ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான்.
வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.. அவர்களோடு பேசிக் கொண்டே இருந்தார், மற்றபடி எழுந்து.. பெண் மாப்பிள்ளையை பார்க்கவில்லை.
லேகா, பெரியவர்கள் எல்லோரையும் உண்ண அழைத்துக் கொண்டிருந்தாள்.. அப்போது, இயல்பாக வசந்தி ஷிவா பக்கம் வந்தவள்.. “வாங்க அத்தை சாப்பிடலாம்.. மாமா போயிருக்காங்க, நீங்களும் போய் சேர்ந்து சாப்பிடுங்க அத்தை” என்றாள்.
வசந்தி புன்னகைத்து.. மகனிடம் புகார் சொன்னார் “ஷிவா, மருமகளோட டெய்லி உங்க அப்பா பேசிடுவார் டா.. என்ன சமையல்.. நேரத்திற்கு தூங்கும்மா.. என மருமகள் மேல் அக்கறை நிறைய ஆகிடுச்சி.. நீ தினமும் பேசுறீயா என்னமோ.. இவர் பேசிடுறார்.. நீ பேசும் போதாவது என்னையும் கவனிக்க் சொல்லுடா லேகாகிட்ட” என்றார் ஆனந்தமாக.
ஷிவா, அவள் வந்து நின்றது முதல்.. லேகாவை பார்த்துக் கொண்டிருந்தான். அமைதியாக தன்னை பார்க்காமல், தன் அன்னையை பார்த்துக் கொண்டிருந்தாள் வீம்பாக. இந்த ஒருவாரமாக.. ஷிவா.. லேகாவோடு தினமும் பேசுகிறான். அதில் கொஞ்சம் புரிதல் வந்திருந்தது.
அதனாலோ என்னமோ, ஷிவா புன்னகையோடும்.. அன்னை சொன்னதை கேட்டுக் கொண்டானே தவிர ஏதும் பேசவில்லை.
லேகாவிற்கு, ஷிவா.. வந்து இப்படி தள்ளி அமருவான் என எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால், பெரிய ஏமாற்றம் அவளுக்கு.
லேகா இப்போது “அத்தை, அவர் சொன்னால்தான் உங்களை நான் கவனிப்பேனா.. நீங்க வாங்க அத்தை சாப்பிட போலாம்” என்றவள், ஷிவாவை கண்டுக் கொள்ளாமல் சென்றாள், தன் வருங்கால மாமியாரின் கையை பிடித்துக் கொண்டு.
ஷிவா பார்வை.. அவளின் பேச்சிலும் சைகையிலும் கொஞ்சம் அசந்து போனது. முதல்முறை பார்க்கிறாள்.. என்னை பார்த்து சிரிக்கவேயில்லை.. திரும்பி பார்ப்பாளோ.. என எண்ணி.. நின்றிருந்தான்.
ம்கூம்.. லேகா, திரும்பி பார்க்கவில்லை. அத்தனைக் கோவம் அவளுக்கு.. அதென்ன என்னை பார்க்கவே வரவில்லை.. என் தந்தையிடம் வந்து பேசவில்லை.. சந்துருவிடம் சரியாக பேசவில்லை.. என கழுத்துவரை பிடித்திருப்பவன் மேல்.. முதல்முறை தெளிவாக ஒரு சிந்தனை வந்தது.
ஷிவா, அவள் தன் கண்களுக்கு மறையும் வரை பார்த்திருந்தவன்.. கிர்ஷ் ‘போன்..’ என அலைபேசியை நீட்டவும், யாரென பார்த்து வாங்கி பேசினான்.
ஷிவா பத்துநிமிடம் சென்று லேகாவை தேடி வந்தான்.. டைன்னிங் ஹாலுக்கு உள் செல்லாமல்.. வாசலில் நின்றே போனில், அவளுக்கு அழைத்தான்.
லேகா, அழைப்பினை ஏற்று.. சின்ன குரலில் ‘என்ன’ என்றாள்.
இரு விரல்களை மட்டும் நீட்டி.. வா என்பதாக அழைத்தான்.
லேகா, தன் பாட்டியோடும்.. அருகில் இருக்கும் தன் மாமனாரோடும் பேசிக் கொண்டிருக்க.. ‘இருங்கள்’ என போனில் சொல்லி.. அழைப்பினை துண்டித்துவிட்டு, மீண்டும் பெரியவர்களிடம் பேச்சினை தொடர்ந்தாள்.
ஷிவாவிற்கு, என்ன இது என தோன்ற.. ‘விடமாட்டேன்’ என அவளின் அருகில் வந்தான்.
லேகா அவன் வரவை உணர்ந்து “வாங்க ஷிவா..” என சொல்லிவிட்டு உண்டுக் கொண்டிருந்த தன் பாட்டியிடம் “பாட்டி.. ஷிவா, தீஷிதாவோடு அண்ணன்..” என அறிமுகம் செய்தாள், சத்தமாக. பாட்டிக்கு காது அவ்வளவாக கேட்க்காது அதனால்.
பாட்டி “அத சொல்லுடி முதலில்.. தீக்ஷிதாவோட அண்ணனாம்” என பகடி பேசினார்.. எல்லோரும் புன்னகைத்தனர். பின் பாட்டி “பேர பையனே எப்படி இருக்க..” என்றார் கண்ணாடியை நன்றாக மூக்குமேல் ஏற்றிவிட்டுக் கொண்டு.
ஷிவா லேகாவின் வெட்கம் பார்த்துக் கொண்டே பாட்டியிடம் “நல்லா இருக்கேன் பாட்டி.. சாப்பிட்டு வாங்க பேசலாம்” என்றான்.
“பேரென்ன பா” என்றார், பாட்டி காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு.
“ஷிவா” என்றான் சத்தமாக.
வடிவேல் வசந்தி இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்..
ஷிவா, இப்போது அவளின் கையை பற்றிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். சில்லென்ற விரல்கள்.. இதமாக இருந்தது அவனுக்கு.
ஷிவாவிடமிருந்து கண்களை அகற்றி.. தன் தம்பியை தேடினாள் பெண். சரியாக ஒரு சேரில் அமர்ந்தவாறே.. சந்துருவும் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.. பார்வையில் கோவமும்.. எரிச்சலும்தான் இருந்தது.
இப்போது ஷிவாவின் கையை இறுக பற்றினாள் பெண்.. ஷிவா அதை உணர்ந்து.. பெண்ணவளை பார்த்தான்.. அவளின் பார்வை சந்துருவிடம் இருக்க.. ஷிவா இன்னமும் மும்முரமாக பேச தொடங்கினான்.
இருவரும் வெளியே வந்தனர். லேகாவிற்கு, சந்துருவிடம் ஷிவா பேச வேண்டும் என எண்ணம்.. சந்துருவும் எழுந்து வரவில்லை. பெண்ணவள் ஷிவாவை பார்க்க.. ஷிவா, அவளின் கையை விட்டான்.
“நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன்.. எனக்கு கொஞ்ச நேரம்தான் இருக்கு.. நான் சூரத் போகனும்.. நீ எதோ பொம்மை போல.. என்னை எல்லோர் எதிரிலும் நிக்க வைச்சிட்டே இருக்க..” என சொல்லி நேராக உண்பதற்காக சென்று அமர்ந்துக் கொண்டான். அவன் இப்படி பழக்கப்பட்டவன் அல்லன்.
அவளிடம் கோவம் வரவில்லை என்றாலும்.. அவனின் பொறுமையின் அளவு குறைவுதான் எப்போதும், இன்று அதிகமாகவே இருந்தது. ஆனாலும், அதற்குமேல் முடியவில்லை. இலை.. போடப்பட.. ஷிவா “கிரிஷ்” என தன் உதவியாளனை உண்பதற்கு அழைத்தவாறே, தன் டார்க்ப்ளூ நிற சார்ட்டின்.. முழுக்கை சட்டையை.. முழங்கை வரை ஏற்றிவிட்டுக் கொண்டு.. அமர்ந்தான் உண்பதற்கு.
லேகா, வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்போது, வடிவேலுவும் சுந்தரமும், தீக்ஷி சந்துருவை உண்பதற்கு அழைத்து வந்து அமர வைத்தனர்.
சந்துரு, அப்போதுதான் லேகாவை கவனித்தவன்.. எழுந்து சென்று.. “வா லேகா சாப்பிடலாம்..” என சொல்லி எழுப்பி கூட்டிக் கொண்டு வந்து தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
லேகா, ஏதும் பேசாமல்.. இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு உண்ணத் தொடங்கினாள்.
எல்லோரும் உண்டு முடித்தனர்.
ஷிவா, அன்னை தந்தை சித்தப்பா சித்தியிடம் விடைபெற்றான்.. அப்படியே தன் மாமனாரிடம் விடைபெற்றான்.. அவனின் கண்கள்.. அவளைத்தான் தேடிக் கொண்டிருந்தது. அவளை முதல்முறை பார்க்கிறேன் என கிப்ட் வாங்கி வந்திருந்தேன்.. என எண்ணிக் கொண்டே பொதுவாக “அவ..” என தலையை கோதிக் கொண்டு சொல்லிவிட்டு மீண்டும் ஹாலின் உள்ளே சென்றான்.
ரமேஷ் “லேகா.. அந்தபக்க ரூமில் இருக்கா மாப்பிள்ளை, இருங்க, நான் கூப்பிடுறேன்” என்றார்.
ஷிவா, நின்று திரும்பி.. திடமாக “இல்ல, நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி முன்னேறினான்.
ஒரே ஒரு அறை இருந்தது, அங்கேதான் இருந்தாள் பெண்.. கூடவே சந்துரு நின்றிருந்தான்.. அவளின் கைகளை பிடித்துக் கொண்டு.
சந்துரு, ஷிவாவை பார்த்ததும்.. லேகாவைதான் பார்க்க வந்திருக்கிறான் என உணர்ந்து.. அவளிடமிருந்து விலகி.. நடக்க.
ஷிவா இப்போது “ஹாய் சந்துரு..” என்றான்.. பின் “நீங்க பிசியா இருந்தீங்க..” என்றான்.
சந்துரு “அஹா.. வரேன்” என சொல்லி தலையை கோதிக் கொண்டே கிளம்பினான் வெளியே.
ஷிவா, அவன் சென்றதும்.. கதவை சற்றிவிட்டு, அத்தனை கோவமாக தன்னவளின் அருகில் நின்றான்.. மிக நெருக்கமாக. அவள் தன்னை டாமினேட் செய்வதாக எண்ணம்வர.. ஒருகோவம் கிளர்ந்தெழ.. “என்னதான் உன் பிரச்சனை.. அதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல.” என்றான்.
லேகா நிமிர்ந்து “என்ன சரியாகிடுச்சி.. சந்துரு சரியாகவேயில்ல.. அவன் முகமே சரியில்ல.. என்ன சொன்னீங்க அவன்கிட்ட” என்றாள்.
ஷிவாவின் கோவமான முகம் சட்டென தளர்ந்து “நான் என்ன சொன்னேன்.. சின்ன பையனா அவர்.. அதெல்லாம் அவர் பார்த்துப்பார். என் தங்கிச்சி பார்த்துப்பா” என்றான்.. புன்னகையோடு.
லேகா “யாரு தீக்ஷியா..” என்றாள் கிண்டலாக. அவளின் கண்களும் உதடுகளும் நளினமாக அசைய.. காதலன் எதையும் சிந்தியாமல்.. அதில் தொலைந்தான். இன்னமும் அவளை நெருங்கினான்.. லேகா அனிச்சையாய் பின்னால் நகர.. சுவர்தான் அவளை நிறுத்தியது.
ஷிவா, அந்த சுவரில் கைகளை ஊன்றி.. அவளை இன்னமும் ரசித்தான். நீண்ட கண்கள்.. சின்ன சிவப்பு நிற பொட்டு.. கூர்நாசி அதில் சின்ன முத்து மூக்குத்தி.. நீண்டசங்கு கழுத்து.. என அவனின் பார்வை சுதந்திரமாக அவளை ஆராய.. பெண்ணவளின் கண்கள் வெட்கத்தில் தாழ்ந்து போக.. ஷிவா.. அவளின் முகவாய் தொட்டு நிமிர்த்தி “ரொம்ப அழகா இருக்க” என்றான் ரசனையாக.
லேகாவின் கன்னம் சட்டென வெம்மையை பூசிக் கொள்ள.. பெண்ணவள்.. பக்கவாட்டில் திரும்பவென எத்தனிக்க.. அவளின் மென் இடையை அவனின் வலிமையான கைகள்தான் தாங்கியது.. ரகசிய குரலில் “நீ இவ்வளோ அழகா இருப்பன்னு தெரியாமலே ஒரு கிப்ட் வாங்கியிருக்கேன்.. “ என சொல்லி.. அவளின் மூக்குத்தியை தன் சுட்டுவிரலில் லேசாக தொட்டு வட்டமிட்டான் மூக்கில்.
லேகாவின், மூச்சுகாற்று.. அவனுடைய வட்டத்திற்கு ஏற்ப.. சுழல தொடங்கியது.. லேகா, மயங்கிக் கொண்டிருந்தாள்.. அவனின் பேச்சில்.. நெருக்கத்தில்.. வாசத்தில் என சகலத்திலும்.. இருவரும் மயங்கிக் கொண்டிருந்தனர். குளிர் அறை.. வெட்பம் கொண்டது இப்போது.
கிரிஷ் “சர்..” என சொல்லி கதவினை தட்டினான், சரியாக.
லேகா, மேல்மூச்சு வாங்க.. சட்டென தள்ளி சென்று நின்றுக் கொண்டாள்.. வெட்கத்தோடு.
ஷிவா, கதவை திறந்து கிரிஷ் கொடுத்த கிப்ட் வாங்கிக் கொண்டு.. கதவை மீண்டும் சற்றுவிட்டு.. தன்னவளிடம் வந்தான்.
கரகரப்பான குரலில் மென்மையாக “போட்டோவில் பார்த்தேன்.. நீ மூக்குத்தியோட இருந்தியா, அதான்” என சொல்லி.. ஒரு பாக்ஸ் எடுத்து திறந்து காட்டினான்.. வகை வகையாக மூக்குத்திகள். முத்து பவளம்.. ஒற்றை கல்.. டைமென்ட் என பலவிதமாக.. ரசனையோடு இருந்தது.. ஒருடசன் மூக்குத்திகள்.
லேகா, திணறித்தான் போனாள் இந்த அன்பில்.
ஷிவா “தினமும் ஒன்னு..” என்றான் ரகசிய குரலில். இருவருக்கும் நிறைய பேச இருந்தாலும் பேசவில்லை.. நேரமில்லை.
ஷிவா அவளை சொல்லாமல் கொள்ளாமல் வேகமாக அணைத்து.. “நான் போகனும்.. நெக்ஸ்ட் வீக்.. பார்க்கலாம் பைய்” என்றான்.
லேகாவிற்கு.. என்ன நடக்கிறது என புரியவில்லை.. அவனின் ஆளுகைக்கு கட்டுண்டவள்.. அப்படியே மௌனமாக தலையசைத்தாள்.