லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக.
லேகா “சரி திக்ஷி” என சொல்லி அழைப்பினை துண்டித்தாள். அப்படியே தம்பியிடம் “திக்ஷி.. ‘லா’ படிக்கிறாள், சென்னையில்தான் இருக்கிறாளாம். தனி வீடு.. கூடவே ஆட்கள் இருக்காங்களாம். தரமணியிலிருந்து தூரமாம், அதனால், தனியாதான் இருக்காளாம். இபோதுதான் பர்ஸ்ட் இயர்.. இங்கபார்” என சொல்லி.. அவளின் போட்டோவை காட்டினாள்.
சந்துரு ஸரத்தையே இல்லாமல் பார்த்தான்.. ஆனால், எதோ ஈர்த்தது.. லாங்ஷார்ட் போட்டோ.. சின்னபெண்தான் என பார்த்ததும் தெரிந்தது. உயரம் கண் காது மூக்கு எல்லாம் அவ்வளவாக தெரியவில்லை. சந்துருவிற்கு ஒரு ஐடியல் இமேஜ் போல எடுத்துக் கொண்டான்.. மனம் ‘இன்னொருமுறை நன்றாக பார்க்க வேண்டும் எப்படிதான் இருப்பாள்.. கண்களை பார்த்தால் தெரிந்திடும்.. எனக்கு ஒத்துவருவாளா மாட்டாளா என’ என ஓடியது சிந்தனை.
லேகா “எதையும் ரொம்ப யோசிக்காத டா.. யாரோ எப்படியோ இருந்துட்டு போறாங்க.. அது நம்ம கண்ட்ரோலில் இல்லையே டா.. சொந்தம் பணம் இதெல்லாம் தனியாக வைச்சிட்டு.. அவளை பாரு.. மனசு சொல்லும் பிடிக்குது.. இல்ல, வேண்டாம்ன்னு.. அதை கேளு.. போதும். உண்மையா நீ என்ன பதில் சொன்னாலும் எனக்கு ஓகேதான்.” என்றாள் ஆழமான குரலில்.
சந்துரு எப்போதும் போல லேகாவின் வார்த்தைகளை மறுத்து பேசவில்லை. லேகா, இப்படிதான் மனதின் பேச்சினை கேட்பாள். அது பலநேரம் தவறாகி கூட இருக்கலாம்.. சரியாக இருந்த தருணங்களும் உண்டு. ஜெகாந்தன் சொல்லுவது போல.. அந்தந்த நேரத்து ஞாயம்தான்.
பின் இருவருக்குள்ளும் ஒரு அமைதி.. வேலைகள் நடந்தது.
அவர்களின் தந்தை வந்தார்.
மூவரும் அன்று நடந்ததை பேசினர். ரமேஷ் “எல்லாம் சொந்தம்தானே டா.. நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து இருந்தால்.. நல்லதுதானே. மற்றபடி உன் திருமணம் உன் விருப்பம்தான்.” என்றார்.
சந்துரு “அப்போ.. நான் வேண்டாம்ன்னு சொல்லும் போதே விட்டிருக்கணும்.. இப்போ.. இவ்வளவு பேசுறீங்க.. ரெண்டுபேரும் ஒன்னாவே இருங்கன்னு.. அந்த பொண்ணுகிட்ட பேசுங்குறீங்க.. என்ன பார்த்தால் அக்ஹா துக்ஹா மாதிரி தெரியுதா” என்றான் இலகுவாகி.
ரமேஷ் “நீ ஏன் டா, சமைக்கிற.. வேலைக்கு ஆட்கள் வைக்க சொல்லு.. பொண்ணுக்குன்ன எல்லாம் செய்வாங்க அங்க, வேலை வாங்க தெரியும்னும்.. அப்புறம் ரெண்டுபேருக்கும் ஒன்னு சொல்றேன்.” என்றார் பீடிகையோடு.
சந்துரு ‘ம்.. இதைதான் எதிர்பார்த்தேன்’ என எண்ணிக் கொண்டு பரபரப்பானான்.
ரமேஷ் “உங்கள் பார்ட்னர்ஸ் உங்ககூட இருக்கும்வரைதான் அங்கே மரியாதை. அப்புறம், பணம் சொத்து எல்லாவற்றிலும்.. உங்களுக்கும் சமபங்கு இருக்கு.. தைரியமா போங்க.. உங்க அம்மா பிறந்தவீடு அது ஞாபகம் இருக்கட்டும்..” என்றார்.
சந்துரு “ஏன் ப்பா.. அன்று என்ன சொன்னார் வடிவேல் மாமா” என்றான் இதுதான் நேரம் என.
ரமேஷ் “உனக்கு இந்த திருமணத்தில் என்ன முடிவுன்னு சொல்லு நான் சொல்றேன்” என்றார்.
சந்துரு “நீங்கள் சொன்னால்தானே, நான் முடிவே எடுக்க முடியும்” என்றான்.
ரமேஷ் “அது பெரிய குடும்பம் சந்துரு.. அதில் நிறைய இருக்கு. ஆனால், திருமணம் என்பது அன்பினை கொண்டு.. முடிவெடு. லேகாவிற்கு பிடித்தம் இருக்கு.. உனக்கு என்னான்னு தெரியலை. நீ பெண்ணை பாரு.. பிடிச்சிருக்கு சொல்லு, இல்லை வேண்டாம்ன்னு சொல்லு.. அதன்பிறகு, பார்த்துக்கலாம். நீ இதெல்லாம் கேட்டுதான் முடிவெடுப்பான்னா.. மேரேஜ் ப்ராஜெக்ட் இல்ல ப்பா..” என்றார்.
ரமேஷ் “அஹ.. அதான் அன்பு. அந்த சொத்தினை ஒரு கேஸ் போட்டு எனக்கோ அவளுக்கோ கேட்க்க தெரியாதா.. எங்கள் வசதிக்காக. ஆனால், கேட்கவில்லை.. உங்க அம்மா அதை விரும்பலை.. நானும்தான். அத்தோட.. அவள் எப்படி வாழ்ந்தா தெரியுமா, எனக்காக.. சின்ன வீட்டில் வந்து கஷ்ட்டபட்டா.. நாங்க அதில் சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம். கார் வேண்டும்ன்னு கேட்க்கலை.. பணம் வேணும்ன்னு கேட்க்கலை.. ஹம்சா. அதேமாதிரி நீங்க இருக்கணும்.. பார்ட்னரை பிடித்திருந்தால்.. எதுவும் செய்வீங்க” என்றார்.
சந்துரு “மோட்டிவேஷன் சூப்பர்.. டாட், உங்க வாழ்க்கை உங்க தத்துவம்.. எனக்கு செட் ஆகும்ன்னு தோணலை..” என சொல்லி எழுந்து சென்றான்.
பின் தந்தையும் மகளும் அமைதியாக அமர்ந்து அம்மாவின் கதை பேசிக் கொண்டிருந்தனர்.
இன்று உண்டு உறங்கி என நாள் முடிந்தது.
மறுநாள் ஞாயிறு.. மூவரும் வீட்டினை கவனித்து.. சமைத்து.. ஏதேதோ செய்துக் கொண்டிருந்தனர். அவ்வபோது சந்துரு, தந்தையிடம் என்ன பேசுனீங்கன்னு சொல்லமாட்டீங்கல்ல.. என வம்பிழுத்தான்.
மதிய உணவு நேரத்தில் திக்ஷி மெசேஜ் செய்திருந்தாள்.. “வீடியோ கால் பண்ணவா” என.
லேகா.. தந்தையிடம் சொன்னாள்.
ரமேஷ் “சின்ன பெண்தானே ம்மா.. இன்னமும் சந்துருவை பார்த்தைல்லைல்ல.. நீ போய் அவன்கிட்ட சொல்லு.. ரெடியாக சொல்லு’” என்றார்.
லேகா அப்படியே செய்தாள்.
அரைமணி நேரத்தில் லேகா, வீடியோ கால் செய்தாள்.. விளம்பரங்களில் வருவது போல ஒல்லியாக.. பளிச்சென இருந்தாள் திக்ஷிதா.
பீச் நிற.. குர்த்தா.. கண்களுக்கே தெரியாத தோடு.. கழுத்தினை ஒட்டி மெலிதான செயின்.. மின்னியது.. ஒற்றை வைரடாலரோடு.. சின்ன சின்ன கண்கள்.. சின்ன மூக்கு.. சொப்பு உதடுகள் என… சின்ன பெண்ணாகவே இருந்தாள். லேகாவை பார்த்ததும் “ஹாய்” என கையசைத்தாள்..
லேகா, நலம் விசாரித்து என்ன படிக்கிற.. சாப்பிட்டியா என பொதுவாக பேசினாள். பின் தன் தந்தையை அறிமுகம் செய்தாள்.. அதிரவெல்லாம் இல்லை சின்ன பெண்.. “ரமேஷ் மாமாதானே.. வேலு டாட் சொல்லியிருக்காங்க.. என சொல்லி நலம் விசாரித்தாள். அவரும் இரண்டொரு வார்த்தை பேசினார்.
பின் லேகா.. மேலே சந்துருவிடம்.. போனினை கொடுத்தாள்.
திக்ஷி கண்ணில் கூட எந்த அதிர்வும் காட்டாமல் “ஹாய் ங்க” என்றாள். சந்துருவை பார்த்து.
லேகா போனினை கொடுத்துவிட்டு.. ‘பேசு’ என சைகை செய்துவிட்டு.. கதவினை சாற்றிக் கொண்டு கீழே வந்தாள்.
சந்துரு, அவள் ஹாய் சொன்னதற்கு ஏதும் சொல்லவில்லை.. முதலில் ஆராய்ச்சியாக அப்பட்டமாக பார்த்தான்.. “போட்டோவில் ஹைட்டா இருந்தார் போல இருந்தது” என்றான். அவனுக்கு சந்தேகம் தீரவேயில்லை.. பெண்ணினை பார்த்தும் அந்த ஆராய்ச்சி அதிகமாகியது.. ஏதும் குறையோ என.
திக்ஷி, போனை டீபாய்மேல் வைத்துவிட்டு.. தள்ளி சென்று நின்று.. ப்ளூடூத் வழியாக.. “5.4 என் ஹைட்.. நீங்க எவ்வளோ ஹைட்” என்றாள். அழகாக இருந்தாள்.. பொம்மை போல.. என எண்ணிக் கொண்டான்.
சந்துரு “ம்.. 5.11” என்றான்.
“ம்.. சரியாகத்தானே இருக்கும்” என்றாள்.
சந்துருவிற்கு அனிச்சயாய் ஒரு புன்னகை வந்தது.. “அதுமட்டும் போதுமா” என்றான்.
பெண்ணவள் “எனக்கு என்ன தெரியும்.. வேற என்ன வேண்டும்ன்னு.. நீங்கதானே கல்யாணம் செய்துக்க போறீங்க.. உங்களுக்குத்தான் தெரியனும்..” என்றாள்.
சந்துரு “அப்போ நீ என்ன சன்யாசமா போற..” என்றான்.
பெண்ணவள் விழித்தாள்.. “என்ன” என.
சந்துரு “உனக்கு என்ன வேண்டும்.. இந்த கல்யாணத்தில்..” என்றான்.
திக்ஷி இப்போது அமைதியானாள்.. ரகசியமாக “டாட்.. என்னை லண்டன் கூட்டிட்டு போறேன்னு சொன்னார்..” என்றாள், புன்னகை கூட இல்லாமல்.
என்ன சொல்லுவது என தெரியாமல் வாயடைத்து போனான்.. ‘டேய்.. என் வாழ்க்கையை ஒரு லண்டல் ட்ரிப்’பில் முடிச்சிட்டீங்களே டா’ என எண்ணிக் கொண்டான்.
பெண்ணவள் “என்னை பிடிக்கலையா..” என்றாள், சட்டென.
சந்துரு, இமைக்கவில்லை இப்போது..
பெண்ணவள் “என்னாச்சு..” என்றாள்.
சந்துரு “பிடிக்கலைன்னு இல்ல.. ஆனால், நீ டூர் போக, நான் உன்னை கட்டிக்கனுமான்னு இருக்கு” என்றான் விளையாட்டாக.
பெண்ணவள் “ஹோ.. நீங்க யோச்சிச்சு.. அப்பாகிட்ட பேசுங்க. நான் பிரெண்ட்ஸ் கூட மூவி போறேன், டைம் ஆச்சு.. அப்பா பேசிட்டு போக சொன்னார்.. டைம் ஆச்சு.. கிளம்புகிறேன்.. பை..” என்றாள்.
சந்துரு “எனக்கு இன்னும் டீடைல்ஸ் தேவை.. நைட் வந்து கூப்பிடு” என்றான்.