Advertisement

வசம் – 12     
காதலித்து திருமணம் செய்தாலே, அத்திருமண வாழ்வில் ஆயிரம் ஆட்டங்கள் காண நேரிடும். பசுபதிக்கும், உமையாளுக்குமான இத்திருமண வாழ்வானது, முழுக்க முழுக்க, குடும்பத்தினரின் முடிவின் பேரில் நடக்க, அதிலும் உமையாளுக்கு, தன் மனம் திறந்து பிரேமாவிடம் கலந்து பேசக் கூட அவகாசமில்லை.
சரியென்பதைத் தவிர வேறெதுவும் சொல்லும் வாய்ப்பே அவளுக்கு அங்கே யாரும் தந்திடவில்லை.
பசுபதிக்கோ, அவனின் குடும்பத்தினர் முடிவு. பெண்ணும் பார்க்க நன்றாய் இருக்க, சம்மதித்துக் கொண்டான்.
இப்படியான இருவரும், ஒரே வாழ்வு என்று வருகையில் தானே அதன் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் தெரியும். வெளித் தோற்றம் என்பது வேறு. நம் உணர்வுகள் என்பது வேறல்லவா?! புரிதல் என்பது சட்டென்று அத்துனை சீக்கிரம் வந்தும் விடாதே.
இப்படியே எல்லாம் சரியாகிப் போனால் சரி, என்று இருவரும் நினைக்க, அப்படியெல்லாம் அத்துனை சீக்கிரம் எல்லாம் சரியாகிடுமா என்று அவர்களின் பிணைப்பும் பார்த்து புன்னைகை சிந்தியது.
மறுநாள் பொழுது நன்றாகவே விடிய, இருவருக்கும் எழும் எண்ணமே இல்லை. அணைத்தபடி, கொஞ்சியபடி, பேசியபடி இருக்க,
“ஹ்ம்ம் இப்படியே இருந்தா எப்படி…?” என்றாள் உமையாள் வேண்டுமென்றே.
“வேறென்ன செய்யணும்..?” என்றான், மேலும் அவளை நெருங்கியபடி.
“ஹ்ம்ம் ஒன்னும் செய்யவேணாம்.. எந்திரிக்கலாம்…”
“எந்திரிக்கிறது தான் உனக்கு கை வந்த கலை ஆச்சே…” என்றவன், மெல்ல எழ, உமையாள் அப்போதும் எழாது, அவனைப் பார்க்க,
“ஒரு பேச்சுக்கு சொன்னேன்…” என்றான் புன்னகை சிந்தி.
அவனின் அந்த புன்னகை, அவளையும் தொற்ற, “அதானே பார்த்தேன்…” என்றபடி அவளும் எழ,
“ம்ம் சொல்லு.. என்ன செய்யலாம் இன்னிக்கு…?” என்றான் பசுபதி.
“என்ன செய்யலாம்… வெளிய எங்கயும் போலாமா??”
“நீதான் இந்த ஊர் காரி.. நீதான் சொல்லணும்.. எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா…” என்றவன், எழுந்து குளிப்பதற்கு, உடைகளை எடுக்க,
“ஒன்னும் தெரியாதுன்னு சொல்றீங்க. இந்த ஊர்ல குளிக்க மட்டும் தெரியுமா??” என்றாள் கிண்டலாய்.
‘அடிப்பாவி… பேச்சாடி பேசுற…?!’ என்பது போலத்தான் அவன் பார்க்க, “ஹா ஹா சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்…” என்றவள், தானும் துணி எடுத்துக்கொண்டு, மற்றொரு அறையில் இருக்கும் குளியல் அறைக்குச் செல்லப் போக,
“ஓய்…! நில்லு…” என்று எட்டிப் பிடித்தான்.
“என்.. என்னங்க…?”
“மெட்ராஸ்கார பொண்டாட்டியே… தண்ணீர் சேமிப்பு பத்தி எல்லாம் உனக்குத் தெரியாதா..?” என்றவன், அவளின் பிடியில் இருக்கும் துணிகளை எடுத்துக்கொள்ள,
“என்ன சொல்றீங்க?!!” என்றாள் புரியாது.
“ம்ம்.. தனி தனியா குளிச்சா, தண்ணி செலவு.. நேரம் செலவு… ஒண்ணா குளிச்சா எல்லாமே மிச்சம்…” என்றவன், அவளின் முதுகில் கை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்ல,
‘ஓ…!! கடவுளே… இதென்ன இப்படியெல்லாம் பண்றீங்க நீங்க..’ என்று சத்தமாய் சொன்னவள், “மதுரைல இதெல்லாம் எங்க போச்சு…” என்றாள் வம்படியாய்.
“ம்ம் மதுரைல இருந்து பிளைட் ஏறி மெட்ராஸ் வந்துச்சு…” என்றவன், அடுத்து அவன் சொன்னதையே செய்ய, தண்ணீரும் மிச்சமாகவில்லை, நேரமும் மிச்சமாகவில்லை அங்கே. அரைமணி நேரத்திற்கும் மேலே, நேரம் செல்ல, “ம்ம்ஹூம் இதெல்லாம் சரி படாது…” என்று இருவரும் தோன்றியதோ என்னவோ, ஒருவழியாய் வெளிவர,  சரியாய் பசுபதியின் அலைபேசியும் சிணுங்கியது.
அபிராமி தான் அழைத்திருந்தார். இன்னமும் அவரிடம் இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறோம் என்பதனை சொல்லவில்லை. அழைப்பை ஏற்காது பசுபதி உமையாளிடம் “சித்தி தான் பேசுறாங்க.. நீ பேசு…” என்று அலைபேசியை நீட்ட,
“நீங்க பேசினா என்ன??” என்றாள் தலையை துவட்டியபடி.
“சொல்றத கேளு உமையாள்… நீ பேசு…” என்றவனின் சொற்களில் திரும்பிப் பார்த்தவள், எதுவும் சொல்லாது அலைபேசியை வாங்கி “ஹலோ அத்தை…” என,
நொடிப் பொழுதில் அவள் முகத்தில் வந்து போன மாற்றம் கண்டு பசுபதி யோசனையாய் தான் பார்த்தான். ‘இப்போ நம்ம என்ன சொல்லிட்டோம்னு இவ இப்படி ரியாக்ட் பண்றா?’ என்று நினைத்தபடியே நிற்க,
அங்கே அபிராமிக்கு, பசுபதியின் அலைபேசியில் உமையாள் எடுத்துப் பேசுவது கண்டு “என்ன உமா எங்க இருக்கீங்க? பசுபதி எங்க?” என
சட்டென்று என்ன சொல்வது என்று தெரியாது, அவன் முகம் பார்க்க, ‘பேசு பேசு…’ என்று சைகை செய்தவன், உடை மாற்ற,
“அ.. அது.. அவங்களோட வந்துட்டேன் அத்தை…” என்றாள் திணறி.
அதற்கு மேலே, எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அபிராமி கேட்டிடவில்லை.
“அப்படியா சரி.. சும்மாதான் கூப்பிட்டேன்..” என,
“அ.. அவர்கிட்ட கொடுக்கட்டுமா…?” என்று உமையாள் கேட்க, “இல்ல இல்ல… நீங்க பாருங்க… சும்மாதான் கால் பண்ணேன்…” என்றவர் வைத்துவிட,
“சும்மாதான் கால் பண்ணாங்களாம்…” என்று உமையாள் சொல்ல,
“அது சித்தி சும்மா சொல்றாங்க… நீ போன் எடுத்ததுனால அப்படி சொல்லிருப்பாங்க…” என்றான் ஒரு புன்னகையோடு.
“ஓ…!”
“என்ன ஓ…!! நம்ம தனியா இருக்கோமா இல்லை எப்படின்னு செக் பண்ண கூப்பிட்டு இருப்பாங்க…”
“ஓஹோ..!”
“என்ன ராகம் போட்டுட்டு இருக்க…” என்றவனிடம், “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. அதான்…” என்று உமையாள் இழுக்க,
நின்று நிதானித்து அவளைப் பார்த்தவன், “உன் மனசுல வேற எதுவும் சொல்லனுமா உமையாள்…?” என்று கேட்க,
எதைக் கேட்கிறான் என்று தெரியாது “இல்லையே…” என்றாள் வேகமாய்.
அவள் வேகமாய் சொன்னவிதம், எதையோ மறைப்பது போலிருக்க, பசுபதிக்கு என்ன தோன்றியதோ “ம்ம் சரி…” என்றுவிட்டான்.
இருந்தும் மனதில் அது ஒரு ஓரத்தில் இருந்துகொண்டே தான் இருந்தது. அடுத்து வந்த நாட்களிலும் சரி, ஊருக்கு சென்ற பின்னும் சரி.
சென்னையில் அதன்பின்னே, ஒவ்வொரு முறையும் அவளோடு பேசும்போதெல்லாம் அவள் முக பாவனைகளை கூர்ந்து பார்த்தான். முன்னே ஆசையாய் பார்த்தது வேறு, இப்போது அவளிடம்  ஆழ்ந்து நோக்குவது வேறு.
உமையாள் கூட கேட்டாள், “என்னங்க என்ன ஆராய்ச்சி என் முகத்துல..?” என்று. சிரித்து மழுப்பிவிடுவான்.
இருந்தும், இவள் மனதில் எதுவோ ஒன்று, ஓர் அழுத்தம் இருக்கிறது என்று தோன்றிக்கொண்டே இருக்க, அது வெளிவரும் சந்தர்ப்பம், ஊருக்குச் சென்றபின்னே தான் அமைந்தது.
வீடு திரும்பவுமே, வழக்கம் போல் சாதாரணமாகத்தான் அபிராமியும், ஜெயசீலனும் பேசினார்கள். வேறு எந்த விசாரிப்புகளும் இல்லை. இருவரும் ஒன்றாய் தங்கியது தெரியவுமே அமைதியாகிப் போனார்கள். ஆனால், மறுநாள் இவர்களை காணவென வந்த பசுபதியின் அக்காள்கள் சும்மா இருந்திடவில்லை.
அதிலும் பால்நிலா  “என்ன உமையா… முகத்துல ஒரு ஜொலிப்பு தெரியுது…” என்று கிண்டல் பேச,
பனிமலர் கூட “தம்பி வெளிய தங்குறான்னு சொல்லவும் எங்களுக்கு சங்கடமா போச்சு…” என, உமையாள் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்துகொண்டாள்.
பசுபதிதான் “அவங்களே முடியாம இருந்தாங்க.. அப்போ போய் விருந்தாட முடியுமா??” என,
“முடியாம இருக்கப்போ தான் கூட இருக்கனும்டா…” என்றாள் பனிமலர்.
அது பசுபதிக்கு தெரியாமலா போகும். இருந்தும் அப்போது உமையாள் மீதிருந்த ஒரு கோபம், அவனை கிளம்பிட செய்ய, இப்போது அவனும் ஒன்றும் பேசவில்லை. 
இருவரையும் பார்த்த பால்நிலா, “பார்த்தியாக்கா.. ரெண்டும் அமுக்குணி… கேள்வி கேட்கவும் கமுக்கமா இருக்கிறதா பாரு…” என்று வம்பு வளர்க்க, அவள் சொன்ன விதமும், பசுபதி அவளை முறைத்த விதமும் கண்டு உமையாளுக்கு சிரிப்பு வந்திட, சிரித்துவிட்டாள்.
பால்நிலாவோ உமையாள் சிரிப்பது கண்டு சந்தோசமாகவே “இதுக்கு தான் சொன்னேன், கொஞ்ச நாள் தனியாவாது எங்கயும் போயிட்டு வாங்க, எல்லாம் சரியாகும்னு. கல்யாணம் ஆனா எல்லாருக்குமே எல்லாமே சினிமால வர்றது மாதிரி இருக்காது. ஆனா சரி பண்ணிக்கனும்னு நினைச்சா எல்லாம் சரி பண்ணிடலாம்..” என்று பேச ஆரம்பிக்க,
“ஆரம்பிச்சுட்டியா நீ…” என்று பார்த்தவன்  “அதையும் இதையும் எதுவும் சொல்லாதக்கா. எங்களுக்குள்ள சின்னதா ஒரு சண்டை.. அதுகுள்ள அங்க போக வேண்டிய நிலை. அவ்வளோதான்.. ரொம்ப போட்டு நீ யோசிக்காத. அப்புறம் சித்திக்கிட்ட, தனியா வைங்க அது இதுன்னு எல்லாம் எதுவும் பேசி வச்சிடாத…” என்றான்.
“ம்ம்… ம்ம்… எல்லாம் எங்களுக்கும் தெரியும்…” என்றவள்,
“நீ சொல்லு உமையா எப்படி இருந்துச்சு…” என்று பேச, பனிமலரோ “நிலா சும்மா இரு…” என,
“நல்லாருந்துச்சு அண்ணி…” என்ற உமையாளின் பதிலில் அடுத்து அடுத்து பேச்சு ஆரம்பமாக, பசுபதிக்கு எழுந்து சென்றுவிடுவோமா என்றும் இருந்தது. அதே நேரம் ஏதேனும் ஒன்றுக்கு இரண்டாய் பேசி வைத்துவிடுவரோ என்றும் இருந்தது.
உமையாளோ அவ்வப்போது பசுபதியின் முகம் பார்க்க,  “என் தம்பிக்கு எப்பவுமே ஒரு டென்சன். வீட்ல எதுவும் சண்டை கிண்டை வந்துடுமோன்னு. இப்போ கூட பாரு நாங்க எதையும் சொல்லிடுவோமோன்னு தான் சுத்திட்டு இருக்கான்…” என்று பனிமலர் சொல்ல,  
பால்நிலாவோ “நான் இப்போவும் சொல்றேன், உனக்கு ஏதாவது அவனுக்கு செய்யனும்னு தோணிச்சுன்னா தைரியமா செஞ்சு குடு. நம்ம வாழ்க்கை எப்பவும் காத்துக்கிட்டே இருக்காது, நேரம் வரும் வரும்னு.. நம்மலே தான் எல்லாம் அமைச்சுக்கணும்.
நல்லா பார்த்தா உனக்கே புரியும், சித்தி சித்தப்பாக்கு புடிச்சதை தான் இப்போ வரைக்கும் செய்வாங்க. நம்ம எதுவும் சொன்னா கூட, உங்க சித்தப்பாக்கு இதெல்லாம் புடிக்காதுன்னு சொல்லிடுவாங்க. அப்படி இருக்கப்போ என் மட்டும் என்ன வந்துச்சு. இல்லை உனக்குன்னு விருப்பம் எதுவும் இல்லாம இருக்குமா என்ன. உன்னை சண்டை போடுன்னு சொல்லலை. ஆனா சாமர்த்தியமா இருன்னு சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்ல பேசுறோம்னு சொன்னோம்.. கல்யாணத்துக்கு அப்புறம் முன்னாடி மாதிரி தனி தனி போர்சனா இருந்துக்கட்டும்னு…” எனும்போதே, உமையாளுக்கு பக் என்றுவிட்டது.
‘கடவுளே…!!’ என்று பசுபதியைப் பார்க்க, அவனோ கோபமாய் நின்றிருந்தான்.
‘இந்த அக்காக்கு எவ்வளோ சொன்னாலும் புரியாது…’ என்று நினைத்தான். குடும்ப அரசியல் பெரும்பாலும் சமையற்கட்டில் இருந்து தானே ஆரம்பம் ஆகிறது.
“என்ன உமையா சரியா…” என்று பால்நிலா சொல்ல,
“உனக்கு எம்புட்டு சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியாக்கா…” என்றுவிட்டான் பசுபதி.
அடுத்த திக் உணர்வு உமையாளுக்கு. சண்டை ஆகிடுமோ என்று. ஆனால் பால்நிலாவோ “நான் ஒன்னும் தப்பா சொல்லலடா..” என,
“பேசாம இருக்கா நீ.. எதையும் பட் பட்டுன்னு பேசாதன்னு எத்தன தடவ சொல்றது உனக்கு. அவளுக்கும் சித்திக்கும் நல்லாவே ஒத்துப் போகுது. நீ இதுல தலையிடாத. நல்லா இருக்கிற இடத்துல இந்த பேச்சு பேசி எதையும் குழப்பம் செய்ய வேணாம்…”  என்று பசுபதி சொல்லவும், அக்காள்கள் இருவருக்குமே மனது பதறிப்போனது.
இதற்கு முன்னே அவன் திட்டியது வேறு. இப்போது வேறல்லவா. அதுவும் தலையிடக் கூடாது என்பது அவர்களுக்கு பெரிய விசயமாய் பட,
“என்னடா தம்பி…” என்று பனிமலர் அவனருகே வரும் வேளையில், 
“பேசு டா பேசு.. தம்பின்னாலும் உன்னைய அப்பா ஸ்தானத்துல வச்சு பாக்குறோம்ல.. நீ இதுவும் சொல்லுவ.. எதுவும் சொல்லுவ.. இனிமே உன்னோட விசயத்துல எதுலையும் நான் தலையிட மாட்டேன் போ.. என் தம்பி நல்லபடியா அவன் பொண்டாட்டியோட வாழணும்னு நான் நெனச்சதுக்கு நல்ல பேச்சு கொடுத்திட்ட.. நான் குடும்பத்த கெடுக்க நினைக்கிறேனா…?” என்று பேச்சினூடே அழ, பசுபதிக்குமே தான் விட்ட வார்த்தைகளின் வீரியம் புரிய, உமையாள் சிலையென தான் நின்றா.
உமையாளுக்கு மனம் மிக மிக சங்கடமாகிப் போனது. இதையே  இவன் சற்று பொறுமையாய் சொன்னால் என்னவென்று தோன்ற, அதே நேரம் பால்நிலா “நான் கிளம்புறேன்…” என்று கிளம்பியேவிட்டாள்.
‘ச்சோ…!’ என்று நெற்றியில் தட்டிக்கொண்டவன் “க்கா நான் எதோ…” என்று பனிமலரிடம் பேச,
“இப்போ எதுவும் சொல்லாத.. நான் பேசிக்கிறேன்…” என்றவள் “நானும் கிளம்புறேன்டா…” என்றுவிட்டு உமையாளிடமும் தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.
தன் முன்னே இப்படி ஒரு நிகழ்வு நடந்தது உமையாளுக்கு சிறிது கூட பிடிக்கவில்லை. குடும்பத்தில் சண்டை பிளவு கூடாது என்று நினைப்பவன் இப்போது பேசியது மட்டும் என்னவாம் என்று தோன்ற, அவளுக்குமே இவன் சற்று அதிகப் படியாய் நடந்துகொள்கிறானோ என்றே இருந்தது.
விளைவு இருவருக்கும் இடையில் மீண்டுமோர் சண்டை.

Advertisement