Advertisement

மனம் – 1

ஆழ்ந்த நல்லுறக்கம்… உறக்கம் தவிர எனக்கு இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதைப் போல், அறையின் கதவையும், ஜன்னல்களையும் இறுக மூடி, ஏசி ஓடுவது போதாதென்று, காற்றாடியும் உச்சபட்ச வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்க, கையில் ஒரு தலையனையை இறுக கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் லக்க்ஷனா

யாரும் எழுப்ப மாட்டார்கள் என்ற எண்ணமே அவளுக்கு இன்னும் நித்திரையின் மீது காதல்கொள்ள வைக்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு ஏனோ திடீரென்று முகத்தில் லேசாய் ஒரு சுளிப்பு தெரிய, புருவத்தை நெரித்தவள்  கண் திறக்க மனமில்லாது கொஞ்சம் புரண்டபடி இருந்தாள்.

தூக்கம் கலைந்தபின்னும் இப்படி புரள்வது அலாதி சுகமல்லவா.. ஆனால் லக்க்ஷனாவிற்கு அந்த நேரத்து இனிமையை ரசிக்கவிடாது, அடைக்கபட்டிருந்த கதவையும் தாண்டி உள்ளே வந்து கேட்டது, டிவியின் சத்தம்..

“ம்ம்ம்ம்…” என்று வந்த எரிச்சலை அடக்கியவள், கண்களை மூடிக்கொண்டே, தன் கைகளை மெத்தையில் எதையோ தேட, இரண்டொரு நொடியில் கையில் சிக்கியது அவளின் அலைபேசி.

ஒற்றை கண்ணை மட்டும் திறந்தவள், வேகமாய் அவளின் அம்மாவிற்கு அழைத்து, “ம்மா டிவி வால்யூம் கம்மி பண்ணு..” என்றுவிட்டு பதிலையும் வாங்காது அழைப்பைத் துண்டித்தவள் மீண்டும் உறங்க முயற்சிக்க,

இம்முறை அவளது முயற்சி கை கொடுக்கவில்லை.. ஆனால் வெளியே டிவி சத்தம் கம்மியாகி இருந்தது. கொஞ்ச நேரம் இப்படி அப்படி புரண்டவள், உறக்கம் வரவில்லை என்றதும் எழுந்துவிட்டாள்..

சோம்பல் முறித்தபடியே கடிகாரம் பார்க்க அதுவோ மதியம் இரண்டு மணி என்று காட்டியது. ஆம் இரண்டு மணிதான்.. இரவு நேர ஷிப்ட் முடிந்து வந்தவளை குளிக்கச் சொல்லி, உண்ண வைத்து,

‘இனி நீ எப்பவோ தூங்கி எந்திரி.. நான் ஒன்னும் சொல்லமாட்டேன்..’ என்றுவிட்டார் மீரா..

அப்படியே ஏதாவது சொன்னாலும் இவளும் ஒன்றும் உறக்கத்தை விடப் போவதில்லை. ஆனால் இப்போதோ, வம்படியாய் எழுந்து நிற்க, கலைந்திருந்த கேசத்தை சரி செய்தபடியே ஆனில் இருந்த அணைத்து ஸ்விட்ச்களையும் அமர்த்திவிட்டு, வெளியே வந்தாள்.

ஹாலின் நடுநாயகமாக இருந்த சோஃபாவில் மீரா அமர்ந்திருக்க, அவர் மடியில் ஹாயாக படுத்திருந்தான் நிர்மல்.. அவளின் தம்பி.. அப்பா நவநீதனுக்கு துபாயில் வேலை. ஆக இவர்கள் மட்டுமே வீட்டில். அதுவும் வார இறுதியில் தான் அனைவரும் இருக்க முடியும்..

மீரா பள்ளி ஆசிரியை, விளையாட்டுத் துறையில்.. லக்க்ஷனா வழக்கமான பீஈ முடித்து கேம்பஸில் தேர்வாகி இந்த ஒரு வருடமாய் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலையில் இருக்கிறாள். நிர்மல் பள்ளி செல்பவன்.. அளவான அன்பான கலாட்டாவான குடும்பம்.

மீராவின் மீதும், நிர்மலின் மீதும் பார்வையை ஓட்டியவள், அவர்கள் தன்னை கவனிக்கவில்லை என்றதும், “ம்மா..” என்று கத்தியபடி வந்து மற்றொரு பக்கமிருந்த ஒற்றை இருக்கையில் பொத்தென்று விழ,

“லக்க்ஷி..” என்று பார்த்தவர்.. அடுத்து டிவியின் பக்கம் முகத்தை திருப்ப, அவளும் அது போலவே பார்க்க, வழக்கம் போல் ஸ்போர்ட்ஸ் சேனல்தான் ஓடிக்கொண்டு இருந்தது.

தினமும் இப்படித்தான்.. அதுவும் இப்போது தமிழில் வேறு வந்துவிட்டதா, கேட்க வேண்டியதே இல்லை.. எந்நேரம் பார்த்தாலும் அதே தான். இவளுக்கோ எரிச்சலாய் இருக்கும்.

‘அம்மா நீ PT டீச்சர்தான்.. ஆனா அதுக்காக எப்பவுமே ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்கணும்னு இல்லை..’ என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறாள். ஆனால் மீராவோடு நிர்மலும் சேர்ந்துவிட்டால் அவ்வளோதான்.

‘அக்கா என்ன நீ. கொஞ்சமாது என்துவா இரு.. எப்போ பாரு ஹிந்தி சீரியல தமிழ்ல பார்த்திட்டு இருக்க..’ என்று வாரிடுவான்..

லக்க்ஷனா வீட்டில் இருந்து டிவி பார்ப்பதே அபூர்வம், வார விடுமுறையில் இருந்தாலும் இதே பஞ்சாயத்து ஓடும்.. இன்றும் அதுபோலவே ஒரு பஞ்சாயத்திற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இருக்க, நிர்மல் கையில் இருந்த ரிமோட்டை பார்த்துகொண்டு இருந்தாள். அவளைப் பற்றி மீராவிற்கு தெரியாதா..

“ஹைலைட்ஸ் தான் லக்க்ஷி.. கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்..” என,

“நேத்து லைவ் பார்த்திருப்பீங்கல்ல..” என்று முறைத்தாள்..

“இல்ல டி.. நேத்து பார்க்க முடியல..” எனும்போதே “ம்மா அடுத்து கபடி லீக் மேட்ச் ஹைலைட்ஸ் போடுவான்..” என்று நிர்மல் சொல்ல, லக்க்ஷனாவிற்கு நெஞ்சம் ஒருமுறை நின்று துடித்தது..

இதற்குத்தானே அவள் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்ப்பதே இல்லை.. வீட்டினர் பார்த்தாலும் சண்டைக்கு போவது.. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டதாய் நினைத்துக்கொள்ளுமாம். அதுபோல தான் இவளுக்கும் ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்காது போனால் அவனைப் பற்றிய நினைப்பு வராது போகுமா??

ஆனாலும் என்ன செய்ய இப்படியான சிறு சிறு முயற்சிகள் அவ்வப்போது எடுத்து, கொஞ்சம் ‘யதுவீர்’ பற்றிய நினைவுகளை எல்லாம் ஒதுக்கித்தான் வைத்திருந்தாள்.

ஆனால் இதோ நிர்மல் புண்ணியத்தில் கபடி என்றதும், அவனின் நியாபகம் தன்னப்போல் வந்துவிட, அந்த கடுப்பில் “டேய் இவ்வளோ நேரம் கிரிக்கெட்.. அடுத்து கபடியா… அதெல்லாம் முடியாது..” என,

“ம்மா பாரும்மா.. நேத்து லைவ் பார்க்கலைன்னு தான சொல்றோம்..” என்று நிர்மல் வேகமாய் மீராவை துணைக்கு அழைக்க, அவரோ மகள் முகத்தை பார்க்க,

“நேத்து ஏன் பார்க்கல.. நான் இல்லாதப்போவே எல்லா கன்றாவியையும் பார்த்திருக்க வேண்டியாது தானே…” என்றாள் உள்ளடக்கிய எரிச்சலில்..

“நேத்து கெஸ்ட்.. நைட் டின்னர் முடிச்சிட்டு தான் போனாங்க.. சோ எந்த மேட்சும் பார்க்கல..”

“ஏன்??? யார் வந்தா??” என்றபடி அடுப்படி சென்றவள், தனக்கொரு தட்டில் அவள் உண்ணாமல் விட்ட மதிய உணவை போட்டுக் கொண்டு வந்தமர,

“நீலம் அவ கோ சிஸ்டர் எல்லாம் வந்தாங்க.. நம்ம ஷீலுக்கு அடுத்த மாசம் கல்யாணம்ல சோ இன்வைட் பண்ண வந்தாங்க. எல்லாம் இருந்து பேசி நாளாச்சா சோ இருந்துட்டு போனாங்க..” என்று மீரா சொன்னதும், லக்க்ஷனாவிற்கு மற்றது மறந்து,

“ஆமால்ல.. நேத்து ஷீலு கால் பண்ணினாம்மா..  என்னால தான் அட்டென் பண்ண முடியல.. சூப்பர் அதுவும் அவங்க சைட் கல்யாணம் செமையா இருக்கும்ல…” என்று ஆர்பரித்த மகளை அமைதியாய் பார்த்தார் மீரா..

லக்க்ஷனா எப்போதுமே இப்படித்தான்.. உணர்வுகளை கட்டுக்குள் வைக்கத் தெரியாது.. கோவமோ, மகிழ்வோ, எரிச்சலோ இல்லை எதுவோ சட்டென்று பிரதிபலித்துவிடுவாள்.

வீட்டினருக்கு அவளைப் பற்றி தெரியும், ஆகையால் பெரிதாய் எதுவும் எடுத்துகொள்ள மாட்டார்கள். ஆனால் வெளியாட்கள் இடமும் லக்க்ஷனா இப்படி நடந்துவிட்டால் என்ன செய்ய என்ற கவலை மீராவிற்கு நிறையவே இருந்தது.

“ம்மா சரி சரி.. உடனே அப்படி பார்க்காத.. அது.. சின்னதுல இருந்து நானும் ஷீலுவும் க்ளோஸா.. அதான் சட்டுன்னு பொங்கிட்டேன்..” என்று மீராவை சமாதானம் செய்தவள்,

“ஷீலுக்கு கூப்பிடவா..” என்றாள்..

“சாப்பிட்டு பேசு லக்க்ஷி” என்றவர், நிர்மலிடம், “வேற போடு நிர்மல்.. அவ பாக்கட்டும்..” என, “ம்மா டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்..” என்றான் எழாமல்.

லக்க்ஷனாவோ டிவி பக்கம் முகத்தையும் மனதையும் திருப்பாமல், “விடும்மா அவன் என்னத்தையோ பார்க்கட்டும்.. நான் டைனிங் ரூம் போறேன்..” என்று எழுந்து செல்ல,

“எது என்னத்தையோவா.. கபடி.. நம்ம மண்ணு.. நம்ம கேமு.. ஜெயிச்சாலும் தோத்தாலும் மீசைய முறுக்கு..” என்று கபடி வீரர்கள் போல் ஒரு கையை மேலே தூக்கி, மறுகையால் தொடையை தட்டி நிர்மல் சொன்ன விதத்தில் அம்மா மகள் இருவருக்குமே சிரிப்பு வந்திட,

“என்ன என்ன சிரிக்கிறீங்க.. கபடி ஆரிஜின் நம்ம தமிழ்நாடு தான்.. லாஸ்ட் வோர்ல்ட் கப்ல இந்தியா வின் பண்ணுச்சு பட் அந்த டீம்ல ஒரே தமிழர் தான் இருந்தார். சோ நம்ம சப்போர்ட் பண்ணனும்.. டிவலப் பண்ணனும்.. கப்ப தட்டி தூக்கணும்..” என்று அந்த வயதுக்கே உரிய வேகத்தோடும், உற்சாகத்தோடும் நிர்மல் சொன்னாலும் அவன் சொன்னது என்னவோ உண்மைதான்..

லக்க்ஷனாவோ நீ என்னவோ செய் என்பதுபோல் நகர்ந்துவிட, நிர்மல் மீண்டும் டிவியில் மூழ்கிவிட, மீரா மகளிடம் வந்தவர், “என்ன லக்க்ஷி டல்லா தெரியுற..” என,

“அதெல்லாம் இல்லம்மா.. ஐம் நார்மல்.. அப்புறம் சொல்லு  நீலம் ஆன்ட்டி என்ன சொன்னாங்க..” என்று பேச்சை மாற்றினாள்..

“அவளுக்கு ரொம்ப சந்தோசம்.. மூணு நாள் முன்னாடியே அங்க வந்திடனுமாம்.. எல்லாரும் வார்றாங்க.. சோ நீயும் பசங்களை கூட்டிட்டு வந்திடுன்னு சொன்னா..” என்றதும்,

‘எல்லாரும்னா யாரு.. அ.. அவனும் வர்றானா…’ என்றெண்ணும் போதே, ‘அதெப்படி வராம போவான்.. ஷீலு அவனுக்கு சொந்த பெரியம்மா பொண்ணாச்சே..’ என்று அவளாக நினைக்க, மீராவோ அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவர்,

“லக்க்ஷி திடீர் திடீர்னு என்ன யோசனை.. சாப்பிட்டிட்டு ஷீலுக்கு பேசு.. தென் லீவெல்லாம் எப்படின்னு பார்த்து அரேஜ் பண்ணிடு என்றார்.

“லீவா எதுக்கும்மா??” என்றாள் புரியாமல்..

“இப்போதானே சொன்னேன் நீலம் வந்து இன்வைட் பண்ணிருக்கா நம்மல்லாம் போகணும்னு.. எனக்கு தம்பிக்கு அப்போ லீவ் தான்.. நீ தான் ஆபிஸ்ல லீவ் சொல்லணும்..” என்றவரை பார்த்தவளுக்கு மனதில் என்ன தோன்றியதோ, சட்டென்று முகம் மாற,

“நா.. நான் வரல… நீங்க போங்க.. நான் ஸ்ட்ரைட்டா கல்யாணத்துக்கு வந்துக்கிறேன்..” என,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாவ் அப்படி இப்படின்னு சொன்ன இப்போ என்னாச்சு உனக்கு??” என்றார் ஆராய்ச்சியாய் பார்த்து..

“ஏன் என்னாச்சு?? நல்லாதானே இருக்கேன்.. சும்மா அதை இதை கேட்காதம்மா.. அவங்க இன்வைட் பண்ணா நம்ம உடனே போகிடனுமா.. ஏன் கல்யாணத்துக்கு போனா போதாதா..” என்று எரிந்து விழுந்தாள்.

“அதுசரி டி.. நம்ம ரெண்டு பேமிலியும் எப்படி பழக்கம்னு உனக்கே தெரியும்.. நானும் நீலமும் ஒரே டைம்ல வேலைக்கு சேர்ந்தோம்.. உன் அப்பா இங்க இல்லாதப்போ நமக்கு அவங்க எல்லாம் எவ்வளோ ஹெல்ப்புல்லா  இருந்தாங்கன்னு உனக்கு நல்லா தெரியும்.. எதோ ஏரியா மாறி இப்போ இங்க வீடு வாங்கி வந்துட்டோம்.. அதுக்காக பழகின பழக்கம் இல்லைன்னு ஆகிடுமா.. ஷீலு உனக்கு அவ்வளோ க்ளோஸ் ஃபிரன்ட் தானே.. போன்ல மணி கணக்கா பேசுற.. இப்போ என்ன திடீர்னு..” என்று மீரா சொல்லவும்,  லக்க்ஷனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மீரா சொன்னது அனைத்தும் உண்மைதான்.. இல்லையென்றில்லை.. ஆனால் ஷீலு திருமணத்திற்கு அவனும் வருவானே.. அவனை எப்படி எதிர்கொள்ள.. அதுவே அவளுக்கு பெரிய தயக்கமாய் போனது..

‘யதுவீர்..’ மறக்கும் பெயருமில்லை.. மறக்கக்கூடிய ஆளும் இல்லை.. இதோ நிர்மல் கபடி கபடி என்று கத்திக்கொண்டு இருக்கிறானே அதே கபடியை உயிராய் காதலிப்பவன் தான் யதுவீர்…

பள்ளி நாட்களில் இருந்தே அவனுக்கு கபடி மீது மோகம் ஜாஸ்தி.. அனைவரும் கிரிக்கெட் என்றால் அவன் கபடி என்பான். முன்பு எல்லாம் ஒரே தெருவில் தான் இருந்தனர்..

ஷீலுவின் அம்மா நீலமிற்கு சொந்த அக்கா மகன் தான் யதுவீர்.. அவன் தந்தையின் வேலையின் பொருட்டு மகாராஸ்டிராவில் இருந்து தமிழகம் வந்து அடுத்து யதுவீரின் கல்லூரி காலம் முடிந்து தான் பூர்வீகம் சென்றனர்.. அதுகூட யதுவீரின் பாட்டியின் பிடிவாதத்தால்.

சௌக்கார்பேட்டை… முதலில் லக்க்ஷனாவின் குடும்பமும் அங்கே தான் இருந்தனர். வடக்கத்தியர்கள் தானே அங்கே முக்கால்வாசி.. இருந்தாலும் இவர்களுக்கு அங்கே பொருந்திப் போனது. காரணம் நீலம்.. அவருக்கும் மீராவிற்குமான நட்பு..

நவநீதனுக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் இந்தியா வரும் வாய்ப்பு.. குடும்பத்தோடு அங்கே துபாயில் இருக்கலாம் என்றால் நிர்மலுக்கு அங்கே ஒத்துக்கொள்ளவில்லை. ஆக பிள்ளைகளுக்காக மீரா இங்கே இருக்க, நவநீதன் அங்கே வேலையில் இருந்தார்..

லக்க்ஷனாவும் ஷீலுவும் நன்றாய் ஒன்றிவிட, அதுவுமில்லாமல் அங்கே அவர்கள் குடும்பத்தில் ஆட்களும் நிறைய, பிள்ளைகளும் நிறைய என்பதால் மீராவிற்கு அங்கே பிடித்துப் போக, நீலம் வீட்டிற்கு அருகேயே அவர்களது இன்னொரு வீட்டில் இருந்துகொண்டார்..

என்னதான் வசதி கூடினாலும் சொந்த வீடே வாங்கும் நிலை வந்தாலும் ஏனோ மீராவிற்கு அங்கே இருந்து வேறு பக்கம் செல்ல மனமே வரவில்லை.. ஆனால் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், அவர்களின் எதிர்காலம் என்று வருகையில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும்..

அப்படி புது வீடு வாங்கி வேறு ஏரியாவிற்கு குடிவந்தும் ஆண்டுகள் நான்கு ஆகிவிட்டது. இருந்தாலும் அதே நட்பு அப்படியேத்தான் இருக்கிறது…

இதெல்லாம் மனதில் ஓட, தட்டில் கை வைத்திருந்தவள் உணவை எடுத்து வாய்க்கு கொண்டு செல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க, மீராவோ அவளை பல முறை அழைத்து பதில் வராது போகவும்

“லக்க்ஷனா…” என்று உரக்க அழைக்க, “ஹா மாம்..” என்று விழித்தவள், அப்படியே தட்டை தூக்கிக்கொண்டு போய் சின்க்கில் போட்டுவிட்டு வந்தாள்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி பண்ற.. கோபத்தை சாப்பாடுல  காட்டக்கூடாது..” என்றார் மீரா கண்டிப்பாய்..

“நான் கோபமே படலயே…”

“உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே.. சரி இப்போ சொல்லு.. என்ன பிரச்சனை உனக்கு லக்க்ஷி இப்படி மாத்தி மாத்தி ரியாக்ட் பண்ற..” என்றதும் நொடி பொழுதில் சுதாரித்துக்கொண்டாள் லக்க்ஷனா.

“அட என் டீச்சர் அம்மாவே எனக்கென்ன பிரச்சனை இருக்கு.. நான் நல்லா இருக்கேன்..” என்று சொல்ல,

“என்கிட்ட உன்னோட வேலைய காட்டாத லக்க்ஷி.. நீ என்னவோ மனசுல வச்சுட்டு தான் கல்யாணத்துக்கு வர மாட்டேன்னு சொல்ற..” என்று மீரா சொல்லும் போதே,

லக்க்ஷனாவின் அலைபேசி ‘ரப்பாவே…’ என்று இசைக்கத் தொடங்க, அதனை எடுத்துப் பார்க்காமலேயே “ஷீலு தான்..” என்று மீராவிடம் சொன்னவள், “ஹாய் ஷீலு..” என்று ஃபோனை காதில் வைத்தபடி நகர்ந்துவிட்டாள்

மீராவிற்கு நன்றாக தெரியும்.. இனி எப்படியும் அவர்கள் பேசி முடிக்க குறைந்தது ஒருமணி நேரமாவது ஆகும்.. திரும்பி வருகையில் லக்க்ஷனா சிரித்த முகமாய் வந்து ‘ம்மா ஷீலு மேரேஜ்க்கு என்ன வாங்கலாம்..’ என்று கேட்பாள் என்றும் தெரியும்..

மகளைப் பற்றி நன்கறிந்தவர் அல்லவா.. அவள் எப்படியும் ஷீலுவின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே தன்னோடு அங்கே வருவாள் என்பதும் தெரியும். இருந்தாலும் இடையில் ஏன் இந்த திடீர் மாற்றம்.. ஒரு பரபரப்பு படபடப்பு எல்லாம் என்ற கேள்விக்கு அவருக்கு நிஜமாக பதில் தெரியவில்லை..

அப்படியே யோசனையாய் அமர்ந்திருந்தார்.. லக்க்ஷனா எப்போதுமே இப்படியில்லை.. ஆனால் இங்கே தனியாய் வந்தபிறகு தான் மீராவிற்கு அவளிடம் இந்த மாற்றங்களை எல்லாம் உணர முடிகிறது.. அங்கே சௌக்கார்பேட்டையில் இருந்தபொழுது முக்கால்வாசி நேரம் ஷீலுவோடு தான் இருப்பாள்.

இல்லை ஷீலுவும் அவள் கசின்ஸ் எல்லாம் சேர்ந்து இவர்கள் வீட்டில் இருப்பர்.. ஆக மகளைத் தனியாய் கவனித்துப் பார்க்கும் நேரமென்பது அவருக்கு அங்கே அமையவில்லை. ஆனால் இங்கே ஓரளவு பெரிய வீட்டில் அவர்கள் மூவரும் மட்டும் இருக்கும் நிலை வர, பிள்ளைகளைத் தவிர மீராவிற்கு யாரை கவனிக்கும் வேலை இருக்கப் போகிறது.

நிர்மலைப் பற்றி பிரச்சனையேயில்லை.. ஆனால் லக்க்ஷனா பெண் பிள்ளை அல்லவா நாளொன்றை யோசிக்கவேண்டும் தானே. அப்படி யோசித்தாலும் அவருக்கு பதில் மட்டும் கிடைப்பதாய் தெரியவில்லை..

இப்படி சிந்தனையின் பிடியில் இருந்தவரை “ம்மா ம்மா சீக்கிரம் வா.. இங்க பாரேன்..” என்று நிர்மலின் அழைப்பு அவரை திடுக்கிட வைத்து,

“என்னடா..” என்றபடி வேகமாய் ஹாலுக்கு செல்ல, அதேபோல் என்னவோ என்று லக்க்ஷனாவும் அங்கே வந்திருந்தாள்.. அத்தனை சத்தமாய் அழைத்திருந்தான் நிர்மல்..

“என்னடா..” என்று மகனை மட்டுமே பார்த்தபடி வந்தவரை “அங்க பாரும்மா யாருன்னு யதுவீர் அண்ணா..” என்று டிவியை நோக்கி கைக்காட்ட, அதற்கு முன்னேயே லக்க்ஷனாவின் கண்கள் அங்கே தான் இருந்தன..

காதருகே அலைபேசியை அவளது கரங்கள் பிடித்திருந்தாலும், கண்கள் இமைக்க மறந்து டிவியைத்தான் பார்த்துகொண்டு இருந்தது..

‘யதுவீர்..’ ஒரு ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தான்.  முன்னை விட, ஸ்மார்ட்டாய், இல்லை இல்லை அப்படிக்கூட சொல்லகூடாது ஆஜானு பாகுவாய், நான் ஒரு கபடி வீரன் என்று சொல்லும் வகையில் இருந்தான். அவர்கள் மாநில அணியின் கபடி சீருடையில் இருந்தவன் என்ன பேசுகிறான் என்பதெல்லாம் அவளது காதுக்குள்ளே நுழைய கூட இல்லை..

இத்தனை வருடங்களில் வேண்டுமென்றே அவனைப் பற்றிய ஒவ்வொன்றையும் தவிர்த்தவள், இன்று தொலைக்காட்சியில் என்றாலும் அதில் பார்க்கையில் அவளது உள்ளம் கொஞ்சம் தவிக்கத்தான் செய்தது..

“அட நம்ம யது.. எப்படி இருக்கான் பாரேன்..” என்று மீரா அவள் தோளில் தட்டி சொல்லியபடி அங்கே அமர்வது அவளுக்கு புரிந்தாலும், மேலும் நிர்மலும் மீராவும் எதுவோ பேசுவது தெரிந்தாலும் ‘ஹலோ ஹலோ…’ என்று ஷீலு அலைபேசியில் கத்திக்கொண்டு இருப்பது கேட்டாலும், அப்படியே பொம்மை போல் நகர்ந்து மெல்ல தன்னறைக்கு வந்தவள், கதவை சாத்தி அதன் மீதே சாய்ந்து கொண்டாள்.

அவள் செய்த காரியம் அவனுக்கு நினைவில் இருக்குமா இல்லை அவளையே நினைவில் இருக்குமா என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. ஆனால் அவள் செய்த காரியம் அவளுக்கு நன்றாய் நினைவில் இருக்கிறது.. இனியும் எப்போதுமே இருக்கும்..

‘ஒருவேளை அவன் மறந்திருந்தா..’ என்று நினைக்கும் போதே  ‘மறக்ககூடிய விசயமா நீ பண்ண..’ என்று அவள் மனம் எடுத்துக்கொடுக்க, கண்களை இறுக மூடிக்கொண்டாள். 

மூடிய கண்களுக்குள்ளோ தொலைக்காட்சியில் பார்த்த அதே யதுவீரின் புன்னகை முகம் தோன்றி மறைய, அலைபேசியை ஒருபக்கம் மெத்தையில் மேல் தூக்கிப் போட்டவள், அப்படியே குப்புற படுத்துக்கொண்டாள்.. சிந்தனைகள் எல்லாம் ஐந்தாண்டுகள் பின்னே போனது..   

            

              

 

     

                 

 

                     

     

                

      

         

Advertisement