவன் அவர் சொன்ன விஷயம் புரிந்ததும் மனம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தது.

 

 

இப்போது இருக்கும் சூழ்நிலையில் மித்ராவை தன்னுடன் வரச்சொல்லி அழைத்தால் அதற்கு வேறு ஒரு புது பஞ்சாயத்து வந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு தான் அவளை அழைக்காதிருந்தான் சைதன்யன்.

 

 

அதுவுமில்லாமல் கடலூரிலும் அவன் வீடு பார்த்து எல்லாம் ஒழுங்காக செட்டாகும் வரை எப்படி அழைப்பது என்று பலவாறாக யோசித்திருந்தான்.

 

 

அவன் கூப்பிட்டால் வேண்டுமென்று வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பாளோ என்று எண்ணியிருந்தான். ஒரு வேளை விலகிப்போனால் நெருங்கி வருவார்கள் என்று சொல்வார்களே அது போல அவளாக தேடி வந்துவிட்டாளா என்று லேசாய் ஒரு நப்பாசை அவனுக்கு. (பொண்டாட்டி வியாதி ஒட்டிக்கிருச்சு போல)

 

 

அவன் யோசித்துக் கொண்டிருக்க சொக்கலிங்கமோ “மாப்பிள்ளை… மாப்பிள்ளை… என்று எதிர்முனையில் அழைக்கும் குரல் கேட்டு நிகழ்வுக்கு வந்தான்.

 

 

“சாரி மாமா… இப்போ தான் வந்து படுத்தேன் தூக்க கலக்கம்… நீங்க எங்க இருக்கீங்க… என்றவன் அவர் விபரம் கூறியதும் “நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்திடறேன் மாமா என்றுவிட்டு போனை வைத்து உடனே கிளம்பினான்.

 

 

புயலடித்து ஒய்ந்திருந்ததில் லேசாய் மழை தூரலாய் தன் வேலையை செய்து கொண்டிருந்தது. முதல் நாள் போலில்லாமல் சுற்றுப்புறம் அமைதியாகவே இருந்தது.

 

 

சைதன்யனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை மித்ரா அவனை தேடி வந்திருப்பாள் என்று. காய்ந்த சட்டியில் போட்ட எள்ளை போல் பொரிவாளே என்னாயிற்று இவளுக்கு!! என்று வரும் வழியெங்குமே அவளை பற்றிய எண்ணமே அவனுக்கு.

 

 

மித்ராவும் சொக்கலிங்கமும் ரயிலில் தான் வந்திறங்கியிருந்தனர். வண்டியில் இருந்து இறங்கியவன் ஸ்டேஷன் உள்ளே செல்ல அவன் மனைவி குழந்தையை தோளில் போட்டு அமர்ந்திருக்க அவன் மாமனார் அருகே அமர்ந்திருந்தார்.

 

 

தூரத்தே அவர்களை கண்டுவிட்டவன் முகம் அப்பட்டமாய் மகிழ்ச்சியை காட்ட மித்ரா அவனை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

‘நாங்க இங்க வந்ததில இவருக்கு அவ்வளவு சந்தோசமா என்று அவள் எண்ணும் போதே அவளருகே வந்தவன் தோளில் தூங்கிக் கொண்டிருந்த மதுவை அவளிடமிருந்து வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டான்.

 

 

மித்ராவின் பார்வை அவன் முகத்தை தவிர வேறு எங்குமில்லை. அவளின் நாயகனோ அவளை பார்த்தும் பார்க்காதவன் போல் இருந்தான்.

 

 

மாமனாரை நலம் விசாரித்துக்கொண்டு அவர் கையில் வைத்திருந்த உடைமைகளை வாங்க முற்பட அவரோ இருக்கட்டும் என்று சொல்லிவிட மதுவை மித்ராவிடம் கொடுத்துவிட்டு அவனே உடைமைகளை தூக்கிக் கொண்டு வெளியில் நடந்தான்.

 

 

காரில் எல்லாம் வைத்துவிட்டு சொக்கலிங்கம் முன்னே டிரைவரின் அருகில் அமர்ந்து கொள்ள சைதன்யனும் மித்ராவும் பின்னால் அமர்ந்து கொண்டனர்.

 

 

அப்போதும் மது உறங்கிக்கொண்டே இருக்க அவளை வாங்கி அவன் தோளில் போட்டுக்கொண்டவனுக்க்கு லேசாய் வீசிய ஊதல் காற்றில் தன்னையும் மீறி கண்கள் சொருக ஆரம்பித்தது.

 

 

அவனிடம் பேசலாம் என்று திரும்பி பார்த்த மித்ரா அவன் உறங்குவது பார்த்து அமைதியானாள். “அப்பா அவர் தூங்குறார், வீட்டுக்கு எப்படி போகணும் வழி சொல்லணுமில்ல… என்னப்பா செய்ய என்றாள் கிசுகிசுப்பாக.

 

 

“எனக்கு வழி தெரியும் மேடம், நான் கூட்டிட்டு போறேன். சார் நைட் எல்லாம் தூங்கவே இல்லை, இப்போ தான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி நான் வீட்டில கொண்டு வந்து விட்டேன்

 

 

“அதுக்குள்ளே முழிச்சிட்டாருல அதான் காத்தடிக்கவும் உறங்கிட்டாரு என்றான் டிரைவர்.

 

 

“தேங்க்ஸ்ங்க… என்றுவிட்டு பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டாள் மித்ரா. குழந்தையை வேறு வைத்துக்கொண்டு எப்படி தூங்குவான் கஷ்டமாக இருக்காதா என்று எண்ணிக்கொண்டு குழந்தையை தூக்கலாம் என்று எண்ண அவனோ குழந்தையை இறுக்கி பிடித்திருந்தான்.

 

 

அவனை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவளும் அமைதியானாள். வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தவும் அவனுக்கு சட்டென்று விழிப்பு தட்ட கண்விழித்து பார்த்தான்.

 

 

அருகில் அமர்ந்திருந்த மனைவியை நோக்கி திரும்பியவன் “வா மித்ரா… வாங்க மாமா என்று அழைத்து கீழே இறங்கினான்.

 

 

ஏனோ மித்ராவுக்கு ஒரு எண்ணம் வலது காலை வைத்து போவோமா என்று உள்ளே குறுகுறுத்தது. “என்ன வாசல்ல நின்னு யோசிச்சுட்டு இருக்க, உள்ள வர்ற ஐடியா இல்லையா என்றவன் அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.

 

 

மித்ராவுக்கு நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா என்றே புரியவில்லை. என்னடா நடக்கிறது இங்கு என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்.

 

 

வீட்டில் அதிக பொருட்கள் ஒன்றுமில்லை. உட்காருவதற்கு இருவர் அமரும் சோபா ஒன்றும் தனியே தனியே இரண்டு குஷன் வைத்த இருக்கையும் இருந்தது.

அவர்கள் இருவரையும் உட்காரச் சொல்லிவிட்டு குழந்தையுடன் அவன் உள்ளே செல்ல மித்ராவும் அவனோடே சென்றாள்.

 

 

மித்ரா பின்னோடு வருவதை அறிந்தவன் “என்ன மித்ரா?? என்றான்.

 

 

“கொடுங்க நான் படுக்க வைக்கறேன் என்று குழந்தைக்காக கையை நீட்ட “இருக்கட்டும் மித்ரா என்றவன் உள்ளிருந்த கட்டிலில் குழந்தையை படுக்க வைத்து இருபுறமும் அணைவாக தலையணையை வைத்தான்.

 

 

சைதன்யனின் செயல் ஒவ்வொன்றும் அவள் உள்ளத்தில் பதிந்துக் கொண்டே இருந்தது. அவனை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

“பார்த்திட்டே தான் இருப்பியா!! என்றுவிட்டு அவன் வெளியில் சென்றுவிட்டான்.

 

 

“என்ன… என்ன கேட்டீங்க?? என்று இவள் மட்டுமே தனியாக கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

 

அறையில் அவனில்லை என்றதும் அவளும் வெளியில் வந்தாள். அவள் கணவன் தன் தந்தையுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவள் சற்று பின் தங்கி நின்றாள்.

 

 

“என்ன மாமா ஊருக்கு கிளம்பி இருப்பீங்கன்னு பார்த்தா திடுதிப்புன்னு வந்து சர்ப்ரைஸ் கொடுத்திட்டீங்க என்றான்.

 

 

“ஆமாம் மாப்பிள்ளை நானும் நீங்க சொன்னீங்கன்னு தேன் கிளம்பி வந்தேன். மித்ராம்மா தான் நைட்டெல்லாம் டிவியை பார்த்திட்டு அவர் தூங்காம ராவெல்லாம் ஒரே வேலை பார்த்திட்டு இருக்கார்

 

 

“எனக்கு அவரை பார்த்தே ஆகணும்ன்னு சொன்னா. உங்க அம்மாவும் சரி போய் பார்த்திட்டு அப்புறம் வேணா ஊருக்கு கிளம்புங்கன்னு சொல்லிட்டாங்க

 

 

“அதான் காலையிலேயே ஏதோ ரயில் கிளம்புதுன்னு சொல்லி மித்ரா சொல்லவும் நாங்க கிளம்பி வந்திட்டோம். மித்ரா பிடிச்சா ஒரே பிடி தான் ரொம்ப பிடிவாதம், அதான் நானும் மறுபேச்சு பேசாம வந்திட்டேன்

 

 

“ப்பா… இதெல்லாம் அவர் கேட்டாரா, எதுக்குப்பா என் மானத்தை வாங்கறீங்க… என்று பல்லைக் கடித்தாள் மித்ரா.

 

 

‘அய்யோ இந்த அப்பா இப்படியா புட்டுபுட்டு வைப்பாரு… ஆஹா இவர் வேற நம்மை லுக் விடுறார் என்று அவனை நோக்கியவளுக்கு ஒரு நிமிடத்திற்கு மேல் அவனை பார்க்க முடியவில்லை, பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.

 

 

“எதுவும் சாப்பிடுறீங்களா மாமா?? வாங்கிட்டு வரச்சொல்லட்டுமா?? என்று அவரை பார்த்தான்.

 

 

‘நாங்களும் களைப்பா தான் இருக்கோம் என்று மனைவி பொருமுவது அவளை பார்க்காமலே உணர்ந்தான்.

 

 

“வெளிய எதுவும் வேண்டாம், கிட்சன் எங்க இருக்கு?? நானே காபி போடுறேன் என்று வந்தாள் அவன் மனைவி.

 

 

“இங்க எதுவுமே இல்லை மித்ரா. எல்லாமே செட் பண்ணிட்டு உன்னை கூப்பிடலாம்ன்னு நான் எதுவும் வாங்கி வைக்கலை. இங்க வந்ததுல இருந்தே எனக்கு நெறைய வேலை அதான் என்று சங்கடமாக பார்த்தான்.

 

 

“அதான் மாப்பிள்ளை சொல்றார்லம்மா… நாம ஊருக்கு போயிட்டு இங்க நேரா வந்து எல்லாம் வாங்கி வைச்சுருவோம் என்றார் சொக்கலிங்கம்.

 

 

“ப்பா… அதுவரை அவர் வெளியவே சாப்பிட்டுக்குவாரா… மூணு வருஷமா அப்படி தானே சாப்பிட்டுக்கிட்டு இருக்கார். நானே சமைக்கிறேன்ப்பா, இங்க பக்கத்துல கடை இருந்தா போய் அவசரத்துக்கு தேவையானதை வாங்கிக்குவோம் என்றாள்.

“மித்ரா இவ்வளவு நாள் சாப்பிட்டேன் இன்னும் கொஞ்ச நாள் ஒண்ணும் ஆகிடாது. நீ ஊருக்கு போயிட்டு வா அப்புறம் பார்த்துக்கலாம்

 

 

“நீங்க எப்போ ஊருக்கு கூட்டிட்டு போறீங்களோ அப்போ தான் நானும் போவேன் என்று அவனிடம் சொல்லிவிட்டு “என்னப்பா நான் சொல்றது சரி தானே. உங்க மாப்பிள்ளை இங்க கஷ்டப்படட்டும்ன்னு நான் விட்டுட்டு வந்தா நீங்க சும்மா இருப்பீங்களா என்று அவரையே கேள்வி கேட்டாள்.

 

 

“மாப்பிள்ளை அவ சொல்றதும் சரியா தான் இருக்கு. நீங்க உங்களுக்கு லீவு கிடைக்கும் போது சேர்ந்து வாங்க. இவளை அங்க கூட்டிட்டு போனா, இன்னைக்கு காலையில நடந்த மாதிரி தான் நடக்கும்

 

 

“ரெண்டே நாள்ல எங்க வீட்டுக்கு போகணும்ன்னு சொல்லி பிடிவாதம் பிடிப்பா. நான் எப்பவும் போல மண்டையை ஆட்டிருவேன். நீங்களும் யோசிங்க என்றார்.

 

 

சைதன்யன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். “அப்பா அவர் என்ன வேணாம்ன்னா சொல்லுவாரு. அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாரு

 

 

“அப்பா அவர் ரெஸ்ட் எடுக்கட்டும், நாம இங்க பக்கத்துல எங்க கடை இருக்குன்னு பார்த்து தேவையானதை வாங்கிட்டு வந்திடுவோம் வாங்க என்றாள் தந்தையை பார்த்து.

 

 

“உனக்கு வழி தெரியாது மித்ரா… நானும் வர்றேன்

 

 

“வேணாம் நீங்க இப்போ தான் வீட்டுக்கு வந்தீங்கன்னு டிரைவர் அண்ணா சொன்னார். நீங்க மதுவோட சேர்ந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, நானும் அப்பாவும் போயிட்டு வந்திர்றோம்

 

 

“இதுவும் தமிழ்நாடு தானே வேற தேசமில்லையே. சோ நாங்க பார்த்து பத்திரமா போயிட்டு வருவோம். அப்பா வாங்க என்று சொல்லி அவரை எழுப்பினாள்.

அவளருகில் வந்தவனோ “பிடிச்சா உடும்பு பிடி தானா… என்றுவிட்டு நகர்ந்தான்.

 

 

“மித்ரா பன்னீர் அண்ணாவை கூட்டிட்டு போ. அப்புறம் ஒரு நிமிஷம்… என்றவன் உள்ளே சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தான்.

 

 

“இந்த கார்ட் யூஸ் பண்ணிக்கோ என்று அவள் கையில் அவனின் ஏடிஎம் கார்டை திணித்தான்.

 

 

அவள் திரும்பி முறைப்பதற்கு எல்லாம் அவன் டைம் கொடுக்கவேயில்லை. “சரி கிளம்புங்க… பார்த்து போயிட்டு வாங்க மாமா என்றுவிட்டு அவன் உள்ளே சென்றுவிட்டான்.

 

 

அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனை யாரோ உலுக்குவது போல் இருக்க அடித்து பிடித்து எழுந்தான் சைதன்யன். மித்ரா தான் அவனை எழுப்பியிருந்தாள்.

 

 

முதலில் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தவனுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது. கட்டிலில் அந்த புறம் திரும்பிப் பார்த்தவன் அங்கு மது இல்லாதது கண்டு “மதுக்குட்டி எங்க?? என்றான்.

 

 

“குட்டிம்மா அப்பா கூட விளையாடிட்டு இருக்கா… நீங்க எழுந்து சாப்பிட வாங்க என்றாள்.

 

 

“சாப்பாடா!! யாராச்சும் ஆறு மணிக்கு சாப்பிடுவாங்களா!! என்றான்.

 

 

“மணி இப்போ ஒன்பது ஆகுது

 

 

“நீங்க கடைக்கு போயிட்டு எப்போ வந்தீங்க!! என்னை எழுப்பி இருக்க கூடாதா!!

 

 

“நாங்க ஆறு மணிக்கே வந்தாச்சு. நீங்க அசந்து தூங்கறீங்க அதான் டிஸ்டர்ப் பண்ணலை

அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கட்டிலை விட்டு இறங்கி நின்றான். “மித்ரா ஒரு குளியல் போட்டுட்டு வரட்டுமா, அலுப்பா இருக்கு

 

 

“அதுக்கெல்லாம் என்கிட்ட நீங்க எப்பவும் பர்மிஷன் கேட்பீங்களா என்ன?? என்று நக்கலாக கூறி நகர்ந்தாள்.

 

 

“கேட்கலைன்னு நீ முருக்கிகிட்டா நான் என்ன செய்வேன்??

 

 

போகிற போக்கில் அவன் பேசியது அவள் காதில் விழ “ஓஹ்!! எனக்கு நீங்க ரொம்ப பயந்தவர் தான்!! ஊருக்கு மாவட்ட ஆட்சியர் எனக்கு பயமா நம்புற மாதிரியா இருக்கு

 

 

“ஊருக்கே ஆட்சியரா இருக்கலாம், ஆனா வீட்டில மீனாட்சி ஆட்சி தானே!! என்றான் அவனும் விடாமல்.

 

 

“மீனாட்சியா எவ அவ!! என்றாள் அவன் மனைவி.

 

 

“மதுரைகாரிக்கு மீனாட்சி யாருன்னு சொல்லி தரணுமா என்னா!! என்று கிண்டலடித்தான் அவன்.

 

 

“எல்லாம் எங்களுக்கும் தெரியும், நீங்க சட்டுப்புட்டுன்னு குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க. இட்லி சூடு ஆறிடும் என்று சொல்லி நகர்ந்து சென்றாள் அவள்.

 

 

குளித்துவிட்டு வந்த சைதன்யன் வேறு உடை மாற்றிக்கொண்டு வெளியில் வர மதுபாலா “அப்பாஆ… என்று கையை தூக்கிக்கொண்டு ஓடி வர மகளை அள்ளி அணைத்து முத்தமிட்டான் அவன்.

 

 

இருவரையும் கண்கொட்டாமல் மித்ரா பார்த்திருக்க அவளருகே வந்தவன் “உனக்கும் வேணுமா!! என்றான் சிரிப்பை முழுங்கிக்கொண்டு.

 

 

‘என்ன சொல்றாரு என்று அவள் யோசிக்க அவன் மதுவை முத்தமிட்டதை சொல்கிறான் என்பது புரிய கன்னம் சிவக்க ஆரம்பித்தது அவளுக்கு.

 

 

‘இவர் என்ன இன்னைக்கு இப்படி போட்டு தாக்குறாரு. அதனால தான் கடலூர்ல புயல் வந்துச்சா என்று வேறு அவளுக்கு தோன்றியது.

 

 

“சாப்பிடுங்க என்று சொன்னவள் அவனிடமிருந்து மதுவை வாங்கி தந்தையிடம் சென்று விட்டு வந்தாள்.

 

 

அவனுக்கு தட்டில் இட்லியை வைத்து சட்னி ஊற்றி சூடாக சாம்பாரும் ஊற்ற இத்தனை நாட்களாய் வீட்டு சாப்பாடே இல்லாதிருந்த சைதன்யனுக்கு தேவாமிர்தமாய் உணவு உள்ளே இறங்கியது.

 

 

ஹோட்டலில் வாங்கி வந்து சாப்பிட்டிருந்தால் கூட இவ்வளவு ருசி இருந்திருக்காதோ என்று எண்ணியவாறே நிமிர்ந்து மனைவியை நோக்கினான்.

 

 

மித்ரா அதுவரையிலும் அவன் மீது தான் பார்வையை வைத்திருந்தாள். அவன் இப்படி திடீரென்று தன்னை நோக்குவான் என்று எண்ணாதவள் தன்னை சுதாரித்துக்கொண்டு “இன்னொரு இட்லி வைக்கவா?? என்றாள்.

 

 

“நீ இப்போ நூறு இட்லி வைச்சாலும் நான் சாப்பிடுற மூட்ல இருக்கேன். வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடு தான்

 

 

“அப்போ இன்னும் கொஞ்ச நாள் ஹோட்டல் சாப்பிட்டுக்கறேன்னு சொன்னதெல்லாம்

 

 

“தப்பு தான் தாயே… மன்னிச்சுடு

 

 

“உடனே ஒத்துக்கிட்டீங்க தப்புன்னு என்றாள் ஆச்சரியமாய்.

 

 

“ஒத்துகிட்டா தான் என் பொழைப்பு ஓடும்ன்னு தெரிஞ்சுடுச்சு அதான் என்றவனின் குரல் என்ன சொல்லியது என்ற ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பித்த அவள் மனதை தட்டி அவன் புறம் பார்வையை செலுத்தினாள்.

 

 

“போதும் மித்ரா… இதுக்கு மேல முடியாது, எப்பவும் சாப்பிடுறது விட அதிகம் சாப்பிட்டுட்டேன். இதுக்கே ரெண்டு நடை கூட நடக்கணும் நான் என்றுவிட்டு எழுந்தான் அவன்.

 

 

“பால் கொஞ்சம் குடிக்கறீங்களா சூடா!!”

 

 

“நீ என்ன என்னை பீப்பாய் ஆக்கணும்ன்னு பார்க்கறியா ஆளை விடு தாயே என்று நகர்ந்தான் அவன்.

 

 

அவன் மனைவி இதெல்லாம் கேட்பவளா பிடிவாதத்தின் மறு உருவம் ஆகிற்றே. அரை தம்ளர் பாலை கொண்டு வந்து அவன் கையில் ஒன்றை திணித்துவிட்டு அவள் தந்தையின் கையில் ஒன்றை கொடுத்தாள்.

 

 

சொக்கலிங்கம் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக்கொள்ள மித்ரா குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனுடன் அவர்கள் அறைக்குள் நுழைந்தாள்.

 

 

அப்போது தான் அவள் பார்க்க கட்டில் சுவற்றின் ஓரமாக போடப்பட்டிருந்தது. அப்போ வந்தப்போ கட்டில் இங்க இல்லையே என்று யோசித்தவள் அதையே கணவனிடமும் கேட்டாள்.

 

 

“குழந்தை கீழ விழுந்திட கூடாது இல்லையா அதான் ஓரமா போட்டேன் என்றான்.

 

 

“நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் கட்டில்ல படுத்திட்டு நடுவுல குழந்தையை போட்டா அவ எப்படி விழுவா?? என்றாள் மித்ரா அதிபுத்திசாலியாய்.

 

 

‘அறிவாளி பொண்டாட்டி என்று மனதிற்கு சொல்லிக்கொண்டு “நான் கீழ விழுந்திட கூடாதுல்ல அதுக்கு தான் என்று வாய்க்கு வந்ததை உளறினான் அவன்.

 

 

“என்னமோ சொல்றீங்க எனக்கு புரியலை என்று அவள் குழந்தையை படுக்க வைக்க போக “மதுவை கொடு நானே படுக்க வைச்சுக்கறேன். நீ போய் கதவை அடைச்சுட்டு வா என்று சொல்லிவிட்டு அவள் கையில் இருந்து மதுவை வாங்கினான்.

 

 

குழந்தையை சுவற்றின் ஓரமாய் படுக்க வைத்துவிட்டு போர்வை எடுத்து போர்த்திவிட்டு சத்தமில்லாமல் அவனும் ஏறி உள்ளே படுத்துக்கொண்டான்.

 

 

மித்ரா திரும்பி வந்து பார்த்து அவனை முறைக்க ‘ஆஹ சார் இதுக்கு தான் பில்டப் பண்ணாரா என்று எண்ணிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

 

 

“எவ்வளவு செலவாச்சுன்னு நீங்க கேட்கவேயில்லையே?? என்று ஆரம்பிக்க படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

 

 

“எதுக்கு கேட்கணும்?? என்றான் அவன் பதில் கேள்வியாய்.

 

 

“நான் எவ்வளவு செலவு பண்ணேன்னு தெரிய வேண்டாமா??

 

 

“தெரிய வேண்டாம். என் பொண்டாட்டி அனாவசிய செலவு பண்ணுவான்னு நான் நினைக்கலை என்றவன் பொண்டாட்டி என்பதில் கொடுத்திருந்த அழுத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

 

அவனும் பதிலுக்கு சளைக்காமல் அவளை பார்வையால் விழுங்க மித்ரா இப்போது எச்சில் கூட்டி விழுங்கினாள் அவன் பார்வையில். அவளின் ஒவ்வொரு அசைவும் பார்த்துக்கொண்டிருந்தவன் பார்வையை அவளால் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.

 

 

“என… எனக்கு தூக்கம் வருது. தூங்கலாமா

 

“ஹ்ம்ம் தூங்கலாம் என்றவன் வேறெதுவும் பேசவில்லை.

 

 

“பெட்ஷீட் போர்த்திக்கோ நைட்ல குளிரும்

 

 

“எனக்கு பழக்கமில்லை வேணாம். நீங்க ஓரமா படுத்துக்கோங்க. ஏன்னா நானும் ஓரமா படுத்தா கீழ விழுந்திடுவேன் என்றுவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.

 

 

“அப்போ நான் விழுந்தா பரவாயில்லையா??

 

 

“உங்களுக்கு குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாது என்று கிண்டல் அடித்துவிட்டு படுத்துக்கொண்டாள்.

 

 

‘அடிப்பாவி என் பிளானை கண்டுப்பிடிச்சுட்டாளாஇன்னைக்கும் ஒண்ணுமில்லைடா சைதன்யா உனக்கு. பேசாம தூங்கு. அவளா இப்போ தான் மலையிறங்கி வந்திட்டு இருக்கா, வெயிட் பண்ணுவோம் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அவளருகே படுத்துக்கொண்டான்.

 

 

இரவு வீம்பாக கணவனிடம் போர்வை வேண்டாம் என்று படுத்தவளுக்கு நடுஇரவில் குளிர ஆரம்பித்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்று எண்ணி அவன் போர்வையை கொஞ்சம் இழுத்து போர்த்திக்கொண்டாள்.

 

 

இருவருமாக இரவில் ஒரே போர்வைக்காக மாற்றி மாற்றி இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கினர். மித்ரா தான் காலையில் முதலில் விழித்தாள்.

 

 

மெதுவாய் எழுந்து அமர்ந்தவளின் சேலை முந்தானை சைதன்யன் இழுத்து போர்த்தியிருந்தான். அவன் போர்வையை அவள் இழுத்து போர்த்தியிருந்தாள்.

 

 

அவள் எழ வேண்டும் என்றால் அவனை எழுப்பியே ஆக வேண்டும். என்ன செய்ய என்று யோசித்தவள் அவனை மெதுவாய் தட்டி எழுப்ப நினைத்து ஓங்கி அடித்துவிட்டாள்.

 

சுரீரென்று வலிக்க கண் விழித்து பார்த்தவன் “ஏன்டி அடிக்கற?? நான் தான் எதுவுமே பண்ணலையே?? என்றான் பாவமாய்.

 

 

“கொஞ்சம் குனிஞ்சு நல்லா பாருங்க ஒண்ணுமே பண்ணலையாம்

 

 

“என்ன சொல்ற என்றவன் போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தான். அப்போது அவன் கவனித்தான் அவன் இரவில் போர்த்தியிருந்தது அவளின் புடவையை என்று.

 

 

“சாரி என்று அசடு வழிந்தவன் அவன் மேல் போர்த்தியிருந்ததை எடுத்து அவளிடம் நீட்டினான்.

 

 

“ஆமா நீ தான் நைட் போர்வையை போர்த்திக்கலையே. நான் என்னோட போர்வையை தானே போர்த்திட்டு படுத்தேன். இப்போ எப்படி

 

 

இப்போது வழிவது அவளின் முறையாயிற்று “இல்லை நைட் ரொம்ப குளிரா இருந்துச்சு நான் தான் உங்க போர்வையை கொஞ்சம் இழுத்து போர்த்திக்கிட்டேன். அதுக்காக நீங்க என் புடவையை இழுக்கறதா

 

 

“தெரிஞ்சா இழுத்தேன்.. தெரியாம தானே…இருந்தாலும் நீ என்னை துச்சாதனனை பார்க்கற மாதிரி பார்த்து முறைச்சிருக்க வேணாம்

 

 

“நான் ஒண்ணும் அப்படி எல்லாம் பார்க்கலை

 

 

“புருஷன்னும் பார்க்கலை என்று முணுமுணுத்தான்.

 

 

“என்ன அங்க சத்தம்??

 

 

“பேசிகிட்டு இருக்கேம்மா என்றான்.

 

 

“யாரோட??

 

 

“என் மனசாட்சியோட சாரி சாரி… உன் பாஷையில சொல்லணும்னா என் பொண்டாட்டி மாதிரி நானும் மைன்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருந்தேன் என்று அவளுக்கு பதிலுக்கு பதில் கொடுத்தான்.

 

 

மித்ராவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவனுடன் இப்படி பதிலுக்கு பதில் பேசுவது அவளுக்கு பிடித்திருந்தது. மனதிற்கு இதமாகவும் இருந்தது அவன் பேச்சு. ஏனோ கொஞ்சம் கூட கோபமே வரவில்லை.

 

 

இத்தனை நாள் தான் இருந்த நிலை எல்லாம் பொய் என்பது போல் அந்த கணம் உணர்ந்தாள் அவள். அவனாகவே பேச வேண்டும் என்று ஏன் காத்திருக்க வேண்டும், நாம் பேசினால் தான் என்ன என்று தோன்றியது அவளுக்கு…

 

Advertisement