Advertisement

மனம் – 7

நவநீதன் மீராவிடம் காட்டு கத்தலாய் கத்திவிட்டார். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாம்.. நான் அங்க இல்லைன்னா என்னவேணா செய்யலாம்னு இருக்கீங்களா.. இங்க எல்லாரும் கேட்கிறாங்க… அப்படியான்னு.. பதில் சொல்ல முடியல..

இத்தனை போட்டோஸ் வெளிய வந்திருக்கு.. உனக்கு அறிவு வேணாமா?? ஏன் அனுப்புற நீ?? இப்போ என்ன பண்றது..” என்றவரின் கோபம் மகளது எதிர்காலத்தை நினைத்து பயந்ததால் வந்தது என்று மீராவிற்கும் தெரிந்ததால் அமைதியாகவே பேசினார்.

“கொஞ்சம் மெதுவா பேசுங்க.. நம்மலே இதை தப்பா நினைச்சா, அடுத்தவங்க என்ன நினைப்பாங்க… லக்க்ஷி.. ஏற்கனவே பயந்து போயிருக்கா.. இங்கயும் எல்லாருமே டென்சனா தான் இருக்காங்க.. அதுனால ஷீலு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசிக்கலாம் ப்ளீஸ்…”

“நல்ல ப்ளீஸ் சொன்ன மீரா… நான் நாளைக்கு அங்க வர்றேன்..” என்றவர் போனை வைத்துவிட்டார்.

தங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் அறையில் நின்றுதான் மீரா, நவநீதனோடு பேசினார். லக்க்ஷனாவும் அங்கே தான் அமர்ந்திருந்தாள். எதெல்லாம் நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ அதெல்லாம் தான் இப்போது நடந்துகொண்டு இருந்தது..

தன் ஒருத்தியின் விருப்பதால், யார் மனமும் சங்கடப்பட்டு, இரண்டு வீட்டிலும் சுமுக சூழல் போய், தேவையில்லாது குழப்பங்கள் நிகழ்ந்திடக் கூடாது என்று நினைத்தாளோ, இன்று அவள் நினைத்ததற்கு மாறாய் யதுவீர் லக்க்ஷனாவின் காதலை ஊரே பேசியது.

யதுவீரும் லக்க்ஷனாவும் நகை கடைக்கு சென்று அங்கே இருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு வர, அவர்கள் அடுத்து வீட்டிற்கு வந்துசேரும் முன்னேயே அந்த புகைப்படங்கள் முக்கால்வாசி ஃபேஸ் புக்கில் வந்திருந்தது.

யதுவீரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களின் சிலர், தாங்கள் அவனோடு தனியே எடுத்த செல்பியை பகிர, அடுத்த கொஞ்ச நேரத்தில் அது ‘சென்னை லீக் மேட்சிற்கு வந்த பிரபல கபடி வீரர் யதுவீர் தன் பெண் தோழியோடு ஷாப்பிங் செய்தார்…’ என்று கொட்டை எழுத்தோடு, யதுவீர் லக்க்ஷனா இருவரின் புகைப்படத்தை மட்டும் தனியே எடுத்து போடப்பட்டிருக்க,

இதே செய்தியே இன்னும் திரித்து, இவர்களுக்கான ஒரு தனி காதல் கதையையே நெட்டிசன்கள் உருவாக்கிட, அது யதுவீர் மற்றும் லக்க்ஷனா குடும்பத்தில் பெரும் சலசலப்பை தான் ஏற்படுத்தியது..

கையில் நெட் இருக்கிறது என்பதற்காகவும், புகைப்படங்கள் சில கைகளில் கிடைக்கிறது என்பதற்காகவும், யாராக இருந்தாலும் என்ன ஏதென்று யோசிக்காது, செலிப்ரட்டியாகவே இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம் உறவுகள் என்றெல்லாம் இருக்கிறது என்று யோசிக்காமல், தங்களுக்குத் தோன்றுவதை திரித்து சொல்லிட, அது சம்பந்தப் பட்டவர்களின் வாழ்வை எப்படிப் பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்ன??

பொழுதுபோக்காய், நமக்கு வேடிக்கையாய் தெரியும் விசயங்கள் எல்லாம் யாரோ ஒருவரின் வாழ்வில் பிரச்சனைகளை கிளப்புமா என்று இன்றிருக்கும் காலத்தில் யாருக்கும் யோசிக்க நேரமில்லை தான் ஆனாலும் அவரவர் வீட்டில் இதுபோல நடக்கும் போது அதன் வீரியம் தெரியும்..

இத்தனை ஆண்டுகளாய் யதுவீருக்கு இப்படியான ஒரு நிகழ்வு நடந்ததில்லை. இதற்கு எத்தனையோ பார்ட்டிகள், விஐபி மீட்டிங்குகள் என்று கடந்து வந்திருக்கிறான், விளையாட்டு துறை சார்ந்த விளம்பரங்களில் நடிக்கும் போது எத்தனையோ மாடல்கள், நடிகைகள் என்று பார்த்து வந்திருக்கிறான், ஆனால் அன்றெல்லாம் பரவாத வதந்தி இன்று அதுவும் இத்தனை ஆண்டுகள் கழித்து முதல் முறையாய் லக்க்ஷனாவோடு வெளியே என்று சென்று வந்ததும் ஏற்பட, அவனுக்குமே மனதில் பெரும் சங்கடமாய் போனது.

லக்க்ஷனாவோ அறையை விட்டு வெளியேவே வரவில்லை.. யார் முகத்தையும் அவளால் பார்க்க முடியவில்லை. அனைவரும் என்ன நினைப்பர் என்று தனக்குள்ளேயே சுருண்டு போனாள். ஷீலு வீட்டில் மொத்தமாய் அந்த கல்யாண உற்சாகமே மாறிவிட்டது.

விடிந்தால் திருமணம், இன்றோ இப்படியொரு பிரச்சனை.. மீரா உடனே வீட்டிற்கு கிளம்பத்தான் நினைத்தார், ஆனால் நீலமும் பூனமும் வந்து அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கெஞ்சல் பார்வை பார்க்கையில்,

ஷீலு வந்து “ஆன்ட்டி ப்ளீஸ்…” என்று கண்ணில் நீர் கோர்த்து கேட்கையில் அவரால் அதையும் மீறிட முடியவில்லை.

இதற்கெல்லாம் மேலாய் நவநீதன் துபாயில் இருந்து அழைத்துப் பேச, மொத்தமாய் அவருக்கு பயமாய் போனது. யதுவீரோடு அனுப்பியே இருக்கக் கூடாதோ என்றுகூட தோன்றியது..

சின்ன பெண் என்றாலும் லக்க்ஷனா கூட சொன்னாளே ஆனால் தான் தானே அனுப்பினோம் என்று அவருக்கு குற்ற உணர்வாய் போனது..

“லக்க்ஷி.. சாரி டி..” என்று கலங்கிப் போய் அமர்ந்திருந்த மகளிடம் மீரா கேட்க,

“ம்மா ப்ளீஸ்.. நீ மட்டும் என்ன செய்வ.. ஆனா யது அப்படியெல்லாம் இல்லைம்மா..” என்றாள், எங்கே அவர் யதுவீரை தவறாய் நினைத்துவிட போகிறாரோ என்று.

“யது அப்படியில்லைன்னு தானே லக்க்ஷி உன்னை அனுப்பினேன்.. ஆனா இப்போ.. ம்ம்ச் யாரை சொல்ல..” என்று மீரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, அங்கே யதுவீர் வந்தான்..

அவன் வந்ததும் லக்க்ஷனா முகத்தை திருப்பிக்கொள்ள, மீராவோ என்னவென்பது போல் பார்த்தார். 

அவனுக்குமே இந்த சூழலை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. அந்த நகை கடைக்கு அழைத்து திட்டிவிடலாமா என்றால் அதுவோ நாமே அனைத்தையும் பெரிது பண்ணாதாய் இருக்கும் போல் தோன்ற, அவனுக்கு லக்க்ஷனாவை எண்ணித்தான் பயமாய் போனது..

என்னவோ இப்போது தான் கொஞ்சம் அவன் முகம் பார்த்தே பேசுகிறாள், ஏற்கனவே அவள் மனதில் வேறொரு அழுத்தம் இருப்பது போல் தோன்ற இப்போது இதுவும் வேறா என்று தான் தோன்றியது.

இதெல்லாம் போக அவனது நண்பர்களும் சும்மா இருக்கவில்லை.. அவனுக்கு அழைத்து அது இதென்று பேசி நண்பர்களுக்கே உரிய விதமாய் வாழ்த்துக்களும் கேலிகளும் செய்து, அவனும் தான் எத்தனை நேரத்திற்கு மறுத்துக்கொண்டே இருப்பான்..

எரிச்சலாய் வந்தது.. மறுத்து பேசினாலும் அதற்கும் ஒரு கதை வரும்.. ஆமாம் என்றும் சொல்லிட முடியாது.. ஒருவேளை லக்க்ஷனா அவனிடம் தெளிவாய் மனம் விட்டு பேசியிருந்தால் கூட யதுவீர் ஆம் என்றிருப்பானோ என்னவோ…

என்ன சொல்வது என்று அவனுக்கே தெரியாமல் இருக்க, அவன் பக்க வீட்டினருக்கு இவர்களுக்குள் இப்படி எதுவும்  இல்லை என்று தெரியுமென்பதால் அவனை ஒன்றும் கேட்கவில்லை ஆனால் லக்க்ஷனாவிற்காக வருத்தப்பட்டனர்..

அன்றைய நெட்டுலகத்தில் வைராலாகியது யதுவீரின் காதல் கதை தான்.. சொல்லபோனால் இது லக்க்ஷனாவின் காதல் கதை.. அது யாருக்கும் தெரியாதே..

யதுவீரின் கல்லூரி இறுதியாண்டில் நடந்த கபடி மேட்சில் அவர்கள் கல்லூரி அணி, ஜெயித்து கோப்பை வென்று, அரங்கத்தை சுற்றி வரும்பொழுது, யதுவீர் ஷீலுவையும் லக்க்ஷனாவையும் பார்த்து கை காட்டி தன் மகிழ்வை பகிர்ந்து கொண்ட தருணமெல்லாம் புகைப்படமாய் இப்போது வெளி வந்திருந்தது..

‘கல்லூரி காலத்து காதல்.. ஐந்தாண்டுகளுக்கும் மேலாய் வெளி வராது இருந்த ரகசியம்.. இந்திய கபடி உலகில் ‘தி மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்…’ யதுவீரின் காதல் இன்று வெளிவந்தது…’ என்று இஷ்டத்திற்கு தமிழிலும் ஹிந்தியிலும் எழுதப்பட்ட பதிவுகள் அதிகம் பேரால் பகிரப்பட,

லக்க்ஷனாவோ அவளது அலைபேசியை ஆப் செய்துவிட, யதுவீரால் அதுவும் செய்ய முடியாமல் போனது…. அவன் மட்டும் அலைபேசியை அமர்த்தி வைத்திருந்தால் அது இன்னமும் மற்றவர்களின் பேச்சிற்கு தூபம் போட்டதாய் ஆகும்.

இப்படியிருக்க, அவனுக்கு முதலில் லக்க்ஷனாவை எதிர்கொள்ளவே தயக்கமாய் இருந்தது.. அவள் புகைப்படம் நீ எடு என்று தள்ளித் தானே போனாள், இவன் தானே விடாது கைகளைப் பிடித்து நிறுத்தினான்.. அப்படியே அமர்ந்திருக்க பூனம் தான் அங்கு வந்தவர்,

“யது போய் லக்க்ஷி, மீராக்கிட்ட பேசு.. நீ எதுவும் அவங்கக்கிட்ட பேசலை இதுவரைக்கும்.. என்ன நினைப்பாங்க..” என்று சொல்ல,

“என்ன பேச தெரியலை ம்மா..” என்றான்..

“தப்பு.. நீதான் பேசணும்.. இதுல உன் மேலயும் தப்பில்ல தான். ஆனா அவங்களுக்கு ஒரு தைரியம் சொல்லலாமே…” என்று மேலும் கொஞ்சம் நேரம் பேச, யதுவீரின் அப்பாவும் இதையே தான் சொன்னார்.

சரி பேசுவோம் என்றுதான் மீராவும் லக்க்ஷனாவும் இருந்த அறைக்கு செல்ல, அங்கேயோ அம்மா மகள் இருவர் பார்த்த பார்வைக்கும் அவனால் பதில் சொல்ல முடியவில்லை..

“ஆன்ட்டி…” என்று பேச விளைந்தவனுக்கு அதற்கு மேல் பேச்சும் வராமல் போக, ஒருவித சலிப்புடன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன்,

“சாரி லக்க்ஷி….” என்றான் பார்வையை வேறெங்கோ பார்த்தபடி..

அவளோ பதிலே சொல்லாமல் இருக்க, மீராவிற்கோ அடுத்தடுத்து அவர்கள் பக்கத்துக்கு உறவினர்கள் அழைத்துப் பேச, “எங்க பசங்க அப்படியெல்லாம் இல்லை.. யதுவீர் நான் சின்ன பையன்ல இருந்து பார்த்து வளர்ந்தவன்.. ரெண்டு பேருமே நல்ல பிரண்ட்ஸ் அவ்வளோதான்..” என்று விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க,

“அதெப்படி பிரண்ட்ஸ்னா இப்படித்தான் பிடிச்ச கை எடுக்காம போட்டோக்கு போஸ் கொடுப்பாங்களா..” என்று எதிர்பக்கம் இருந்து கேள்வி வர, மீராவிற்கு பதில் சொல்ல முடியவில்லை.. அவரும் தானே அந்த புகைப்படங்களை பார்த்தார்.  ஆக கொஞ்ச நேரத்தில் அலைபேசியை அமர்த்தி வைத்துவிட்டார்..

யதுவீர் இதெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தான்.. தான் ஒருநிமிடம் செய்தது இப்படி இத்தனை பேரின் ப்ரைவசியை பாதிக்கும் என்று அவனும் என்ன யோசித்தானா.. தான் கேட்டதுமே மீரா நம்பி தன் மகளை அனுப்பி வைத்தார். அந்த நம்பிக்கையை அவன் காப்பாற்ற வேண்டுமே..

லக்க்ஷனா எதுவும் பேசமாட்டாள் என்று தெரியும் ஆக, “ஆன்ட்டி.. ஐம்.. ஐம் ரியல்லி சாரி.. ” என்றவன் எழுந்து வந்து மீராவின் கைகளை பிடித்துக்கொள்ள, அவரோ என்ன சொல்வது என்று தெரியாமல் தான் அமர்ந்திருந்தார்..

“ஆன்ட்டி ப்ளீஸ்.. என்கிட்ட பேசுங்க.. ரொம்ப கில்டியா இருக்கு..” என்றவனின் குரலில் அத்தனை வலி தெரிந்தது..

அவர்களுக்கு இது போன்றதொரு விசயமெல்லாம் பழக்கமே இல்லையே.. அப்படியிருக்க இதை சாதாரணமாய் நினைத்து கடந்து வரவும் முடியவில்லை. அமைதியாகவே இருக்க,

“ஆன்ட்டி.. சொல்லுங்க.. நான் என்ன செய்யணும்…” என்றான்..

இப்போதிருக்கும் மனநிலையில் லக்க்ஷனா வீட்டினர் என்ன சொன்னாலும் செய்யும் நிலையில் தான் இருந்தான்.. குடும்பத்தினர் அனைவரின் காலில் விழு என்று சொன்னாலும் கூட செய்திடுவான்.

ஆனால் பழைய பழக்கத்தை அவனால் திருப்ப முடியுமா என்றால் அது முடியாதே.. அவன் கண்ணில் தெரியும் வலியும், முகத்தில் தெரியும் வருத்தமும், பேச்சில் இருந்த தொய்வும் மீராவிற்கு என்ன தோன்றியதோ,

“என்ன செய்ய முடியும் யது.. இதுல யார் மேல தப்பிருக்குன்னு யார் சொல்ல முடியும்.. அப்படி பார்த்தா தப்பு என்மேல தான்.. நான்தானே அனுப்பினேன் லக்க்ஷிய… அந்த இடத்துல ஒரு அம்மாவா நான் யோசிக்கலையோன்னு இருக்கு..” எனும் போதே லக்க்ஷனாவிடம் இருந்து ஒரு கேவல் பிறந்தது..

தன்னுடைய விருப்பத்தால் இப்படியெல்லாம் யாரும் வருந்திடக் கூடாது என்றுதானே அவளது காதலை தனக்குள்ளே புதைத்தால். ஆனால் அவளே சொல்லாத ஒன்று இன்று வேறுவிதமாய் வெளிவர, மீராவோ அனைத்து பழியையும் அவர்மீது சுமத்திக்கொள்ள அவளுக்கு இன்னும் மனம் வலித்தது..

யதுவீர், மீரா இருவருமே லக்க்ஷனாவைப் பார்க்க, அவளோ அப்படியே தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதுகொண்டு இருந்தாள்.. ஒரு திருமண வீட்டில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிந்தாலும் அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை..

எங்கே இவளது அழுகை சத்தம் வெளியே கெட்டுவிடுமோ என்று மீரா வேகமாய் சென்று கதவு அடைத்து வர,

“லக்க்ஷி…. லக்க்ஷி.. ப்ளீஸ் அழாத..” என்று யதுவீர் அவளை சமாதானம் செய்ய, அவளோ தன்னை தூக்க முயலும் அவன் கைகளை பலம் கொண்ட மட்டும் அடித்துக் கொண்டு இருக்க, மகளின் இந்த செயலில் மீரா முகம் கொஞ்சம் யோசனைக்குத்தான் சென்றது..

கதவருகே நின்றவர், அவர்களின் அருகே செல்வதா வேண்டாமா என்பது போல் நிற்க, யதுவீரோ லக்க்ஷனா படுத்திருந்தவளின் அருகில் அமர்ந்து, அவளை சமாதானம் செய்ய முயல, அவர்கள் இருவரிடமுமே ஒரு நெருக்கமும், ஒரு உரிமையும் இருப்பது மீராவிற்கு கண் கூடாக பார்க்க முடிந்தது..

‘ஒருவேளை அப்படியும் இருக்குமா..’ என்று அந்த நேரத்தில் அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

ஆனால் அப்படியெதுவும் இல்லாமல் நாமே எதையும் கேட்டு கிளப்பிவிட கூடாதே என்றும் பயமாய் இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க, அங்கே யதுவீரோ விடாது லக்க்ஷனாவை அழாதே என்று சொல்லிக்கொண்டு இருக்க,

முதலில் அவன் முகத்தைக் கூட பார்க்காது இருந்தவள், அடுத்து அடுத்து “போ.. இப்படி எல்லாம் எதுவும் நடக்கக்கூடாதுன்னு தானே நான் தள்ளி இருந்தேன்.. நீ இப்படி பண்ற.. போ.. போ..   ”  என்று அவனோடு பேசியபடி அவனைத் தள்ள,

தள்ளும் அவள் கரத்தினை பிடித்தவன், “லக்க்ஷி.. ப்ளீஸ் பேபி… ப்ளீஸ்.. இப்படியெல்லாம் நடக்கும்னு நான் மட்டும் நினைச்சேனா..” என்று அவனும் கெஞ்ச, மீராவிற்கோ அங்கே தலை வெடித்தது..

ஒரு அம்மாவாய் அப்படியே லக்க்ஷனாவை விட்டு செல்லவும் மனமில்லை.. அங்கேயே நிற்கவும் முடியாமல் போக, என்ன செய்வது என்று யோசிக்கும் போதே யதுவீரின் அலைபேசி மீண்டும் அலறியது..

அலைபேசியை எடுத்தவன், அப்படியே எழ, மீராவும் அந்த இடைவெளியில் மகளிடம் சென்றுவிட்டார்.

“ஹா ஜி…” என்று யதுவீர் பேச ஆரம்பிக்க, அந்தப்பக்கம் யார் பேசினார்களோ, பேச பேச அவனது முகம் மாறிக்கொண்டே போனது..

பெண்கள் இருவருக்கும் புரியவில்லை என்ன விசயம் என்று.. பேசி முடித்து அலைபேசியை வைத்தவனோ, கொஞ்ச நேரம் யோசனையாய் இருந்தவன், பின் அவன் அப்பாவை அழைத்து இங்கே அறைக்கு வரச் சொன்னான்.

சரி எதுவோ முக்கியமான விஷயம் என்று மீராவுக்கு புரிய, லக்க்ஷனா தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அமர்ந்தாள். அடுத்த இரண்டு நிமிடத்தில் யதுவீரின் பெற்றோர்கள் அங்கே வந்திட,

“என் கோச் அண்ட் ஸ்பான்சர் பேசினாங்க.. ப்ரெஸ் மீட் அரேஞ் பண்ணலாமா கேட்கிறாங்க.. நான் என்ன சொல்லட்டும்…??” என்றான் பெரியவர்கள் மூவரையும் பார்த்து..

யதுவீரின் பெற்றோர்களோ உனக்கு எது சரியெனப் படுகிறதோ அதை செய் என்றிட, மீரா தான் புரியாமல்,

“ப்ரெஸ் மீட் எதுக்கு யது??” என்றார்..

“அது ஆன்ட்டி… இன்னும் டூ டேஸ்ல லீக் மேட்ச் இருக்கில்லையா.. சோ இந்த பிரச்னை எல்லாம் ஆகவும் சீக்கிரம் நம்ம சைட்ல இருந்து ஒரு பதில் கொடுத்திட்டா நல்லது தானே.. அதுக்காக..” என்று சொல்லும் போது அவனுக்குமே தொண்டை அடைத்தது..

லக்க்ஷனா மனதில் தன் மீதிருக்கும் விருப்பத்தை அவளது பிடித்தத்தை வெளிக்கொணர வேண்டும் என்று எண்ணியவன், இப்போது அனைவரின் முன்னும் அவளுக்கும் எனக்கும் ஒன்றுமேயில்லை எவ்வித சம்பந்தமும் இல்லை என்று  சொல்ல முடியுமா??

இது முடியுமா என்று தோன்ற, யதுவீரின் மனம் என்னால் இது முடியாது என்றே பதில் சொல்லியது..

ஆம் லக்க்ஷனாவிற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அவனுக்கு அவனே கூட அந்த நேரத்தில் ஒத்துக்கொள்ள முடியவில்லை.. அப்படியிருக்கையில் ப்ரெஸ் மீட்டில் இல்லை என்று சொல்லிவிட்டு பின் மீண்டும் அவளிடம் வந்து நிற்பானா..??

அது நன்றாய் இருக்குமா என்ன?? இதை தூசு போல் தட்டிவிட்டு கடந்து செல்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. இவனால் எனக்கு ஒரு பப்ளிசிட்டி என்று வேறொருத்தியாய் இருந்தால் நினைத்து சந்தோஷித்திருக்க கூட முடியும்..

ஆனால் அவனும் அப்படியில்லை.. அவளும் அப்படியில்லை..

“ஓ.. அப்.. அப்போ.. ஒண்ணுமில்ல.. இதெல்லாம் ரூமர்னு சொன்னா விட்டிடுவாங்களா.. அடுத்து எதுவும் இப்படியெல்லாம் பண்ணமாட்டாங்களா??” என்று மீரா கேட்க,

‘அப்.. அப்போ.. அவனுக்கும் எனக்கும் ஒண்ணுமில்லைன்னு எல்லார் முன்னாடியும் சொல்லப் போறானா???’ என்று கதறிய மனம் வேறு யாருடையதாய் இருக்க முடியும்..

லக்க்ஷனாவே தான்..

‘ஒண்ணுமேயில்லையா…’ என்று யதுவீரின் முகத்தைப் பார்க்க, அவனோ ‘நான் அப்படி சொல்ல முடியுமா??’ என்று லக்க்ஷனாவின் முகம் பார்க்க, மற்ற மூவரும் அவர்களைப் பார்த்திருந்தனர்.

      

          

                                          

      

Advertisement