Advertisement

மனம் – 9

ஒரு வாரம் வேகமாய் கடந்திருந்தது.. லக்க்ஷனா வழக்கம் போல அவளது வேலைக்கு சென்றுகொண்டு இருந்தாள்.. அலுவலகம் சென்றதுமே,

‘ஹே சொல்லவே இல்ல பாத்தியா…’

‘நீங்க ரொம்ப வருஷம் சௌக்கார்பேட்ல இருந்தீங்கள்ள…’

‘ட்ரீட் எப்போ…’

‘கல்யாணம் எப்போ…’

‘மேட்ச் பார்க்க ப்ரீ டிக்கெட் வாங்கி கொடு…’ என்று எக்கச்சக்க பேச்சுக்கள்.. அனைத்தையும் ஒரு புன்னகையோடு கடந்து வந்தாள் லக்க்ஷனா.

ஆனால் அங்கேயே கொஞ்சம் நெருக்கமான நட்புகள் கேள்வி கேட்கையில், ‘அஞ்சு வருஷம் கழிச்சு யது இப்போதான் சென்னை வந்திருக்கான்.. நாங்க பேசினது கூட இப்போதான்.. கிப்ட் வாங்க கடைக்கு போனோம்.. இப்படி பண்ணிட்டாங்க..’ என்று உண்மையை சொன்னாலும்,

அவர்களுக்குள் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கு மட்டும் லக்க்ஷனா பதிலே சொல்லவில்லை.. ஆம் என்றும் சொல்லவில்லை இல்லையென்றும் சொல்லவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாய் இருந்தது.. பின் அதுவே பழகி இயல்பாய் நாட்கள் நகரத் தொடங்கியது.   

யதுவீரோ அவனது லீக் மேட்சில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தான்.. சென்னையில் இரண்டு மேட்ச்கள் நடந்து முடிந்ததில், ஒன்றில் யதுவீரின் அணி வெற்றிப் பெற்று இருந்தது. இன்னமும் மூண்டு மேட்ச்கள் இருக்க, பெருவாரியான வெற்றி பெறுவதே குறிக்கோள் என்பதாய் இருந்தது அவனுக்கு..

ஆனால் லக்க்ஷனா விசயத்தை அப்படியே விடவில்லை.. அவள் மீது தனக்கும் விருப்பம் இருக்கிறது என்று ஊர்ஜிதமாய் தெரிந்தபின்னே அவன் எப்படி சும்மா இருப்பான்?? இருக்கவும் தான் முடியுமா என்ன??

ஷீலு திருமணத்தில் இருந்து கிளம்பி நேராக அவனது டீம் மேட்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வர, இவன் வந்ததுமே அனைவரும் அவனை சூழ்ந்துகொள்ள, ஆளாளுக்கு ஒவ்வொரு கேள்வி கேட்டு கொஞ்சம் படுத்தித் தான் விட்டனர்..

லக்க்ஷனா வீட்டில் பேசாமல் எதுவும் நாம் வார்தைகளை விட்டிடக் கூடாது என்று கொஞ்சம் மழுப்பலாகவே பேசியவனிடம் அவனது கோச் வந்து ‘ப்ரெஸ் மீட் வச்சிருக்கலாம்..’ என,

‘பெர்சனல் விசயங்களுக்கு எல்லாம் ப்ரெஸ் மீட் வைப்பாங்களா??’ என்றான் யதுவீர்..

‘அப்போ அந்த போட்டோஸ்…’ என்று கோச் இழுத்ததற்கு,

‘ஷாப்பிங் போனோம்.. இப்படி பண்ணிட்டாங்க.. எப்படியும்  மேட்ச் முடியுறப்போ ப்ரெஸ் மீட் வைப்போமே.. அப்போ சொல்லிக்கலாம்…’ என்றவனிடம் என்ன சொல்ல போற என்பதாய் பார்த்தார் கோச்..

அவர் கோச் மட்டுமல்ல, யதுவீரின் குரு.. அதற்கும்  மேலாக நல்ல நட்பும் இருவருக்குமிடையே இருக்க, அதன் பேரில் தான் இப்படியான பேச்சுக்கள்.

‘ப்ரெஸ் மீட்ல சொல்றப்போ கேட்டுக்கோங்க.. இப்போ இதைப்பத்தி பேசவேணாம்.. மேட்ச்ல முக்கியம்…’ என்றவன் அதன் பிறகு இதைப் பற்றி யாரிடமும் பேசவும் இல்லை..

ஆனால் தன் பெற்றோர்களை அங்கே வரவழைத்து விட்டான்.. தனியே அங்கேயே வேறொரு அறை ஏற்பாடு செய்து, இரவே கார் அனுப்பி அவர்களை இங்கே வரவழைத்து விட்டான்.

“எங்களை ஏன் வர சொன்ன யது.. இங்க டைம் போகாது…” என்ற பூனம், சலித்தபடி அமர,

“எதுவும் பேசணுமா…” என்றபடி அவனின் அப்பாவும் அமர,

“ம்ம் பேசணும்…” என்றவன் கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு “எனக்கு லக்க்ஷிய பிடிச்சிருக்கு…” என்றான் இருவரையும் பார்த்து..

“என்.. என்ன??” என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு யதுவீரைப் பார்க்க,

“எஸ்.. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு….” என்று யதுவீர் சொன்னதும்,

“இதெல்லாம் நடக்குற காரியமா???” என்று அவனது அப்பா எகிறிட, “என்ன யது இதெல்லாம்…” என்பது போல் பூனம் பார்க்க,

“ஏன் இது நடக்காதா???” என்றான் யதுவீர்..

அவன் முகமே இது நடந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தை காட்ட, “அப்போ.. நெட்ல சொன்ன கதையெல்லாம் உண்மையா???” என்ற பெற்றவரின் கேள்விக்கு ஒரு வலி நிறைந்த பார்வை தான் பார்த்தான்.

பூனமோ “யது.. ஒருவேளை அப்படியெல்லாம் ஆகிட்டதுனால தான் நீ லக்க்ஷிய கல்யாணம் பண்ணனும் நினைக்கிறியா???” என்றார்..

“ம்மாம்… அப்படி ஒரு எண்ணம் என் மனசுல இருந்தா.. இதைவிட லக்க்ஷிய அசிங்கப்படுத்த வேற எந்தக் காரணமும் தேவையில்லை.. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு.. அது மட்டும் தான் முதலும் கடைசியுமான காரணம்…”

“அதெப்படி யது.. இத்தனை நாள் ஒண்ணுமே இல்லாதது இப்போ இவ்வளோ பிடிவாதம் கொடுக்குது…”

“எனக்கு தெரியலை டாட்… ஆனா லக்க்ஷி என் லைஃப்ல இருந்தா நான் மட்டுமில்ல நம்ம பேமிலி சந்தோசமா இருக்கும்…” எனும்போதே,

“அதுக்கு அவங்க எல்லாம் சம்மதிக்கணும்.. முக்கியமா லக்க்ஷி..” என்றார் பூனம்..

“லக்க்ஷி பத்தி நீங்க கவலைப் பட வேணாம்.. நான் பார்த்துப்பேன்.. பட் அவங்க வீட்ல…” என்று யது இழுக்க,

“இதோ.. இதுக்கு தான்.. இதுக்குதான் நம்மளை இங்க வர சொல்லிருக்கான்.. ஹே.. பக்வான்…” என்று யதுவீரின் அப்பா தலையை பிடித்துக்கொண்டு அமர, பூனமோ யாருக்கு சமாதானம் சொல்ல என்று தெரியாமல் மகனிடமும் கணவரிடமும் மாறி மாறி நடக்க,

“ஷி இஸ் மை லைஃப்.. அவ இல்லாட்டி….” என்றவன், தலையை இட வலமாய் ஆட்டிவிட்டு,  அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் எழுந்து குளியலறையில் நுழைந்துகொண்டான்..

எந்நாளும் இல்லாத திருநாளாய் யதுவீர் இப்படி நடந்துகொள்வது மற்ற இருவருக்குமே அதிர்ச்சியாகவும் இருந்தது, ஆச்சர்யமாகவும் இருந்தது.. அத்தனை பிரச்சனை நடந்தபோது கூட அமைதியாகத் தானே இருந்தான். ஆனால் இப்போது என்ன இந்த திடீர் பேச்சும் பிடிவாதமும் என்றிருக்க,

இதை லக்க்ஷனா வீட்டில் பேசினால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் இருந்தது.. நடந்த பிரச்சனைகளே காலத்திற்கும் மறக்காது.. அந்த நேரத்தில் யதுவீருக்கும் லக்க்ஷனாவுக்கும் காதல் இருந்ததோ இல்லையோ, ஆனால் அவனோடு சேர்த்து தானே அவள் பெயர் இணைத்து பேசப்பட்டது..

அதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்று கடந்துவிட்டாலும், பின்னே ஒரு நாள் லக்க்ஷனாவிற்கு என்று ஒரு வாழ்வு அமையும் போது இதனால் பிரச்சனை ஏற்பாடாது இருக்குமா என்பது கேள்வி குறியே..

தன் மகனால் ஒரு பெண்ணின் வாழ்வு கேள்விகுறியாகுமா?? என்ற நினைப்பு வரவுமே  பூனம் மனம் திக்கென்று இருந்தது. அதிலும் லக்க்ஷனா சிறு வயதில் இருந்து அவர் முன்னே வளர்ந்த பெண்..

‘ஆன்ட்டி ஆன்ட்டி…’ என்று சிரித்து பேசும் லக்க்ஷனாவின் முகமும், ஷீலுவின் திருமணம் முடிந்து ஒரு வலி நிறைந்த பார்வையோடு விடைபெற்ற லக்க்ஷனாவின் முகமும்  கண் முன்னே வந்து போக,

அந்த நேரத்தில் அவருக்கு யதுவீரின் விருப்பமோ இல்லை வேறெதுவுமோ எல்லாம் மனதில் படவில்லை.. லக்க்ஷனாவின் எதிர்காலம் மட்டுமே மனதில் தோன்ற, அடுத்து தன் கணவரிடம் என்ன பேசி அவரைக் கரைத்தாரோ, யதுவீர் குளித்து வரும் போது, இருவருமே

‘எப்போது லக்க்ஷனாவின் வீடு செல்ல வேண்டும்…’ என்று தான் கேட்டனர்..

அவனுக்கோ என்னடா இது குளித்து வருவதற்குள் எதுவும் மேஜிக் நடந்ததா என்றுதான் இருந்தது.. இருவரையும் திகைத்துப் பார்த்தவன்,

‘நிஜமாவா??’ என்று கேட்க,

‘உனக்காக இல்லை லக்க்ஷனாக்காக…’ என்றார் பூனம்..

யதுவீர் அடுத்து ஒன்றும் பேசவில்லை.. அவனின் அப்பா முகம் பார்த்தான். சம்மதம் என்று சொன்னாலும் அவருக்கு இதில் அத்தனை சம்மதமில்லை என்று நன்றாகவே அவரது முகம் பார்த்தால் தெரிந்தது..

அத்தனை சுலபத்தில் யார் தான் இதற்கு சம்மதம் என்று சொல்ல முடியும்.. வேறு மொழி.. வேறு இனம்.. எல்லாமே வேறு வேறு.. காலையில் எழுந்து, இரவு உறங்கப் போகும் வரைக்கும் செய்யும், வழக்கமாய் கொண்டிருக்கும் அனைத்து செயல்களும் வெவ்வேறானவை..

அப்படி இருக்கையில் உடனேயே இதற்கு சரி என்று சொல்லி, ஏற்பது யாருக்குமே கடினம்.. ஆனாலும் இப்போது மறுப்பாய் சொல்லாமல், அங்கே போய் பேசலாம் என்று சொல்லியிருப்பது அவனுக்குக் கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது..

அந்த நிம்மதியைக் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.. ஆக இதைப்பற்றி பேசாமல் அடுத்து அவனது மேட்ச் பற்றி பேசினான்.. உணவு தருவித்து இருவரையும் சாப்பிட செய்தான்.. ஓரளவு சகஜ பேச்சு வரவும் தான்,

“ஓகே நல்லா ரெஸ்ட் எடுங்க.. நான் என் ரூம் போறேன்…” என்றவன் கிளம்பிவிட்டான்.

ஓரளவு பாரம் குறைந்தது போல் இருந்தது யதுவீருக்கு. ஆனால் லக்க்ஷனா வீட்டைப் பற்றி நினைத்தால் ஒன்றிற்கு இரண்டு மடங்காய் பாரம் கூடுவது போலவும் இருந்தது. அவளது வீட்டில் கூட எப்படியாவது பேசி சம்மதிக்க வைத்துவிடலாம் போல,

இந்த லக்க்ஷனாவை எப்படி சம்மதிக்க வைத்து, அவள் மனதில் இருப்பதை பேச வைத்து என்று நினைக்கும் போதே அவன் அவனிடமே விட்டுக்கொண்ட சவால் நினைவிற்கு வர,

‘ஹ்ம்ம் என்னை என்கிட்டவே தோற்க வச்சிட்டா…’ என்று நினைத்துக்கொண்டவன் இதழில் மெல்லியதாய் ஒரு புன்முறுவல்.

அங்கே லக்க்ஷனாவின் வீடோ யதுவீரின் மனநிலைக்கு நேர்மாறாய் இருந்தது.. இவர்கள் திருமணம் முடிந்து அங்கே சென்று இறங்கவுமே அக்கம் பக்கத்து வீட்டினர் கொஞ்சம் கேள்வியாகவும் ஆர்வமாகவும் பார்க்க, மீரா யாரையும் பார்க்காது பிள்ளைகளை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்..

உள்ளே வந்ததும் கதவையும் இறுக பூட்டிவிட்டார்.. அலைபேசியில் தொடர்ந்து அழைப்புகள் வந்ததுதான். எத்தனை நேரத்திற்கு அதை அமர்த்தியே வைத்திருக்க முடியும்.. ஆக சைலண்டில் போட்டுவிட்டார்.. கொஞ்சம் சலிப்பாய் இருந்தது. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதுபோல எல்லாம் சமாளித்து ஆகவேண்டும்.. கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தானா?? என்ற கேள்வியும் இருந்தது..

அறைக்குள் நுழைந்துகொண்ட லக்க்ஷனாவிற்கோ, மனம் ஒருநிலையில் இல்லை. அவளது பயமெல்லாம் நவநீதன் வந்து என்ன செய்யப் போகிறாரோ என்பதுதான். உள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் நட்னதுகொண்டு இருந்தவளை  மீரா அழைத்தார்..

“என்னம்மா…” என்றபடி வெளியே வந்தவளை, அமர வைத்தவர், “நிர்மல் நீ போய் வேற எதுவும் வேலை இருந்தா செய்…” என்று மகனை உள்ளே அனுப்பியவர்,

“சொல்லு லக்க்ஷி..” என்றார் மொட்டையாக..

அவளோ புரியாமல் பார்க்க, “இப்போவாவது உன் மனசுல இருக்கிறத சொல்லு லக்க்ஷி.. ஒண்ணுமில்லன்னு சொல்லாத.. நான் உன்னோட அம்மா.. உன்கிட்ட தெரியுற சின்ன சின்ன மாற்றம் கூட எனக்குத் தெரியும்.. சொல்லு…” என்று மீரா பார்க்க, லக்க்ஷனாவிற்கு திக்கென்று இருந்தது..

“ம்மா…!!!!” என்று அதிர்ந்து பார்க்க,

“அம்மா தான் டி.. அதனால தான் கேட்கிறேன்… இதை நான் முன்னாடியே பேசிருக்கணும்னு இப்போ தோணுது.. நீ இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்தே நார்மலா இல்லை.. எதோ ஒரு ஸ்ட்ரெஸ் உனக்குள்ள.. இப்போ கூட யதுவீர் கிட்ட நீ முகம் கொடுத்து ஒருவார்த்தை பேசல.. ஆனா அப்பா வந்து யதுவ திட்டுவாரோன்னு வருத்தப்படுற..” என்ற மீராவிற்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை..

ஒருநொடி, அவள் மனதில் அழுத்தும் விசயத்தை அப்படியே மீராவிடம் இறக்கி வைத்துவிடலாமா என்றுகூட இருந்தது லக்க்ஷனாவிற்கு.. ஆனால் நினைத்தது போல அப்படியே சட்டென்று சொல்லிடும் விசயமா என்ன??

“பேசு லக்க்ஷி.. என்கிட்டயும் அமைதியா இருக்காத.. அப்பா வந்தா என்ன முடிவு எடுப்பார்னு சொல்ல முடியாது.. சோ நீ பேசித்தான் ஆகணும்…” என்றிட,  கண்களில் நீர் நிறைய மீராவை பார்த்தாள் லக்க்ஷனா..

இந்த கொஞ்ச நாட்களாகவே அவளுக்கு அழுகை மட்டும் சட் சட்டென்று வந்துவிடுகிறது.. அது மீராவிற்கும் தெரியுமென்பதால், இந்த முறை ஏன் எதற்கு என்று எதுவும் சொல்லாமல் நான் கேட்டதற்கு பதில் சொல் என்பதுபோல் அமர்ந்திருந்தார்…

“ம்மா அது…”

“ம்ம்..”

“அது வந்தும்மா..” என்று இழுக்க, “ம்ம் சொல்லு லக்க்ஷி…” என்றார் மீரா..

“என்.. எனக்கு யதுவ பிடிக்கும்மா.” என்றாள் மென்று விழுங்கி…

“ம்ம்.. எனக்குக்கூட தான் பிடிக்கும்.. நல்ல பையன்.. ஆனா நான் கேட்டது இதில்லையே.. எந்தமாதிரி பிடிக்கும்??” என, அவளோ தயங்கி தயங்கிப் பார்த்தாள்.

“ம்ம் சொல்லு லக்க்ஷி…”

“அதும்ம்மா.. ரொம்.. ரொம்ப பிடிக்கும்.. முன்னாடி இருந்தே.. ஆனா சொன்னதில்ல.. அவன்ட பேசினதில்ல..” என, மீராவிற்கும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தது. ஓரளவு தெரிந்துகொண்டே தானே கேட்கவும் செய்தார்..

“ம்ம் முன்னாடி இருந்துன்னா எப்போ???”

“அங்க இருக்கும் போதே.. ஆனா இப்போ வரைக்கும் யதுக்கு இது தெரியாதும்மா.. நான் அவனை ஹேட் பண்றேன்னு தான் நினைச்சிட்டு இருக்கான்.. எதுவுமே நான் இதுவரைக்கும் வெளிய காட்டினதில்லை..” எனும்போது தான்,  மீராவிற்கும் மகளின் மன அழுத்தத்திற்காக காரணம் புரிந்தது. 

நிறைய விசயங்களை மனதிற்குள்ளேயே போட்டு போட்டு வைத்ததினால் தான், அவளால் சில நேரங்களில் அவளது உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் தவித்திருக்கிறாள் என்றும் புரிய,

“ம்ம் ஏன் நீ சொல்லல லக்க்ஷி.. பொதுவா இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் அப்படி இல்லையே.. கண்டதும் காதல்னு வேகமா இருக்காங்களே…” என்றார் இயல்பாய்..

“ம்மா…” என்று லக்க்ஷனா குழப்பமாய் பார்க்க, “நான் உண்மையை தான் சொல்றேன் லக்க்ஷி… நானும் நிறை ஸ்டூடன்ஸ க்ராஸ் பண்ணி வர்றேனே..” என,

“ம்ம் எனக்கு பயமா இருந்ததும்மா..” என,

“என்ன பயம்…??” என்று மீரா கேட்க, அத்தனை நேரம் தயங்கி தயங்கி பதில் சொன்னவள், இப்போது மொத்தமாய் கொட்டிவிட்டாள்.

ஐந்து வருடத்திற்கு முன் நடந்ததையும், அதன்பின் எங்கே அவனைப் பற்றிய செய்தியோ இல்லை அவனையோ பார்க்க நேரிடுமோ என்று அஞ்சி ஸ்போர்ட்ஸ் சேனல் கூட பார்க்காது இருந்ததையும், பின் இப்போ யதுவீரைப் பார்த்தபின் அவள் மனதில் தோன்றிய மாற்றத்தையும், அவள் எடுத்த முடிவைப் பற்றியும் மொத்தமாய் சொல்லிட, ஏனோ அந்த நேரத்தில் மீராவால் லக்க்ஷனா மீது கோவம்கொள்ள முடியவில்லை..

மாறாக பெருமையாகத் தான் இருந்தது.. அனைத்தையும் சொல்லி முடித்த பின்னே லக்க்ஷனாவின் அழுகை இன்னும் கூடியிருக்க, மெதுவாய் அவள் தலையை நீவியவர்,

“சரி போ.. அம்மாட்ட சொல்லிட்டல.. போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.. இனியும் இதெல்லாம் மனசுல வச்சு குழப்பாத.. தெளிவா இருக்க பாரு..” என்றவரின் பேச்சு தான் அவளுக்கு இன்னும் குழப்பத்தை கொடுத்தது..

இதெல்லாம் வேண்டாம் விடு என்கிறாரா இல்லை என்னிடம் சொல்லிவிட்டாய் அல்லவா நான் பார்த்துகொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுக்கிறாரா?? என்று அவளுக்கு குழப்பமாய் இருக்க,

“என்ன லக்க்ஷி போ.. போய் கொஞ்சம் தூங்கு.. அப்பா நைட் வந்திடுவார்.. அப்புறம் பேசிக்கலாம்…” என்றவருக்கு மனதில் நிறைய நிறைய யோசனைகள்..

“இல்லம்மா அது.. நீ..” என்று தயங்க,

“எனக்கு உன்மேல கோவமில்ல போதுமா.. போ.. இனி நாங்க பார்த்துக்கிறோம்.. நீ ஃப்ரீயா இரு..” என்று அனுப்பி வைத்தார்..

ஆனால் இரவு நவநீதன் வந்தபிறகோ, ஒரு இறுக்கமான சூழல் தான் அங்கே.. வந்தவர், முதலில் யாரோடும் பேசவில்லை.. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து தன் குடும்பத்தினரை நேரில் காண்கிறார்.. ஆனால் அதன் பிரதிபலிப்பு எல்லாம் எதுவும் இல்லாமல், இறுக்கமாகவே இருக்க, லக்க்ஷனா சற்று தள்ளி தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..

நிர்மல் சகஜமாய் அப்பாவிடம் அமர்ந்திருக்க, மீராவும் கணவரிடம் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தார்..

மௌனமே அங்கே வெகு நேரம் பேசிக்கொள்ள, என்னவோ மீராவிற்கு லக்க்ஷனா தலை குனிந்து அமர்ந்திருப்பது சங்கடமாய் இருக்க,

“லக்க்ஷி.. நிமிர்ந்து உட்கார்.. நீ எந்த தப்பும் பண்ணல…” என்றவரின் குரலில் வேகமாய் நிமிர, மீராவோ அதே வேகத்தில்,

“சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்..” என்று கணவரிடம் சொல்ல,

“என்ன பேச?? இல்லை என்ன பேச?? அதான் போட்டோவும் கதையுமா எல்லாம் கண்கொண்டு பார்த்தேனே..” என்றார் நவநீதன்.

“நீங்க பார்த்ததோ படிச்சதோ எதுவும் உண்மையில்லை..” என்று மீரா சொல்லும்போதே, “அப்.. அப்போ இப்போ வரைக்கும் எதுக்கு அவங்க சைட்ல சும்மா இருக்காங்க.. நம்மதான் சாதாரண மக்கள்.. அவங்க அப்படியில்லையே.. ஒரு மறுப்பு தெரிவிச்சு சின்னதா இதோ இதே ஃபேஸ் புக்ல ஸ்டேட்ஸ் போடலாமே..” என்று எகிறினார் ..

“அதில்லைங்க…”

“ம்ம்ச் போதும் மீரா.. நாளைக்கு அவங்களை வர சொல்லு.. இல்ல எங்க இருக்காங்கன்னு கேளு.. இதை இப்படியே விட முடியாது.. நாளைக்கு நம்ம பொண்ணு வாழ்க்கை தான் பாதிக்கும்..”

“எந்த பாதிப்பும் வராது..”

“அதெப்படி நீ அவ்வளோ உறுதியா சொல்ற…??”

“நெட்ல வந்தது எல்லாம் பொய்யா இருக்கலாம்.. ஆனா ஒருவிசயம் உண்மை.. லக்க்ஷி யதுவ லவ் பண்றா…” என்று மீரா சொன்னதும்,

“என்னது…” என்று நவநீதன் அதிர்ந்தே போனார்..

லக்க்ஷனாவும் தான்.. ‘ஐயோ ம்மா.. இப்படி டக்குனு சொல்லிட்டியே…’ என்று பார்க்க, நிர்மலோ என்னடா இது என்று பார்த்தவன், மெல்ல தன் அக்காவிடம் நகர்ந்து போய் ‘அப்போ யது அண்ணா இல்லையா எனக்கு..’ என்று காதை கடிக்க, அந்த நேரத்தில் லக்க்ஷனாவிற்கு சட்டென்று சிரிப்பு வந்திட்டது.

‘எந்த நேரத்தில் என்ன கேட்கிறான்..’ என்று முறைத்துகொண்டே சிரிக்க, மீராவோ மகளின் முகத்தைப் பார்த்தவர்,

“இதோ பாருங்க.. இதான் லக்க்ஷி… மனசுக்குள்ள போட்டு போட்டு.. அழுத்தி அழுத்தி.. இங்க வந்ததுல இருந்து அவ எப்படி இருக்கான்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. நீங்க லீவுக்கு வர்றீங்க அப்புறம் போயிடுறீங்க.. ஆனா நான் இவங்க கூடவே இருக்கேன்..

இவ ஒவ்வொரு விசயத்தையும் போட்டு அழுத்தி, சில நேர அவளுக்கே ஓவர் ஸ்ட்ரெஸ் ஆறப்போ அதெல்லாம் பார்க்க ஒரு அம்மாவா எனக்கு எப்படி இருக்குனு எனக்கு மட்டும் தான் தெரியும்.. ஒருத்தனை பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு அவளுக்கு இப்போ வரைக்கும் பயம்..

அவளோட காரணங்கள் எல்லாம் சரிதான்.. அதெல்லாம் அவ மனசுல சுமந்திட்டு, இத்தனை நாள் அடக்கி வச்ச கண்ணீருக்காகவாது நம்ம அவளுக்கு பிடிச்ச வாழ்கையை அமைச்சுக் குடுக்கணும்..” என்று மீரா லக்க்ஷனா அவரிடம் சொன்னவற்றை எல்லாம் சொல்லி, ஷீலு திருமணத்தில் கூட யதுவீரும் சரி லக்க்ஷனாவும் சரி எப்படி இருந்தனர் என்பதையும் சொல்லிட,   லக்க்ஷனா இதை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை.

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து அறிவுரை சொல்வார்கள் அது இதென்று மட்டுமே நினைத்திருக்க, மீராவோ இப்படி பேச, ஆச்சர்யமாய் தான் பார்த்தாள்.. நவநீதன் அப்படியே.. முதலில் மீரா பேசுகையில் கோவமாகவே கேட்டவர், பின்னே அவர் பேசியதன் பொருள் புரிய மகளது முகத்தைப் பார்த்தார்..

அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகள் எல்லாம் அவருக்கு என்ன உணர்த்தியதோ, “நாளைக்கு வரட்டும் பேசிக்கலாம்..” என்று சொல்லி எழுந்து உள்ளே சென்றிட, “அம்மா…” என்றுவந்து மீராவை கட்டிக்கொண்டாள் லக்க்ஷனா..

“இனியாவது நீ ரிலாக்ஸா இரு..” என்றவர், “நான் பார்த்துக்கிறேன்..” என்று உள்ளே சென்றிட, அடுத்து அவரே தான் யதுவீருக்கு அழைத்து லக்க்ஷனாவின் அப்பா வந்துவிட்டார் என்று மட்டும் சொல்ல, மறுநாள் காலையிலேயே யதுவீரும் அவன் பெற்றோரும் அங்கு வந்திட்டனர்..

லக்க்ஷனா வந்தவர்களை வரவேற்றவள், யதுவீரை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு சற்று தள்ளி நின்றுகொள்ள, பெரியவர்களோ அது இதென்று எதுவும் பேசவில்லை, நேரடியாக எப்போது திருமணம் என்பதில் தான் குறியாய் இருந்தனர்..

யதுவீருக்கோ, இப்போதாவது லக்க்ஷனா அவள் மனதில் இருப்பதை சொல்வாளா என்றிருக்க, அவளோ நினைத்தது நடக்கப் போகும் மகிழ்ச்சியில் இருந்தாள். ஆனால் மறந்தும் கூட அவனை எறிடவில்லை.. யதுவீர அவளைத் தவிர வேறெதையும் பார்க்கவில்லை..

வந்தவன் ஒருமுறை நவநீதனிடம் மன்னிப்புக் கேட்க, “இனியாவது எல்லாம் நல்லபடியா நடக்கட்டும்..” என்றுமட்டும் சொல்லிவிட, அடுத்து பெரியவர்கள் மேற்கொண்டு செய்யவேண்டியதைப் பேச,

“இப்போ என்கேஜ்மென்ட் மட்டும் வச்சுக்கலாம்.. மூணு மாசத்துல வி.ஆர்.எஸ் வாங்கிட்டு இங்கயே வந்துடலாம்னு இருக்கேன்.. மேரேஜ் அதுக்கப்புறம் டேட் பிக்ஸ் பண்ணிக்கலாம்..” என்று நவநீதன் கூற, மீராவிற்கு பெருத்த மகிழ்ச்சி.

அனைத்தும் பேசி முடித்து, வந்தவர்கள் அங்கேயே உண்டு விட்டும் கிளம்ப, யதுவீரோ, லக்க்ஷனாவோ யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவே இல்லை.. அப்படியே நாட்களும் கடக்கத் தொடங்கியது..    

 

           

        

               

    

                     

                 

Advertisement