மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

16

லேகா, காரில் ஏறியது முதல் கண்களை மூடி அமர்ந்துக் கொண்டாள். தீக்ஷிதான் கவனமாக கார் ஓட்டி வந்தாள். ‘ஏதும் கேட்க்கும் நிலையில்  அண்ணி இல்லை’ என தெரியும், அதனால் அமைதியாக வந்தாள்.

சந்துரு, மாலையில் தன் வீடு வந்துவிட்டான். 

தீக்ஷிதான் “நாங்கள் சித்தூர் வந்துவிட்டோம்” என மாலையில் கணவனுக்கு செய்தி அனுப்பினாள். 

லேகாவிற்கு அழைத்தான் வீடு வந்தவுடன்.. லேகா அவனின் அழைப்பினை ஏற்கவில்லை.

சந்துரு தீக்ஷிக்கு அழைத்தான்.. “ஹலோ” என்றாள்.

“என்ன செய்கிறாள் லேகா” என்றான்..

தீக்ஷி “இப்போதுதான் உள்ளே போய் படுத்திருக்காங்க.. ஹாலிலேயே அங்கும் இங்கும் நடந்தாங்க.. எதோ ட்ரெஸ் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாங்க.. மதியம் சாப்பிடலை. ஈவினிங் காபி மட்டும் குடித்தாங்க.. ஏதும் என்கிட்டே பேசலை.. எனக்கும் சரியாக என்ன நடக்குதுன்னு தெரியலையே.. நான் என்ன பேசுவது” என்றாள்.

சந்துரு, அவள் ஒப்புவித்ததை கேட்டு.. தன் தலையை கோதிக் கொண்டான்.. “ஏன் தெரியலை.. உன் அப்பா ஏதும் சொல்லலையா” என்றான்.

தீக்ஷி “அஹ.. எனக்கு ஏதும் தெரியாது.. எப்போதும் போல யாரும் ஏதும் சொல்லவில்லை” என்றாள்.

சந்துருவிற்கு அவளின் நிலை புரிந்தது “தாத்தா சிட்பண்டின் பங்கில், எனக்கும் ஷிவாவிற்கும் ஈக்குவலாக பங்கு கொடுத்திருக்கார்.. தனியாக உயில் எழுதியிருக்கார்.  அதை உன் அண்ணன்.. பெரியப்பா.. உன் அப்பா.. யாருமே இதுவரை சொல்லலை. அப்படியே எல்லாவற்றையும் மறைத்து.. என்ன சொல்ல.. இப்படி எங்களிடம் ஒன்னுமே சொல்லாமல்.. இத்தனை நாள்.. இருந்திருக்காங்க பிராட்..” என்றான், கோவமாக. பொறுமையாக சொல்ல நினைத்தவன்.. இறுதியில் கோவமானான்.

தீக்ஷி அதிர்ந்துதான் நின்றாள்.. மீண்டும் எரிச்சல் கோவமா என ஒருமாதிரி ஆகிற்று அவளுக்கு, அமைதியாக இருந்தாள்.

சந்துரு “என்ன உன் அப்பா ஏதாவது பேசினாரா” என்றான்.

“இல்லை.. நான்தான் அப்பாக்கு.. சித்தூர் வந்துவிட்டேன் என செய்தி அனுப்பினேன்..” என்றாள். 

“ஆமாம் அதுதான் குறைச்சல்.. ஒருவார்த்தை உன் அப்பா சொல்லவில்லை தெரியுமா..” என்றவன் அப்படியே நிறுத்திக் கொண்டான் சட்டென பேச்சினை. சந்துருவிற்கு, மனையாளின் நிலை தெரியும்.. அவளுக்கே நான் சொல்லித்தான் தெரிகிறது என எண்ணிக் கொண்டே அமைதியானான்.

தீக்ஷிக்கும் அதே அமைதி.

கணவன் “சரி, நாளை காலேஜ் லீவ் போட்டுவியா” என்றான்.

“இல்ல.. நான் நைட் கிளம்பனும்.. நீங்க நைட் வரீங்களா.. அண்ணியை எப்படி தனியா விடுவது..” என்றாள்.

சந்துரு “உன் கார் எங்கிருக்கு” என்றான்.

தீக்ஷி “அந்த வீட்டில் இருக்கு.. இருங்க.. நான் டிரைவரிடம் கார் எடுத்து வர சொல்றேன்.. நீங்க அப்படியே வந்திடுங்க” என்றாள்.

சந்துருவிற்கும் அது சரியென பட.. “சரி.. நீ இயர்லி மோர்னிங் போ.. ம்.. நைட் டிரைவர் கொஞ்சம் தூங்கட்டும்” என்றான்.

இப்படியே பேசி இருவரும் முடிவெடுத்தனர்.

இரவு தாமதமாகத்தான் வந்தான் சந்துரு. தீக்ஷிதான் கதவு திறந்தாள்.. லேகா வெளியவே வரவில்லை. 

டிரைவர்க்கு, மேலே மொட்டைமாடியில் இருக்கும் தனியிடத்தில் தங்க சொல்லி மேலே அனுப்பி வைத்தான் சந்துரு.

சந்துருவிற்கு பூஸ்ட் கலந்தாள் தீக்ஷி. சந்துரு, லேகாவின் அறைக்கு வந்தான்.. லேகா, உடைகளை மாற்றிக் கொண்டு கண்மூடி படுத்திருந்தாள். சந்துரு கதவை தட்டிவிட்டு உள்ளே வர.. லேகா கண் விழிக்கவில்லை. சந்துரு அப்படியே நின்றபடி “லேகு..” என்றான்.

லேகா, அருகில் நிற்பது.. தம்பி என உணர்ந்து கண் திறந்தாள்.. சந்துரு “லேகு.. சாப்பிட்டியா” என்றான்.

“ம்.. தீக்ஷி தோசை ஊற்றி கொடுத்தாள்.” என்றாள்.. கண்ணில் தேடல்.. துக்கம் என பல்வேறு உணர்வுகள். ஆனால், காட்டத் தோன்றவில்லை.

சந்துரு அவளின் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.. லேகா “நீ போய் தூங்குடா” என்றாள்.. திரும்பி அமர்ந்துக் கொண்டு.

சந்துரு “என்ன, உன் புருஷன் பேசினானா” என்றான்.

லேகாவின் கண்கள் கண்ணீரை தந்தது.. ‘இல்லை’ என தலையசைத்தாள்.

சந்துருவிற்கு இல்லை என்ற பதில் ஆச்சர்யமாக இருந்தது.. என்ன சொல்ல முடியும், அதனால் அமைதியா இருந்தான் இரண்டு நிமிடம்.

தீக்ஷி கணவனிடம் பூஸ்ட் கொண்டுவந்து கொடுத்தாள்.. “நான் மேலே போறேன்” என்றவள் மேலே சென்றுவிட்டாள்.

அக்கா தம்பி இருவருக்கும் என்ன பேசுவதென தெரியவில்லை.. அமைதியாக இரண்டு நிமிடம் அமர்ந்திருந்தனர். லேகா “நீ போடா.. காலையில் பேசிக்கலாம்” என அவள்தான் சொல்லி அனுப்பிவிட்டாள்.

சந்துரு வந்துவிட்டான் தன் அறைக்கு. 

லேகா, உடைந்து போனாள் மொத்தமாக. எதையும் காட்டக்கூடாது என தீக்ஷியின் முன்னால் அமர்ந்திருந்தாள். எல்லா பக்கமும் அவளை எல்லோரும் இப்போது குற்றவுணர்வோடு பார்ப்பதாகவே இருந்தது. யாருமே அழைக்கவில்லையே.. மாமனார் மாமியார் என யாருமே அழைக்கவில்லையே.. அதனாலும் இவளுக்கு ஒரு குற்றவுணர்வு.

அதிலும் தீக்ஷியையும் தன்னையும் நினைத்து நினைத்து.. அவளுக்கே வெட்கமாக இருந்தது. ‘அவளின் அண்ணன்.. தன்னை விட்டுக் கொடுத்துவிட்டான்.. தன்னிடம் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டான்.. நான் தோற்றுவிட்டேன்.. ’ என அவளுக்கே எண்ணம். அதனால், அவளை காரில் தனக்கு துணையாக பார்க்க பார்க்க.. லேகாவிற்கு இன்னுமும் உடையத்தான் தோன்றுகிறது. ஆனால், பற்களை கடித்துக் கொண்டு.. தொண்டையில் அழுகையை விழுங்கிக் கொண்டு வந்தாள்.. வழி நெடுக்கும்.

தீக்ஷி சந்துருவின் அவசர திருமணம்.. நினைவில் வந்தது.. சின்ன பெண்.. ஐயோ! நான் ஏமாந்தேன் சரி, இவளையும் சேர்த்து இதில் இழுத்துவிட்டேனே.. என ஆதங்கம்.

வீடு வந்ததும் தீக்ஷி தன்னை கவனித்துக் கொண்டதிலும்.. தன்னிடம் ஒருவார்த்தை ஏதும் கேட்க்காததிலும் இன்னமும் பெண்ணவளுக்கு குற்றவுணர்வுதான் அதிகமானது. அப்படியே உள்ளே செல்லாமல் ஏதேதோ செய்துக் கொண்டிருந்தாள்.. லேகா.

ஆனால், மனம் கணவனிடம்தான் நின்றது.. கணவன், தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான்.. அஹ.. ஒருவார்த்தை என்னிடம் பேசவில்லை.. விளக்கவும் இல்லை.. சொல்லபோனால் திரும்பியும் பார்க்கவில்லை.

என் வாழ்க்கையே இதுதானென  முடிவெடுத்து ஷிவா ஷிவா என நான் திருமணம் செய்துக் கொண்டேன்.. ஆனால், நாங்கள் சொத்திற்கு ஆசைபடுவோம் என அவன் எண்ணிவிட்டான், அஹ.. என்னை நேசிக்கவில்லை.. முக்கியமாக மதிக்கவில்லை.. என் அன்பினை ஏற்கவேயில்லை போல.. சந்துரு பெயரில் உள்ள பங்குகளை வாங்கத்தானே இந்த திருமணம்.. அவன் கொடுத்திடுவான்.. எனக்காக எனும் போது  கொடுத்திடுவான். என கண்கள் பளபளக்க எண்ணிக் கொண்டாள்.

அஹ.. இந்த பெண்ணுக்கு இவர்கள் இருவரையும் பற்றியும் ஏதும் தெரியவில்லை என காலதேவன் எண்ணிக் கொண்டான். 

அன்பு மட்டுமே தெரியும் இவள் கண்ணிலிருந்து.. கண்ணீர் வழிந்து..  தலையணையை நனைத்தது. ‘என்மீது என்ன தவறு.. என்னிடம் திருமணம் முடிந்ததும் சொல்லியிருக்கலாமே.. இல்லை, காலையில் சொல்லியிருக்கலாமே.. நான் என்ன அவ்வளவு பணத்தாசை கொண்டவளா.. பணம் என்பதால்தான் இவரை திருமணம் செய்துக் கொண்டேனா.. என்னதான் இவரின் மனம்.. எண்ணுகிறதோ.. என்னைபற்றி என்னதான் நினைக்கிறார் அவர்..’ என உள்ளே கனன்றுக் கொண்டிருந்தது. 

கோவம்.. மனைவியின் முழு  கோவம்.. குத்தி கிழித்து.. நான் அப்படியில்லை என கத்தி சொல்ல வேண்டியவளின் கோவம்.. இது. என்னை எப்படி உதாசினப்படுத்தலாம்..  என்னை எப்படி இவ்வளவு குறைவாக எடைபோடலாம்.. என கோவம். 

ஆனால், நீ அப்படிதான் என்பது போல.. அமைதியில் கணவன் இருக்கையில்.. பெண்ணவளின் கோவம்.. இழை இழையாக பிரிந்து.. கண்ணீர் கோடுகளாக வழிகிறது.. தலையணை முழுவதும். கேட்க்கும் காதுகள் இல்லாத போது.. உண்மையும் புலம்பல்தானே.. வழியும் கண்ணீரும் விரையம்தானே.

மறுநாள் அதிகாலையில் தீக்ஷி கிளம்பினால் சென்னைக்கு. சந்துரு இருந்தான் இங்கே.. வொர்க் ப்ரோம் ஹோம். லேகா ஏழு மணிக்கு எழுந்து வந்தாள். ஜிவுஜிவுவ்வென கண்கள் மூக்கு வீங்கி சிவந்து.. பார்க்கும் போதே காய்ச்சல் என தெரியுமளவு எழுந்து வந்தாள்.

சந்துரு, மனையாளை அனுப்பிவிட்டு ஹாலில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தான், லேகாவை பார்த்ததும்.. “லேகு.. என்னாச்சு” என பதறி அவளை தொட்டு பார்க்க.. பார்க்க.. லேகா “எங்க தீக்ஷி” என்றாள்.. தொண்டையடைக்க.

சந்துரு “என்னடி.. சுடுது.. அவ கிளம்பிவிட்டாள்.. காபி தரேன்” என அவன் எழ.. லேகா உடைந்தாள் “ஏன் டா, எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. நான் அவருக்கும் உண்மையா அன்போடுதானே இருக்கேன்.. வேணும் வேணும்ன்னு அடபிடிச்சு.. ஆசையாதானே கல்யாணம் செய்துகிட்டேன்.. ஏன் டா.. என்னை அவர் மதிக்கலை.. ஏன் டா இப்படி செய்தார்.. ஏன் டா” என தம்பியின் முழங்கையை பற்றிக் கொண்டு அழுகை.

சந்துரு, இதை எதிர்நோக்கித்தான் வந்தான்.. கூடவே பிறந்தவளின் மனம் தெரியுமே அவனுக்கு.. இவளால் தாளவே முடியாது என.. அதனால்தான் வந்தான்.. இரவே அவள் அழுவாள் என எதிர்பார்த்தான். இப்போது, அமைதியாக தலைகோதினான்.. ஏதும் சொல்லி தேற்றத் தோன்றவில்லை. அழுதால்.. அவள் மனம் கொஞ்சம் தேறும்.. ஆனால், உடல் கொதிக்கிறதே.. என்ன செய்ய என எண்ணிக் கொண்டே அமர்ந்தான்.. அக்காவை தோளில் சாய்த்துக் கொண்டான். சில மனவாதைகளுக்கு  மருந்துகள் வேண்டாம்.. அழுகை.. மன்னிப்பு.. உறக்கம்.. தோள்சாய்வது.. என சில மருந்துகள் உண்டு.. நம்மை அரவணைப்பவர்களிடம். அப்படிதான் சந்துரு அவளை அழுகவிட்டான்.