Advertisement

அத்தியாயம் – 11

 

 

வீட்டிற்கு வந்த மித்ரா மதுவை உறங்க வைத்துவிட்டு மாமியாரும் அவளுமாக சாப்பிட்டப்பின் அவள் மடிக்கணினியை எடுத்து அலுவலகத்திற்கு மறுநாளைக்கு விடுப்பு சொல்லி இமெயில் அனுப்பி வைத்தாள்.

 

 

மனம் முழுதும் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தது. உடனே அவனுக்கு அழைத்து பேச வேண்டும் என்று தோன்ற கணவனுக்கு அழைத்தாள். எப்போதும் போல் முதல் அழைப்பிலேயே எடுத்தவன் “சொல்லு மித்ரா என்றான்.

 

 

“அத்தைக்கு போன் பண்ணியிருந்தீங்க போல என்று மீண்டும் ஒரு பஞ்சாயத்திற்கு பிள்ளையார் சுழியை போட்டு வைத்தாள்.

 

 

“அம்மா உன்கிட்ட முழுசா எதுவும் சொல்லலையா?? உனக்கு போன் பண்ணி பார்த்தேன்னு சொல்லியிருப்பாங்களே. அவங்க சொன்னது உனக்கு காதுல எதுவும் விழுந்திருக்காதோ

 

 

“விழுந்திருந்தா தான் நீ காலையிலேயே எனக்கு போன் பண்ணியிருப்பியே என்று அவளுக்கு திருப்பிக் கொடுத்தான் சைதன்யன்.

 

 

‘அதெப்படி எல்லா தப்பையும் என் மேலேயே திருப்பிவிட முடியுது இவரால என்று எண்ணிக்கொண்டவள் “அத்தைகிட்ட சொல்லியிருந்தா என்கிட்ட போனை கொடுத்திருப்பாங்க தானே என்று சொன்னாள்.

 

 

“நான் தான் பேசுறேன்னு உனக்கு தெரிஞ்சிருக்கு அப்புறம் அம்மாகிட்ட போன் வாங்கி நீயே பேசி இருக்க வேண்டியது தானே. பாவம் நைட் ஷிப்ட் முடிச்சு வந்திருப்ப அதனால தான் போன் ஆப் பண்ணி வைச்சிருக்கேன்னு பேச வேணாம்ன்னு நினைச்சதுக்கு இவ்வளவு கேள்வியா என்றான்.

 

 

“இனிமே கேட்கலை

“அப்போ வேற என்ன கேட்கலாம்ன்னு நீ எனக்கு போன் பண்ணே?? எப்பவும் என்கிட்ட எதாச்சும் கேள்வி கேட்க தானே போன் பண்ணுவ என்றவன் கிண்டல் செய்கிறானா சீரியசாக கேட்கிறானா என்று அவளுக்கு விளங்கவேயில்லை.

 

 

“என்னை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?? என்று வரிந்துகட்டினாள்.

 

 

“நேர்ல பார்த்திட்டு சொல்றேன் என்று அவன் முணுமுணுத்தது அவளுக்கு சரியாக காதில் விழவில்லை.

 

 

“என்ன சொன்னீங்க கேட்கலை??

 

 

“நேர்ல பார்க்கலாம்ன்னு சொன்னேன்

 

 

“நான் அதுக்காக தான் உங்களுக்கு கூப்பிட்டேன். நாளைக்கு ஏர்போர்ட்க்கு நானும் மதுவும் வர்றோம். அதை சொல்ல தான் கூப்பிட்டேன் என்றாள்.

 

 

“எதுக்கு மித்ரா அலைச்சல் நானே வந்திடுறேன் என்று மறுத்தான் அவன்.

 

 

“நாங்க நாளைக்கு வர்றோம், எத்தனை மணி பிளைட்ல வர்றீங்கன்னு மட்டும் மெசேஜ் அனுப்புங்க, பை என்று அவன் மேலே எதுவும் சொல்லி மறுப்பதற்கு முன் வைத்துவிட்டாள்.

 

 

அவன் போனை வைக்கவும் அவள் அலுவலகத்தில் இருந்து அவளின் டீம் லீடர் செபாஸ்டியன் அழைத்திருந்தான் அவளின் விடுப்பு மெயிலை பார்த்துவிட்டு.

 

 

“சொல்லுங்க செபாஸ்டியன் என்றாள்.

 

 

“மித்ரா ஒரே ஒரு ஹெல்ப் உங்களை டிஸ்டர்ப் பண்ணுறேன்னு நினைக்க வேண்டாம் ப்ளீஸ். நாளைக்கு லீவ் கேட்டு இருந்தீங்கள்ள

“ஆமா செபா எதுவும் பிரச்சனையா??

 

 

“பிரச்சனைன்னு எல்லாம் ஒண்ணுமில்லை. நாளைக்கு வினீத் வேற லீவ் அப்ளை பண்ணியிருக்கான். ஆல்ரெடி அவனுக்கு லீவ் ஓகே பண்ணிட்டேன்

 

 

“எனக்கு லீவ் கிடையாதுன்னு சொல்ல வர்றீங்களா?? என்றவளின் குரலில் வருத்தமிருந்தது.

 

 

“மித்ரா என்னை கொஞ்சம் முழுசா பேச விடுங்க. நாளைக்கு உங்க லீவ் கண்டிப்பா நான் அப்ரூவ் பண்ணுறேன். நாளைக்கு முக்கியமா முடிக்க வேண்டிய வேலை ஒண்ணு இன்னைக்கு வந்து முடிச்சு தர முடியுமா

 

 

“எனக்கு தெரியும் நீங்க காலையில தான் வீட்டுக்கு வந்தீங்கன்னு. வினீத் இன்னைக்கும் லீவ் இல்லன்னா அவனை வைச்சு மேனேஜ் பண்ணியிருப்பேன்

 

 

“மத்த எல்லாரும் நம்ம டீம்ல புது ஆளுங்க அதான் உங்கக்கிட கேட்கிறேன் என்று தயங்கி பேச ‘ச்சே இவ்வளோ தானா என்று நினைத்துக்கொண்டவள் “கண்டிப்பா வந்து செஞ்சு தர்றேன் செபா என்றாள்.

 

 

“அப்போ நீங்க நாளைக்கு ஆப் எடுத்துக்கோங்க. உங்க லீவ் நான் கேன்சல் பண்ணிடுறேன் ஓகேவா என்றான்.

 

 

“ஓ கிரேட் தேங்க்ஸ் செபா. நான் ஒரு ஒன் ஹவர்ல அங்க இருப்பேன் என்றவள் மாமியாரிடம் சென்று சொல்லிவிட்டு குளித்து அலுவலகம் கிளம்பினாள்.

 

 

சைதன்யனின் வருகையே அவள் உறக்கத்தை கலைத்திருக்க அவளால் துடிப்பாய் வேலை செய்ய முடிந்தது. செபாஸ்டியனின் கைபேசி அவள் மேஜை மேல் அவன் மறதியாய் விட்டு சென்றிருக்க தொடர்ந்த அதன் அழைப்பை பார்த்து எடுப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

செபாஸ்டியனை தேட அவன் சீட்டில் கூட அவனில்லை. ஹனி என்று பதிந்திருந்த எண்ணில் இருந்து தொடர்ந்த அந்த அழைப்பை எடுக்காமலே இருந்தால் எதிர்புறம் இருப்பவர் பயம்கொள்வர் என்று எண்ணி போனை அட்டென்ட் செய்து “ஹலோ என்றாள்.

 

 

“செபா… செபா எங்க போய்ட்டார். நீங்க யாரு அவரோட பியான்சியா?? என்ற எதிர்முனையின் குரலை மித்ரா கண்டுவிட்டிருந்தாள்.

 

 

அழைத்தது அஸ்வினியே, அவளுக்கு தான் மித்ராவின் குரல் சட்டென்று புரிபடவில்லை. மித்ரா எதுவும் சொல்லாமல் போனை வைத்துவிட்டாள்.

 

 

அதே எண்ணில் இருந்து மீண்டும் அழைப்பு வரவும் செபாஸ்டியன் அவளை தேடி வரவும் சரியாக இருந்தது. “செபா உங்களுக்கு ஹனி அப்படிங்கறவங்க நம்பர்ல இருந்து ரொம்ப நேரமா போன் வருது

 

 

“நீங்க ஆளை காணோமேன்னு தெரியாம அட்டென்ட் பண்ணிட்டேன் செபா. அப்புறம் நீங்க தப்பா எடுத்துக்குவீங்களோன்னு காலை கட் பண்ணிட்டேன். சாரி என்றாள்.

 

 

“ஹனி யாருன்னு உனக்கு தெரியலையா மித்ரா. வினி ஐ மீன் அஸ்வினி தான் அது என்று அவளுக்கு சொல்லிவிட்டு போனுடன் நகர்ந்தான் அவன்.

 

 

மித்ராவுக்கு ஒரே குழப்பம் இவன் ஏன் அவள் எண்ணை ஹனி என்று பதிந்திருக்கிறான் என்று. இருவரும் ஏதோ ஒரு வகையில் உறவினர் என்று அவளுக்கு தெரியும்.

 

 

அவள் தன் குரலை கேட்டு நீ அவன் பியான்சியா என்று கேட்கிறாள் ஒரே குழப்பம் என்று எண்ணிக் கொண்டவள் அதை பற்றி அப்போதைக்கு விட்டாள்.

 

 

ஆனால் இப்போது அவளுக்கு வேறு ஒரு எண்ணம் வந்து ஆக்கிரமித்தது. சுஜி கூட முன்பே இதைப்பற்றி கேட்டிருக்கிறாள். அஸ்வினியிடம் ஏன் சைதன்யனை திருமணம் செய்ததை பற்றி சொல்லவில்லை என்று. தான் ஏன் அவளிடம் சொல்லவில்லை என்ற காரணம் அவள் மட்டுமே அறிந்தது.

 

 

அஸ்வினியின் பிடிவாதம் மித்ராவின் பிடிவாதத்தையே மிஞ்சிவிடும் அதை அவளுடன் இருந்த நாட்களில் அவள் அதிகம் உணர்ந்திருந்தாள். அதே போல் அஸ்வினிக்கு ஒருவரை பிடித்துவிட்டால் யாருக்காகவும் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டாள்.

 

 

ஓவர் பொசசிவ் அவளிடம் உண்டு. இருவரும் ஒன்றாய் இருந்த அந்த நாட்களில் நடந்த நிகழ்வொன்று அவள் கண்முன் வந்து போனது.

 

____________________

 

 

மித்ரா, அஸ்வினி டீமில் புதிதாய் ஒரு பெண் அன்று சேர்ந்திருந்தாள். அஸ்வினி ஒரு வார விடுப்பில் அவள் பெற்றோருடன் அவர்கள் வருடாவருடம் செல்லும் சுற்றுலாவிற்கு சென்றிருந்தாள்.

 

 

செபாஸ்டியன் அந்த புதுப்பெண்ணுக்கு ட்ரைனிங் கொடுக்குமாறு மித்ராவிடம் சொல்ல அவளும் அப்பெண்ணை தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்.

 

 

அந்த பெண் மனோவும் மித்ராவை போலவே தென் தமிழ்நாட்டில் இருந்து வந்தவள். ஆங்கிலம் பேச சற்றே சிரமம் கொண்டிருந்தாள். ஏனோ மித்ராவிற்கு அப்பெண்ணை பார்க்கும் போது தன்னை பார்ப்பது போலவே இருந்தது.

 

 

வேலைக்கு வந்த புதிதில் எல்லோரிடமும் சகஜமாய் பேச முடியாமல் அவள்பட்ட சிரமம் ஞாபகத்திற்கு வந்தது. அப்போது அஸ்வினி தான் அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டு அவள் எல்லோரிடமும் சகஜமாய் இருக்க உதவி செய்திருந்தாள்.

 

 

மித்ராவிற்கு புதிதாய் வந்த பெண் மனோவை மிகவும் பிடித்துவிட்டது. அஸ்வினி தனக்கு உதவியது போல் தானும் மனோவிற்கு இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.

 

 

ஒரு வாரம் சென்றிருந்தது ஊரில் இருந்து அஸ்வினி வந்திருந்தாள். வந்ததுமே மித்ராவின் டேபிளுக்கு தான் வந்தாள். மித்ராவோ வெகு சுவாரசியமாய் மனோவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

 

 

“மித்து நான் ஊர்ல இருந்து வந்துட்டேன். நீ என்னை பார்க்க யாருக்கிட்டயோ பேசிக்கிட்டு இருக்க என்ற அஸ்வினி பேச்சு மட்டுமே மித்ராவிடம் இருந்தது கண்களோ மனோவை வெறுப்பாய் பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

“அஷ் இவங்க மனோ நம்ம டீம் தான். நம்ம TL தான் டிரைன் பண்ண சொன்னார். வா நீயும் வந்து உட்காரு. இந்த பொண்ணு கூட என்னை மாதிரி தான் அஷ்

 

 

“நான் வந்த புதுசுல இருந்த மாதிரி இப்போ இவ இருக்கா!! என்றவள் மனோவிடம் திரும்பி “மனோ நான் சொல்லியிருக்கேன்ல அஸ்வினி நம்ம டீம் தான் என்று சொல்லிக் கொண்டிருக்க அஸ்வினியோ கடுப்புடன் எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

மித்ராவோ புதிதாய் வந்த மனோவின் உடன் அதிகம் நேரம் கழித்ததில் அஸ்வினிக்கு மிக எரிச்சல். இரண்டு நாளாக அவளுடன் தனியாக கூட அவளால் பேச முடியவில்லை.

 

 

மனதிற்குள் எதையோ நினைத்துகொண்டு அவள் செபாஸ்டியன் அறைக்கு எழுந்து சென்றாள். அதே நேரம் மித்ரா செபாஸ்டியனிடம் வேலை விஷயமாக அவள் சந்தேகத்தை கேட்க இண்டர்காம் செய்தாள்.

 

 

செபாஸ்டியன் அறைக்கதவு தட்டப்பட “எஸ் கமின் என்றான்.

 

 

“செபா உன்கிட்ட பேசணும்

 

 

“சொல்லு அப்படி என்ன முக்கியமான விஷயம் என்னோட ரூம்க்கே வந்திருக்க என்றவன் “இப்படி உட்கார்ந்து சொல்லலாமே இன்று எதிரில் இருந்த இருக்கையை காட்டினான்.

 

 

அப்போது சரியாக அவனின் இன்டர்காம் அழைக்க அவன் கை நீட்டி இருக்கையை காண்பித்த வேளையில் அது ஸ்பீக்கர் மோடுக்கு போயிருந்தது.

 

 

அவன் அதை கவனிக்கவில்லை போன் தானாக அழைப்பை நிறுத்தியிருந்தது என்று எண்ணிக் கொண்டவன் அதை பிறகு கவனிக்கலாம் என்று விட்டுவிட்டான்.

 

 

“செபா அந்த பொண்ணு மனோவை எதுக்கு எங்க டீம்ல போட்ட

 

 

“அதை பத்தி உனக்கென்ன அதை டிசைட் பண்ண வேண்டியது நான் என்றான் அவன் காட்டமாக.

 

 

“என்னமோ பண்ணிட்டு போ, ஆனா அந்த பொண்ணை மித்துவோட மட்டும் சேர்க்காத எனக்கு பிடிக்கலை

 

 

“உனக்கு பிடிக்கலைன்னா அந்த பொண்ணை பிடிக்கலையா?? இல்லை மித்ராவையா??

 

 

“அந்த பொண்ணு கூட மித்ரா க்ளோஸ்ஆ இருக்கறது எனக்கு பிடிக்கலை

 

 

“அதுக்கு நான் என்ன பண்ணணும்ன்னு நீ நினைக்கிற??

 

 

“அதான் சொன்னேன்ல அவளை புதுசா வந்த அந்த வினீத் கூட சேர்த்திடு இல்லைன்னா சந்துரு பாலா இப்படி யாரு கூடாவச்சும் போய் கத்துக்க சொல்லு

 

 

“நான் என்ன செய்யணும்ன்னு நீ எனக்கு சொல்லாத என்று கடிந்தான் அவன்.

 

 

“ஏன் செபா எனக்காக எதுவும் செய்வேன்னு சொல்லுவ, அப்போ அதெல்லாம் சும்மாவா. எனக்காக இது கூட செய்ய மாட்டியா நீ என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“அஸ்வினி நீயும் நானும் ரிலேஷன் எல்லாம் இந்த ஆபீஸ்க்கு வெளியில, அங்க உனக்காக நான் எதுவும் செய்யறேன். ஆபீஸ் விஷயத்துல என் வேலை விஷயத்துல நான் என்ன செய்யணும்ன்னு நீ எனக்கு சொல்லாத

 

 

“போய் போய் உன் வேலைய பாரு என்று கோபமாய் பேசினான்.

 

 

அவளுக்கு அவன் கோபமெல்லாம் பெரிதே அல்ல என்பது போல் “அப்போ உன்னால எதுவும் பண்ண முடியாது அப்படி தானே. நான் என்ன பண்ணாலும் நீயும் எதுவும் கேட்க கூடாது ஓகே வா என்றாள்.

 

 

“ஏதாவது வில்லங்கமா செஞ்சு வைக்காதே அஸ்வினி. அப்புறம் எனக்கு பொல்லாத கோவம் வந்திரும். நான் தான் அந்த பொண்ணு மித்ராகிட்ட ட்ரைனிங் எடுத்துக்கட்டும்ன்னு விட்டேன்

 

 

“உனக்கு அதுல என்ன பெரிய கஷ்டம். இவ்வளவு பொசசிவ் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன் என்று முறைத்தான் அவன்.

 

 

“நீ தான் முடியாதுன்னு சொல்லிட்டல்ல விடு, சும்மா எனக்கு அட்வைஸ் பண்ணுற வேலை எல்லாம் வேண்டாம். அப்புறம் நீ ஏன் ரிலேஷன்னு நான் யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கல ஏன் மித்துக்கூட தெரியாது போதுமா என்று சிடுசிடுப்பாய் சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு எழுந்து சென்றுவிட்டாள்.

 

 

அவர்கள் பேசிய அனைத்தும் ஒன்று விடாமல் கேட்டுவிட்டாள் மித்ரா. தன் மீது இவ்வளவு பொசசிவ்வா அவளுக்கு என்று ஒருபுறம் பெருமையாக உணர்ந்தாலும் மறுகணமோ தோழியின் இந்த போக்கு அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது.

 

 

அத்தோடு அவள் நிற்கவில்லை என்ன நடந்ததோ தெரியவில்லை மறுநாள் அப்பெண் மனோவே செபாஸ்டியனிடம் சென்று வேறு டீமுக்கு மாற்ற சொல்லி கேட்டு வாங்கிக்கொண்டு மாறி சென்றே விட்டாள்.

 

 

அந்நேரம் மித்ராவிற்கு உள்ளே சுருக்கென்று இருந்த போதும் அவளால் தோழியை விட்டுக்கொடுக்க முடியவில்லை. அஸ்வினியும் எதுவுமே நடக்காதது போலவே இருந்தாள். மித்ராவும் விஷயம் அவளுக்கு தெரிந்ததாய் காட்டிக்கொள்ளவில்லை.

 

 

அது தான் தப்பாகி போயிற்று இன்று என்று உள்ளே தோன்றியது. அவளின் சில பிடிவாத குணம் பொசசிவ்னஸ் அனைத்தும் அறிந்தவள் அவள். அதனாலேயே சைதன்யன் பற்றி அவளிடம் கூற அவளுக்கு தயக்கம்.

 

 

சுஜி கூட அவளிடம் சொன்னாள் “இது ஒரு காரணம் என்று தான் சொல்லாமல் இருக்கியா?? உனக்கே இது சில்லியா தெரியலை மித்ரா. நீ சொல்லலைன்னா அவளுக்கு தெரியாமலே போய்டுமா என்றாள்.

 

 

“அவளுக்கு தெரியாம போய்டும்ன்னு நான் சொல்ல வரலை. என் மூலமா அவளுக்கு தெரிய வேணாம்ன்னு நினைக்கிறேன் என்றாள் தோழியிடம்.

 

 

ஏனோ மித்ராவால் அஸ்வினியின் போக்கை சில்லியாக எடுத்து கொள்ள முடியவில்லை. எதையதையோ யோசித்துக் கொண்டே மீண்டும் செபாஸ்டியன் ஏன் ஹனி என்று பதிந்து வைத்திருக்கிறான் என்று வந்து நின்றது அவளின் எண்ணம்.

 

 

ஒரு வேளை அவன் அஸ்வினியை விரும்புகிறானா, அப்படி இருந்திருந்தால் அவளிடம் இத்தனை நாளாய் சொல்லாமலா இருந்திருப்பான்.

 

 

இந்த அஸ்வினி வேறு போனில் பெண் குரல் கேட்டதும் பியான்சியா என்று கேட்டு வைக்கிறாள் இருவருக்குள்ளும் என்ன நடக்கிறது என்று யோசித்து மண்டை குழம்பினாள்.

 

 

இதுக்கு மேலே யோசிச்சா பைத்தியம் தான் பிடிக்கும் என்று எண்ணிக்கொண்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் அவள்.

 

 

இரவு வீட்டிற்கு வந்ததும் படுத்தால் தூக்கமே வரவில்லை அவளுக்கு. எப்போதடா விடியும் என்றிருந்தது. அருகில் படுத்திருந்த மது உறக்கத்தில் படுக்கையை நனைத்துவிட எழுந்து அவள் உடைமாற்றி படுக்க வைத்தாள்.எப்போது உறக்கம் வந்து அவளை ஆக்கிரமித்ததோ அறியாள். விடிந்து வெகு நேரம் வரை அன்று தான் உறங்கியிருந்தாள்.

 

 

மருமகளை எழுப்ப மகள் செல்லவும் மகேஸ்வரி அவளை தடுத்துவிட்டார். “பாவம் உங்கண்ணி ரெண்டு நாளா வேலை பார்த்திருக்க, இன்னைக்கு தான் அசந்து தூங்குறா

 

 

“அவ தூங்கட்டும் நீ வேணும்ன்னா காலேஜ்க்கு லீவ் போட்டு சமையலை பாரும்மா காவ்யா. நான் வேணா உட்கார்ந்திட்டே உனக்கு காய்கறி எல்லாம் அறிஞ்சு கொடுக்கறேன் என்றார் மகளிடம்.

 

 

“அம்மா எனக்கு இன்னைக்கு முக்கியமான எக்ஸாம் இருக்கும்மா. லீவ் எல்லாம் போட முடியாதும்மா. நான் வேணா இன்னைக்கு காலேஜ்லையே சாப்பிட்டுக்கறேன்

 

 

“சைலேஷ் காலேஜ் கான்டீன்ல சாப்பிட சொல்லிடுறேன். டிபன் மட்டும் செஞ்சிருக்கேன்ம்மா பார்த்துக்கோங்க என்றுவிட்டு அவள் கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

 

மித்ரா மெதுவாய் கண்விழித்தாள். சரியாக உறக்கமில்லாமல் இருந்ததில் கண்கள் எரிந்தது. கஷ்டப்பட்டு கண்ணை திறந்தாள். அவளருகில் இருந்த கைபேசி எடுத்து மணி பார்த்தவள் அலறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

 

 

ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது இந்நேரம் வரையா உறங்கியிருக்கிறோம் என்று எண்ணி வெட்கி அவசர அவசரமாய் குளித்து வெளியில் வந்தாள். கட்டிலில் மது இல்லை எழுந்து வெளியே சென்றுவிட்டாள் போலும்.

 

 

பதினோரு மணிக்கு சைதன்யன் சென்னை வந்துவிடுவானே அதற்குள் விமான நிலையம் செல்ல வேண்டும் சமைக்க வேண்டும் அய்யோவென்றிருந்தது அவளுக்கு.

 

 

அவள் வெளியில் வரவும் அவள் மாமியார் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தார். “சாரி அத்தை நைட் தூங்க ரொம்ப லேட் அதான் லேட்டாகிடுச்சு என்று குற்றவுணர்வாய் அவரை பார்த்தாள்.

 

 

“தெரியும்மா அதான் உன்னை தொல்லை பண்ண வேண்டாம் சொல்லிட்டேன் காவ்யாகிட்ட. அவங்க ரெண்டு பேரும் காலேஜ் கிளம்பிட்டாங்க

 

 

“காவ்யா டிபன் பண்ணிவைச்சுட்டா. மதியத்துக்கு தான் ஒண்ணும் செய்யலை. என்னால கொஞ்சம் நிக்க முடிஞ்சா நானே செஞ்சிருப்பேன். பேசாம மதிய சாப்பாடு வெளிய வாங்கிக்கலாம் என்றார்.

 

 

“இல்லை அத்தை அதெல்லாம் வேணாம். நான் பக்கத்துவீட்டு அக்காகிட்ட சொல்லி சிக்கன் வாங்கிட்டு வந்து வைக்க சொல்றேன். இப்போ ஏர்போர்ட் போய் அவரை கூட்டிட்டு வந்து அப்புறம் நான் செஞ்சிக்கறேன் அத்தை என்றாள்.

 

 

“ஆமா நெல்லூர்ல இருந்து நேரா பிளைட்டு புடிச்சு வாரானா??

 

 

“இல்லை அத்தை இவங்க ரெண்டு நாள் முன்ன ஹைதராபாத்க்குஏதோ வேலையா போய் இருக்காங்க. இப்போ அங்க இருந்து தான் வர்றேன்னு சொன்னாங்க. நான் மதுவை கூட்டிட்டு கிளம்பறேன் அத்தை என்றாள்.

 

 

பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்த மதுவை அழைத்து வந்து குளிப்பாட்டி உடைமாற்றி அவளையும் அழைத்துக்கொண்டு விமான நிலையம் சென்றாள்.

 

 

அவள் சென்று இறங்கவும் சைதன்யன் அவளுக்கு போன் செய்யவும் சரியாக இருந்தது. “ஹலோ சொல்லுங்க வந்தாச்சா என்றாள்.

 

 

“நான் இப்போ தான் இறங்கினேன். நீ எங்க இருக்க?? என்றான்.

 

 

“நான் வெளிய என்ட்ரன்ஸ்கிட்ட இருக்கேன். உள்ள தான் வந்திட்டு இருக்கேன் என்றாள்

 

 

“சரி சரி வா நான் அதுக்குள்ளே லக்கேஜ் எடுத்திட்டு வந்திடறேன் என்றுவிட்டு போனை வைத்தான்.

 

 

மித்ரா வாயிலில் நுழைந்து உள்ளே சென்றவளின் கால்கள் அப்படியே அங்கேயே ஆணியடித்து போல் நின்றுவிட்டது. அங்கு அஸ்வினி அவள் கணவனின் கையை பிடித்து ஏதோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

 

மித்ராவிற்கு தூக்கி வாரிப்போட்டது. சட்டென்று அவர்கள் கண்ணில் படாதவாறு நின்றுகொண்டாள். அவர்களை நோக்கி செல்ல வேண்டும் என்று தோன்றிய மனதை அடக்கினாள். அழுகையாக வந்தது அவளுக்கு.

 

 

உள்ளே சைதன்யனை கண்ட அஸ்வினி “ஹேய் சைத்து நீங்களா!! நிஜமாவே நீங்க தானா!! உங்களை இங்க பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலை. இன்னமும் அவன் டிரைவர் என்ற நினைப்பினிலே “ஆமா இங்க யாரைச்சும் வழியனுப்ப வந்தீங்களா?? என்றாள் கேள்வியாய். அந்த கேள்வியே அவனுக்கு கோபத்தை கொடுத்தது.

 

 

“ஏன் வழியனுப்ப தான் வந்திருக்கணுமா?? பேசஞ்சரா வந்திருக்க மாட்டேனா என்று திருப்பிக் கொடுத்தான் அவன்.

 

 

“நீங்க பிளைட்ல எல்லாம் போவீங்களா என்ற பேச்சில் இவனெல்லாம் எங்கே போயிருக்க போகிறான் என்ற திமிர் இருந்தது. சைதன்யன் பதிலேதும் சொல்லாமல் யாரையோ தேடும் பாவனையில் இருந்தான்.

 

 

“சைத்து நான் கேட்டுட்டே இருக்கேன், பதிலே சொல்ல மாட்டேங்கறீங்க. உங்க பாஸ் ஊருக்கு போகும்போதுஉங்களையும் கூட்டிட்டு போனாரா என்று கேட்கவும் அவனுக்கு அவளை ஓங்கி சப்பென்று அறைய வேண்டும் போல இருந்தது.

 

இதில் அவள் அவன் கையை வேறு பிடித்திருந்தது இன்னும் கோபம் வந்தது அவனுக்கு. ‘இந்த மித்ரா எங்க போனா என்று வேறு கோபம் வந்தது அவனுக்கு.

 

 

இவ நேரத்துக்கு வந்திருந்தா இவகிட்ட மாட்டியிருக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு “உங்களுக்கும் எனக்கும் தான் எதுவுமில்லையே எதுக்கு இப்போ இதெல்லாம் என்கிட்ட கேட்கறீங்க என்றுவிட்டு நகரப்போனான் அவன்.

 

 

“சைத்து ப்ளீஸ் அப்படிலாம் பேசாதீங்க. அன்னைக்கு நான் பண்ண முட்டாள்த்தனத்தை திரும்பவும் செய்ய மாட்டேன். என்னை நம்புங்க, நாம நெறைய பேசணும் ப்ளீஸ்

 

 

“உங்க நம்பர் கொடுங்க. நான் இப்போ பெங்களூர் போயிட்டு இருக்கேன், அனௌன்ஸ்மென்ட் வேற வந்திடுச்சு, ப்ளீஸ் என்றாள்.

 

 

“எனக்கு உங்க கூட எதுவும் பேச வேண்டாம். கொஞ்சம் வழிவிடுங்க நான் கிளம்பறேன் என்றான்.

 

 

“சைத்து கோவப்படாதீங்க ப்ளீஸ் என்று அவனை அப்புறம் இப்புறம் நகரவிடாமல் நிற்க சைதன்யனுக்கு எரிச்சலாய் வந்தது. அவனுடனே அவன் அலுவலக ஊழியர் ஒருவரும் உடன் வந்திருந்தார்.

 

 

எதற்கு இங்கு எல்லோருக்கும் காட்சி பொருளாய் நிற்க வேண்டும் என்று எண்ணியவன் அவன் எண்ணை அவளிடம் கொடுத்துவிட்டு அவளை திரும்பியும் பாராமல் நகர்ந்தான்.

 

 

ஏனோ உள்ளுக்குள் மித்ரா வந்துவிட்டாள் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. எப்போதோ உள்ளே வந்துக் கொண்டிருப்பதாக சொன்னவள் இன்னமும் வந்து சேராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

 

 

அவன் வெளியில் வரவும் மித்ரா வாயிலில் இருந்து நகரவும் சரியாக இருந்தது. எட்டி அவள் கையை பிடித்தான், யாரோவென்று பயந்து அவள் திரும்பி பார்க்க சைதன்யன் நின்றிருந்தான்….

Advertisement