Advertisement

வசம் – 13  
இப்போது எதுவும் பேசிடக் கூடாது என்று நினைத்தாலும், உமையாளுக்கு மனதினில் அதனை வைத்துக்கொண்டு இயல்பாய் இருக்க முடியும் போலத் தோன்றவில்லை. ஆக, ஏற்கனவே ஒருவித டென்சனில் நின்றவனிடம்,  
“ஏங்க இப்படி பண்றீங்க??” என்றாள் கடிந்தே.
இப்போதுதானே இவளை சற்றே சரி செய்து, அவனும் சற்று நிம்மதி மூச்சுவிட்டான், குடும்பத்து ஆட்களே மீண்டும் மீண்டும் தனி தனி என்று சொன்னால், புதிதாய் வந்தவள், இவள் என்ன நினைப்பாள், ஏதேனும் நினைத்துக்கொண்டு தனியே இருந்துவிடுவோம் என்று சொல்லிவிட்டாள் அதன் பின்னே என்ன செய்வது, இதெல்லாம் அவன் மனதில்.
“ம்ம்ச்… கொஞ்சம் சும்மா இரு…” என்று பசுபதி சொல்ல,
“என்ன சொல்றீங்க நீங்க? எதோ நம்ம நல்லதுக்குன்னு அவங்க சொல்றாங்க அதுக்காக இப்படியா பேசுறது…” எனும்போதே, அபிராமி கீழிருந்து அலைபேசி வழியாய் அழைத்துவிட, இருவருமே கீழே செல்ல வேண்டிய நிலை.
இறுகிய முகத்துடனே இருவரும் கீழே செல்ல, அங்கேயோ ஆட்கள் சிலர் வந்திருந்தனர். தொழில் நிமித்தமாய் பேசுவதற்காக வந்திருக்க, பசுபதி அங்கே போய் அவர்களோடு அமர்ந்துவிட, உமையாள், அபிராமியோடு உள்ளே சென்றுவிட்டாள்.
“என்ன உமா.. எங்க உன் அண்ணிங்க ரெண்டு பேரும்…” என்று அபிராமி கேட்க, அவருக்கு நிஜமாகவே தெரியாது இருவரும் கிளம்பியது. மாடியில் இருந்து கீழே வெளி செல்லும் மற்றொரு வாசல் வழியே கிளம்பி இருந்தனர்.
சொல்லாமல் செல்லவேண்டும் என்பதில்லை. பால்நிலா ஒரு வேகத்தில் கிளம்ப, அவளை தொடர்ந்து பனிமலரும் கிளம்பிவிட்டாள். உமையாளுக்கு இவர்கள் சொல்லாமல் சென்றது தெரியவும், அபிராமியிடம் என்ன சொல்வது, எதை விடுவது என்று தெரியாது
“சின்ன அண்ணிக்கு அவங்க வீட்ல இருந்து போன் வந்தது அத்தை.. அதான் கிளம்பிட்டாங்க…” என்று மழுப்ப,
“ம்ம் என்னவா இருந்தாலும் சொல்லாம போலாமா…” என்றபடி அவர் வேலையை செய்ய, உமையாள் அமைதியாய் இருந்தாள்.
பிரச்சனை வந்தது தங்களுக்கு நல்லது சொல்லப் போய் அல்லவா??!! சில நேரங்களில் சண்டைகள் என்னவோ ஆண்களால் வந்துவிடுகிறது, ஆனால் சமாளித்து சரி கட்டுவது என்பது பெண்களின் பொறுப்பாகிறது. உமையாள் பதில் பேசாது அமைதியாய் இருக்க, அபிராமி “வேற எதுவுமில்லையே…” என,
“அ.. அதெல்லாம் இல்லை…”
“ம்ம்ம்… நைட்டுக்கு இவங்க மாமாவும், பசுபதியும் வெளிய போய்டுவாங்க நினைக்கிறேன்.. நமக்கு மட்டும் தான்.. என்ன சமைக்கலாம்…” என்று அபிராமி கேட்கவும், அவளுக்கு அப்போதிருந்த மனநிலையில் எதை சொல்வது என்பது கூட விளங்கவில்லை.
இப்போது புதிதாய் ஓர் பயம், ஒருவேளை அபிராமி பால்நிலாவை அழைத்து எதுவும் பேசிவிட்டால்?!! ‘கடவுளே…’ என்று இருக்க, “என்ன உமா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியா இருக்க…” என்றார் அபிராமி.
“அ.. அது.. அத்தை.. எனக்கு எதுவும் தோணலையே…” என, அவள் முகத்தினைத் தான் கண்ணிமைக்கும் நொடி கூர்ந்து பார்த்தார் அபிராமி. பின் ஒன்றும் பேசிடவில்லை.
அவர் சொன்னது போலவே ஜெயசீலனும், பசுபதியும் இரவு உணவு, வெளியில் தான் என்றுவிட, அதைக்கூட அவன், அவளிடம் சொல்லவில்லை. ஜெயசீலன் பொதுவில் சொல்லிச் செல்ல, அதோட முடிந்தது.
எங்கே செல்கிறார்கள், ஏன் வெளியில் உணவு என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. அபிராமிக்குத் தெரியும் போலும். இருந்தும் அவளாய் கேட்காது அவர் சொல்வதாகவும் இல்லை. உமையாளுக்கு கேட்கும் எண்ணமும் இல்லை. பசுபதி சொல்லிச் செல்வான் என்று பார்க்க அவன் அப்படியே கிளம்பிவிட்டான். இரவு உணவு முடிந்தும் கூட வெகு நேரம் ஆகிவிட்டது. ஒருமுறை அழைத்துப் பார்ப்போமா என்று நினைத்தவள் கூட பின் விட்டுவிட்டாள். ‘சொல்லிட்டா போனாங்க..?! அவங்களே வரட்டும்…’ என்று.
கார் சத்தம் கேட்கவும், சரி வந்துவிட்டான் என்றெண்ணி வேகமாய் விளக்கு போட்டுவிட்டு, அவனுக்காக காத்திருக்க, வந்தவனோ இவளை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு எதுவும் பேசவில்லை. உண்டாயா என்றுகூட கேட்கவில்லை. குளித்துவிட்டு, இரவு உடைக்கு மாறி வந்து கட்டிலில் விழுந்துவிட்டான். உடல் சோர்வு, மன சோர்வு இரண்டும் அவனுக்கு.
இப்போது எதையும் பேசி இழுத்துக்கொள்ள அவன் தயாராய் இல்லை.  உமையாளுக்கோ அவன் எதுவும் பேசாது படுத்து முகத்தில் அடித்தது போலிருக்க ‘இருக்கட்டும் இருக்கட்டும்…’ என்று முணுமுணுத்தவள், அவளும் படுத்துவிட, அடுத்து வந்த விடியலிலும் கூட மௌனம் மட்டுமே.
யார் முதலில் பேசுவது என்று?! இருவருக்கும் பேச ஆயிரம் இருக்க, யார் பேசுவது என்பதிலேயே பொழுது நகர்ந்து, அந்த நாளும் கூட முடிந்து போனது தான் நிஜம். பசுபதிக்கு எப்படியோ உமையாளுக்கு அவனின் இந்த மௌனம் சுத்தமாய் பிடிக்கவில்லை. இதற்கு இடையில் பசுபதி, பால்நிலாவை சமாதானம் செய்திருந்தான். அதைக் கூட அவன் அவளிடம் சொல்லவில்லை.
அது தெரியாது மேலும் அவள் பழைய கோபத்தை வைத்துக்கொண்டு இருக்க, அபிராமி வேறு எதோ பேச்சு வாக்கில் “இந்த பால்நிலா பொண்ணு எப்பவும் இப்படித்தான்…” என்று எதையோ சொல்ல, உமையாளுக்கு மேலும் பசுபதி மீது கோபம் தான் வந்தது.
‘எல்லாம் இவங்கனால…’ என்றெண்ணியவள், அன்றைய மாலை அவன் வரவுமே, “உங்களோட பேசணும்…” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்து.
“ம்ம்…” என்றவன், தலையை பிடித்து அமர, அவனுக்கு என்ன செய்கிறது என்பதெல்லாம் அவளுக்கு அந்த நேரத்தில் உணர முடியவில்லை. தான் பேச வந்ததை பேசியே ஆகிட வேண்டும்.
“எங்க இப்படி பண்றீங்க??” என்றாள் அங்கலாய்ப்பாய்.
“ம்ம்ச் என்ன பண்ணிட்டேன்…” என்று பசுபதி சலிப்பாகவே கேட்க, “என்ன பண்ணல. அன்னிக்கு நீங்க திட்டவும் அண்ணிங்க அத்தைட்ட  சொல்லாம போயிட்டாங்க. அத்தை இப்போ வரைக்கும் நிலா அண்ணிய திட்டிட்டு இருக்காங்க. எல்லாம் உங்கனால தான்…” 
அவனுக்கோ மீண்டும் இப்பேச்சா என்று சல்லையாய் இருந்தது. “ஷ்…!! இந்த பேச்சை விடு…” என,
“என்ன?! பேச்சை விடுறதா? இன்னும் நம்ம பேசவே ஆரம்பிக்கல.. நம்ம நல்லதுக்குன்னு பேசப் போய்…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னமே,
 “எது.. எது நல்லது..” என்றான் வேகமாய்.
பால்நிலா சொன்னது ஒருவேளை இவள் மனதில் பதிந்து போனதோ என்று தோன்ற, அவனுக்கு பொறுமை என்பது அங்கே இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
“அண்ணி சொன்னதை சொன்னேன்…” என்று உமையாள் இயல்பாகவே சொல்ல,
“ஓ..!! அப்போ உனக்கு அதெல்லாம் சரின்னு தோணுதா?!”
“சரியோ தப்போ அவங்க நம்ம நல்லதுக்குன்னு சொல்றாங்க, அதனால பேசுறப்போ அவங்கள திட்டாம இருந்திருக்கலாம்…” என்று உமையாள் சரியாகவே தான் சொன்னாள்.
ஏற்கனவே தலைவலி, இதில் இந்த பேச்சு மறுபடியுமா என்ற சலிப்பு, எல்லாம் சேர்ந்து பசுபதிக்கு வார்த்தைகளை விட வைத்தது. “அதானே பார்த்தேன். இன்னும் உனக்கு மனசுல எதுவும் மாறல.. பிடிச்சாலும் பிடிக்கலன்னாலும் வாழணும்னு சொன்னவ தானே நீ.. இப்போ இது…” என்று அவள் அன்று பேசியதை இப்போது சொல்லிக் காட்ட,
‘அச்சோ…’ என்று ஆனது அவளுக்கு.
என்ன இப்படி பேசுகிறான் என்று அவள் திகைத்துப் பார்க்க, “என்ன பாக்குற.. இந்த பேச்சை விடுன்னா விடுறது இல்லை… ச்சேய்ன்னு வருது…” என, 
போதும் கொஞ்சம் நிறுத்துங்க…” என்றுவிட்டாள் சற்றே குரல் உயர்த்தி.
“சும்மா பேசிட்டே போகாதீங்க. இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. இல்ல அண்ணி தான் என்ன தப்பா சொல்லிட்டாங்க. அவங்க மனசுக்கு அது சரின்னு படுது சொல்லிருக்காங்க. கேட்கிறதும் கேட்காததும் நம்ம இஷ்டம். அதைவிட்டு அவங்கள திட்டுனா என்ன அர்த்தம்…”
“ஒரு அர்த்தமும் இல்லை நான் அக்காவோட பேசிட்டேன். போதுமா.. அதனால இதை இதோட நிறுத்து…” என்றான் கைகளை உயர்த்தி.
எரிச்சலாய் போனது உமையாளுக்கு. நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சென்று என்ன இது இப்படி என்று. இவன்தானே சொன்னான் அடுத்தவர்கள் ஆயிரம் சொல்வார்கள், நாம்  யோசித்துத்தான் எதுவும் செய்யவேண்டும் என்று. இப்போது என்ன, பால்நிலா சொன்னது கேட்டு தான் அப்படி என்ன செய்துவிடப் போகிறேன். அதைவிட, அக்காவோடு பேசிவிட்டேன் என்று ஒரு வார்த்தை தன்னிடம் சொல்லியிருந்தால், தான் என்ன சொல்லியிருக்கப் போகிறேன். எதையுமே பகிராது இவனாக மனதில் ஒன்றை வைத்துக்கொண்டால், அவள்தான் என்ன செய்வாள்?  ஒரு அடிப்படை நம்பிக்கை இல்லையா தன்மீது என்று அவளுக்கு அந்த நேரம் எரிச்சலின் உச்சமாய் தான் இருந்தது.
அவள் முகத்தின் தெரிந்த மாற்றங்கள் கண்டு, பசுபதி “ம்ம்ச்…” என்று தலையை கோதியவன், “இங்க பார் உமையாள்… கொஞ்சம் நான் சொல்றதை கேளேன்…” என்று தன்மையாகவே சொல்ல,
“ஆமா.. எப்பவும் எல்லாருக்கும் அவங்க சொல்றதையே தான் நான் கேட்கணும். ஏன்னா எனக்கு ஆண்டவன் மூளை வச்சு அனுப்பல பாருங்க…” என்றவளுக்கு சட்டென்று அழுகை வந்துவிட்டது.
சின்னதில் இருந்து மனதினில் அழுத்தி வைத்திருந்த பாரம் எல்லாம் அந்த கண்ணீர் வழியே வெளிவர, வார்த்தைகளும் தங்கு தடையில்லாது வந்தது.
“விபரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் கேட்டதெல்லாம் ‘நான் சொல்றதை கேளு…’ அப்படிங்கிற வார்த்தைகளத்தான். ஏன் எனக்கு எதுவும் யோசிக்கத் தெரியாதா? கல்யாணம் பேசுறப்போ கூட அத்தை மாப்பிள்ளை பிடிச்சிருக்கா கேட்கல, நான் சொல்றதை கேளுன்னு தான் சொன்னாங்க. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்.
கல்யாணம் முடிஞ்சு வந்த பிறகு, நீங்களும் அதைத்தான் சொன்னீங்க. ஒருதடவ இல்லை ஒவ்வொரு தடவையும். இல்ல தெரியாமத்தான் கேக்குறேன், அப்படி நான் என்ன எதையும் தப்பா செஞ்சிட போறேன். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நான் யோசிக்க மாட்டேனா? எனக்கு தெரியலைன்னா உங்கட்ட கேட்கப் போறேன். இப்போ கூட உங்களுக்கு நான் எதாவாது செஞ்சிடுவேனோ, ஏதாவது பேசிடுவேனோ அப்படின்னு தான் எண்ணம். நம்ம பொண்டாட்டி அப்படியெல்லாம் எதுவும் நம்மள மீறி செய்ய மாட்டா அப்படின்னு ஒரு நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கப்போ நான் எது செஞ்சாலும் உங்களுக்கு தப்பா மட்டும் தான் தெரியும்.  நல்லா யோசிச்சுப் பாருங்க, நமக்குள்ள தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை சண்டை வர, ஆனா மத்தவங்க பேசுறதுக்கு நான் என்ன செய்ய முடியும்.. அதைவச்சு தான எப்பவும் நீங்க ஏதாவது என்னை பேசிடுறீங்க…” என்றவள்,
“என்னவோ எனக்கு இப்படியொரு நிலைமை ஆண்டவன் கொடுத்துட்டான்…” என்றவளுக்கு அப்படியொரு அழுகை.
முகத்தை மூடிக்கொண்டு அப்படி அழுது தீர்க்க, பசுபதிக்கு தான் அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதை தைத்தது.
இத்தனை இருக்கிறதா இவளுள்.. ‘அப்.. அப்போ.. நான்… நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா??!” என்று பெருத்த அடி அவனுள்.
அவள் அழுகையை நிறுத்தாது அழுது கொண்டே இருக்க, பசுபதிக்கு மிக மிக சங்கட்டமாய் போனது. ‘ச்சோ… என்னடா நீ இப்படி பண்ணிட்ட..?!’ என்று தனக்கு தானே நொந்தவன்,
“உமையாள்…” என்று அவளை சமாதானம் செய்ய முயல,
“ப்ளீஸ்… என்னை கொஞ்சம் தனியா விடுங்க…” என்று அழுகையினூடே சொல்ல, அப்படியே பொத்தென்று அவளருகே அமர்ந்துவிட்டான்.
அவன் நினைத்தது என்ன, இப்போது இவள் பேசுவது என்ன?!      
பெரும் கவலையாகிப் போனது பசுபதிக்கு. நிறைய நிறைய யோசித்து, இப்போது இப்படி அக்காவிடமும் பேசி, இவளிடமும் பேசி, என்னடா நீ. இப்படியா சொதப்பி வைப்பாய் என்று நினைக்க, நேரம் செல்ல செல்ல, உமையாளின் அழுகை சற்று மட்டுப்பட, அதற்கெனவே காத்திருந்தது போல்,
“இனிமே இப்படி அழாத உமையாள்…” என்றான் நிஜமாகவே வருந்தி. அவள் பதிலேதும் சொல்லவில்லை.
“நான் என்னவோ நினைச்சு பேசப் போக, அது.. அது உனக்குள்ள இவ்வளோ அழுத்தம் இருக்கும்னு நான் நினைக்கல. நிஜமா நான் உன்னை தப்பா நினைச்சு எதுவும் பேசலை உமையாள். மத்தவங்க யாரும் உன்னை தப்பா பேசுற சந்தர்ப்பம் அமைஞ்சிட கூடாதுன்னு தான்…” என்று பசுபதி சொல்ல,
“பேசினா பேசட்டும்.. எல்லாருக்கும் எப்பவும் எல்லாரும் நல்லவங்களா இருந்திட முடியாது. அதுக்காக எப்பவும் நமக்குள்ள விவாதம் இருக்கனுமா? நினைச்சுப் பாருங்க கொஞ்சம்…” என்றவள்,  “வேண்டாம் போதும்… இதுக்குமேல இதெல்லாம் என்னால தாங்க முடியாது. என் மனசுல எதுவுமில்ல.. அவ்வளோதான்…” என்றுவிட்டு, எழுந்து சென்று படுத்தும்விட்டாள்.
ஒருவித அயர்வாய் இருந்தது..!! அதே நேரம் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிட்ட ஆசுவாசமும் இருந்தது..!! இதற்குமேல் அவன் என்ன நினைத்துக்கொண்டாலும் சரி..
உமையாள் எழுந்து சென்றபின்னும் கூட, பசுபதி அப்படியே தான் அமர்ந்திருந்தான். இப்போதுதான் அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிந்தது. அன்று சென்னையில் கூட அவன் ‘நான் சொல்வதைக் கேள்…’ என்றதும், அவள் முகம் க்ஷண நேரத்தில் மாறியது ஏன் என்று இப்போது நன்கு புரிந்தது.
‘ம்ம்ச் எல்லாம் சரியா நடக்கனும்னு நினைச்சு இப்போ நீயே தப்பா புரிஞ்சுக்கிட்டியே டா…’ என்று நினைத்தவன், மெதுவாய் அவளருகே சென்று படுக்க, அவளிடம் அசைவே இல்லை.
சரி எதுவாக இருந்தாலும், அவளே சற்று அமைதியாகட்டும் என்று நினைத்தவன் மறுநாள் கூட எதுவும் கேட்கவில்லை. பொதுவான பேச்சுக்கள் மட்டுமே இருவரிடமும். தேவையில்லாத எதுவும் பேசவில்லை. அன்றைய இரவு வெளியே சென்று வருகையில் பசுபதி அவளுக்கு பிடிக்குமென்று பால்கோவா வாங்கி வந்திருக்க, வாங்கி என்னவோ வந்துவிட்டான், கொடுக்கத்தான் தயக்கமாய் இருந்தது.
வெள்ளைக் கொடியை பால்கோவாவில் பறக்க விட எண்ணினான் போலும்..!!
இரவு உணவு முடிந்து, அவர்களின் அறைக்குக் கூட இருவரும் வந்துவிட, பசுபதி அவளின் முகத்தை முகத்தைப் பார்த்தான்.
“எதுவும் வேணுமா??!!” என்று உமையாளே கேட்டுவிட,
“இல்ல அது…” என்றவன், அவனின் பேக் திறந்து பால்கோவா எடுத்துக் கொடுக்க, அவன் கொடுக்கும் போது அவன் முகம் காட்டிய பாவனை பார்த்து, உமையாளுக்கு அத்தனை நேரம் இருந்த இறுக்கம் காணாமலே போனது.
“இப்.. இப்போ ஏன் இப்படி ஒரு ரியாக்சன்?!” என்றாள், முதல் முறை அவன் முகத்தில் தயக்கம் பார்த்து.
“இல்ல நீ வேணாம் சொல்லிட்டா?!”
“சொல்லிட்டா?!!”
“அது… உனக்கு பிடிக்குமேன்னு…” என்று இழுத்தான்.
“பிடிக்கும்தான்…” என்றவள், அவனிடம் இருந்து வாங்கி, பக்கத்து மேஜையில் வைக்க, “சாப்பிடல..?!” என்றான்.
“ம்ம் சப்பிட்டுப்பேன்..”
“என் முன்னாடி சாப்பிட்டா எனக்கு சந்தோசம்..” என்றவன், என்ன நினைத்தானோ அவளின் கரம் பற்றி “நிஜமா நான் உன்னை கஷ்டப்படுத்தனும்னு நினைச்சு எதுவும் பேசலை உமையாள். போட்டோ பார்த்ததுமே உன்னை எனக்கு புடிச்சது. அப்பா அம்மா இல்லாத பொண்ணுன்னு சொல்லவும்,  உன்னை நான் நல்லா வச்சுக்கனும்னு நினைச்சேன். அதுக்குமேல, நீ என்ன நினைப்ப அதெல்லாம்.. அதெல்லாம் ரொம்ப நான் யோசிக்கல. இங்க எதுமே குறைவா இல்ல. சோ உனக்கு எந்தவித சங்கடமும் இருக்காதுன்னு தான் நினைச்சேன்.. குடும்பத்துக்குள்ள எதுவும் சச்சரவு வந்திடக் கூடாதுன்னு யோசிச்சேன் அவ்வளோதான்…” என,
“ம்ம்ம்…” என்றவள், மெல்ல பால்கோவா அட்டையை பிரிக்க,
“சீரியஸா… இனிமே நமக்குள்ள இப்படி எதுவும் நடக்காது.. சென்னைல கூட உன்னோட தங்கிடக் கூடாதுன்னு எல்லாம் இல்லை. அந்த நேரத்து கோபம் அதான் போயிட்டேன். நீயும் வர்றேன்னும் சொல்லலை.. இருங்கன்னும் சொல்லலை.. அதான்…”
“ம்ம்ம்ம்….” என்று பால்கோவாவை சுவைத்தவள் “செம டேஸ்ட்…” என,
‘அடிப்பாவி…!!’ என்று பார்த்தான்.
அவன் பார்வை கண்டு “ஆனாலும் உங்க தைரியம் இந்த பால்கோவால இருக்கும்னு நான் நினைக்கல…” என,
“அடிப்பாவி…!” என்று சொல்லியே விட்டான்.
உமையாளுக்கு சத்தமாய் சிரிப்பு வந்துவிட்டது. மனதில் இருக்கும் பாரம் இறங்கியதுமே அவள் சமாதானம் ஆகிவிட்டாள். போதாத குறைக்கு இவன் வேறு முகத்தை முகத்தைப் பார்க்க, அவளுக்கே பாவமாய் போனதுவோ என்னவோ? இப்போது இனிப்பு வேறு வாங்கிக்கொண்டு வந்து பேசவும், அவளுக்கு எண்ணத்தில் எதுவும் இல்லை.
“நான் எவ்வளோ பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன். நீ அப்படி அழவும் எவ்வளோ கஷ்டமா போச்சு தெரியுமா?! லாஸ்டல நான் எல்லாமே தப்பா புரிஞ்சிட்ட பீல். இப்போ என்னடான்னா பால்கோவா செமன்னு சொல்லிட்டு இருக்க நீ…” என்றவன், அவளின் காதை பிடித்துத் திறுக,
“ஷ்..!!! ஆ…!! வலிக்குது…” என்றவள் “வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு இப்படி பண்ணா என்ன அர்த்தம். இதுதான் உலக மகா தப்பு…” என,
“ஆனாலும் நீ சரியான ஆளு டி…” என்றவன் அவனின் பிடியை விட,
“உங்களுக்கு சரியான ஆளா??!!” என்றாள், கிண்டலாய் அவனைப் பார்த்து.
“வாய் பாரு.. பேச்சு பேச்சு தான் உனக்கு எப்பவும்…” என்றவன், அடுத்து என்ன செய்வான் என்று தெரிந்து, வேகமாய் நகர்ந்து விட்டாள்.
“ஓய் நில்லு.. நீ பேசுறப்போ நான் கேட்டேன்ல.. நான் பேசுறப்போ நீ கேட்கணும் தான…” என்று அவள் பின்னே போக,
“ஓயாம பேசிட்டே இருந்தா யார் கேட்பாங்க…” என்றவளை எட்டிப் பிடித்தவன் “என்னை ரொம்ப டேமேஜ் பண்ற நீ…” என,
“பார்த்து பார்த்து பால்கோவா கீழ விழப் போது…” என்று உமையாள் சிரிப்பினூடே சொல்ல,
“புருஷன் நான் பக்கத்துல நிக்கிறேன் உனக்கு பால்கோவா தான் முக்கியமா போச்சா?!” என்றபடி அவளின் கையில் இருந்து பிடுங்க, முயற்சி செய்ய, நேரம் செல்ல செல்ல அவர்களின் சண்டை வேறு விதமாய் போனது.
பசுபதியும் பேச்சுக்களும், ஸ்பரிசங்களும், உமையாள் மனதில் இருக்கும் சிறு சிறு குழப்பங்களை கூட உடைக்க, அவனுக்கோ மேலும் மேலும் தன் மனைவியை காதலால் மூழ்கடிக்க ஆசை வர, முழுக்க முழுக்க, அவளின் மனம் அவன் வசம் ஆகிப்போனது..!! 

Advertisement