மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

1

சித்தூர்.. திங்கள் கிழமை காலை நேரம்.. 

வீட்டின் முன்பிருந்த பார்க்கிங் ஏரியாவில் லைட் ஆன் செய்தான் சந்துரு. வேக வேகமாக மாடியிலிருந்து பொருட்களோடு கீழே வந்து காரின் அருகே பொருட்களை வைத்தான். 

இரவு வெகுநேரம் வேலை பார்த்ததில்.. சற்று கண்கள் எரிச்சலில் இருந்தது, சந்துருக்கு. மனதும் இந்த ஒருவாரமாக குழப்பத்தில் இருக்கின்றனர் அக்கா தம்பி இருவருக்கும்.. தங்களின் வாழ்க்கை குறித்து தாங்களே முடிவெடுக்கும் குழப்பம்.. நெருக்கடியாக.. கட்டாயமாக இருக்கிறது இவர்களுக்கு. ஒரு ஆனந்தமாகவோ.. அமைதியாகவோ இந்த முடிவுகளை எடுக்க முடியவில்லை. நம் முடிவுகளை.. நம் மீது யாரோ திணிக்கிறார்களோ திணித்து விடுவார்களோ.. எனவும் ஒரு எண்ணம். அதனால், யோசிக்க என காலத்தை கடத்துகிறான் சந்துரு.

“சந்துரு.. தேங்காய் சாதம் கோவக்காய் வைச்சிருக்கேன்.. ரொம்ப நேரம் இருக்காது, போனதும் சாப்பிட்டுடு. அப்புறம், தேஸ்டே.. நான் சீக்குவன்ஸ் எல்லாம் வாங்க வரணும்.. சென்னைக்கு. ரிட்டர்ன் ப்ளீஸ்.. என்னை கொண்டு வந்து விடு காரில். வேலை வைச்சிக்காத.. சொல்லிட்டேன்.. மறந்துடாத.. போன் செய்தால் எடு..” என்றாள்.. தன் தம்பியிடம், லேகா.

ஆனால், சந்துரு முகம் ஏனோ இறுக்கமாக இருக்கிறது.. அக்காவின் எந்த அதட்டலுக்கும் பதில் சொல்லவில்லை.. தனது பொருட்களை.. காரின் பின்பக்கம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

லேகா, பொறுமையாக இன்னும்மொருமுறை தான் சொன்னதை திரும்ப சொல்லத் தொடங்க.. நேராக பார்த்து முறைத்தான் இப்போது தன் கூடவே ஒட்டி பிறந்தவளை. ம்.. இவர்கள் இருவரும் இரட்டையர்கள்.. முதலில் சந்த்ரலேகா.. அடுத்து இவன் சந்த்ரசேகர்.. நூற்றி இருபது நொடிகள்.. பொறுமைகாத்து பிறந்தவன். இருவருக்கும் 26 வயது.

தம்பியின் முறைப்பில் லேகா புன்னகையோடு தன் பேச்சினை நிறுத்திக் கொண்டாள், பதில் சொல்லுவானா என எதிர்பார்த்து. ஆனால், சந்துரு பதில் ஏதும் சொல்லவில்லை.. மீண்டும் விட்ட வேலையைத் தொடர்ந்தான்.

லேகா “என்னமோ பண்ணு, எனக்கு வேலை இருக்கு..” என சொல்லி.. ஹால் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். கையில் தம்பிக்கான காபி கப் எடுத்து வைத்தாள் மறுபுறம். 

அடுத்து தன்னுடையதை எடுத்து பருக தொடங்கினாள். அமைதிதான் அங்கே.. இருவருக்கும் இந்த அதிகாலை நேரம் என்பது இந்த இரண்டு வருடங்களாக பழகிவிட்டது. அத்தோடு இந்த அமைதியும் இருளும் கூடதான். முன்பெல்லாம் பார்க்கும் போது சண்டை.. பேசும் போது சண்டை.. உணவு உண்ண சண்டை என இருந்தவர்கள்.. இப்போதெல்லாம் அமைதியாகி கொண்டனர். தங்களின் கம்ப்ளைன்ட் கேட்பதற்கு அன்னை இல்லை என்பதால்.

காபி குடித்து முடித்த சந்துரு “லேகா.. பத்திரமா இரு.. மாமா அத்தைன்னு யார் கூப்பிட்டாலும் எடுக்காத.. அங்கிருந்து யார் கூப்பிட்டாலும் எடுக்காத உன் போனை.” என்றான் அழுத்தமான குரலில் எதோ யார் கூப்பிட்டாலும் என்றது உறுதியாக வந்தது.. லேகாவை தாக்கியது. மேலும் அவனே “இன்னுமும் முடிவெடுக்கவில்லை.. இன்னமும் எனக்கு அவர்களை நம்ப முடியலை.. முடிவெடுத்துட்டு சொல்றேன்.. அப்புறம் நீ போன் பேசு. கொஞ்சநாள் அமைதியா இரு” என சொல்லிக் கொண்டே வாசல் நோக்கி வந்து கார் கதவை திறந்தான்.

லேகாவின் மனது சங்கடமானது.. ‘சந்துருக்கு எதோ தெரிந்துவிட்டதோ.. இல்லை, நான் என்ன அப்படியா அந்த ஷிவாவை நினைத்து உருகுகிறேன்.. எப்படி பேசுறான்.. தம்பி சொல்லும் அளவிளா நான் இருக்கிறேன்.. எனக்கும் குடும்ப மரியாதை முக்கியமே.. எப்படி சொல்லுகிறான் இவன்..’ என கோவம்.. எனவே அப்படியே நின்றாள் லேகா.

தமக்கையிடம் அசைவில்லை வரவில்லை எனவும் திரும்பி பார்த்தான், சந்துரு.

அங்கேயே நின்றிருந்தாள்.. அவனின் வார்த்தைகளில், லேகா.

தான், பேசிய எதோ அவளை தாக்கிவிட்டது என புரிய.. காரின் கதவினை சாற்றிவிட்டு.. லேகாவை நாடி வந்தான் பொறுமையாக.. அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு.. “என்னாச்சு, ஏதாவது தப்பா சொல்லிட்டனோ.. அது.. அம்மா ஞாபகம்.. எதோ பயம்.. சாரி..” என சொல்லி ஒரு பெருமூச்சு விட்டான்.

லேகா “எனக்கு மட்டும் அது இல்லையா” என்றாள்.

சந்துரு.. தமக்கையின் கைகளில் தட்டி.. ஆறுதல்படுத்திக் கொண்டே.. “இல்ல லேகு, அப்போவே நடந்திருந்தால்.. அம்மா சந்தோஷமாகவாவது போயிருப்பாங்கதானே..” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டே.

லேகா உடைந்து அமர்ந்தாள்.. அருகில் இருந்த சேரில்.. சந்துரு நின்றுக் கொண்டே அவளின் தலையை வருடியவன்.. “அப்பாக்கு, என்ன பண்றதுன்னு தெரியலை.. தன் பொண்டாட்டி ஆசைப்பட்டுதுதானே நடக்குதுன்னு.. ஒத்துக்குவார். ஆனால், எனக்கு யோசிக்கணும்.. இதெல்லாம் சரியா.. என்னமோ எனக்கு குழப்பமாகவே இருக்கு லேகா.. யோசிச்சு முடிவெடுக்கலாம்” என்றான்.

லேகாவிற்கு லேசாக முகம்வாடி போனது. நடக்காதோ இந்த திருமணம் என அவளுக்கு சட்டென ஒரு எண்ணம்.. அதனால், அந்த முகவாட்டாம். ஆனாலும், சந்துரு சொல்லுவதும் சரிதானே என அமைதியாக இருந்தாள்.

இருவரும் அமைதியாகினர்.

லேகா கண்களை துடைத்துக் கொண்டு “வா.. சாமி கும்பிட்டு போ..” என சொல்லி எழுந்தாள்.

கிட்டத்தட்ட காலை 6:30 மணி.. ட்ராக் பாண்ட்.. டி-ஷர்ட் அணிந்துக் கொண்டு.. கிளம்பினான்.. அந்த லஞ்ச்பாக்ஸ்.. மற்றும் பால்கோவா எடுத்துக் கொண்டு, தனது மக்னடிக் காரினை எடுத்துக் கொண்டு பறந்தான் சென்னை நோக்கி.

வழி நெடுக யோசனை.. குடும்பத்தில் என்ன நடக்கிறது என உணரும் ஆண்மகனாக சந்துரு இப்போது.. அதில் இந்த சிந்தனைகள் ‘எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்.. அப்பாதான் முழுநேரம் சம்பாதித்தார். அம்மா, அப்பாவிற்கு உதவும் அளவு சம்பாதித்தார். காசு பணம் அளவாக இருந்தது.. சந்தோஷமும் கொண்டாட்டமும் நிறைய இருந்தது. இப்போது எல்லோரும் சம்பாதிக்கிறோம்.. ஆனால், அதை அனுபவிக்க அம்மா இல்லை.. அத்தோடு, குழப்பம் வேறு.. ஏன் எப்போதும் இந்த ஆண்டவன் ஒரு குறையை வைத்துவிடுகிறான்.

இந்த திருமணங்கள் சரியாக வருமா.. முதலில் இது சரிதானா. முதலில் லேகாவிற்கு தானே ஷிவாவை கேட்டோம். இப்போது எதற்கு.. என்னையும் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்க்கிறார்கள்.. ஷிவாவிற்கு லேகா வேண்டாம் என அவர்கள்தானே சொல்லினர்.. இப்போது என்னையும் சேர்த்து.. அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாக கேட்க்கின்றனர்.. என்ன நடக்கிறது..’ என யோசனை.

ஆனால், வீட்டிலிருந்த லேகாவிற்கு வேலையே ஓடவில்லை. நாளை, ஒரு ப்ளௌவுஸ் ஆரி வொர்க் முடித்து கொடுக்க வேண்டும்.. அதனால், தம்பி கிளம்புவதால்.. நேரமாக சமையலை முடித்துவிட்டு அமர்ந்தவளால்.. வேலையை பார்க்க முடியவில்லை.. அமைதியான காலை நேரத்தில்.. டிவியில்.. மென் இசையில்.. 

“வருவாரோ வரம் தருவாரோ..

மனது சஞ்சலிக்குதே.. இப்போது..

வருவாரோ.. வரம் தருவாரோ..” என பாடல் ஒலிக்க.. சந்த்ரலேகாவின் மனது அதில் லயிக்கத் தொடங்கியது.. 

கண்கள் மூடியது.. இதயம், இவள் எப்போதடா கண்மூடுவாள்.. அவனை கண்முன் நிறுத்தலாம் என.. எண்ணியது போல.. ஷிவா அவளின் மூடிய இமையில் வந்து விழுந்தான். உறவு.. பாசம்.. அன்பு என அடிக்கடி அவனை பார்த்து பழகியதில்லை இவள். ஆனால், திருமணம் காதல்.. நேசம் என்ற வார்த்தைகளை கேட்டால்.. அவனின் உருவம்தான் நிழலாடும் அவளுள். அதற்கு காரணமும் அன்னைதான். 

அதிகம் அவனை தெரியாது.. சின்ன வயதில் ஒரே ஒரு விடுமுறைக்கு.. ஒருவாரம் தங்கி இருந்தேன்.. அவர்கள் வீட்டில், அதாவது எங்கள் தாத்தா வீட்டில். அப்போதுதான் அவனை தெரியும்.. என் முறைப்பையன் அவன் என.

அதன்பிறகு, சென்றவருடம் தாத்தாவின் இறப்பிற்குச் சென்றிருந்த போது.. பார்த்தேன் நீண்ட வருடங்கள் சென்று. ம்.. கொஞ்சம் அழுத்தக்காரன் போல என்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை..’ என எண்ணம் எழ.. அந்த முகம் சட்டென கலைந்து போனது,லேகாவிற்கு.

லேகா, தன்னை மீட்டுக் கொண்டவள் போல.. எழுந்து.. சோபாவின் அருகே வைத்திருந்த.. துணி பையினை எடுத்து வந்து.. அமர்ந்தாள். தேவையான ஊசி நூல்.. பீட்ஸ் என எல்லாம் எடுத்து.. ப்ளௌவுஸ் பிட்டினை.. ஸ்டாண்ட்டில் பொருத்தி.. போனில் எந்த டிசைன் என பார்த்து.. வேலையை ஆரம்பித்தாள். 

நேரம் சென்றதே தெரியவில்லை.. பத்துமணிக்கு மேல், இவளுடைய கடையில் வேலை பார்க்கும்.. தாமரை அக்கா.. லேகாவிற்கு போன் செய்தார் “நேனு.. கடைக்கு வந்துட்டேன் லேகா..” என்றாள்.

லேகா “சரி அக்கா.. நான் ஒன்ஹெர்’ல இதை முடிச்சிடுவேன்.. வந்திடுறேன்.. நீங்க முதலில் ஆல்டர்ரேஷன் கொடுத்த வொர்க் முடிச்சிடுங்க, அப்புறமாக நான் எடுத்து வருவதைய் தைக்கணும்.. சீக்கிரம் அக்கா.. பார்த்துக்கோங்க” என்றாள். 

சந்துரு.. ரீச்சிடு என செய்தி அனுப்பினான், தமக்கைக்கு. அதை பார்த்துவிட்டு.. தன் வேலையில் கவனமானாள் பெண்.

சொன்னது போலவே, ஒருமணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு.. தனக்கான உணவினை கட்டிக் கொண்டு.. தனது ஆக்டிவா எடுத்துக் கொண்டு கிளம்பினாள், கடைக்கு. 

மிடில்கிளாஸ் வாழ்க்கைதான். அன்னை ஹம்சவேணி.. தந்தை ரமேஷ். ரமேஷ் மெடிக்கல் ரெப்.. அப்போது. இப்போதுதான் மார்க்கெட்டிங் ஹெட் அந்த ரீஜினுக்கு. ஹம்சவேணி தையல் கலை கற்றவர்.. வீட்டிலிருந்தபடியே தைத்துக் கொண்டிருந்தார். அதில் வந்த வருமானம் பெரிதும் உதவியாக இருந்தது.. பிள்ளைகளின் படிப்பிற்கு.

சந்துரு தலையெடுக்கத் தொடங்கிய நேரம்.. ஹம்சவேணிக்கு.. உடல்நலமில்லாமல் போக.. அவரின் ஆவி எதையும் அனுபவிக்காமல் உலகைவிட்டு பிரிந்தது. குடும்பமே அடங்கிப் போனது.

ஹம்சவேணி, வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்.. ‘ஹம்சம் டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெரிய ரெடிமேட் உடைகள் தைக்கும் கார்மெண்ட்ஸ் வைத்திருந்தவர்கள்.. இன்னமும் அவர்கள் பிறந்த வீட்டில் வைத்திருக்கிறார்கள். 

தரமணியில் இப்போதும் அந்த கார்மெண்ட்ஸ் தனது வேலையை செய்துக் கொண்டிருக்கிறது. 

அதெல்லாம் பழையக் கதை.

லேகா ஃப்பேஷன் டிசைனிங் படிக்கவும்.. துணிந்து லேகாவின் துணையோடு.. தனியாக கடை வைத்து நடத்தினர் அம்மாவும் பெண்ணும். ‘ட்ரெண்டி கலெக்ஷ்ன் ஸ்டுடியோ’ என்ற பெயரில். ஆரம்பித்த சில நாட்களிலேயே நல்ல பெயர் வாங்கியது இவர்களின் கடை. ஆனால், ஹம்சாவிற்கு, உடல்நலமில்லாமல் போய்.. ஆவி பிரிந்தது முதல்.. கடை அப்படியே இருந்த இடம் தெரியாமல் சென்றது, இவர்களும்தான்.

இப்போதுதான் இந்த ஒருவருடமாக லேகா.. பிடிவாதமாக தங்கள் குடும்பத்தை.. மீட்டுக் கொண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட மீட்டுவிட்டாள்தான். அதில்தான் இப்போது மீண்டும் குழப்பம். இது தெளிவதற்கான குழப்பமா?.. தொலைந்து போகும் குழப்பமா என.. இவர்கள் எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.

இதெல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் இருக்க கூடாதென எண்ணித்தான் கடைக்கு வந்து சேர்ந்து லேகா வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

இன்று இரவு ஒன்பது மணிக்கு மேல்..

சந்துரு அப்போதுதான் அலுவலகத்திலிருந்து, தான் இருக்கும் அப்பார்ட்மென்ட் வந்தான். இன்று சீக்கிமாகவே வந்துவிட்டான்.. ஆனாலும், வேலை ஓயவில்லை.. எதோ போனில் தன்னுடைய தகவல்களை சொல்லிக் கொண்டே வீட்டின் கதவினை திறந்து உள்ளே வந்தான்.

அப்போது அவனின் போனில் இரண்டாம் அழைப்பு வந்துக் கொண்டிருந்தது.. யாரென பார்க்க “வடிவேல் மாமா” என ஒளிர்ந்தது.

சந்துரு சலித்துக் கொண்டே.. மீண்டும் தன்னுடைய முதல் அழைப்பின் பேசினைத் தொடர்ந்தான்.

முதல் அழைப்பு பேசி முடித்து.. குளிக்க சென்றுவிட்டான்.

அரைமணி நேரம்.. எடுத்துக் கொண்டான்.. உணவு ஆர்டர் செய்து.. தன்னுடைய துணிகளை மெஷினில் போட்டுவிட்டு.. டிபன் பாக்ஸ்.. எடுத்து தேய்த்து வைத்து.. பால்கோவாவை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு.. வேறென்ன தின்பண்டங்கள் இருக்கிறது என பார்த்து.. அதையும் எடுத்து வாயில் போட்டு கொண்டு.. லேகாவிற்கு அழைத்தான். சாப்பிட்டியா அப்பா வந்திடுவார்.. பதினோரு மணியாகும் என பேசி வைத்தான்.

மீண்டும் “வடிவேல் மாமா” என அழைப்பு வந்தது.. இந்தமுறை அந்த அழைப்பினை ஏற்றான் சந்துரு.

அவர் எடுத்ததும் “சந்துரு.. எப்படி ப்பா.. இருக்க..” என்றார் வாஞ்சையான குரலில்.

சந்துருவிற்கு, என்னமோ இந்த வாஞ்சையே பிடிக்கவில்லை. முன்போல.. அதாவது.. ‘இந்த இருபது வருடங்களாக முறிந்த உறவாக இருந்த உறவுநிலையே பரவாயில்லை போல.. ஆனால், இந்த வஞ்சனையான.. அஹ.. வாஞ்சை குரல் எனக்கு என்னமோ போலாகிறது..’ என உள்மனம் எடுத்து சொல்ல..

மீண்டும் “சந்துரு.. என்னப்பா.. பதிலே இல்ல. பிசியா இருக்கியா.. சாப்பிட்டியா இல்லையா” என்றார் மீண்டும் அக்கறையாக.

சந்துரு, தன்னைத்தானே திட்டிக் கொண்டான் ‘டேய்.. ஏன் இவ்வளவு சந்தேகம்..  உறவுகளின் பாசம் உனக்கு புரியலை.. அம்மா சொல்வது போல உறவு என்றால் முன்னபின்னதான் இருக்கும்..’ எனவும் இடித்துரைக்க.. நிதானமானான். நொடிகள் தாமதித்து யோசனையான குரலில் “இல்ல மாமா.. நீங்க சொல்லுங்க எப்படி இருக்கீங்க” என்றான்.

வடிவேல் “நாங்க நல்லா இருக்கோம் ப்பா.. நீ நேரம் காலத்தில் சாப்பிடறதில்லையா.. “ என சொல்லி அமைதியானார்.

சந்துரு “ஆர்டர் போட்டிருக்கேன் மாமா.. வந்திடும்.. நீங்க சொல்லுங்க” என்றான்.

வடிவேல் “உங்க மாமிக்கு.. ஒரே கவலைதான், பெண் பற்றி.. வேறென்ன ப்பா. அதைவிடு.. ஊரில் எல்லோரும் எப்படி இருக்காங்க..” என்றார்.

சந்துரு “ம்.. எல்லோரும் நல்லா இருக்கோம் மாமா.. வேற” என்றான்.

வடிவேல் “வேற.. வேற ஒண்ணுமில்ல ப்பா.. நாங்க பேசினதை உன் அப்பாகிட்ட சொல்லிட்டியா.. நாங்க நேரில் வந்து பேசணும்..” என்றார்.

சந்துரு “ஹம்.. மாமா.. சொல்லிட்டேன். அப்பா எங்களை ஓகேவான்னு கேட்க்கிறார். அப்பாக்கு.. என்ன சொல்றதுன்னு தெரியலை.. அம்மாவோட ஆசையை அவர் மறுக்க மாட்டார்..” என சொல்லி நிறுத்தினான்.

வடிவேல் “அப்புறம் என்ன  ப்பா..” என்றார். தன் தங்கை பையனின் தயக்கத்தை கடக்க நினைத்து.. சட்டென விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆசை கொண்டார்.

சந்துரு “இல்ல மாமா, எனக்கு ஒருவிஷயம் என்னான்னு புரியலை.. லேகாவை ஏன் அப்போது பாலனுக்கு வேண்டாம்ன்னு சொன்னீங்க..” என்றான், சட்டென. மனதில் உறுத்திக் கொண்டே இருக்கிறது இந்த இரண்டு வாரமாக.. அதாவது அவர்கள் தங்களிடம் திருமணம் பற்றி பேசிய நாள்தொட்டு உறுத்திக் கொண்டிருக்கிறது.

வடிவேல்.. அமைதியானார்.

சந்துரு “அம்மா லவ் மேரேஜ் பண்ணாங்கன்னா.. வேண்டான்னு சொன்னீங்க..” என்றான் யோசனையான குரலில்.

வடிவேல் பேசவேயில்லை.

“அப்போ, இப்பவும் அதேதானே.. ஏன் ஒன்னுக்கு ரெண்டா கேட்க்குறீங்க” என்றான்.

வடிவேலுக்கு, பிடிக்கவில்லை இந்த நேரடி தாக்குதல்.. என்ன தைரியம் என மனதில் தோன்ற பற்களை கடித்துக் கொண்டு அமைதியானார்.. வழிகள் எல்லாம் இப்படி பேசுபவனிடம் இருக்க.. இப்போது கேட்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை, அவருக்கு.

சந்துரு “என் மேல் கோவப்பட்டு அமைதியாக இருக்கீங்கன்னா.. நானும் அமைதியாகவே இருந்துக்கிறேன் மாமா. எங்களை விட்டுடுங்க.. என்னமோ ஒருமாதிரி.. நாங்க உங்களின் உறவாக உணர்ந்ததில்லையே.. அதனால் இது ஒத்துவராதுன்னு தோணுது.. நீங்க சீக்கிரமாக உங்களுக்கு ஏற்றவர்களை பார்த்திடுங்க” என்றான்.

வடிவேலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. என்னமோ ஆழ்ந்த பெருமூச்சு.. அத்தோடு ஒரு அதிர்ச்சி.. ‘என்னது விடறதா’ என.

சந்துரு “வைச்சிடுறேன் மாமா” என்றான்.

ஏதும் பேச முடியவில்லை அவரால்.. அமைதியாக அழைப்பு தன்போல துண்டிக்கப்பட்டது.

வடிவேலு.. வாசல் வராண்டாவில் நின்று பேசிவிட்டு.. தங்களின் அறைக்கு வர.. அவரின் மனையாள் வசந்தகுமாரி ஆவலாக காத்திருந்தார்.. “என்ன சொல்றாங்க.. உங்க தங்கச்சி பசங்க” என்றார் கொஞ்சம் நக்கலும் எரிச்சலும் கலந்தக் குரலில்..

கணவரோ கோவமாக “ம்.. இப்போது நீ சொல்ற இந்த உறவை கேட்க்க என் தங்கை இல்லை.. நீ சொல்லிக்கிட்டு இருக்க. அவ ஒருகாலத்தில் கேட்டால்.. நீ சொல்ல மாட்டேன்னுட்ட.. இப்போ பார் முதலுக்கே மோசம்.. என்னமோ போ..” என போனினை சார்ஜ் போட்டுவிட்டு.. இங்கும் அங்கும் நடந்தார்.

இப்போது வசந்தாவின் எண்ணுக்கு.. லதா அழைத்தார். வசந்தா, கணவரின் கோவத்தை பார்த்துவிட்டு.. போனோடு தன் ஓரகத்தியிடம் பேச அறையைவிட்டு வெளியே சென்றார். நீண்டநேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

சந்துரு எதோ நல்ல முடிவு எடுத்துவிட்ட திருப்தியில் உணவு உண்டு உறங்கினான்.