Advertisement

மனம் – 5

“என்ன யது இதெல்லாம்.. லீவ் மீ…” என்று அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அவனோ அவளை இறுக பிடித்திருந்தான்.

“யது…..” என்று லக்க்ஷனா பல்லைக் கடிக்க,

“எஸ் யது தான்… அதுக்கென்ன???” என்றான் கூலாய்.

“ஏன் இப்படி பண்ற?? நீ இப்படி பீகேவ் பண்ண மாட்டதானே…” என்றாள் அவனிடம் இருந்து விலகும் முயற்சியில்,

“பீகேவ் பண்ண மாட்டேனா?? யார் சொன்னா?? என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு?? எல்லாம் தெரிஞ்சது போல சொல்ற???” என்றான் அன்று அவள் சொன்ன அதே வார்த்தைகளை வேறு விதமாய்..

லக்க்ஷனாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது. இன்று அவன் செய்யும் ஒவ்வொரு விசயமும் அன்று அவள் செய்ததின் பிரதிபலிப்பு.. ஆக, எதையும் அவன் மறக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாய் தெரிகிறது..

ஆனால் ஏன்??

அவன் ஏன் மறக்காமல் இருக்கிறான்??? எதற்காக ஒவ்வொன்றையும் திருப்பி திருப்பி செய்கிறான்… என்று தோன்ற,

“யது ப்ளீஸ்… கைய விடு…” என்றாள் வருந்தி..

அவள் கோவித்து கத்தியிருந்தால் கூட அவன் விட்டிருப்பானோ என்னவோ, ஆனால் லக்க்ஷனா வருந்தி சொல்லவும் கைகளை விட்டவன், அவள் முகம் பார்த்து பேசும் பொருட்டு, சற்றே வெளிச்சம் இருந்த பகுதிக்கு அவளை அழைத்துச் செல்ல,

அவளுக்கோ மாடிக்கே வந்திருக்க கூடாதோ என்று தோன்றியது..

“யது என்ன பண்ற நீ?? யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க… ப்ளீஸ் டோன்ட் கிரியேட் எ சீன்….”

“சீன்னா??? நானா ??? ஹா ஹா என்ன ஜோக்.. நீ அன்னிக்கு பண்ணத விடவா நான் இப்போ பண்ணிட்டேன்…” என்றவன் அவள் முகத்தைப் பார்த்து,

“டெல் மீ லக்க்ஷி.. இன்னும் என்னை ஹேட் பண்றியா???” என்றான் அவள் கண்களை கூர்ந்து பார்த்தபடி.

‘இதை விடவே மாட்டானா..’ என்றிருந்தது அவளுக்கு.. வந்ததுமே இதை தான் கேட்டான்,.. இப்பவும் இதை தான் கேட்கிறான்.. இவனுக்கு என்னதான் வேண்டும் என்று தோன்ற,

“ம்ம்ச் உனக்கு என்ன வேணும்?? ஏன் இப்படி பண்ற… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு மாடிக்கு வந்தேன்.. பட்..” என்று எரிச்சல் உற்றவள், அங்கிருந்து விலகப் பார்க்க,

மீண்டும் அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தியவன், “இந்த தடவ நானா தான் உன்கிட்ட பேச வந்திருக்கேன்.. சோ நான் சொன்ன அப்புறம் தான் நீ போகணும்.. டெல் மீ.. இன்னும் என்னை ஹேட் பண்றியா….” என்று அவள் முகத்தை பற்றி அவன் முகம் நோக்க வைத்தான்..

‘கடவுளே… என்னதிது…’ என்று அவள் நினைத்தாலும், அனைத்தையும் தாண்டி அவள் மனம் அந்த நேரத்தில் ஒரு இதம் கண்டது என்னவோ உண்மைதான்.

ஆனாலும் அவள் மனதில் இருக்கும் பயம் அவளை சும்மா விடவில்லை. இதெல்லாம் சரிதானா?? அப்படியே சரியென்றாலும் இதெல்லாம் நடக்குமா என்று பயம்… ஏன் எதையாவது பேசி இல்லை எதையாவது சொல்லி எதையும் குழப்ப விருப்பமில்லை.

இன்னும் மூன்று நாட்கள் தானே அனைத்தையும் பொறுப்போம் என்று மீண்டும் மனதில் ஒரு திடத்தை கொண்டு வந்தவள்,

“உனக்கு என்ன தெரியணும் யது???” என்றாள் நிமிர்ந்து..

“உன்னை தெரியணும் லக்க்ஷி… உன் மனசுல என்ன இருக்கு தெரியணும்.. ஏன் என்னை அன்னிக்கு அப்படி ட்ரீட் பண்ண தெரியணும்… எதுக்காக என்னை ஹேட் பண்ற தெரியணும்.. இத்தனை தெரியணும்.. டெல் மீ…” என்று வேகமாய் அவன் பேசினாலும் அவன் சொன்ன இத்தனை விசயத்தில் அவளுக்குத் தான் மூச்சு வாங்கிப் போனது..

லக்க்ஷனா எதுவுமே பேசாமல் அமைதியாய் இருக்கவும், “சொல்லு லக்க்ஷி.. இத்தனை கேள்வி எனக்குள்ள இருக்கு… எல்லாத்துக்கும் எனக்கு நீ சரியான ஆன்சர் பண்ணித்தான் ஆகணும்…” என்றான் நீ சொல்லாமல் இங்கிருந்து போக முடியாது என்பதுபோல.

லக்க்ஷனாவிற்கோ வசமாய் மாட்டிக்கொண்டது போல் இருந்தது. கடவுளே இப்படி ஒவ்வொன்றையும் மனதில் வைத்து கேட்பவனிடம் என்னவென்று சொல்ல.. என்ன சொன்னாலும் அதிலிருந்து வேறு ஒரு கேள்வி கேட்பானே என்று நினைத்தவளுக்கு, அவன் என்ன கேட்டாலும் சரி தன் மனதில் இருக்கும் எண்ணம் வெளியே வர கூடாது என்று நினைத்தாள்.

என்ன சொல்ல என்ன சொல்ல என்று லக்க்ஷனா யோசித்துக் கொண்டு இருக்கையிலே,

“லக்க்ஷி… என்ன யோசிக்கிற.. என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையா…” என்று யதுவீர் கொஞ்சம் தெனாவட்டாகவே கேட்க, அது அவளை இன்னும் உசுப்பியது.

“ஹா.. பதில் சொல்ல தெரியலையா?? ஏன் தெரியாம..” என்றவள் அத்தனை நேரம் இருந்த பதற்றம் எல்லாம் தூக்கிப் போட்டு, மிக மகிய இயல்பாய் பேசுபவள் போல,

“ஏன் யது இன்னுமா நீ அதெல்லாம் நியாபகம் வச்சிருக்க?? ஷில்லி கை… அதெல்லாம் நியாபகம் வச்சு இப்போ வந்து கேள்வி கேட்கிற.. உனக்கு ஒண்ணு தெரியுமா.. இதெல்லாம் நீ சொல்லித்தான் அன்னிக்கு நடந்தது எல்லாம் எனக்கு நியாபாகமே வருது..” என்றாள் எதுவோ ஜோக் சொல்லி சிரிப்பவள் போல..

யதுவீருக்கோ அத்தனை நேரம் அவளை எப்படியாவது பேச வைத்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க, இப்போதோ அவள் பேசிய பேச்சில் கொஞ்சம் திகைத்துத்தான் போனான்.

நிஜமாகவே இவள் பேசுகிறாள் இல்லை எதையும் மறைக்கிறாளா என்று தோன்ற, கண்களை இடுக்கி, அவளை ஆராய்ச்சியாய் பார்க்க,

“என்ன யது அப்படி பாக்குற.. ட்ரூ மென்… நிஜம்.. நம்பு.. சத்தியமா எனக்கு அதெல்லாம் நினைப்பே இல்லை…” என்று சொல்லிக்கொண்டே போக,

“ஸ்டாப் இட் லக்க்ஷி…” என்று கத்திவிட்டான் யதுவீர்..

அவனது இன்றைய நிலைக்கு இப்படியெல்லாம் அவன் யாரிடமும் நின்று பேசவேண்டிய அவசியமில்லை. அவனைத் தேடி வந்து பேசும் பெண்கள் எத்தனை, அவனோடு ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள துடிக்கும் ஆட்கள் எத்தனை.. அவனோடு கை குலுக்க காத்திருக்கும் கூட்டம் எத்தனை. அப்படியிருக்க, அவனோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்விற்கு பதில் தேடி இப்போது அவள் முன்னே நிற்க,

அவளுக்கோ அவனது இன்றைய நிலையே அவனை விட்டு தள்ளி போக போதுமானதாய் இருந்தது.

‘அவன் லெவல் வேற.. நம்ம வேற.. அதுமில்லாம ரெண்டு பேமிலியும் ரொம்ப வருசமா நல்லா பழகிட்டு இருக்காங்க.. இப்போ என்னால எந்த குழப்பமும் வரக்கூடாது.. இது இப்படியே இருந்திடட்டும்..’ என்றெண்ணியவள்,

“ஏன் யது கத்துற.. நீ எப்படி பேசினாலும் இதான் உண்மை.. அண்ட்.. அன்னிக்கு மனசுல என்னவோ ஒரு கோவம்.. அப்படி பேசிட்டேன்.. ஆனா இப்போ அதெல்லாம் சுத்தமா இல்லை.. ஷீலு ஓட மத்த கசின்ஸ் எப்படியோ அப்படித்தான் நீயும்.. அண்ட் அன்னிக்கு நான் அப்படி பேசினது உன்னை ஹர்ட் பண்ணிருக்கும்.. ஐ க்னோ தட்.. சோ சாரி.. இன்னும் அதெல்லாம் மனசுல வச்சுக்காத ஓகே வா.. பீ ப்ரீ..” என்று இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் பேச,

அவனோ பேசு பேசு இன்னும் என்னென்ன பேச முடியுமோ எல்லாம் பேசு என்பதுபோல் பார்த்திருந்தான்..

அவன் பேசாமல் இருப்பதைக் கண்டவள், ‘என்ன இப்படி பாக்குறான்.. டேய் நம்பேண்டா… ப்ளீஸ்… இதோட இதை விட்டுடு.. என்னை படுத்தாத..’ என்று பார்க்க,

“ம்ம் அப்புறம் லக்க்ஷி…” என்றான் முன்னிருந்த முக உணர்வுகளை மாத்தி.

“அப்.. அப்புறமா.. அப்புறம் என்ன?? நத்திங்.. இவ்வளோதான்..” என்று தோளை குலுக்கியவள்,

“டைம் ஆச்சு யது.. நான் கீழ போறேன்…” என்று நகரப் போக,

“ஒரு மினிட்…” என்று நிறுத்தியவன், “நான் கேட்டதுக்கு இன்னும் ஆன்சர் பண்ணவேயில்லை..” என்றான்..

‘இன்னுமென்ன…’ என்று நெற்றியை சுருக்கியவளைப் பார்த்து,

“இன்னும் என்னை ஹேட் பண்றியான்னு கேட்டேன்.. எஸ் ஆர் நோ மட்டும் தான் சொல்லணும்.. வேற எதுவும் பேசக்கூடாது.. இதை சொல்லிட்டு நீ போயிட்டே இரு…” என்றான்..

அவளுக்கோ ஐயோ இத்தனை சொல்லியும் அவன் பிடியிலேயே நிற்கிறானே என்று தான் இருந்தது. வேறோருவனாய் இருந்தால் இத்தனை நேரம் அவள் பேசியதற்கெல்லாம் சரிதான் போ என்று போயிருப்பான்.. அதுவும் யதுவீரின் இன்றைய நிலையில் வேறொருவர் இருந்திருந்தால் அவளை எல்லாம் கண்டுகொள்வார்களோ என்னவோ..

ஆனால் இவனோ விடாது நிற்க வைத்துப் பேச, இவனுக்கு எஸ் சொல்வதா நோ சொல்வதா என்ற பெரிய சந்தேகம் அவளுள். எது சொன்னாலும் மாட்டுவோமோ என்றிருக்க,

‘சமாளி லக்க்ஷி…’ என்று சொல்லிக்கொண்டவள்,

“யது.. ப்ளீஸ்.. அதெல்லாம் நான் தாண்டி வந்துட்டேன்..  மறந்துட்டேன்.. இன்னும் ஏன் நீ அதையே கேட்கிற.. உன் லைப்ல எவ்வளோவோ சேஞ்சஸ் வந்திருக்கு.. ஆனா நீ இன்னும் பழையது பேசுற..” என,

“நீ மறந்துட்ட சரி.. அப்போ என்னையும் மறக்க வச்சிட்டு போ..” என்றான் சற்று முன்னே அவள் தோள்களை குலுக்கியது போல் தோள் குலுக்கி.

‘என்னது மறக்க வச்சிட்டு போவா…’ என்று அதிர்ந்து பார்த்தவள்,

“ம்ம்ச்.. எத்தனை டைம் சொன்னாலும் நீ கேட்க போறதில்ல.. சோ நான் போறேன்..” என்றவள், அவன் பதில் பேசும் முன்னே ஓடிவிட்டாள்.

ஆனால் யதுவீரோ அப்படியே தான் நின்றிருந்தான்.. அவனுக்கு கீழே செல்ல மனமில்லை.. ஐந்து ஆண்டுகளாய் மனதில் அடியாழத்தில் இருந்த எண்ணங்கள் இங்கே வந்ததும் மேலெழும்பி வந்திட, லக்க்ஷனாவிடம் பேசியே ஆகவேண்டும் என்றுதான் வந்தான்.

ஆனால் அவளோ இப்போதும் பிடிக் கொடுக்காமல் பேச, இதற்குமேல் எப்படி அவளை பேச வைப்பது என்றும் தெரியவில்லை.. முதலில் யதுவீர் இத்தனை வந்து பேசியதே பெரிதாய் இருந்தது அவனுக்கு.

எப்போது நடந்தது ஆனால் இப்போது வந்து கேட்கிறான் என்பது அவனுக்குத் தெரியாமல் இல்லை.

ஆனால் அவன் இங்கிருந்து கிளம்புகையில் அவனது சூழலே வேறு.. அப்போதுதான் படிப்பு முடித்திருந்தான். அடுத்தது என்ன செய்யபோகிறான் என்பது அவனுக்கே தெரியாது..

முழு நேர கபடியா.. இல்லை வேறெதுவுமா என்று அவனுக்குள்ளே கேள்விகள் ஓடிக்கொண்டு இருந்தது. அப்படியிருக்கையில் அவன் லக்க்ஷனாவிடம் சொல்லிக்கொண்டு செல்லவென்று தான் அன்று மாடிக்கு வந்தான்.

ஆனால் அவளோ அவன் வருகையில் முகத்தை மறைத்து அழுதுகொண்டு இருந்தாள்.. முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாய் தான் இருந்தது. இதேது அந்த இடத்தில் நிர்மல் இருந்திருந்தால்

“ஹேய் என்னடா ஆச்சு..” என்று அவனிடம் உரிமையாய் கேட்டிருப்பான், ஆனால் லக்க்ஷனாவிடம் அத்தனை உரிமையாய் பேசும் அளவு அவர்கள் பழகவில்லை.

ஆக அவளாய் நிமிரட்டும் என்றே நின்றிருந்தான், அவளும் ஒருநிலையில் நிமிர்ந்து பார்க்க, அவனைக் கண்டதும் அவள் முகத்தில் சட்டென்று தோன்றி மறைந்த மாற்றங்கள் அவனுக்குப் புதிதாய் இருந்தது..

எப்போதும் அவனை கண்டும் காணாமல் செல்பவள் முகத்தில் இப்போது திடீரென்று இப்படியான மாற்றங்கள் தெரிய, மெல்ல அவளை நெருங்கி அவள் எழ உதவி செய்யப் போக, அவளோ அவன் உதவியை ஏற்காது தானாகவே எழுந்தாள்.

சரி ஊருக்குப் போகிறோமே, இத்தனை நாளில் தெரிந்தோ தெரியாமலோ அவளை நோகடித்து இருந்தால், மன்னிப்பு கேட்டு, போகும் போது நல்ல மனநிலையில் போகலாம் என்று தான் பேச்சை ஆரம்பித்தான்..

ஆனால் நடந்ததோ வேறு.. சுத்தமாய் அவன் எதிர்பார்க்காத ஒன்று.. லக்க்ஷனா அப்படியெல்லாம் பேசியதின் காரணம் அவனுக்கு அப்போது புரியவில்லை.

ஆனால் மும்பை சென்று கொஞ்ச நாள் வீட்டிலிருந்த சமயம் அதைப் பற்றி யோசித்தான்.

லக்க்ஷனாவின் இந்த பேச்சுக்கு காரணம் ஒன்று அதீத வெறுப்பு இல்லை அதீத அன்பு இது மட்டுமே காரணமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தவன்,

வெறுப்பவள், ஏன் அழுதுகொண்டு பேசவேண்டும் என்று தோன்ற, கண்களை மூடி அன்று நடந்தவைகளை மீண்டும் காட்சிகளாய் ஓட்டிப் பார்த்தான்..

லக்க்ஷனா முகத்தில் அன்று வெறுப்புத் தெரியவில்லை. ஆனால் அப்படிக் காட்டிக்கொள்ள முயன்றாள்.. அனல் அடிக்கும் வார்த்தைகள் தான் ஆனால் கண்ணீரோடு கலந்து வந்தது..

கண்டிப்பாய் ஒருவர் மீது வெறுப்பிருந்தால் இப்படி பேச முடியாது என்று உறுதியானதும்,

‘அப்.. அப்போ.. அவளுக்கு என்னை பிடிக்குமா??’ என்றுதான் அவன் மனம் யோசித்தது..

‘எதுவா இருந்தா உனக்கென்ன.. உன் லைப்ல நிறைய விஷயம் பண்ண வேண்டியது இருக்கு.. அதைப் பாரு..’ என்று அவனது அறிவு சொல்ல,

மனமோ ‘எதுவாக இருந்தாலும் அவள் தான் உனக்கு பதில் சொல்லவேண்டும்..’ என்று முடிவாய் சொல்லிட,

அப்போதே அவன் சென்னை வந்திருப்பான். லக்க்ஷனாவிடமும் பேசியிருப்பான். ஆனால் அவனுக்கு அடுத்து அடுத்து அங்கேயே இருக்க வேண்டிய நிலை.

அங்கே போனதுமே யதுவீரின் அப்பா அவனுக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்துவிட்டார்.. அவனுக்கோ கபடியை விடவும் மனமில்லை.

ஆக வேலைக்கு செல்வது போதாதென்று மாலை நேரங்களில் கபடி கோச்சிங், வொர்க் அவுட், டீம் செலக்சன் நடக்கும் இடங்களுக்கு செல்வது..  உள்ளூர் கபடி மேட்சில் ஆடுவது, பின் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற இன்று அவன் இண்டர்நேசனல் கபடி ப்ளேயர் ஆவதற்கு அத்தனை கஷ்டங்கள் தான் பட்டான்.

எதுவுமே எளிதில் கிட்டவில்லை.. பல முறை தோல்வி… பல முறை காயங்கள்.. அடிகள்.. வலிகள் எல்லாம் தாண்டி தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறான்..

ஆனால் என்ன அடைந்தும், அவன் அடி மனதில் இருக்கும் லக்க்ஷனா பற்றிய கேள்விக்கு எந்த பதிலும் தெரியாமல் போக, இப்போதும் அவள் அப்படியே இருக்க, இனியும் இதை இப்படியே விடக்கூடாது என்று எண்ணிக்கொண்டான்.

அவனுக்கு லக்க்ஷனா மீது காதலா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அவள் அன்று பேசியது இன்று வரைக்கும் அவன் மனதில் இருக்கிறது.. அதை தெளிவு படுத்த வேண்டும் அது மட்டும் தான் மனதில் இருந்தது இங்கே வரும் வரைக்கும்.

ஆனால் இங்கே வந்தபிறகோ, அவனுள்ளே என்னவோ ஒரு மாற்றம்.. அவளை சீண்ட வேண்டுமென்றோ, இல்லை இப்படியெல்லாம் நிறுத்தி வைத்து வம்பு செய்து பேசவேண்டும் என்றோ அவன் கொஞ்சமும் யோசிக்கவில்லை..

ஆனால் லக்க்ஷனா அவனைத் தவிர்க்க தவிர்க்க, அவனுள் ஒரு வேகம் ‘என்னையா இப்படி செய்கிறாய்..’ என்று தோன்றவும் தான் அவளிடம் இப்படியெல்லாம் நடந்துகொள்ள தோன்றியது.

அதையும் தாண்டி, அவன் கேட்ட கேள்விகளுக்கு ஆம் இல்லை என்று ஏதாவது பதில் சொல்லியிருந்தால் கண்டிப்பாய் அதை அத்தோடு விட்டிருப்பான், அப்படி சொல்லாமல் அவள் எதையோ மறைப்பது போலவும் தனக்குள்ளே யோசிப்பது போலவும்,

‘லக்க்ஷிக்கு என்னை பிடிக்குமா??’ என்ற சந்தேகம் போய்

‘லக்க்ஷிக்கு என்னை பிடிக்கும்.. மறைக்கிறா..’ என்று வந்த இந்த ஒரு நாளிலேயே ஊர்ஜிதமானது..

ஆக அதாவது அவளிடம் இருந்து வருமென்று பார்த்தால் இப்போது அதுவும் இல்லை..

யதுவீருக்கு இதெல்லாம் நினைக்க நினைக்க, கொஞ்ச நேரம் யோசித்தவன், பின் தானாகவே சிரித்துக் கொண்டு

‘சேலன்ஞ் எனக்கு ரொம்பவே பிடிக்கும் பேபி… எனக்கு நானே சேலன்ஞ் பண்ணிக்கிறேன்.. இந்த டூ டேஸ்ல நீயே சொல்வ.. சொல்ல வைப்பேன்..’ என்று சொல்லிக்கொண்டான்.

அங்கே கீழே ஓடிய லக்க்ஷனாவோ வேகமாய் அறைக்கு வந்து கட்டிலில் விழ, நிர்மல் உறங்கியிருந்தான்.. மீரா அவள் வந்த ஐந்து நிமிடம் கழித்து தான் வந்தார்..

“லக்க்ஷி… இன்னும் தூங்கலையா??” என்றபடி மீராவும் படுக்க,

“தூக்கம் இல்லைம்மா.. ஆனா தூங்கிடுவேன்..” என்று சொல்லி அடுத்து ஒன்றும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள்..

அவள் மனதோ ‘லக்க்ஷி… என்ன நடந்தாலும் சரி.. யதுக்கிட்ட தனியா மட்டும் சிக்க கூடாது.. அவன் என்னவோ பண்றான்.. எதோ ட்ரை பண்றான்.. சோ இந்த டூ டேஸ் கேர் புல்லா இருக்கணும்…’ என்று தனக்கு தானே எச்சரித்துக் கொண்டாள்.

ஆனால் மறுநாளோ, பொழுது விடிந்து குளித்து தயாராகி அறையை விட்டு வெளியே வரும் போதே அவள் கண்ட முதல் காட்சி யதுவீரும் மீராவும் பேசிக்கொண்டு இருந்ததைத்தான்.

இருவர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், எதுவோ சீரியசாக பேசுவது போல் இருந்தது..

‘அம்மாட்ட என்ன பேசுறான்..’ என்று கேள்வியாய் பார்த்தவள், அவர்களை நோக்கி கால்களை வைக்க, பின்னே அவளே சுதாரித்துக்கொண்டாள்.

‘வேணாம் லக்க்ஷி… அவங்க என்னவோ பேசட்டும்.. நீ போகாத..’ என்று நினைத்தவள், ஷீலு எங்கிருக்கிறாள் என்று பார்த்து அங்கே செல்ல போக,

மீரா இவளைப் பார்த்தவர் “லக்க்ஷி…” என்று அழைத்தார்..

திரும்பிப் பார்த்தவளுக்கோ, யதுவீரின் கண்ணில் இருந்த கள்ளச் சிரிப்பே கண்ணில் பட்டது.               

                                

    

     

Advertisement