மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

4

இரவு பதினோரு மணிக்கு மேல், லேகாவிற்கு அழைத்தான்.. சந்துரு. லேகா உறக்கம் வராமல்தான் இருந்தாள். சந்துரு அழைக்கவும், சந்தோஷமாக அழைப்பினை ஏற்றாள் “டேய் எருமாடு.. அவ்வளவு பிஸியா  டா நீ.. இன்னிக்கு என்னலாம் நடந்தது தெரியுமா” என்றாள், அத்தனை ஆர்வத்தோடு.

சந்துரு “என்ன உன் ஷாப்பில் இன்னிக்கு ஆயிரத்திற்கு வருமானம் வந்ததா” என்றான்.. கிண்டலாக.

லேகா “டேய்.. கேளுடா.. தாத்தா வீட்டிலிருந்து.. அவங்க நாலுபேரும் வந்தாங்க டா..” என்றாள்.

சந்துரு சிந்திக்கத் தொடங்கிவிட்டான்.. அதனால் பேசவில்லை.. “ம்..” என அசட்டையாக சொல்லி கேட்க்கத் தொடங்கினான்.

லேகா “காலையில் திடீர்ன்னு அப்பாக்கு போன்..” என தொடங்கி நடந்தவைகளை, அத்தனை ஆனந்தமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

பொறுமையாக கேட்டவன் “ஆமாம்.. அப்பா மாமா எவ்வளவு நேரம் தனியாக பேசினார்கள்..” என்றான், காரியத்தில் கண்ணாக.

லேகா “அத விடுடா.. ஷிவா பத்துநாள் முன்னாடி எனக்கு பேசினார்..” என பழைய பட்டாசினை இப்போது வீசினாள் சந்துருவிடம்.. 

சந்துரு.. இப்போதுதான் அரண்டு போனான் சிறுவனாக “என்ன லேகு.. எப்போ பேசினான்.. சொல்லவேயில்ல” என்றான்.

லேகா தன்னையே நொந்துக் கொண்டாள்.. ‘ஆர்வத்தில் சொல்லிட்டேனே இவன்கிட்ட..’ என.

சந்துரு “அப்போ சம்பந்தம் பேச வருவாங்கன்னு உனக்கு முன்னாடியே தெரியும்.. அப்படிதானே” என்றான்.

பதிலில்லை அவளிடம்.

சந்துரு “என்ன லேகு.. என்ன நடக்குது.. எனக்கு புரியவேயில்ல.. எதுக்கு இவ்வளோ அவசரமாக கல்யாணம்னு கேட்க்கிறாங்க.. நமக்கு விவரம் தெரிந்து.. இந்த 20 வருஷத்தில் எத்தனைமுறை அவங்க வீட்டுக்கு வந்திருக்காங்க.. அம்மா இறந்த போது மட்டும்தான். எத்தனைமுறை நாம அங்கே போயிருக்கோம்.. தாத்தாவின் இறப்பிற்கு மட்டும்தான். அவர்களுக்கு தெரியாத இடமா.. எவ்வளோ பெரிய ஆளுங்களை எல்லாம் தெரியும்.. கல்யாணம் சம்பந்தம் பேச வேண்டியதுதானே.. இதென்ன.. இப்படி வந்து நின்னு விடாபிடியாக சம்பந்தம் செய்வது. இதெல்லாம் சரியாக இல்லை.. எங்க அப்பா.. அவர்கிட்ட கொடு” என்றான்.

லேகாவிற்கு கோவம்தான் வருகிறது.. “என்ன டா உனக்கு பிரச்சனை.. நாமுதான் போகவில்லையே.. அம்மாவும் போய் அவங்க அப்பாவை பார்த்திருக்கணும் பேசி பழகியிருக்கணும். அப்போது அவர்களும் வந்திருப்பாங்க போயிருப்பாங்க..” என்றாள்.

சந்துரு “லேகு..” என பற்களை கடித்தான் “நீ வை, நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என சொல்லி தன் அழைப்பினை துண்டித்தான்.

தந்தைக்கு அழைத்தான் உடனேயே.. அவரோ உறங்கவில்லை.. படுத்திருந்தார். மகனின் அழைப்பினை பார்த்ததும் எடுக்க தோன்றவில்லை. சந்துரு எல்லாவறையும் துருவி துருவி கேட்ப்பான்.. முதலில் நான் ப்பிரெப்பர் ஆகவேண்டும் என எண்ணிக் கொண்டு மகனின் அழைப்பினை நிராகரித்தார்.

சந்துருவிற்கு என்னமோ நடக்கிறது என மட்டும் புரிந்தது.. உறங்க முற்பட்டான்.

மறுநாள் காலையில் மகனுக்கு தானே அழைத்தார்.. சந்துருவிற்கு கோவம்.. அவன் அப்போதுதான் கண்விழித்த நேரம் அதனால், எடுக்கவில்லை.

ரமேஷ், இரண்டுமுறை அழைத்துவிட்டு.. மகன் எடுக்கவில்லை எனவும்.. அலுவலகம் கிளம்பிவிட்டார். இன்று அவருக்கு திருப்தி அலுவலகத்தில் டியூட்டி. அதனால், நேரமாக கிளம்பினார்.

சந்துரு, அரைமணி நேரம் சென்று.. அழைத்தான்.. தந்தைக்கு. அவர் ட்ரைவிங்கில் இருந்தார்.. போனினை ஸ்பீக்கரில் போட்டு பேச தொடங்கினார்.

சந்துரு “சொல்லுங்க பா” என்றான்.

“தந்தை நைட் தூங்கிட்டேன் ப்பா. எப்படி இருக்க.. லேகா எல்லாம் சொன்னாளா” என்றார்.

சந்துரு “அவ உளர்றா ப்பா.. நீங்களும் இதுகெல்லாம் சம்மதிச்சீங்கன்னு சொல்றா” என்றான் பற்களை கடித்துக் கொண்டு. அத்தனை கோவம்.. இயலாமை என்பதன் வடிவம் கோவம் என சொல்வதுண்டு.. இன்று முழுமையாக உணர்ந்தான் சந்துரு.. தன்னால் ஏதும் செய்ய முடியாதா என எண்ணம் வந்துவிட்டது அப்பாவின் பேச்சில்.

ரமேஷ் “இல்ல.. சந்துரு.. லேகாவிற்கு பிடிச்சிருக்குன்னு சொல்றா.. அத்தோட அம்மாவின் விருப்பம் அதுவாகத்தான் இருந்தது. நீ லேகா விஷயத்தை விடு” என்றார்.

சந்துரு “அதெப்படிப்பா.. இவர்கள் இவ்வளவு தூரம் இறங்கி வருகிறார்கள் எனும் போது.. வில்லங்கம் கண்டிப்பா இருக்கும் ப்பா.” என்றான்.

சந்துருவின் இந்த சிந்தனை, தந்தையாக ரமேஷூக்கு மகிழ்ச்சியே.. ஆனால், ‘இது அவளின் விருப்பம் ஆகிற்றே.. எப்படி வேண்டாம் என்பது. அத்தோடு.. ஷிவாவினை பாதிக்கும் விஷயங்களை அவர்கள் குடும்பம் செய்யாது எனும் போது.. ஏன், பயப்பட வேண்டும் நாம்’ என தந்தைக்கு எண்ணம்.

சந்துருவின் பார்வை வேறு.. ஷிவா.. இவளை பார்க்கவேயில்லை என முன்பு சொன்னால்.. இப்போது பேசினான் என்கிறாள்.. இந்த திடீர் நேசம்தான் குழப்பமாக இருக்கிறது. அன்பு என்பதே இல்லாமல் ஒரு நெருக்கடியில் ஷிவா.. இவளை திருமணம் செய்கிறானோ என எண்ணம்.

ஆக இருவரும் தங்களுக்குள் இப்படியாக எண்ணிக் கொண்டனர்.

தந்தை “இதென்ன பேச்சு வில்லங்கம் அதுஇதுன்னு. லேகா நல்லா இருப்பால்ல.. கஷ்ட்டநட்டம் யாருக்குதான் வராது” என்றார்.

சந்துரு “அப்பா…” என பற்களை கடித்தவன் “சரி, என்ன பேசுனீங்க நீங்களும் அந்த வடிவேல் மாமாவும்.. ஒருமணி நேரம் பேசுனீங்களாம்” என்றான்.

ரமேஷ் சிரித்துக் கொண்டே “எல்லாம் உன் கல்யாணத்தை பற்றி தானப்பா.. நான் சொல்லிட்டேன், பையனுக்கு பெண்ணை பிடித்தால் மட்டுமே திருமணம் என. லேகா கிட்ட, அந்த பெண்ணு நம்பர் இருக்கு ப்பா.. பேசி பாரு.. உனக்கு பிடித்தால்தான் கலயாணம். லேகா மாதிரி உன் விருப்பம்தான் முக்கியம். பிடிக்கலைன்னா வேண்டாம்ன்னு சொல்லிடலாம்” என்றார் தளர்வான குரலில்.

சந்துரு “அப்பா.. நான் வைக்கிறேன்” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டான்.

சந்துருவிற்கு அப்பா கவனமில்லாமல் இருப்பதாக தோன்றியது. என்ன பேசியிருப்பார்கள் இவர்கள் இருவரும். லேகாவை பற்றி நான்தான் இவ்வளவு கவலை படுகிறேனோ.. அப்பா கூல்லாக இருக்கிறார்.. பிரச்சனை இருக்காதோ எனவும் எண்ணம் வருகிறது. ஆக குழப்பம்தான் சந்துருவிற்கு.

லேகா, தம்பிக்கு திக்ஷிதாவின் எண்ணினை அனுப்பி வைத்தாள்.

சந்துரு, லேகாவிடம் பேசவில்லை.. அடுத்து வந்த நாட்களில்.

வடிவேல் மாமா இயல்பாக இரண்டுநாட்களுக்கு ஒருதரம்.. சந்துருவை அழைத்துப் பேசினார். 

ஷிவா சென்னை வந்தான். ஷிவாவிற்கு என தனியான அப்பார்ட்மென்ட் அண்ணாநகரில் இருந்தது.. அவர்களுடைய பைனான்ஸ் கோயம்பேட்டில் இருக்கிறது. ட்ரவலிங் நேரத்தினை குறைக்க.. தொழில் பார்க்க தொடங்கியதுமே இங்கே வீடு வாங்கிக் கொண்டான். வசதியானது.. வேலைக்கு என ஒரு நபர் இருக்கிறார்.. சமையல்.. சுத்தம் செய்வது.. என எல்லாம் அவரே பார்த்துக் கொள்வார்.

தரமணியில் அவர்களின் பூர்வீக வீடு.. ஹம்சா டெக்ஸ்ட் எல்லாம் அங்கே இருக்கிறது. வடிவேல்.. சுந்தரேசன் எல்லோரும் அங்கேதான் இருக்கின்றனர்.

ஷிவா, வளர்ந்தது எல்லாம் தனியாகதான். கொடைக்கானலில் பள்ளி படிப்பு.. கல்லூரி என டெல்லி யூனிவெர்சிட்டியில் BBA. இந்தூர் IIMல் MBA. ஆக, ஷிவா பார்ன் வித் சில்வர் ஸ்பூன்தான்.

ஷிவாவிற்கு, வீட்டில் தாத்தா இருந்தவரை கொஞ்சம் அவரிடம் பேசுவான் தொழில் பற்றி, மற்றபடி யாரிடமும் பேச்சுவார்த்தை கூட இருக்காது. அன்னை என்றால், சிலநேரம் நின்று தன் போன் எடுத்து பேசுவான். மற்றபடி யாரின் தலையீடும் அவனின் வாழ்வில் இருக்க கூடாது என்பது அவனின் கொள்கை.

ஷிவா, தொழிலுக்கு வந்த புதிதில் தாத்தா வெங்கடாசலம்.. ‘நார்த்தில் நம்முடைய சிட்பண்ட்ஸ்.. மற்றும் பைனான்ஸ் ஒரு கிளை தொடங்கலாம்’ என்றார்.

ஷிவா “வேண்டாம் தாத்தா. ஒரு ஆபீஸ் போதும். மற்றபடி எனக்கு கான்டக்ஸ்ட் நிறைய இருக்கு.. நான் இப்படியே இங்கேருந்தே மேனேஜ் செய்துப்பேன். ஒரே இடமாக இருந்தால்தான் எனக்கு கணக்கு பார்க்க வசதி..” என்றுவிட்டான்.

ஆனால், அலுவலகம் என இல்லாமல்.. தன் நண்பர்கள் தெரிந்தவர்கள் இடங்களில்.. தனது கிளைகளை விரித்திருக்கிறான். அங்கிருக்கும் நடுநிலை தொழிலதிபர்களுக்கு.. இப்போது பைனாஸ் செய்கிறான். வட்டி.. அசல் வசூலிக்க என ஆட்கள் இருக்கிறார்கள். 

சிலநேரங்களில் முறையான ஆவணங்கள் வாங்காமல் கூட கோடிகணக்கில் பைனாஸ் செய்வதுண்டு. நாட்கள் கணக்கு பைனான்ஸ்.. அதற்கு ராக்கெட் வட்டி என கோடிகளை மட்டும் பைனான்ஸ் செய்பவன் ஷிவா.

அப்படியான சிலபல சட்ட சிக்கல்கள் வரும்போது.. ஹம்சா டெக்ஸ்ட் என்ற தொழில்..  அவனை காத்திருக்கிறது. அது பலவருடங்களாக நட்டத்தில் மட்டுமே சென்றுக் கொண்டிருக்கும் இவனுக்காகவே. அதனால், அதனுடைய பங்குகளும் உரிமைகளும் இவனுக்கு முக்கியம். இப்போது புதிதாக.. பெரிய அளவில்.. மாநிலம் முழுவதும் பழைய பெட்ரோல் பங்குகளை வாங்கி.. எலக்டிரிக் சார்ஜிங் பாயிண்ட்டோடு சேர்த்து.. ரெப்ரெஷ்மெண்ட்டுக்கான இடங்களை உருவாக்க முயன்றுக் கொண்டிருக்கிருக்கின்றான். இப்போது அதற்கான இரண்டு இடங்களை தேர்வு செய்திருக்கிறான்.

இந்த வேலைகளுக்கு நடுவே, அவன் வீடு செல்வதேயில்லை. எப்போதும் வேலை.. அது தொடர்பான சந்திப்புகள்.. அழைப்புகள்.. என இரவு பதினோரு மணிவரை வேலை. தாத்தா இறந்த போதுதான் பத்துநாட்கள் வீட்டில் இருந்தான் சேர்ந்தார்போல. அதுவும், அவனது தொழில்முறை ஆட்கள் வந்து போவார்கள் எனதான் இருந்தான். 

நிறைய நட்புகள்.. மனவிட்டு பேச என இல்லை.. வேலையாக. அரிதாக ஓரிருவர் இருப்பர். ஆனால், சந்திப்புகள் அதிகமில்லை. காலை சூரியோதயத்தில் ஜாக்கிங். ஏதாவது ஒரு பழசாறு. காலை உணவு என பயறு வகைகள்.. காய்கறிகள். மதியம், சப்பாத்தி  கிரேவி.. சூப்.. என எல்லாம் டையட்டிஷியன் ஏற்பாடாக இருக்கும் இவன்,  இரவு மட்டும் அவன் விருப்ப உணவுகள்.. தேவைப்பட்டால் மதுபானம்.. என தனக்கு தக்க வாழவும் செய்வான்.

மும்பையிலிருந்து சென்னை வந்தான் ஷிவா. இன்று எந்த வேலையும் வைத்துக் கொள்ளவில்லை. 

அபிஷியல் அல்லாத ஒரு மீட்டிங். அதுதான் வேலையில்லை.. அவன் பாஷையில். 

கிரிஷ், ஷிவாவின் உதவியாளன்.. பென்ஸ் எடுத்து வந்தான் ஏர்போர்ட்டுக்கு. கிரிஷ்.. நேற்று இரவே சென்னை வந்துவிட்டான். காலையில் அலுவலகம் சென்று.. இப்போது, அங்கே விவரம் அறிந்துக் கொண்டு.. ஷிவாவை பிக்அப் செய்ய வந்துவிட்டான். 

ஸ்பா எடுத்து கொள்ள ஒரு பெரிய ஹோட்டலில்.. இன்று நேரம் ஒதுக்கியிருக்கிறான். அங்கேதான் மீட்டிங்.. தற்போதைய MLA மகன்.. அடுத்த எலெக்ஷன் குறித்து.. பணம் உதவியையும்.. கோர.. ஷிவா, தனக்கு தேவையான நெடுங்கால தேவையான.. பணம் தரைவழியாக அடுத்த மாநிலங்களுக்கு கைமாறும் போது.. ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசி முடிவுக்கு வர.. இன்று சந்திப்பு.

ஷிவா, ஆறடி உயரம்.. பளபளக்கும் சந்தன நிறத்தில்.. பார்த்தாலே தெரியும் பணக்கார கலையோடு.. கண்களில் ரேபான்..  ஒயிட் நிற காலர் டி-ஷர்ட்,  ஜீன் ஷார்ட்ஸ்.. அணிந்துக் கொண்டு, காதில் ஃப்ளூடூத்.. கையில் சின்ன ஒயிட் நிற ட்ராலியோடு.. வெளியே வந்தான் சிம்பிளாக.

கிரிஷ், அடுத்த நொடி காரினை.. அவன் எதிரே நிறுத்த.. 

ஷிவா, ட்ராலியை பின்சீட்டில் வைத்துவிட்டு.. லேசான புன்னகையோடு முன் சீட்டில் அமர்ந்தான்.

கிரிஷ் “ஷிவா.. ஏதாவது சாப்பிடுறீங்களா” என்றான்.

“இல்ல இல்ல.. போலாம்.. அங்கே போய் ஏதாவது பார்த்துக்கலாம்..” என்றான்.

பின் “என்னாச்சு.. பண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கா.. டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்துடுங்க. புது ஸ்கீம் எப்படி போகுது. கொடுக்கறதுக்கு.. ஈகுவலா எடுத்திடலாமா” என்றான், யோசனையோடு.

கிரீஷ் “மார்கெட் அனலைஸ் செய்தவரை.. நம்ம கம்பெனி மேல நல்லபெயர் ஷிவா. ஈசி அப்ரோச்.. டிரஸ்ட் நிறைய. அதனால், பிக்கப் ஆகிடும்.. இன்னும் நிறைய அட்வேர்டைஸ் பண்ணனும்.” என விவரித்துக் கொண்டிருந்தான்.

ட்ராபிக் நிறைய.. அதனால் பேச்சுகள் நீண்டது.

இப்போது கிரிஷ் “ஷிவா.. வீட்டிலிருந்து போன் செய்தார்கள்..” என்றான்.

“ம்..” என்றான்.

கிரிஷ் “இல்ல, நீங்க இன்னமும்.. உங்க பியான்சிகிட்ட பேசலை போல.. இல்ல, பேசிட்டீங்களா கேட்டாங்க” என்றான்.

ஷிவாவிற்கு இப்போதுதான் லேகாவின் நினைவு வந்தது.. பேசவில்லை என எண்ணிக் கொண்டான். ஆனாலும், முறைத்தான் கிரிஷினை.

கிரிஷ் “இல்ல.. நீங்க.. கொஞ்சம் பிஸின்னு சொல்லிட்டேன்” என்றான்.

ஷிவா அப்படியே அமர்ந்துக் கொண்டான்.

ஹோட்டல் வந்தது.. ஷிவா இறங்கி.. ரிஷப்ஷன் சென்று.. தன்னுடைய விவரம் சொல்லி விசாரித்து.. அறையை தேடி சென்றான். அப்படியே கையில்.. லேகாவிற்கு அழைத்தான் அப்போதே.

அந்த பெட்டினை பார்த்ததும் ஷிவா.. சிறுபிள்ளையாய்.. ஷூ கூட கழற்றாமல்.. படுத்துக் கொண்டான்.

லேகாவிற்கு, ஷிவாவின் அழைப்பினை பார்த்ததும்.. ஆனந்தம். இரண்டுநாட்கள் ஆகிற்றே.. என எண்ணிக் கொண்டே இருந்தாள். இப்போது அழைத்ததும்.. ஏற்றாள்.

ஷிவா “லேகா.. “ என்றான் லகுவான குரலில்.

லேகாவிற்கு.. கேட்க்கவே.. ஹாப்பி.. கன்னம் சிவக்கும் போல இருந்தது பெண்ணுக்கு.

“ம்.. எப்படி இருக்கீங்க” என்றாள், குரல் கொஞ்சம் குழைந்தது.

ஷிவா சோம்பலாக.. “ம்.. குட். அடுத்து என்ன.. எங்கேஜ்மென்ட் தானே. எப்போ வைச்சிக்கலாம்.” என்றான்.

லேகாவிற்கு அதிர்ந்துதான் போனது.. அமைதியானாள் பெண்.

ஷிவா “என்ன யோசனை” என்றான்.

லேகா “நீங்க ரொம்ப பிஸி போல.. பேசவே ரெண்டுநாள்.” என்றாள்.

ஷிவா “அஹ.. உண்மைதான். நீயும் என்னை புரிஞ்ச்சிக்கிட்டுதானே கூப்பிடல.” என்றான்.. அவளை ஒத்து பேசி.

லேகா “அவ்வள்ளவு பிஸியா..” என்றாள் கிண்டல் குரலில்.

ஷிவா நன்றாக புன்னகைத்தான்.. அதைபற்றி பேசாமல் “தேங்க்ஸ் ஒகே சொன்னதுக்கு. நிறைய வேலை இருக்கு.. எப்போ என்கேஜ்மென்ட் அரேஞ் பண்ண.. சொல்லு. நெக்ஸ்ட்.. உன் தம்பி கிட்ட பேசியாச்சா.. என்ன சொன்னாங்க, நான் அம்மாகிட்ட பேசலை.” என விவரம் கேட்டான்.

வெள்ளந்தியாக.. ஷிவாவிடம்.. தம்பியை பற்றி புகார் வாசித்தாள் “அவன் எங்க.. எங்கள் பேச்சை கேட்க்கிறான். என்கூட பேசவேயில்ல.. என்னமோ இந்த சம்பந்தத்தில்..” என சொல்லி நிறுத்தினாள்.

ஷிவா “என்ன சொல்லு” என்றான் எழுந்து அமர்ந்து, அழுத்தமான குரலில்.

லேகா “இல்ல.. என்கிட்டே பேசலை அதை சொன்னேன். நாங்க அடிக்கடி சண்டை போட்டுப்போம்” என்றாள்.

ஷிவா பதில் சொல்லவில்லை.

லேகா “இல்ல ஷிவா, அவனுக்கு பயம்.. அம்மா கேட்ட போது.. நீங்க சம்மதிக்கலை. அதில் கொஞ்சம் கோவம். இப்போது ஏன் திடீர்ன்னு என..” என சொல்லி நிறுத்தினாள்.

ஷிவா யோசனையானான்.. “ஓ.. அதனால்..” என்றான்.

லேகா “இல்ல.. நம்மோட விஷயத்தில் அவனுக்கு ஏதும் பிரச்சனை இல்லை.. அவனுக்குதான் இப்போது கல்யாணம் வேண்டாமாம்” என்றாள்.

ஷிவாவிற்கு பிரச்சனை பெரிதாகுமோ என எண்ணம்.. ‘இந்தவருடம் ஆடிட்டிங் வரும் போது.. அவனுக்கும் இதில் பங்குண்டு.. என தெரிந்திடும்.. அதற்குள் எல்லாம் சரி செய்தாக வேண்டுமே..’ என யோசனைக்கு சென்றான்.

லேகா “ஷிவா நீங்க.. ஏதும்” என்றாள்.

ஷிவா “இல்ல, லேகா.. திக்ஷியை விட்டுட்டு நான் எப்படி கல்யாணம் செய்துக்க முடியும்.. தங்கை இருக்கும் போது.. நான் எப்படி மேரேஜ் பத்தி யோசிப்பது. அதிலும் அவள் சின்ன பெண்.. அஹ.. என்ன செய்வது.. பார்க்குறேன். அப்புறம் பேசலாமா” என சொல்லி அழைப்பினை துண்டித்தான்.

லேகாவிற்கு, கண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கியது.