4

“அப்பாடா… இந்த ஒரு நாள் காலைல எழாம கால் ஆட்டித் தூங்குற சுகமே தனி தான், என்ன சில்லுனு எ.சி இருந்தா நல்லா  இருக்கும்” என்றவள் சிந்தனை ஓட

“தங்கம் தரையிலே தவிடு பானையிலே, கட்டிலுக்கே வக்கில்லாம கழுதை தரைல கிடக்குற உனக்குக் குளு குளு ஒண்ணுதான் கேடு” என்றது மனச்சாட்சி.

“ஏய் இன்னைக்கு எல்லார்க்கும் லீவு, நீயும் ஓடிப் போய்டு” என்று கொற்றவை மிரட்ட “காவல்காரனுக்கு ஏதடி கால நேரம், நான் எல்லாம் எப்போவும் ஆன்  டியூட்டி”  சண்டித்தனம் செய்தது அது.

“நாராயணா இந்தக் கொசுத் தொல்லை தாங்கல” என்றவள் எழுந்து காலைக் கடன் முடித்து அடுக்களை படிக்கட்டில் அமர்ந்துகொள்ள, தாய் டீயோடு வந்தார் வாங்கி அமைதியாகக் குடிக்க “அம்மாடி” என்ற அழைப்பு வந்தது.

“ஆரம்பிச்சுட்டாங்க இன்னைக்கு என் தலைல என்ன மொளகாவோ” என்று எண்ணியவள் அவரைத் திரும்பிப் பார்க்க “இன்னைக்கு ஞாயற்றுக் கிழமை”. என்றார்

“நா மட்டும் என்ன நாய்க்குக் கிழமைன்னா சொன்னேன்” என்று மனதில் எண்ணி பேசாமலே இருக்க, “மதியம் கறி எடுத்துச் சமைச்சுடலாம், ரெண்டு மாசமா வீடு கிளீன் பண்ணல, நீயும் வேல வேலைனு இருந்துட்ட, இன்னைக்கு பண்ணிடலாம்” என்க ஆயாசமாக இருந்தது.

“இன்று ஒரு நாள் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்க எண்ணினால் இது வேறா?  குட்டி எங்க” என்றவளிடம், “அவன் காலைக்கே ஒட்டடை  அடிச்சுட்டான், அடுப்படி தான் ரொம்ப மோசமா இருக்கு கிளீன் பண்ணனும், ஜன்னல் எல்லாம் அவன் தொடைக்கிறேன் சொல்லிட்டான்” என்க “இந்த மாளிகையைக் கழுவி தொடச்சிட்டாலும்” என்று ஆத்திரம் தான் வந்தது. வாடகை வீட்டிற்கு மூன்று வருடம் முன்பு இவர்களே வெள்ளை அடித்துக் கொண்டார்கள், வேறு என்ன செய்ய நிறம் மங்கி சுவர் பெயர்ந்து அத்தனை கேவலமாக இருந்தது, கிட்ட தட்ட பதினைந்து வருடமாக இந்த வீட்டில் குடி இருக்கிறார்கள்.

உப்புமாவை நீட்டியவரை கொலைவெறியோடு பார்த்தவள் “வேண்டாம்” என்றுவிட்டு வேலையைத் தொடங்கி விட்டாள், குட்டியும் சேர்ந்து கொள்ள திரை சீலைகள் மாற்றி, ஜன்னல் துடைத்து, அடுக்களை மொத்தமாகச் சுத்தம் செய்து வீடு முழுதும் கூட்டி பெருக்கி, வெளியில் முற்றம் மற்றும் தோட்டம் கிளீன் செய்யக் கொற்றவை போக, குட்டி வீட்டைத் துடைத்து முடித்தான்.

இத்தனைக்கு பிறகும் அருணா வரவில்லை, அதற்க்கு ஒரு காரணம் வைத்திருக்கிறாள் டஸ்ட் அல்ர்ஜி, இந்தச் சில மாதங்களாகக் கொற்றவையின் பொறுமை போகிறேன் போகிறேன் என்று வாசலில் நிற்கிறது.

“எங்க உங்க பொண்ணு” என்றாள் தாயிடம் “அவ மஞ்சு வீட்டுக்குப் போய்ட்டா, அவளுக்கு டஸ்ட் ஒத்துக்காதே” என்றவரை பார்க்க ஆத்திரமாக வந்தது.

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, என்ன மட்டும் இரும்புல செஞ்சுருக்கா என் பொறுமைக்கும் ஒரு அளவிருக்கு, உங்க பொண்ண வந்து கர்டன் எல்லாம் தொவச்சு போடச் சொல்லுங்க, அப்படியே அடுப்படி  பாத்திரம் எல்லாம் கழுவி காய வெச்சு எடுத்து வெக்க சொல்லுங்க ராத்திரி எல்லாம் மாத்திக்கலாம்”  என்றவள் ஷாம்ப்பூவோடு குளிக்கச் சென்றாள்.

இளைய மகளைப் போனில் அழைக்க “அம்மா சமச்சுட்டியா ரொம்ப பசிக்குது” என்றாள் “சமச்சுட்டேன் இங்க பெரியவ ரொம்ப கோவமா இருக்கா, நீ வீட்டுக்கு வந்து கொஞ்சம் வேல செய்” என்க “அம்மா எனக்கு டஸ்ட் ஒதுக்காதுலா”.

“அதெல்லாம் அவங்க முடிச்சுட்டாங்க நீ வந்து மத்தத பாரு” என்று வைத்துவிட்டார்.

அனைவரையும் திட்டிக் கொண்டே வந்து சேர்ந்தாள் அருணா, குளிக்கச் சென்ற கொற்றவைக்கு மனதே ஆறவில்லை, எவ்வளவு வேலை!! இவர்கள் இருவர் மட்டுமே பார்பர்.

சண்டே என்றாள் கறி  வேண்டும், பின்னால் தோட்டத்தில் அடுப்பு மூட்டி பிரியாணிக்கு அமர்ந்துவிடுவார் ராதா, அடுக்கலையை கிளீன் செய்து முடிப்பதற்குள் இடுப்பு ஒடிந்து விடும் கொற்றவைக்கு, அதோடு மற்ற இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

அவளுக்கு வீடு சுத்தமாக இருக்க வேண்டும் அதில் மிகவும் கண்டிப்பாக இருப்பாள், ஆனால் அதைச் சாக்காக வைத்து அவளையே வேலை வாங்குகிறார்கள்.

குளித்து வந்தவளுக்கு சுத்தமாக இருக்கும் வீட்டைப் பார்த்ததும் மனது லேசானது, உறக்கம் கண்ணைச் சுழற்ற உணவு வேண்டாம் என்று படுத்துவிட்டாள்.

மாலை எழுந்த பொது தலை பாரமாக இருந்தது உடல் எல்லாம் அப்படியொரு வலி “சரியாய் போச்சு நிச்சயம் ஜுரம் வரப் போகிறது” என்று தெரிந்துவிட்டது.

அறையிலிருந்து வெளியே வர மாலை நேர தேநீரும் வெங்காய பஜ்ஜியும் போய்க் கொண்டிருந்தது “டீ மட்டும் போதும்” என்றுவிட்டாள் “கொஞ்சமா சாப்பிடு மா காலைல இருந்து  சாப்பிடல” என்ற அன்னையிடம் கைக்காண்பித்து வேண்டாம் என்றாள்.

அவள் அருகில் வந்து பார்த்த குட்டி “என்னக்கா உடம்பு சரி  இல்லையா” என்க “தல வலிக்குது டா குட்டி”.

அவள் நெற்றியில் தொட்டு பார்த்தவன் “லைட்டா சுடுது வெறும் வயித்துல மாத்திரை போடாத நா பிரட் வாங்கிட்டு வரேன்” என்றவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தான், டீயில் முக்கி இரண்டு சாப்பிட்டவள் “போதும்” என்றுவிட்டு மாத்திரை போட்டு மீண்டும் படுத்துவிட்டாள்.

இரவுக்குக் கொஞ்சம் கஞ்சி மட்டும் குடித்துவிட்டு படுக்க, அப்படியொரு உறக்கம் அவள் இந்த உலகிலே இல்லை என்பதை போல ஒரு உறக்கம், காலைப் பத்து மணிக்குப் பிறகு எழுந்தவள் நேரம் பார்க்கப் பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது.

லீவு கூடச் சொல்லவில்லை, வேலை எல்லாம் அப்படியே நிற்கும் அவசரமாகப் போன் எடுத்துச் சேர்மனுக்கு அழைக்க அவள் “ஹலோவிலே” அவர் புரிந்து கொண்டார் “என்ன மா உடம்பு சரி இல்லையா, குரலே சோர்வா இருக்கு” என்க “ஆமா சார் பிவேர் தூங்கிட்டேன், சாரி சார் லேட் ஆயிடுச்சு லீவு கூடச் சொல்லல” என்க.

“மச்… கொற்றவை என்ன இது,  உன் லீவு அக்ஸ்ப்ட் பண்ணியாச்சு போய்  ரெஸ்ட்  எடு சரியான அப்பறம் வந்தா போதும் டேக் கேர்” என்றவர் வைத்துவிட நிம்மதியாக மீண்டும் படுத்தவள் கொஞ்சம் நேரம் சென்று  தோட்டத்திற்கு சென்று வந்தாள்.

கொஞ்சம் தெளிவாக இருந்தாள், முடியைக் கொண்டையாக மேலேற்றி கெட்டிவைத்து ஹாலிற்கு வந்தவள் அனிச்சையாகக் கழுத்தை தடவ வெறுமையாக இருந்தது அவள் கழுத்து.

ஒரு நொடி உயிரே நின்று விட்டது அவளுக்கு, நன்றாகத் தடவி பார்த்தவள் உடையைத் தட்டி பார்த்து அறைக்குள் சென்று பாய் போர்வை அனைத்தையும் குடைந்தாள், பிறகு பாத்ரூமில் சென்று பார்த்தாள், கண்களில் குளம் கட்ட தொடங்கியது.

காண வில்லை “ஐயோ” மனம் அலறத் தொடங்க, மண்டை வெடிப்பதை போல இருந்தது அப்படியே அமர்ந்துவிட்டாள் “எங்கே போயிருக்கும் எப்படி தொலைத்தேன்” என்றவள் நினைவில், இரவு உறங்கும் முன் அதைப் பிடித்துக்கொண்டு தன்னவனை தேடிய நினைவு வந்தது.

இரவு நான் உறங்கும் நேரம் என் கழுத்தில் இருந்தது, அப்படியானால்?? சட்டென்று திரும்பித் தாயை பார்க்க அவர் உடலில் மெல்லிய நடுக்கம், அவள் பார்வை கூர்மை அடைந்தது, “நா இல்ல… எவ்ளவோ சொன்னேன் உங்க அப்பா தான் நீ தூங்கும்போது கழட்டிட்டு போனார்” என்றவர் முடிக்கும் முன்,  நெஞ்சை அடைக்கத் தலை சுற்றி அப்படியே சரிந்தாள் கொற்றவை.