Advertisement

மனம் – 8

ஷீலுவின் திருமணம் நல்ல படியாய் நடந்து முடிந்திருந்தது… யார் பக்கம் இருந்தும் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாய் நல்ல முறையில் நடந்தேறியது.

லக்க்ஷனா மீராவோடு தான் இருந்தாள். அமைதியாய் நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்.. நிர்மலும் கூட லக்க்ஷனாவோடு இருக்க, மீரா மகளை விட்டு நகரவேயில்லை.

யதுவீரும் இவர்கள் பக்கம் வரவில்லை.. அவனுக்கு வேலைகள் சரியாய் இருந்தது. ஆக உள்ளே இருக்கும் பிரச்சனையை வெளியே யாரும் பெரிதாய் காட்டிக் கொள்ளவில்லை.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் விஷயம் அறிந்தவர்கள் கொஞ்சம் பேர் ஆர்வமாய், ஆராய்ச்சியாய் யதுவீரையும் லக்க்ஷனாவையும் பார்க்க, அவர்களோ யாரையும் சட்டை செய்யவில்லை.  எப்போதும் இருப்பது போல் இயல்பாய் தங்கள் இடைவெளியில் இருக்க, அடுத்து அங்கே யார் கண்ணும் அவர்கள் மீது படியவில்லை..

மீராவிற்கு அப்போது தான் அப்பாடி என்றிருந்தது.. எங்கே திருமண வீட்டிலும் ஏதாவது பிரச்சனை கிளம்புமோ என்று பயந்துகொண்டு இருந்தார். ஆனால் அப்படியெதுவும் இல்லையென்றதும் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

லக்க்ஷனா கூட கொஞ்சம் தயங்கி தயங்கித் தான் அங்கே அமர்ந்திருந்தாள். ஆனால் யாரும் அப்படி எதையும் அவளிடம் கேட்கவில்லை என்றதும் கொஞ்சம் கொஞ்சம் அவளால் இயல்பாய் மூச்சு விட முடிந்தது.         

முதல் நாள் ப்ரெஸ் மீட் பற்றி யதுவீர் லக்க்ஷனா, மீரா மற்றும் அவனது பெற்றோரிடம் பேச, மீராவோ நவநீதனை கலக்காமல் எதுவும் பேசக்கூடாது என்றும் தோன்ற,

இப்படி ப்ரெஸ் மீட் வைத்து பேசினால் அதன்பின் அனைத்தும் சரியாகிவிடுமா என்றும் தோன்ற, யதுவீரிடம் அதை தான் கேட்டார். அவனுக்கோ அப்போது மனதில் இன்னொரு எண்ணம்.

ப்ரெஸ் மீட்டில் கேட்கும் கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும், அதெல்லாம் லக்க்ஷனாவை பாதிக்க கூடாது அதற்கும் மேலாய், அவளை அப்படி எனக்கும் லக்க்ஷனாவிற்கும் ஒன்றுமில்லை என்று அனைவரின் முன்னும் சொல்லவும் அவனால் முடியாது என்பதுபோல் தோன்ற, 

அவளோ ‘ஒண்ணுமில்லை..’ என்று சொல்லிவிடுவாயா என்பது போல் பார்க்க, அவனோ ‘அப்படி சொல்ல முடியுமா..’ என்று பார்த்தான்..

அவர்களை சுற்றி இருந்த பெரியவர்கள் மூவருக்கும் இவர்களின் பார்வை புரியாமல் பார்க்க, மீராவோ மகளின் முகத்தைப் பார்த்தவருக்கு இன்னும் இந்த சூழலை வளர விடக்கூடாது என்று நினைத்தார்..

“யது.. இப்போ எதுவுமே வேணாம்.. ஜஸ்ட் நம்ம இதெல்லாம் பெருசா எடுக்கலை அப்படின்னு க்ராஸ் பண்ணி போயிடுவோம்.. அப்போதான் மத்தவங்களுக்கும் இதெல்லாம் பெருசு பண்ணாம போவாங்க.. நம்ம ரியாக்ட் பண்ண பண்ணதான் எல்லாருக்கும் இது பெருசா தெரியும்…” என,

அவர் சொல்வதும் அனைவருக்கும் சரியெனப்பட, யதுவீரின் அப்பாவும் அதையே தான் அப்போது சொன்னார்..

“இதை இதோட விட்டுடலாம் யது.. யாரும் எதுவும் பேசவேணாம்.. நம்ம தேடி போய் யாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு இல்லை.. அது இன்னும் பெருசு பண்ணதுபோல ஆகிடும்.. நீ ஷீலு மேரேஜ் முடியவும் உன்னோட மேட்ச்சஸ்ல கான்சன்ட்ரேட் பண்ணு..

லக்க்ஷனா உன்கிட்ட யார் எது கேட்டாலும், அதெல்லும் ஃபேக்.. நாங்க ஜஸ்ட் கடைக்கு போனப்போ எடுத்த போட்டோஸ இப்படி போட்டுட்டாங்கன்னு சொல்லு.. எதுவா இருந்தாலும் ஷீலு மேரேஜ் முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம்..” என்று அவர் சொன்னது அப்போது அனைவருக்குமே கொஞ்சம் ஏற்புடையதாய் இருந்தது.

அதேநேரம் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, நீலமும் ஷீலுவும் என்னவோ ஏதோவென்று அங்கே வந்திட, அவர்களுக்கும் இதுதான் விசயம் என்று சொல்ல,

“சாரி மீரா… சாரி லக்க்ஷி..” என்று அவர்கள் மன்னிப்பும் கேட்க, இதில் இங்கே யார் மீதும் தவறில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்ததால்,

“கவலைப்படாம கல்யாண வேலைகளை பாரு நீலம்..” என்று மீரா அனுப்பி வைத்தார்..

அதன் பின் ஷீலு லக்க்ஷனாவோடு இருக்க, யதுவீரின் பெற்றோர்களும், வெளியே சென்றிட, யதுவீர் இன்னும் அங்கேதான் அமர்ந்திருந்தான்..

மீராவோ மகளிடம், “எவ்வளோ நேரம் இப்படியே ரூம்குள்ள இருக்க போற லக்க்ஷி.. எழுந்து வெளிய வா.. தப்பு உன்மேல இல்லைங்கிறப்போ நீ ஏன் இப்படி இருக்க..” என்று சொல்ல,

“ஆமா லக்க்ஷி.. எழுந்து வெளிய வா.. நீ இப்படி இருக்கிறது கஷ்டமா இருக்கு..” என்று ஷீலுவும் அழைக்க,

யதுவீரை ஒரு பார்வை பார்த்தவள், “கொஞ்சம் பிரெஷ் பண்ணிட்டு வர்றேன்…” என்று சொல்லி ரெஸ்ட் ரூம் செல்ல, மீரா “அவளை கூட்டிட்டு வா ஷீலு..” என்றுவிட்டு சென்றார்..

யதுவீரும் சரி ஷீலுவும் சரி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. ஆனால் ஷீலுவிற்கு நிஜமாகவே லக்க்ஷனாவை நினைத்து வருத்தமாய் இருந்தது.. சும்மாவே அவளுக்கு யதுவீரைப் பிடிக்காது… இந்த விஷயம் நடந்ததில் இருந்து லக்க்ஷனா யதுவீரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும், 

ஆக எல்லாம் சேர்ந்து மொத்தமாய் எங்கே யதுவீரை அவள் ஏதாவது பேசிடுவாளோ என்றிருக்க,

“பய்யா.. லக்க்ஷி எது பேசினாலும் மனசுல வச்சுக்க வேணாம்…” என்றாள் கெஞ்சலாய்..

“ஹேய்… ஷீலு.. ப்ரீயா இரு.. நத்திங் ப்ராப்ளம்…” என்று யதுவீர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே லக்க்ஷனா அங்கே வந்தவள்,

யதுவீரை ‘நீ இன்னும் இங்கேதான் இருக்கிறாயா…’ என்பது போல் பார்த்துவிட்டு, ஷீலுவிடம்

“போலாமா…” என்று கேட்க, அவளும் சரியென்று நடக்க, “லக்க்ஷி…” என்று யதுவீர் அழைத்திருந்தான்..    

இரு பெண்களுமே என்னவென்று அவனைப் பார்க்க, “கொஞ்சம் பேசணும் லக்க்ஷி…” என்றான் அவன் இருந்த இடத்தை விட்டு எழாமல்.

ஷீலுவுக்கோ இப்போது தான் கொஞ்சம் அமைதியாகி இருக்கிறது மீண்டும் பேசி என்ன ஆகப்போகிறதோ என்று இருக்க, “பய்யா…” என்று அவள் எதுவோ சொல்ல வரும் போது தடுத்தவன்,

“பேச வேணாம்னு லக்க்ஷி சொல்லட்டும்…” என்றான் அவளையே பார்த்து..

ஷீலு லக்க்ஷனாவைப் பார்க்க, அவளோ யதுவீரைப் பார்த்து “என்ன பேசணும்…” என்றாள்.      

இருவரும் பேசிக்கொள்ளும் விதமே ஷீலுவிற்கு வித்தியாசமாய் இருந்தது. இவர்கள் சண்டையிடுகிறார்களா இல்லை சகஜமாய் பேசுகிறார்களா என்பதே அவளுக்குப் புரியாமல் இருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றிருந்தாள்.

“நான் என்ன பேசுவேன்னு உனக்குத் தெரியாதா லக்க்ஷி…” என்றவன்.. “ஷீலு ஒரு டூ மினிட்ஸ்…”  என்று அவளைப் பார்க்க,

“அவளை ஏன் போக சொல்ற யது…” என்று லக்க்ஷனா கேட்டபிறகு தான் ‘ஓ என்னை வெளிய போக சொல்றாங்களா…’ என்று ஷீலுவிற்கு புரிந்தது.

எங்கேடா இருவரும் பேசி அது பெரிய சண்டையாகி வெளியே இருக்கும் பெரியவர்கள் எல்லாம் உள்ளே வந்து அது வேறு களேபரமாக போகிறதோ என்று அஞ்சிய ஷீலு,

“பய்யா ப்ளீஸ்… இப்போ எதுவும் பேசவேணாம்.. எதுவா இருந்தாலும் மேரேஜ் முடியட்டுமே.. ப்ளீஸ்.. எனக்காக…” என,

அதற்குமேல் யதுவீரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.. ‘ம்ம்ம்…’ என்று ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன், “ஓகே…” என்று சொல்லி அவர்களைத் தாண்டி வெளியே சென்றுவிட,

லக்க்ஷனாவிற்கோ ‘என்ன பேச வந்தான்…’ என்று மண்டை குடைந்தது..

ஆனாலும் இப்போதிருக்கும் இந்த சிறு அமைதியே போதும் என்று அவளும் அமைதியாகவே இருந்திட, மறுநாள் ஷீலு திருமணம் எவ்வித சிரமங்களும் இல்லாமல் நல்லபடியாய் நடந்து முடிந்தது..

மீரா ஏற்கனவே சொல்லிவிட்டார்,  ஷீலுவின் திருமணம் முடிந்ததும் நேராக கிளம்பி வீட்டிற்கு சென்றிட வேண்டும் என்று.. ஆக எப்போதடா எல்லாம் முடியும் என்று மீரா காத்திருக்க,

‘இதோ இதோ எல்லாம் முடியப் போகுது…’ என்று நினைத்தது வேறு யாருமில்லை லக்க்ஷனா தான்.

யதுவீரை விட்டு தள்ளி இருந்தாலும் அவ்வப்போது அவளது பார்வைகள் அவனைத் தொட்டுக்கொண்டு தான் இருந்தது. இதோ கொஞ்ச நேரத்தில் லக்க்ஷனா கிளம்பிடுவாள், அதேபோல் அவனும் மாலை அவன் டீம் இருக்குமிடம் சென்றிடுவான்.

அதன் பிறகு அவளுக்கு அவளது வேலை. அவனுக்கு அவனது மேட்ச்கள் என்று நேரம் பறக்கும்.. இனி ஒருமுறை அவனிடம் பேசும் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.. நேற்று அவர்கள் வாழ்வில் அடித்த சூறாவளியின் தாக்கம் இனி எப்படி இருக்கும் என்று இருவருமே அவர்களது தினசரியை கடக்கும் போது தான் தெரியும்..

அனைத்திற்கும் மேலாக மாலை வீட்டிற்கு அப்பா வந்திடுவார் என்று நினைக்கும் போதே லக்க்ஷனாவிற்கு உள்ளே பிசைந்தது. கொஞ்சம் கண்டிப்பான பேர்வழி தான் நவநீதன்..

‘அப்பா வர்றார் லக்க்ஷி,..’ என்று மீரா சொல்லும் போதே அவளுக்கு நெஞ்சு அடைத்தது..

இனி அவர் வந்து என்னவெல்லாம் பேச போகிறாரோ முக்கியமாய் யதுவீரிடம் எதுவும் சண்டை போடுவாரோ அவனை எதுவும் திட்டுவாரோ என்று பயமாய் இருந்தது..

அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவள், “ம்மா அப்பா யாரையும் திட்டாம பார்த்துக்கோ ப்ளீஸ்…” என்று சொல்லவும் மீராவோ லக்க்ஷனாவை வித்தியாசமாய் பார்த்தார்.

“யாரையும்னா யார லக்க்ஷி…??” என்றவர் அவளின் பார்வை செல்லும் திசையை பார்க்க, அங்கோ யதுவீர் வெறுமென கைகளை கட்டி அமர்ந்திருந்தான். பக்கத்தில் யாரோ பேசியபடி இருக்க, சும்மா அவருக்காக தலையை மட்டும் ஆட்டியபடி இருந்தான்.

அவன் முகத்திலும் நேற்றிலிருந்து ஒரு செழிப்பில்லை.. எதுவோ போட்டு யோசனை செய்துகொண்டே இருப்பது போல் இருந்தது. லக்க்ஷனாவும் அப்படி இருக்கவே தான் மீரா இந்த கேள்வியை கேட்டார்.

அவளிடம் இருந்து பதில் வராது போகவும், “லக்க்ஷி உன்னத்தான்.. யாரையும்னா யாரை திட்டக் கூடாதுன்னு சொல்ல வர்ற..??” என,

“எல்லாரையும் தான் ம்மா.. உன்ன.. யதுவ…. ஹ்ம்ம் என்னை எதுனாலும் சொல்லி திட்டட்டும் ஆனா ப்ளீஸ் ம்மா.. யதுவை மட்டும் திட்ட வேணாம் சொல்லு.. அவனும் இதுக்காக ரொம்ப ஃபீல் பண்றான்.. நீயும் பார்த்த தான.. இன்னும் ரெண்டு நாள்ல மேட்ச் இருக்கு அவனுக்கு..

அப்பா ஏதாவது பேசி அவனுக்கு அதெல்லாம் டிஸ்டர்ப் ஆச்சுன்னா அவனால மேட்ச்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியாது.. சோ ப்ளீஸ் ம்மா…” என்று கண்களை சுருக்கி கேட்கும் மகளைப் பார்த்து தான் அவருக்கு இப்போது பயமாய் இருந்தது.

இப்போது இவள் எதற்காக இத்தனை கவலைப் படுகிறாள்… இப்படியொரு நிகழ்வு நடந்துவிட்டதே என்றா இல்லை யதுவீரை, நவநீதன் எதுவும் பேசிவிடுவார் என்றா??

இரண்டில் முதலாவது என்றால், இப்போது லக்க்ஷனா இப்படி பேசியிருக்க மாட்டாள்.. இரண்டாவது என்றால், நடந்தது எனக்கு பெரிதில்லை ய்துவீர் தான் பெரிது என்பது போல் அல்லவா அர்த்தமாகும்..

அப்படியானால்…????????????? என்ற கேள்வி எழும் போதே, அவருக்கு மனதில் இன்னும் பயம் கூடியது..

லக்க்ஷனாவோ மீரா என்ன சொல்வார் என்று பார்த்திருக்க, அவரோ “எதுன்னாலும் வீட்ல போய் பேசிக்கலாம் லக்க்ஷி.. இங்க வச்சு எதுவும் வேணாம்…” என்றவர்,

“இதோ கிப்ட் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.. வா நம்மளும் போய் கொடுத்திட்டு.. சாப்பிட்டிட்டு அப்படியே கிளம்பிடலாம்…” என, லக்க்ஷனாவால் ஒன்றும் சொல்ல முடியாமல் போனது..

மீரா சொல்வதற்கெல்லாம் சரி சரி என்று சொல்லி, பரிசு கொடுத்து, உண்டுவிட்டு, ஷீலுவோடு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டு, அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகையில், அவளுக்கு உடலே தொய்வது போலிருந்தது.

‘எங்களுக்காக இங்க இருந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மீரா…’ என்று நீலம் சொல்கையில் பூனமும் அவர் கணவரும் அங்கே வந்துவிட்டனர்..

“லக்க்ஷி அப்பா வரவும் சொல்லுங்க.. நாங்களே வீட்டுக்கு வந்து பேசுறோம்…” என, மீரா ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினார்..

“போயிட்டு வர்றோம் ஆன்ட்டி…” என்று லக்க்ஷனா சொல்ல, பூனமோ “சந்தோசமா இருக்கணும்…” என்று வாழ்த்தி அவளுக்கு விடை கொடுக்க, நிர்மலோ யதுவீரோடு நின்றிருந்தான்.  

“நிர்மல் வா.. சொல்லிட்டு கிளம்பு…” என்று மீரா அழைக்க,

“டா டா யது அண்ணா…” என்று சொல்லியபடி இவர்களை நோக்கி நிர்மல் வர, யதுவீரும் அவனோடு சேர்ந்து வந்தான்..

“நாங்க கிளம்புறோம் யது…” என்று மீரா சொல்ல,

“நான் டிராப் பண்றேனே ஆன்ட்டி…” என்றான் அவனும்..

“வேணாம் ப்பா.. கால் டாக்ஸி சொல்லிட்டேன்.. இதோ வந்திடும்.. அப்படியே கிளம்புறோம்.. நீலம்.. எல்லா பார்மாலிடீஸ் முடியவும் ஷீலு அண்ட் மாப்பிள்ளையை கூட்டிட்டு வீட்டுக்கு வா…” என்று சொன்னவர், அனைவரிடமும் ஒரு தலைசைப்போடு கிளம்ப,

லக்க்ஷனா திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மீராவோடு நடந்தாள். நேற்று பேசவேண்டும் என்றானே.. ஆனால் இன்றோ அதற்கான ஒரு சிறு முயற்சி கூட செய்யவில்லையே.. என்ன சொல்ல வந்தான்.. என்ன பேச நினைத்தான்… நான் போகிறேன் இப்போதும் அப்படியே நிற்கிறானே என்று அவள் மனம் பலவேறாய் சிந்திக்க,  அதே நேரம் மண்டபம் விட்டும் வெளியே வந்திருந்தனர். 

கால் டாக்ஸியும் சரியாய் வந்திட, “ஏறு லக்க்ஷி..” என்று மகளை முதலில் ஏற சொல்லியவர், நிர்மலும் ஏறி அமரவும், தானும் ஏறிட, லக்க்ஷனாவோ ஜன்னல் வழியே பார்த்தாள். யதுவீர் வெளியே வருகிறானா என்று.

என்னதான் தனக்குள்ளே போட்டு மறைத்திட வேண்டும் என்று நினைத்தாலும், அதெல்லாம் தாண்டி சிறு சிறு பார்வைகளையும் சந்திப்புகளையும் எதிர்பார்க்கும் மனதை என்ன செய்ய..

இவளது எதிர்பார்ப்பு, யதுவீருக்கு எட்டியதோ என்னவோ, அவனும் மண்டப்பத்தில் இருந்து வெளியே வந்தான்..

வந்துவிட்டான் என்று ஒரு சிலிருப்புடன் அவன் மீது பார்வையை பதிக்க, டாக்ஸியும் கிளம்பிட, யதுவீர் தன் கண்களில் இருந்து மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டே தான் சென்றாள் லக்க்ஷனா.

யதுவீருக்கு இப்போது அவளை விட மனம் வலிக்கத் தொடங்கியது.. தான் சும்மா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்தே இருக்காதே என்று தோன்ற.. அடுத்து இவர்களது முகத்தில் எப்படி முழிக்க என்றிருந்தது. நிச்சயமாய் அவனால் லக்க்ஷனாவை யாரோ ஒரு பெண் என்று நினைக்க முடியவில்லை..

இது காதலா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவளின் தாக்கம் அவனுள் நிறையவே இருந்தது.. அவளிடம் உரிமையாய் பேசவும், வம்பிழுக்கவும், சண்டை போடவும் கோபம் கொள்ளவும் எல்லாம் முடிந்ததே அவனால்.. யாரோ ஒருத்தி என்று நினைப்பவளிடம் அப்படி இருக்க முடியுமா என்ன??

அதிலும் இப்போது தன்னை கண்டதும் அவள் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த ஒரு பளிச்சிடல், அதை எப்போதுமே அவனுக்கு காண வேணும் போல இருந்தது..

அவனைப்  பார்க்கும் போதெல்லம் அவலிடம் தோன்றிடும் அந்த சிலிர்ப்பை தானும்  உணரவேண்டும் போல் இருந்தது..

ஆக மொத்தத்தில் லக்க்ஷனா அவனுக்கே அவனுக்காக.. அவனுடையவளாக வேண்டும் போல் இருந்தது..

இதற்கு காதல் என்ற பெயரானால் சரி இருந்துவிட்டு போகட்டும் அதே பெயரே இருக்கட்டுமே என்று அவன் மனம் பெரிய மனது செய்ய, இத்தனை நேரம் பாரமாய் இருந்த மனம் இப்போது இலவம் பஞ்சாய் இருப்பது போல் இருந்தது..

அவள் மனதில் இருப்பதை வெளிக்கொணர வேண்டும் என்று தனக்கு தானே சவால் விட்டுக்கொண்டவன், இன்றோ தானே அவள் மீது விருப்பம் கொண்டு நிற்கிறான்..

‘லக்க்ஷி’ என்று இதழ்கள் முணுமுணுக்க, ரொம்ப நேரம் அப்படியே வெளியே நின்றிருந்தான்..

இது நடக்குமா நடக்காதா என்ற சந்தேகமெல்லாம் இல்லை.. நடத்திக்காட்டிட வேண்டும் என்று தெளிவாய் அவன் மனம் சொல்லிட, நவநீதன் வருகைக்காக மீரா மட்டுமல்ல யதுவீரும் காத்திருந்தான்..

அன்றைய இரவு வருவார் என்று தெரியும்.. ஆனால் இரவு நேரத்தில் அவர்கள் வீடு செல்ல முடியாதே.. ஆக மறுநாள் காலையில் தான் செல்ல வேண்டும்.. ஆனால் அங்கே அவனது கபடி டீம் சென்னை வந்தாகிவிட்டது.. அங்கே சென்று அவனது பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்..

அதற்குமுன்னே அவன் அப்பா அம்மாவிடம் பேசவேண்டும்…இத்தனை இருக்க, இனியும் இப்படி சும்மா நிற்பது சரியில்லை என்று பட, நேராக அவன் தந்தையிடம் செல்ல, அவரோ ஷீலு கணவன் வீட்டாரோடு பேசிக்கொண்டு இருந்தார்..

அடுத்து பூனம் எங்கே என்று பார்க்க, அவரோ நீலம் கூட நின்றிருக்க, “ம்மா…” என்று அங்கே சென்றவன்,

“நான் கிளம்பனும்… போன் வந்திடுச்சு..” என,

“வீட்டுக்கு வந்திட்டு அடுத்து போலாமே..” என்று நீலம் சொன்னதற்கு, வேலை இருக்கிறது என்று சொன்னவன்,

“ம்மா நைட் கார் அனுப்புறேன்.. ரெடியா இருங்க..” என்று மட்டும் சொல்லிவிட்டு, நேராக ஷீலுவிடம் சென்றவன், அவளுக்காக வாங்கிய பரிசை கொடுத்துவிட்டு, கிளம்பிவிட்டான்..

      

                                            

 

Advertisement