Advertisement

அத்தியாயம் – 15

 

 

அவள் வேலையை விடுவதற்கு ஒரு வாரம் முன்பு சைதன்யன் சென்னைக்கு வந்திருந்தான் எல்லோரையும் பார்ப்பதற்காக. மித்ரா எப்போதும் போல் முறுக்கிக் கொண்டிருந்தாள்.

 

 

அவளை தேடி வந்தவன் “மித்ரா…

 

 

பதிலேதும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள் அவள். “மித்ரா… நான் கூப்பிடுறது உனக்கு காதுல விழுதா!! இல்லையா!!

 

 

“விழுது!! விழுது!!

 

 

“விழுந்தா என்னன்னு கேட்க மாட்டியா??

 

 

“நீங்க பேசுறது காதுல விழுந்திட்டு தான் இருக்கு என்னன்னு சொல்லுங்க. பேச வந்தது நீங்க, அதைவிட்டு என் பேரை ஏலம் போட்டா நான் என்ன பண்ண முடியும். பேசணும்ன்னா வந்த விஷயத்தை சொல்ல வேண்டியது தானே

 

 

“நிஜமாவே எனக்கு புரியலை மித்ரா. உனக்கு ஏன் என் மேல இவ்வளவு வெறுப்பு. இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பேசுற

 

 

அவளிடம் இப்போது அமைதியே பதிலாய்.

 

 

“நான் இங்க வர்றது ஒரு இரண்டு நாளோ!! மூணு நாளோ!! தான் ஆனா உனக்கு அது கூட பிடிக்கலைன்னு தெரியுது. எனக்கு நிம்மதியில்லாம பண்ணணும்ன்னு நினைக்கிற

 

 

“அம்மா தாயே நீ ஆளைவிடு. எதுவும் பேச வேண்டாம் நீ பேசினா நெருஞ்சி முள் குத்தினா போல எனக்கு தான் வலிக்கும். நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்புறேன் என்றான் அவள் குறுக்கீட்டை பார்த்து.

 

“இப்போ நான் சொன்ன நெருஞ்சி முள் கூட உனக்கு பெரிய விஷயமா இருக்கும். இந்த வார்த்தைக்காக ஒரு நாள் நீ என்கிட்ட சண்டைக்கு வருவ. பேசுற வார்த்தைக்கு எல்லாம் என்னால உனக்கு அர்த்தமும் சொல்லிட்டு இருக்க முடியாது

 

 

“சரி அதெல்லாம் விடுவோம். நீ ஊருக்கு போறதை பத்தி அம்மாகிட்ட சொல்லிட்டியா??

 

 

“நான் எதுக்கு சொல்லணும்?? என்றாள் வேண்டுமென்றே.

 

 

“ஓகே… என்றவன் மேலே எதுவும் சொல்லவில்லை.

 

 

அவளாக தானே வலிய வந்தாள். “அவ்வளவு தானா!!

 

 

“ஹ்ம்ம் அவ்வளவு தான். நான் கேட்டேன் நீ பதில் சொல்லிட்டல அப்போ அவ்வளவு தானே!! என்றான் அவன் அவளை விட எகத்தாளமாக.

 

 

“அப்போ நான் அத்தைகிட்ட எதுவும் சொல்ல வேணாமா!!

 

 

“நான் சொன்னா நீ கேட்க போறியா!! இல்லை தானே!! உன்னிஷ்டம் என்றுவிட்டு அவன் வெளியில் சென்றுவிட்டான்.

 

 

அவளுக்கு குற்றவுணர்ச்சி வந்து அமர்ந்து கொண்டது. அவன் மேல் இருக்கும் கோபத்தையோ வருத்தத்தையோ வேறு யாரிடமும் காட்ட அவளுக்கு விருப்பமில்லை.

 

 

அவன் சொன்னது போல் அவன் இருக்கும் ஓரிரு நாட்களாவது அவனை எதுவும் சொல்லாமல் இருக்கலாம் என்றே தோன்றியது. ஆனாலும் ஏதாவது ஒன்று அவள் மனதை கஷ்டப்படுத்தி அவனை பேசிவிடுகிறாள்.

 

 

எல்லாம் புரிந்தும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை அவளால். சிறிது நேரம் யோசித்தவள் மாமியாரை நாடிச் சென்றாள்.

அவர் காலுக்கு மருந்தை தடவிக்கொண்டு அமர்ந்திருந்தார் அவர் அறையில். மித்ராவை கண்டதும் “உள்ள வா மித்ரா!! என்றார்.

 

 

“நான் வேணும்ன்னா தடவட்டும்மா அத்தை!!

 

 

“இல்லைம்மா நானே தடவிக்கறேன்

 

 

“பரவாயில்லை அத்தை கொடுங்க என்றவள் அந்த மருந்தை வாங்கி அவர் காலில் உருவி விடுவது போல் தடவினாள்.

 

 

“என்னமோ பேசணும்ன்னு வந்த மாதிரி இருக்கு என்று அவரே அவள் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்தார்.

 

 

“அத்தை நான் வேலையை விட போறேன்னு அன்னைக்கு சொன்னேன்ல

 

 

“ஹ்ம்ம் ஆமாம்!!

 

 

“கொஞ்ச நாள் நான் ஊருக்கு போயிட்டு வரட்டுமா அத்தை. அப்பா அம்மா எல்லாம் பார்க்கணும் போல இருக்கு

 

 

“போயிட்டு வாம்மா… இதை என்கிட்ட நீ சொல்லணுமா என்ன!! நீயும் தான் எங்க போற வர்றே… அவனோட நீயும் ஊருக்கு போறதுக்கு முன்னாடி இப்படி எங்காச்சும் போயிட்டு வந்தா தான் உண்டு

 

 

“இல்லை அத்தை இங்க காவ்யா, நீங்க, சைலேஷ் எல்லாம் விட்டு போக தான் கொஞ்சம் யோசனையா இருக்கு (மித்து இதை ஊருக்கு போறேன்னு அவன்கிட்ட சொல்ல முன்னாடி யோசிச்சிருக்கணும்…)

 

 

“காவ்யாக்கு பரீட்சை முடிஞ்சிருச்சு, அப்புறம் என்ன அவ வீட்டில தான் இருக்க போறா. அதனால எங்களுக்கு ஒண்ணும் கஷ்டமில்லை மித்ரா நீ ஊருக்கு போயிட்டு வா…. உனக்கு பிரசவம் அப்போ போனது அப்பவும், குழந்தை பிறந்து மூணு மாசத்திலேயே நீ இங்க வந்திட்ட

 

“அவங்களுக்கும் உன் கூட கொஞ்ச நாள் இருந்த மாதிரி இருக்கும். நீயும் மதுவும் சந்தோசமா போயிட்டு வாங்க

 

 

“தேங்க்ஸ் அத்தை

 

 

“இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க என்றார். அவள் அவரிடம் விடைபெற்று வெளியில் வரவும் சைதன்யன் அந்த அறைக்கு வெளியே நிற்பதை பார்த்தாள்.

 

 

அவனை கடந்து சென்றவளை “ஒரு நிமிடம் என்றான்.

 

 

“இதே நான் சொல்லியிருந்தா செஞ்சிருக்க மாட்டே!! அதென்ன வீம்பு உனக்கு!! ஒரு வேளை எனக்கு விளையாட்டு காட்டுறியா!! என்றான்.

 

 

“ஆமா எனக்கு வயசு மூணு உங்களுக்கு ஐஞ்சு ஓடி பிடிச்சு விளையாட ஆசைப்படுறேன்

 

 

“உன் கூட ஓடிப்பிடிச்சு விளையாட எனக்கும் ஆசை தான். நீ அப்படியே ஆசையா வந்திருவ பாரு என்று முணுமுணுத்துவிட்டு சென்றுவிட்டான் அவன்.

 

 

‘என்ன சொன்னாரு இப்போ!! என் கூட விளையாட ஆசையா!! இதென்ன புதுசா!! என்றிருந்தது மித்ராவுக்கு. ஆனாலும் அவன் பேச்சு மனதில் இதம் பரப்புவதை அவளால் உணர முடிந்தது.

 

 

சைதன்யன் விடுப்பு முடிந்து ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டான். வரும் வாரம் சனிக்கிழமை அன்று அவளுக்கு மதுரை செல்ல டிக்கெட் போட்டுவிட்டதால் அவன் முதல் நாளே காலையே சென்னைக்கு வந்துவிடுவதாக கூறியிருந்தான்.

 

 

ஆனால் அவனால் சொன்னபடி வரமுடியாமல் போனது. வியாழனன்று மாலை அவளுக்கு போன் செய்தான்.

 

 

அவன் அழைப்பை ஏற்றவள் “சொல்லுங்க என்றாள்.

“மித்ரா இங்க ஒரு பிரச்சனை என்னால நாளைக்கு சென்னைக்கு வர முடியாது. நீ சைலேஷ் வேணா கூட்டிட்டு ஊருக்கு போயிடு. நான் இங்க வேலை எல்லாம் முடிஞ்சதும் அங்க ஊருக்கு வந்திடுறேன்

 

 

“எதிர்பார்த்தேன், நீங்க வர மாட்டீங்கன்னு நான் எதிர்பார்த்தேன்

 

 

“சொன்னா புரிஞ்சுக்கோ மித்ரா. நான் ஒண்ணும் இதை வேணுமின்னே செய்யலை

 

 

“வேணும்ன்னு நீங்க செய்வீங்களா!! நான் வேணாம்ன்னு செய்யறீங்க போல

 

 

“ஹேய் என்னடி லூசு மாதிரி பேசுற

 

 

“என்னை பார்த்தா உங்களுக்கு லூசு மாதிரி தெரியுதா!!

 

 

“அம்மா தாயே உன்கிட்ட என்னால பேச முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்புறம் உன்னிஷ்டம் என்றுவிட்டு அவன் போனை வைத்தான்.

 

 

மித்ராவுக்கு தான் அழுகையாக வந்தது. ஊருக்கு அவள் மட்டும் தனியாக சென்றால் நன்றாகவா இருக்கும். அவள் அன்னை அவளை கேள்வி கேட்டே துளைத்துவிட மாட்டார்.

 

 

ஏன் தனியாக வந்தாய்?? என்ன பிரச்சனை?? ஏது பிரச்சனை?? என்று கேள்வி கேட்டே கொன்றுவிடுவாரே என்றிருந்தது அவளுக்கு. தனியாக ஊருக்கு செல்வது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல.

 

 

திருமணம் ஆனபின்னே அப்படி சென்றால் அவள் ஊரில் என்ன சொல்லுவார்கள் என்று எண்ணினாள். முன்பெல்லாம் அவள் அக்கா கணவனுடன் கோபித்துக்கொண்டு அடிக்கடி பிறந்த வீடு வந்துவிடுவாள். அதற்கே ஒவ்வொருவராக வந்து தினமும் ஒரு நாட்டாமை செய்து விட்டு போவார்கள்.

 

 

அதெல்லாம் கூட அவளால் சமாளிக்க முடியும் இருந்தாலும் அவன் வந்து விட்டுச் சென்றால் அந்த கவுரவமே வேறு என்று எண்ணிக்கொண்டாள்.

 

 

என்னை ஊருக்கு கூட கூட்டிச் செல்ல முடியாமல் அப்படி என்ன வேலையிருக்கும் என்று கோபம் ஒரு புறம் வந்தாலும் கலெக்டருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் என்பதை அறிவு நினைவுப்படுத்தி அவளை அமைதியாய் இருக்கச் செய்தது.

 

 

இரவு தொலைக்காட்சியை பார்க்கும் போது தான் அவனின் முக்கிய வேலை என்னவென்றே அவளுக்கு புரிந்தது. தொலைக்காட்சியின் செய்தி சேனல் ஒன்று அவனை பற்றிய செய்தியை ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது.

 

 

“புயல் எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறன. முக்கியமாக கடலூர், நாகை மாவட்டத்தில் புயலின் தாக்கம் அதிகமாயிருக்கும் என்பதால் மக்கள் கவனமாயிருக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்கிறது

 

 

“கடலூரில் புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர் சைதன்யன் தாழ்வார பகுதியில் வசிக்கும் மக்களை தங்க வைக்க சிறப்பு ஏற்பாடுகளை துரிதகதியில் செய்து முடித்திருக்கிறார்

 

 

“இப்போது மழைவிட்டு காற்று வீச ஆரம்பித்திருக்கிறது, புயல் கரையை கடக்கும் வேளையில் மணிக்கு 100 முதல் 130 கிலோமீட்டர் வரையிலும் கூட பலத்த சூறாவளி காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கிறது

 

 

“கடலூர் மாவட்ட ஆட்சியர் சைதன்யன் தனக்கு கீழே உதவிக்குழுக்களை அமைத்து முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து அங்கு நிவாரணம் வேண்டுவோருக்கு தக்க உதவிகள் செய்யுமாறு பணித்திருக்கிறார்

 

 

“சில இடங்களுக்கு அவரே நேரடியாக சென்று அனைத்து பணிகளையும் பார்வையிடுவதுடன் வழியில் மழையில் மாட்டிக்கொண்ட வயதான பெரியவர் ஒருவரையும் பத்திரமாக காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்… என்று அப்பெண் பேசிக்கொண்டிருக்க மித்ரா வைத்த கண் வாங்காமல் தொலைக்காட்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

 

 

உள்ளே லேசாய் குற்றவுணர்வொன்று எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவனுக்கு உதவியாய் இல்லா விட்டாலும் பரவாயில்லை. ஏதாவது பேசி அவனை குழப்பி வேறு வைக்கிறோமே என்றிருந்தது அவளுக்கு.

 

 

செய்தி சேனல் முழுவதும் கடலூர் நாகை மாவட்டத்தின் புயல் பற்றிய செய்திகளையே தொகுத்து வழங்கிக்கொண்டிருக்க மித்ராவுக்கு தொலைக்காட்சியை விட்டு நகரமுடியவில்லை.

 

 

இரவில் அவள் படுக்க வெகு நேரம் ஆகியிருந்தது. விடிந்து எழுந்தால் அவள் தந்தை சொக்கலிங்கத்தின் குரல் வெளியில் கேட்டது போல் இருக்க மித்ராவோ அதெல்லாம் கனவோ என்றிருந்தாள்.

 

 

குளித்து முடித்து அவள் அறையில் இருந்து வெளியில் வந்தால் உண்மையிலேயே அவளின் தந்தை தான் அங்கு அமர்ந்திருந்தார்.

 

 

“அப்பா… என்னப்பா என்கிட்ட சொல்லாமலே வந்து சர்ப்ரைஸ் கொடுக்கறீங்க?? என்றாள்.

 

 

“நேத்து நைட் மாப்பிள்ளை போன் பண்ணியிருந்தார்ம்மா.. அவரால உன்னை கொண்டு வந்து ஊர்ல விட முடியலையாம். நீங்க போய் கூட்டிட்டு வர்றீங்களான்னு கேட்டார்

 

 

“பாவம் அவர் ஏதோ வேலையில சிக்கிட்டார் போலம்மா. அதேன் நானே வந்துட்டேன்ம்மா என்றார் அவர்.

 

 

‘பரவாயில்லையே நம்ம புருஷனுக்கு நம்ம மேல இவ்வளவு அக்கறை இருக்கே என்று எண்ணியவளுக்கு குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. நம்ம மேல அவர் காட்டுற அக்கறையில நாம கொஞ்சம் கூட அவர் மேல காட்டலையோ என்று தான் அது.

“நீ உனக்கு துணிமணி எல்லாம் எடுத்து வைச்சுட்டியாம்மா. மாப்பிள்ளை எனக்கும் டிக்கெட் போட்டுட்டார் போல உனக்கு மெசேஜு அனுப்பி இருக்காராம்ல

 

 

“நான் இன்னும் பார்க்கலைப்பா. இப்போ பார்க்கறேன் என்றவள் அறைக்குள் சென்று கைபேசியை எடுக்க முதலில் பதிந்திருந்த டிக்கெட் கேன்சல் செய்து புதிதாக பதிந்திருந்தான்.

 

 

மனம் லேசாய் இதமாய் இருப்பதாய் தோன்றியது. ஏனோ அவனை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பெட்டியில் ஏற்கனவே அவள் எல்லாம் அடுக்கி முடித்திருந்தாள். மனம் அவசரமாய் யோசித்து ஒரு முடிவெடுத்தது.

 

 

வாசலில் அரவம் கேட்க வெளியே வந்தால் சுஜி சபரியுடன் சோபாவில் அமர்ந்திருந்தாள். சொக்கலிங்கத்தை நீண்ட நாள் கழித்து பார்த்திருந்தவள் அவரின் நலம் விசாரித்து முடித்தாள்.

 

 

மித்ராவை கண்டதும் சுஜி முறைத்தாள். கோபமாய் வேறு புறம் பார்வையை திருப்பினாள். ‘ஆஹா இவ கோவமா இருக்கா போலவே. எப்படி மலை இறக்க என்று யோசித்துக்கொண்டே தோழியின் அருகில் வந்து சபரியை தூக்கிக் கொண்டாள்.

 

 

“எப்போடி வந்த?? எப்படியிருக்க?? என்று விசாரித்ததும் சுஜி இன்னும் அதிகமாய் முறைத்தாள்.

 

 

சொக்கலிங்கமோ “என்னாச்சும்மா சுஜி எதுக்கும்மா முறைக்கிறவ. என்ன செஞ்சா உன் சினேகிதி என்றார்.

 

 

“நீங்களே கேளுங்கப்பா அவளை. என்னை பார்த்து எத்தனை நாளாச்சுன்னு கேளுங்க, என்கிட்ட பேசி எத்தனை நாளாச்சுன்னு நீங்களே அவகிட்ட கேளுங்க என்றாள் சுஜி.

 

 

அதற்குள் அந்த பக்கம் வந்த மகேஸ்வரியோ மருமகளுக்கு சப்போர்ட் பண்ணுவதாக நினைத்து “உன் பிரண்டு என்னம்மா செய்வா, பாவம் அவ. வேலையை விடறதுக்கு எழுதி கொடுத்திட்டா

“அவங்க ஆபீஸ்ல வேலையை விட்டு போகப்போறாங்கன்னு இருக்கற எல்லா வேலையும் எம் மருமக தலையிலேயே சுமத்திட்டாங்க போல. ஒரு மாசமும் ஓடிக்கிட்டே இருந்தா மித்ரா என்றார்.

 

 

இப்போது முன்பை விட அதிகமாய் சுஜி தோழியை முறைத்துக் கொண்டிருந்தாள். “அத்தை நீங்க அப்பாகிட்ட பேசிட்டு இருங்க. நான் சுஜியை உள்ள கூட்டிட்டு போறேன் என்று தோழியை அழைத்துக்கொண்டு அவர்கள் அறைக்குள் சென்றாள்.

 

 

“உட்காருடி உன்கிட்ட நெறைய பேசணும்

 

 

“உன் மேல கொலைவெறியில வந்தேன். இப்போ வந்து உட்காருன்னு சொல்றியா?? ஆமா மது எங்க??

 

 

“மதுகுட்டியை காவ்யா கடைக்கு கூட்டிட்டு போயிருக்கா??

 

 

“சுஜி பேசுடி, எதுக்கு என் மேல உனக்கு கோபம் நான் உன்கிட்ட பேசலைன்னு தானே

 

 

“நான் என்னடி செய்வேன் உன்கிட்ட பேசலாம்ன்னா பாவம் அப்போ தான் அண்ணா வேற ஊர்ல இருந்து வந்திருந்தாங்க. உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் நான் உன்னை தொல்லை பண்ணலைடி

 

 

“அப்புறம் நீ வேற போன் பண்ணி அண்ணா வந்திருக்கறதால உங்க மாமியார் வீட்டுக்கு வேற போறேன்னு சொன்னே

 

 

“அதான்டி உன்னை தொல்லை பண்ணலை. நீ வர்றதுக்கு எப்படியும் ஒரு மாசம் மேல ஆகும்ன்னு சொன்னல. அதான் உன்னை நான் ஊர்ல வந்து பார்த்துக்கலாம்ன்னு விட்டுட்டேன். பார்த்தா நீ இங்க வந்து நிக்குற

 

 

“நல்லா கதை சொல்றடி எப்படியோ போ. என் கோபம் இன்னும் தீரலை. சரி விடு  நீ ஒண்ணும் என்கிட்ட பேசாம இருக்கணும்ன்னு எல்லாம் நினைச்சிருக்கமாட்ட, எனக்கும் புரியுது. உங்கண்ணனை அவங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி உடனே வரச்சொல்லிட்டாங்க

 

 

“அதான் அம்மா வீட்டுக்கு கூட போக முடியாம நேரா மாமியார் வீட்டில இருந்து இங்க வந்தாச்சு. சரி சொல்லு உனக்கு என்ன பேசணும் என்கிட்ட

 

 

மித்ரா மனதில் உள்ளதை எல்லாம் தோழியிடம் கூற சுஜி அவளை நன்றாக திட்டினாள். “நீ என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க, எதுக்கு அந்த மனுஷனை போட்டு இப்படி பாடுபடுத்தற

 

 

“உனக்கு என்ன கேட்கணுமோ அதை நீயே அவர்கிட்ட கேட்க வேண்டியது தானே. அதைவிட்டு எப்பவும் அவரே உன்னை புரிஞ்சுக்கணும் உன்கிட்ட பேசணும்ன்னு நினைப்பியா

 

 

“அதை கூட விடு அவர் பேசினா பதில் பேசுறதை விட்டு எதுக்குடி மைன்ட் வாய்ஸ்ல பேசித் தொலைக்கிற. எல்லாருக்குமே அப்படி ஒரு பழக்கம் இருக்கும்

 

 

“ஆனா எதிர்ல ஒருத்தர் பேசிட்டு இருக்கும்போது யாரும் இப்படி எல்லாம் யோசிக்க மாட்டாங்க. உனக்கு அது ஒரு வியாதியாவே போச்சுன்னு தோணுது

 

 

“சரி அவர்கிட்ட தான் சொல்லலை என்கிட்ட சொல்லு. உனக்கு என்ன பிரச்சனை, நான் கூட உன்னை முழுசா புரிஞ்சுகிட்டேன்னு நினைச்சேன். இப்போ தான் தெரியுது உன்னை புரிஞ்சுக்கலைன்னு

 

 

“ஒண்ணுமில்லை சுஜி விடு, நான் ஊருக்கு கிளம்பறேன் சுஜி வர்றதுக்கு எவ்வளவு நாள் ஆகும் தெரியலை. உனக்கு அப்பப்போ போன் போடுறேன்

 

 

“அப்போ நீ என்கிட்ட கூட என்னன்னு சொல்லமாட்ட அப்படி தானே

 

 

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை சுஜி. என்னை பத்தி எனக்கே புரியலை, உனக்கு நான் என்ன புரிய வைப்பேன். ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் கொடு, நான் அப்புறம் பேசறேன் என்றவளின் கண்கள் லேசாய் கலங்க ஆரம்பித்தது.

 

 

“உன்னை பத்தி எங்களுக்கு வேணா புரியாம இருக்கலாம். உன் மனசு என்ன எதிர்பார்க்குதுன்னு உனக்கு நிச்சயம் புரியாம இருக்காது என்றாள் சுஜி பதிலுக்கு.

 

 

“எது எப்படி இருந்தாலும் நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்தறேன்ல. எனக்கே என்னை பிடிக்கலை சுஜி, அவர் என் பக்கத்துலயே இருக்கணும்ன்னு தோணுது. ஆனா அவர் பக்கத்துல இருக்கும் போது நான் என்ன பேசறேன்னு எனக்கே தெரியலை. கண்டதும் பேசி அவரை ரொம்ப கஷ்டப்படுத்தறேன்

 

 

“அது ஏன்னு தான் எனக்கு நானே கேள்வி கேட்டுட்டு இருக்கேன் சுஜி. அதுனால தான் ஊருக்கு போறேன்னு சொன்னேன். எனக்கு வேலைக்கு போக கூட பிடிக்கலை

 

 

“அவ்வளவு பேசின அந்த செபாஸ்டியனை என்னால ஒண்ணுமே செய்ய முடியலைன்னு அவ்வளவு ஆத்திரம் எனக்கு. அதான் வேலையை விட்டு நிக்க போறேன்னு அவர்கிட்ட சொன்னேன்

 

 

“மனசு கண்டதையும் போட்டு குழப்பிக்குது. ஊருக்கு போனா அங்க சூழ்நிலை அந்த அமைதி எனக்குள்ள மாற்றத்தை ஏற்படுத்துமான்னு தான் ஊருக்கு போறேன். நிச்சயம் அவர் மேல கோபப்பட்டு போகலை

 

 

“என் மேலேயே எனக்கு கோபம் அதான் சுஜி. ப்ளீஸ் நீயாச்சும் என்னை புரிஞ்சுக்கோ. கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா ஓடிக்கிட்டே இருந்ததுல எனக்கு வெறுப்பா இருக்கு

 

 

“என்ன தான் இருக்கு வாழ்க்கையிலன்னு யோசிச்சு பார்த்தா சொல்லிக்கற மாதிரி ரெண்டு பேருமே இன்னும் வாழவே ஆரம்பிக்கலை சுஜி. உனக்கு கூட தோணும் நான் இன்னும் அஸ்வினி நினைப்பா அவர் இருக்காரோன்னு சந்தேகப்படுறேன்னு

“அப்படி சந்தேகம் எல்லாம் எனக்கில்லை. அஸ்வினி பற்றிய பயம் கொஞ்சம் எனக்கிருக்கு இல்லைங்கல. ஆனா அவரை பத்தி எனக்கு எந்த பயமும் இல்லை

 

 

“என்கிட்ட நீ பேசின இவ்வளவும் அவர்கிட்ட ஏன்டி பேச மாட்டேங்குற?? என்றாள் சுஜி.

 

 

“எப்படி சுஜி பேசணும் எனக்கு புரியலை. நானா போய் அவர்கிட்ட இதெல்லாம் எப்படி சொல்றது, அட்லீஸ்ட் அவர் என்கிட்ட மனசுவிட்டு பேசினா நானும் என் மனசுல உள்ளதை எல்லாம் கொட்ட மாட்டேனா

 

 

“மனசுக்குள்ளவே வைச்சுட்டு வெளிய எதுவுமே நடக்காத மாதிரி இருக்கறது ரொம்ப வேதனை தெரியுமா சுஜி. அந்த கோபம் ஆத்திரம் இயலாமை தான் அவரை நான் காயப்படுத்திட்டேன். அவரை பேசிட்டு நான் மட்டும் சந்தோசமாவா இருக்கேன், எனக்கும் கஷ்டமா தான் இருக்கு தெரியுமா

 

 

“என்னை இவ்வளவு சொல்றியே உங்கண்ணா என்கிட்ட எப்போ தான் மனசுவிட்டு பேசியிருக்காங்க நீயே சொல்லு. என்னை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்டப்போ தான் என்கிட்ட அவங்க அதிகமா பேசினதுன்னு நினைக்கிறேன்

 

 

“அதுக்கு பிறகு என்னைக்கு என்கிட்ட நிதானமா பேசியிருக்காங்க. நானும் மனுஷி தானே, எனக்கும் உணர்ச்சிகள் இருக்காதா… என்னை நானே தான் அவருக்கு புரிய வைக்கணுமா

 

 

“இவ நம்ம பொண்டாட்டி இவ ஏன் இப்படி இருக்கான்னு அவர்க்கு தோணியிருக்கா?? என்கிட்ட அன்பா கேட்டா சொல்ல மாட்டேனா. ஏன்டி மனுஷனை இம்சை பண்ணுறன்னு கேட்டா எனக்கு கோவம் வருது

 

 

“நானா இவரை இம்சை பண்ணுறேன். அதான் அன்னைக்கு அப்படி பேசினேன். அவர் எனக்காக வந்திருந்தா கூட பரவாயில்லை. அத்தை சொன்னாங்கன்னு தான் வந்தேன்னு சொன்னார்

“என்னால முடியலை சுஜி ரொம்ப வலிக்குது. ரொம்ப கஷ்டமாயிருக்கு என்றவளின் அழுகை வெகு நேரமாய் நிற்கவேயில்லை.

 

 

அவளை சமாதானம் செய்து அறிவுரைகள் கொடுத்து அவள் வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள்.

 

____________________

 

 

சைதன்யன் நல்ல உறக்கத்தில் இருக்க கைபேசியின் அழைப்பு வெகு நேரமாய் ஒலித்துக் கொண்டிருக்க அவன் உறக்கத்தையும் மீறி சத்தம் அவன் மூளையை சென்றடைய தூக்கத்துடனே போனை எடுத்து “ஹலோ என்றவாறே காதில் வைத்தான்.

 

 

“ஹலோ மாப்பிள்ளை… என்ற குரல் கேட்டதும் காதிலிருந்து போனை எடுத்து பார்த்தான் அழைத்திருந்தது மித்ராவின் தந்தை. ‘ஊருக்கு கிளம்பிட்டிட்டு இருக்காங்க போல அதான் போன் பண்ணியிருக்காங்க என்று எண்ணிக்கொண்டே “சொல்லுங்க மாமா என்றான்.

 

 

“மாப்பிள்ளை வீட்டு அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்களேன் நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் என்றார் அவர்.

 

 

‘என்ன வீட்டுக்கு வந்திட்டு இருக்காங்களா!! மாமா வீட்டை மறந்திட்டாங்களா!! எதுக்கு அட்ரஸ் கேக்குறாங்க என்று குழம்பியவன் “அதே அட்ரஸ் தான் மாமா. என்னாச்சு மாமா எதுவும் பிரச்சனையா!! வழி மறந்திட்டீங்களா!! என்றான்.

 

 

“மாப்பிள்ளை சொல்ல மறந்திட்டேன் நாங்க இப்போ கடலூர்ல இருக்கோம். உங்களை பார்க்க தான் வந்திருக்கோம். கிளம்ப முன்னாடி போன் பண்ணலாம்ன்னு சொன்னா மித்ராதேன் வேண்டாம்ன்னு சொல்லிட்டா

 

 

“அதான் பஸ்விட்டு இறங்குவும் போன் போடுறோம். வீட்டுக்கு எப்படி வரணும் மாப்பிள்ளை என்றதும் சைதன்யனுக்கு துள்ளிக்குதிக்க வேண்டும் என்று தோன்றியது….

 

 

Advertisement