Advertisement

மனம் – 2

ஐந்தாண்டுகளுக்கு முன்பு….

“அரே லக்க்ஷி.. கம் பாஸ்ட்…” என்று நூறாவது முறையாய் ஷீலு அழைத்துவிட்டாள். ஆனால் லக்க்ஷனாவோ கிளம்ப மனமில்லாமல் நின்றிருந்தாள்.

“ஹே இப்போ கிளம்புறியா இல்லையாடி..” என்று மீண்டும் ஷீலு கத்த,

“ம்ம்ச் இப்போ ஏன் டி படுத்துற.. போலாம்… இப்போ என்ன அவசரம்..” என்றவள், அருகில் இருந்த மற்றொரு தோழியிடம் பேச்சைத் தொடங்க,

“போ.. நான் போறேன்.. மேட்ச் ஆரம்பிச்சிடும்… உட்கார இடம் இருக்காது…” என்று ஷீலு நடக்கத் தொடங்க,

“ஹேய் ஹேய் ஹேய் நில்லுடி.. பாத்தியா உன் பய்யா மேட்ச்னதும் என்னை விட்டு போற..” என்று போலியாய் வருத்தம் காட்டினாள் லக்க்ஷனா.

ஆனால் அவளைப் பற்றி ஷீலுவிற்கு தெரியாதா, லக்க்ஷனாவின் கையை இறுக பற்றியவள் அடுத்து விளையாட்டு போட்டி நடக்கும் ஆடிட்டோரியத்திற்கு சென்று உள்ளே அமர்ந்த பின் தான் அவளின் கரங்களை விட்டாள்,.

இன்டர் காலேஜ் கபடி போட்டிகள் நடந்துகொண்டிருக்க, இன்றுதான் அதன் இறுதி ஆட்டம். அதுவும் இவர்கள் கல்லூரிக்கும், இவர்களின் பிராதன எதிரணி கல்லூரிக்கும்.. சும்மாவே அப்படியொரு ஆரவாரம் இருக்கும். இன்றும் இன்னும் கூடுதலாய் இருந்தது. இரண்டு கல்லூரி மாணவ மாணவிகளும் நீயா நானா என்று அமர்ந்திருக்க, லக்க்ஷனாவோ தேமே என்று அமர்ந்திருந்தாள்.

அவளும் ஷீலுவும் முதலாம் ஆண்டு மாணவிகள். யதுவீர் இறுதியாண்டு மாணவன். அவன்தான் கபடி அணியின் தலைவனும் கூட. ஷீலு அதற்குதான் லக்க்ஷனாவை இந்த பாடுபட்டு இழுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

லக்க்ஷனாவிற்கு கபடி பிடிக்கும், ஆனால் யதுவீரைத் தான் பிடிக்குமா பிடிக்காதா என்ற பெரும் சந்தேகம் அவளுள்.. காரணம் இன்றளவும் தெரியவில்லை. இதற்கு ஷீலுவின் அனைத்து கசின்ஸ்களோடும் அவளுக்கு நல்லதொரு பழக்கமே. ஆனால் யதுவீரைத் தவிர,

அனைவரும் அவனை பய்யா பய்யா என்று உருகி கரைந்து அழைத்தாலும், இவளுக்கு அப்படி அழைக்கவும் தோன்றியதில்லை, அவனோடு சாதரணமாய் இருக்கவும் முடிந்ததில்லை.

அதுவும், ஷீலு வீட்டு பிள்ளைகள் கூட்டத்தில் யதுவீரை விட பெரியவர்கள் ஒருசிலர் இருந்தாலும், இவன் ஆள் பெரியவனாய் இருப்பதாலேயே என்னவோ அவனைத் தான் அனைவரும் பெரியவன் போல நடத்துவர். அவனும் அப்படிதான், எப்போதுமே எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல இருப்பான். அவனது இயல்பே அப்படியோ என்னவோ ஆனால் லக்க்ஷனாவிற்கு அப்படித் தோன்றும்.

ஒருவேளை மற்றவர்களோடு பழகுவது போல் அவனிடமும் இயல்பாய் இருந்திருந்தால் அப்படியொரு எண்ணம் தோன்றியிருக்காதோ என்னவோ. அன்றொரு நாள் ஷீலுவின் தம்பிக்கு பிறந்தநாள் என்று அனைவரையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்திருக்க, கேக் எல்லாம் கட் செய்த பிறகு பெரியவர்கள் எல்லாம் கீழேயிருக்க, மற்றவர்கள் எல்லாம் மாடியில் இருந்தனர். யதுவீரும் அங்கேதான் இருந்தான்.

நிர்மல் எதுவோ அவனிடம் பேசியபடி இருக்க, அதற்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தவன் இயல்பாகவே “லக்க்ஷி வாட்டர் பாட்டில் ப்ளீஸ்…” என்று அவளருகே இருந்த வாட்டர் பாட்டிலுக்கு கை நீட்ட, அவளோ அவனை வித்தியாசமாய் பார்த்தாள்.

“லக்க்ஷி..” என்று யதுவீர் மீண்டும் அழைக்க,

“ஹா..” என்றவள், வாட்டர் பாட்டிலை அவனிடம் நேராகக் கொடுக்காது

“நிர்மல்..” என்று தம்பியிடம் கொடுத்துக் கொடுக்க சொல்ல, யதுவீரின் பார்வை கொஞ்சம் அவளை கூர்மையாய் தொட்டு நகர்ந்தாலும், அடுத்து அவன் ஒன்றும் பேசவில்லை. ஆனால் இதை ஷீலுவும் கவனித்துவிட்டு தனியே லக்க்ஷனாவிடம் கேட்டாள்.

“லக்க்ஷி.. ஏன் இப்படி பண்ற??”

“என்ன பண்ணேன்..”

“எல்லார்கிட்டயும் நல்லா பேசுற.. பட் யது பய்யாக்கிட்ட மட்டும் ஏன் இப்படி பீகேவ் பண்ணற??”

“ஹா… நான் என்ன தப்பா பீகேவ் பண்ணிட்டேன்..”

“தப்பாயில்ல. பட் சம்திங் டிஃபிரென்ட்..”

“நத்திங் டிஃபிரென்ட்..” என்று லக்க்ஷனா சமாளிக்கப் பார்த்தாலும், ஷீலு அன்று அவளை விடுவதாகவே இல்லை. பேசி பேசி ஒருவழி செய்ய,

“ஆமா.. அப்படித்தான். ஆளும் அவனும்.. நெட்ட மண்ட… என்னவோ அவனைப்  பார்க்கிறப்போ எல்லாம் இர்ரிடேட்டிங் ஆகுது ஷீலு.. எப்போ பாரு தான் பெரிய இதுங்கிற போல இருக்க வேண்டியது..” என்று பொரிந்தவளை திகைத்துத்தான் பார்த்தாள் ஷீலு..

“என்ன டி பாக்குற.. ஆமா எனக்கு இப்படித்தான் ஒரு எண்ணம்.. அண்ட் தென் அவன்கிட்ட பேசித்தான் ஆகணும்னு எதுவும் கம்பல்சன் இருக்கா சொல்லு.. இல்லைல.. தென் வாட்.. பேசி சண்டை போடாம இருக்கிறதுக்கு பேசாம இருக்கிறதே நல்லது..” என்றுவிட, யப்பா இதோடு இதை அப்படியே விட்டுவிடுவோம் என்று அந்த பேச்சை அப்படியே விட்டுவிட்டாள் ஷீலு.

ஆனால் அதன் பிறகு தானோ என்னவோ லக்க்ஷனாவின் பார்வைகள் எரிச்சலாகவேனும் யதுவீர் மீது படிய ஆரம்பித்தது. இவர்கள் இருவர் வீட்டுக்கும் பொதுவாய் நீண்ட மொட்ட மாடி, தினமும் காலையில் அங்கே தான் யதுவீர் எக்சர்சைஸும் யோகாவும் செய்வான்.

அன்றும் அப்படித்தான் செய்துகொண்டு இருந்திருப்பான் போல, கீழே அவன் அம்மா அழைப்பது கேட்டு, உடற்பயிற்சி உபகரணங்களை எல்லாம் அப்படியே போட்ட இடத்தில் விட்டுவிட்டு சென்றிருந்தான்.

இதை அறியாத லக்க்ஷனாவோ மாடிக்கு துணி காயப்போட வர, அங்கே யதுவீர் இருந்ததற்கான அடையாளம் இருந்தது ஆனால் அவனில்லை என்றதும்   “எங்க போனான் இந்த பயில்வான்..” என்று கையில் துவைத்த துணிகளை வைத்திருந்த வாளியுடனும்,  கண்களில் அவனை அலசியபடியும் தேடிக்கொண்டு வர,

அவன் விட்டு சென்றிருந்த கர்லா கட்டையை கவனிக்காதவள், அப்படியே நடந்துவர, கால் இடறி கீழே விழப்போக, யதுவீர் எங்கிருந்து தான் வந்தானோ “ஹேய் லக்க்ஷி…” என்றபடி வேகமாய் அவளைப் பிடித்தான்..

கையில் இருந்த வாளி பொத்தென்று கீழே விழுந்து, துவைத்த துணிகளும் கீழே விழ, விழுந்திடுவோமோ என்ற பயத்திலேயே லக்க்ஷனா யதுவீரின் கரங்களை இறுகப் பற்றிட, அப்போதும் அவன் பார்வை அவளை கூர்மையாய் தொட்டு மீண்டதே ஒழிய வேறொன்றும் பேசவில்லை..

“பார்த்து…” என்றபடி அவனே அவளை நேராய் நிற்க வைக்க,

‘அட ச்சே லக்க்ஷி இப்படியா பிரீஸ் ஆகி நிப்ப.. அதுவும் இவன்கிட்ட.. ஐயோ சும்மாவே மனசுக்குள்ள ஹீரோன்னு நினைப்பு.. இப்போ கேட்கவே வேணாம்…’ என்று அவள் மீதே அவளுக்கு எரிச்சல் வந்தாலும் அதனை அவனிடம் தான் காட்டினாள்..

“நான் பார்த்து தான் வந்தேன்.. பட் நீதான்.. இப்படி எல்லாத்தையும் போட்டு வச்சிருக்க…” என்று சொல்ல,

“ஓ… சாரி…” என்றுமட்டும் சொன்னவன், அவனது பொருட்கள் அனைத்தையும் எடுத்து எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, வாளியில் இருந்து கீழே விழுந்த துணிகளையும் எடுத்து மீண்டும் வாளிக்குள்ளே போட்டுவிட்டு, சென்றுவிட்டான்.

பதிலுக்கு ஏதாவது சொல்வான், நன்றாய் சண்டை இழுக்கலாம் என்று பார்த்தால் அவளால் அது முடியாமல் போனது மட்டுமில்லாமல், அவன் சாரி சொன்னதும், அடுத்து அனைத்தையும் எடுத்து வைத்துச் சென்றதும் அவளுக்கே ஒரு மாதிரி சங்கடமாய் இருந்தது..

‘ச்சே ரொம்ப பேசிட்டோமோ…’ என்று தோன்றினாலும், இருக்கட்டும் இருக்கட்டும் என்று அவளே சொல்லிக்கொண்டு, அங்கிருந்த பைப்பிலேயே துணிகளை மீண்டும் அலசி காயப்போட்டு வந்தாள்.

ஆனால் அதன் பின் யதுவீர் அங்கே மாடியில் உடற்பயிற்சியோ யோகவோ எதுவும் செய்யாமல் போக, ‘என்னடா இது…’ என்று லக்க்ஷனாவிற்கு மண்டை குடைய ஆரம்பித்தது.

ஷீலுவிடம் கேட்கலாம் என்று நினைத்தால் கண்டிப்பாய் அவள் எதுவும் சொல்வாள் என்று தோன்ற, ஏன் இப்படி செய்கிறான் என்ற கேள்விக்கு விடையும் தெரியாது போக, ஒரு குழப்பத்துடனே இருந்தவளிடம்,

“லக்க்ஷி இந்தா இந்த அவியல் கொண்டு பொய் பூனம் ஆன்ட்டிக்கிட்ட கொடுத்துட்டு வா..” என்றபடி வந்தார் மீரா..

‘அவன் வீட்டுக்கா…’ என்று மனம் அதிர்ந்தாலும், அவளொன்றும் அங்கே போகாதவள் எல்லாம் இல்லை. யதுவீரின் அப்பா அம்மாவிடம் நன்றாகவே பேசுவாள்.

“என்னடி நிக்கிற.. இந்தா கொண்டுபோ.. லாஸ்ட் டைம் அவங்க பண்ணது சரியா வரலைன்னு சொன்னாங்க…” என்று மீரா அவளை விரட்ட,

“ம்ம் ம்ம்..” என்றபடி மீரா கொடுத்த பையை தூக்கிக்கொண்டு யதுவீரின் வீட்டிற்கு சென்றாள்.

பொதுவாய் இப்படியான பண்ட பரிமாற்று விஷயங்கள் எல்லாம் வீட்டில் இருக்கும் கடைகுட்டிகளிடம் தான் கொடுத்துவிடுவர், இன்றேன பார்த்து நிர்மல் வீட்டிலில்லாமல் போக, லக்க்ஷனா அந்த வேலையை செய்தாள்.

இரண்டுமுறை காலிங் பெல் அடித்துவிட்டு நிற்க, வழக்கமாய் ஒரு சிரிப்போடு, நெற்றியில் பெரிய பொட்டு வைத்து வந்து திறக்கும் பூனம் ஆன்ட்டி வந்து கதவு திறக்காமல் அவரின் அருந்தவப் புதல்வன் யதுவீர் வந்து கதவு திறக்க,

லக்க்ஷனாவோ, ஒரு திகைத்த பார்வையை மட்டும் அவன் மீது செலுத்திவிட்டு “ஆன்ட்டி…” என்று குரல் கொடுக்க, அவனோ அவளை உள்ளேயே விடாமல் வாசலிலேயே நின்று,

“அம்மா இங்க இல்லை..” என்றான்..

‘மாடு.. மாடு.. எருமை மாடு.. இவ்வளோ பெருசா வளர்ந்திருக்கான்.. வழி விடுறானா..’ என்றெண்ணியபடி அவனை முறைத்தவள்,

“அவியல்…” என்று அவன் முன்னே கையில் இருந்த பையை நீட்ட,

“ஹா.. வாட்..??” என்றான் அவனோ புரியாதவன் போல..

‘டேய்..’ என்று பல்லைக் கடித்தவள், “அவியல்.. எங்கம்மா கொடுத்திட்டு வர சொன்னாங்க…” எனும்போதே,

“யது.. கோன் ஹே…” என்றபடி உள்ளிருந்து வந்தார் பூனம்..

‘அடப்பாவி..’ என்று லக்க்ஷனா அவனைப் பார்க்க, அவனோ கண்ணில் மின்னிய சின்ன சிரிப்போடு நகர்ந்துவிட்டான்..

“லக்க்ஷி… ஆவோ ஆவோ…” என்று அவளை உள்ளே அழைத்தவரிடம் அவியலை நீட்ட, அவரோ வாசம் பிடித்தே

“நல்ல ஸ்மெல்.. நான் பண்ணினது இப்படி வரல…” என்று சொல்லியபடி உள்ளே சென்றவர், கையில் காஜு கட்லி வைத்த ஒரு தட்டோடு வந்தார்..

‘ஆகா காஜு….’ என்று கண்கள் லக்க்ஷனாவிற்கு விரிய, “இதை சாப்பிட்டு.. இதை அம்மாட்ட குடு…” என்று இன்னொரு டப்பாவையும் பூனம் நீட்ட,

“தேங்க்ஸ் ஆன்ட்டி…” என்றவள் ஆசையாய் முதல் வாய் காஜு கட்லியை வாயில் வைக்கச் செல்ல, யதுவீர் அங்கே வந்து அமர்ந்தான் டிவியை ஆன் செய்தபடி..

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதோ என்று லக்க்ஷனா பார்த்திருக்க, யதுவீரோ அவள் வாயருகே வைத்திருந்ததை உண்ணாமல் தன்னைப் பார்ப்பது கண்டு, என்ன என்பதுபோல் பார்க்க,

‘ம்ம்ஹும்…’ என்று அவளையும் அறியாது தலையை ஆட்டியவள், “நான்.. நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன் ஆன்ட்டி…” என்று கிளம்ப,

“வீட்லயும் போய் சாப்பிடு லக்க்ஷி.. இப்போ இங்க சாப்பிடு..” என்று பூனம் அவளை விடாது பேச, அவனுக்கோ அங்கே சிரிப்பை அடக்க முடியவில்லை. பொதுவாய் அவன் கலகலப்பான ஆள் தான். இவளுக்குத்தான் அது தெரியாது..

ஆரம்பத்தில் இருந்தே அவனைப் பார்க்கும்போது மட்டும் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் கொண்டு பார்க்க பழகி நாளடைவில் அவன் எது செய்தாலும் தவறு என்கிற ரீதியில் வந்து நின்றது. இப்போதும் அப்படியே இருக்க, பூனம் சொல்வதற்காக என்று கொஞ்சம் உண்டவள் அடுத்து கிளம்பிவிட்டாள்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, லக்க்ஷனாவின் பார்வைகள் யதுவீர் மீது படிய படிய, இத்தனை நாள் பிடிக்காது என்று ஒதுங்கிப் போனவள் இன்றோ பிடித்துவிடுமோ என்ற பயத்தில் ஒதுங்கத் தொடங்கினாள்.

ஆம் அவளுக்கு யதுவீரை பிடிக்கத் தொடங்கியிருந்தது.. ஒரு மாற்றம் அவளுள் நிகழ்ந்தது நிஜம் தான்.

இதற்கு அவன் எப்போதும் போல் இருக்கிறான். ஆனால் அவள்தான் அப்படியிருக்க முடியாமல் தவித்தாள். நிச்சயமாய் யதுவீரை உன்னை எனக்கு பிடிக்காது என்றெல்லாம் சொல்லி ஒதுக்க முடியாது போல் தோன்ற, அடுத்து  அவளுள் ஒரு புது பயமும் குடிகொண்டது..

இப்போதுதான் கல்லூரி சேர்ந்திருக்கிறாள், அதெல்லாம் மனதில் தோன்றாமல், யதுவீர் பற்றிய சிந்தனைகள் மனதில் வேர் விட,

“நோ நோ லக்க்ஷி.. என்ன பண்ற… இதெல்லாம் தப்பு…” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு முன்னை விட எத்தனை முடியுமோ அத்தனை அவன் விசயத்தில் இருந்து ஒதுங்கினாள்.

ஆனால் ஷீலு என்ற ஒருத்தி இருக்கும் வரைக்கும் அது நடக்குமா என்ன??

‘இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் அவன் எங்கயாது வேலைக்கு போயிடுவான். தென் எல்லாம் சரியாகிடும்..’ என்றெண்ணி அவளுக்கு அவளே நூறு காரணங்கள் சொல்ல, இதோ முதல் வருடம் அவர்களுக்கு முடியும் நேரத்தில் தான் கல்லூரிகளுக்கான கபடி டோர்னமென்ட் நடந்தது.

லக்க்ஷனாவிற்கு கண்டிப்பாய் தெரியும் ஷீலு அவளை மேட்ச் பார்க்க அழைப்பாள் என்று. அவளுக்கும் பார்க்க ஆசைதான்.. ஆனால் அங்கே யதுவீர் வருவானே.. அவனில்லாத கபடி மேட்சா என்றிருக்க, போக கூடாது என்று எத்தனையோ மனதை கட்டுபடுத்தி வைத்திருந்தவளை, ஷீலு பிடிவாதமாய் அழைத்து வந்துவிட,

அங்கே அரங்கத்தில் ‘யதுவீர் யதுவீர்…’ என்று ஒலித்த பெரும் குரல்களும், அவனுக்காக ஏந்திய பெயர் பலகைகளும், வாசகங்களும், அத்தனை கூட்டமும் எல்லாம் சேர்ந்து, அவளுக்கு புதுவித உணர்வொன்றை கொடுக்க, மேட்ச் ஆரம்பித்தும் ஆடாது அசையாது தான் அமர்ந்திருந்தாள்.

லக்க்ஷனாவின் கண்களுக்கு யதுவீரைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.. அவன் ஒவ்வொரு முறை ரெய்ட் போகும்போதும், எழும் கரகோஷ சப்தமெல்லாம் அவளை ஒன்றுமே செய்யாது என்பதுபோல் அவளது கண்கள் அவனையே பார்த்திருக்க,

அத்தனை நேரம் கத்திக்கொண்டிருந்த ஷீலுவிற்கு என்ன தோன்றியதோ திரும்பி இவளைப் பார்த்தவள் “லக்க்ஷி” என்று அவளைத் தொட்டு அழைக்க,

“ம்ம்…” என்று திரும்பிப் பார்த்தாள் லக்க்ஷனா.

ஷீலு எப்போதுமே லக்க்ஷனா முகத்தில் தோன்றும் உணர்வுகளை சரியாய் புரிந்துகொள்வாள் ஆனால் இன்று அவளுக்கும் என்னானதோ,

“சாரி லக்க்ஷி… உனக்கு யது பய்யா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நான் மேட்ச் கூட்டிட்டு வந்துட்டேன்.. சாரி.. ஒண்ணு சொல்லவா, நெக்ஸ்ட் வீக் செம் வருதுல்ல அது முடியவும் யது பய்யா பேமிலி மும்பை போயிடுவாங்க.. சோ உனக்கு ஹேப்பிதானே.. நான்தான் அவங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்…” என்று சொல்ல, லக்க்ஷனா அதிர்ந்து போய் பார்த்தாள்.

என்னவோ லக்க்ஷனாவை சமாதானம் செய்ய அப்படிச் சொல்லிவிட்டாள், ஆனால் உண்மையும் அதுதான்..

யதுவீரின் பாட்டி தன் பெரிய மகனோடு அங்கே மும்பையில் இருக்க, கடைசி காலத்தில் என் பிள்ளைகள் அனைவரோடும் இருக்க வேண்டும் என்ற அவரின் பிடிவாதத்தினால், யதுவீரின் அப்பா விஆர்எஸ் வாங்க, யதுவீரின் இறுதியாண்டு படிப்பு முடியவும் அவர்கள் மும்பைக்கே செல்வதாய் முடிவானது.

ஆனால் இதெல்லாம் கேட்ட லக்க்ஷனாவிற்கோ சுற்றி இருந்த உற்சாகம் எல்லாம் அவளிடம் நெருங்கக் கூட முடியாத தூரத்தில் போக,

‘யது.. யதுவீர் போறானா… மும்பைக்கே போறானா…’ என்ற நினைப்பிலேயே மனம் நின்றுவிட, கண்கள் இமைக்க மறந்து சற்று தூரத்தில் தெரியும் அவனைப் பார்க்க, அவர்களது கல்லூரி வெற்றிப் பெற்றதோ , அனைவரும் யதுவீரை தூக்கி வைத்து கொண்டாடியதோ, இல்லை சுற்றிலும் கேட்ட குரல்களோ எதுவுமே அவளை அசைக்கவில்லை..

கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருக்க, அப்படியே அமர்ந்திருந்தாள். போட்டி முடிந்து.. பரிசுகள் எல்லாம் வழங்கி பின் அனைவரும் களைந்து செல்கையில்,

“லக்க்ஷி போலாமா…” என்று ஷீலு அவளை அழைத்த நொடி, கையில் கோப்பையுடன் அந்த அந்த அரங்கை சுற்றி வந்துக் கொண்டிருந்த யதுவீர் ஷீலுவைப் பார்த்து மகிழ்வாய் கை ஆட்ட, அருகில் இருந்த இவளையும் பார்த்து சிரிக்க, அந்த நொடி லக்க்ஷனாவிற்கு ஒரு கேவல் பிறந்து, கண்களை வேகமாய் துடைத்துக்கொண்டு  ஓடிவிட்டாள்.

“ஹே லக்க்ஷி வாட் ஹேப்பன்…” என்று ஷீலு பின்னாடியே செல்ல,  லக்க்ஷனாவோ வீடு சென்ற பிறகும் பேசினாள்  இல்லை.

என்னவோ அப்படியொரு அழுகை.. ஏன் அழுகிறாள் என்று அவளுக்குப் புரியவேயில்லை. ஆனாலும் அழுதாள். அவனிடம் பேசவேண்டுமா.. இல்லை அவனைப் பார்க்க வேண்டுமா அவள் மனதில் இருக்கும் குழப்பங்கள் எண்ணங்கள் எல்லாம் அவனிடம் பகிர வேண்டுமா இதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால் இதுநாள் வரைக்கும் இல்லாத அழுகையாய் அன்று லக்க்ஷனா அப்படி அழுதாள். மீராவிடமோ தலைவலி காய்ச்சல் என்று அது இதென்று சொல்லி அறைக்குள் புகுந்துகொள்ள, ஷீலுவோ பயந்தே போனாள்.

‘என்னாச்சு…’ என்று மீரா கேட்டதற்கு கூட ஷீலு தெரியவில்லை என்று தலையை தான் ஆட்டினாள்.

ஆனால் மறுநாள் நிஜமாகவே லக்க்ஷனாவிற்கு காய்ச்சல் வந்திட, ஷீலு அதன்பின் யதுவீர் பற்றிய பேச்சே எடுக்கவில்லை. எப்போதும் போல் இருந்தாலும், லக்க்ஷனாவின் மனம் தான் அவள் யதுவீர் பற்றி பேசமாட்டாளா என்று எதிர்பார்த்தது.

அடுத்தடுத்து பரிட்சைகள் வந்திட, யாருக்கும் வேறெதுவும் பற்றி நினைக்க நேரமில்லை.. யதுவீரோ அவள் கண்ணிலே கூட படவில்லை. கண்ணில் படும் போதெல்லாம் அவனை காணாது செல்பவள், இப்போதோ எங்கே எங்கே என்று ஏங்கத் தொடங்க, ஒருவழியாய் பரிட்சைகளும் முடிய, மறுநாள் யதுவீரின் குடும்பம் மும்பை செல்வதாய் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே யதுவீரின் அப்பா முக்கால்வாசி பொருட்களை கொண்டு மும்பை சென்றிட்டார்.

லக்க்ஷனாவிற்கு இருப்பேகொள்ளவில்லை… இங்கிருந்த இத்தனை வருசமும் அவனோடு கொஞ்சமாவது நன்றாய் பேசியிருக்கலாமோ என்று தோன்ற, ஐயோ என்றிருந்தது. கொஞ்சம் கூட அவனோடான இனிமையான நினைவுகள் என்று எதுவுமே இல்லை.

என்னவோ இனிமேல் அவனைப் பார்க்கவே போவதில்லை என்பது போலவும், இனிமேல் அவன் இங்கே வந்திடவே மாட்டான் என்பதுபோலவும் லக்க்ஷனாவின் மனம் துடிக்க, பூனம் வந்தார் சொல்லிக்கொண்டு செல்லவென்று.

மனதில் இருக்கும் வேதனைகளை எல்லாம் அடக்கிவைத்து அவரிடம் சிரித்தே லக்க்ஷனா பேசினாலும், அவனும் வருவானோ என்று மனம் எதிர்பார்க்க,

மீராவும், பூனமும் ஒருவரை ஒருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு வெகு நேரம் பேச, “யது எங்க…” என்று மீரா கேட்டதும், பூனமும் அப்போது தான் நியாபகம் வந்தவராய் மகனுக்கு அழைத்தார்.

அவன் கை காட்டி போய் வருகிறேன் என்று சொல்லும் போது தன்னால் அதை பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியுமா என்று தோன்றவும் லக்க்ஷனா வேகமாய் மாடிக்குச் சென்றுவிட்டாள்.

கீழே யதுவீர் வந்தானா, அவர்கள் கிளம்பினார்களா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது, சின்டெக்ஸ் அருகில் அமர்ந்து, அவள் முழங்காலில் முகம் புதைத்திருந்தாள்.. அழுகை தேம்பளாகி விசும்பலாய் மாறியிருக்க, கிளம்பியிருப்பார்கள் என்றெண்ணி முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர,

அங்கேயோ அவளுக்கு எதிர்த்தார் போல் யதுவீர் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.. அவனது பார்வையிலோ ஆயிரம் கேள்விகள்..

 

 

Advertisement