5

கண் விழித்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை, குட்டி பல முறை கேட்டு விட்டான் “என்ன நடந்தது” என்று, உடல் நிலை சரி இல்லாமல் மயங்கிவிட்டாள் என்று சமாளித்துவிட்டார் ராதா.

இரவு நெருங்கும் நேரம் வந்தார்கள் அப்பாவும் இளைய மகளும், ஹாலில் அவர்கள் பேசும் சத்தத்தைக் கேட்டதும் அத்தனை நேரம் இருந்த அமைதி பறந்து விட வெளியில் வந்தாள் கொற்றவை.

கை நிறைய பைகளுடன் வந்து நின்றனர் “இன்னைக்கு என் கழுத்துல கிடந்த செயினை திருடிட்டு போனீங்க, நாளைக்கு பணம் இல்லனா என்னை எவனுக்கு விக்கப் போறீங்க” என்றவள் கேள்வியில் ஆடிப்போயினர் அனைவரும்.

“அம்மாடி” என்றும் “அக்கா” என்றும் அழைப்பு இருக்க அவர்கள் அப்பொழுது அறியவில்லை அதும் உண்மையாகும் என்று.

“என்னக்கா ஆச்சு” என்ற குட்டியிடம் “நாத்தூங்கிட்டு இருக்கும்போது உன் அப்பா என் கழுத்துல கிடந்ததை திருடிட்டு போய்ட்டார், தோக்கை நெறய வெச்ருக்காரே அதுல எதல்லாம் என் செயின்ல வாங்கினதுனு கேளு” என்க.

அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை, என்ன காரியம் செய்திருக்கிறார் இவர் “ஏன் இப்படி பண்றீங்க உங்க கிட்ட இருக்குற காசுல செய்யச் சொன்னேன் தானே, உங்க மரியாதைய காப்பாத்த நீங்கப் போய்க் கஷ்டப்படுங்க, எங்களை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க” என்றான்.

“தெரிஞ்சே தான் அவர் கூடப் போனியா?” என்று அருணாவிடம் எகிற “இல்ல எனக்குத் தெரியாது, நகை துணிமணி எடுக்கணும் கூட வான்னு சொன்னாங்க நாப்போனேன்” என்றாள்.

கொற்றவைக்கு மனதே ஆறவில்லை, அங்கிருந்து வெளியேறிச் சித்தி வீட்டில் சென்று அமர்ந்துகொண்டாள், பின்னேயே வந்த குட்டி “சித்தி பாத்துக்கோ” என்றவன் அவர் காதில் விஷயத்தைச் சொல்லிச் சென்றுவிட்டான்.

“பெற்றவர்கள் சரியாக இருக்கும் வீட்டில்  பிள்ளை  தறுதலையாக  இருக்கிறது” என்று தன் மகளைப் பார்த்தார் “பெற்றவர்கள் சரி இல்லாத வீட்டில் பிள்ளை தங்கமாக இருக்கிறது” என்ன சொல்ல என்று எண்ணியவர் கட்டாயப்படுத்தி அவளைக் கொஞ்சம் உண்ண வைத்தார்.

அன்று முழுதும் வீட்டிற்கு செல்ல வில்லை, இரவு மைதிலியுடன் வீட்டின் முன்பில் இருந்த இடத்தில் அமர்ந்தவள் “உனக்கு என்னடி பிரச்னை” என்றாள்.

“ஒன்னும் இல்ல” என்று அவள் முகத்தைத் திருப்ப, அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவள் “நல்ல வேலையில இருக்கார், மாமனார் மாமியார் இல்லை, உன்ன ராணி மாதிரி வெச்சுருக்கார், இன்னும் என்ன தாண்டி வேணும்!!”

“ஒரு கார் கூட வாங்க முடியல அந்த ஆளாள”.

“அடிப்பாவி, ஏன் டி கார் இல்லாதது ஒரு பிரச்சனையா, பெரிய டிவி சொன்ன, டபுள் டோர் பிரிட்ஜ் சொன்ன, பைக் சொன்ன, ஒன்னு ஒண்ணா வாங்கினார்  இப்போ என்னடி கார் சொல்ற, அதுக்கு அப்புறம் என்ன சொல்லுவ வசதியா வாழ ஆசைப்படலாம் தப்பில்ல”.

“ஆனா நமக்கு என்ன வருமானம்னு நமக்குத் தெரியும், அத விட அதிகமா வேணும்னா வேலைல முன்னேறி இன்னும் கொஞ்சம் காசு சேத்து நாம ஆசைப்பட்டதை வாங்கணும், அத விட்டு அந்த மனுஷன இப்படி நிம்மதி இல்லாம காசு காசுன்னு புடுங்க கூடாது”.

“ஒரு விஷயம் கவனிச்சியா மைதிலி, கல்யாணம் ஆன புதுசுல நீ சண்டைப்போட்டு வந்தா அண்ணா அடுத்த அரைமணில இங்க இருப்பார் உன்ன கொஞ்சி கெஞ்சி கூட்டிப்போவார், ரெண்டு வர்ஷம் அப்பறம் அது அரை நாலா ஆச்சு, மூணு வர்ஷம் அப்பறம் அது ஒரு நாள் ஆச்சு, இப்போ நீ வந்து அஞ்சு நாள் ஆகுது அவர் ஒரு போனாவது உனக்குப் பண்ணாரா” என்க மைதிலி இருளடைந்த முகத்தோடு அவளைப் பார்த்தாள்.

“உன் வாழ்க்கை உன் கண்ணுமுன்னாடியே நாசமா போகுது, ஆன உனக்கு இன்னும் அது புரியல புரியும்போது மொத்தமா உன்ன விட்டுப் போயிருக்கும், இது மாதிரி ஒரு வாழ்க்கைக்காக எத்தனை பேரு ஏங்குறாங்கனு உன்ன மாதிரி ஆளுங்களுக்கு தெரியாது, இதுக்கு மேல உனக்குப் புத்தி சொல்ல எங்களுக்கு மனசும் இல்ல, தெம்பும் இல்ல எப்படியோ போ” என்றவள் தன் வீடு நோக்கி நடந்தாள்.

உடல் நிலை சரியான பிறகு வந்தால் போதும் என்று சேர்மன் சொன்னாலும் இவர்களுடன் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று அடுத்த நாள் காலையே வேலைக்குக் கிளம்பிவிட்டாள் கொற்றவை.

அனால் பள்ளிக்குச் செல்ல மனம் இல்லை, ஒரு நிலையில் நின்று வேலை செய்ய முடியும் என்று தோணவில்லை,  பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பழைய பெருமாள் கோவில் உண்டு,  அங்குப் பெரிய இடம் முன்பில் காலியாக இருக்கும் அதில் சிலபேர் அமர்ந்திருப்பர், பூ விற்பவர்கள், ஓய்வெடுப்பவர்கள் என்று.

 பெருமாளை தரிசித்துவிட்டு அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் விழிகளை மூடி அமர்ந்துவிட்டாள், உடலும் மனமும் மிகவும் தளர்ந்து விட்டதை போல, இப்படியே எங்கேனும் ஓடி விடலாமா என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அருகில் “ஹம்ம் ஹும்” என்று ஒரு சத்தம் கண்களைத் திறந்து பார்க்க அவன், அடர் நீல நிற கார்கோ ஷர்ட்டில் அள்ளிக்கொள் என்று கொள்ளை அழகாக நின்றிருந்தான்.

“என்ன ஆச்சு” என்ற அவனின் கேள்வியில் கோமாவிலிருந்து விழித்தவள் போலத் திரு திரு என்று விழித்தாள்.

“உன்ன தான் என்ன ஆச்சு?” என்க அவள் கண்கள் தன்னாலே அவளின் பின்னால் பார்த்தது “இல்லை, வேறு யாரும் இல்லை தன்னை தான் கேக்கிறான்” என்ன சொல்ல வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

கண்கள் கரித்துக் கொண்டு வந்தது, அவன் பார்வை அவள் கழுத்தில்  பதிய அது வெறுமையாக இருந்தது, அவளின் ஓய்ந்த தோற்றம் அவனைச் செல்ல விடவில்லை அவளிடம் வந்து பேசினான்.

“ஏதாவது பிரச்சனையா” என்க “இல்லை” என்று அவள் தலை ஆடியது, ஏதேனும் பண தேவையாக இருக்குமோ என்று எண்ணியவன் “ஏதாவது வேணுமா” என்க சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஆம்” என்று தலை ஆட்டினாள்.

“என்ன வேணும்” என்றான் அவன்.

“உங்க காதல், நா இருக்கேன் உனக்குன்னு ஒரு வார்த்தை” என்றாள் விழியில் நீர் வழிய.

அவன் முகம் மீண்டும் இறுகியது விறு விறு என்று வெளியேறிவிட்டான்.

வெளியேறியவன் சிந்தனை முழுதும் நான்கு வருடம் முன்பு சந்தோஷமாகத் துள்ளிக் கொண்டு தன் முன் வந்து நின்றவள் நினைவில் முழ்கியது.

கையில் இருந்த ஸ்வீட் பாக்ஸை திறந்து அவன் முன்னாள் நீட்டினாள், “இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்” என்க “வாழ்த்துக்கள்” என்றவன் ஒரு லட்டுவை எடுத்துக் கொண்டு உள்ளே செல்லத் திரும்பினான்.

“ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள், அவன் அவளைக் கேள்வியாய் பார்க்க “என் சம்பாத்தியத்துல நானே வாங்கினேன் இந்தச் செயின் நல்லா இருக்கா” என்று தன் கழுத்தில் கிடந்த மாலையைக் காட்ட ஒன்றும்  சொல்லவில்லை, அதைப் பார்க்கக்கூட இல்லை அவன்.

காபி போட உள்ளே செல்ல அவன் பின்னே சென்றவள் “இந்தச் செயினை ஒரு நிமிஷம் பாருங்க ப்ளீஸ்” என்க.

“என்ன பிரச்னை உங்களுக்கு, இங்க கடை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இருந்து உங்கள தெரியும் அதால மட்டும் தான் இப்போ இங்க நின்னு பேசுறீங்க, என் பொறுமை போறதுக்குள்ள வெளில போங்க” என்க அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.

“இதுல நீங்களும் நானும் இருக்கோம், நீங்க எப்போவும் என் கூட இருக்கணும், எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், ஐ ஆம் இன் லவ் வித் யு இன்பா” என்றாள் அவன் கண்களை நேரே பார்த்து.

லட்டுவை அவளின் கையில் இருந்த பாக்ஸில் போட்டவன் “எனக்கு லட்டு பிடிக்காது, உன்னையும் பிடிக்காது கெட் லாஸ்ட்” என்று இரைந்தான்.

இன்று அவள் நின்ற தோற்றம், இப்படி தான் அன்றும் நின்றாள் உயிர் போகும் வலியை விழிகளில் சுமந்து.

அந்த டாலர் பிறைநிலவில் ஒரு பெண் அமர்ந்திருப்பதை போல அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.

உள்ளே புதைந்து கிடந்த அவளின் மீதான காதலை அவன் அறிந்துகொண்ட பிறகு , அவளின் கழுத்தில் உரிமையோடு உறவாடும் டாலரில் அவன் பார்வை பதிந்து மீலும், அங்கே தன் இதழ்களைப் பதித்துக் கொள்ள எத்தனை நாட்கள் ஏங்கி இருக்கிறான்.