Advertisement

  மனம் – 4

லக்க்ஷனா நடப்பது என்ன என்று உணர்வதற்குள் அந்த ஹாலில் இருந்த முக்கால்வாசி பேர் யதுவீரை நெருங்கியிருந்தனர். அவள் நிமிர்ந்து நேராய் நிற்கையில் கூட்டம் சுற்றி வளைக்க, தன்னப்போல் லக்க்ஷனா பின்னே நகர,

“யது…”

“யது பய்யா…”

“பேட்டா…”

என்று பலவிதமான குரல்கள் ஒலிக்க, அனைவருக்கும் இடையில் நின்றிருந்த யதுவீரின் பார்வையோ ஒருமுறை லக்க்ஷனா எங்கே என்று பார்த்துவிட்டு பின் அனைவரையும் பார்த்து சிரித்தபடி பேச, அவளோ அவனை மட்டுமே பார்த்து நின்றிருந்தாள்.

லக்க்ஷனாவின் நெஞ்சம் வேகமாய் துடிப்பது போலிருக்க, நாவு வறண்டு போனது..

‘அவன்தானா’ என்று இன்னும் நம்ப முடியாமல், இமைக்கத் தோன்றாமல் பார்த்தபடி நின்றிருக்க,

“லக்க்ஷி.. அடி எதுவும் இல்லையே…” என்று மீரா அக்கறையாய் மகளை பார்வையால் வருடியபடி கேட்க,

“ஹா.. என்னம்மா…” என்று முழித்தாள்.

“அடி எதுவும் படலையேன்னு கேட்டேன் டி..” என,

“இல்லம்மா…” என்று தலையை ஆட்டினாள்.

“நல்ல வேலை லக்க்ஷி.. யது வந்தான்…” என்று மீரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே யதுவீர் அங்கே அவர்களிடம் தான் வந்தான்..

“ஆன்ட்டி..” என்றவன் அவரது காலைத் தொட்டு வணங்க, “யது.. நல்லாயிருப்பா..” என்றவரிடம், அவனும் குசலம் விசாரிக்க,

“யது அண்ணா…” என்று நிர்மலும் அங்கே வந்துவிட,

“ஹேய் வளர்ந்துட்ட டா..” என்று சொல்லி அவனும் பேச, ஏனோ அங்கே அவளால் தான் நிற்க முடியவில்லை.

அனைவரும் அவனோடு நன்றாக பேசுகின்றனர்.. அவனும் அனைவரோடும் இயல்பாய் பேசுகிறான், ஆனால் அது அவளால் முடியாது போகவும் அவளுக்கு அவள் மீதே எரிச்சல் வந்தது..

‘ச்சே மனசுக்குள்ள எவ்வளோ யோசிச்சு வச்ச லக்க்ஷி.. இப்போ ஏன் இப்படி டிஸ்டர்ப் ஆகுற.. நீ ஆசைப்பட்டா போதுமா.. அவனுக்கு உன்னை பிடிக்குமா பிடிக்காதா.. அப்படியே பிடிச்சாலும் ரெண்டு ஃபேமிலில அக்செப்ட் பண்ணுவாங்களா இதெல்லாம் யோசிக்க வேணாமா.. சோ இதெல்லாம் உனக்கு வேணாம்.. ஜஸ்ட் த்ரீ டேஸ்.. எல்லார் கூடவும் சகஜமா இருக்கிறது போல இருந்துட்டு போயிடு..

அடுத்து அவனும் போயிடுவான்.. அவனுக்கு நீ என்ன பெருசா.. அவனோட இப்போ லெவலே வேற…. சோ உன் மனசில இருக்கிறதை எல்லாம் ஓரமா மூட்டைக் கட்டி வச்சிட்டு இயல்பா இரு….’ என்று அவள் புத்தி, அறிவுரை சொல்ல, அவளுக்கும் அதுவே சரியெனப் பட்டது. 

‘மூணு நாள் தான்.. மூணே நாள் தான்.. தென் எல்லாம் ஓவராகிடும்.. தேவையில்லாமல் நானும் குழம்பி அவனையும் ஹர்ட் பண்ணி நோ நோ..’ என்று தனக்கு தானே எண்ணிக்கொண்டவள், முகத்தில் வேகமாய் ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு,

“தேங்க்ஸ் யது…” என்று அவனை நேருக்கு நேர் பார்த்து சொல்ல, யதுவீரின் கண்களில் மீண்டும் ஒரு மின்னல் ஒளி.

மூன்று நாள் தானே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்தவளுக்கு அந்த ஒரு நொடி பார்வையைக் கூட சமாளிக்க முடியாமல் போனது.

கொஞ்சம் அதிர்ந்து அப்படியே நிற்க, யதுவீரோ அவளை நோக்கி ஒரு எட்டு வைத்தவன், தன் கரங்களை அவள் முன் நீட்ட, அவளுக்கு ஐந்தாண்டுகள் முன்பு அவன் கடைசியாய் கிளம்பும் போது, அவள் எழுந்து நிற்பதற்கு உதவி செய்வது போல் அன்றும் கை நீட்டினான், இன்றோ அவளோடு சேர்த்து கரம் குலுக்க கை நீட்டுகிறான் என்று தோன்ற, இன்னும் கண்களை விரித்தாள் அவள்.

“ம்ம்..” என்று யதுவீர் இன்னும் அவள் முன்னே கை நீட்ட, அவளோ அவனையே பார்த்தபடி அவன் கரத்தில் அவளதை வைக்க,

“தட்ஸ் குட் பேபி…” என்று சொல்லி, அவள் கைகளில் ஒரு அழுத்தம் கொடுத்தவனை, இப்போது திடுக்கிட்டு பார்த்தவள், வேகமாய் மீராவைப் பார்க்க, அவரோ அங்கில்லை..

அதற்கும் யதுவீர் சிரித்தான்… அவன் சிரிக்கவும் அவளுக்கு என்ன தோன்றியதோ கைகளை உருவிக்கொண்டவள், தான் கொஞ்ச நேரம் முன்னே எடுத்து வைத்திருந்த முடிவுகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு, வேகமாய் சென்று ஷீலு அருகில் அமர்ந்துகொண்டாள்.

அதையாவது கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம், இத்தனை நாள் கழித்து ஷீலுவின் திருமணத்திற்கு என்று வந்தவன், அவளை சென்று பார்க்காமல் இருப்பானா என்ன??

அடுத்து தன்னிடம் பேசியவர்களிடம் எல்லாம் கொஞ்சம் பொறுமையாகவே சிரித்தபடி தலையை லேசாய் ஆட்டியபடி பேசி பேசி நகர்ந்து வந்தவன், நேராய் ஷீலுவிடம் தான் வந்தான்..

அப்போது தான் ஷீலு லக்க்ஷனாவை கட்டாயப்படுத்தி மெகந்தி போட சொல்லி, அவளும் சரியென்று கைகளை நீட்டி அமர்ந்திருந்தாள்.

“ஷீலு….” என்று சந்தோசமாய் அழைத்தபடி வந்த யதுவீரை கண்டவளோ,

“பய்யா…..” என்று அதை விட சந்தோசமாய் கூவிக்கொண்டு, தன் கைகளில் இருக்கும் மருதாணி கலைந்துவிடாது அவன் மீது சாய்ந்துகொள்ள,

“ரியலி ஹேப்பி ஷீலு…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “தேங்க்ஸ் எ லாட் பய்யா.. எங்க நீ மேட்ச் இருக்கு சொல்லி வரமாட்டியோன்னு நினைச்சேன்…” என்று ஹிந்தியில் மொழிய,

இவை அனைத்தும் லக்க்ஷனாவின் காதுகளில் விழுந்தாலும் ‘திரும்பாத திரும்பாத…’ என்று சொல்லிக்கொண்டு மெஹந்தி இடுவதை கர்ம சிரத்தையாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ஆனால் யதுவீர் அங்கே வரவுமே, ஷீலு வீட்டின் மற்ற இளசுகளும் வந்திட, அவன் இயல்பாய் அமர்வது போல் லக்க்ஷனாவின் பின்னே கொஞ்சம் அவளை ஒட்டியபடி அமர, அடுத்து ஒவ்வொருவராய் அவனருகேயும், ஷீலு அருகேயும் அமர்ந்திட, லக்க்ஷனா நினைத்தும் கூட தள்ளி அமர முடியவில்லை..

இதில் நிர்மல் வேறு, அங்கே வந்திட, ‘இவன் என் தம்பிதானா..’ என்பது போல் பார்த்திருந்தவளை,

“இப்படி கை திருப்புங்க…” என்று மெகந்தி போடுபவரின் குரல் அவரைப் பார்க்கச் செய்ய,  சரியென்று அவருக்கு கையை திருப்பியவளுக்கு அவனருகே அத்தனை நெருக்கமாய் அமர்ந்திருப்பது எப்படியோ இருந்தது.

ஒரு கை முழுக்க மெஹந்தி இருக்க, மற்றொரு கரத்திலும் முடியும் தருவாயில் இருக்க, இது முடிந்த உடனே எழுந்து நிற்கவேண்டும் போல் இருந்தது அவளுக்கு. ஆனால் முடியாதே..

லக்க்ஷனா அவள் அமர்ந்திருந்த கொஞ்சம் பெரிய வட்ட வடிவ மெத்திருக்கையை விட்டு எழ வேண்டுமென்றால் அதற்கு யதுவீர் முதலில் எழுந்து நின்று வழிவிட வேண்டும்..

‘வேணும்னே பண்றான்.. ச்சே நானே கொஞ்சம் நல்லபடியா இருக்கணும்னு நினைச்சா கூட இவன் இப்படி பண்றானே…’ என்று முனங்கியவள்,

“ஷீலு…” என்றழைக்க, அவளுக்கோ காதே கேட்காமல் வேறோருத்தியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

“ஷீலு…” என்று மீண்டும் லக்க்ஷனா பல்லைக் கடித்து அழைக்க, அது யதுவீருக்கு கேட்காதா என்ன,

“ஷீலு… லக்க்ஷி.. கூப்பிடுறா…” என்று அவளிடம் சொல்லவும், அவளும் “கியா லக்க்ஷி..” என்று திரும்ப,

“நான் இறங்கனும்…” என்று யதுவீரை கண்ணில் ஜாடை காட்டினாள்..

அதற்குள் மெஹந்தி போடுபவரும் அவர் வேலையை முடித்துவிட, ஷீலு பார்த்தவள், “கால்ல போடு லக்க்ஷி..” என,

“நோ நோ..” என்று லக்க்ஷனா மறுக்கவும், சாதாரணமாய் யதுவீர் அவள் கரங்களில் இட்டிருந்த டிசைனைப் பார்ப்பது போல் திரும்பிப் பார்க்க, அவனது முதுகுபுறம் முழுதும் லக்க்ஷனாவின் தோள் மீது உரச,

அந்த நேரத்தில் தோன்றிய கோபத்தில், வேகமாய் திரும்பி அவனை முறைக்கப் பார்த்தவள், யதுவீரின் முகமும் தன்னருகே வேறு நெருக்கமாய் தெரிய, எத்தனை வேகத்தில் முறைத்தாளோ அத்தனை வேகத்தில் திரும்பிக்கொண்டாள்.

ஆனால் யதுவீரோ, “வாவ்.. நைஸ் டிசைன்… அண்ட் நைஸ் அரோமா (வாசனை)…” என்று சொல்ல,

இவன் யாரை சொல்கிறான் என்பதுபோல் லக்க்ஷனா பார்க்க, அவனோ அவளைத் தான் பார்த்துகொண்டு இருந்தான்.. ஷீலு பார்க்கையில் லக்க்ஷனாவின் கரத்தில் இருப்பதை பார்ப்பது போல் பார்க்க,

‘இவனுக்கு என்னாச்சு.. மும்பை போய் மாறிட்டானா?? இப்படியெல்லாம் பீகேவ் பண்ண மாட்டானே…’ என்று குழம்பித் தவித்துப் போனவள், அப்படியே அமர்ந்துவிட,

“லக்க்ஷி…. லக்க்ஷி..” என்று ஷீலு இரண்டு முறை அழைக்க, நிர்மல் தான் “அக்கா.. என்னாச்சு.. யது அண்ணா, நீ இறங்க எவ்வளோ நேரம் எழுந்து நிக்கிறாங்க…” என்று அவள் தோளைத் தொட்டு உசுப்ப,

“ஆ..” என்று அதிர்ந்தவள், “இதோ இறங்குறேன்..” என்று இறங்கப்போக, அவளால் பேலன்ஸ் செய்ய முடியாமல் போக, நிர்மல் அவளுக்கு உதவி செய்வதற்குள்,

“இரு நான் ஹெல்ப் பண்றேன்…” என்று யதுவீர் லேசாக அவள் தோள்களைப் பற்றி இறக்க, அது இன்னும் அவளுக்கு அவஸ்தையாய் தான் போனது.

ஷீலு தான் கொஞ்ச நேரத்தில் டென்சனாகி விட்டாள். அவளுக்கு யதுவீரை லக்க்ஷனாவிற்கு பிடிக்காது என்பதுவரை தான். அதற்குமேல் எதுவும் தெரியாது. அப்படியிருக்கையில் இன்றுதான் இருவரும் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்தித்திருக்க, இந்த சந்திப்பு யாருக்கும் கசப்பானதாய் மாறிவிடக்கூடாதே என்று மனதில் பயமெல,

லக்க்ஷனா இறங்கி நின்றவளிடம் மெதுவாய் “லக்க்ஷி.. ப்ளீஸ் எதுவும் சண்டை போட்டுடாத டி…” என்று சொல்லி, பார்வையில் கெஞ்ச, லக்க்ஷனாவிற்கு நிஜமாகவே அந்த நொடி சங்கடமாய் போனது.

லக்க்ஷனா இறங்கியதுமே, அவள் இறங்க வழிவிட்டு கொஞ்சம் கொஞ்சம் தள்ளி அமர்ந்தவர்கள் எல்லாம் இப்போது நன்றாகவே அமர்ந்துகொள்ள, யதுவீரும் அவன் இடத்தில் அமர்ந்துவிட, ஷீலுவின் தம்பி முறை பையன் ஒருவன், இன்னொரு இருக்கையை எடுத்துக்கொண்டு வந்து அங்கே போட, அதில் அமர்ந்த லக்க்ஷனா,

“கவலைப் படாத ஷீலு.. நான் எதுவும் பண்ணமாட்டேன்…” என்றாள் சமாதானமாய்.

யதுவீரும் இதெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தான்.. அவனுக்கு நிறைய விசயங்கள் லக்க்ஷனாவிடம் பேசவேண்டியது இருந்தது. நிறைய நிறைய அவளிடம் கேட்கவேண்டிய கேள்விகள் இருந்தன…

அவன் மனதில் இத்தனை நாளாய் போட்டு பூட்டி வைத்திருந்த விஷயங்கள் எல்லாம் அன்று பூனம் சென்னை செல்லவேண்டும் என்று சொன்னதுமே தானாகவே பூட்டுடைத்து வெளி வந்துவிட, இன்றோ லக்க்ஷனாவை கண்ட பிறகோ அதெல்லாம் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

அவளோடு தனியே பேச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான்.. இந்த மூன்று நாட்களில் எதுவும் பேசினால் தான் ஆனது, சரியாய் ஷீலு திருமணம் முடிந்து அடுத்த இரண்டாவது நாளில் அவனுக்கு சென்னையில் நடக்கும் லீக் மேட்ச்கள் ஆரம்பம்..

அதற்குள் அவனுக்கு ஒரு தெளிவு கிடைத்திட வேண்டும்.. இத்தனை ஆண்டுகள் கழித்து அவனுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்க, அதை அவன் அப்படியே சும்மா விடுவதாய் இல்லை.. நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.. அவளோடு பேசுவதற்கு.. அவளையும் பார்த்துகொண்டு தான் இருந்தான்.. அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்கு..

யதுவீரின் பார்வைகள் தன்னையே தொடர்வது கண்டு, லக்க்ஷனாவிற்கு உள்ளூர எதுவோ செய்தது.. அவள் எடுத்த முடிவுகளின் உறுதிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் கழண்டு விழப்போவது போல் இருக்க, அவளோ அவன்பால் திரும்பும் தன் பார்வையையும் மனதையும் கெட்டியாக இழுத்துப் பிடித்துக்கொண்டு இருந்தாள்.

‘இந்த மூணு மணி நேரத்துக்கே மூச்சு முட்டுதே.. மூணு நாள் எப்படி சமாளிக்க போறேனோ..’ என்றுதான் நினைத்தாள்.

ஒருவழியாய் அன்றைய விழா அனைத்தும் முடிந்து, அனைவரும் விருந்துணவும் முடித்து, அங்கே இங்கே என்று கூட்டமாகவோ, இல்லை இருவர், மூவராகவோ அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, லக்க்ஷனா மாடியில் ஷீலுவோடு நின்றிருந்தாள்.

“தேங்க்ஸ் லக்க்ஷி…” என்று ஷீலு சொல்ல, இது எதற்கு என்பதுபோல் லக்க்ஷனா பார்க்க,

“யது பய்யா கூட சண்டை எதுவும் போட்டுடுவியோன்னு பயந்து போயிட்டேன்..” என்றாள் நிஜமாகவே பயந்து முகத்தை வைத்து.

“ஹா ஷீலு.. சாரி தெரிஞ்சோ தெரியாமலோ உனக்கு இப்படியொரு டென்சன் கொடுத்துட்டேன்.. பட் ஷ்யூர் நான் உன் யது பய்யா கூட சண்டை போட மாட்டேன்..” என்று உறுதியாய் சொன்னாள்,

ஆனால் அவளுக்குத் தெரியவில்லை போல, அவனுக்காக அவளே அவளிடம் சண்டையிட போகிறாள் என்று.

நேரம் அப்படியே கடந்து கொண்டு இருக்க, தோழிகள் இருவருக்கும் பேச்சு நீண்டுகொண்டே இருந்தது. யதுவீர் அடுத்து அவர்களிடம் வரவேயில்லை. அவனுக்கு மற்றவர்களோடு நேரம் செலவிடவும் வேண்டியதாய் இருந்தது. முன் எப்படியோ, ஆனால் இன்று அவனுடையே ஸ்டேடஸ் கூடிவிட்டது..

விழாவிற்கு என்று வந்தவர்கள் நிறையபேர் அவனோடு செல்பி எடுத்துக்கொள்ள, அவற்றை சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்ய என்று இருக்க, அத்தனை ஏன் நிர்மல் கூட அவனோடு புகைப்படம் எடுக்க, யதுவீரும் அதற்கெல்லாம் சளைக்காமல் போஸ் கொடுக்க,  இதெல்லாம் லக்க்ஷனாவின் கண்களில் விழுந்து கொஞ்சம் பொறாமையை உண்டு செய்தது என்னவோ உண்மைதான்.

‘ச்சே எப்படி இப்படி எல்லார்க்கிட்டயும் சிரிச்சு சிரிச்சு பேசுறான்… பார்க்கிற எனக்கே பொறுமை போகுதே..’ என்றும் நினைத்துக்கொண்டாள்.

அவளும் அவனைப் பார்த்துகொண்டு தானே இருந்தாள், நிறைய நிறைய மாற்றங்கள் அவனிடம்.. ஒரு பெரிய மனித தோரணை வந்திருந்தது.. க்ளாசியாய் இருந்தான்.. அவளது காதல் கொண்ட மனம் அவளது அனுமதி இல்லாமலேயே அவளையும் அவனையும் ஒப்பிட்டுப் பார்க்க,

‘நம்ம அவனுக்கு மேட்சா இருப்போமா…??’ என்ற சந்தேகமும் முளைத்தது.

என்னதான் இதெல்லாம் கூடாது.. வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் அதெல்லாம் எங்கே அவள் மனம் கேட்கப் போகிறது.. காதல் ஒன்று வந்துவிட்டால், அதன் சாத்திரங்கள் வேறு… சங்கதிகள் வேறு… சொன்னதை கேட்காது.. செய்வதையும் சொல்லாது..

காதலின் உலகம் வேறு.. சில நேரம் நறுமணம் கமழும்.. சில நேரம் சுவாசத்திற்கு ஏங்க வைக்கும்.. பல நேரம் சித்தம் கலங்க வைக்கும்.. திடீரென்று கண்ணீர் சிந்த வைக்கும்..

இவை அனைத்துமே இப்போது லக்க்ஷனாவிற்கு நடந்துகொண்டு இருந்தது.. ஷீலுவோடு பேசிக்கொண்டு இருக்க, அங்கே வந்த ஷீலுவின் சித்தியோ, சீக்கிரம் உறங்கச் சொல்ல,

“ஓகே ஷீலு. நல்லா தூங்கு.. அப்போதான் ப்ரஷ் பீல் இருக்கும்.. மார்னிங் பார்க்கலாம்.. குட் நைட்” என்று சொல்லி, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.

அங்கோ நிர்மல் படுத்து மொபைலில் விளையாடிக்கொண்டு இருக்க,

“அம்மா எங்க டா..” என்றபடி அவளும் மற்றொருபக்கம் இருந்த கட்டிலில் ஏற,

“கீழ ஸ்வீட்ஸ் பண்றாங்க போலக்கா.. நீலம் ஆன்ட்டி வந்து கூட்டிட்டு போனாங்க அம்மாவ…” என்றவன் அடுத்து அவளிடம் பேசாமல் விளையாடிக்கொண்டு இருக்க, ஏனோ லக்க்ஷனாவிற்கு உறக்கம் வரவில்லை.

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டு படுத்தாள். என்ன முயன்றும் அவளால் நிம்மதியாய் உறங்க முடியவில்லை.. நிர்மல் கொஞ்சம் பேசினால் கூட அப்படியே பேசியபடி படுத்திருப்பாள், அவனும் விளையாட்டில் இருக்க,

“நிர்மல் அம்மா வந்து கேட்டா மாடில இருக்கேன் சொல்லு..” என்றுவிட்டு, அவர்களிருந்த அறைக்கு பக்கவாட்டில் இருந்த மாடிப் படியை நோக்கி ஏறினாள்.

பௌர்ணமி நெருங்குகிறது காற்றில் நல்ல ஈரப் பதம் இருந்தது.. அவள் கையில் மாலை வைத்திருந்த மெஹந்தி வாசமும், கீழே ஸ்வீட்ஸ் செய்யும் நெய்யின் வாசமும் நாசியை நிறைக்க, சுற்றியிருந்த சூழல் கொஞ்சம் மனதிற்கு அமைதி கொடுப்பதாய் இருந்தது.

அங்கே மாடிக்கு வந்து நிற்கவும், அவர்கள் முன் இங்கிருக்கும் போது நடந்தவைகள் எல்லாம் நினைவில் வர, பழைய நினைவில் இதழ்களில் வந்து புன்னகை ஒட்டிக்கொள்ள, நிலவை மறைத்து மெல்ல மெல்ல போகும் சாம்பல் நிற மேகங்களை பார்த்தபடி நின்றிருந்தாள் லக்க்ஷனா..

மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் அமைதியடைந்து, ஒரு தெளிவு வருவது போல் தோன்ற, சட்டென்று அது அப்படியே மாறி இதயம் வெகுவாய் துடிக்க ஆரம்பித்தது..

எதோ ஓர் உணர்வு… அவளை திரும்பிப் பார்க்க செய்ய, யதுவீர் தான்.. யாருடனோ அலைபேசியில் பேசியபடி நடந்து வந்து கொண்டு இருந்தான்.

‘அச்சோ.. இவன் எங்க இங்க வர்றான்…’ என்று பார்த்தவள், யதுவீர் அவளை பார்த்துவிடும் முன் கீழே சென்றுவிடலாம் என்று முன்னே வராமல், மதில் ஓரமாகவே நடந்து போகலாம் என்று சென்றவளை, வேகமாய் யதுவீரின் கரங்கள் அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தியிருந்தான்.

“ஹேய் என்ன..??” என்று திகைத்து லக்க்ஷனா கேட்க,

“போன் பேசிட்டு வந்தேன்னு நினைச்சியா..?? உன்கிட்ட பேசத்தான் வந்தேன்..” என்றவன்,

“எவ்வளோ நாள் ஆச்சு பேபி நம்ம இப்படி மீட் பண்ணி…” என்றவனின் பேச்சும் பார்வையும் லக்க்ஷனாவை இன்னும் தான் உறையவைத்தது.          

                                      

     

                                  

 

Advertisement