Advertisement

மனம் – 20

“என்ன லக்க்ஷி சொல்ற… ஜாப் ரிசைன் பண்ணிட்டியா???” என்று மீரா அதிர்ச்சியாய் கேட்க,

“ஆமாம்மா…” என்று சோபாவில் சாய்ந்து அமர்ந்தவளை வித்தியாசமாய் தான் பார்த்தார் மீரா..

படித்து முடித்ததுமே கேம்பஸில் வந்த வேலை இது.. என்னவோ பெரிய பொக்கிஷமே கிடைத்தது போல் லக்க்ஷனா அப்படியொரு ஆட்டம் போட்டாள் வேலை கிடைத்ததும்.

ஆனால் இன்று விட்டுவிட்டேன் என்று அசலாட்டாய் சொல்லி அமர்பவளை வித்தியாசமாய் தான் பார்க்கத் தோன்றியது மீராவிற்கு.. ஒருவேளை யாரும் எதுவும் பேசி விட்டார்களோ.

மனம் நொந்து போய் தான் வேலையை விட்டு வந்துவிட்டாளோ என்றிருக்க, அதையும் அப்படியே மகளிடம் கேட்டார்.

“அவங்க என்ன என்னை சொல்றது… நான்தான் போடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்….” என்று கண்களை திறக்காமல், நீட்டியிருந்த காலை ரிலாக்ஸாக ஆட்டியபடி  சொன்னவளை கண்டவருக்கோ இன்னும் புருவம் சுருங்கியது..

இப்போது மனதில் என்ன நினைத்துக்கொண்டு இப்படி செய்கிறாளோ என்றிருக்க, “லக்க்ஷி.. என்ன பிரச்சனை.. எதுவும் முழுசா சொன்னாதானே எனக்கும் புரியும்…” என,

கண்களை திறந்து பார்த்தவளோ, “இரும்மா ஒரு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வர்றேன்..” என்று அடுப்படி சென்று கொஞ்ச நேரத்தில் எலுமிச்சை ஜூஸும் போட்டுக்கொண்டு வந்து மீராவிற்கும் கொடுத்து, தானும் பருகினாள்.

“ஹா…..” என்று அவளே அவள் போட்ட ஜூஸை ரசித்துக் குடிக்க, மீராவோ சுத்தம் என்னடா இவள் இப்படி செய்கிறாள் என்று பார்க்க,

ஜூஸ் முழுவதும் காலி செய்த பின்னே தான் “நிர்மல் எங்கம்மா…” என்று கேட்க,

“அவன் ஹாக்கி கிரவுண்டுக்கு போயிருக்கான் லக்க்ஷி…” என்றவர் “நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. காலைல நல்லாதானே போன.. இப்போ என்ன.. இந்த போட்டோஸ் போட்டு வந்த நீயுஸ்னால எதுவும் பிராப்ளமா???” என்றார் கவலையாய்.

“ம்மா அதுனால பிராப்ளம் வந்திருந்தா கூட நான் ஜாப் விட்டிருக்க மாட்டேன்.. ஆனா அவனுங்க அதை வைச்சு பிஸ்னஸ் பண்ணனும்னு நினைக்கிறாங்க…” என்றவளை புரியாமல் பார்த்தார் மீரா.

“என்னம்மா புரியலையா??” என்றவள் நடந்ததை சொல்ல, மீராவிற்குமே ச்சே என்றானது..

என்னதான் மனிதர்களோ.. பணம் பார்ப்பதற்காக எதை எதை பேசுவது என்றே எண்ணம் வேண்டாமா?? ஒருவர் செத்துக்கொண்டு இருந்தால் அதைவைத்து கூட பிஸ்னஸ் பேசும் உலகமாய் அல்லவா போய்விட்டது இப்போது..

அப்படியிருக்க இதெல்லாம் எம்மாத்திரம்…

“நீயே சொல்லும்மா.. அவங்க எனக்கும் யதுக்கும் இருக்க ரிலேஷன்ஷிப் வச்சு பிஸ்னஸ் பேசுறாங்க.. அசிங்கமாயில்ல… அதுவும் இப்போதான் இப்படி ஒரு இஸ்யு போயிருக்கு.. எப்படி திங் பண்றாங்க பாரேன்…” என்று சொல்லி தலையை குலுக்கியவலைப் பார்க்க

மீராவிற்கு கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது.. பரவாயில்லை தெளிவாய் திடமாய் ஒரு முடிவெடுத்து வந்திருக்கிறாள். இனி வாழ்வில் எப்படியான கஷ்டமான சூழல் வந்தாலும் அதனை லக்க்ஷனா சமாளிப்பாள் என்ற நம்பிக்கை அந்த நேரம் மீராவினுள் பிறந்தது.

“என்னம்மா அப்படி பாக்குற.. எனக்கு கேட்டதும் சரியான கோபம்.. ஆனா யதுக்காக கொஞ்சம் பொறுமையா பேசிட்டு வந்தேன்…” என,

“சந்தோசம் லக்க்ஷி.. நானே இப்படி ஒரு சேஞ் உன்கிட்ட எதிர்பார்கலை..” என்றார் மீரா..

மீரா அப்படி சொன்னதும், ஒருநொடி மௌனமாய் இருந்தவள், பின் கொஞ்சம் அமைதியான குரலில்,

“என்னோட ஒவ்வொரு செயலும், யதுவோட ப்ரொஃபஸன்லையும் அவனோட பெர்சனல் ஸ்பேஸ்லையும் ரெஃப்லக்ட் ஆகுதுங்கிறப்போ நான் அதுக்கேத்த மாதிரிதானே ம்மா இருக்கணும்… நான் கொஞ்சம் குழப்பவாதி தான்.. எதுக்குமே தயங்குவேன்தான். ஆனா அதுக்கான விசயங்கள்னு ஒண்ணு இருக்கில்லையா.. யது விசயத்துல அப்படி இருக்க முடியுமா ம்மா..??” என்று கேட்டவளை மெச்சுதலாய் பார்த்தவர்,

“ஹ்ம்ம் பரவாயில்ல லக்க்ஷி.. இனிமே நான் ஃப்ரீயா கிளம்பி ஸ்கூல் போகலாம்.. நீயே எல்லா வேலையும் பார்த்துப்ப..” என்றபடி எழ,

“என்னது.. ம்மா இதெல்லாம் போங்காட்டம்.. என்னால முடியாது.. எப்பவும் செய்றதுதான் செய்வேன்…” என்று வால்பிடித்து அவர் பின்னேயே செல்ல,

“நாளைக்கு கல்யாணம் ஆனப்புறம் அங்க போயும் இதான் சொல்வியா.. நீ ஜாப் விட்டதுக்கூட நல்லது தான். ஒழுங்கா வீட்டு வேலை பழகு.. கொஞ்சம் அவங்க சைட் சமையல் எல்லாம் பழகு…” என்று மீரா சொல்ல,

“அதானே பார்த்தேன்.. உலகம் எவ்வளோ முன்னேறி போனாலும் இதை மாத்தவே முடியாதே…” என்று நொடித்தாள் லக்க்ஷனா..

மீரா எதோ வேலையாய் இருந்தவர் அவள் இப்படி சொன்னதை கேட்டு திரும்பி, “உலகம் எவ்வளோ முன்னேறி போனாலும் கத்ரிக்காவை முருங்கைன்னு சொல்ல போறதில்லை முருங்கையை கத்ரின்னு சொல்ல போறதில்லை..” என,

“பார்ரா பன்ச் டயலாக்கா…” என்று சொல்லி சிரித்தாள் லக்க்ஷனா..

“எந்த டயலாக்கும் இல்லை லக்க்ஷி.. என்னதான் உலகம் முன்னேறி போனாலும் பொண்ணுங்களுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு.. அதை அவங்கதான் பண்ணனும்.. பண்ண முடியும். ஆணுக்கு பெண் சரிநிகர்ன்னு பேசுறதெல்லாம் சரி.. ஆனா சில விசயங்கள்ல நம்ம அனுசரிச்சுதான் போகனும்..

இதை நீ அட்வைஸா எடுத்துக்கிட்டாலும் சரிதான்.. இந்த வீட்ல என்னோட பொறுப்பு கடமையை உணர்ந்து நான் இருந்தனால தான் அங்க உன் அப்பா நிம்மதியா வேலை செய்ய முடிஞ்சது.. அதை புரிஞ்சு நடந்துக்கோ.. அதிலும் இப்போ யது வீட்ல இருக்க பழக்க வழக்கம் எல்லாம் டோட்டலா வேற.. சோ இந்த டைம்ம யூஸ் பண்ணிக்கோ.. அவ்வளோதான் சொல்வேன்…” என்று மீரா பேசி முடிக்க,

“சரிங்க மிஸ்…” என்றாள் வேண்டுமென்றே வாயில் விரல் வைத்து..

“போடி போக்கிரி…” என்று மீரா சொல்ல, அத்தனை நேரம் மனதில் இருந்த டென்சன் எல்லாம் குறைந்து, மிக மிக ரிலாக்ஸாக உணர்ந்தாள் லக்க்ஷனா..

அதே மனநிலை யதுவீரின் அழைப்பிற்காக காத்திருக்க, அவனோ எப்போதும் அழைக்கும்  நேரத்தை விட மிக தாமதமாகவே அழைக்க, லக்க்ஷனாவோ பாதி தூக்கத்தில் இருந்தாள்.

முதலில் எல்லாம் தூங்காமல் கொட்ட கொட்ட தான் விழித்திருப்பாள், பின் யதுவீர் ஒருநாள் திட்டவும் அதன் பிறகு கொஞ்சம் அதனை குறைத்துகொண்டாள்.

முதலில் யதுவீர் சாதரணமாய் அழைத்திட,

“விடியோ கால் வா யது…” என்று லக்க்ஷனா சொல்லவும், “ம்ம்…” என்று அவனும் சொல்லி விடியோ கால் அழைக்க, அதற்குள் லக்க்ஷனா அறையில் லைட் எல்லாம் போட்டு அவனோடு பேசுவதற்கு ஏதுவாய் அமர்ந்திருந்தாள்.

எப்போதுமே யதுவீர் விடியோ கால் தான் போடுவான் ஆனால் இன்றோ அவனுக்கு என்னவோ லக்க்ஷனாவின் முகம் பார்த்து பேச தயக்கமாய் போனது. ஆனால் அவளோ விடியோ கால் பேச அழைக்க, தயங்கியபடியே தான் அழைத்தான்..

அப்படி அழைத்தும் கூட ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவள் முகம் நோக்கிட, அவளோ எப்போதும் போலவே இருக்க, யதுவீரின் முகம் யோசனையாய் சுருங்கியது..

அவன் என்ன நினைக்கிறான் என்பது லக்க்ஷனாவிற்கு தெரியாதா என்ன??

அவன் பேசுமுன்னமே “நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு நல்லா புரியுது யது.. பட் நீ எதுவும் வொர்ரி பண்ணாத..” என்றாள் அவனை சமாதானம் செய்யும் முயற்சியாக.

“எப்படி லக்க்ஷி?? எப்படி வொர்ரி பண்ணாம இருக்க முடியும்???” என்றவனின் குரலே காட்டி கொடுத்தது அவனுக்கு மனதினுள்ளே எத்தனை வருத்தம் என்று.

“ஹ்ம்ம் இப்படி சொன்னா என்ன சொல்ல?? இதெல்லாம் சகஜம்னு எடுத்துக்கோயேன்.. இப்போ பார் உன்னால நானும் பேமஸ் ஆகிட்டேன்…” என்று இரண்டு புருவங்களையும் தூக்கி, முகத்தை அப்படி இப்படித் திருப்பி சிரித்தபடி லக்க்ஷனா சொல்ல,

அவள் முகம் காட்டிய பாவனையில் யதுவீருக்கு சிரிப்பு வந்தாலும், என்னவோ அவனுக்கு இன்னும் மனம் சமன் அடையவில்லை..

மௌனமாய் அவளை வெறுமெனே பார்த்திருக்க, “இப்படி சைலண்ட்டா இருந்தா எப்படி யது… இது போல எத்தனை நியுஸ் நீ க்ராஸ் பண்ணி வர அப்புறம் என்ன?? இதெல்லாம் தூக்கி தூர போடேன்..” என்றாள் கொஞ்சம் அழுத்தமாய்..

அவளின் அந்த அழுத்தம் யதுவீரிடம் கொஞ்சமே வேலையை காட்ட, “க்ராஸ் பண்ணிடலாம்.. ஆனா தூக்கி போட முடியுமா தெரியலை.. என்னவோ உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனால மேட்ச் வின் பண்ணலைன்னு பேசுறாங்க.. ஹவ் இடியாட்டிக் டாக் திஸ் இஸ்.. ச்சே…” என்று அப்போதும் அவனது எரிச்சலை காட்ட,

“யது.. சம் டைம்ஸ் இப்படியான விஷயங்கள் எல்லாம் நமக்கு பூஸ்ட்டா மாறிடும்.. இப்போ பாரு உனக்குள்ள இருக்க நெருப்பு இப்போ கொழுந்து விட்டு எரியும்.. அப்போ அடுத்த மேட்ச்சோட ரிசல்ட் நமக்கு சாதகமா வரும்.. எப்படி..??!!.” என்று அப்போதும் லக்க்ஷனா அவனுக்காவே பேச,

“கண்டிப்பா லக்க்ஷி அடுத்து வர மேட்ச் கண்டிப்பா கண்டிப்பா நம்ம டீம் வின் பண்ணும்.. பண்ண வைப்பேன்..” என்று யதுவீர் பிடிவாதமாய் சொல்ல,

“தட்ஸ் குட் மை மேன்..” என்றவள் ஒரு பறக்கும் முத்தத்தை அவனுக்குக்  கொடுக்க,

அதனை கண்டு மெல்ல சிரித்தவன், “ஆபிஸ்ல எதுவும் யாரும் கேட்கலையா??” என்றான் இன்னும் அந்த பேச்சை விடாது..

அத்தனை நேரம் அவனை சமாதானம் செய்வதில் முனைந்திருந்தவள், ஆபிஸ் என்ற வார்த்தையை கேட்டதும், அவளுக்கு அப்படியே முகம் மாறிட, அது யதுவீரின் கண்களில் படாமல் இருக்குமா என்ன??

“லக்க்ஷி?? வாட் ஹேப்பன்?? சோ சம் பிராப்ளம் தேர் ரைட்???” என்று கொஞ்சம் வேகமாய் யதுவீர் கேட்கவும், லக்க்ஷனா மீண்டும் தன் நிதானத்தை திருப்பி கொண்டுவந்து,

“ஹா ஹா யது.. ஏன் இவ்வளோ டென்சன் உனக்கு.. நான் தான் டென்சன் பார்ட்டின்னா நீயுமா.. நீ எவ்வளோ கூல்னு நினைச்சிட்டு இருக்கேன்.. இப்படி பண்ற…” என்று பேச்சை மாற்ற முயல,

“ம்ம்ச் லக்க்ஷி.. ஐ க்னோ.. எப்போ கூலா இருக்கணும் எப்போ எப்படி ரியாக்ட் பண்ணனும்னு சோ டெல் மீ வாட் ஹேப்பன்…” என,

அதற்குமேல் அவளால் உண்மையை மறைக்க முடியவில்லை.. அனைத்தையும் சொல்லிவிட்டு, இதற்கென்ன குதிப்பானோ என்று அவன் முகத்தைப் பார்க்க, அவனோ அப்படியே இறுக்கிப் போய் அமர்ந்துவிட்டான்..

ஒன்றும் பேசாமல் வேகமாய் மூச்சுகளை எடுத்துவிட்டு கொண்டு அமர்ந்திருந்தவனை காண அவளுக்கு எப்படியோ போனது. இதை சொல்லவே கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் என்றிருந்தாலும் ஒருநாள் விஷயம் தெரிந்துதானே ஆகவேண்டும்.. ஆனால் அப்போது யதுவீர் கொஞ்சம் இதில் இருந்து வெளி வந்திருப்பானே..

இப்போதே சொல்ல, மற்றதோடு சேர்த்து அவனுக்கு இன்னும் டென்சன் தான் கூடியது..

“யது…” என்று மெல்ல அழைக்க, பார்வையை மட்டும் அவள்பக்கம் திருப்பினான்..

“ப்ளீஸ் யது லீவ் இட்.. எப்படியும் நான் நம்ம மேரேஜுக்கு அப்புறம் ஜாப் ரிசைன் பண்ணனும்.. அதை இப்போவே பண்ணதா நினைச்சுக்கோ ப்ளீஸ்.. எனக்காக…” என,

“லுக் லக்க்ஷி.. இப்படியான விசயங்களுக்கு நீ என்கிட்ட ப்ளீஸ் சொல்லாத. ஹவ் ஸ்டுப்பிட் பீப்பில்ஸ் ஆர் தே… பிஸ்னஸ் பேச வேற டைம்மே இல்லையா.. இப்படியான ஒரு சூழ்நிலையை அவங்களுக்கு சாதகமா மாத்திக்க பார்த்து ச்சே..” என்று அருகில் இருந்த மேஜையில் குத்த,

“யது ப்ளீஸ் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ப்…” என்றாள் லக்க்ஷனா வேகமாய்..

“ம்ம்ச் ஐம் ரியலி சாரி லக்க்ஷி.. எல்லாம் என்னால… என்னை லவ் பண்ண ஒரே ரீசனுக்காக நீ இப்போ இவ்வளோ ஃபேஸ் பண்ற…” என்று யதுவீர் நிஜமாகவே வருந்த, லக்க்ஷனாவோ இப்போ அவனை முறைத்தாள்.   

அவள் முறைப்பிற்கான காரணம் புரிந்தாலும், யதுவீர் அமைதியாய் அவளைப் பார்க்க,

“ம்ம் சொல்லு யது இப்போ என்ன பண்ணலாம் அதுக்கு??” என்றாள் ஒருமாதிரி குரலில்.

“என்ன பண்ண சொல்ற லக்க்ஷி…”

“நீதான் சொல்லணும்.. எல்லாம் என்னாலன்னு நீதானே சொன்ன.. அப்போ நீயே சொல்லேன்.. என்ன பண்ணலாம்னு…” என்றவள் அவன் என்னவோ சொல்ல வரவும்,

“இரு யது.. நமக்கு மேரேஜ் ஆன பிறகு இதைவிட பெரிய விஷயமெல்லாம் நாம பேஸ் பண்ணனும்.. அப்போ என்ன சொல்வ நீ?? நான் க்ளியரா இருக்கேன்.. சோ நீ வொர்ரி பண்ண வேண்டியதே இல்லை.. நான் பீல் பண்ணிருந்தா மட்டும் தான் நீ வொர்ரி பண்ணணும்..” என்று லக்க்ஷனா சொல்ல,      

அவள் முகத்தை ஒருநொடி ஆழ்ந்து நோக்கியவன், என்ன நினைத்தானோ, அவனது அலைபேசி திரைக்கு அழுந்த ஒரு முத்தமிட்டான், அவளுக்கு இடுவதாய் நினைத்து.. அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் அப்படி செய்ய,

முதலில் என்ன இது என்று அவளுக்கு கொஞ்சம் புரியாமல், பின் புரிந்ததும் கொஞ்சம் ஆச்சர்யமாய் பார்த்து, “யது..!!!!” என,

“ஐ லவ் யூ சோ மச் பேபி…” என்றவனின் குரல் அத்தனை காதலை சொல்ல, அதை கேட்டவளின் பார்வையோ அவனைவிட காதலை அள்ளி வீசியது.

இருவரும் அடுத்து அப்படியே பேசி பேசி பொழுது போக, எப்போது பேசி முடித்து உறங்கினர் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.. ஆனால் அடுத்து வந்த நாளில் லக்க்ஷனாவிற்கு அவளது ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தது.

வந்து அவளிடம் இருந்த பொறுப்புகளை எல்லாம் ஒப்படைத்து செல்லவேண்டும் என்று.. அவளும் சந்தோசமாகவே கிளம்பி சென்று, அவளுக்கென்று கொடுத்திருந்த சில தனிப்பட்ட பொறுப்புகளை எல்லாம் அவள் இடத்தில் அதற்குள் நியமனம் செய்யப்பட்ட நபரிடம் கொடுத்துவிட்டு,

அவளது நண்பர்கள் கேட்ட, திட்டிய ஆயிரம் பேச்சுக்களுக்கும் பதில் சொல்லி, கடைசியில் அவர்களுக்கு ஒரு ட்ரீட்டும் வைத்துவிட்டு வீட்டிற்கு வருகையில் போதும் போதுமென ஆனது..

அங்கே யதுவீரோ மறுநாளுக்கான மேட்சிற்காக தன்னை முழுமூச்சாய் தயார் படுத்திக்கொண்டு இருந்தான்.. எப்படியாவது அடுத்து மேட்ச்களில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவனுள் கொழுந்து விட்டு எரிய, அது மறுநாளில் நன்றாகவே வேலை செய்தது..

லக்க்ஷனா டிவி முன் அத்தனை பதற்றமாய் அமர்ந்திருக்க, யதுவீர் ஒவ்வொரு ரெய்ட் செல்லும் போது அனைத்து கடவுள்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இருந்தாள்.

நிர்மலோ அவளைப் பார்ப்பதும், பின் டிவி பார்ப்பதுமாக இருக்க, அவனுக்கு லக்க்ஷனா டெல்லி சென்று வந்து ‘உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது…’ என்று சொன்னதில் இருந்து மண்டை காய்ந்தது.

இருக்கும் நிலையில் என்ன அது என்று கேட்டிடவும் முடியாது அல்லவா.. ஆக அவ்வபோது லக்க்ஷனா முகத்தைப் பார்ப்பான். ஆனால் அவளுக்கே தெரியாதே.. இப்போது அப்படித்தான் பார்க்க, அவள் முகத்தில் காட்டும் பாவனைகளோ மேட்சே பார்த்துவிடுவோம் என்ற நிலைக்கு அவனை தள்ளியது..

யதுவீர் சொன்னது போல அன்றைய மேட்ச் அவர்களின் அணி ஜெயிக்க, சுற்றி இருந்த ரசிகர்கள் எல்லாம் அப்படியொரு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.. ஆனால் யதுவீரோ அமைதியாகவே அனைத்தும் முடித்து அறைக்குத் திரும்பினான். ஒருசில மீடியாக்கள் வந்து அவன் முன் மைக்கை நீட்டும் போது கூட, பேசாமல் கடந்து வந்துவிட்டான்..

லக்க்ஷனா தன் மகிழ்ச்சியை பகிரும்போதும் அமைதியாகவே இருந்தான்.. அவன் என்ன நினைக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.. இருந்தாலும் அவனது அமைதி அவளுக்கு கஷ்டமாய் இருக்க,

“லீவ் இட் யது.. இன்னிக்கு மேட்ச் பார்க்கிறப்போ யப்பா.. கூஸ் பம்ப்ஸ் தான்.. செம மேட்ச்… நீவேனா பாரு இந்த மேட்சுக்கு அப்புறம் உனக்கு இன்னும் ஃபேன்ஸ் ஜாஸ்தி ஆகிடுவாங்க..” என்றவளுக்கு மௌனமாய் ஒரு புன்னகையை பரிசாய் கொடுத்தான்..

அடுத்து அடுத்து வந்த இரண்டு நாட்களும் இப்படியே கழிய, லக்க்ஷனா ஒருவழியாய் வீட்டில் இருப்பதற்கு தன்னை பொருத்திக்கொண்டாள். என்னவோ இது ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது..

பூனமிடம் கேட்டு கேட்டு, நெட்டிலும் சிலது பார்த்து வடக்கத்திய சமையல் கொஞ்சம் பழகினாள். தான் பழகியதை மீராவிற்கும் நிர்மலுகும் செய்தும் கொடுக்க, நிர்மலோ வேண்டுமென்றே சீண்டியபடி உண்பான்..

இரண்டு நாட்கள் இப்படி போக, அடுத்த மேட்ச் தினமும் வந்தது.. அப்போதும் ‘கடவுளே கடவுளே…’ என்று சொல்லியபடி தான் லக்க்ஷனா அமர்ந்திருந்தாள்..

இந்த மேட்ச் ஜெயித்துவிட்டால் இந்த தொடர் யதுவீரின் அணி வெற்றிப் பெற்றதாகிவிடும்.. எப்படியாவது இதில் அவர்களின் அணி வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருக்க, கடைசி ரெய்டில் யதுவீரின் அணி மூன்று புள்ளிகள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்க,

அங்கே கபடி மேட்ச் நடக்கும் இடத்திலோ அத்தனை பெரிய அமைதி.. அனைவரின் மனமும் திக் திக் என்று அடித்துக்கொண்டு இருக்க, அந்த கடைசி ரெய்ட் யதுவீர் தான் சென்றான்..

லக்க்ஷனாவோ இங்கே இருக கண்களை மூடி அமர்ந்திருக்க, அடுத்த கொஞ்ச நேரத்தில் கேட்ட கரகோஷத்தில் வேகமாய் கண்களைத் திறந்து பார்க்க, அங்கே யதுவீரை அவனது அணி வீரர்கள் தங்களின் தோள் மீது தூக்கி வைத்து சுத்துவது ஒளிப்பரப்பானது..

“டேய் என்னடா ஆச்சு…???!!!” என்று லக்க்ஷனா கேட்க,

“நீ பாக்கலையா?? செம ரெய்ட்… யப்பா…” என்று நிர்மல் சொல்லும் போதே, அங்கே மீண்டும் அந்த கடைசி நொடியை ஒளிபரப்ப, கண்கள் இமைக்காமல் பார்த்தாள் லக்க்ஷனா..

கிட்டத்தட்ட யதுவீர் குட்டிக்கரணம் போடாத குறைதான்.. தன்னை பிடித்து இழுத்தவர்களின் காலுக்கு இடையில் நுழைத்து, அவர்களையும் தள்ளி, எத்தனை பேரை தொட முடியுமோ அத்தனை பேரை தொட்டு, மத்திய கோட்டை தொடுவதற்குள் அவனுக்குத் தான் எத்தனை சவால்கள்..

அதனைப் பார்க்கையில், லக்க்ஷனாவின் கண்களில் நீர் கோர்த்துவிட, “தேங்க் காட்…” என்று சொல்லிக்கொண்டாள்.

அடுத்து விருதுகள் கொடுக்கும் நிகழ்வு நடக்க, அதனை தொகுத்து வளங்கியவரோ, முந்தைய மேட்ச்களை விட, கடந்த இரண்டு மேட்ச்களில் யதுவீரிடம் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரு வெறி தெரிந்தது என்றும் அதற்கான காரணம் என்னவென்றும் கேட்க,

யதுவீரோ சிரித்தபடி “இட்ஸ் ஆல் பிகாஸ் ஆப் லக்க்ஷி… அண்ட் இட்ஸ் ஆல் ஃபார் லக்க்ஷி…” என, அவளுக்கோ அப்படியே யதுவீரை இப்போதே ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது..

கண்ணில் கண்ணீரோடும், இதழ்களில் புன்னகையோடும் அமர்ந்திருந்தவளை பார்த்த மீரா அவளது தோளில் செல்லமாய் தட்டிவிட்டு செல்ல, முகத்தை துடைத்துக் கொண்டவள் மீண்டும் டிவியில் பார்வையை பதித்தாள்.

“ஓ.. கிரேட்…” என்று தொகுப்பாளர் அவரின் ஆச்சர்யத்தை காட்ட,

“எஸ்.. ஷி இஸ் மை லவ்… இந்த சீரிஸ் வின் என்னோட டோட்டல் டீமுக்கும் தென் லக்க்ஷனாவுக்கும் சமர்ப்பணம்..” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை மீண்டும் அங்கே ஒரு ஆனந்த கரகோஷம்..

லக்க்ஷனாவின் மனதில் நிறைந்தவன், பின் எத்தனை முறைதான் அவளது மனதை தன் காதலால் நிரப்புவது.. இன்னும் இன்னும் அவனுக்கு அவள் மீதான காதலும், அவளுக்கு அவன் மீதான காதலும் கூடிக்கொண்டே போக,

யதுவீரின் இந்த சிறு பேட்டியே, அவனையும் லக்க்ஷனாவையும் விமர்சித்தவர்களின் வாயை அடைக்க போதுமானதாய் இருந்தது..

“வெல் செட் மை க்ளவர் பாய்…” என்று அவனது கோச் பாராட்டிவிட்டு செல்ல, அறைக்கு வந்ததும் லக்க்ஷனாவிற்கு தான் அழைத்தான்..

“யது…..” என்று மகிழ்ச்சி கூக்குரல் இட்டவள், அவனுக்கு பல பல முத்தங்களை வாரி இறைக்க,

“ஹே பேபி போதும் போதும்….” என்றவனின் முகத்தில் அப்போது தான் பழைய குறும்பும், துடிப்பும் தெரிந்தது..

“சோ மை யது இஸ் பேக்…” என்று உற்சாகமாய் லக்க்ஷனா சொல்ல,

“யா…” என்று அவனும் அதுபோலவே சொல்ல,

அவள் கேட்கவேண்டும் கேட்கவேண்டும் என்று நினைத்துகொண்டு இருந்த கேள்வியை கேட்டாள்.

“யது.. அந்த மெடிசின் கம்பனி ஆட்???” என்று அவள் இழுக்க,

“என் டீம் மேட்ஸ் ரெண்டு பேர் நடிக்கிறாங்க..” என்றவன் “என் லக்க்ஷிக்கு ஒரு டென்சன் கொடுத்தவங்களுக்கு நான் எப்படி ஃபேவர் பண்ண முடியும்…” என்று தோளை குலுக்கியவனைப் பார்த்து, இன்னும் காதல் கொண்டாள் லக்க்ஷனா..                                                    

                             

Advertisement