லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.
ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும் சொல்லமுடியாமல் திணறினாள்.
அவரும் விடாமல் “சந்துரு, திக்ஷிகிட்ட பேசினானாம்மா..” என்றார்.
அதற்கும் சமாளித்தாள் “அவன் கொஞ்சம் பிசி மாமா.. அதான் வீகென்ட் வரட்டும்.. அவனுக்கும் திக்ஷிக்கும் சின்ன இன்ட்ரோ கொடுத்து பேச சொல்லணும்.. அவன் கொஞ்சம் ஷையாக பீல் பண்ணுவான். பேசுவான் மாமா” என்றாள்.
வார வெள்ளி இரவே.. வீடு வந்தான் சந்துரு. சரியாக பேசவில்லை லேகா. சந்துரு வந்து வந்து பேசி பார்த்தான் லேகுவிடம் அவளோ கொஞ்சம் பிகு செய்தாள்.
சந்துருவிற்கும் எரிச்சலாக போடி.. என போய் மேலே தனதறையில் அமர்ந்துக் கொண்டான்.
காலையில் லேகு கடைக்கு சென்றுவிட்டாள்.
மதியம் வந்தாள்.. உணவு உண்ணப்பாடாமல் இருக்க.. தம்பிக்கு போனில் அழைத்து “கீழ வா சாப்பிடலாம்” என்றாள்.
சந்துரு சண்டையை வளர்க்க விரும்பாமல்.. கீழே வந்தான்.
லேகா அமர்ந்திருந்தாள்.. சந்துரு “என்ன கடையில் வேலை ஜாஸ்தி போல.. என்ன டையர்டா இருக்க. கல்லா நிறைந்து வழியுது போல.. என்னையும் கொஞ்சம் கவனிக்கறது..” என்றான்.
லேகா அமைதியாக அவனுக்கு பரிமாறினாள்.. தானும் வைத்துக் கொண்டு உண்ணத் தொடங்கினாள்.. அவளுக்கு தெரிகிறது வம்பிழுக்கிறான் தம்பியென.
சந்துரு “சரி, நீ உன் கல்யாணத்துக்கு சேர்த்துக்கோ.. அப்புறம் என்ன சொல்றார் உன் மாமா” என்றான் விளையாட்டாகவேதான் கேட்க்கிறான்.. லேகுவை எப்படியாகினும் பேச வைத்திட வேண்டும் என விளையாடுகிறான்.
லேகா “உனக்கும் மாமாதான்” என்றாள்.. கோவமாக.
சந்துரு “வடிவேலனை சொல்லல.. உன் மாமாவை கேட்டேன்” என்றான்.
லேகா “நீ பேசாத டா.. அதான் எல்லாவற்றையும் முடித்துவிட்டுட்டியே.. போ.. நீ சந்தோஷமா இரு” என்றவள்.. கண் கலங்க.. தட்டோடு எழுந்தாள்.
சந்துரு “ஹேய்.. நில்லு லேகு.. இதுக்கு எதுக்கு அழற.. நான் என்ன கேட்டேன்.. ஷிவா நல்லா பழகுறாராதானே கேட்டேன்.” என தானும் எழுந்தான்.
லேகு “போடா.. பேசாத.. செய்வதெல்லாம் செய்துட்டு, வியாக்கானமா பேசுற.. அவருக்கு அவர் தங்கை பற்றி அக்கறை இருக்கு.. உனக்குத்தான் என்னை பற்றி எந்த அக்கறையும் இல்ல.. இதெல்லாம் எதுக்கு கேட்க்கிற நீ“ என்றாள்.
சந்துரு “என்ன லேகு..” என சொல்லி அருகில் வந்து.. “சாப்பிடு முதலில், பேசலாம்” என சொல்லி, தன்னோடு அமர வைத்துக் கொண்டான்.. அவளுக்கு தான் ஊட்டினான். லேகா கண்களை துடைத்துக் கொண்டு வாங்கிக் கொண்டாள்.
தன் உடன்பிறப்புக்கு தானும் ஊட்டினாள். இருவரும் அமைதியாகவே உண்டனர்.
பாத்திரங்களை சந்துரு எடுத்து கொடுக்க.. லேகா அதை துலக்கினாள். சந்துரு டேபிள் துடைத்து.. பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி என சின்ன சின்ன வேலைகளை செய்து அமர்ந்தான்.
லேகா, வேலை முடித்து வந்து அமர்ந்தாள்.
சந்துரு “என்னாச்சு” என்றான்.
லேகா “ஷிவா, வடிவேல் மாமா வந்தபோது.. ஊரில் இல்லை போல.. ரெண்டுநாள் கழிச்சிதான் பேசினார்.. ஆனால், திக்ஷிகிட்ட நீ பேசிட்டியான்னு கேட்டார்.. நான், உனக்கு திருமணத்தில் விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன் சொன்னேன். உடனே, அவரோடு பேச்சு நின்னுடுச்சி டா.. என் தங்கை கல்யாணம்தானே எனக்கு முக்கியம்.. அப்புறம் பேசறேன்னு வைச்சிட்டார்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை” என்றாள். குழப்பமாக.
சந்துருவிற்கு உற்சாகமானது “இரு இரு.. உடனே அழாத. அப்போ என்னமோ இருக்குதானே..” என்றான்.
லேகா “ம்.. அப்பாவும் வடிவேல் மாமாவும் அன்னிக்கு ரொம்பநேரம் தனியாக பேசினாங்கல்ல.. அப்பாவின் முகம் சரியாகவே இல்ல.. யோசனையாகதான் இருந்தது.” என்றாள்.
சந்துரு “என்னவாக இருக்கும்.. நம்ம ரெண்டுபேரையும் கேட்க்கிறார்கள்.. ஏதாவது தொழிலில் கடன் அதுஇதுன்னு இருக்கோமோ” என்றான்.
லேகா “கடன் இருந்தால் என்ன டா.. நமக்கு கூடத்தான் இருக்கு” என்றாள்.
சந்துரு “ஏய், லூசு.. நமக்கு இருப்பது சும்மா ஜூஜூப்பி. அதெல்லாம் மாசா மாசம் EMI கட்டக்கூட்டியது. ஆனால், அவன் தொழில் பற்றி தெரியுமா உனக்கு..” என்றான்.
லேகா முறைத்தாள்..
சந்துரு “வேலவன் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ். தேடிபாரு.. அதில் தெரியும் அவன் யாருன்னு. கடன்னா எத்தனை ஜெமம் எடுத்தாலும் அடையாது.. அவ்வளவு சொத்து வேணும்.. அப்படி இருக்கும்” என்றான்.
லேகாவிற்கு ஓரளவு புத்தியிருக்க “கடனாக இருந்தால்.. நம்மகிட்ட ஏன் உதவி கேட்க்க போறாங்க.. பணக்காரங்ககிட்டதானே உதவி கேட்ப்பாங்க. அப்போ, அதில்லதானே” என்றாள்.
சந்துரு “இல்லடி எதோ பிரச்சனை” என்றான்.
லேகா “அதான் என்னான்னு தெரியலையே.. நீ திக்ஷிகிட்ட பேசு.. பொண்ணுகிட்ட பிரச்சனை என்றால் அப்பா.. எப்படி உனக்கு பார்ப்பார்.. அவன் விருப்பம் என்பார்.. ஷிவாவை வேண்டாம்ன்னு சொல்ல என்ன பிரச்சனைன்னு சொல்லு.. சரியென்றால், நானும் வேண்டாம்ன்னு சொல்றேன். ஆனால், இப்போது அவர்களாக வந்து என்னை கேட்க்கும் போது.. நான் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன். நீ பேசு திக்ஷிகிட்ட.. அவளுக்கு உன்னை பிடிக்கலைன்னா.. கல்யாணம் வேண்டாம். திக்ஷி கல்யாணத்துக்கு சம்மதமில்லை என்றால் இந்த இரண்டு கல்யாணமும் நடக்காது. பரவாயில்ல, ஷிவா என்னை கல்யாணம் செய்துக்கலைன்னா கூட பரவாயில்ல.. நீ இல்லாத ஒன்றினை இருக்குன்னு சொல்லி சொல்லி என்னை டார்ச்சர் பண்ற.. பணக்காரங்கன்னா.. அவங்க, நம்ம கூட எல்லாம் பேசமாட்டாங்களா.. கல்யாணம் செய்துக்க கூடாதா.. நீ திக்ஷிகிட்ட பேசேன்.. என்ன பிரச்சனைன்னு சொல்லு.. இல்லை, அவளுக்கு பிடிக்கலைன்னு சொல்ல சொல்லு.. கல்யாணம் நின்னுடும்.. ம்.. நீ ஏன் பயப்படுற” என்றாள்.
சந்துரு அசந்து போனான் “ஆரிவொர்க் பார்க்கிற பிள்ளைக்கு.. எம்புட்டு அறிவு பாரேன்” என்றான்.. வாய் பிளந்து நக்கலாக.
லேகா புருவம் உயர்த்தி.. இல்லாதா காலரினை தூக்கிவிட்டுக் கொண்டாள்.. “எல்லாம் எனக்கு தெரியும் டா..” என்றாள்.
சந்துரு “எத்தன ரீல்.. ஹப்பா.. என்னால் எல்லாம் பேச முடியாது டா.. லேகு பாப்பா. இந்த உருட்டினை எல்லாம் வேறு எங்காவது உருட்டு.. அளை விடு. எனக்கு திருமணம் வேண்டாம். நீ கட்டிக்க உன் மாமாவை. நான் எங்கிருந்தாலும் வாழ்க.. எப்படியாவது வாழ்கன்னு வாழ்த்திட்டு போயிகிட்டே இருக்கேன்” என்றவன் எழுந்து சென்றான் தன்னறைக்கு.
சந்துருவிற்கு நல்ல உறக்கம்.
லேகா, கடைக்கு கிளம்பிவிட்டாள்.
மாலையில் காபி குடித்துவிட்டு இவன் அமர்ந்திருக்க.. லேகா, கடையிலிருந்து வந்தாள்.
தந்தை இன்னும் சற்று நேரத்தில் வந்திடுவார். அதனால், சந்துரு, சப்பாத்திக்கு மாவு ரெடி செய்யத் தொடங்கினான்.
பின் பிரிட்ஜ்ஜில் என்ன இருக்கு என பார்த்து.. க்ரேவிக்கு காளான்.. வெங்காயம் என கட் செய்ய தொடங்கினான்.
லேகா, சற்று நேரம் தன்னறையில் போன் பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.
சந்துரு “எனக்கு இருபது வயதிலேயே சமைக்க தெரியும்.. நம்ம அத்த பேரனுக்கு.. பத்து வயசு.. இப்போவே, குக்கர் வைக்கிறான்.. பெண்ணு பார்த்திடலாமா” என்றான்.
இப்போது லேகாவின் போன் அவளை அழைத்தது ‘வடிவேல் மாமா’ என.
லேகா அழைப்பினை ஏற்றாள். அவரோ “மருமகளே.. எப்படி இருக்கம்மா..” என்றார்.
இருவரும் நலவிசாரித்து முடித்து, வடிவேல் “ரமேஷூக்குதான் முதலில் கூப்பிட்டேன், மாப்பிள்ளை வெளியே இருக்கிறாராம்.. இப்போது வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன்னு சொன்னார் ம்மா.. சந்துருகிட்ட நீயே பேசிடுன்னு சொன்னான்.. நம்ம திக்ஷிக்கு கூப்பிடுறேன்.. சந்துருவை அறிமுகப்படுத்தறேன்.. சந்துரு அவளுக்கு அத்தை பையன்ம்மா.. அறிமுகப்படுத்தனும்ன்னு இல்ல.. ஆனால், நீ சொன்னதும் சரிதானே. முறையாக உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைன்னு நானும் சொல்லணுமில்ல.. இரும்மா.. கான்பரென்ஸ்கால் போடுகிறேன்” என்றார்.
லேகாவினை, திக்ஷிக்கு அறிமுகம் செய்தார்.. வடிவேலு. பின் சந்துருவிடம் போன் கைமாறியது.. லேகா வடிவேல் மாமா என சொல்லித்தான் கொடுத்தாள்.. வேண்டுமென்றே.
சந்துரு, லேகா.. வடிவேல் மாமா எனவும்.. கிண்டலாகத்தான் போனினை வாங்கினான்.. அப்படிதான் எதிர்முனையிலும் பேச்சு இருந்தது.. “நல்லாயிருக்கியா சந்துரு..” என்றார்.
சந்துரு பதில் சொன்னான்.
வடிவேல் “சந்துரு.. திக்ஷிதா லைனில் இருக்காப்பா.. திக்ஷிதா, சந்த்ரசேகர் உன் அப்பன் முன்னால் சொல்லியிருந்தானே.. உனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை இவர்தான் ம்மா.. உன் அத்தை பையனும் கூட. உனக்கு, அவரோட நம்பர் அனுப்புகிறேன்.. நீங்க பேசுங்க..” என சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.
சந்துருவும் திக்ஷிதாவும் ஏதும் பேசவில்லை. வடிவேலு.. “ரெண்டுபேரும் பேசுங்க.. முடிவு செய்து சொல்லுங்க ப்பா.. நான் வைக்கட்டுமா” என சொல்லி அழைப்பினை துண்டித்தார்.
லேகா தம்பியின் முகத்தினை பார்த்தவாறே நின்றாள்.
சந்துரு.. சாப்பாத்திகளை திரட்ட ஆரம்பித்தான்.. “லேகு.. வா.. கிரேவியை பாரு” என சொல்லி.. கிரேவி செய்ய சொன்னான்.