குளித்து.. உண்டு முடித்து மனையாள் அருகில் வந்து படுத்தான். மனையாள்மேல்.. தன் கையினை படரவிட்டு.. அவளை லேசாக அணைத்தபடி தன்னுடன் இழுக்க.. பெண்ணவள் “கால் வலிக்குது” என சொல்லி.. அவன் கைகளை மெதுவாகவே நகர்த்திவிட்டாள்.

ஷிவாவிற்கு என்னமோ போலாக.. கையினை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி படுத்துக் கொண்டான்.. “என்னாச்சு லேகா.. “ என்றான்.

லேகா “அதான் கால் வலிக்குதுன்னு சொன்னேனே..” என்றாள்.

கணவன் “லேகாவிற்கு பொய் சொல்ல வரலையே” என்றான் நிமிர்ந்து படுத்துக் கொண்டு.. தன்னிரு கைகளையும் பின் தலையில் வைத்துக் கொண்டு.

லேகா கண்களை துடைத்துக் கொண்டு “அப்போது உங்களுக்கு வருமோ..” என்றாள்.

ஷிவாவிற்கு புரிந்துவிட்டது எதோ நடந்திருக்கிறது.. இது கால்வலி அல்ல என.. இப்போது அவள் கேள்விக்கு பதிலாக “நிறைய வரும். ஆனால், உன்கிட்ட வராது” என்றான் ஆத்மார்த்தமாக.

லேகா திரும்பி கணவனை பார்த்து படுத்தவள் “அப்போ.. என் தம்பின்னா வருமோ” என்றாள், சந்துருவின் அக்கா நானென..

ஷிவா விவேகமானான். தன் மனையாளை பார்த்து திரும்பியவன் “என்ன.. என்ன ஆச்சு” என்றான்.

லேகா “தீக்ஷி யாரு” என்றாள், எழுந்து அமர்ந்து.

ஷிவா “எ..ன்ன.. கேள்வி இது.. சித்தப்பா பெண்” என்றான்.

லேகா முறைத்தாள் “என்கிட்டே எதோ வராதுன்னு சொன்னீங்க” என்றாள்.

ஷிவாவும் தெளிவாக மனையாளை ஆராய்ந்துக் கொண்டு  “ஆமாம்.. நான் என்ன பொய் சொன்னேன்” என்றான்.

மனையாள் “ம்.. உண்மையும் சொல்லலை.. மறைச்சிட்டீங்க” என்றாள்.

ஷிவா அலட்டிக் கொள்ளவில்லை “என்ன பிரச்சனை” என்றான் எழுந்து அமர்ந்து.

லேகா ஹாலுக்கு வந்துவிட்டாள். ஷிவாவிற்கு லேகாவிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது என புரிய கண்களை மூடி திறந்தான் ‘இது வேறா’ என சலிப்போடு.

ஷிவா, எழுந்து அவளோடு வரவில்லை.. “இங்கபாரு லேகா, இது நமக்கு நடுவில் வரவேண்டிய பிரச்சனை இல்லை. இது சித்தப்பா.. சந்துரு சம்பந்தப்பட்டது. இதை கொண்டு நீ என்னை ஏதும் கேள்வி கேட்க்க முடியாது.. ரைட்” என்றான், அழுத்தமான குரலில்.

லேகா “ஓ.. ரூல்ஸ் பேசுறீங்க. அப்போது எதற்கு.. சந்துருவிடம் நீங்க பேசினீங்க. நீங்க பேசிய பிறகுதான் அவன் திருமணத்திற்கு சரின்னு சொன்னான்.. மறந்துடாதீங்க. அப்புறம், எனக்கு உங்களை மாதிரி எல்லாம் தனித்தனியா பார்க்க தெரியாது. இது என் தம்பி.. தம்பி பெண்டாட்டி பிரச்சனை. நீங்க ஏன் என்கிட்டே முதலிலேயே சொல்லலை.. திருமணம் முடிந்து கூட சொல்லலை.. அப்போ, என் தம்பியை மதிக்கலை.. அவன் உறவு உங்களுக்கு வேண்டாம். நான் மட்டும் போதும்.. அப்படிதானே” என்றாள்.. நேரடியாக.

ஷிவாக்கு அதுதான் உண்மை. ஆனால், அவள் மொழியில் கேட்கும் போது.. சரியாக இல்லை, சட்டென உறுத்தல் வந்துவிட்டது.  இத்தனைநாட்கள், அவள் தன் வீட்டில் இருந்த விதம்.. வாரத்தில் ஒருநாள் அன்னை தந்தை இருவரும் வீடு வருவது.. அங்கிருந்து சமையல் பொருட்கள் வருவது. இங்கிருந்து இவள் ஏதாவது கொடுத்து விடுவது. அப்பா வாய்நிறைய மருமகளே என அழைப்பதை என எல்லாவற்றையும் எட்டி இருந்து பார்த்தவனுக்கு.. அவளின் மொழியில்.. என் தம்பி முக்கியமில்லை என்ற வார்த்தை.. தாக்கியது. ‘சும்மா விடமாட்டாளே’ எனவும் எண்ண வைத்தது. அந்த உறுத்தலை ஒத்துக் கொள்ளவும் மனதில்லை. ஷிவா சம்சாரகடலில் தத்தளிக்க தொடங்கினான்.

ஷிவாவிடம், மனையாளின் கேள்விக்கு பதிலில்லை. அமைதியாக படுத்துக் கொண்டான்.

அவனின் மனையாளும்.. கணவனின் அலட்சியத்தில் கண்ணீர் பெருக.. அப்படியே நின்று பால்கனியில் வேடிக்கை பார்த்தாள். ‘சந்துருவிடம் ஏன் யாருமே சொல்லவில்லை.. அவன், பாரபட்சம் பார்ப்பவன் இல்லை. ஆனால், சொல்லிதானே இருக்க வேண்டும்..’ என யோசனை. 

லேகா அழுது முடித்து.. நாளை நான் மாமாவிடம் பேசுகிறேன் என எண்ணிக் கொண்டு தன்னை சமாதானம் செய்துக் கொண்ட பிறகுதான் அவளால் படுக்கவே முடிந்தது. ஹாலில் உள்ள.. சோபாவில் படுத்துக் கொண்டாள் பெண்.

ஷிவாவிற்கும் உறக்கம் வரவில்லை.. திறந்திருந்த கதவின் வழியே அவளின் நடமாட்டத்தினை கணித்துக் கொண்டிருந்தான். 

மனையாளின் அலைபுறுதல் அடங்கி அவள்.. உறங்கியதும் எழுந்து வந்தான் ஷிவா.

மூக்குநுனி சிவந்து.. தலையெல்லாம் கலைந்து.. உடலை ஒடுக்கி.. அந்த சோபாவில் அவள் படுத்திருந்த கோலம்.. கணவனை சங்கடப்படுத்தியது. சோபாவின் கீழே அமர்ந்து அவளின் முடிகளை ஒதுக்கிவிட்டான். விடிவிளக்கின் ஒளியில் மின்னிய அவளின் கன்னங்களை பெருவிரலில் லேசாக வருடியபடியே ‘எப்படி டி.. என்மேல உனக்கு கோவம் வருது.. எனக்கு பாரேன் வரவேயில்ல.. அஹ.. அவனுக்காக என்மேல் கோவம் வருது உனக்கு.. கேள்வியெல்லாம் கேட்க்கிற’ என புன்னகையோடு எண்ணிக் கொண்டே இருந்தான். அவளின் அசந்த உறக்கத்தில் பிரிந்திருந்த உதடுகளில் லேசாக தன் இதழ் ஒற்றி எடுத்தான்.. பெண்ணவள் விழித்துக் கொள்ளுவாளோ என சின்ன பயம் அவனுக்கு.

அவளை தூக்கி சென்று தங்களின் அறையில் படுக்கவைக்க.. பயம், எழுந்துக் கொண்டு.. மீண்டும் தம்பி தம்பி என அவள் புலம்பத் தொடங்கிவிட்டாள். அதனால், இரண்டு மூன்று.. குஷன்களை எடுத்து.. சோபாவின் கீழே போட்டு.. அங்கேயே அவளின் அருகிலேயே.. மேலே இருந்த அவளின் கைகளை பிடித்துக் கொண்டு.. தானும் உறங்க தொடங்கினான்.

காலையில் லேகா விழித்ததும்.. கணவனை கண்டு.. அதிர்ந்துதான் போனாள். ஆனாலும் கோவத்தை இழுத்து பிடித்துக் கொண்டு.. பாத்ரூம் சென்றாள்.

வேலைக்கு ஆள் வந்துவிட்டார். அதனால், லேகா காபி போனோடு தங்களின் அறைக்கு வந்தாள்.

எப்போதடா மணி எட்டாகும் என காத்திருந்தாள். தன் மாமனாருக்கு அழைத்தாள் பெண்.

அவரிடமும் இதே கேள்விதான் “மாமா தீக்ஷி யாரு” எனதான் தொடங்கினாள்.

குளித்து வந்த ஷிவா, மனையாளை பார்த்து அதிர்ந்து நின்றான்.. “என்ன டி.. இன்னும் நீ விடலையா.. என்ன இப்போ தீக்ஷி எங்க வீட்டு பொண்ணுதானே. என்ன குறை” என்றான் சத்தமாக.

லேகா “அப்போது திருமணத்திற்கு முன்பு சொல்லவில்லை.. என் தம்பின்றதால.. அசால்ட்டா இருந்தீங்களா” என கணவனிடம் கத்தினாள். கூடவே மாமனாரிடம் “நீங்க சொல்லுங்க மாமா.. பெரியவர் நீங்க.. நாங்க என்னமோ ஏதோன்னு நினைத்திருந்தோம். நீங்க ஏன் மாமா சந்துருவிடம் சொல்லலை. அவனை நீங்களும் மதிக்கலையா” என்றாள்.

வடிவேலு “இல்லம்மா.. அப்படியெல்லாம் இல்லம்மா.. தீக்ஷி சுந்தரத்டோடு பொண்ணும்மா.. எப்படி வேறாக பார்க்க முடியும். சந்துருவிடம் என்னவென சொல்லுவது.” என்றார்.

“அப்போது, ஏன் லதா அத்தை இன்னமும் போய்.. அவங்க பெண்ணை பார்க்கலை.. அவங்க ஏன் சந்துருவிடம் சரியாக பேசவில்லை..” என தொடங்கி திருமணத்தில் நடந்ததை எல்லாம் நினைவுபடுத்தி கேட்க்க தொடங்கினாள்.

ஷிவா, மனையாளை அதிர்ந்து பார்த்தான்.. ‘என்னமோ செய்துக்கோ’ எனதான் அவனால் இருக்க முடிந்தது இப்போது. கிளம்பிவிட்டான் அலுவலகத்திற்கு.

லேகா, விடவில்லை.. சுந்தரம் வசந்தி.. என எல்லோரிடமும் தம்பிக்காக சண்டை.. ‘என் தம்பி உங்களுக்கு முக்கியமில்லையா.. அதெப்படி சொல்லாமல் திருமணம் செய்யலாம்’ என ஆடித்தீர்த்துவிட்டாள்.

பெண்ணின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். அவளுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.. விடமாட்டாள்.. என்பது பலம். எதையும் சொல்லாமல் செய்ய மாட்டார்கள். ஆனால், என் தம்பி.. என் மாமா.. என் அப்பா.. என் புருஷன் என ஆண்களை தூக்கிபிடிக்க.. பலநேரங்களில் இவர்கள் தன் மதிப்பை குறைத்துக் கொள்ளுகிறார்கள்தானே.

வசந்தி “உன் அப்பாக்கு தெரியும்மா” என சொல்ல.. பெண்ணவள் “அவருக்கு சேர்த்துதான் சொல்றேன்.. ஏன் சொல்லவில்லை என. இப்போது எதுக்கு தீக்ஷியை அங்கேயே வைச்சிருக்கீங்க.. கூட்டிட்டு போய்டுங்க. என தம்பியை நீங்கள் மதிக்கவேயில்லை. அப்புறம் எப்படி அவள் மதிப்பாள்.” என தந்தையோடு சேர்ந்து.. இப்படியும்  திட்டி தீர்த்தாள்.

வசந்திக்கு ‘என்ன இந்த பெண்’ என இத்தனைநாள் அவள் மீதிருந்த நல்ல எண்ணம் சட்டென காணாமல் போனது. ‘எப்படி பேசுகிறாள்.. எங்களையே கேள்விகேட்கிறாள்..’ என ஒருமாதிரி எரிச்சலானது. தன் கணவனிடம் போனினை கொடுத்துவிட்டார்.

வடிவேலுதான் மருமகளை சமாளிக்க தொடங்கினார்.