ஷிவா “அது எதற்கு.. விடு, நம்ம ஆளுங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். நம்ம சொல்லித்தான் கூப்பிடனுமா என்ன.. அது வேண்டாம். சந்துருவின் மதிப்பு தெரிந்து அவங்களே கூப்பிடுவாங்க லேகு.. அதெல்லாம் நடக்கும். நீ போய் இப்போ போர்க்கொடி தூக்காத.. விடு..” என்றான் சமாதானமாக.

லேகா புன்னகையோடு “ம்.. ம்.. தேறிட்டீங்க” என்றாள்.

ஷிவா “ஹப்பாடா..” என நெஞ்சில் கைவைத்து சொன்னான் பாவனையாக.

மனையாள் புன்னகையோடு ரசித்தாள் கணவனை.

லேகாவிற்கு, தன் தம்பிக்காக பேச வேண்டும் என எண்ணம்தான். ஆனால், கணவன் சொல்லுவது போல.. தம்பியை அவர்கள் எப்போது ஏற்கிறார்கள் பார்ப்போம்.. என எண்ணிக் கொண்டு அமைதியானாள்.

இந்த வாரம் தீக்ஷி சந்துரு இருவரும்.. ஷிவாவின் அப்பார்மென்ட் வந்தனர். ஷிவாவின் அப்பார்ட்மென்ட் அதிகம் வந்ததில்லை சந்துரு தம்பதி. இது மூன்றாம் முறை. இந்த முறை.. எந்த விழாவும் இல்லை பெரியவர்களும் இல்லை.. சும்மா வந்திருந்தனர்.. பார்த்து செல்லலாம் என.

காலை உணவு முடித்துக் கொண்டு கிளம்பினர். தீக்ஷி  தின்பண்டங்கள் வாங்குவதற்கு என கடையில் நிறுத்த சொன்னாள் கணவனிடம்.

இருவரும் கடை வந்தனர். தீக்ஷி.. வாங்க தொடங்கினாள்.  அவள் வாங்கும் பொருட்களை பார்த்ததும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டான் கணவன் “இதெல்லாம் நீ சாப்பிட வாங்கற மாதிரியே இருக்கு.. உன் அண்ணன் இதெல்லாம் தொட்டுகூட பார்க்கமாட்டான்.. லேகா இந்த சிப்ஸ்.. கேக்.. இந்த பிஸ்கட் .. என பெரிதா சாப்பிடமாட்டா.. எதுக்கு டி இவ்வளோ. பழம் வாங்கிக்க கொஞ்சம்” என்றான்.

தீக்ஷி “அதை நீங்க வாங்குங்க.. நான் வேப்பில்ஸ்பிஸ்கட் தேடிட்டு இருக்கேன்.. என்னால் பழமெல்லாம் பார்த்து வாங்க முடியாது” என்றாள்.. தேடும் கண்களோடு.. கணவனை பாராமல்.

சந்துரு ஏதும் சொல்லவில்லை தானே சென்று.. பழங்கள் இனிப்புகள் வாங்கினான்.

இருவரும் பதினோரு மணி போல வந்தனர்.

லேகாவிற்கு அதிர்ச்சி.. இப்படி சொல்லாமல் இருவரும் வந்தது.. புன்னகை முகமாக.. அதிர்ந்த ஆனந்த குரலில்.. இனிமையாக வரவேற்றாள்.

சந்துரு, லேகாவை இப்படி பார்த்தே நாட்கள் ஆகிறதே என எண்ணி.. பார்த்திருந்தான். ஏதும் பேசமுடியவில்லை அவனால்.

தீக்ஷி “அண்ணன் எங்க அண்ணி.. இந்தாங்க.. உங்களுக்காகதான் இதெல்லாம்” என சிறுபிள்ளையாக சொல்லி கொடுத்தாள்.. சிப்ஸ்.. கேக்.. சாக்லேட் இருந்த பாக்’கினை.

லேகா “இதென்ன இவ்வளோ இருக்கு..” என வாங்கிக் கொண்டாள்..

தீக்ஷி கணவனை முறைத்துக் கொண்டே “உங்களுக்குத்தான் அண்ணி.. எங்க அண்ணன்?” என்றாள்.

ஷிவா குளித்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான்.

ஷிவா “வா ஷேகர்.. தீக்ஷி வா” என்றான்.

சந்துரு, அழைப்பினை ஏற்று தலையசைத்தான். 

லேகா “சாத்துக்குடி ஜூஸ் எடுத்து வைச்சேன்.. தீக்ஷி உனக்கு என்ன குடிக்க வேண்டும்..” என கேட்டுக் கொண்டே கிட்சேன் பக்கம் செல்லவும்.. சந்துரு அவளோடு சென்றான்.

தீக்ஷி “நீங்க எப்படி இருக்கீங்க.. அண்ணா” என்றாள் 

ஷிவா புன்னகையோடு கைகளை இறகென விரித்து.. “நீயே பாரேன்  எப்படி இருக்கேன்? ம்.. வெயிட் போட்டுட்டேன்தானே.. ம்.. உங்க அண்ணி என்னை கவனிக்கறத்தில்.. நல்லா இருக்கேன்” என்றான்.

லேகா கணவனை திரும்பி பார்த்தாள்.

சந்துருவும் புன்னகையோடு ஷிவாவை பார்த்தான்..

லேகா புன்னகையோடு வேலையை பார்த்தாள்.

சந்துரு சிப்ஸ் எடுத்து வந்து மனையாளிடம் கொடுத்துவிட்டு.. தன் அக்காவிடம் பேச மீண்டும் கிட்சென் சென்றான்.

லேகா குடிப்பதற்கு எடுத்து வந்தாள் “காலையில் என்ன சாப்ட்டீங்க” என்றாள்.

தீக்ஷி “மசால் தோசை.. ” என்றாள் ராகமாக.

லேகா “படிபெல்லாம் எப்படி போகுது” என்றாள்.

தீக்ஷியின் முகம் அழுத்தமாகியது.. “ம்.. டைம் பத்தலை அண்ணி.” என பேசத் தொடங்கிவிட்டாள். 

சந்துரு ஷிவா இருவருக்கும் என்ன செய்வதென தெரியவில்லை.. சந்துரு டிவி ஆன் செய்து ஒரு ஸ்போர்ட்ஸ் சேனல் போட்டு பார்க்கத் தொடங்கினான்.

லேகா “சந்துரு, பிரியாணி செய்யலாமா” என்றாள்.

சந்துரு “ம்..” என சொல்லி உள்ளே எழுந்து சென்றான் தமக்கையோடு.

தீக்ஷி போன் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

சந்துரு வெங்காயம் எடுத்து வந்து டைனிங் டேபிளில் அமர.. தீக்ஷி திரும்பி பார்த்து “சந்துரு.. ஷார்ட்ஸ் போட்டுக்கோங்க.. வேற டி ஷர்ட் போட்டு வேலையை பாருங்க” என்றாள்.

லேகா “அஹ.. ஆமாம் டா.. வா, ஏதாவது புதுசு இருக்கும் நீ போட்டுக்கோ வா” என கூறிக் கொண்டே உள்ளே செல்ல.. 

தீக்ஷி “அண்ணி, என் பாகில் இருக்கு” என்றாள்.

சந்துருவிற்கு நிம்மதி. 

லேகா தீக்ஷியை எண்ணி பூரித்து போனாள்.. எவ்வளவு பொறுப்பு என.

சந்துரு உடைமாற்றிக் கொண்டு வந்தான்.

இப்போது ஷிவா.. புதினாவை கிள்ளிக் கொண்டிருந்தான் டைனிங் டேபிளில் அமர்ந்து. சந்துரு புன்னகையோடு “உங்களையும் வேலை வாங்கிவிடுகிறாளா” என்றான்.

ஷிவா “அஹ.. இல்ல இது சும்மா உனக்கு கம்பெனி கொடுக்க.. நானாக செய்கிறேன். எனக்கு.. தெரியாது..” என்றான், சந்துரு வைத்திருக்கும் வெங்காயத்தினை பார்த்து தோள்களை உலுக்கிக் கொண்டு.. தயக்கமும் புன்னகையுமாக.

சந்துருவிற்கு ‘உனக்கு கம்பெனி கொடுக்க செய்கிறேன்’ என்பது பிடித்திருக்க.. “என்ன தெரியாது.. அவ்வளோ பெரிய கம்பெனியை பார்க்குறீங்க.. இதென்ன பெரிய பிரமாதம்.. விடுங்க, நான் சொல்லித்தரேன்..” என்றான்.

ஷிவா “ அதையும் கற்றுக்  கொண்டிடுவோம்.. ம்..” என்றான் மனையாளை பார்த்து.

தீஷி “முதலில், நீங்க கிட்செனை சுத்தம் செய்வது எப்படின்னு கத்துக்கோங்க அப்புறம் சமைக்க சொல்லி தரலாம்.. ம்..” என்றாள்.. போனினை பார்த்துக் கொண்டே.

சந்துரு “வந்துட்டாடா.. இவளுக்கு அந்த வெங்காய தோலை உரித்தவுடன்.. கவரில் போட்டு வந்துதான்.. அந்த  வெங்காயத்தை நறுக்கணும்.. எப்படி லேகு முடியும்.. சரியான இம்சை” என்றான்.

தீக்ஷி “அண்ணி.. தோல் சீவினால்.. அப்படியே அங்கே இருக்கு.. அடுப்பில் இவர் வதக்க போட்ட மசாலா சாமான் அப்படியே அங்கேயே இருக்கும்.. சப்பாத்தி போட்டு.. என எல்லா  முடியும்  வரை.. அப்படியே எல்லாம் அங்கேயே இருக்கும் அண்ணி..” என இவள் புகார் சொல்ல..

சந்துரு  “டேஸ்ட்டாக இருக்கா சாப்பாடு அதை சொல்லு.. அதான் நீ வந்து கிளீன் செய்துக்கிரீயல்ல” என்றான்.

தீக்ஷி “அதையும் நீங்களே செய்து.. செய்வதுதான் சமையல்.. சும்மா.. எல்லாவற்றுக்கும் ஆள் வேணும் உங்களுக்கு” என்றாள்.

சந்துரு “இத லேகா சொன்னால் கூட ஓகே மாம்ஸ்.. ஆனா, உங்க தங்கச்சி சொல்றா பாருங்க.. எப்போவாதுதான் நாங்க சமைப்பது.. அதில்” என தொடங்க.. தீக்ஷி கணவனை முறைத்துக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தாள்.. இப்போது.

சந்துரு “என்ன இங்க.. ரீல்ஸ்தானே பார்த்துட்டு இருந்த” என்றான், அவள் உரசி அமர்ந்ததில்.

தீக்ஷி “இல்ல உங்க பக்கத்தில் உட்காரனும் போலிருந்தது” என்றாள்.

ஷிவா, அவர்கள் பேசட்டும் என புதினாவை கிள்ளத் தொடங்கினான்.

இதை பார்த்த சந்துரு “ஐயோ.. மாம்ஸ் அவ்வளோ சீன் எல்லாம் இல்ல.. உங்ககிட்ட கம்ப்ளைன்ட் பண்றேன்னு வந்திருக்கா” என்றான் சட்டென அதிர்ந்து.

தீக்ஷி, தலையை குனிந்துக் கொண்டு  சிரித்தாள்.. லேகாவும் தன் தம்பியை பார்த்து சத்தமாக “பயந்துட்டான்..” என சொல்லி சிரிக்க.. தீக்ஷியும் சத்தமாக சிரித்தாள்.

ஷிவாவின் புன்னகையும் விரிந்தது.

சந்துருவிற்கு, லேகா சொல்லியதும் வெட்கம் வர.. ஏதும் பேசாமல்.. வெங்காயம் வெட்ட தொடங்கினான். ஷிவா, சந்துருவின் வெட்கத்தை பார்த்து.. இன்னும் சிரித்தான்.

தீக்ஷி தன் அண்ணனிடமிருந்து புதினா எடுத்து.. கிள்ள தொடங்கினாள்.

நேரம் இப்படியே கடந்தது. 

ஷிவா இந்த மூவரின் பேச்சுகளை வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டான். ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துக் கொண்டு.. அவ்வபோது ஷிவாவையும் அதில் இழுத்து பேசிக் கொண்டு என.. நேரம் ஓடியது.

மதியம் உண்டு முடித்தனர். 

ஷிவா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான்.

கர்ட்டன்ஸ் எல்லாம் இழுத்து மூடி.. சந்துரு படம் ஒன்றினை போட்டான்.

ஷிவா ஈசி சேரில் அமர்ந்துக் கொண்டான்.

தீக்ஷி சோபாவின் கீழே சாய்ந்து ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டே படம் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

சந்துரு லேகா இருவரும்.. சோபாவில் அமர்ந்து.. அவ்வபோது பேசிக் கொண்டே படம் பார்த்தனர்.

சற்று நேரத்தில்.. தீக்ஷி சோபாவில் தலை சாய்த்து.. உறங்கிவிட்டாள்.

சந்துரு அதை பார்த்து.. கீழிறங்கி அமர்ந்து.. தன் மடிமீது அவளின் தலையை கிடத்திக் கொண்டு.. கால் நீட்டி அமர்ந்து படத்தினை ரசிக்க தொடங்கினான்.

படம் முடிந்தது.. சத்தமேயில்லை. ஷிவா திரும்பிப் பார்க்க.. லேகா, தீக்ஷியின் காலில் ஒரு குஷன் வைத்து அதில் தன் தலை வைத்து உறங்கியியாருந்தாள். சந்துரு, சோபாவாவில் தலைசாய்ந்து உறங்கியிருந்தான். தான் மட்டுமே கடமையென படத்தினை பார்த்திருக்கிறேன் என புரிய.. லேசாக அசட்டு புன்னகை அவனிடத்தில். 

அதே புன்னகையோடு.. ஒரு குஷன் எடுத்துக் கொண்டு.. தன் மனையாளின் காலில் வைத்து.. அதில் தலைசாய்து தானும் கண்மூடி உறங்கிவிட்டான்.

எத்தனைநேரம் கடந்ததோ.. சந்துருவிற்கு கால்கள் மறுத்துக்கொள்ள.. விழித்தான். தன் கால்களை தளர்த்தி இன்னும் விழித்து பார்த்தான்.. தன் மடியில் தீக்ஷி.. அவளின் காலில் லேகா.. அவளின் காலில் தலை வைத்து ஷிவா. சந்துருவிற்கு தொடர்வண்டி போலான இந்த உறக்கம்.. நிறைவை கொடுத்தது.. அசையவில்லை அவன்.

சந்துரு தன் போனெடுத்து.. தன்னோடு சேர்த்து.. இந்த உறக்கத்தினை செல்பி எடுத்தான். 

திருமணத்தின் போது தாங்கள் நால்வரும்.. இருந்த  சூழல்.. நினைவு வந்தது அவனுக்கு. இப்போது இந்த காட்சியை தன் மனக்கண்ணிலும் பதித்துக் கொண்டான்.. ‘இதே அமைதியை.. இதே இணக்கத்தை.. எப்போதும் காத்துக் கொடு இறையே..’ என வேண்டிக் கொண்டான்.