கொற்றவையை இன்று நேற்று அல்ல உண்மையில் அவளை அவளுடைய பதினான்கு வயதில் இருந்தே தெரியும் அவனுக்கு.
அவள் அக்கா ஆராதனாவை மனந்திருக்கும் வெங்கடேசனின் உறவு இன்பநிலவன், கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொந்தமாக வரும்.
அவர்களின் திருமணத்தில் பார்த்திருக்கிறான், அவன் இங்கு இருந்த வரை குடும்ப விசேஷங்களில் பார்த்திருக்கிறான் அவ்வளவே, இங்கே ஒரு கடை தொடங்க எண்ணி இடம் வாங்கி முதலில் வேலை தொடங்கிய நாள் முதல் இங்கு வந்து செல்கிறாள்.
முதலில் காடுபோலக் கிடந்த இடத்தை யாரோ சுத்தம் செய்வதை பார்த்து, மூன்றாம் நாள் அங்கு நின்றிருந்த வசந்தனிடம் அவளே சென்று பேசினாள், “இங்க பில்டிங் வரப் போகுதா” என்றவள் கேள்விக்கு.
“இல்லக்கா கடை வெக்க போறோம்”.
“அப்போ மரம் எல்லாம் வெட்டிடுவீங்களா” என்றவள் குரலில் அதீத கவலை.
இந்தப் பகுதியே பசுமை சூழுந்து நிற்கும் அங்கு இருக்கும் மரங்களால், இப்படி கட்டிடம் கட்ட எல்லா இடங்களிலும் மரத்தை வெட்டி விட்டால் எப்படி என்று பெரிய ஆதங்கம்.
“இல்லக்கா ஒரு மரத்தைக்கூட வெட்டமாட்டோம், அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுச்சு, சின்ன சின்னதா குடிசை மாதிரி போட்டு ஜூஸ் கடை வெக்குறோம்” என்க, ஆர்வம் அவளையும் தொற்றிக் கொண்டது.
தினமும் காலை மாலை, ஏதோ… அவள் இடத்தில் வேலை நடப்பது போலத் தவறாமல் வந்து வசந்தனுடன் கதை அடிப்பாள், அவன் அண்ணனின் பெருமைகளைக் கேட்டுக் கேட்டு அவனை அப்பொழுதே கொஞ்சம் பிடிக்கத் தொடங்கியது பாவைக்கு
எட்டு மாதங்கள் நீண்ட வேளைகளில் இவளின் ஆலோசனைகளும் கொஞ்சம் இடம்பெற்றது, இரும்பு வேலி எங்கும் தங்க அரளி படர்த்தி விடப்பட்டது, பிளாஸ்டிக் சேர்கள் முழுமையாகப் பயன்படுத்தாமல் சிமெண்ட் பெஞ்சுகள் வடிவமைக்கப் பட்டது.
பிள்ளைகளைக் கவர வானவில் குடில் கட்டப்பட்டது, இப்படி இறுதியாகக் கடைக்குப் பெயர் வைத்துத் திறப்பு விழா செய்ய முடிவு செய்யப்பட, பெயர் தேர்வில் முட்டிக்கொண்டு நின்றது.
அன்று காலை மிகப் பெரிய யோசனையில் நின்ற வசந்தனை பார்த்த கொற்றவை அவன் தலையில் தட்டி “மூளை ஒழுகி ஓடிட போகுது, என்ன பிரச்னை சொல்லு” என்க.
“கடைக்கு என்ன பேரு சொன்னாலும் அண்ணனுக்குப் பிடிக்க மாட்டிங்குது, அதான் யோசிக்கிறேன்” என்க.
“எங்க என்கிட்டே சொல்லு, நீ என்ன பேரு சொன்னேன்னு நானும் தெரிஞ்சுக்கிறேன்” என்று அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துவிட்டாள்.
அவர்களுக்குப் பின்னில் தான் வேலியோரம் நின்றிருந்தான் இன்பநிலவன், இந்த எட்டு மாதங்களில் அவள்மீது கொஞ்சம் நல்ல எண்ணம் இருந்தது, அவளின் ரசனைகள் முடிவுகளில் கொஞ்சம் ஆச்சர்யம்.
அதனால் அவர்களின் பேச்சில் கவனம் வைத்தான் “நா நல்லா சூப்பர் பேரு சொன்னேன் தெரியுமா” என்றவன்.
“பைவ் ஸ்டார் சொன்னேன், லஸ்ஸி ஷாப், தண்டர் ஷாப்” என்று அடுக்கிக்கொண்டே போகக் கொலைவெறியோடு அவனைப் பார்த்தவள் “இது தான் நீ கண்டுபிடிச்ச அறிய கண்டுப்பிடிப்புகளா” என்க இன்பனுக்கு சிரிப்பு வந்தது.
சிறிது நேரம் யோசித்து “அஹ்… இப்போ இந்தப் பேரு பாரு, “வெயிலும் நிழலும்” இந்த இடத்துக்கு ரொம்ப பொருத்தமான பெயர், அந்த மாதிரி ஏதாவது யோசி அதுக்கு ஏத்த மாதிரி போர்டு வெச்சா இன்னும் சூப்பரா இருக்கும்” என்றவள் சிறிது நேரம் கழிந்து சென்றுவிட்டாள்.
ஒருவாரம் கழித்து கடைக்கான திறப்பு விழா பத்திரிக்கை கையில் கிடைக்கும் வரை அவள் அறியவில்லை அவள் சொன்ன பெயர் வைக்கப்பட்டத்தை, மிகப் பெரிய சந்தோசம் அது, இத்தனை நாட்கள் வசந்தனின் வாய் மொழியாக அறிந்துகொண்டவனை அன்று தான் நேரில் பார்த்தாள், பார்த்தாளா… தலை குப்புற விழுந்து கிடந்தாள் அவனிடம், அவனைப் பார்க்கவே தினமும் வேலைக்கு லீவு எடுக்காமல் சென்று வந்தாள்.
திரும்பிச் சென்று கொண்டிருந்தவனுக்கு பாதி தூரத்தைக் கடப்பதே பெரும் வேதனையாக… கடைக்கு வந்தவன் லட்சுமியிடம் “பெருமாள் கோவில் போயிருந்தேன் உன் பிரென்ட் அங்க தனியா அழுதுட்டு இருக்கா என்னனு போய்ப் பாரு” என்று விட்டு உள்ளே சென்று விட்டான்.
“கொற்றவையா?? அழறாளா!! காரணம் இவரா தான் இருப்பார், தெரிஞ்சுக்கிட்டே பேச்சப்பாரு” என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டு தன்னுடைய டி. வி. எஸ் எடுத்துப் புறப்பட்டாள்.
நேரே சென்றது இன்பநிலவன் வீட்டிற்கு “பாட்டி பாட்டி” என்று அழைத்துக்கொண்டே உள்ளே செல்ல “எதுக்கு டி இப்போ என்ன ஏலம் விடுற” என்ற காந்தியம்மாவின் கேள்வியில்.
“ஆமா இவங்க பெரிய கிரேக்க சிற்பம், ஏலம் விடுறாங்க உன் பேரனுக்குப் புடிச்ச பொண்ண பாக்கணும்னா உடனே வா” என்க.
“அடியே நில்லுடி இதோ வந்துட்டேன்” என்றவர் கண்ணாடியில் தன்னை பார்க்க “ஏய் கிழவி பொண்ண தான் பார்க்கப் போறோம், உன்ன பொண்ணு பாக்க யாரும் வரல” என்க.
கோவிலிலுக்கு சென்று வண்டியை நிறுத்தியவள் “இங்க பாரு பாட்டி நாம அவளைப் பாக்க வந்த மாதிரி காட்டக் கூடாது, நான் பேசுறேன் நீ சும்மா இரு” என்றுவிட்டு அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் நெருங்கியவுடன்.
“ஏன் பாட்டி இந்த வேகாத வெயில்ல பெருமாள் உன்ன பாக்கணும்னு பஞ்சாயத்தை கூட்டினாரா, என்னையும் சேத்து ஏன் இழுத்துட்டு வந்த” என்று சத்தமாகப் பேச.
அவள் குரலில் திரும்பிய கொற்றவை “லட்சுமி” என்று அழைக்க, அப்பொழுது தான் பார்ப்பது போல அவளைத் திரும்பிப் பார்த்தவள் “ஏய் நீ இங்க பண்ற” என்று அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
காந்திமதி கண் நிறைய அவளைப் பார்த்துக் கொண்டார் “மூக்கும் முழியுமா என்ன அம்சமா இருக்கா, இவனுக்குப் புடிக்குமா இல்லயானே தெரியாம நம்மள சுத்தல்ல விடுறானே, கட்டிக்கிட்டா தான் என்ன இந்தப் பயலுக்கு” என்ற எண்ணம் தான்.
“மனசு சரி இல்ல அதான்” என்றவள் கைத்தன்னிச்சையாகக் கழுத்தில் தடவ எப்பொழுதும் போல் அல்லாமல் அது வெறுமையாகத் தானே இருக்கிறது.
மீண்டும் முகம் வாட, விழிகளில் நீர் கோர்த்து இரண்டு துளிகள் அவள் கையில் பட்டுத் தெறித்தது “ஆத்தி என்னம்மா ஏன் அழுவுற” என்றார் காந்திமதி.
அப்பொழுது தான் அவரைக் கவனித்தாள் அவள், “ஒன்னும் இல்ல” என்று தலை ஆட்டினாள்.
“கேளு டி” என்று லட்சுமியை உலுக்க.
“என்ன கொற்றவை என்ன ஆச்சு, உன் செயின் எங்க” என்பதற்குள் அவள் உடைந்து அழத் தொடங்கினாள்.
சொந்த தந்தை இப்படி கூடச் செய்வார்களா என்று அதிர்ச்சியாகி விட்டது காந்திமதிக்கு, அவள் சொன்ன செய்தியில், கொற்றவையின் கையைப் பற்றிய லட்சுமி “கவலைப்படாத எல்லாம் சரி ஆகும், எனக்கு உண்மையிலே வேற என்ன சொல்லத் தெரில டி” என்றாள்.
“என் பேரனை உனக்குப் புடிச்சிருக்கா மா” என்ற காந்திமதியின் கேள்வியில் அவள் அதிர்ச்சி அடைய.
“இவங்க இன்பா அண்ணா பாட்டி” என்றாள் “ம்ம்” என்று கொற்றவை தலை ஆட்ட.
“இவன் மனசுல என்ன இருக்குனு சொல்ல மாட்றானே, நிறைய கஷ்டப்பட்டுட்டான், இனிமேலாவது அவன் வாழ்க்க கொஞ்சம் நிம்மதியோட இருக்கணும்” என்றவர் பெருமூச்சு விட்டு “எல்லாம் அந்த ஆண்டவன் கைல” என்றார்.
ஞாயிற்று கிழமை கொஞ்சம் பரப்பரப்போடு விடிந்தது கொற்றவையின் வீடு, இன்று கொற்றவையின் அக்கா ஆராதனாவின் மகள் சக்தியின் சடங்கு.
அனைவரும் புதிய உடை அணிந்து வர, அருணா மிக ஆடம்பரமாகத் தயாராகி வந்தாள், கொற்றவையை பார்த்த தாய் ராதா “என்ன மா இது” என்க “ஏன் என்ன??” என்றாள் கொற்றவை.
காரணம் அவள் வேலைக்குச் செல்ல இட்டுச் செல்லும் மிக எளிமையான உடையில், மிக எளிமையாகத் தயாராகி வந்திருந்தாள்.
“உனக்குப் புது துணி வெச்சிருக்கேன், அத ஏன் போடல” என்ற தாயை பார்த்தவள் “நா வரணுமா வேண்டாமா” என்க அதற்குமேல் அங்கே கேள்விகள் இல்லை.
அவள் உடைகள் எப்பொழுதும் நேர்த்தியாக இருக்கும், எளிமையான சுடிதார்கள் அழகான வண்ணங்களில், கண்களை உறுத்தாமல் பார்க்கும்போதே அட நன்றாக இருக்கிறதே என்று நம்மை என்ன வைக்கும்.
அப்படியொரு உடை தான் என்றாலும் அனைவரும் பட்டுடுத்தி தயாராக அவள் இப்படி வந்து நின்றாள்.
“அக்கா போலாமா” என்ற அருண் அவளின் ஸ்கூட்டியை எடுக்க அவள் அவனின் பின்னால் அமர்ந்து கொண்டாள், மற்ற மூவரும் ஆட்டோவில் ஆராதனாவின் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தனர்.
அவளைப் பார்த்தவுடனே ஆராதனாவின் முகம் மாறி விட்டது “என்னம்மா… என் மானத்தை வாங்கவே இப்படி வந்திருக்காளா” என்றவளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த அருண்.
“சபையில உன் பொண்ணு கழுத்துல போடப் போற சீர் அஞ்சு பவுனு என் அக்கா சம்பாத்தியம்”.
“ஓசில எல்லாத்தையும் சுருட்டிட்டு போற நீ அத பத்திலாம் பேசக் கூடாது, அப்புறம் வேற தாய் மாமனை நீ தேட வேண்டி வரும், மொறயா எல்லாம் செய்யலாம்னு பாக்குறேன் அதிகமா பேச வெக்காத” என்க, பசை இட்ட போல ஒட்டிக்கொண்டது அவள் வாய்.
சீர் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிக்க, பந்தி நடந்து கொண்டிருந்தது, இன்பநிலவன் கடையிலிருந்து தான் குளிர்பானங்கள் வந்திருந்தது.
லஸ்ஸியை குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிட்டனர், உணவை முடித்து விட்டு ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டாள் கொற்றவை.
“என்னம்மா இன்னும் ஒன்னும் சரியா வரலையா, எங்க பக்கம் ஒரு பையன் இருக்கான்”.
“வயசு கூடானாலும் வரவணனுக்கு பிடிச்சு கொடுங்க, வரதட்சிணை கொடுக்க முடியலன்னு வீட்லே ஏன் வெக்கணும் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அனுப்ப பாருங்க” என்ற பலதரப்பட்ட அறிவுரைகளையும் யாருக்கோ சொல்கிறார்கள் என்ற ரீதியில் அசராமல் நின்றாள்
பிறகு அவள் தான் மாப்பிளை பார்த்து வைத்திருக்கிறாளே, அவன் “ம்ம்” என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமே “கஸாட்டா ஐஸ்கிரீம் பேக்டரியே கொடுத்தாலும், அவளுக்கு இந்தக் குச்சி ஐஸ் தான் வேணுமாம்”.
அனைவரையும் நோட்டம் விட்டவள் பார்வையில் விழுந்தான் அவன், வெள்ளை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு, அடர் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வெங்கடேசனிடம் பேசிக்கொண்டிருந்தான்.
கன்னத்தில் கை வைத்து அவனை மிகத் தீவிரமாக ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.
மெல்ல தடுமாற தொடங்கினான் அவன், அவள் பார்ப்பதை உணர முடிந்தது, “எப்படி பாக்குறா யாராவது பார்த்தா என்ன ஆகுறது” என்று யோசித்து நிற்க.
வெங்கடேசன் வேறு வேலையாகச் சென்றார், மெல்ல சுற்றிலும் பார்த்தவன் விழிகள் அவளில் நிலைத்தது “தொலைச்சுருவேன்” என்று கண்களால் கூறி மீசையை அவன் முறுக்க, உயிரே சிலிர்த்துவிட்டது அவளுக்கு.
விழிகள் கூடக் கலங்கியது, இத்தனை வருடத்தில் அவள் முகத்தை அவன் நன்றாகப் பார்த்ததாகக் கூட நினைவில்லை.