Advertisement

மனம் – 17

லக்க்ஷனா சென்னை வந்துவிட்டாள்.. கிளம்புவதற்கு மனமேயில்லாது டெல்லியில் இருந்து கிளம்ப, யதுவீர் வந்திருந்தான் ஏர் போர்ட்டிற்கு.. மறுநாள் மேட்ச் வேறு அவனுக்கு இருக்க, லக்க்ஷனாவும் வேண்டாம் என்று தான் சொன்னாள்.

என்னவோ அவளுக்கு இப்போது மனதில் ஓர் தெளிவு வந்திருந்தது.  என்னதான் யதுவீர் ஸ்போர்ட்ஸ் பெர்சனாக இருந்தாலும், பிரபலமானவன் என்றாலும் அனைத்தையும் தாண்டி அவன் என்னவன் என்ற தெளிவு வந்திருந்தது.. அவளது வாழ்வு முறையை விட, அவனது மொத்தமும் வித்தியாசமானது… மனம் இரண்டும் சங்கமிதிருந்தாலும், இருவருக்குள்ளும் நிறைய நிறைய வித்தியாசங்கள் இருப்பது இருவருமே உணர்ந்து இருந்தனர்..

லக்க்ஷனாவுமே அதை டெல்லி வந்து, அவனோடு கழித்த ஒருநாளில் நன்கு புரிந்துகொண்டாள்.. ஆக எதைக்கொண்டும் தான் மனதில் குழப்பம் கொண்டுவிட கூடாது என்பதில் தெளிவாய் இருக்க, அதனை கொண்டே “நீ வரவேணாம் யது.. உனக்கு எவ்வளோ வேலை இருக்கும்.. நாளைக்கு மேட்ச் வேற..” என்று சொல்ல,

“ஜஸ்ட் கொஞ்ச நேரம் மட்டும் தான் லக்க்ஷி..” என்று சொன்னவன் பிடிவாதமாய் அவளை வழியனுப்ப வந்தான்.   

சொன்னது போலவே அவன் இருந்தது கொஞ்ச நேரம் தான்.. இருபது நிமிடங்கள் கூட இருக்காது.. வந்ததில் இருந்து அவள் கைகளை பிடித்தபடியே யதுவீர் இருக்க, லக்க்ஷனாவும் அவனோடே இருந்தாள்…

அவள் கிளம்பும் நேரமும் வந்திட, “லக்க்ஷி டைம் ஆச்சு…” என்று அவளின் நட்புகள் அழைக்க,

“யா வர்றேன்…” என்று சொன்னவள், யதுவீரின் முகம் பார்க்க,

“ஓகே பேபி ரீச் ஆகிட்டு கால் பண்ணு.. நேத்து ரொம்ப ரொம்ப சந்தோசமான டைம்.. உன்கூட ஸ்பென்ட் பண்ணது.. இப்படியொரு சர்ப்ரைஸ் நான் நிஜமா எக்ஸ்பெக்ட் பண்ணல.. தேங்க்ஸ் லக்க்ஷி..” என்று அவளது கரங்களை பிடித்து குலுக்கி சொல்ல,

“ஹ்ம்ம்.. யது.. ஆல் தி பெஸ்ட்.. அடுத்து வர எல்லா மேட்சும் வின் பண்ணுங்க…. சீக்கிரம் சீக்கிரம் அடுத்து நம்ம மீட் பண்ணனும்.. நிறைய பேசணும் யது.. ஒன்ஸ் ப்ரீ கிடைச்சா சென்னை வா…” என்றவளின் முகத்தில் கிளம்பும் எண்ணமே தெரியவில்லை..

“கண்டிப்பா லக்க்ஷி.. இந்த டோர்னமென்ட் முடிஞ்சா அடுத்து கொஞ்சம் ப்ரீ கிடைக்கும்.. அங்கிள் இந்தியா வர்றபோ நான் சென்னை வர்றேன்.. தென் மும்பைல என் கசின் மேரேஜுக்கு வந்து இன்வைட் பண்ணுவாங்க.. சோ நீயும் வர ட்ரை பண்ணு…” என்றவன் அவளை நடத்திக்கொண்டே அவளோடு நடக்க,

“எனக்கு மட்டும் என்ன வரக்கூடாதுன்னா…”என்று அவன் முகத்தை மீண்டும் நிமிர்த்து பார்த்தவள்,

“டேக் கேர் யது… என்ன சொல்லன்னு தெரியலை.. பட்.. நிறைய சொல்லணும் போல இருக்கு.. நேத்து பேசாதது எல்லாம் இன்னிக்கு பேசணும் போல இருக்கு..” என, மௌனமாய் அவளைப் பார்த்திருந்தான் யதுவீர்..

அவனுக்குமே அப்படிதான் இருந்தது.. பேசாமல் லக்க்ஷனாவை தன்னோடு இருத்திக்கொள்ள வேண்டும் போல.. ஆனால் இருவருக்குமே பொறுப்புகள் நிறைய இருக்கிறதே.. அந்த நேரத்தில் யதுவீருக்கு மனதில் ஒரு எண்ணம் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று.

முதல் நாளும் அதை சொன்னான் தான். ஆனால் அவள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்பதற்காக அப்படிச் சொன்னான். ஆனால் இப்போது நிஜமாகவே அந்த எண்ணம் உறுதியானது.. நவநீதன் இந்தியா வந்ததுமே முதல்வேலையாய் திருமணம் பற்றி பேசிடவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

“என்ன யது சைலன்ட்டா இருக்க?? எப்பவும் என்னை சொல்வ ஸ்மைல் பண்ணி சென்ட் ஆப் பண்ணுன்னு.. இப்போ நீ இப்படி இருக்க…”  என்று, இதழ்கள் சிரித்தாலும், கண்களில் மெல்லிய ஏக்கம் பரவிட கேட்டவளை, வேகமாய் இருக்கமாய் அணைத்து விடுவித்தவன்,

“மிஸ் யு சொல்ல மாட்டேன்.. பட்…” என்றவன் வார்த்தைகள் கிடைக்காமல் திணற,

“லவ் யூ யது….” என்று லக்க்ஷனா சொல்லி நிறுத்த,

“லவ் யூ லாட் லாட் பேபி…” என்று யதுவீர் அழைக்கும் போதே,

“லக்க்ஷி…” என்று அவளின் குழு மீண்டும் அழைக்க,

“ஓகே லக்க்ஷி.. இதுக்குமேல லேட் பண்ண கூடாது.. டைம் ஆச்சு.. பை டேக் கேர்.. நிர்மல்.. ஆன்ட்டி எல்லாரையும் கேட்டதா சொல்லு..” என்றவன் பேசியபடி வந்து, அவளது குழுவிடமும் பேசி, கை குலுக்கி விடைபெற்று செல்ல, லக்க்ஷனாவோ திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்து சென்றாள்..

இப்போது தான் இதெல்லாம் நடந்தது போல் இருந்தது ஆனால் அதற்குள் ஒருநாள் முடிந்துவிட்டது. லக்க்ஷனா வீட்டிற்கு வரும்போது இரவாகிட, மீரா அப்போது எதுவும் கேட்கவில்லை..

பொதுவான பேச்சுக்கள் மட்டுமே இருக்க, லக்க்ஷனாவும் அந்த நேரத்தில் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை..

“ஹேய் நிர்மல் இது உனக்கு….” என்று ஒரு டீ ஷர்ட் எடுத்து நீட்ட,.

“வாவ் அக்கா.. நிஜமாவே நீதான் வாங்கினியா…” என்று நிர்மல் ஆச்சர்யத்தில் கேட்க,

“டேய் ரொம்ப பண்ணாத.. நான் வாங்கினேன்.. யது செலக்ட் பண்ணான்..” என்று சொல்லும் போதே மீரா கதவை சாத்திவிட்டு அங்கே வர,

“ம்மா இது உனக்கு..” என்று அழகிய  கை வேலைபாடு செய்த சேலையை எடுத்துக் கொடுக்க,

“நல்லாருக்கு லக்க்ஷி… இதுவும் யது செலெக்ட் பண்ணதா.??” என்று கேட்க,

“செலெக்ட் பண்ணதும் அவன்தான் வாங்கினதும் அவன்தான்..” என்று லக்க்ஷனா சொல்கையிலேயே,

“அப்போ எனக்கு ஒண்ணும் வங்கித் தரலையா??” என்று வேகமாய் ஒரு பஞ்சயாத்தை தொடங்கினான் நிர்மல்.

“டேய்.. ரொம்பப் பண்ணாத.. உனக்கு எதுவோ சர்ப்ரைஸ் இருக்காம் அதுமட்டும் தான் எனக்குத் தெரியும்.. அதுக்குமேல உன்பாடு யது பாடு…” என்றவள்,

“ம்மா சேலை பிடிச்சிருக்கா.. யது செமையா செலெக்ட் பண்றான் ம்மா.. நான் கூட எதிர்பார்க்கல..” என்று ஆவலாய் மீராவின் முகம் பார்க்க,

அவரோ யோசனையாகவே “ம்ம் பிடிச்சிருக்கு லக்க்ஷி…” என்று சொல்லிவிட்டு, “சரி லேட்டாச்சு.. போய் தூங்குங்க..” என்று பிள்ளைகளை விரட்ட,

“எனக்குமே டயர்டா இருக்கும்மா..” என்றவள் தன்னறைக்கு செல்ல, மீராவிற்கு தூக்கமே அன்று வரவில்லை..  

மறுநாள் வழக்கம் போலவே பொழுது புலர, லக்க்ஷனா அவளது ஆபிஸ் கிளம்பவும், நிர்மலும் மீராவும் பள்ளி கிளம்பவும் என்று வேலையாய் இருக்க, அப்போது தான் லக்க்ஷனா கவனித்தாள் மீரா யாரோடும் எதுவும் பேசாமல் அமைதியாய் வேலைகளை செய்துகொண்டு இருப்பது.

பொதுவாய் மீரா இப்படி இருக்கவே மாட்டார்.. வீட்டில் இருப்பதே மூவர் அதிலும் பேசாமல் இருந்தால் எப்படி என்று பிள்ளைகளை திட்டுவார். ஆனால் அவரே இன்று இப்படியிருக்க,

“ம்மா என்னாச்சு?? உடம்பு எதுவும் சரியில்லையா???” என்று லக்க்ஷனா அருகே வர, நிர்மல் கூட என்னவோ என்று பார்க்க,

“ஒண்ணுமில்ல லக்க்ஷி.. கொஞ்சம் யோசனை அதான்..” என்றவர்,

“சாயங்காலம் வந்து பேசலாம்..” என்று சொல்லி கிளம்ப,

“ம்மா இன்னிக்கு நைட் கபடி மேட்ச் இருக்கு..” என்று நிர்மல் சொல்லியபடி அவரோடு செல்ல, லக்க்ஷனாவும் அவளது பேக்கை போட்டுகொண்டு வெளிய வர, வீட்டை பூட்டிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்..

அங்கே டெல்லியில் யதுவீருக்கோ புதிய தலைவலி ஒன்று வந்திருந்தது.. எப்போதும் அவனுக்கு துணையாய் அணியில் இருக்கும் ஒரு ரைடருக்கு அன்றென பார்த்து உடல்நிலை சரியில்லாது போக, அந்த இடத்தில பெஞ்சில் இருக்கும் மற்றொரு வீரரை களத்தில் இறக்க வேண்டிய சூழல்..

ஆக இத்தனை பேர் தான் என்று முடிவு செய்து பயிற்சி செய்து என்று எல்லாம் முடிவாகி, இன்னும் கொஞ்ச நேரத்தில் மேட்ச் தொடங்க இருக்கையில், திடீரென்று இப்படியொரு நிலை வர, யதுவீரும் கோச்சும் சேர்ந்து யாரை அணியில் இணைப்பது என்று கடைசி நேர ஆலோசனையில் இருந்தனர்..

யதுவீர் சில கருத்துக்கள் சொல்ல, கோச் வேறு சிலதை சொல்ல, முடிவாய் இருவரும் ஒரு முடிவிற்கு வர நேரமானது.. அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கோ இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் இன்று அவர்களுக்கு எதிராய் விளையாடும் அணி பலம் வாய்ந்தது..

ஜெயித்துவிடும் நம்பிக்கை இருந்தாலும், எதிராளியின் பலம் பலவீனம் இரண்டையுமே நாம் அறிந்து வைத்திருப்பது நல்லது அல்லவா.. ஆக அனைத்தையும் மனதில் வைத்து விளையாடும் நிலை.

கடைசியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் கலந்து பேசி, முடிவு செய்து யாரை களமிறக்குவது என்று அறிவிக்க,

“ஓகே கைஸ்… இத்தனை மேட்ச் எப்படி ப்ளே பண்ணமோ சேம் ப்ளான் தான்.. நோ சேஞ்சஸ்.. பட் பொசிசன் மட்டும் மாத்திக்கலாம்..” என்று யதுவீர் விளக்க, கோச்சும் அவரது யுக்திகளை சொல்ல, அனைவரும் அன்றைய மேட்சிற்காக தயாராகினர்..

அங்கே லக்க்ஷனாவிற்கோ அலுவலகத்தில் வேறொரு மாதிரியான அனுபவம் ஏற்பட்டது.. டெல்லி சென்று வந்தது பற்றி அவர்களின் ஹேட் இடம் ரிப்போர்ட் செய்துவிட்டு. அவரவர் கேபினுக்கு வந்துகொண்டு இருக்க,

“ஆனா லக்க்ஷி சும்மா சொல்லக்கூடாது யதுவீர் செம ஆள் தான் போ.. நாங்க கூட பார்ஸ்ட் என்னவோன்னு நினைச்சோம்.. ஆனா இப்போ தெரியுது உங்க லவ் பத்தி..” என்று டேனியல் சொல்ல,

“எஸ் லக்க்ஷி.. ரெண்டு பேருமே மேட் பார் ஈச் அதர்..” என்று ரூப்பாவும் சொல்ல,

“என்ன மேட் பார் ஈச் அதர்.. எனக்கு சுத்தமா புரியல..” என்றாள் இவர்களோடு டெல்லி வந்த இன்னொருத்தி..

“ஏன் ஏன் உனக்கு என்ன புரியல..” என்று ரூப்பா முந்திக்கொண்டு கேட்க,

“ரூப்ஸ்..” என்று அவளை அடக்கிய லக்க்ஷனா,

“என்ன தீப்தி.. என்கிட்ட சொல்லு..” என்று முன்னே வர,

“இல்ல எனக்கும் புரியல.. இவங்க எல்லாம் சொல்றது போல எனக்கு ஒண்ணும் அப்படி எதுவும் ஸ்பெஷலா தெரியலை அதான் சொன்னேன்..” என்று தோளை குலுக்கினாள்  மற்றவள்.

“ம்ம் ஓகே.. இருந்துட்டு போகட்டும்.. அதிலென்ன இருக்கு.. எங்க லவ் எங்களுக்கு ஸ்பெஷல் தான்.. அது போதுமே…” என்று லக்க்ஷனா சொல்லியபடி கடந்து செல்ல முயல,

“ஹ்ம்ம் என்னவோ அப்போ நெட்ல அப்படியொரு இஸ்யு வரவும் தான் நீயே லவ் சொன்ன.. இல்லாட்டி அடுத்து உன் வீட்ல பார்க்கிற மாப்பிள்ளை தானே நீ கல்யாணம் பண்ணிருப்ப.. எது நடந்தாலும் பரவாயில்லைன்னு நீ ஸ்ட்ராங்கா அப்போ இல்லையே..” என்று தீப்தி சொல்ல, இரண்டு அடி எடுத்து வைத்தவள் அப்படியே நின்றுவிட்டாள் லக்க்ஷனா.

“ஹே என்ன பேச்சு இது.. இதெல்லாம் உனக்குத் தேவையா??” என்று ரூப்பா ஆரம்பிக்க,

“நான் உங்க யாருகிட்டயும் பேசல.. ஜஸ்ட் எனக்கு தோணினத சொன்னேன்.. அதில தப்பிருந்தா லக்க்ஷனாவே சொல்லட்டுமே..” என்று தீப்தி லக்க்ஷனாவை காண, லக்க்ஷனாவோ திகைத்துப் போய் நின்றிருந்தாள்..  

“ஹேய் லக்க்ஷி அவ சொல்றான்னு நீ டென்சன் ஆகாத..” என்று டேனியல் சொல்ல,

“நான் தப்பா இப்பவும் சொல்லலை.. நம்மகிட்ட லக்க்ஷி ஷேர் பண்ணதை வச்சு எனக்கு தோணினத சொன்னேன்..அவ்வளோதான்…” என்று தீப்தி சொல்லிவிட்டு செல்ல, அப்போதிருந்து லக்க்ஷனாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது மனது..

இதற்கு முன்னே ஒருமுறை யதுவீரும் லக்க்ஷனாவும் இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள் தான்.. இந்த பிரச்னை மட்டும் நடந்திராவிட்டால் என்று லக்க்ஷனாவும் யோசித்து இருக்கிறாள் தான்.

ஆனால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்து நீட்டியிருப்பாளா என்பது அவளே சிந்திக்காத ஒன்று.. அப்படியொரு விஷயம் அவள் சிறிதளவும் யோசிக்கவில்லை..

 எங்கே தான் காதலை வெளிப்படுத்தி, அது இரு வீட்டிற்கு மன கசப்பு கொடுக்குமோ என்ற எண்ணம் மட்டுமே அவளை எதையும் வெளிப்படுத்த வைக்காமல் இருக்க, அடுத்து நடந்தவைகள் கூட அவள் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

அதுவும் யதுவீருக்கு தான் சொல்வதற்கு முன்னேயே தன் மனத்தில் இருக்கும் காதல் தெரியும் என்பதே அவளுக்கு ஆச்சர்யம் தான்..

இதெல்லாம் இப்படியிருக்க, அந்த பிரச்சனை நடந்தது கூட ஒருவகையில் அவர்களின் திருமணத்திற்கு காரணம் என்பது இத்தனை நாட்களில் அவளுக்கு புரியாமல் இல்லை. எதோ ஒரு வகையில் அந்த பிரச்சனை தான் இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்திற்கு காரணம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனாலும் அதற்கெல்லாம் மேலாய் யதுவீர் தன்மீது காதல்கொண்டு தான் திருமண பேச்சே எடுத்தான் என்பது மட்டுமே அவளுக்கு இன்றளவும் மனதில் நிற்க, லக்க்ஷனா அதன்பின் வேறொன்றும் சிந்திக்கவேயில்லை..

யதுவீரிடம் இதைப் பற்றி பகிரும்போது ‘நீயேன் இப்படி நினைக்கிற லக்க்ஷி.. இது நடக்கணும் இருந்திருக்கு நடந்திடுச்சு.. தட்ஸ் ஆல்.. நடக்காத ஒரு விசயத்தை ஏன் திங் பண்ற…’ என்று அவளுக்கு சொல்லியிருக்க அதிலேயே அவள் மனம் சமாதானம் அடைந்துவிட்டது.

ஆனால் தீப்தி இன்று இப்படி சொல்லவும் அவளுக்கு என்னவோ போல் தான் ரொம்பவும் சுயநலமாய் இருந்தது போல் தோன்ற, மனதில் இருந்த இனிமை எல்லாம் அப்படியே காணமல் போய்விட்டது..

ஏனெனில் எந்த சூழ்நிலையிலும் யதுவீர் மீதான நேசத்தை வெளிப்படுத்திட கூடாது என்றுதானே அவளும் அப்போது இருந்தாள். அவள் வரையில் அவளது  காரணங்கள் எல்லாம் சரி.. ஆனால் இப்போது அதுவே வேறாக தெரிந்தது..

‘அப்போ… தீப்தி சொன்னதுபோல என் மனசுல யது மேல இவ்வளோ லவ் இருந்திருந்தாலும் வீட்ல சொல்றாங்கன்னு நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிருப்பேனா??’ என்று கேள்வி அவளுள்ளே எழ,

‘ச்சி ச்சி…’ என்று அடுத்த நொடி அவளே தலையை வேகமாய் உலுக்கிக்கொண்டாள்.    

“லக்க்ஷி எதுவும் திங் பண்ணாத.. அவ சொல்றான்னு…” என்று ரூப்பா மாலை கிளம்பும் போது கூட சொல்லியனுப்ப,

“ம்ம்..” என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு வீடு சென்றாள் லக்க்ஷனா.

அங்கே வீட்டிற்கு சென்றபின்னோ, லக்க்ஷனா அமைதியாய் இருக்கவும், மீரா தன் அமைதியை கைவிட்டு,

“என்னாச்சு லக்க்ஷி…” என்று கேட்க,

“ஒண்ணுமில்ல மா..” என்று முதலில் ஆரம்பித்தவள், பின் பொறுக்காமல் நடந்ததை சொல்ல,

“ம்ம்ம்… நீ எதுவும் நினைக்காத லக்க்ஷி…” என்று மீரா சொல்ல,

“இல்லம்மா தீப்தி அப்படி சொல்லவும் எனக்கே ஒருமாதிரி ஆகிடுச்சு.. ஆனா நான் அதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்கலை ம்மா…” என,

“நினைச்சு பார்க்கலைல அப்புறம் என்ன..?? நீயே நினைக்காத ஒரு விசயத்தை ஏன் இப்போ நினைச்சு பீல் பண்ற..” என்று அன்னையாய் சரியான அறிவுரை சொல்ல,

“ம்ம் யது கூட இதைதான் ம்மா சொன்னான்..” என்றவள்,  “ம்மா இன்னிக்கு மேட்ச் இருக்கு…” என்றாள் வேகமாய்.                        

“அது ஆரம்பிக்க இன்னும் நேரமிருக்கு, நீ போய் முதல்ல சாப்பிடு…” என்றவர் மனம் மகளை நினைத்து வருந்த, இதற்கெல்லாம் நல்லதொரு முடிவு வேண்டுமென்றால் சீக்கிரமே யதுவீர் லக்க்ஷனா திருமணம் முடிந்தால் தான் ஆனது என்று தோன்றியது.

ஒருவழியாய் அனைத்து வேலைகளும் முடிந்து, லக்க்ஷனா வந்து டிவி முன்னே அமர, நிர்மலும் படித்துவிட்டு வந்து அமர்ந்தான். மீரா தனக்கான வேலைகளை முடித்துவிட்டு வந்து அமர,

“இன்னும் என்ன மேட்ச் போடாம இருக்கான்…” என்று நிர்மல் எரிச்சலாய் கேட்டபடி இருக்க,

“போட்டிருவாங்க டா..” என்றபடி லக்க்ஷனாவும் காத்திருக்க, கொஞ்ச நேரத்தில் மேட்ச் தொடங்கியது..

ஆட்டம் ஆரம்பத்தில் நன்றாகவே சென்றுகொண்டு இருக்க, யதுவீரின் அணி முன்னணியில் இருக்க, லக்க்ஷனா சந்தோசமாய் பார்த்துகொண்டு இருந்தாள். ஆனால் நேரம் போக போக, எதிரணி முன்னேறி செல்ல,

“ம்ம்…” என்று முகம் சுனங்கியவளை பார்த்த மீரா “இதெல்லாம் சகஜம் லக்க்ஷி..” என்று சொல்ல,

“அச்சோ ச்சே…” என்று நிர்மல் கத்த, என்னவென்று இருவரும் பார்க்க, அங்கே யதுவீர் அணியில் மூவர் அவுட் ஆகியிருந்தனர்.

யதுவீரும் இன்னும் இருவரும் மட்டும் அவர்கள் பக்கம் இருக்க, இப்போது ரெய்ட் செல்வது யதுவீர் முறையானது.. ஆனால் அவன் செல்லாமல், அணியில் புதிதாய் வந்தவனை ரெய்ட் அனுப்ப, அந்த வீரனும் சரியாய் தான்  ரெய்ட் சென்று திரும்பி வர ஆனால் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை.

இப்போது எதிரணியில் இருந்து ஒரு வீரன் ரெய்ட் வர, யதுவீர் அணியில் இருந்த ஒரு வீரன் அவனை பிடித்து இழுக்க முன்னேற, யதுவீர் வேண்டாம் என்று சைகை செய்யும் பொழுதே புதிதாய் வந்த வீரனும் மற்றவனோடு சேர்ந்து எதிரணி வீரனை இழுக்க, யதுவீரும் அப்போது அவர்களுக்கு உதவுவது தன் கடமை என்றெண்ணி, முன்னேறி செல்ல,

சரியாய் அந்த நேரம் பார்த்து இவர்கள் பிடியில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, திமிறி குதித்து வெளியேறுகையில், அவனது முட்டி யதுவீரின் முகத்தில் பட, அதே நேரம் தப்பிச் செல்லும் வீரனை எப்படியாவது தடுத்து நிறுத்த வென்று மற்ற இருவரும் காலைப் பிடித்து இழுக்க, எதிரணி வீரன் சரியாய் யதுவீரின் மேலே விழ, அவனது கால் முட்டி இம்முறை யதுவீரின் முகத்தை போட்டு அழுத்த  அடுத்த கொஞ்ச நேரத்தில் யதுவீரின் நாசியில் இருந்து ரத்தம் கசிந்தது..

இதெல்லாம் நடந்தது என்னவோ ஒருசில வினாடிகள் தான்.. ஆனால் அதை திரும்ப திரும்ப ரிப்ளை போட்டு காட்ட இதெல்லாம் பார்த்துகொண்டு இருந்த லக்க்ஷனாவோ “ஐயோ…” என்று இருக்கையில் இருந்து எழுந்துவிட்டாள்.  

அன்றைய மேட்சில் யதுவீரின் அணி தோல்வியை தழுவியது..                         

  

 

        

        

      

 

Advertisement