Advertisement

மனம் – 6

டோயோட்டோ பார்ச்சுனர்.. மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டு இருக்க, லக்க்ஷனாவிற்கோ இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. யாரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவெடுத்தாளோ அவனோடு இப்போது காரில் சென்றுகொண்டு இருக்கிறாள்.

‘யதுவீர்…. இருக்கானே…’ என்று பல்லைக் கடித்தாலும்..

இருக்கிறான் இருக்கிறான்  இதோ அருகே தான் இருக்கிறான்.. அவனுக்கென்ன ஜம்மென்று இருக்கிறான்.. அவனுக்கு எதுவுமே பாதிப்பில்லை.. இன்று சீண்டி வம்பிழுத்து சிரித்து பேசி பின் இரண்டொரு நாளில் கிளம்பிடுவான்.

ஆனால் அனைத்து பாதிப்புகளும் அவளுக்கானது அல்லவா.. என்றோ ஓர் நாள் நடந்ததே இன்று வரைக்கும் மறக்காது இருக்கும் போது, இவன் இப்படியெல்லாம் செய்தால் அவளும் தான் என்ன செய்வாள்.

‘இந்த அம்மா இருக்காங்களே…’ என்று மீராவையும் அவள் நொந்துகொள்ள தவறவில்லை..

ஆமாம்.. அவளே தயங்கி நின்ற வேளையில் மீராவே யதுவோடு செல் என்று சொல்கையில் அவளோ மறுக்க முடியாமல் போனது..

“லக்க்ஷி.. யது ஷீலுக்கு எந்த கிப்டும் வாங்கிட்டு வரலையாம்.. பூனம் ஆன்ட்டிக்கும் வேலை இருக்கனால அவங்களும் இப்போ போக முடியாது.. மத்தவங்களும் ஆளுக்கு ஒரு வேலையா இருக்காங்க.. அதான் யது உன்னை கூட்டிட்டு போக கேட்கிறான்…” என்றதும்,

“ம்மா.. நானா..?? நோ…” என்று லக்க்ஷனா உறுதியாக மறுத்தாள்.

யதுவீர் பேசுவதை எல்லாம் மீராவிடம் பேசிவிட்டு இப்போது ஒரு பார்வையாளனாக மட்டுமே நின்று பார்த்துகொண்டு இருக்க,

‘டேய்… சிரிச்சு சிரிச்சு நீ இப்படியா வில்லத்தனம் செய்வ…’ என்று அவன் மீது ஒரு பார்வையை வீசியவள்,

மீராவை கொஞ்சம் தள்ளி அழைத்துக்கொண்டு சென்று, “ஏன் ம்மா.. ஒரு வயசு பொண்ணோட அம்மா மாதிரியா நீ பேசுற.. கொஞ்சம் கூட உனக்கு விபரமே இல்லையேம்மா…” என்று மீராவை கண்டிக்க,

“ஹா ஹா லக்க்ஷி.. என்ன டி இப்படியெல்லாம் ஜோக் பண்ற… அப்புறம் நீ ஒண்ணும் ஒரு வயசு குட்டிப் பாப்பா இல்லை.. இருபத்தி அஞ்சு ஆகப் போகுது.. யார் எப்படின்னு ஆளுங்களை தெரியாதா.. யது யாரு டி… என் கண் முன்னாடி தான் இங்க வளர்ந்தான்.. அவனை எனக்குத் தெரியாதா.. ஹெல்ப்னு கேட்கிறப்போ இப்படி பேசுற…” என்றார்..

லக்க்ஷனா எந்த பதிலும் சொல்லாமல் தயங்கி நிற்க, “என்ன லக்க்ஷி.. இப்படி நிக்கிற.. போயிட்டு வா… நானே சொல்றேனே.. யது தப்பான ஆளுன்னு உனக்கு தோணுதா என்ன??” என்று மகளின் கண்களை பார்த்து மீரா கேட்க, தன்னப்போல் அவளின் தலை இல்லையென்று ஆட,

“அப்புறம் என்ன.. போயிட்டு வா.. உனக்கும் ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ..” என்று சொல்ல,

“ம்ம்…” என்று அவருக்கு நல்ல பிள்ளையாய் தலையை ஆட்டியவள், யதுவீரை நோக்கி “டென் மினிட்ஸ் ரெடி ஆகிட்டு வர்றேன்…” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பிவிட்டு போனாள்.

மீராவும் மகளின் இந்த மாறுபட்ட முக மாற்றங்களை எல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தார். ஒரு அன்னையாய் அவளை நினைத்து இப்போதும் மனம் வருந்தத் தான் செய்தது.. முதல் வேலையாய் நவநீதன் இங்கு வரவும் லக்க்ஷனாவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று நினைத்தார்.

மீரா யோசனையாய் நிற்க, அவரருகே வந்த யதுவீரோ “தேங்க்ஸ் எ லாட் ஆன்ட்டி..” என்று சொல்ல,

“இட்ஸ் ஓகே யது.. பட் கொஞ்சம் சீக்கிரம் வந்திடுங்க..” என்றவர், “அப்புறம் லக்க்ஷி…. அவ.. ம்ம் ஏதாவது சட்டுன்னு பேசிட்டா எதுவும் தப்பா நினைக்காத..” என்று மகளுக்காக பேச,

“ஆன்ட்டி டோன்ட் வொர்ரி.. நான் பார்த்துக்கிறேன்..” என்றவன், “நான்… நான் ஒண்ணு கேட்கலாமா??” என்றான் தயக்கமாய்..

என்ன கேட்கப் போகிறான் என்று மீராவால் ஓரளவிற்கு யூகிக்க முடிந்தது.. ஆனாலும் அவருக்கும் தெரியாத ஓர் விசயத்திற்கு என்ன பதில் சொல்வார்.. இருந்தாலும் அவன் சொன்னதற்காக,

“சொல்லு யது…” என,

“ஆன்ட்டி தப்பா நினைக்க வேணாம் நான் இப்படி கேட்கிறேன்னு.. லக்க்ஷி…. அவ..அவ ஏன் அப்பபோ ரெஸ்ட்லெஸா ஆகிடுறா…??” என்றான்..

யதுவீருக்கும் நேற்று வந்ததில் இருந்து இது தோன்றிக்கொண்டே இருந்தது. என்னவோ அவ்வபோது அவள் யோசனைகளுக்கு போவதும், அவள் கண்கள் ஒன்று சொல்வதும், அவள் இதழ்கள் வேறு பேசுவதுமாய் இருப்பது நன்றாகவே அவனுக்குப் புரிந்தது. ஆனால் இதை அவளிடம் கேட்டால்,

‘அப்போ நான் என்ன பைத்தியமா..??’ என்று கேட்பாள்..

கண்டிப்பாக இல்லவே இல்லை. ஆனால் அவளுள் ஒரு மன அழுத்தம் இருப்பது நன்றாகவே தெரிந்தது.. எதையோ தனக்குள்ளே போட்டு மருகுகிறாள் என்பது அவனுக்கும் நன்றாகவே புரிந்தது. ஆனால் யதுவீர் அப்போது அவள் மனத்தில் இருப்பது அவன் சார்ந்த விசயமாய் நினைக்கவில்லை..

எதுவோ ஒரு பிரச்சனை போல அதுதான் தன்னிடமும் இப்படி நடந்துகொள்கிறாள் என்று நினைத்தான். அவள் மனதில் அவன் மீதிருக்கும் அன்பு என்பது வெளிப்பட வேறு எதுவோ தடையாக இருக்கிறது என்று நினைத்தான்.. அதன் பொருட்டே மீராவிடம் கேட்டான்.

ஆனால் மீராவிற்கோ யதுவீருக்கு தெரிந்த அளவு கூட தெரியாதே.. ஆகையால், “எனக்கும் இது தான் யது ரொம்ப கவலையா இருக்கு.. வேலை டென்சன் அப்படின்னு பார்த்தா அதுவும் இல்லை.. சந்தோசமா தான் ஆபிஸ் போயிட்டு வர்றா.. நாங்க இங்க இருந்து அந்த வீட்டுக்கு போனோமில்லையா அப்போயிருந்தே அப்பப்போ இப்படித்தான் யோசனைக்கு போயிடுறா…” என்றார் கவலையை மறக்க முயன்றும் முடியாமல்..

‘அங்க போனதுல இருந்தா??’ என்று யதுவீர் யோசித்தவனுக்கு, வேகமாய் புத்தியில் ஒரு மின்னல் வெட்டு..

“ஆன்ட்டி… நாங்க மும்பை போனதும் கொஞ்ச நாள்ல நீங்களும் ஷிப்ட் பண்ணிட்டீங்க தானே…” என,

“ஆமாம் யது.. நீங்க கிளம்பின ரெண்டு மாசத்துல நாங்களும் அங்க போயிட்டோம்..” என்றார் அவன் எதற்கு கேட்கிறான் என்பது தெரியாமல்..

“ஆன்ட்டி இப் யூ டோன்ட் மைன்ட்.. நான்.. நான் லக்க்ஷிக்கிட்ட இதைப் பத்தி கேட்டுப் பார்க்கவா??” என்றான் தயங்கி..

மீராவும் அவன் இப்படிக் கேட்கவும் தயங்கியவர், பின் என்ன நினைத்தாரோ “அவ பதில் சொன்னா எனக்கும் சந்தோசம் தான்.. பார்த்து போயிட்டு வாங்க..” எனும் போதே லக்க்ஷனாவும் அங்கு சரியாய் வந்து சேர்ந்தாள்.

தான் வந்ததுமே யதுவீரும், மீராவும் பேச்சை நிறுத்துவதை பார்த்தவள், இருவரையும் ஆராய்ச்சியாய் பார்த்து “என்ன..??” என்று கேட்க,

“நான் கார் ஸ்டார்ட் பண்றேன்…” என்று யதுவீர் சொல்லி வெளியே கிளம்பிட, மீராவோ “லக்க்ஷி.. வம்பிழுக்காம சீக்கிரம் போயிட்டு வாங்க..” என்றுமட்டும் சொன்னவர் உள்ளே சென்றுவிட்டார்..

‘ஆமா எனக்கு மட்டும் ஆசையா வம்பிழுக்க.. லாஸ்ட்ல அம்மாவும் இப்படி சொல்றாங்க…’ என்று மனதில் சுணக்கம் ஏற்பட்டாலும், அதெல்லாம் தாண்டி யதுவீரோடு தனியே செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி அவள் மனம் மகிழ்வுற தான் செய்தது..

யதுவீருக்கோ லக்க்ஷனா மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசை. அவளோ யதுவீர் மீதான அன்பிலும் ஆசையிலும் தன்னையே தனக்குள் மறைத்துக்கொள்ள, வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் இடையில் ஊசலாடுகிறாள்.

இதில் யார் ஜெயிப்பார்கள் ??? இன்னும் இரண்டு நாள் தானே சமாளிப்போம் என்ற அவளது முடிவா ?? இரண்டு நாளில் உன்னை பேச வைக்கிறேன்… என்று அவனே அவனுக்கு விட்ட சவாலா ?? இதில் எது ஜெயிக்கும்..

காலம் தான் பதில் சொல்லவேண்டும்..

காரில் ஏறியதில் இறந்து லக்க்ஷனா ஒன்றுமே பேசவில்லை.. பொதுவாகவே யதுவீருக்கு சற்று வேகமாய் கார் ஓட்டாத் தான் பிடிக்கும். ஆனால் இன்றோ நேரத்தை கடத்த கொஞ்சம் மெதுவாகவே ஓட்டினான்..

சரி அவளால் எப்படியும் பேசாமல் இருக்க முடியாது அவளே பேச்சைத்  தொடங்குவாள்,  ‘ஏன் இப்படி அம்மாவிடம் கேட்டாய்’ என்று சண்டை போடுவாள் என்று பார்க்க, அவளோ பேசினால் தானே வம்பு என்று அமைதியாய் இருந்தாள்.

சாலையில் கவனம் வைத்தவன், அவ்வபோது அவளிடமும் பார்வையை செலுத்த, அவளுக்கு அதெல்லாம் தெரியாமல் இல்லை.. ஆனால் மௌனம் காத்தாள். போய் வரும் வரைக்கும் எதுவும் பேசக்கூடாது என்று உறுதியாகவே இருந்தாள்.

ஆனால் சாலையிலோ அங்கும் இங்கும், அடுத்து நடக்கப்போகும் சென்னை லீக் கபடி போட்டிகளின் விளம்பர பலகைகள் வைக்கப் பட்டிருக்க, அதில் யதுவீரின் புகைப் படமும் இருந்தது.. ஜன்னல் வழியே அவைகளை பார்த்தபடி வந்தவளுக்கு லேசாய் கண்கள் விரிய,

அவனது வளர்ச்சியை சந்தோசமாகவும் இருக்க, அதே நேரம் அவள் நேசிக்கும் ஒருவன் அருகில் இருந்தும் அவளால் தன் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாது போன நிலையை எண்ணி வருத்தமாகவும் இருந்தது.

அவளுக்கு வேறொன்றும் பெரிதாய் பிரச்சனை இல்லை ‘இதெல்லாம் ஒத்துவருமா?? ஒத்துவரா விட்டால் அது அனைவருக்குமே அல்லவா கஷ்டமாய் போய்விடும் ஆக இதெல்லாம் என்னோடு போகட்டும்.. நான் ஒருவள் மட்டுமே… இத்தனை நாள் அனைத்தையும் என்னுள்ளே வைத்திருந்தது போல் இனியும் வைத்து கொள்வேன்..’ என்பது மட்டுமே..

அவள் இப்படியே அமைதியாகவே வர, அது யதுவீருக்கு பொறுக்குமா என்ன??

அத்தனை நேரம் அவளை திரும்பி திரும்பிப் பார்த்தவன், அவள் பேச போவதில்லை என்று தெரியவும் அவனே ஆரம்பித்தான்..

“லக்க்ஷி.. எங்க போலாம்???” என்று கேட்க, அவளுக்கு முதலில் அவன் கேள்வியே புரியவில்லை.

‘லூசா இவன்.. கிளம்ப வச்சது இவன்தான் எங்க போலாம்னு கேட்கிறான்…’ என்றெண்ணிய படி, அவனை குழப்பமாய் பார்க்க,

“உன்னத்தான் கேட்கிறேன் லக்க்ஷி.. எங்க போலாம்..??” என்றான் மீண்டும்..

“புரியல…”

“ஹ்ம்ம் உனக்கு எப்பவுமே நான் கேட்கிற கேள்வி புரியாது போல.. சரி ஷீலுக்கு கிப்ட் வாங்க எங்க போலாம்…” என,

“அது தெரியாம தான் என்னை கூட்டிட்டு வந்தியா???” என்றாள்.

“ஹா ஹா.. எனக்கு இங்க ஒண்ணும் தெரியாதே…” என்று சிரித்தவனை, முறைத்தவள், மீண்டும் முகத்தை திருப்பப் போக,

“நிஜமா லக்க்ஷி… நான் போறப்போ இருந்த சென்னைக்கும் இப்போக்கும் எவ்வளோ வித்தியாசம்… அதான் சொல்றேன்.. ஷீலு உன்னோட பெஸ்ட் பிரண்ட்.. சோ அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது உனக்கு தெரியுமே..” என,

‘ஒருவேள அதுக்குதான் என்னை கூட்டிட்டு வந்தானோ…’ என்று லேசாய் சுருங்கிய மனம், ‘என்னவோ ஒண்ணு நான் இந்த டைம்மா என்ஜாய் பண்ணிக்கிறேன்…’ என்று சொல்லிக்கொண்டது.  

“லக்க்ஷி.. உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..” என்றவன், அவள் கைகளைப் பற்ற, விலுக்கென்று திரும்பியவள், பற்றிய அவன் கரங்களைப் பார்க்க,

“நீ பேசாட்டி நான் இப்படித்தான் செய்வேன்…” என்றான் குறும்பாய்..

‘படுத்துறான்….’ என்றெண்ணியவள்,

“என்ன வேணும் உனக்கு???” என்றாள் கறாராய்..

“நிறைய வேணும்.. ஆனா இப்போதைக்கு ஒண்ணு மட்டும் போதும்…” என்று இலகுவாய் சொல்ல,

“என்ன???” என்று கண்களை விரித்தாள்..

அவள் மனம் சடுதியில் அது இது என்று கணக்கு போட்டுவிட்டு, அய்யோ இவன் என்ன கேட்கிறான் என்று பதறி கண்களை விரித்தாள். அவனோ அவள் கண்கள் விரித்ததிலேயே லக்க்ஷனா என்ன நினைத்திருப்பாள் என்பதை சரியாய் புரிந்தவன்,

“ஹா ஹா பேபி… நீ என்ன நினைச்சன்னு எனக்கு தெரியும்… ஆனா அதுவும்கூட எனக்கு ஓகே தான்..” என

“ம்ம்ச் யது…” என்று சலித்தவள், “என்ன பேசணுமோ அதை மட்டும் பேசு…” என்றாள்..

“ஓகே ஓகே கூல்… எனக்கு வேண்டியது என்னோட கேள்விக்கு பதில்..”

“ஓ..!!!! காட் இன்னும் இதை நீ விடலையா??”

“நீ ப்ராப்பர் ஆன்சர் சொல்லிட்டா நானும் இதைப் பத்தி பேசமாட்டேன்… இல்லாட்டி ஆன்ட்டிக் கிட்ட…” என்று யதுவீர் சொல்லும்போதே,

“என்ன என்ன?? அம்மாட்ட என்ன  பேச போற??” என்று வேகமாய் படபடத்தாள்..

இத்தனை நேரம் அமைதியாய் வந்தவள் இப்போது டென்சனாய் பேசவும், யதுவீரின் கண்கள் கூர்மையாய் அவளைப் பார்க்க,

“என்னாச்சு லக்க்ஷி..” என்றான் இத்தனை நேரமிருந்த விளையாட்டை விட்டு.

“என்னாச்சு.. ?? நத்திங்.. நீ அம்மாட்ட என்ன பேச போற யது?? அன்னிக்கு அப்போ நடந்ததை சொல்ல போறியா???” என்று வேகமாய் லக்க்ஷனா கேட்க,

காரை ஓரமாய் நிறுத்தியிருந்தவன், அவள் பக்கம் முழுதாய் திரும்பி அமர்ந்து “சொல்லணும்னா இத்தனை வருசத்துல சொல்லிருக்க மாட்டேனா.. அது எப்பவுமே உனக்கும் எனக்குமானதா மட்டும் தான் இருக்கும்..” என, அவளுக்கு அப்போது தான் நிம்மதியாய் இருந்தது.

கண்களை மூடி நொடி பொழுது என்றாலும் தன்னை ஆசுவாசப் படுத்தியவள், மீண்டும் கண்களை திறக்க, அப்போதும் யதுவீர் அவளைப் பார்த்தபடி இருப்பதை கண்டு,

“என்ன?? கிப்ட் வாங்கப் போற ஐடியா இல்லையா??” என,

கொஞ்ச நேரம் முன்னாடி அவள் பதறியது என்ன இப்போது சாதாரணமாய் அவள் பேசுவது என்ன என்று யதுவீர் கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.. பதில் எதுவும் சொல்லாது இருப்பதைப் பார்த்தவள்,

“யது…” என்று அவன் தோள்களைத் தொட,

“ஹ்ம்ம்.. ஆனா நான் முறைக்க மாட்டேன்பா..” என்று தன்னை தொட்ட அவளது கரங்களைப் பார்க்க, அவளோ வேகமாய் கைகளை எடுத்துக்கொண்டாள்..

“ஹ்ம்ம்.. லக்க்ஷி…. கிப்ட் வாங்க மட்டுமில்ல உன்கூட பேசவும் தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்.. இனி ஷீலு வீட்ல நிறைய கெஸ்ட் வந்திடுவாங்க.. சோ நம்ம தனியா பேச சான்ஸ் கிடைக்காது.. நாளைக்கு மேரேஜ்.. அது முடிஞ்சதுமே நான் என் டீம் கூட போய் ஸ்டே பண்ணனும்.. சோ எனக்கு இருக்கிறது நாளைக்கு வரைக்கும் மட்டும்தான் டைம்..” என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து பார்க்க,

அவன் பேசுகிறான் என்று அத்தனை நேரம் அவன் முகத்தைப் பார்த்தவள், இப்போது தன் பார்வையை திருப்ப முடியாமல் தவிக்க,

அவனோ “பேசு லக்க்ஷி.. உன் மனசுல என்னவோ போட்டு நீ அழுத்தி அழுத்தி வச்சிருக்க.. பீ பிரான்க்.. ஒருத்தர் மேல இருக்க வெறுப்பைக் காட்டத்தான் நம்ம நிறைய தயங்குவோம்.. ஆனா நீ அதையுமே ஈசியா வெளிபடுத்தின என்மேல.. அதைவிட கஷ்டமான விஷயம் எதுவுமில்லை.. சோ இப்போவாது மனசுல இருக்கிறதை பேசேன்…” என்றவனின் குரலில் ஒரு கெஞ்சலும் எட்டிப் பார்க்க,

அவளுக்கோ அவன் பேச பேச கண்களில் நீர் பூத்திருந்தது.. அவனை வெருத்ததை சுலபமாய் சொல்லிவிட்டேனா?? அது அத்தனை சுலபமாய் எனக்கு இருந்ததா என்று அவளுக்கு தோன்றிய நொடியே அவள் கண்கள் கலங்கிட, அதில் தெரிந்த கலக்கமும், கண்ணில் நீர் வலிந்து அது அவன் கரங்களில் தெறித்த கண்ணீர் துளிகளும், அவனுக்கு பல கதைகள் சொல்லியது..

“லக்க்ஷி..” என்று அதிர்ந்தவன், அவள் கண்ணீரைத் துடைக்கப் போக,

“ம்ம்ச் ப்ளீஸ்..” என்று அவன் கைகளைத் தள்ளிவிட்டவள், இருக்கையில் நேராய் அமர்ந்து,

“ப்ளீஸ் யது.. என்கிட்ட எதுவும் கேட்காத.. ப்ளீஸ்… நீ சொல்றமாதிரி என் மனசுல எதுவுமே இல்லை.. புரிஞ்சதா.. ஜஸ்ட் நான் ஷீலு மேரேஜ் என்ஜாய் பண்ணனும்னு தான் வந்தேன்.. ஆனா…” என்றவள் பேச்சை நிறுத்திட,

“ஆனா???” என்று யதுவீர் கேட்டான்..

“இங்க வந்தே இருக்க கூடாதோன்னு தோணுது…” என்றவளுக்கு அழுகையை அடக்கி தொண்டை குழி ஏறி இறங்கியது..

பார்வை எங்கோ இருக்க, முகம் முழுதும் வாடிவிட, பேச்சில் தெரிந்த வருத்தமும் யதுவீருக்கு என்னவோ செய்ய, அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்திருந்தவன்,

“சாரி…” என்றுமட்டும் சொல்லி, காரைக் கிளப்பினான்..

லக்க்ஷனாவிற்கோ அவன் சொன்ன ஒரு விசயமே அவளை ஆட்டிப் படைத்தது. ‘ஈசிய அவன் மேல நான் வெறுப்ப காட்டிட்டேனா.. எவ்வளோ ஈசியா சொல்றான்… இப்போ வரைக்கும் எதுவுமே எனக்கு ஈசியா இல்லையே…’ என்று தனக்குள்ளே இன்னும் மருக ஆரம்பித்தாள்..

யதுவீரோ அடுத்து எதுவுமே பேசவில்லை.. அமைதியாய் தான் இருந்தான். ஆனால் அவன் மனதில் ஆயிரம் யோசனை.. லக்க்ஷனாவின் கண்ணீர் அவனை என்னவோ செய்தது..

‘லக்க்ஷி.. லக்க்ஷி..’ என்று மனம் சொல்லிக்கொள்ள, அவள் அருகில் இருந்தும்  ஆறுதல் கூட சொல்ல முடியாமல் போகும் நிலையை எண்ணி சங்கடமாய் போனது.

கொஞ்ச நேரம் கார் பயணம், ஷீலுவுக்கு என்ன வாங்கலாம் என்று லக்க்ஷனாவோடு கலந்து பேசி அதன் பின் வாங்கலாம் என்று நினைத்திருக்க, அவள் இருக்கும் நிலையில் கலந்து பேசுவதாவது என்று நினைத்தவன், நேராக ஒரு நகை கடையில் தான் சென்று காரை நிறுத்தினான்..

“லக்க்ஷி.. இறங்கனும்…” என்று சொன்ன பிறகே அவள் சுற்றும் பார்வையை ஓட விட,

“ஜ்வல் வாங்கப் போறோமா.. ஷீலுக்கு ப்ரேஸ்லெட் ஓட சேர்ந்து வர ரிங்னா ரொம்ப பிடிக்கும்…” என்று அவன் கேட்காமலே சொல்லிக்கொண்டு மறுபுறம் இறங்க,

“ம்ம் அதே போல வாங்கலாம்..” என்றவனும் இறங்கி கடைக்குள் நுழைய, அங்கிருந்தவர்களுக்கு அவனை கொஞ்சம் அடையாளமும் தெரிந்திட, அதன் பின்னேர் ஏக போக கவனிப்பு தான்..

அத்தனை பெரிய நகை கடையின் ஓனரே வந்து வரவேற்று பேசி, உபசரிக்க யதுவீர் இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்பதுபோ, இலகுவாய் இருக்க லக்க்ஷனாவால் தான் இதெல்லாம் அத்தனை சாதாரணமாய் எடுத்துகொள்ள முடியவில்லை.

தயங்கி தயங்கி அவனருகே அமர்ந்திருந்தவளிடம் “நீதான் சொல்லணும்.. எனக்கு இதெல்லாம் தெரியாது…” என்று சொல்லி அவளை என்ன டிசைன் என்று பேச வைக்க,

அவளும் நேரம் கடத்த கூடாது என்றெண்ணி ஷீலுவுக்கு பிடித்த டிசைனை சொல்ல, ஒருவழியாய் அரை மணி நேரம் கழித்து ப்ரேஸ்லெட் ஓடு சேர்த்து அணியும் மோதிரம் ஒன்றை தேர்வு செய்தனர்..

“இது கண்டிப்பா ஷீலுக்கு பிடிக்கும்ல..” என்று யதுவீர் அவளிடம் குனிந்து கேட்க, அவளும் அதற்கு ஆமாம் என்று சொல்ல,

பார்ப்பவர்களுக்கு என்னவோ உனக்கு இது பிடித்திருக்கிறதா என்று அவன் கேட்பது போலவும் அதற்கு அவள் சம்மதமாய் தலையாட்டுவது போலவும் தெரிந்தது.

ஒருவழியாய் பில் போட்டுக்கொண்டு கிளம்ப, வேகமாய் அங்கே வந்த மேனேஜர் “சார் சார் ஸ்டாப்ஸ் எல்லாம் ஒரு போட்டோ எடுத்துக்கணும் சொல்றாங்க…” என, இது எப்போதும் வழக்கம் தானே என்று யதுவீரும் சரியென்று விட,

“நீ முடிச்சிட்டு வா யது.. நான் அப்படி இருக்கேன்…” என்று வெய்டிங் ஏரியா நோக்கி லக்க்ஷனா செல்ல,

“லக்க்ஷி.. நீயும் இரு…” என்று யதுவீர் சொல்ல, “இல்ல இருக்கட்டும்…” என்று அவள் நகரப்போக, அதற்குள் கடை ஊழியர்கள் அங்கே வந்திட, புகைப்படம் எடுப்பவரும் வந்திட,

“லக்க்ஷி..” என்றவன் அவளது கரங்களை பற்றி நிறுத்திட, அருக்கருகே அனைவரும் வந்து நின்றிட, அதற்குமேல் அவளால் நகர முடியவில்லை..

“ஒன் போட்டோ தான்… கிளம்பிடலாம்..” என்று யது சொன்னாலும் சரி க்ரூப் போட்டோ தானே என்று அவளும் நிற்க, அடுத்து சில ஊழியர்கள்

“சார் ஒன் செல்பி…” என்று அவனோடு தனியாய் வேறு எடுக்க, அனைத்திலுமே யதுவீர் லக்க்ஷனாவின் கரங்களை பற்றிதான் நின்றிருந்தான்..

இது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தப் போகிறது என்று அப்போது அவர்கள் இருவருக்குமே தெரியவில்லை..       

                           

                   

                      

                    

 

Advertisement